Advertisement

ஓம் கூடல் குமரா போற்றி!!
18
ஆதீஸ்வரனின் இல்லக்கதவுகள் இரண்டும் ஆளுக்கொருபுறம் விலகி நின்று உற்சாக வரவேற்பளித்தது..!
அம்பிகா வலப்புறமும், சிவகாமி இடப்புறமுமாய் உள்ளே அடியெடுத்து வைக்க.. அதற்கு காரணமானவளோ இருவருக்கும் இடையில் இன்முகமாய் நின்றிருந்தாள்.
“வாங்க சிவகாமி..” என புன்னகை தவறாது தன் சிநேகிதியை வரவேற்ற சுந்தரேஸ்வரன், தன் மருமகளையும் வரவேற்கத் தவறவில்லை.
அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டினுள் செல்ல, வராந்தாவில் நின்றிருந்த ஸ்வரனும் பல்லவியும் மட்டும் இருந்த இடம் விட்டு இம்மியும் நகராது இருந்தனர்.
“என் மேல இன்னும் கோபமா இருக்கீங்களா..?” என்றாள் ஸ்வரனின் அமைதி கண்டு. அந்த அமைதியே அவளுக்காகத் தான் என்றுணர்ந்தும் வேண்டுமென்றே அப்படிக் கேட்டிருக்க,
“ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவ..?” என்றான் புருவம் உயர்த்தி. 
“இருந்துட்டு போங்க.. நான் தப்பா எதுவும் பண்ணல. இப்போ உங்களுக்கு என்மேல கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்கலாம் ஆனா சீக்கிரமே என்னை புரிஞ்சிக்குவீங்க. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்” என்றுவிட்டு நகரச் சென்றவளின் கைப்பிடித்து தன்னருகே இழுத்து அணைத்திருந்தான்.
எதிர்பாரா அணைப்பில் அவளிதழ்கள் அழகாய் விரிந்து மலர.. அவள் காதோரக் கூந்தலை மெல்ல ஒதுக்கியவன்,
“உன்ன புரிஞ்சிக்காம தான் இவ்வளவு அமைதியா இருக்கேனா” என்றதில், அவனுக்கு இருபுறமும் தன் மென்கரத்தை நுழைத்து அவனை சிறைபடுத்தியவள், மெல்ல நினைவுபடுத்திப் பார்த்தாள் மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளை.
மயங்கி விழுந்தது மட்டுமே பல்லவியின் நினைவில் இருந்தது. அவள் கண்விழித்துப் பார்த்தபோது, அதே மருத்துவமனையில் அவள் ஒரு அறையில் படுத்திருந்தாள். ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்க.. தனக்கு தெரியாமல் ஊசியை எப்போது கையில் ஏற்றினார்கள் என்ற கேள்வியோடு சுற்றிலும் பார்க்க.. அறையின் ஒரு மூலையில் ஸ்வரன் சிவகாமியோடு மகிழ்ச்சியாய் உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. 
‘ஒருத்தி இப்படி கிடக்குறாளே அதை பார்க்காம இவங்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ’ என அவர்களையே பார்த்திருக்க.. அவள் புறம் எதேர்ச்சியாய் திரும்பிய ஸ்வரன், அவள் கண்விழித்ததைப் பார்த்து அவளருகில் விரைந்தான்.
“இப்போ எப்படி இருக்கு அனு” என குனிந்து அவன் தலையை மெல்ல வருடியபடி விசாரிக்க, 
“எனக்கு என்ன ஆச்சு” என்றாள் புரியாமல்.
“எல்லாம் நல்ல விஷயம் தான் பல்லவி மா” என சிவகாமி முகமெங்கும் புன்னகையுடன் கூற,
“நான் இப்படி கிடக்குறது உங்களுக்கு நல்ல விசயமா ம்மா” என பாவமாய் கேட்க, அதில் ஸ்வரன் பெரிதாய் சிரிக்க, தன் தலையில் அடித்துக் கொண்ட சிவகாமி 
“தம்பி..! நீங்களே சொல்லுங்க. நான் அம்பிகாவ பார்த்துட்டு வர்றேன்” என்று ஸ்வரனிடம் தெரிவித்துவிட்டு வேகமாய் வெளியேறிக் கொண்டார். 
“நீங்க எதுக்கு சிரிக்குறீங்க..” என முட்டை கண் விரித்து முறைத்தவளை மெல்ல எழுப்பி அமரவைத்தவன் அவள் முன்நெற்றியில் தன் அதரத்தை அழுந்தப் பதித்திருந்தான். 
இதழ்கள் லேசாய் விரிய அவனையே பார்த்திருந்தவளிடம்,
“ப்ரோமோசன் கிடைச்சிருக்கு அனு” என்றான்.
“ஓஹ்..! ஆபிஸ்ல இருந்து கால் பண்ணுனாங்களா..? இல்ல பாமா சொன்னாளா” என்ற பல்லவியின் கேள்வியில் சின்ன சிரிப்பை உதிர்த்தபடி சொன்னான்,
“நமக்கு ப்ரோமோசன் கிடைச்சிருக்கு அனு” என்று.
அதைச் சொல்லும்போது அவன் கண்கள் லேசாய் பணிக்க.. அகமோ அத்தனை ஆனந்தம் சுமக்க.. தன்னவளின் ஒவ்வொரு முகபாவங்களையும் தவறாது தன்னுள் பதியவைக்க, தன்னவளையே பார்த்திருந்தான்.
அவன் வாயாரக் கேட்டவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. மீண்டும் தன் முட்டைக் கண்கள் விரிய தன்னிரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டாள். ஸ்வரன் சின்ன சிரிப்புடன் அவள் கைகளை வாயிலிருந்து விலக்கி விட,
“ஆதி..! நிஜமாவா சொல்லுறீங்க..?” என்று கண்கள் மின்னக் கேட்க, அழகாய் கண்சிமிட்டி புன்னகைத்தான்.
சிரிப்பும் அழுகையும் போட்டிபோட.. கண்களில் ஆனந்தம் பெருகி இருபுறமும் வழிய, அதை தன் கரம் கொண்டு துடைத்தவன் 
“தேங்க்ஸ் அனு” என்றான் உணர்வுப்பூர்வமாய்.
அவன் அப்படிச் சொன்னது தான் தாமதம்.. அடுத்தநொடி ஆதீஸ்வரனின் சட்டையை எட்டிப் பிடித்து அவனை தன்னருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.
நொடிகள் நிமிடங்களாய் கடந்திட.. அறையினுள் அமைதி நிலவிட.. மௌனம் மட்டுமே மொழியாகிட.. மூச்சுக் காற்று இசையாகிட.. கற்பனைக்கும் எட்டாத கீதத்தில் ஸ்வரமும் பல்லவியும் ஒன்றிலொன்று கலந்து ஒருசேர பயணித்துக் கொண்டிருந்தது.
அனுவின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை. ஆதியின் உணர்வுகளை வார்த்தைகளாள் விவரிக்க முடியவில்லை. 
“உனக்கு இப்போ என்ன வேணுமோ கேளு அனு. அது எதுவா இருந்தாலும் நிச்சயம் நிறைவேத்துறேன்” என்றிருந்தான் ஸ்வரன் தன் உள்ளத்தில் உண்டான உணர்ச்சிப் பெருக்கில். 
‘எதுவும் வேண்டாம் ஆயுள் வரை நீ மட்டுமே போதும்’ என்று மனம் கூறியதை அவள் கூறும்முன், இடையில் குறுக்கிட்டது அவளால் செய்து முடிக்கப்படாத கடமை ஒன்று. 
அது நினைவில் வந்ததும், இந்நேரத்தை தவற விட்டால் அவள் செய்து முடிக்க வேண்டிய கடமையை செய்து முடிக்க முடியாது போய்விடுமோ என்று எண்ணியவள், அவனிடம் வரம் கேட்கத் தயாரானாள்.
“என்ன கேட்டாலும் எனக்காக அதை மறுக்கமா செய்வீங்களா..?” என அவன் அணைப்பில் இருந்தபடியே கேட்க,
“ஹ்ம்ம்..” என்றிருந்தான்.
“அம்பிகா அத்தை நம்ம கூடவே இருக்கட்டுமே” என்றதில் அவளை தன்னிடம் இருந்து விலக்கி அவள் முகம் கண்டான்.
சட்டென்று மாறிய வானிலை போல் இருந்தது அவன் மனநிலை. 
பூமழை பெய்யப் போகிறாளா அல்லது புயல்மழை பெய்யப் போகிறாளா பல்லவி..? 
எதுவாகினும் அதில் அவன் நனையப்போவது உறுதி.
“அத்தை செஞ்சது சரின்னு நான் சொல்ல மாட்டேன். ரொம்ப பெரிய தப்பு தான். ஆனா நீங்களே சொல்லி இருக்கீங்க தானே..! தவறு செய்யுறது மனித இயல்புன்னு. அப்படி தவறு செஞ்சு அதை உணர்ந்து செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கிடைக்காதான்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து, அது கிடைக்காம வலிக்க வலிக்க வாழுறதை விட வேற தண்டனை இருக்க முடியுமா..?” என்ற அவளது கேள்விக்கு ஆழ்ந்த அமைதி அவனிடம்.
ஏன் அவன் வாழவில்லையா..? தவறே செய்யாத போதும் பெற்றோரின் நிழல்கூட படாது வலிக்க வலிக்க அவன் வாழவில்லையா..? அவளும் கூட அப்படித் தானே வாழ்ந்தாள். அவளுக்கு இது புரியாதா என்ன..? தெரிந்தும் புரிந்தும் தான் அனைத்தையும் கூறினாள் பல்லவி.
“அத்தைக்கு சீரியஸ்ன்னு நான் பொய் தான் சொன்னேன் ஆதி. உங்க உணர்வுகளோட விளையாட அப்படி சொல்லல. உங்க உணர்வுகளை உங்களுக்கு உணர்த்த தான் அப்படி சொன்னேன்” என்றாள்.
அவன் விழியும் அவள் விழியும் ஒன்றை விட்டு ஒன்று விலகாதிருக்க, பல்லவி தொடர்ந்தாள்..
“வாழ்க்கையோட கடைசி நிமிஷம்னு தெரியும்போது அத்தையும் நீங்களும் துடிச்ச துடிப்பெல்லாம் கண்கூட பார்த்துட்டு தானே இருந்தேன். அவங்களுக்கு எதாவது ஆகியிருந்தா கடைசி வரைக்கும் அதை நினைச்சு நீங்க வருத்தப் பட்டிருப்பீங்க. நீங்க அப்படி கஷ்டப் பட்டுடக்கூடாது. எனக்கு நீங்க எப்போவும் சந்தோசமா இருக்கணும் ஆதி. உங்க தற்காலிக நிம்மதியை மட்டுமே பார்த்து உங்க நிரந்தர நிம்மதியை இழக்க நான் தயாராயில்லை”
“….”
“நான் அவங்களுக்காக பேசுறேன்னு தானே ஆரம்பத்துல இருந்து நினைக்குறீங்க..? இல்ல ஆதி நான் உங்களுக்காக மட்டும் தான் ஆரம்பத்துல இருந்து பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு துளியும் விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சும் கூட என் முடிவுல இருந்து பின்வாங்காம பிடிவாதமா இருக்க என்ன காரணம்..? அது நீங்க மட்டும் தான்”
“….” 
“அம்பிகா அத்தையை இப்படியே கூட விட்டுடலாம். இல்ல எங்காவது முதியோர் இல்லத்துல கூட சேர்த்துடலாம். உங்களுக்கு அவங்க மேல வெறுப்பு மட்டுமே இருந்திருந்தா நானே இப்படி ஒரு முடிவை தான் தேர்ந்தெடுத்திருப்பேன். ஆனா என் ஆதி அப்படி இல்லையே..! அவங்களுக்கு எதாவதுனா உங்களுக்கும் இல்ல வலிக்குது” என்று சொல்லும்போது அவளுக்குமே வலித்தது. 
“…..”
“அம்பிகா அத்தை இவ்வளவு நாளா இருந்தும் உங்களை கஷ்டப்படுதுனாங்க நாளைக்கு அவங்க இல்லாம போனாலும் உங்களை கஷ்டப்படுத்துவாங்க. இதுவரைக்கும் நடந்த எதையும் என்னால மாத்த முடியலை இனிமேல் நடக்கப் போறதை மாத்த முடியும் தானே..! நீங்க இழந்ததை எல்லாம் உங்களுக்கு திருப்பி கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். ட்ரஸ்ட் மீ.. நான் நிச்சயம் திருப்பி கொடுப்பேன். அதுக்காக என்ன வேணாலும் செய்யத்தயாரா இருக்கேன்” என்றாள் உறுதியாய்.  
இதுவரையில் ஆதி தான் அவனது அனுவை அணு அணுவாய் புரிந்து வைத்திருந்தான். அதை ஒவ்வொரு நிகழ்விலும் அவளுக்கு உணர்த்தி அவளை கர்வமடையச் செய்திருந்தான். ஆனால் அவனை ஆகாயத்தைக் காட்டிலும் பெரிதாய் புரிந்து வைத்திருக்கிறாள் அவனது அனு என்று அவள் உணர்த்திய தருணம் இது. 
“என் அப்பா உயிரோட இருந்திருந்தா, அவரோட தவறுகளை எல்லாம் உணர்ந்திருந்தா அவருக்கே நான் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க தயாரா இருந்தேன். அவரும் திருந்த மாட்டாரு எனக்கும் அந்த நிலைமை வர வேண்டாம்னு தான் கடவுள் அதுபோல ஒரு சூழ்நிலையை என் வாழ்க்கைல அமைக்கலை. ஆனா உங்க விசயத்துல அப்படி இல்லை. உங்க அம்மா உங்களுக்காக வாழ ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பாருங்க.. ஒருத்தரை மன்னிக்குறதை விட அவங்களுக்கு பெரிய தண்டனை இருக்க முடியுமா ஆதி..?” என்றாள்.
“எனக்கு சரணை திருப்பிக் கொடுத்த உங்களுக்கு நான் உங்க அம்மாவை திருப்பிக் கொடுக்க ஆசைப்படுறேன் ஆதி. அவங்களை ஏத்துக்கோங்கன்னு நான் வற்புறுத்தலை. உங்களுக்கா தோணும்போது நீங்க ஏத்துக்கோங்க. ஆனா அத்தை நம்மளோடவே இருக்கட்டும். இதுதான் எனக்கு உங்ககிட்ட இருந்து வேணும்” என்று அவன் முகம் காண, அமைதியாய் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டான் ஆதீஸ்வரன்.
இரண்டு நாட்களில் அம்பிகா டிஸ்சார்ஜ் ஆனதும், பல்லவி அவன் முடிவைத் தெரிந்துகொள்ள காத்திருந்தாள். 
அவர்களுக்கு இடையில் பிரச்சனையாய் இருக்கக் கூடாதென்று அம்பிகா அங்கிருந்து செல்ல நினைத்தபோது
“அனு..!” என்று சத்தமாய் அழைத்தவன்
“உங்க அத்தையை கூட்டிட்டு வா” என்றுவிட்டு அவர்களுக்கு முன்னால் சென்றிருந்தான். 
அதை தற்போது நினைத்துப் பார்த்தவள் அவனை எண்ணி பெருமிதம் கொண்டு,
“தேங்க்ஸ் ஆதி” என அவன் அணைப்பில் இருந்து விலகி அவன் முகம் காண, அவள் முன்நெற்றியில் செல்லமாய் முட்டினான்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இவ்வீட்டில் அடியெடுத்து வைத்த அம்பிகாவின் மனம் எங்கும் கனம்..! அடுத்த கணம் கனத்தை விட பெரிதாய் ஒரு ரணம்..!
ஒவ்வொரு திக்கிலும் தப்பாது அவர் பார்வை சென்று வர, கடந்தகாலம் நினைவு வர, பெரிதோர் குற்றவுணர்வு எழ, அமைதியாய் ஒரு மூலையில் நின்றபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். 
வீட்டின் தோற்றம் வேண்டுமானால் முற்றிலும் மாறியிருக்கலாம், அதை காலம் மாற்றியிருக்கலாம். ஆனால் அதுகொண்ட நினைவுகளை மாற்றி அமைக்க காலத்திற்கும் சக்தி இல்லை. கண்ணீரால் கரைந்து அதை அழிக்க முயன்று கொண்டிருந்த அம்பிகாவின் அருகில் வந்தார் சுந்தரேஸ்வரன்.
“வாழ்க்கை எல்லோருக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்குறது இல்லை. ஆனா உன் மருமக மூலமா உனக்கு அது கிடைச்சிருக்கு அம்பிகா..” என்றதும் அவரை நிமிர்ந்து பார்த்தவர் உடனே 
“என்னை மன்னிச்சிருங்க மாமா” என அவர் பாதத்தைப் பற்றியிருந்தார்.
“எழுந்திரு அம்பிகா.. நான் மன்னிக்குறதுக்கு இதுல ஒன்னும் இல்ல மா.. ஸ்வரனும் நீயும் நல்லா இருந்தா அதுவே போதும் எனக்கு. போனதை பேசி இனி என்ன ஆகப்போகுது.. அதுனால எதுவும் மாறப் போறதில்லை. இனி வர்ற நாட்களை சரியா வாழ்ந்தாவே போதும்” என்றவர்
“இது எப்போவும் போல உன் வீடு தான். நடந்தது எல்லார்த்தையும் மறந்துட்டு இனி உன் மகன் மருமக எல்லாரோடையும் நிம்மதியா இரும்மா” என்றார். 
இது உன் வீடு என்று அவர் கூறியதிலேயே தன் அடையாளத்தை அவர் மனதில் மாற்றி அமைத்துக் கொண்டார் என்பது புரிய, அம்பிகாவின் மனமோ அனல்மேல் விழுந்த புழுபோல் துடி துடித்தது. 
அவர்கள் அன்பை காண்பிப்பதே அம்பிகாவிற்கு கடும் தண்டனையாய் அமைந்தது. வாழ்நாள் முழுதிலும் தன் செயலை நினைத்து மருகி வருந்தும்படியான ஆகச்சிறந்த தண்டனை அவர்களின் மன்னிப்பு என்பதை புரிந்து கொண்டார்.
நடப்பதனைத்தையும் அமைதியாய் பார்த்திருந்தார் சிவகாமி. சுந்தரேஸ்வரன் போல் இப்படியும் சிலர் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் உலகம் இடைவிடாது இன்னும் இயங்குகிறது. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற மூதுரை வரிகள் தான் சிவகாமிக்கு நினைவு வந்தது.

Advertisement