Advertisement

“இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு. 
அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும், 
“சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி தானே?” என்றாள் எரிச்சலுடன்.
அவன் என்னவோ இதுவரை இயல்பாய் தான் பேசிக்கொண்டிருந்தான். இந்த சண்டைக் கோழியிடம் இதுபோன்ற பேச்சுக்களை எல்லாம் தவிர்க்கவே நேரம் தாமதித்து உள்ளே வந்தான். அவள் அப்போதும் உறங்காது இருந்து வம்பை வளர்க்கும்போது என்ன செய்வது. சில நொடி மௌனத்திற்குபின்
“சாரி அன்னைக்கு உன்ன அடிச்சிருக்கக் கூடாது..” என்றான் மெல்ல.
‘அடிச்சிட்டு இப்போ என்னடா ஃபீலிங்கு’ என்பதாய் முறைத்துப் பார்த்தவள்,
“உங்க ஆண் வர்க்கமே இப்படித் தானே? பொண்ணுகள பலவீனமா தானே நினைக்குறீங்க. நீங்க என்னதான் உடலளவுல பலவானா இருந்தாலும் உங்கனால எங்களுக்கு பாதுகாப்பெல்லாம் கொடுக்க முடியாது. எங்கள நாங்களே பாதுகாத்தாலும் உங்க பலத்தால எங்கள வீழ்த்தி நாங்க பலவீனமானவங்கன்னு உலகத்துக்கு காண்பிக்கனும் அதானே. அதானே உங்களுக்கு பெருமை?” என்று பொங்கிவிட்டாள்.
அவள் அத்தனை எளிதில் அந்த சம்பவத்தை மறப்பாள் என்று தோன்றவில்லை அவனுக்கு. பேசும்போது அவள் கண்களையே தான் பார்த்திருந்தான். அதில் எதோ ஒரு வலி தென்பட்டது. அது என்னவென்பது அவனுக்கும் ஓரளவிற்கு புரிந்து தான் இருந்தது. ஒருபுறம் அவளது பேச்சு அவனுக்கு அதிர்ச்சியளிக்க மறுபுறம் முகத்தை திருப்பிக் கொள்ளாது தன்னிடம் எதோ ஒன்றை பேசுகிறாளே என்று நிம்மதியளித்தது. 
அவளுக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லாத போதும் ஸ்வரன் அவளை விட்டுவிடவில்லை. பல்லவி அவனிடமே இத்திருமணத்தை நிறுத்தக் கூறினாள். உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீ நிறுத்து என்றான். சிவகாமியை மீறி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு கழுத்தை நீட்டிவிட்டாள் அவன் கரத்தையும் பற்றிவிட்டாள். 
அவள் இப்பந்ததை விட்டு விலக நினைத்தாலும் இனி அவன் விடப்போவதுமில்லை அவளை அதற்கு அனுமதிக்கப் போவதும் இல்லை. இனி இப்பந்தத்தை தொடர்வதொன்றே அவளுக்கான வழி. 
அவன் அமைதியாய் இருப்பது கண்டு அவன் முன் சொடக்கிட்டாள் பல்லவி. அதில் சிந்தனை கலைந்தவன்,
“என்ன அனு..?” என்றான் அவள் புறம் திரும்பி.
‘என்ன..! அனு ன்னா கூப்பிட்டான்..?’ என்று அவள் பார்த்திருந்தாள். 
இப்போது அவன் அவள் முன் சொடக்கிட்டு
“சொல்லு அனு” என்றான். 
அவனது ‘அனு’ அணு அளவில் அவளுள் ஒரு மாற்றதைக் ஏற்படுத்தியது.
“நான்.. அது.. உங்க கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்” என்றாள் சிறிது தடுமாற்றத்துடன். 
‘நீ’ நீங்கி ‘நீங்க’ என்று மாற்றம் கண்டிருந்தது இப்போது. 
மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மாற்றத்தை மாற்ற முடியுமா? மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது தானே மனித இயல்பு. அவள் வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டுவரவே காத்திருக்கிறான் அவளவன். 
“ஃபாலோ பண்றவனுக்கும் பாதுகாப்பு கொடுக்கறவனுக்கும் கூட வித்தியாசம் தெரியாதே உங்களுக்கு? அப்பறம் நாங்க எங்கிருந்து புரிய வைக்க முடியும். ஆண் வர்க்கமே இப்படித் தான்னு நீ தப்பா போர்ட்ரைட் பண்ணற அனு. தயவ செஞ்சு அதை மாத்திக்கோ. ஒரு ஆண் உடலளவுல பலவான்னா? ஒரு பெண் மனதளவுல பலமானவள். எல்லாரும் சமம் தான் இங்க. யாரு பெருசு யாரு சிறுசுன்னு போட்டி போட்டா உலகத்துல ஒருத்தரும் நிம்மதியா வாழ முடியாது அனு”
பேசவேண்டிய நேரத்தில் வாய்க்கு பலத்த பூட்டைப் போட்டிருந்தாள் பல்லவி. அதையும் அவனே உடைக்க முயற்சித்தான்.
“அண்ட் உன்ன அடிச்சது தப்பு தான். அதுக்கு தான் நான் இப்போ மன்னிப்பு கேட்டுட்டேனே. அப்படிப் பார்த்தா என்ன நடந்ததுனே விசாரிக்காம பொறுக்கி பொறம்போக்குன்னு சொல்லி நீ என்ன அடிச்ச, அது தப்பில்லையா அனு?” என அவள் நீள் நயனங்களில் தன்னுடையதை நங்கூரமிட,
“பொறம்போக்குன்னு எல்லாம் நான் சொல்லவே இல்லையே” என்றபடி அவனை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.
“சரி பொறுக்கின்னு சொன்ன தானே? என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” என்று அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான்.
“தள்ளி.. தள்ளி உக்காருங்க” என்றாள் ஒற்றை விரலால் தள்ளி அமரும்படி காண்பித்து.
“இல்லை நீ நல்லா பார்த்து சொல்லு என்னப் பார்த்தா எப்படி தெரியுது” என்றான் இன்னும் சற்று நெருங்கி அமர்ந்து.
“ச்சே.. எனக்கு தூக்கம் வருது நீங்க போய் கீழ படுங்க” என்றுவிட்டு  அவள் உறங்கச் செல்ல அவனும் அதே கட்டிலில் உறங்கச் சென்றான்.
உடனே பதறி எழுந்தவள், “ஹெலோ நான் உங்கள கீழ படுக்க சொன்னேன் மிஸ்டர்” என்றாள் பல்லைக் கடித்து.
“அப்போ நீயும் வந்து கீழ படு. உனக்கு மட்டும் பஞ்சு மெத்தை எனக்கு மட்டும் பாய் ஆஹ்? ஈக்குவல் ரைட்ஸ் வேணும் எனக்கு. இல்லைனா நீ எனக்கு பண்ணுற டார்ச்சரை எல்லாம் அங்க நம்ம வீட்ல நான் உனக்கு திருப்பி பண்ணுவேன் எப்படி வசதி?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“ச்சே..” என்று எழுந்தவள் கட்டிலுக்கு வலப்புறம் ஒரு பாயைத் தூக்கிப் போட்டுவிட்டு, கட்டிலுக்கு இடப்புறம் அவளுக்கு ஒன்றை எடுத்து விரித்து, ஒரு போர்வையைத் தூக்கி அவன் மேல் வீசி எறிந்துவிட்டு உறங்கச் செல்ல,
“இரு அனு, அப்பறம் தூங்கலாம். நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அவள் தூக்கி வீசியதை கேட்ச் செய்தபடி.
“ச்சே.. இன்னும் என்ன?” என்றாள் கடுப்பாய்.
“நீ ஒரு ஆக்ரிமண்ட் சைன் பண்ணனும் அனு” என்றான்.
“என்ன.. டிவர்ஸா?” என்றாள் முட்டைக் கண்ணை விரித்து.
“அதெல்லாம் நீயா நினச்சாக் கூட என்கிட்ட இருந்து வாங்க முடியாது. நான் சொல்லுற அக்ரிமென்ட் இஸ் பிட்வீன் அஸ். நமக்குள்ள ஒரு சின்ன டீல்ன்னு வெச்சுக்கோயேன்” என்று புதிர் போட
“சரி சீக்கிரம் சொல்லுங்க” என்றாள் சுவரைப் பார்த்தபடி.
“நம்பர் ஒன். நமக்குள்ள என்ன ப்ராப்லம் இருந்தாலும் அது நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும். நம்ம சிவகாமி அம்மா சுந்தரேஸ்வரன் அப்பா முன்னாடி எதையும் காட்டிடக்கூடாது சரியா” என்றான். 
அவனது ‘நம்ம சிவகாமி அம்மா’ என்பதை குறித்துக் கொண்டவள் ‘சரி’ என்பதுபோல் தலையசைத்தாள் சுவரை பார்த்தவாறே.
“ப்ராப்லம் எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கணும்” என்றான் பேசி என்பதில் சற்று அழுத்தமாய். வாய் மட்டுமே பேசவேண்டும் கை பேசவே கூடாது என்பதைக் குறிக்கும் அவ்வழுத்தத்தை அவள் அறிந்திருப்பாளா?
“ஓகே. நெக்ஸ்ட்” என்றாள் மீண்டும் சுவரின் புறம் பார்வையைத் திருப்பி.
“நம்பர் டூ. நாம ஹஸ்பன்ட் அண்ட் வைஃபா ரொம்பவே சந்தோசமா இருக்க..” என அவன் சொல்லி முடித்திருக்கவில்லை
“அதெல்லாம் என்னால முடியாது” விரைந்து வந்திருந்தது பல்லவியின் பதில்.
“அட இருமா. கொஞ்சம் என்ன முழுசா முடிக்க விடு” என்றவன் 
“பெரியவங்க முன்னாடி நம்ம ரொம்பவே சந்தோசமா இருக்கணும். ஐ மீண் நடிக்கணும். அப்போதான் அவங்க சந்தோசமா இருப்பாங்க. அவங்கள நல்லா பார்த்துக்கணும்ங்கறது தான் நம்ம ரெண்டு பேரோட ஆசையும். இன்ஃபாக்ட் அதுக்குத்தானே இந்த மேரேஜ்?” என்று அவளை கேள்வியாய் பார்க்க அவளிடம் பதில் வராதது கண்டு
“இல்ல நீ என்ன விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டயா என்ன?” என புருவத்தை உயர்த்த,
“ச்சே ச்சே” என்றாள் உடனே.
அவனது அகம் நிறைந்தவள் அப்படிக் கூறியதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு, கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கப் பார்க்கலானான்.
“சோ பெரியவங்களுக்காக நம்ம கபில் கோல்ஸ் நாடகத்தை எல்லாம் எடுத்து விட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. எல்லாம் அவங்களுக்காக தான்” என்றான்.
இது அவர்களுக்காக சொல்வது போல் தெரியவில்லையே என சந்தேகித்தாலும், “ஒ… ஓ..கே” என்றாள் சற்று தயங்கியபடி.
“என்ன நீ இப்படி இழுக்குற? நீ என்னமோ அவங்கள இன்னும் கஷ்டப் படுத்துவைன்னு தான் தோணுது. இன்னைக்கு செஞ்சியே.. ப்ச்.. பாவம் சிவகாமி அம்மா. உன்னால அவங்க முகமே மாறிடுச்சு. உன்னால அவங்கள சந்தோசமா வெச்சுக்க முடியும்னு எனக்குத் தோணல” என அவளைச் சீண்டினான். 
“ஹெலோ மிஸ்டர். அதெல்லாம் என்னால முடியும். நான் இந்த மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டதே அவங்களுக்காக தான். அவங்களுக்காக மட்டும் தான்” என முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள்.
இல்லை என்றால் உன்னை எதற்கு கல்யாணம் செய்திருக்கப் போகிறேன் என்பதாய் இருந்த அவளது பதிலில், ஸ்வரன் தன் முகவாயைத் தடவியபடி யோசனையில் இருக்க,
“இன்னும் வேற எதாவது இருக்கா?” என்றாள். இன்னும் இருந்தால் சொல்லும் சொல்லித் தொலையும் எனும் பாவனையில்.
“எஸ்.. இருக்கு.. பட் அதுக்கு முன்னாடி” என்றுவிட்டு அவளைப் பார்க்க ‘என்ன’ என்று அவள் புருவம் உயர்த்த
“ஃப்ரெண்ட்ஸ்” எனத் தன் வலக் கரத்தை அவள்முன் நீட்டியிருந்தான்.
கையை வைக்கலாமா வேண்டாமா என பல்லவி இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதற்குள், 
‘அட கல்யாணமே பண்ணியாச்சு இனி கைய வெச்சா என்ன கால வெச்சா என்ன பேசாம பழசெல்லாம் மறந்துட்டு ஃப்ரெண்ட் ஆகிடு. அதான் உனக்கு நல்லது’ என அவளது மனசாட்சி மூளையோடு பேசியதை ஏற்று
“ஓகே ஃப்ரெண்ட்ஸ்” என அவளும் அவன் கையில் லேசாய் தட்டிவிட்டு “நெக்ஸ்ட்” என்றாள்.
“நம்பர் த்ரீ. இங்க யாரும் யாரையும் டாமினேட் பண்ணக் கூடாது. நீ உனக்கு பிடித்ததை செய்யலாம். நான் எனக்கு பிடித்ததை செய்வேன். நம்ம சக மனுசங்க தான். உன் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கற உரிமை எனக்குமே இல்லை. நீயும் உன் லிமிட் எதுவரைன்னு தெரிஞ்சு தான் நடப்பைன்னு நம்புறேன். முடிந்த அளவு நமக்குள்ள சீக்ரெட்ஸ் மட்டும் இருக்கக் கூடாது” என்றான்.
ரகசியங்கள் இருக்கக் கூடாது என்றால்? 
அவளிடம் இருப்பதெல்லாம் ரகசியம் மட்டும் தானே. அத்தனை எளிதில் வெளிப்படுத்தி விடுவாளா என்ன? இல்லை வெளிப்படுத்தத்தான் முடியுமா? 
விட்டால் இவன் விடிய விடிய பேசிக்கொண்டே போவன் என்று நினைத்தவள் எதுவும் கூறாது அமைதியாய் படுத்துக் கொண்டாள்.
“கடைசி ரூல் தான் ரொம்ப முக்கியம். அதையும் கேட்டுட்டு தூங்கு” என்றதும் அவன் புறம் பார்த்தாள்.
“நீ அடிக்கடி சொல்லுவையே ‘ச்சே’ அதை ஒரு நாளைக்கு நாலு முறைக்கு மேல சொல்லக் கூடாது”
‘சொன்னா என்ன பண்ணுவ’ என்பதுபோல் பார்த்திருந்தாள்.
“சொன்னா…. அப்போ எனக்கு என்ன தோணுதோ அதை கட்டாயம் செய்வேன். நீ சொல்றதை எல்லாம் அப்போ காது கொடுத்தும் கேட்க மாட்டேன். உன் பேச்சுக்கு அப்போ ஸ்ட்ரிக்ட்லி நோ” என்றுவிட்டு படுத்துக்கொள்ள
‘ஐயோ’ எனப் பார்த்திருந்தவள் விரைந்து தன்னை போர்வைக்குள் மறைத்துக் கொண்டாள். 
அக்ரிமெண்ட்டிற்குள் அடங்குபவளா அனுபல்லவி? அவன் போட்ட கணக்குகளின் எண்களுக்குள் வாழப்படுவதல்ல அவளோடான வாழ்க்கை. அனைத்தையும் அறிந்துதான் இருந்தான் ஆதீஸ்வரன். இருந்தும் அவளோடான வாழ்க்கைப் பயணத்தின் நல்லதோர் துவக்கத்திற்காகவே அக்ரிமெண்ட் வாயிலாக அடித்தளமிட்டான். 
காலையில் இருந்து நடந்த நிகழ்வுகளை எல்லாம் மெல்ல அசை போட்டாள் பல்லவி. மாறி மாறி வந்த தன் மனநிலை குறித்து அவளுக்கே வியப்பு. சில மணித்துளிகள் மெல்ல நகர்ந்திருக்க.. போர்வையை விலக்கியவள் திரும்பி அவனைப் பார்த்தாள். கண்மூடி நிர்மலமான முகத்தோடு துயில் கொண்டிருந்தான். 
அறையில் விளக்கு எறிந்திருக்க, கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்தாள். இத்தனை நாள் இருந்த அறை தான் எனினும் அனைத்தும் புத்தம் புதிதாய் தெரிந்தது. புதிதாய் அவள் அறையில் ஒருவன். இனி அவளவன். அவன் கொண்டு வந்த மாற்றம் தான் இவை அனைத்தும். அவள் இதுபோல் எல்லாம் இதுவரை நினைத்தும் பார்த்ததில்லை, இப்படி அவள் வாழ்வில் அவன் வந்து குதிப்பான் என. 
அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று நினைத்து நேற்றெல்லாம் தூக்கத்தை தொலைத்திருக்க, இன்றோ அது ஒன்றும் அவ்வளவு சிரமமாய் இருக்கப் போவதில்லை என்று தோன்றியது. 
அவளை எதற்கும் கட்டாயப் படுத்தவில்லை, மாறாக மன்னிப்பு கேட்கிறான். வஞ்சியவளிடம் விடாப்பிடியாக வம்பிழுத்து வாயடித்துக் கொண்டிருக்கிறான். அவளையும் அவனோடு இயல்பாய் பேச வைக்க முயற்சிக்கிறான். ஆதி எடுத்து வைத்திருந்த முதல் அடியிலேயே அனுவின் பாறாங்கல் மனதில் சிறு அசைவு ஏற்பட்டது என்னவோ உண்மை.
அமைதியாய் துயில் கொள்ளும் அவனையே பார்த்திருந்தாள். அப்படியே தலைக்கு கைக்கொடுத்து சற்று உந்தி அவனை எட்டிப் பார்த்தாள். அப்போது அவன் கண்விழித்து அவளைத் திரும்பிப் பார்ப்பான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே பல்லவி தன் விழிகளை உருத்து விழிக்க.. அவனும் அவள்போல் தலைக்கு கைக்கொடுத்து சற்று உந்தி 
“என்ன அனு” எனப் புருவம் உயர்த்த.. ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.
“லைட் ஆஃப் பண்ணிடவா அனு” 
“இல்ல வேண்டாம்” என போர்வைக்குள் இருந்து வந்தது பதில்.
“இல்லை கரென்ட் பில் அதிகம் ஆகுமல்ல” என்றான்.
‘ரொம்ப தான்டா அக்கறை உனக்கு’ என நினைத்தவள் 
“அதெல்லாம் நான் கட்டிக்குறேன் நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டாம்” என்றாள் போர்வைக்குள் இருந்தே.
“அப்படியா….? அப்போ நீயே கட்டிக்கோ அனு” 
“நான் பில்ல சொன்னேன்”
“நானும் பில்ல தான் சொன்னேன். அப்போ நீ தான் வேற எதையோ நினைச்சிருக்க.. என்ன நினைச்ச அனு என்னையா..?”
“ச்சே.. நான் தூங்கிட்டேன்” என்று அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
பேசிப் பேசியே அவளை வழிக்கு கொண்டுவரும் வித்தை அறிந்தவன் ஆயிற்றே அவன். அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவளைப் பார்த்தபடியே படுத்துக் கொள்ள, மெல்ல உறக்கத்தைத் தழுவினான்.
இருவரிடமும் இதுவரை இல்லாத ஒன்று புதிதாய் இடம்பெற்றிருக்க.. அது இருவரையும் இணைத்திருக்க.. நித்ரா தேவி ஆனந்தமாய் ஆட்கொண்டு விட்டாள் அவர்களை. 
அதிகாலையில் அனுபல்லவி அளித்த அதிர்ச்சி வைத்தியத்தில் அலறிக் கொண்டு எழுந்தான் ஆதீஸ்வரன்.
கீதமாகும்…

Advertisement