Advertisement

பெரியவர்கள் என்றும் பெரியவர்களே.. வயதாலின்றி, குணத்தால் மனத்தால் நேசத்தால் பாசத்தால் என அனைத்திலும் உயர்ந்தவர்கள். அதை சுந்தரேஸ்வரன் நிரூபிக்க, சிவகாமின் மனதிலும் உயர்ந்து நின்றார். 
அதுவரை அமைதியாய் இருந்த சிவகாமி,
“அம்பிகா..! நேரநேரத்திக்கு மாத்திரை போடனுமல்ல.. இரு நான் சாப்பிட எதாவது பண்ணித் தர்றேன். சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடு” என்றுவிட்டு கிட்சனுள் புக, 
“உங்களுக்கு எதுக்கு ம்மா சிரமம். நானே பண்ணறேன் நீங்க வந்து உக்காருங்க” என அவர் பின்னோடு அம்பிகாவும் செல்ல, 
“அத்தை..! நீங்க இப்போ தானே டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என சரண் அம்பிகாவின் பின்னால் செல்ல,
சரணைத் தொடர்ந்து சமையல் கட்டினுள் நுழைந்த நாலாம் நபரான சுந்தரேஸ்வரன், அம்மூவரையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில் காட்டிக்கொண்டு அங்கிருந்தபடியே அவர்களைப் பார்க்க.. அவரது தோற்றமே கூறியது அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று.
தன் அன்னை வயதில் இருப்பதாலோ என்னவோ சரணுக்கு அம்பிகா மீது தனி அன்பு சுரக்க, அத்தை அத்தை என அவரோடு நன்கு ஒட்டிக் கொண்டான். அவனது அனுபவத்தில் மனிதர்களையும் நிகழ்வுகளையும் மறக்கவும் மன்னிக்கவும் கற்றுத் தேறியிருந்தான். அம்பிகாவை அவர் வீட்டினரே ஏற்றுக்கொண்ட போது அவரது கடந்தகாலம் அவனுக்குத் தேவைப்படவில்லை. அவன் நேசிக்கும்.. அவனை நேசிக்கும் அவனது ஸ்வரன் மாமாவின் அன்னை என்ற ரீதியில் மட்டுமே பார்க்கலானான். 
அம்பிகாவும் அவனோடு அன்பொழுகப் பேசிக்கொண்டிருந்தார்.
“சரண் கண்ணா..! உனக்கு எப்போ காலேஜ்” என்று வினவ
“நாளைக்கு காலைல கிளம்பனும்ங்க அத்தை. அப்பறம் ரெண்டு மாசம் கழிச்சு தான் வருவேன்”
“வார வாரம் வர மாட்டியா ப்பா. உன்னை ரெண்டு மாசம் கழிச்சு தான் பார்க்கணுமா”
“விசிட்டிங் டேய்ஸ்ல என்னை பார்க்க அக்காவும் மாமாவும் வருவாங்க அத்தை. அவங்களோட நீங்களும் வாங்க” என்றதும், அம்பிகாவின் கண்கள் ஸ்வரனைத் தேடியது. 
இதுவரை அவர்முன் வந்திருக்கவில்லை அவன். அதில் அவர் மனம் சோர்ந்து போனாலும் இனிமேல் அவன் அருகில் இருந்து அனுதினமும் அவன் முகத்தை பார்க்கப்போவதை எண்ணி ஆனந்தம் கொண்டார். 
“அத்தை..! நம்ம மேல் ரூம் போலாம். இருங்க நான் ரூம் கீய் வாங்கிட்டு வரேன்” என்று சரண் சொல்ல, புன்னகைத்து தலையசைத்தார்.
ஸ்வரன் மற்றும் பல்லவியைத் தேடி வெளியே வந்த சரணோ, அவர்களது செய்கை கண்டு புன்னகைத்துக் கொண்டே 
“மாமா.! ஒரு தடவ முட்டினா கொம்பு முளைக்கும்” என்று குரல் கொடுத்தான். 
அவனது குரலில் அவ்விருவரும் வேகமாய்த் திரும்ப, சிரிப்பை அடக்கிக்கொண்டு சரண் நின்றிருப்பது கண்டு லேசாய் அதிர்ந்தாலும்,
“மச்சா..! நீங்க எப்போ வந்தீங்க” என இயல்பாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான் ஸ்வரன்.
“நீங்க அக்காவை முட்டும் போது தான் வந்தேன் மாமா” என்ற தன் தம்பியின் பதிலில், ‘நல்லவேளை இவன் எதையும் பார்க்கல’ என பல்லவி தன் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே ஓட,
“அனு..!” என்ற அவளவனின் குரலில் வேகத்தை குறைத்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“மெல்லப் போ” என்றவனின் பார்வை பதிந்த தன் வயிற்றை தன் கைக்கொண்டு மெல்லத் தடவி சிறு தலையசைப்புடன் புன்னகைத்து நகர்ந்தாள் பல்லவி.
சிறிது நேரத்தில் சமையல் அறையில் இருந்து வந்த மணமானது அனைவரது நாசியையும் நிரப்ப, சுந்தரேஸ்வரனின் சுவையான சமையலில் கட்டுண்டு கிடந்தனர். 
ஸ்வரனிற்கு நேர் எதிரில் தான் அமர்ந்திருந்தார் அம்பிகா. அவர் தட்டில் உணவைப் பார்த்து சாப்பிட்டதைக் காட்டிலும் ஸ்வரனைப் பார்த்தது தான் அதிகம். அவனும் அவர் பார்வை அறிந்து தன் பார்வையால் அவரை ஒதுக்கவும் இல்லை, ஒட்டி உறவாடவும் இல்லை. இயல்பாய் அமர்ந்து உண்டுவிட்டு எழுந்தான். 
அதை அனைத்தையும் கவனித்து தான் இருந்தார் சுந்தரேஸ்வரன்.
அம்பிகாவின் விடயத்தில் என்ன முடிவெடுப்பதென்றும், அதில் தன்னுடைய விருப்பத்தையும் பல்லவி தாத்தாவிடம் தெரிவித்து கலந்தாலோசிக்க, அவரோ மறுநாளே அதைப் பற்றி ஸ்வரனிடம் தனிமையில் பேசியிருந்தார்.
“நீ என்னப்பா முடிவெடுத்திருக்க.. நாளைக்கு அம்பிகாவுக்கு டிஸ்சார்ஜ்ன்னு பல்லவி சொன்னா” என்று கேட்க, அவரையே பார்த்தவன்
“நான் என்ன முடிவெடுப்பேன்னு நினைக்குறீங்க ப்பா..?” என்று பதில் கேள்வி கேட்டிருந்தான்.
சிறு புன்னகையுடன் அவன் தோளைத் தட்டியவர்,
“இந்த வைரத்ததோட அருமை தெரியாம அவ தொலச்சிட்டா, இத்தனை வருஷம் கழிச்சு இப்போ பைத்தியக்காரி மாறி தேடிட்டு இருக்கா. அவ வேதனை படுறதை பார்க்கவும் முடியல. நம்ம மனசை தான் ஆண்டவன் மெழுகுல செஞ்சுட்டான் போல. சீக்கிரம் உருகிப்போயிடுது. யாருக்காகவும், யாராலையும் நம்ம அடிப்படை குணங்கள் மாறாதேப்பா.. மாத்திக்கவும் நம்மால முடியாது. நம்மை யாராவது கஷ்டப்படுத்தினா பதிலுக்கு நம்மளும் திருப்பி செய்யுறதுல எந்த அர்த்தமும் இல்லப்பா. அதுவும் தன் தவறை உணர்ந்தவங்களுக்கு, நம்ம மன்னிப்பு தான் மிக பெரிய தண்டனையா இருக்கும். நம்ம என்னிக்கும் நம்மளாவே இருப்போம் ஸ்வரன்” என்றார்.
“நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலை ப்பா”
“நீ என் வளர்ப்புப்பா.. உன் மனசு எப்படி பட்டதுன்னு எனக்கு தெரியாதா. நீ என்ன முடிவுக்கு வருவைன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றார். 
தன்னை புரிந்து வைத்திருக்கும் அவரை எண்ணி என்றும்போல் இன்றும் அகம் நிறைந்து போனான் ஸ்வரன்.
“இதுல உங்க விருப்பம் என்ன ப்பா..?” என்றிருந்தான். 
சில நொடி அமைதி காத்தவர்,
“அம்பிகாவ அழச்சிட்டு வா” என்றார். 
ஒரு சிறு தலையசைப்புடன் சென்ற ஸ்வரனையே பார்த்திருந்தவருக்கு அத்தனை பெருமை. தன் வளர்ப்பை எண்ணி சிறு கர்வம் கூட எழுந்தது. 
அம்பிகாவை ஸ்வரன் இத்தனை ஆண்டுகளாய் கவனித்து வருவது சுந்தரேஸ்வரனிற்கு தெரிய வாய்ப்பில்லை. அம்பிகா இவ்வுலகத்தின் எதோ ஒரு மூலையில் இருப்பதாய் தான் எண்ணியிருந்தார். இது முன்பே தெரிந்திருந்தால் அம்பிகாவை அழைத்து வரும்படி அவருமே ஸ்வரனிற்கு உத்தரவிட்டிருப்பார். அவர் அப்படி உத்தரவிடக் கூடும் என்று தோன்றியதால் தான் அவனும் அவரிடம் இதை தெரிவிக்கவில்லை. இன்றுவரை அது பல்லவி மட்டுமே அறிந்த ரகசியம்.
சுரேகாவின் திருமணத்தின் போது அம்பிகாவை சந்தித்ததில் இருந்து சுந்தரேஸ்வரனின் எண்ணமும் இதுவே. தாயையும் தனயனையும் ஒன்றுசேர்க்கும் எண்ணம். ஸ்வரனின் மனதில் இன்றுவரையில் சிறு ஏக்கம் இருப்பது அவனை வளர்த்த அவரை விட வேறு யாருக்குத் தெரியும். ஆனால் பல்லவியும் அதை சரியாய் புரிந்துக்கொண்டு அவள் விருப்பத்தை தெரிவிக்க, சுந்தரேஸ்வரனும் அதில் பங்காற்ற விரும்பினார். 
அந்த எண்ணங்களில் அவர் இருக்க,
“தாத்தா..! என்ன யோசிக்குறீங்க..? சாப்பிடுங்க” என்ற பல்லவியின் குரலில் நினைவிற்கு வந்தவர் ஒரு புன்னகயுடன் உணவருந்தினார்.
பின் சரணும் அம்பிகாவும் மேல் அறைக்குச் சென்றுவிட, மற்ற நால்வர் மட்டும் வரவேற்பறையில் இருந்தனர்.
சிறிது நேர உரையாடலுக்குப் பின் கடிகாரத்தில் நேரத்தை கவனித்த சிவகாமி, இங்கிருந்து கிளம்புவதாய் சொல்ல.. முதல் ஆளாக முன்னின்று மறுத்தார் சுந்தரேஸ்வரன்.
“தாத்தா..! இனி சிவகாமி ம்மா இங்கதான் இருப்பாங்க. அவங்களே இங்கிருந்து போக நினைச்சாலும் அதுக்கு நானே அனுமதிச்சாலும் உங்க பேரன் அனுமதிக்க மாட்டாரு” என்றாள் பல்லவி.
சிவகாமி உடனே ஸ்வரனைப் பார்க்க,
“ஆமாம் பாட்டி. நீங்களும் சரணும் இனி நம்ம வீட்டுல தான் இருக்கப்போறீங்க. நீங்க இங்க இருந்தா அனுவும் ரொம்ப சந்தோசப்படுவா. சரணுக்கும் லீவ்ல வரும்போது எல்லாரோடையும் இருக்குற மாதிரி இருக்கும். உங்களுக்கும் பேச்சு துணைக்கு சுந்தரேஸ்வரன் அப்பா இருக்காரு. நாங்க எல்லாம் இருக்கும் போது நீங்க ஏன் தனியா இருக்கணும்..” என்றான்.
அவர் பதிலுரைக்காது கையை பிசைந்தபடி நின்றிருக்க, அவரைப் பார்த்தபடியே ஸ்வரன் தொடர்ந்தான்..
“இன்னும் கொஞ்ச மாசத்துல உங்க கொள்ளுப் பேரனையோ பேத்தியையோ கொஞ்சவே உங்களுக்கு நேரம் சரியா இருக்கும் பாட்டி” என்று அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் கூற, அந்நேரத்தில் பல்லவியின் இதழ்களையும் ஓர் மென்னகை அலங்கரித்தது.
ஸ்வரன் இயம்பிய இனிமை பொருந்திய வார்த்தைகளில் அங்கிருந்த அனைவரது அகமுமே இன்புற்றது. 
சிவகாமிக்கோ இப்போதே தன் கைகளில் தனது கொள்ளுப்பேரனை ஏந்தியதுபோல் ஆனந்தமாய் இருந்தது. இருந்தும் அவரது தயக்கம் அனைவரையும் விட்டு அவரை தள்ளியே நிறுத்த, 
“அது ஒத்து வராதுங்க தம்பி. பார்க்கணும்னு தோணுனா நான் இங்க வந்து பல்லவியை பார்த்துட்டு போய்க்குறேன். நான் கூட இல்லைனா என்ன, அதான் நீங்க எல்லாம் இருக்குறீங்கல்ல.. என்னை விட பல்லவியை பல மடங்கு பத்திரமா பார்த்துக்குவீங்க” என்றார். 
வாய் அப்படிக் கூறினாலும் தன் பல்லவியை அருகில் இருந்து கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை என்னவோ பெரிதாய் இருந்தது அவரது ஒவ்வொரு செல்லிலும்.
“விசேஷம்னா வந்து தங்குவேன்னு சொன்னீங்க இப்போ என்ன மாத்தி பேசுறீங்க” என்றாள் பல்லவி அவர் செல்வது பிடிக்காது.
“பல்லவி மா.. வேணும்னா உன் கூட ரெண்டு நாள் இருந்துட்டு போறேன். அடிக்கடி வந்து உன்ன பார்த்துட்டு போறேன். இங்க தங்க தான் முடியாதுன்னு சொல்லுறேன். அதுக்குள்ள வேற எதாவது விசேஷம் வந்தா அதுக்கும் உன்னை பார்க்க பலகாரத்தோட ஓடி வந்துடப்போறேன்” என்றார் பொங்கல் போன்ற விஷேசங்களை குறிப்பிட்டு.
“நீங்க தொடர்ந்து வர்றதுக்காக நாங்க வரிசையா விசேஷம் வெச்சிட்டு இருக்கணுமா. எங்களுக்கு ஒன்னே ஒன்னு தான். அதை நல்லா வளர்துனா போதும். நீங்க கூட இருப்பீங்களா மாட்டீங்களா அதை சொல்லுங்க..?” என்றாள் பல்லவி.
அவள் புரியாது மொழிந்ததில், ‘ஏன் இப்படி’ என ஸ்வரன் அவளைப் பார்க்க.. சுந்தரேஸ்வரன் சிரிக்க.. சிவகாமி அவளை முறைக்க.. உடனே தன் வாயை இறுக மூடிக்கொண்டாள்.
“பல்லவி தான் சொல்லுறாயில்லை.. இங்கயே இருங்களேன் சிவகாமி” என்றார் சுந்தரேஸ்வரன். 
“அது இல்லைங்க..” என்று அவர் ஆரம்பிப்பதற்குள்
“உங்களுக்கு நியாபகம் இருக்கா பாட்டி.. முதல் முதல்ல நீங்க அனுவை பிரியும் போது நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்..? நான் கூப்பிடும்போது நம்ம வீட்டுக்கு மறுக்காம வரணும்னு சொன்னேன். நீங்களும் இங்க தங்குவேன்னு வாக்கு கொடுத்திருக்கீங்க” என்று நினைவு படுத்திய ஸ்வரன்,
“நான் உங்களை கட்டாயப் படுத்தலை பாட்டி. ஆனா நீங்க போனீங்கனா அனு வருத்தப்படுறாளோ இல்லையோ நான் ரொம்பவே வருத்தப்படுவேன். நீங்களே முடிவெடுங்க” என்றுவிட்டான். 
சிவகாமிக்கு இனி ஒப்புக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. வழியையும் ஸ்வரன் விட்டு வைக்கவில்லை.
“பல்லவிக்கு குழந்தை பிறக்குற வரைக்கும் வேணும்னா இருக்கேன் தம்பி. அப்பறம் நான் கிளம்பும்போது என்னை கட்டாயப் படுத்தக் கூடாது” என்றுவிட்டார்.
தான் தூக்கி வளர்த்த பெண்ணின் தாய்மையை உடனிருந்து பார்த்துவிட்டு, அவள் மூலம் உதிக்கப் போகும் பிஞ்சை அள்ளிக் கொஞ்சிவிட்டு அதன் பின் அவரால் தான் இங்கிருந்து சென்றுவிட முடியுமா..? இல்லை அவரை இங்கிருந்து செல்ல பல்லவியும் சுந்தரேஸ்வரனும் தான் அனுமதிப்பார்களா..? இல்லை ஸ்வரன் தான் விட்டுவிடுவானா..?
இதை எல்லாம் எண்ணிப் பார்த்த பல்லவியும் சுந்தரேஸ்வரனும் மனதிற்குள் புன்னகைத்துக் கொள்ள.. 
“சரி பாட்டி. உங்க விருப்பம்” என்றுவிட்டான் ஸ்வரன், அவர் விருப்பம் நாளடைவில் மாறும் என்ற நம்பிக்கையில். 
கீதமாகும்…

Advertisement