Advertisement

ஓம் கேசவன் மருகா போற்றி!!
19
அந்தி சாயும் நேரம்..!
பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி.
அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள் வரவேற்பறையில் இருந்த சோபாவில்.
“வந்துட்டயா பல்லவி..!” என்றபடி கிச்சனில் இருந்து வெளியே வந்தார் சிவகாமி.
“ம்மா..! ரொம்ப டயர்டா இருக்கு ஒரு கப் காஃபி கொடுங்க” என்ற ஐந்தாம் நிமிடம் அவள் கேட்டது அவள் கைகளில் இருக்க,
“வெந்நீர் வெச்சிருக்கேன் மா.. குளிச்சிட்டு வந்திரு. கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கும்” என்றார் அம்பிகா.
“ஹ்ம்ம் சரிங்க அத்தை..” என்று புன்னகைத்தவள் காஃபியை பருகிவிட்டு
“அவரு எங்க..? ஆளையே காணோம்” என ஸ்வரனைத் தேடியபடி அவரிடம் கேட்டாள்.
“காலைல நீ ஆஃபிஸ் போனதுமே அவனும் ஏதோ வேலை விசயமா கிளம்பி வெளிய போனான். இன்னும் வரலை மா. நீ ஒரு போன் பண்ணிப் பாரு” என்றார். 
அவருக்கு ஒரு தலையசைப்பை அளித்தவள் தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். பத்து தவறிய அழைப்புகள் ஸ்வரனிடம் இருந்து. இவள் சைலென்ட்டில் போட்டிருந்ததில் கவனிக்கவில்லை. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் இருந்தது, வரத் தாமதமாகும் என. உடனே கைப்பேசியில் அழைத்தாள் அவனை. 
“அனு..! ஒரு முக்கியமான வேலை. முடிய லேட் ஆகும் போல, நீ நைட் எனக்கு வெய்ட் பண்ண வேண்டாம். மெய்ன் டோர் மட்டும் உள்ள பூட்டிட்டு நம்ம ரூம் கதவை லாக் பண்ணாம தூங்கு. என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு, வேலை முடிஞ்சா நைட்டே வந்திடுவேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.  
‘எதோ பெரிய வேலை போல’ என்று நினைத்தவள் அவன் தெரிவித்ததை தன் வீட்டினருக்கு தவறாது தெரிவித்து விட்டு, பின் குளித்துவிட்டு வந்து மீதம் இருந்த அவளது அலுவலக வேலைகளை பார்க்கத் துவங்கினாள். 
அதில் நேரம் நகர்ந்திருக்க.. அம்பிகா வந்து அழைக்கவும் தான் நேரத்தை உணர்ந்து அவள் அறையை விட்டு வெளியே வந்தாள். 
அனைவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, பல்லவி மட்டும் யோசனையுடன் வாசலையே பார்த்திருந்தாள். வேலையை விரைவில் முடித்துக் கொண்டு ஸ்வரன் வந்துவிட மாட்டானா என்று இருந்தது அவளுக்கு. 
“பல்லவி..! என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க. நல்லா அள்ளி சாப்பிடு. இனி உனக்கு மட்டும் சாப்பிட்டா பத்தாது” என்ற சிவகாமியின் குரலில், தன் யோசனையை விடுத்து தட்டைப் பார்த்து உண்ண ஆரம்பித்தாள்.
அவளைத் தான் கவனித்திருந்தார் சுந்தரேஸ்வரன். அன்று அவளுக்கு மிகவும் விருப்பமான தானிய இனிப்பு புட்டும், முளைப்பயிறு சப்பாத்தியும், சிவப்பரிசி கொழுக்கட்டையும் செய்திருந்தனர். அதை எப்போதும்போல் விரும்பி உண்ணாது இன்று வேண்டா வெறுப்பாய் உட்கொண்டிருந்தாள்.
“சரண் இல்லாம வீடே வெறுச்சோடி இருக்கு. அவனை பார்க்கணும் போலையே இருக்கு” என்றார் அம்பிகா, அவனைக் கண்டு ஒருமாதம் ஆனதால்.
“லீவ் விட்டா வந்துடப் போறான் அம்பிகா. அவன் படிப்பையும் பார்க்கணுமில்ல. நீ வேணா அடுத்தமுறை ஸ்வரன் போகைல கூடப் போய் பார்த்துட்டு வா” என்றார் சுந்தரேஸ்வரன். 
அப்போது பல்லவியின் கைப்பேசி இசைக்க, ஸ்வரனாய் தான் இருக்கும் என்று எண்ணியவள் உணவை பாதியில் வைத்துவிட்டு எழுந்து சென்று கைகழுவி வந்து கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். 
ஆனால் அழைத்தது என்னவோ சரண். 
அழைப்பை ஏற்ற பல்லவி, 
“சொல்லு சரண்” என, அவளோடு சில நொடிகள் பேசியவன் 
“அக்கா..! அத்தை என்ன பண்ணுறாங்க..? அவங்க கிட்ட போன் கொடு” என்றுவிட, அம்பிகாவிடம் எடுத்துவந்து கொடுத்தாள்.
“இந்தப் பையன் முதல்ல நம்ம கிட்ட பேசுறானா பாருங்க. அவன் அத்தை கிட்ட பேசிட்டு அடுத்து தான் நம்ம கிட்ட பேசுவான்” என சிவகாமி கூற, 
“அவனுக்கு அவங்க அத்தை மேல தனி பாசம் சிவகாமி. இப்போவும் அம்பிகாவோட பேசத்தான் போன் பண்ணிருப்பான்” என்று சுந்தரேஸ்வரனும் கூற, புன்னகையுடன் கைப்பேசியை வாங்கி அவனோடு பேசலானார் அம்பிகா.
பல்லவி அவள் அறைக்குள் செல்லப் போக, அதை கவனித்த தாத்தா
“என்னமா முழுசா சாப்பிடாமப் போற” என்றதற்கு
“ஒரு மாதிரி இருக்கு தாத்தா. எனக்கு இதுவே போதும்” என்றுவிட்டு சென்றுகொண்டாள்.
பின் சிவகாமி குங்குமப்பூ கலந்து எடுத்துவந்த பாலை நீட்ட, அதை பருகிவிட்டு படுத்துக் கொண்டாள்.
ஸ்வரன் எப்படியும் வந்துவிடுவான் என்று தூங்காது விழித்திருந்தாள். ஆனால் நேரம் செல்லச் செல்ல அவளை ஒருவித தவிப்பு ஆட்கொள்ளத் துவங்கியது. இதுவரை அவனைப் பிரிந்து ஒரு நாள் கூட இருந்ததில்லை. கோபமோ வருத்தமோ சந்தோசமோ எதுவாக இருந்த போதும் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே தூங்கிப் போவாள். இன்று அவனில்லாத அறையே வித்தியாசமாய் இருந்தது. அதிலிருக்க அவளுக்குமே விருப்பம் இல்லை. 
அப்போது தான் உணர்ந்தாள், இதுநாள் வரை பிடித்ததெல்லாம் இப்போது பிடிக்காது போன ரகசியத்தை. அவளுக்கு பிடிக்கும் என்று வீட்டினர் செய்திருந்த இரவு உணவு வகைகள் எல்லாம் ஸ்வரனிற்கு பிடித்த ஒன்றாகும். அதனால் தான் அவளே அறியாது அதை எல்லாம் விரும்பியிருக்கிறாள்.
ஒன்றன்மேல் பிடித்தம் என்பது நமக்குப் பிடித்தவர்களால் ஏற்படுவதாய் இருக்கும் இல்லை நமக்குப் பிடித்தவர்களோடு இருக்கும் போது ஏற்படுவதாய் இருக்கும். நமக்குப் பிடித்தவர்களோடு இருக்கும் போது பிடிக்காதது கூட பிடிக்கும். பிடித்தவர்கள் உடனில்லாத போது பிடித்தமே பிடிக்காது போய்விடுகிறது.
பல்லவிக்கு மூச்சு முட்டுவதுபோல் இருக்க அதற்குமேலும் தனியாக அவ்வறையில் இருக்க முடியாது எழுந்து வெளியே வந்தாள். கதவு திறக்கும் சத்தத்தில் ஹாலில் படுத்திருந்த சுந்தரேஸ்வரன், 
“என்ன பல்லவி மா” என என்னவோ ஏதோவென பதறியபடி எழுந்தமர, அவரது குரலில் உள்ளறையில் இருந்த சிவகாமியும் எழுந்து.. அறையின் விளக்கைப் போட்டுவிட்டு அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். 
அவர்களை இந்த நேரத்தில் தொந்தரவு செய்ததற்கு தன்னையே கடிந்து கொண்ட பல்லவி,
“ஒ.. ஒன்னும் இல்லை தாத்தா.. தண்ணி குடிக்கலாம்ன்னு வந்தேன்” என்றாள். 
“நீ போய் படுத்துக்கோ கண்ணு, நான் எடுத்துட்டு வரேன்” என சிவகாமி எடுத்துவந்து கொடுக்க, கொஞ்சம் பருகிவிட்டு படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு அதன் பின்னரே அங்கிருந்து சென்றார் சிவகாமி.
சிறிது நேரம் அசையாது படுத்திருந்த பல்லவிக்கு கண்கள் மெல்லக் கலங்கியது. அதற்கான காரணத்தையும் அறிவாள். காரணம் சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும் கண்ணீருக்கு அணைபோட முடியவில்லை. 
சிறு துளி பெருவெள்ளமாய் மாற, அனைத்தையும் தலையணை தாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவள் இடையை மெல்லத் தழுவிய கரத்தை உணர்ந்து கண்விழித்துப் பார்த்தாள்.   
தன் அருகில் இருந்த ஸ்வரனைக் கண்டு விசும்பலுடன் வார்த்தைகளை உதிக்க வந்த நேரத்தில்
“ஷ்..! ரிலாக்ஸ் அனு” என்றவன் அவளை நெருங்கி படுத்துக்கொண்டு பாதுகாப்பாய் அவளை அணைத்துக்கொண்டு 
“காலைல பேசிக்கலாம் அனு. ரொம்ப லேட் ஆய்டுச்சு இப்போ அமைதியா தூங்கு” என மெல்லத் தட்டிக் கொடுக்க,
“ஹ்ம்ம்..” என்றபடி அவன் அணைப்பில் நிம்மதியாய் உறக்கம் கொண்டாள். அவனுக்குமே அன்றைய அலைச்சலின் களைப்பில் உறக்கம் நொடியும் தாமதிக்காது தழுவிக் கொண்டது.   
மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பெடுத்துக் கொண்டாள் பல்லவி. 
“ஏன் போகல..? உடம்புக்கு எதாவது பண்ணுதா..? டாக்டர் கிட்ட போலாமா” என ஸ்வரன் கேட்டதற்கு,
“அதெல்லாம் இல்ல ஆதி. நான் வேலையை விடலாம்னு இருக்கேன்” என்றாள்.
“நானே உன்கிட்ட அதை பத்தி பேசலாம்னு இருந்தேன் அனு. உனக்கு போக விருப்பம் இல்லைன்னு அன்னைக்கே சொன்னயே. நீயே முடிவு பண்ணட்டும்னு விட்டுட்டேன். இனி உனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத நீ வீட்லயே இரு” 
“என்னால வீட்லையும் சும்மா இருக்க முடியாது மிஸ்டர். புருஷ் எனக்கு ரொம்ப போர் அடிக்கும்” என்றாள் கண்களை இப்படியும் அப்படியுமாய் உருட்டி,
“அதுக்கு என்ன பண்ணுறது ஆந்த. பேசாம வீட்ல இருந்து நல்லா சமையல் கத்துக்கோ”
“அப்போ இவ்வளவு நாளும் மோசமா தான் சமைச்சிட்டு இருந்தேனா” என அவனை முறைத்தவள்
“என்கிட்ட வேற பிளான் இருக்கு. அது என்னன்னு சொல்லுறதுக்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, நீங்க ஏன் ஒரு ஸ்வீட் ஸ்டாலோ ஹோட்டலோ ஆரம்பிக்காம கேட்ரிங் ஆர்டர் மட்டுமே செய்து கொடுக்குறீங்க..?” என்றாள்.
“இதுநாள் வரை அந்த வருமானமே போதுமானதா இருந்துது. செலவுகளும் பெருசா எதுவும் இல்லை. சோ அதுலயே அதிகம் மிச்சம் தான் ஆச்சு. வாழ்க்கைக்குத் தேவையான பணம் இருந்தா போதும் தானே அனு..? அதான் நானும் இருக்குற தொழிலை எக்ஸ்டன்ட் பண்ணுறது பத்தி எல்லாம் பெருசா யோசிக்கலை” 
“ஹ்ம்ம் சரிதாங்க. நீங்க சொன்னதெல்லாம் இதுநாள் வரை ஓகே பட் இப்போ நம்ம குடும்பம் பெருசாகிடுச்சில்லை இனிமேல் செலவுகள் அதிகம் இருக்கும். நானும் வேலையை விட்டுட்டேன்னா எப்படி சமாளிக்கப் போறோம்…?”
“அது பிரச்சனை இல்லை அனு. நான் பார்த்துக்குறேன் நீ கவலைப் படாத” என்று புன்னகைத்தான்.
“என்ன பார்ப்பீங்க.. நேத்து பார்த்தீங்களே அது மாறியா..? ஒரே நேரத்துல பல வேலைகளை தூக்கி தலைமேல போட்டுக்கிட்டு தனியா கஷ்டப்படுறது.. வீட்டுக்கு வராம என்னையும் கஷ்டப் படுத்துறது.. அப்படி தானே..?” என்றாள் இடுப்பிற்கு இருபுறமும் கைக்கொடுத்து தலையை லேசாய் சாய்த்து அவனிடம் புருவம் உயர்த்தியபடி.
நேற்று அவள் அழுதது நினைவு வர, 
“அனு..! எல்லா நேரமும் நான் உன்கூடவே இருக்கணும்னு நீ எதிர் பார்க்கக் கூடாது. நான் உன்கூட இல்லமா இருக்குற சூழ்நிலையும் வரலாம். அப்போ எல்லாம் நீ தான் தைரியமா இருக்கணும். புரிஞ்சுதா” என்றான் பொறுமையாக. அதற்கு மெல்ல தலையசைத்தவள்,
“அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வராது. ஆனா நேத்து உங்களை பார்க்காம கொஞ்ச நேரத்துல எனக்கு பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு ஆதி” என்றாள் நேற்றைய நிகழ்வை எண்ணிப் பார்த்து.
“அதுதான் சொல்லுறேன். யாரையும் எதுக்காகவும் எதிர்பார்க்கக் கூடாது. தனியா எல்லார்த்தையும் சமாளிக்க கத்துக்கணும். இவ்வளவு நாள் அப்படித் தானே இருந்த, புதுசா இப்போ என்ன என்னை எதிர்பார்க்குற..? நீ எதையும் தனியா சந்திக்கும்படி பெரும்பாலும் இருக்காது. ஆனாலும் சிலதை நீ மட்டுமே தனியா எதிர்கொள்ளுற மாதிரி இருக்கும் அப்போ எக்காரணத்தைக் கொண்டும் என் அனு பலவீனமாகிட கூடாது” என்றான்.
அவள் பெரிதாய் யோசிப்பது கண்டு
“சரி சொல்லு எதோ ப்ளான் இருக்குன்னு சொன்ன என்ன அது..?” என்றிருந்தான்.
“நாம ஏன் ஒரு மெஸ் ஆரம்பிக்கக் கூடாது..?” என்றிருந்தாள்.
“மெஸ் ஆஹ்…?”
“ஹ்ம்ம்.. நீங்க வேணா பாருங்க மெஸ் ஆரம்பிச்சு படிப்படியா முன்னேறி இந்த பல்லவி இந்த ஆதீஸ்வரனை கோடீஸ்வரன் ஆக்கப் போறேன்” 
அவள் கூறிய விதத்தில் பல் தெரியாது வாயை மூடிக்கொண்டு சிரித்தவன்,
“கோடீஸ்வரன் ஆக்கலைனாலும் பரவாயில்ல பிச்சைக்காரன் ஆக்கிடாத அனு” என்றான்.
“என்னை பார்த்தா கிண்டலா இருக்கா.. நான் என் கனவை சொல்லிட்டு இருக்கேன் நீங்க இப்படி சிரிக்குறீங்க” என காய,
“சரி மா.. நான் சிரிக்கல நீ மேல சொல்லு”
”நம்ம வீட்டுக்கு முன்னாடி இவ்வளோ காலி இடம் இருக்கு. அதுல ஒரு ஓரத்துல ஷீட் போட்டு மறைச்சு, மேல ஒரு டாப் இறக்கினாலே போதும். மழை வந்தாலும் பிரச்சனை இருக்காது. நம்ம காம்பௌன்ட் நீளமாவும் வளத்தியாவும் இருக்கு சோ உள்ள இடம் இல்லைனாலும் காம்பௌன்ட் ஒட்டி டேபிள் சேர் எல்லாம் போட்டுக்க வசதியா இருக்கும். நீங்களும் வெளிய போய்க்கலாம்.. வீட்ல நான், பாட்டி, அத்தை, தாத்தா நாலு பேரு இருக்குறதுனால நாங்க மாத்தி மாத்தி பார்த்துப்போம். எங்களுக்கும் பொழுதுபோகும் வீட்ல இருந்தபடியே வருமானம் வரும். முக்கியமா நம்ம பெரியவங்க நம்ம குடும்பத்துக்காக அவங்க உழைப்புல ஒரு பங்கை கொடுக்கிறாங்கன்னு நினைக்கும்போது அவங்கலுமே ரொம்பவே சந்தோசப் படுவாங்க” என்று சொல்லி முடிக்க, அவளை வியப்புடன் பார்த்திருந்தான் ஸ்வரன். 
“எல்லாம் சரிதான் அனு ஆனா கொஞ்ச நாளைக்கு அப்பறம் நம்ம எல்லாருமே பிஸி ஆகிடுவோம். உன்னாலையும் இதை பார்த்துக்க முடியாது. பெரியவங்களுக்கும் சிரமம் கொடுக்கக் கூடாது. எல்லார்த்தையும் யோசிச்சு பார்த்து தான் முடிவெடுக்கணும்” என்றான். 
“அதை யோசிக்காம இருப்பேனா. இப்போ ஆரம்பிக்கலாம் ஆதி கொஞ்ச நாள் போனதும் மெல்ல இதுக்குன்னு ஆட்களை வேலைக்கு எடுத்துக்கலாம்”  
“நான் தான் பார்த்துக்குறேன்னு சொல்றனே அனு”
“நீங்க பார்த்துப்பீங்கன்னு எனக்கும் தெரியும் ஆதி. நானும் உங்களோட சேர்ந்து பார்த்துக்கணும்னு நினைக்குறேன். நம்ம ட்ரை பண்ணி தான் பார்க்கலாமே ப்ளீஸ்” என்று அவள் பிடியில் உறுதியாய் இருக்க, அவனாலும் மறுக்கமுடியவில்லை. அவளுக்காக ஒப்புக் கொண்டான்.
குடும்பத்தினரிடம் கலந்தாலோசித்து அனைவரது ஒப்புதலுடன் அதற்கான வேலைகளை பார்க்க ஆயத்தமானான் ஸ்வரன். 
சரியாக அன்றிலிருந்து ஒரு மாதம் கழித்து, 
அதிகாலை சுபவேளையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்  ஸ்வரன் இல்லத்தினர். கணபதி ஹோமத்தை முடித்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய வேலைகளை பார்த்திருக்க.. நேரம் மெல்ல நகர்ந்தது. 
அப்போது தான் பண்பலையில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் குரலில் கசிந்து உருகிக் கொண்டிருந்தது அப்பாடல்.
இதோ இதோ என் பல்லவி.. எப்போது கீதமாகுமோ..!
‘என்ன பழைய பாட்டா வருது’ என்றெண்ணிய சரண் உடனே வேறு பண்பலையை மாற்றிவிட்டு திரும்பிப் பார்க்க.. அங்கோ பார்வையால் பல செய்திகளை பரிமாறியபடி நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும்.
‘பல்லவி கீதமானதா..?’ என அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான் ஸ்வரன்.
‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைத்தாள்.
‘எப்போது கீதமாகும்..?’
குனிந்து தன் வயிற்றை மெல்லத் தடவிப் பார்த்தவள், பின் தன்னவனைப் பார்த்து
‘நம் கீதத்தை கையில் ஏந்தும் போது’ என கைகளால் குழந்தையை ஏந்துவதுபோல் அழகாய் காண்பித்தாள். அதில் அழகாய் புன்னகைத்து அவன் நகர, சரணும் இதை எல்லாம் கண்டும் காணாததுபோல் புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.
“சிவகாமி..! அது கனமா இருக்கும் என்கிட்ட கொடுங்க” என்ற சுந்தரேஸ்வரனின் குரலில் இப்போது வாசல் பக்கம் திரும்பினான் சரண்.
“இல்லைங்க.. உங்களுக்கு எதுக்கு சிரமம். நானே எடுத்துட்டு போறேன்” என சிவகாமி மறுக்க,
“சொன்னா கேட்க மாட்டீங்களே.. சரி ஒரு கை பிடிங்க சேர்ந்தே எடுத்துட்டு போவோம்” என அவர் ஒருபக்கம் பிடிக்க, சிவகாமி மறுபக்கம் பிடிக்க, இருவரும் அப்பெரிய வாளியை தூக்கிச் சென்றனர்.
வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே, போகும் வரை போகலாம் என்ன பிழையே..! 
பண்பலையில் ஒலித்த அப்பாடல் வரிகள் செவிக்குள் புக, அது காட்சியாய் அவன் கண்முன்னே விரிய, புன்னகைத்துக் கொண்டான் சரண். கொஞ்சம் ஒலியை அதிகப்படுத்தி மீண்டும் வேறு பண்பலையை மாற்றிவிட்டு காத்திருந்தான்.
“சரண்..! உன் போன் அடிக்குது பாரு” என்று பல்லவி உள்ளிருந்து குரல் கொடுக்க, 
“யாரு க்கா..?” என்று அவனும் அங்கிருந்தபடியே குரல் கொடுத்தான்.
“சத்ரியாஆஆ…” 
அந்தப் பேரில் கொஞ்சம் அதிர்ந்தவன் வேகமாய் உள்ளே வர, அங்கு அக்காவோடு அவன் மாமாவும் இருக்க, பின் போனைப் பார்ப்பதும் அவர்களைப் பார்ப்பதுமாய் இருந்தான்.
“யாரு சத்ரியா..?” என்ற ஸ்வரனின் கேள்விக்கு
“அது.. என் ஃப்ரெண்ட் மாமா” என்ற போது, சரியாய் அந்நேரம் பார்த்து பண்பலையில் ஒலித்தது அப்பாடல்.
எனக்கென எனக்கெனவே பிறந்தவள் இவளோ..! 
அப்பாடலில் சரண் திருதிருவென முழிக்க, ஸ்வரனும் பல்லவியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிக்க,
“சத்தியமா ஃப்ரெண்ட் தான் மாமா” என்று அழாத குறையாய் கூறிவிட்டு போனை வாங்கிகொண்டு அங்கிருந்து ஓட்டமெடுத்தான்.
“மச்சா எங்க ஓடுறீங்க..? நில்லுங்க மச்சா” என அவனை துரத்திக்கொண்டு ஸ்வரன் செல்ல, அவர்களை சிரிப்புடன் பார்த்திருந்தாள் பல்லவி. 
அப்போது அவளிடம் வந்த அம்பிகா, ஒரு பெரிய டம்ளரில் ஆப்பில் ஜூஸை அவளுக்கு அளிக்க.. புன்னகையுடன் வாங்கிக் குடித்தாள் பல்லவி. பின் அவர் தன் கையிலிருந்த இரண்டாவது டம்ளரையும் அவளிடம் நீட்ட, முடியவே முடியாதென்று மறுத்தவள்
“அத்தை நீங்க குடிங்க.. இதுக்கும் மேல என்னால முடியாது” என்றுவிட்டு கிட்சனுள் புகுந்து கொண்டாள். கையில் ஜூஸை வைத்துக்கொண்டு யாருக்கு தருவதென்று அவர் பார்த்திருக்க.. அந்நேரத்தில் ஸ்வரன் உள்ளே வர, 
“ஸ்வரன்..!”
அம்பிகா தயங்கியபடி தன் மகனை அழைக்க, அவரது அழைப்பில் அவன் ஒருநொடி நின்று அவரை நிமிர்ந்து பார்த்தான். பல்லவியும் அவரது அழைப்பைக் கேட்டு கிச்சனில் இருந்து மெல்ல எட்டிப்பார்த்தாள். 
தயங்கியபடியே ஜூஸை ஸ்வரனிடம் நீட்டியிருந்தார் அம்பிகா. 
அவன் எதுவும் சொல்லாது அவரையும் அவர் கையில் இருந்ததையும் பார்த்துவிட்டு உள்ளே சென்றுகொள்ள, அடுத்த நொடியே அம்பிகாவின் முகம் மாறிப்போனது
அன்னைக்கும் மகனிற்கும் இடையில் இருக்கும் திரையானது மட்டும் இன்றுவரை விலகியிருக்கவில்லை. அதன் அடர்த்தி மட்டுமே பல்லவியால் நாளடைவில் குறைந்து கொண்டிருந்தது.

Advertisement