Advertisement

இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி,
“அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள்.
“அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன் கூட இருந்து அவனை பார்த்துட்டு இருக்குறதே போதும் எனக்கு” என்றுவிட்டு கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.  
அவர் கூறியதை தன் அறைக் கதவின் பின்னால் இருந்தபடி கேட்டுக் கொண்டுதான் இருந்தான் ஸ்வரன். நாளைய நாளிற்காக அவன் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்க, அதை நோக்கி நகர்ந்தான். அங்கிருந்த அனைவருக்குமே தலைக்குமேல் வேலைகள் இருந்தது. ஆளுக்கு ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு செய்துகொண்டிருந்தனர்.
நாழிகை நகர்ந்தும் அம்பிகாவின் முகம் இயல்பிற்கு மாறாதது கண்ட பல்லவி அவரருகில் வந்தமர்ந்து,
“விடுங்க அத்தை.. உங்க மகன் தானே. அவரு முன்னாடி சாப்பிடாம இருக்குறமாறி டிராமா போட்டா உடனே பேசிடுவாரு. அப்போவும் பேசலையா.. கோவிலுக்கு அழச்சிட்டு போனா போதும், அவரை பிடிச்ச பேய் பிசாசெல்லாம் ஓடிரும். அவரும் சரியாகிடுவாரு. இப்படி நிறைய இருக்கு. என்னை கேளுங்க சொல்லுறேன்” என்றுவிட்டு அவரது புன்னகையை எதிர்பார்த்து காத்திருக்க, அவரோ லேசாய் அதிர்ந்த பார்வை பார்த்துவைத்தார்.
அவர் பார்வை சென்ற திசையில் அவளுக்கும் பின்னால் திரும்பிப் பார்க்க, அவளை முறைத்தபடி ஸ்வரன் நின்றிருந்தான்.
“எல்லாம் உன்ன சொல்லணும் அனு. உன்னை சிவகாமி பாட்டி கூப்பிட்டாங்க போ” என, அவளும் சிரித்து மழுப்பியபடி வெளியேறினாள்.
அவள் சென்றபின் அம்பிகாவை பார்த்த ஸ்வரன்
“ம்மா.. ஜூஸ் நீங்க குடிக்கட்டும்னு தான் வாங்காம போனேன். இவ பேச்சை கேட்டுட்டு சாப்பிடாம எல்லாம் இருக்காதீங்க” என, 
மகன் தன்னிடம் பேசிய மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்று தெரியாது பெரிதாய் தலையசைத்து வைத்தார் அம்பிகா.
“எனக்கு ஒரு காஃபி போட்டு தர்றீங்களா..?” என்று கேட்க,
“இரு ப்பா.. ரெண்டே நிமிசத்துல வரேன். இங்கயே இரு” என வார்த்தை படபடக்க சமையல் கட்டினுள் செல்ல, அவரையே புன்னகையுடன் பார்த்திருந்தான் ஸ்வரன்.
திரையின் அடர்த்தி முற்றிலுமாய் குறைந்து திரையே மொத்தமாய் விலகியதில் இருவருக்குமே சொல்லமுடியா உணர்வு ஒன்று எழ, இதுவரை காயம் கொண்ட இதயத்தில் பல மாயம் செய்து மயில் பீலியால் வருடி மென்மைப் படுத்தியது.
“கலக்குறீங்க மிஸ்டர். புருஷ்” என்று தனக்குப் பின்னால் ஒலித்த குரலில் திடுக்கிட்டு திரும்பினான் ஸ்வரன். 
கதவோரம் மறைந்து நின்றபடி தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்திருந்த பல்லவி, ‘நான் பார்த்துட்டேனே’ என புன்னகைத்து ஜாடை செய்தாள்.
‘இவளை’ என அவனுமே அவள் செய்கையைக் கண்டு உள்ளுக்குள் புன்னகைத்து
“என்ன பார்த்த..?” என,
“பார்க்கக் கூடாததை எல்லாம் பார்க்கலை. பார்க்க வேண்டியதை பார்த்தேன். என் பிராண நாதரின் பாசத்தை பார்த்தேன். என் பிராண நாதரை பெற்றெடுத்த தேவியாரின் நேசத்தை பார்த்தேன்” என்று பக்கம் பக்கமாய் பத்திரம் வாசித்தாள்.
“போதும் போதும் அப்பப்போ உன் வேலையையும் கொஞ்சம் பாரு” என்று சொல்ல, அவனை செல்லமாய் முறைத்து நகர்ந்தாள்.
பெரிதோர் பாரம் நீங்கியது போல் இருந்தது பல்லவிக்கு. பல்லவிக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே. அன்றைய தினம் அகத்தினர் அனைவருமே ஆனந்தமாய் வலம் வந்தனர்.
மறுநாள், ஒரு மாத காலமாய் பல்லவி எதிர்பார்த்துக் காத்திருந்த திருநாள். 
விடியும் போதே அத்தனை உற்சாகம் அவளிடத்தில். அவள் ஆசைக்கேற்ப சிறிதாய் ஒரு மெஸ் துவங்கவிருக்கின்றனர். நேற்றைய தினம் இதற்காகப் போடப்பட்டது தான் கணபதி பூஜை. அனைவரும் இணைந்து அதற்கான வேலைகளை சிறப்பாய் செய்து முடித்திருந்தனர். 
பெயர் பலகையை யாரும் கவனியாது இருக்க, அது சுந்தரேஸ்வரனின் பொறுப்பில் இருக்க, அவரிடம் வந்த ஸ்வரன்
“அப்பா..! அனு பேர்ல தானே போர்டு வாங்கிட்டு வந்திருக்கீங்க” என்று வினவினான்.
“அம்பிகா அத்தை பேரை போட சொன்னேனே தாத்தா.. அவங்க பேருல தானே வாங்கிட்டு வந்திருக்கீங்க..?” என்றாள் பல்லவி.
“என் பேரு எதுக்கும்மா.. சரண் பேருல தான மாமா வாங்கிட்டு வந்திருக்கீங்க” என்றார் அம்பிகா.
“அதான் இல்லை. தாத்தா நான் சொன்ன பேரு தானே..?” என்று சரண் கண்ணடித்து கேட்க..
“என்ன மச்சான் சத்ரியா வா..?” என்று ஸ்வரன் சொன்னதும்
“மாமாஆஆ…” என சினுங்கியவன் “உங்க பேரை தான் சொன்னேன்” என்றான்.
“பாட்டி நீங்க என்ன சொன்னீங்க” என சரண் சிவகாமியை கேட்க
“இந்த வீட்லயே பெரியவரு ஸ்வரன் தம்பியோட தாத்தா தான். அவரு பேரையே வைக்க சொன்னேன்” என்று சிவகாமி கூறியதும் அனைவரும் சிரிக்க,
“ஆளாளுக்கு ஒரு பேரை சொன்னா தாத்தா எந்தப் பேரை பதிச்சு வாங்கிட்டு வருவாரு.. பாவம் தாத்தா அதான் வாங்காமையே வந்துட்டாரு போல” என்றாள் பல்லவி.
“அதெல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் பல்லவி மா.. எல்லாரும் வெளிய போய் பாருங்க” என்றது தான் தாமதம், அடுத்த நொடி அனைவரும் வெளியே நின்றிருந்தனர்.
சிவகாமி உணவகம்..!
பளிச்சென்ற பெயர்பலகை தாங்கி புதுப்பொலிவுடன் இருந்தது அவர்கள் இல்லம். 
அதில் அனைவருக்கும் ஆனந்தம் என்றால் சிவாமிக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. தன் பெயரை வைக்கும் அளவிற்கு தான் என்ன செய்துவிட்டோம், துர்பாக்கியமாய் வாழ்கையில் அனைத்தையும் இழந்துவிட்டு நின்றிருக்கும் தன் பெயரை வைத்துள்ளாரே என பார்த்திருந்தார். அவர் எண்ணத்திற்கு நேரெதிராக
“நம்ம சிவகாமி மாதிரியே அவங்க பேரும் ரொம்ப ராசியானது அதான் அந்தப் பேருலையே போர்டு வாங்கிட்டு வந்துட்டேன்” என்றார் சுந்தரேஸ்வரன்.
அதில் சிவகாமிக்கு கண்கள் கலங்க, அனைவரது முன்னிலையிலும் காட்டிக்கொள்ளாது தன்னை சமாளித்துக் கொண்டார். 
“நீங்க எது செஞ்சாலும் அது சரியா தான் ப்பா இருக்கும்.. வாங்க உள்ள போலாம். நீங்க ரெண்டு பேரும் உங்க கையால திறந்து வையுங்க” என ஸ்வரன் அழைக்க, சுந்தரேஸ்வரனும் சிவகாமியும் முன்னாள் செல்ல, மற்றவர்கள்  அவர்களை தொடர,
“மெஸ் பேரு சிவகாமி.. கண்ட்ரோல் முழுக்க அனுபல்லவி.. இனி லீவ்ல வரும்போதெல்லாம் தாத்தா கைப்பக்குவத்துல நல்லா மூக்கை பிடிக்க சாப்பிடுறது மட்டும் தான் இந்த சரணுக்கான முக்கிய வேலையா இருக்கப் போகுது அத்தை” என்று அவனது அம்பிகா அத்தையிடம் கூற, 
“பேரை சொல்லியா கூப்பிடுற” என அவன் காதை மெல்லத் திருகிய பல்லவி,
“என்னங்க..! இவனை என்னன்னு கேளுங்க” என்றாள் ஸ்வரனிடம்.
“அதானே நான் கூட இதுவரைக்கும் முழுசா உங்க அக்கா பேரை சொல்லி கூப்பிட்டதில்ல. நீ தைரியமான ஆளு தான் மச்சா” என ஸ்வரன் அவளை வாரியதில் தன் முட்டைக்கண்களை உருட்டி அவனைப் பார்க்க, அதற்குள் சரணோ 
“ஏன் மாமா..! முழுப்பேரை சொல்லி கூப்பிட்டா உங்க சம்சாரம் மின்சாரமா மாறிடுமா” என்றிருந்தான்.
“சரரரரண்….” என்று பல்லவி பல்லைக் கடிக்க, சிரிப்பை கட்டுப் படுத்திக்கொண்டு தன் மச்சானின் தோல் மேல் கைப்போட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றான் ஸ்வரன்.
பின் பெரியவர்கள் ஆசியுடன் இனிதே துவங்கப்பட்டது சிவகாமி உணவகம். 
அவ்வழி போவோர் வருவோர் எல்லாம் வெளியில் வைக்கப்பட்டிருந்த மெனுவைப் பார்த்தே அதிசயித்தனர். 
காலையும் மாலையும் அடை தோசை, தக்காளி தோசை, கேழ்வரகு தோசை, சோள தோசை, கம்பு தோசை, சிவப்பரிசி தோசை என பலவித தோசை வகைகள். ரவா இட்லி, கருப்பட்டி இட்லி, வெந்தய இட்லி, கம்பு இட்லி, ராகி இட்லி என இட்லியிலும் பலவகை இருக்க, இதுவே பலரையும் கவர்ந்தது.
மதியத்திற்கு வரகு, சாமை, குதிரைவாலி அரிசி சோறு.. முடக்கத்தான், மணத்தக்காளி, தூதுவளை போன்றவற்றில் சூப்.. பொன்னாங்கண்ணி, முருங்கை, வல்லாரை போன்ற சத்தான கீரை வகைகளில் பொரியல்.. விதவிதமான சாம்பார்.. வித்தியாசமான ரசம்.. பல காய்கறி கூட்டு என ஆரோக்கியமான உணவு வகைகளே இடம் பெற்றிருந்தன. 
அனைத்தும் பல்லவியின் ஏற்பாடு. துவங்கும் வரை தயக்கம் பயம் எல்லாம் இருந்தது அவளுக்கு. துவங்கியபின் அவள் அதையெல்லாம் தகர்த்தெறிந்து சரியான திட்டமிடுதலுடன் தன்னவனின் துணைகொண்டு தங்களது முன்னேற்றத்திற்கான பாதையை தன்னம்பிக்கையுடன் வகுத்திருந்தாள். 
ஆரம்பத்தில் ஒருசிலரே வருகை புரிந்தாலும் நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போக, பல்லவி கூறியதுபோல நாளடைவில் புதிதாய் ஆட்களையும் வேலைக்கு எடுத்திருந்தனர். நளன் கேட்டரிங் சர்விஸ் ஆட்கள் பலருக்கு இதன் மூலம் நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்தித் தந்தனர்.
நாகரிகம் என்று கருதி வீண் ஆடம்பரத்தின் பின் சென்று வாயில் நுழையாத உணவு வகைகளை எல்லாம் வயிற்றிற்குள் தள்ளி வினையை வாங்கி வந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்கு அறிவுக் கண் திறந்ததில் அனைவரும் ஆரோக்கியத்தின் பக்கம் திரும்ப.. முக்கிய சாலைகளில் எல்லாம் இடம் பிடித்திருந்தது சிவகாமி உணவகத்தின் கிளைகள்.
பல்லவியின் உழைப்பும் செயல்பாடும் நாளுக்கு நாள் அபாரமாய் இருந்தது. அவள் மென்மேலும் வளர வளர அவளுள் வளரும் மகவையும் கவனிக்கத் தவறவில்லை. 
“பல்லவியை இப்படி பார்க்க பெருமையா இருக்குங்க” என சிவகாமியே சுந்தரேஸ்வரனிடம் கூறினார்.
“நான் தான் முதல்லையே உங்ககிட்ட சொன்னேனே சிவகாமி. நம்ம பல்லவி மனசுல எதோ ஒரு குழப்பம் இருக்கு அது தீர்ந்தா நீங்களே ஆச்சர்யப்படும்படி அவன் மாறிடுவான்னு” என்றார் சிநேகிதியிடம்.
“சரி தானுங்க. அந்த கடவுள் புண்ணியத்துல, நம்ம தூக்கி வளர்த்த புள்ளைக ரெண்டும் எந்தக் குறையும் இல்லாம சந்தோசமா இருந்தா அதுவே போதும்”  என்றார் சிவகாமி மனதார. 
சிவகாமி உணவகத்தின் கிளைகள் துவங்கியதோடு மட்டும் அல்லாமல் அதுபோக விவசாயக் கண்காட்சி, புத்தகத் திருவிழா, கால்நடைத் திருவிழா போன்ற நிகழ்சிகளில் சிறுதானிய தின்பண்ட வகைகளுக்கென தனி ஸ்டால்கள் அமைத்திருந்தனர். 
அதில் கம்பு மாவு பிஸ்கட், சோள பிஸ்கட், ராகி பிஸ்கட், திணை மாவு லட்டு போன்றவற்றை தயாரித்து அவர்கள் விற்பனை செய்ததில் மளிகை கடைக்காரர்கள், பேக்கரி உரிமையாளர்கள் எல்லாம் வீடுதேடி வந்து ஆர்டர் கொடுக்கும் அளவிற்கு நன்மதிப்பை பெற்றிருந்தனர்.  
அம்பிகாவும் சிவகாமியும் இனிப்பு வகைகளை தயார் செய்வதில் அதிக ஆர்வம் காட்ட, அதை பல்லவி ஸ்வரனிடம் தெரிவிக்க.. சிறிய அளவிலான விஷேசங்களுக்கு முன்பே ஆர்டர் கொடுத்து அவர்கள் வீட்டிற்கு வந்து வாங்கிச்செல்லும் வகையில் அதற்கும் ஏற்பாடு செய்திருந்தான் ஸ்வரன். 
இப்படியே தெளிந்த நீரோடை போல் நகர்ந்தது நாட்கள். 
அன்றைய நாளின் வேலைகளை எல்லாம் முடித்து வந்த பல்லவிக்கு தன் கையால் குங்குமப்பூ கலந்த பாலை எடுத்துவந்து நீட்டிய ஸ்வரன்,
“அனு..! நீ நிஜமாவே ஒரு சிங்கப்பெண் தான். ரொம்ப திறமையா நிர்வாகம் பண்ணுற” என்றான். 
அவன் பாராட்டியதில் கண்கள் விரிய புன்னகைத்தவள், அவனிடம் இருந்து பாலை வாங்கிக்கொண்டு
“சிங்கக்குட்டிய சுமந்திருக்குற சிங்கம்னா சும்மாவா” என்றுவிட்டு பால் மீசை படிய பாலை பருகிவிட்டு அவனிடம் டம்ளரை நீட்டினாள். புன்னகையுடன் அவள் வாயைத் துடைத்துவிட்ட ஸ்வரன், அங்கிருந்து நகரச்செல்ல
“ஆதி..! ஒரு நிமிஷம்” என்று அழைத்திருந்தாள். திரும்பியவனிடம்,
“எல்லாருக்கும் திறமை இருக்கு ஆதி அதை வெளிக்கொண்டுவர யாரும் சந்தர்ப்பம் கொடுக்குறது இல்ல. அப்படியே வெளிக்கொண்டு வந்தாலும் அதுக்கும் தடை போட்டு முன்னேற விடாம முடக்கிடுறாங்க. நான் உங்ககிட்ட சொன்னேனே எனக்கு சுயமா தொழில் தொடங்கனும்னு ஆசைன்னு.. நீங்க என்னை தடுக்கலை. தட்டிக் கொடுத்தீங்க. அதோட விளைவுகள் தான் இது மிஸ்டர். புருஷ். நீங்க தான் காரணம் எல்லார்த்துக்கும். இல்லைனா என்னால இதெல்லாம் முடியும்னு எனக்கே தெரிஞ்சிருக்காது” என்றாள் அவர்களது வெற்றிகளுக்கு எல்லாம் அவனை முன்னிறுத்தி.
“நான் காரணம் இல்லை அனு. நீ தான் காரணம். உன்னோட ப்ளானிங் டெடிகேசன் ஹார்ட்வொர்க் இது தான் காரணம். அதுதான் நம்ம வெற்றிக்கு காரணம்” என்றான் அவளை முன்னிறுத்தி.
“உங்களை சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே.. சரி இதுக்கெல்லாம் நான் தான் காரணம்னா எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை நீங்கதான் தட்டி எழுப்பி விட்டிருக்கீங்க போதுமா..?” என்றாள். 
இதே வரிகளை அவர்களது திருமணத்தின் போது அவள் கூறியது நினைவில் வர, லேசனை புன்னகை அவளிடம். அவள் எண்ணத்தின் நாயகனும் அவளைப் பின்பற்றி 
“இப்போவும் கடிச்சு கொதறிருமா என்ன..?” என்றான் அழகாய் புருவம் உயர்த்தி. 
இல்லை என்று விரிந்த புன்னகையுடன் தலையசைத்தாள். 
அவன் அவள் வாழ்வை செழுமைப்படுத்த.. அவள் மகவோ அவளை செழுமைப் படுத்த.. தாய்மையின் கூடுதல் அழகில் மிளிர்ந்தவளின் முன்நெற்றியில் முத்தமிட்டவன், மண்டியிட்டு குனிந்து தன் மகவிற்கும் ஒரு மெல்லிய முத்தத்தை பதித்துவிட்டு அங்கிருந்து நகரச் செல்ல, 
“ஓய் ரிங் மாஸ்டர்..!”
அவளது குரலில் திரும்பியவன் அங்கிருந்தபடியே ‘என்ன’ என்று புருவம் உயர்த்த, அந்நேரத்தில் அவளுள் இருந்த அவள் மகவும் லேசாய் அசைந்து அதன் இருப்பை உணர்த்த, தன் வயிற்றை மெல்லத் தடவியபடியே அவளவனைப் பார்த்து
“ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ரொம்ப நல்லாவே ஆட்டி வைக்குறீங்க” என்றாள்.
அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அவளையும் அவளுள் அசையும் தன் வாரிசையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தான் ஆதீஸ்வரன். 
அவர்களது கீதத்தை ஏந்தும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
கீதமாகும்…

Advertisement