Advertisement

ஓம் இளம் பூரணனே போற்றி!!
3
தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான்.
ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர்.
அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர்.
“ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க விடாம டார்ச்சர் பண்ணிட்டு.. சிவகாமிம்மாஆஆ.. யாருன்னு பாருங்க” என்றபடியே எழுந்தமர, கதவைத் தட்டுவதே அவளது சிவகாமி அம்மா தான் என்று மறுநொடி புரிந்ததும் சுவரிலுள்ள கடிகாரத்தில் பதிந்தது அவளது பார்வை. 
மணி ஏழு. அனேகமாக அவளுக்கு ஏழரை தான். 
வேகமாய் எழுந்தவள் தன்னை ஒருமுறை சரி பார்த்தாள். கால்களில் மெட்டி அலங்கரித்திருக்க, கழுத்தில் புது மஞ்சள் தாலி அழகாய் தொங்கிக் கொண்டிந்தது. விரைந்து அதை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு தன் இடப்புறம் பார்த்தாள். 
அவள் சரிபாதி அங்கே சத்தமில்லாமல் சயனம் செய்திருந்தது.
“ச்சே.. இவன் என்ன இப்படி தூங்குறான். இடியே இடிச்சாலும் எழுந்திருக்க மாட்டான் போலயே” எனப் புலம்பியபடி அவனருகில் சென்று 
“மிஸ்டர். புருஷ்.. எழுந்திருங்க” என்றாள் மாண்புமிகு மனைவியாய் மாறி. 
அசைவே இல்லை அவனிடம். மரியாதை மெல்லத் தேய்ந்தது அவளிடம்.
“யோவ் சீக்கிரம் எழுந்திரியா” என்றாள் லேசாய் அவன் கையைத் தட்டியபடி. அவன் இதற்கும் அசையாதிருக்க
“டேய் எழுந்திரிடா.. பாட்டி வேற கதவைத் தட்டுறாங்க..” என்று அவனைப் போட்டுத் தட்டினாள். 
தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபோல் நடிப்பவனை? அவனாக எழுந்தால் தான் உண்டு. அவன் அசர மறுக்க.. அவள் கிள்ளி வளவியாய் அவதாரம் எடுத்து அவன் கையில் நறுக்கென்று கிள்ளியத்தில் அலறிக்கொண்டு எழுந்தமர்ந்தான். 
“ஏய் ஆந்தை! இப்படித்தான் எழுப்புவையா?” 
“சாரை வேற எப்படி எழுப்பணும்?” என்றாள் இடுப்பிற்கு கைக்கொடுத்து.
“கையில காஃபி கப்போட அன்பா என் பக்கத்துல வந்து, அத்தான் எழுந்திரியுங்கள்ன்னு சொல்லி, ஆசையா எழுப்பாம.. இப்படி அடிச்சு எழுப்பறையே” என்றதும்,
“ஒழுங்கா அக்கட்டால போங்க மிஸ்டர். இந்த பாயை மொதல்ல கட்டிலுக்கு அடியில தள்ளுங்க” எனக் கட்டளையிட்டாள்.
“இல்லைன்னா…” அவன் இழுக்க
“இல்லைன்னா எல்லாம் தப்பாயிடும்” அவன் இழுவையை இவள் முடித்து வைத்தாள்.
“அதான் எதுவும் தப்பாகலையேஏஏ…” மெல்ல எனினும் அவளுக்கு கேட்கும்படி சொல்ல..
“ச்சே.. அக்ரிமென்ட் மறந்து போச்சா மிஸ்டர்? பாட்டி உள்ள வரும்போது இதை கவனிச்சா அவங்க வருத்தப்படுவாங்க, அதுக்காக சொன்னேன்” என்றாள்.
விடிய விடியப் போட்ட வாழ்க்கை விதிகளை எல்லாம் வானம் வண்ணம் தொடும்முன் காற்றில் பறக்க விட்டிருப்பாள் என்று நினைத்திருக்க, விடிந்ததும் முதல் வேலையாக அவள் அதை பின்பற்றத் துவங்கியதில் அவனுக்கு அளவற்ற நிம்மதி. 
அந்த நிம்மதியோடு அவன் நின்றிருக்க,
“முதல்ல தலகாணிய பெட்ல வெய்ங்க” என்றவாறு பல்லவி வேகமாய் அவனுக்குக் கீழிருந்த போர்வையைப் பிடித்து இழுக்க, அதனோடு அவனது வேஷ்டியும் சேர்ந்து வந்து தொலைத்தது.
“ஏய்..! தப்பாய்டும் தப்பாய்டும்ன்னு சொல்லிட்டு இப்போ தான் தப்பாகப் போகுது. என் வேஷ்டிய எதுக்கு உருகுற ஆந்த..” என நழுவாது பிடித்துக்கொள்ள,
“ச்சே.. நான் பெட்ஷீட்டை தான் இழுத்தேன். வெரி சாரி” என அதை அப்படியே போட்டுவிட்டு திரும்பிக் கொண்டாள்.  
கதவு இப்போது மீண்டும் தட்டப்பட, அதைப் பார்த்துக்கொண்டே
“சீக்கிரம் கட்டுங்க” என்றாள் அவளது புடவையை சிங்கிள் ப்ளீட்டில் விட்டபடி.
“என்ன அனு.. என்னை கட்டச் சொல்லிட்டு நீ அதுக்கு ஆப்போசிட்டா பண்ணிட்டு இருக்க”
“அதுக்குன்னு இப்படியே வெளிய போனா எதுவும் நடக்கலைன்னு கண்டு பிடிச்சிற மாட்டாங்களா?” 
“அறிவாளித்தனமா எல்லாம் யோசிக்குற அனு.. நெறைய படம் பார்ப்பையோ?”
“இல்லை நெறைய கதை படிப்பேன். இது ரொம்ப முக்கியம் இப்போ” என்றாள் திரும்பாமலே
“உன் ஸ்டிக்கர் பொட்டைக் கொடு வேணும்னா என் கன்னத்துல ஒட்டிக்குறேன்”
‘ஒரு ரூபாய்க்கு நடிக்க சொன்னா ஓராயிரம் ரூபாய்க்கு நடிக்குறான்’ என நினைத்தவள் அவளது ட்ரேட் மார்க் ‘ச்சே’ வோடு திரும்ப.. அவளை ஒட்டி நின்றிருந்த அவன்மேல் இடித்து.. பின் பின்னால் நகர்ந்து.. அவளது புடவையையே மிதித்து.. கடைசியில் கால் இடறி விழச் சென்றாள். 
விழிகளை இறுக மூடியபடி அவளது கரங்கள் அவன் தோளைப் பற்றியிருக்க.. விழிகளால் அவளைப் பருகியபடி அவனது கரங்கள் அவள் இடையைப் பற்றியிருக்க.. மெல்லக் கண் திறந்தவளோ தன் கண்களை பெரிதாய் விரித்து வைத்தாள்.
அவள் காதருகே மெல்லக் குனிந்தவன், அவள் காதோரக் கூந்தலை மெல்ல விலக்கி
“இனி நீ சொல்லுறதை நான் கேட்க மாட்டேன்” என்றான் கிசுகிசுப்பாய்.
எதைச் சொல்கிறான் எனப் புரியாதவளுக்குப் பின் புரியவர, அதற்குள் தனது ‘ச்சே’ க்கான இன்றைய கோட்டா முடிந்து விட்டதா என யோசித்திருந்தாள். 
“என்ன யோசிக்குற? கணக்கு சரியா தான் இருக்கு” என்று பற்றியிருந்த அவள் இடையில் ஒரு அழுத்தம் கொடுக்க
“டோன்ட் டச் மிஸ்டர்” என்றாள் கண்களால் அவனது கைகளைக் காண்பித்து.
“ஆஹான் அப்போ நீங்க ஏன் என்னை பிடிச்சிட்டு நிக்குறீங்க மேடம்” என்றதும் அவனது தோளிலிருந்து தன் கையை வேகமாய் எடுத்துக் கொண்டாள்.
“அக்ரிமென்ட்னா அதை சரியா ஃபாலோ பண்ணனும் அனு. அது தான் உன்ன மாதிரி நல்ல பிள்ளைக்கு அழகு”  
“பா.. பாட்டி வெய்ட் பண்ணுறாங்க” என்றாள் வார்த்தை தேடி.
‘பண்ணட்டும்’ என்பதாய் அவன் தோளைக் குலுக்க.. 
“உ.. உங்க தாத்தாவும்” என்றாள்.
“பண்ணட்டும்ம்ம்…” என்றான் இப்போது வார்த்தையாகவே.
“அது.. நான் வெளிய போகணும்”
“தாராளமா போ..” என்றான் வார்த்தைகளில் மட்டும் தாராளத்தைக் கூட்டி.
‘இப்படி பிடிச்சிட்டு இருந்தா எப்படிடா போறது..’ என அவள் நெளிய, அவள் நெற்றியில் முட்டி விடுவித்தவன் கதவை நோக்கி கைக்காண்பித்தான். தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியவளைக் கண்டு,
“போடா வாடான்னா சொல்லுற.. ம்ம்ம்..? உன்ன அப்பறம் பார்த்துக்கறேன்” என்றதும் 
சட்டென நின்றவள்..
“அப்படினா நீங்க அப்போவே எழுந்துட்டு நான் வந்து எழுப்பும்போது தூங்குற மாதிரி நடிச்சீங்களா?” என்றாள். இல்லை என்றால் நான் புலம்பியது எல்லாம் எப்படித் தெரியும் இவனுக்கு என்று யோசித்து கண்களை உருட்டிக் கொண்டிருக்க
“முழிக்காம போ ஆந்த.. முதல்ல கதவை திற” என்றதில் அவனை முறைத்துவிட்டுத் திரும்ப
“பல்லவி மா.. கதவ திற” என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கவே ஆரம்பித்திருந்தார் சிவகாமி.
அவள் கதவைத் திறக்க, கையில் காஃபியுடன் நின்றிருந்த சிவகாமி, பல்லவியை உற்றுப் பார்த்து பின் புன்னகைத்து அவள் கையில் ஒரு காஃபி கப்பை அளித்துவிட்டு ஸ்வரனைத் தேட,
“ம்மா.. அவருக்கு நான் கொடுத்துக்கறேன் நீங்க போங்க” என்றாள்.
அதில் அவர் முகம் பிரகாசிக்க,
“ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க.. சாப்டுட்டு கோவிலுக்கு போகணும்” என்றவர் அவனுக்கானதையும் அவளிடம் அளித்துவிட்டு கீழே சென்றுகொண்டார்.
உள்ளே வந்தவள் ஸ்வரனைப் பார்த்துக்கொண்டே அவளுக்கான காஃபியை முதலில் பருகினாள். மற்றொரு கப்பில் இருந்ததை அவனிற்கு நீட்ட, அவன் அதை வாங்கக் கையை நீட்டியதும் உடனே பின்னால் நகர்த்தியவள் 
“இதுவும் எனக்கு தான்” என்றுவிட்டு அவனைப் பார்த்துக்கொண்டே வாயில் வைக்க, மிகப் பொறுமையாய் பார்த்திருந்தவன் அவள் ஒரு சிப் குடித்ததும் அவளிடம் இருந்து வாங்கிப் பருகினான்.
அவள்.. முறைத்தலை முறையாய் செய்ய..
“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என் காஃபியும் வேணும்னு கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன். இப்போ பாரு, இந்த காஃபி தான்  எனக்கு வேணும்னு தோணுது. வேணும்னா ஷேர் பண்ணி குடிக்கலாம். நெக்ஸ்ட் சிப் நீ ட்ரை பண்றியா?” என அவளைப் பார்த்தபடியே அவன் ஒரு சிப் பருகி நீட்ட, அவன் மீது பாய முடியாது குளியலறைக்குள் பாய்ந்து கதவடைத்துக் கொண்டது பெண் சிங்கம்.
கீழே வந்த சிவகாமி கடவுள் படத்தருகே நின்று கண்மூடி கைக்கூப்பி வேண்டிக்கொண்டிருக்க, அவரையே பார்த்திருந்தார் சுந்தரேஸ்வரன். 
சிவகாமியின் அகத்தினில் பெருகிய ஆனந்த ஊற்றுகள் முகத்தினில் நிரம்பி வழிந்திருந்தது. அது அவருக்கும் மகிழ்ச்சியை அளித்திருந்தது. அதன் பின் ஆகவேண்டியவற்றை கவனிக்க பம்பரமாய் சுழன்ற சிவகாமி அங்கிருந்த மேசையின் காலில் தனது காலை தெரியாது இடித்துக்கொள்ள
“பார்த்து.. பார்த்து சிவகாமி” என எழுந்து அவரருகில் வந்திருந்தார் சுந்தரேஸ்வரன்.
“அது எனக்கு ஒன்னும் இல்லீங்க.. நீங்க அதுக்குள்ள எழுந்துட்டீங்களா? இருங்க உங்களுக்கு காஃபி எடுத்து வர்றேன்” என்று வேகமாய் அடுப்பைக்குள் சென்றுகொண்டார்.
ஒன்றுமில்லை என்றாலும் கால் இடித்ததும் நன்கு வீங்கிக்கொண்டது. வயோதிகம் காரணமால் வலியால் நிற்கவும் முடியவில்லை. அதை கவனித்த சுந்தரேஸ்வரன் அவர் பின்னோடு அடுப்பைக்குள் வந்து, அவரளித்த காஃபியைப் பருகிவிட்டு 
“நீங்க கொஞ்ச நேரம் உட்காருங்க” என, அவரைப் புரியாது பார்த்திருந்தார் சிவகாமி.
தோளில் கிடந்த துண்டை எடுத்து தன் தலையில் கட்டியவர், ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு சிவகாமியை அதில் அமரச் செய்து சமையலை கவனிக்கச் செல்ல
“ஐயோ என்ன பண்ணுறீங்க.. நான் பார்த்துக்கறேன்” என்று சிவகாமி எழசெல்ல..
“நீங்க பேசாம இருங்க சிவகாமி” என்ற அதட்டலில் அமைதியாய் அமர்ந்துகொண்டார்.
“எத்தனை வருசமா சமையல் காண்ட்ராக்ட் எடுத்து நடத்திட்டு வர்றேன், என் சமையலை மிஞ்ச ஊருக்குள்ள ஒரு ஆளில்லை. இப்போ கொஞ்ச நாளா தான் என் பேரன் சமைக்க விட மாட்டிங்குறான். இன்னைக்கு என் சமையலை சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு நீங்களே சொல்லுங்க” என வேலைகளை ஆரம்பித்தார்.
அவர் செய்வது ஒவ்வொன்றையும் மிகவும் ஆர்வமாய் பார்த்திருந்தார் சிவகாமி.
தற்காலிக ஸேப் ஜோன் என்று பல்லவி குளியலறையை நினைத்திருக்க.. வெளியில் ஸ்வரனோ, 
“சீக்கிரம் வா இன்னுமா குளிக்கற” என கதவைத் தட்டி கலாட்டா செய்துகொண்டிருந்தான்.
‘கல்யாணம் ஆனதும் ஆச்சு என் நிம்மதியே மொத்தமா போச்சு.. குளிக்க விடுறானா ச்சே’ என தண்ணீரை முகத்தில் அடித்துக்கொண்டே
“சும்மா நச்சாதீங்க. நீங்க முதல்ல வெளிய போங்க நான் அப்பறம் வர்றேன்” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.
“ஆமா நீ வெளிய வர்றதுக்கும் நான் வெளிய போறதுக்கும் என்ன சம்பந்தம் அனு?” என்றான். 
“அதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது”
“அப்போ என்னாலையும் போக முடியாது”
“நான் ஸாரி கட்டணும்”
“நான் வேணும்னா கூட இருந்து ஹெல்ப் பண்ணவா?” 
“அதெல்லாம் ஒன்னும் வேணாம் மிஸ்டர். யூட்யூப் பார்த்து நானே கட்டிக்குறேன் நீங்க தயவு செஞ்சு வெளிய போங்க”
“உதவி செய்யுறேன்னு சொல்ற புருசனுகள பொண்டாட்டிக எங்க மதிக்குறீங்க.. போட்டு நல்லா மிதி மிதின்னு மிதிக்குறீங்க.. யூட்யூபை நம்புற என்ன நம்ப மாட்டிங்குற.. என்ன அனு நீ” என நேரம் காலமின்றி பேசிக் கொண்டிருக்க.. பொறுமை இழந்தவள் 
“யோவ்.! பேசிக்கிட்டு இருக்காம வெளிய போயா சீக்கிரம்” என்று கத்த
‘யோவா?? உன்ன அப்பறம் கவனிச்சுக்கிறேன் வா’ என பெரிய மனது பண்ணி அவன் சென்றுகொள்ள, பூனைபோல் எட்டி எட்டிப் பார்த்தபடி வந்தவள் பின் விரைந்து தயாராகி கீழே வந்துகொண்டாள். 
பச்சை வண்ணப் புடவையில் பளபளவென்று வந்த பல்லவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்வரன். பின் சிவகாமி அளித்த புத்தாடையை வாங்கிகொண்டு நகரும்போது 
“வாவ் அனு! இன்னிக்கு ரொம்பவே அழகா இருக்க” என்று பல்லவியை லேசாய் ஒரு இடித்துவிட்டுச் செல்ல, 
‘அழகாவா இருக்கோம்..?’ என அவளும் சென்று கண்ணாடி முன்பு அப்படியும் இப்படியுமாய் நின்றிருக்க, சிவகாமியும் சுந்தரேஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.   
அதன்பின் சிறிது நேரத்தில் ஸ்வரன் தயாராகி வரவும், உணவருந்திவிட்டு இருவரையும் கோவிலுக்குச் செல்லும்படி பெரியவர்கள் கூற.. ஸ்வரன் வாயிலில் அவனது வண்டியோடு தயாராக நின்றிருந்தான். பல்லவி வந்து ஏறி அமர்ந்ததும் வண்டியைக் கிளப்பினான். 
பார்த்த முதல் நாளே பாடலின் எபக்ட் இருக்கும் என்று பார்த்தால், பல்லவி அவனைப் பிடிக்காது பின் கம்பியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 
‘கட்டியவனைப் பிடிக்காம கம்பியை பிடிச்சிட்டு வரா பாரு.. ஹ்ம்ம்..’ என நினைத்தவன்
“அனு ஸ்பீட் ப்ரேக்கர் வரப் போகுது மா நல்லா பிடிச்சுக்கோ” என்றான் சைட் மிரரில் அவளைப் பார்த்துக் கொண்டே. 
‘நாங்க பார்க்காத ஸ்பீட் ப்ரேக்கரா’ என நினைத்தவள் 
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் நீங்க கண்ணாடில பின்னாடி பார்க்காம முன்னாடி மட்டும் பார்த்து ஓட்டுங்க” என்றாள்.
“வாய் வாய்.. அந்த வாய்க்கு ஒரு பூட்டைப் பூட்டனும்”
“அது திண்டுக்கல் பூட்டாலையும் முடியாது”
“இது திண்டுக்கல் பூட்டில்ல அனு. இது என்ன பூட்டுன்னு நீ ‘ச்சே’ சொல்லும்போது காட்டுறேன்” என்று சொல்லி சைட் மிரரில் பார்க்கவும், ‘ச்சே’ என்று கூறவந்தது வாயை இறுக மூடிக்கொண்டாள்.
அதன் பின் அழகிய மௌனம் மட்டுமே அவ்விருவருக்குள் ஆட்சிசெய்ய, கோவில் வந்திருந்தது. ஒரு ஓரமாய் வண்டியை நிறுத்தியவன் அருகிலிருந்த பூக்கடையைப் பார்த்துவிட்டு பின் பல்லவியைப் பார்த்தான். 
“பொண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுங்க தம்பி” என்று அந்தப் பூக்கடைக்காரம்மா சொல்வதற்கு வாய்ப்பளிக்காது அவனே பூ வங்கிக் கொடுத்தான். அவளும் அவன் முதல் முறையாக தனக்கு வாங்கிக்கொடுத்த மல்லிச்சரத்தை வாங்கி கூந்தலில் சூடிக்கொண்டாள்.
பின் இருவரும் ஜோடியாய் உள்ளே நுழைய, ஆலயமணி இசைத்து ஆனந்தமாய் வரவேற்றது. அவனுக்கென இருக்கும் அவளோடு இனி வரும் நாட்களை ஆனந்தமாய்க் கழித்திட அவன் மனம் அவா கொண்டிருந்தது. அதனோடு அவனவளைப் பார்க்க.. கண்மூடி கைக்கூப்பி நின்றிருந்தாள் சந்நிதி முன்பு. 
இப்பந்ததை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற குழப்பமான மனநிலை நீங்கி, தற்போது அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் தான் இருந்தாள் பல்லவி. ஏற்றுக்கொண்டு தான் ஆகவும் வேண்டும். இனி அவனை விட்டு விலகவும் முடியாது. விலகும் எண்ணமும் இல்லை அவளுக்கு. 
சிவகாமியின் வளர்ப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மாண்பில் வளர்ந்தவள் தன் வாழ்விலும் இனி அவன் ஒருவன் தான் என்பதில் உறுதியாய் இருந்தாள். எதுவந்தாலும் இனி அனைத்தும் அவனோடுதான். தனது கடமைகளையும் தன்னால் முடிந்தவரை சரியாய் செய்ய மனதை தயார் படுத்திக் கொண்டாள். ஆனால், முழுமையாய் அவனோடு வாழ முடியுமா? அடுத்த கட்டத்திற்கு நகர முடியுமா? என்பது அவளளவில் சந்தேகம் தான். 
ஆலயமணியின் ஓசையில் சிந்தனை கலைந்து மெல்லக் கண்திறந்தவள் தெய்வத்தை தரிசித்துவிட்டு நகர, அவளை நகராது பிடித்து நிறுத்திய ஸ்வரன் அவள் நெற்றியிலும் நேர் வகுட்டிலும் திலகமிட்டு 
“இனிமேல் மறக்காத அனு” என, சரி என்று தலையசைத்தவள் அப்போது தான் கவனித்தாள், வரும்போது வகுட்டில் குங்குமம் இடாது வந்ததை. 
பாட்டியும் சொல்லவில்லையே என நினைக்க.. வாழவேண்டிய வயதில் அவர் வாழ்வு துவங்கிய வேகத்தில் முடிந்துபோன கதை அவள் அறிவாள். அப்போதிருந்து காவியும் வெண்மையும் தான் அவர் உடை. எதாவது ஞாபகத்தில் இருந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டாள்.
“உன் பாட்டி தான் கோவில்ல வெச்சு உனக்கு என் கையால வெச்சுவிட சொன்னாங்க.. நீ உடனே டோன்ட் டச்ங்காத” 

Advertisement