Advertisement

ஓம் ஆதிகுருவே போற்றி!!
2
ஏகாந்த இரவுப் பொழுது அது..!
ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது.
எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும் சுரேகாவும்.
கல்யாணம் எனும் நெடுங்கடலில் பாய்மரப் படகேற்றி விடப்பட்டவளோ, நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ளமுடியுமா என்பதாய் அமர்ந்திருந்தாள். தள்ள முடியும் என்றால் எப்போதோ தள்ளியிருப்பாள். ஆனால் இப்போது? விதி தன் வாழ்கையில் வாலிபால் விளையாடியதை எண்ணி விசனப்பட்டுக் கொண்டிருகிறாள். 
“சுரேகா இன்னும் கொஞ்சம் பூவை எடுத்து வச்சுவிடு..” என சிவகாமி சொல்ல.. பல்லவியின் பொறுமை பறந்து.. தொலைந்து.. போயிருந்தது.
“இப்போ எதுக்கும்மா இதெல்லாம்? அதான் உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தானே. இன்னும் என்ன? என்னை கொஞ்சம் நிம்மதியா தான் இருக்க விடுங்களேன்” 
அடக்கப்பட்ட ஆத்திரம் அபாயம் தான் எப்போதும். வெடித்துச் சிதறிவிடும் எப்போது வேண்டுமானாலும். பல்லவியின் ஆத்திரமும் அப்படித்தான்.
அவள் வாய் மட்டும் பேசாது கையும் பேசிவிட, அவளருகில் அமர்ந்திருந்த டம்ளர் அலறியபடி உருண்டோடி, ஸ்வரன் காலடியில் அடைக்கலம் தேடி அமர்ந்திருந்தது.
“பல்லவிம்மா.. கொஞ்சம் மெதுவா.. மாப்பிள்ளை வெளில தான் இருக்காரு..”
அவள் மனமெங்கும் ‘உன்னை ஆட்டிவைக்கப் போகிறவன் நான் தான்’ என்று அவன் கூறியதிலேயே வட்டமிட
“கேட்கட்டும்.. அவங்களுக்கும் கேட்கட்டும்” என்று வெடியாய் வெடித்தாள்.
அவள் இளமைக் காலத்திலிருந்தே சிவகாமியை அம்மா என்று அழைத்து தான் பழக்கம். யோசித்துப் பார்த்தால் தாய் தந்தை முகம் கூட அவ்வளவாய் நினைவில் இல்லை. அவர்களது புகைப்படம் கூட இல்லை அவளிடம். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் சிவகாமி மட்டுமே. அவள் கூட்டிற்கு அவர் ஒருவரே போதுமென்று இதுவரை வாழ்ந்துவிட்டாள். ஆனால் இப்போது அக்கூட்டுக்குள் இரு பறவைகள் அவள் அனுமதி இன்றியே நுழைந்துவிட்டதில் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, விட்டு விலகவும் முடியாத நிலையில் தன் ஆத்திரத்தை எல்லாம் யாரிடம் காட்டுவதென்று தெரியாது அதையும் சிவகாமியிடமே காண்பித்துக் கொண்டிருகிறாள்.
அவள் அப்படிக் கூறியதும் சுரேகாவை அவள் உடனிருந்து பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு கண்கள் கலங்க அவ்விடம் விட்டு வெளியேறினார் சிவகாமி.
“என்ன பல்லவி! யார சந்தோசமா வெச்சுக்கணும்னு நினைக்கறையோ அவங்கள நீயே காயப் படுத்துற. அவங்க எத்தனையோ கஷ்டத்தை கடந்து வந்தவங்க. இனி அவங்க மனசும் உடம்பும் எதையும் தாங்காது. அவங்க வயசு என்ன? எல்லாம் தளர்ந்து போய் இருக்குற இந்த நேரத்துல இதுக்கும்மேல அவங்க மனசு வருத்தப் படுறமாதிரி நடந்துக்காத” தன் கருத்தை கண்டிப்புடன் வைத்தாள் சுரேகா.
அவளுக்குத் தெரியும் இருவரும் எத்தனை எத்தனை போராட்டங்களைக் கடந்து இந்நிலைக்கு வந்திருக்கிறார்கள் என. 
பதினாறில் தொடங்கியது சிவகாமியின் இல்வாழ்க்கைப் பயணம். இப்போது அறுபத்தி ஆறு ஆகிவிட்டது. வலிகள் மட்டுமே அவர் வாழ்கையில் இருக்க, அவ்வலிகளுக்கு நிவாரணியாய் பல்லவி மட்டும் உடனிருக்கிறாள். தன்னை நம்பி இருக்கும் ஓருயிருக்காக எது வந்தபோதும் வாழ்கையை மட்டும் முடித்துக் கொள்ளாது ஓடிக் கொண்டிருக்கிறார் இதுவரை.
வரவேற்பறையில் தன் தாத்தாவோடு அமர்ந்திருந்த ஸ்வரன் பல்லவி கூறியதைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தான். தன் அருகே கிடந்த டம்ளரை எடுத்து மேசைமேல் வைத்துவிட்டு எந்த ஒரு பாவனையும் முகத்தில் காண்பிக்காது
“இப்போ வந்திடுறேன் ப்பா” என்று சுந்தரேஸ்வரனிடம் கூறிவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். 
அவன் சென்ற சிறிது நேரத்தில், பின் வாசலில் நின்றபடி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் அருகில் வந்தார் சுந்தரேஸ்வரன். அவரைக் கண்டதும் சிவகாமி வேகமாய் தன் புடவை முந்தானையை எடுத்து கண்களைத் துடைத்துக் கொள்ள, 
“ரெண்டு பேரும் கல்யாணம் வரைக்கும் வந்ததே சந்தோஷம். இனி அவங்க வாழ்கையை அவங்க பார்த்துப்பாங்க. விவரமான பசங்க தான். வாழ்கையை தொலைக்குற அளவுக்கு எல்லாம் முட்டாள் இல்லை. நீங்க செஞ்சது அவ நல்லதுக்கு தான்னு பல்லவி சீக்கிரமே புரிஞ்சுப்பா. நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. போகப் போக எல்லாம் சரியாயிரும். நம்ம எதுக்கு இருக்கோம் எல்லார்த்தையும் சரி பண்ணிடலாம் விடுங்க” என்றார் சிவகாமியிடம்.
அவரது பேச்சு சற்று ஆறுதலளிக்க..
“நீங்க ஏதும் தப்பா எடுத்துக்காதீங்க. இவ இஷ்டத்திற்கு விட்டு வளர்த்திட்டேன். பொறுப்பான பொண்ணு தான். ஆனா கொஞ்சம் பொறுமை பத்தாது..”
“என் அனுபவத்துல எத்தனை பேரை பார்த்திருக்கேன். பல்லவி புத்திசாலிப் பொண்ணு. அவ மனசுல எதோ ஒரு குழப்பம் இருக்கு. அது தீர்ந்தா நீங்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு மாறிடுவா. நீங்க கவலைப் படமா உள்ள வாங்க. பனியில நின்னு உங்க உடம்புக்கு எதாவது ஆகிடப் போகுது” என்றார் அக்கறையாய்.
“நீங்களும் வாங்க” என்று அவரையும் உடன் அழைத்துச் சென்றார் சிவகாமி.
அறையில் சுரேகா பல்லவியைப் போட்டு தாளித்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு என்ன தான் பல்லவி பிரச்சனை? இன்னும் அதவே நினச்சுட்டு இருக்கையா? அதான் நான் அன்னைக்கே உங்கிட்ட தெளிவா சொல்லிட்டனே. அந்த பொறுக்கி பசங்களை ஸ்வரன் அண்ணாவும் அவங்க ஃப்ரெண்ட்சும் தான் ஒரு வழி செஞ்சிருக்காங்க. அதிலிருந்து அவனுக அந்த ஏரியா பக்கமே வர்றது இல்லை. அவனுக எடுத்த போட்டோஸ் கூட ஸ்வரன் அண்ணா வாங்கி டெலீட் செஞ்சிட்டாங்க”
சுரேகா பேசிக்கொண்டே இருக்க பல்லவி மௌனம் சாதித்தாள். 
“நான் தான் சரியா கவனிக்காம அண்ணாவோட ப்ளாக் ஷர்ட் வெச்சு தப்பா அடையாளம் காட்டிட்டேன். அதை அவருகிட்டையும் சொல்லிட்டேன். நீ தான் அதுக்குள்ள கிளம்பி வந்துட்ட. நீ அடிச்சது நியாயம் தான், நான் தப்புன்னு சொல்லல. பட் அடிச்ச ஆள் தான் தப்பு. அண்ணாவும் உன்ன அடிச்சிருக்கக் கூடாது தான். பட் நீ பேசுனதுல அவரு ஹர்ட் ஆகிருக்கலாம். ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. இதுக்கு காரணம் என்னவோ முழுக்க முழுக்க நான் தான். நான் மட்டும் தான். ப்ளீஸ் இதை இதோட விட்டுடேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதுனால உன் லைஃப்ல எதுவும் ப்ராப்லம் பண்ணிக்காத பல்லவி” 
“ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ ஏதும் ஃபீல் பண்ணாத. அம்மாவை வர சொல்லு” என பல்லவி கூற,
“சரி நானும் கிளம்புறேன். சொன்னதெல்லாம் ஞாபகம் வெச்சுக்கோ. விஷ்ஷிங் யூ அ லைஃப்டைம் ஆஃப் லவ் அண்ட் ஹாப்பினஸ். ஹாப்பி மேரீட் ஃலைப்” என்று கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்று, சிவகாமியிடம் கூறிக்கொண்டு நகர்ந்தாள் சுரேகா.
அதற்குள் ஸ்வரனும் திரும்பியிருக்க, சிவகாமி பல்லவிக்கு பல புத்திமதிகளை வாரி வழங்கினார். அவள் இம்முறை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டாள் அவருக்காக. 
“பாட்டி தானே வளர்த்துனா அம்மா வளர்த்தலையே அதான் இப்படின்னு ஒரு பேச்சு வந்துட்டா என்னால தாங்க முடியாது பல்லவிமா. பார்த்து பக்குவமா நடந்துக்கோ” என்று அவள் கைப்பிடித்துக் கொண்டு கண்கலங்கியபடி கூற, அவளுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. 
சற்றுமுன் அவர்களை அவமதிப்பதுபோல் தான் நடந்துகொண்ட விதத்தில் தான் பாட்டி வருந்துகிறார் என்பதை அறிந்தவள், 
“நான் பார்த்துக்குறேன் ம்மா.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன் என்னை மன்னிச்சிருங்க” என்றாள் அவர் கைப்பிடித்து.
சிவகாமியின் ஒற்றை வார்த்தையில் ஸ்வரன் மீதான பல்லவியின் பழி வாங்கும் படலமெல்லாம் ரசத்தில் கரைத்த பெருங்காயமாய் கரைந்து காணமல் போயிருந்தது. பின் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு மேலே இருக்கும் தனி அறைக்கு வந்த பல்லவிக்கு பலதும் மனதில் வந்து போனது.
அதில் முதலிடம் பிடித்தது என்னவோ ஸ்வரனுடனான இரண்டாவது சந்திப்பு தான்.
பல்லவி நைட் ஷிஃப்ட் சென்று திரும்பும் வேளை அது. 
பெரும்பாலும் அவள் வீட்டருகே வசிக்கும் ஆட்டோக்கார தாத்தா தான் அழைத்து வருவார். அவரால் சவாரி செல்ல முடியாத போது ஜாமக் கோடங்கிபோல் நள்ளிரவில் வீதியில் நடைபயிலும் நிலை தான் பல்லவிக்கு. அப்படித் தான் அன்றொருநாள் வீதியில் இறங்கி மின்னலென வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள்.
யாரோ பின்தொடர்வதுபோல் இருக்க, நடையின் வேகத்தைக் கூட்டியவள் தெருவுக்குத் தெரு மாறும்போதெல்லாம் தெருவிளக்கின் ஒளியில் பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு சென்றுகொண்டிருக்க, அடுத்த தெருவில் அவள் முன்னால் வந்து நின்றிருந்தான் ஸ்வரன்.
அவனைத் தன் முட்டைக் கண்விரித்து முறைத்தபடி 
“என்னடா? எதுக்கு ஃபாலோ பண்ணி வர இப்போ” என்றாள். 
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது” என தலையில் அடித்துக் கொண்டவன் உடன் நடக்க ஆரம்பிக்க,
“நான் எதுக்கு திருந்தனும்? உன் இனத்தை திருந்த சொல்லு முதல்ல. ஒரு பொண்ணு தனியா ரோட்ல நடந்து போக முடியுதா ச்சே..” 
ஆண் வர்க்கமே அவலாகியது அவள் வாயில்.
அவளிடம் அத்தனை பேச்சுக்களைக் கேட்டாலும் அமைதியாய் அவள் பின்னால் தான் வந்துகொண்டிருந்தான் அவன்.
“எனக்கு பாடிகார்ட் எல்லாம் வேணாம்.. என்னை நான் பார்த்துப்பேன்..” 
‘நீ வராதே’ என்பதை இப்படியாய் அவனிடம் சொல்ல..
“ஏய்..! பேசாம வீட்டப் பார்த்து நட” என்ற அவனது அதட்டலில் அங்கோர் வாக்குவாதம் துவங்கும் முன் அவள் வழியில் குறுக்கிட்டது ஒரு கரும்பூனை.
அதைக் கண்டு.. லேசாய் பயந்து.. பின்னால் நகர்ந்து.. அவனை இடித்து.. அதன்பின்னரே நின்றாள். புலிக்கு ஒரு பூனை பயம் காட்டியதை எண்ணி அவன் மென்னகை புரிய, “ச்சே” என சிலுப்பிக்கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள் பல்லவி. 
சில நிமிடங்களில் வீடு வந்திருக்க, அதுவரை அவனும் பின்னால் தான் வந்துகொண்டிருந்தான். பல்லவி அவனை ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே செல்லப் படிகளில் ஏற, 
“இனி நைட் ஷிஃப்ட் போய்ப்பாரு கால் இருக்காது” என்று மிரட்டிவிட்டு அவனும் திரும்பிவிட்டான். 
அதை சிவகாமி பார்த்துவிட, நைட் ஷிஃப்ட் செல்வது அன்றே கடைசியாகிப் போனது பல்லவிக்கு. வெளியில் சுத்தும் ஆண்களை அடைத்து வைக்காமல் வேலைக்குச் செல்லும் பெண்களை அடைத்து வைக்கிறார்களே எல்லாம் இவனால் வந்தது என்ற எரிச்சலில் இருந்தாள்.
அப்போதிருந்தே அவன் ஆப்போசிட் பார்ட்டியாகத் தான் இருந்திருக்கிறான் என்பதை எல்லாம் நினைத்துப் பார்த்தாள் பல்லவி. பாட்டியிடம் சரி சரி என்றுவிட்டு வந்தாகிற்று இங்கு வந்தபின்னோ உள்ளுக்குள் உதறல் எடுக்க, அதை வெளிக்காண்பிக்காது இருக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.
‘பேசாம இருந்திருக்கலாம் பல்லவி நீ. சேதாரம் கீதாரம்ன்னு அவன்கிட்ட தேவையில்லாம வாய விட்டு, இப்போ அவன் வந்து உன்ன சேதாரப் படுத்தப்போறான்’ எனப் புலம்பிக் கொண்டிருந்தாள்.
மாடிப் படியேறி மேலே வந்த ஸ்வரன், எல்லையற்ற விண்ணையும் எண்ணிக்கைக்கு அடங்காத விண்மீன்களையும் கண்டபடி இருள் நிறைத்த இரவின் இனிமையை ரசித்திருந்தான். 
அவன் வாழ்வுக்கு ஒளி கிடைத்த மகிழ்ச்சியில் இருளும் கூட அவன் கண்களுக்கு ஒளிமயமாய் திகழ்ந்தது. சில்லென்ற காற்றின் இதம் அவன் இதயத்தைத் தொட்டுச் செல்ல கண்மூடி அதை அனுபவித்தபடி நின்றிருந்தான்.
அகம் ஆனந்தமாயிருக்க.. புறத்தை புறக்கணித்திருந்தான். 
ஸ்வரன் எத்தனை மணி நேரம் அப்படி இருந்தானோ,
நேரம் பதினொன்றை மெல்லக் கடந்தது. 
மெல்லக் கண்திறந்தவன் இந்நேரம் பல்லவி உறங்கியிருப்பாள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைய, அவளோ தன் கோழி முட்டைக் கண்ணை அங்கும் இங்கும் உருட்டியபடி தீவிர சிந்தனையில் இருந்தாள்.
அறைக் கதவைச் சாற்றும் சத்தத்தில் பல்லவி அவன் புறம் பார்வையை வைக்க.. கதவை சாற்றிவிட்டு அதில் சாய்ந்தபடி கை கட்டிக்கொண்டு அவனும் அவள் புறம் பார்வையை வைத்திருந்தான்.
‘ஏன் நம்மளையே குறு குறுன்னு பாக்குறான்’ எனப் பார்த்தவள் 
“எனக்கு தூக்கம் வருது” என்றாள் அவனிடம் இருந்து பார்வையை பிரித்து வேறுபுறம் பார்த்தபடி.
“அப்போ தூங்கு” என்றான் அவனும். 
இப்போது வேகமாய் அவனைத் திரும்பிப் பார்க்க
“என் பெர்மிஸனுக்காக தான் இவ்வளவு நேரம் இந்த ஆந்தை முழிச்சிட்டு இருந்துதா??” என்றதில் பல்லைக் கடித்தவள்
“வௌவால் மாறி இவ்வளவு நேரம் வெளிய சுத்திட்டு வந்தது நீ. உனக்கு நான் ஆந்தையா?” என 
“ஓஹ் நீ எனக்காக ரொம்ப நேரம் வெய்ட் பண்ணுனயா? நான் லேட்டா வந்துட்டேன்னு கோபத்துல இருக்க.. ஹ்ம்ம்.. டம்ளர் பறக்கும் போதே நெனச்சேன். ஆந்தை அண்ட் வௌவால் நைஸ் நேம்ஸ். ரெண்டும் நைட் எல்லாம் தூங்காதாமே!” என்றான் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவளை நோக்கி எட்டு வைத்து. 
இப்படி எல்லாம் பேசுவானா இவன். அளவாய் அளந்து பேசுவான் என்று நினைத்தால் அளவிற்கும் அதிகமாய் அல்லவா பேசுகிறான். அவன் பேச ஆரம்பித்தால் அவளுக்கே டஃப் கொடுப்பான் என்பது அறியாது அவனையே பார்த்திருக்க,
“ஆர் யு ரெடி?” கண்களிலும் கடையிதழிலும் புன்னகையோடு அவள் அருகில் வந்தான்.
“ச்சே.. என் சிவகாமி அம்மாக்காக தான் பார்க்குறேன் இல்லைன்னா பாய் தலகாணிய அப்போவே தூக்கி வெளிய போட்டு உன்னயும் வெளிய துரத்திருப்பேன்” 
“நான் தலகாணியோட சேர்த்து உன்னையும் வெளிய தூக்கிட்டுப் போயிருப்பேன்” என்றான் வெகு இயல்பாய் இருதோள்களையும் குலுக்கியபடி.
“என்ன யா சொன்ன..?” பல்லவி நெற்றிக்கண் திறக்க,
“மரியாதையா பேசுனா உனக்கும் மரியாதை கிடைக்கும். கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்” என்றதில்
“என்னையான்னு கேட்டேன்” என்றாள் சற்றுமுன் இடைவெளி கொடுத்த வார்த்தைகளை இழுத்துப் பிடித்து.
“இந்த வாய் இருக்கே இந்த வாய்…” என லேசாய் சிரித்தபடி கையை அவள் இதழ்களின் அருகே நீட்டிக்கொண்டு செல்ல, அதைத் தட்டி விட்டவள் 
“டோன்ட் டச்” என்றாள் விரல் நீட்டி. 
“எனக்கு ப்ராப்பர் லைசென்ஸ் இருக்கு” என்றான் நீட்டிய அவள் விரலை மடக்கியபடி.
என்ன சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தவளுக்கு அவன் அவள் கழுத்தில் இருந்ததை சுட்டிக் காட்டவும் புரிந்துபோக, 
“பார்த்து மிஸ்டர். உங்க லைசென்ஸ் எப்போ வேணாலும் எக்ச்பைர்ட் ஆகலாம்” என்றாள் மிரட்டலாய்.

Advertisement