Advertisement

ஓம் குருபரனே போற்றி!!
17
அனுவிடம் வந்து சேர்ந்த அலைகள் செய்தியை மட்டும் அவளிடம் சேர்த்துச் செல்லவில்லை, அதிர்வையும் தான் சேர்த்துச் சென்றன.  
பின் சுயம் சுற்றம் உணர்ந்து அவள் உடையவனை தேடி ஓடி வந்து சேர, பாவையின் பதற்றம் கணத்தில் கணவனிடத்தில் பற்றிப் படர்ந்தது. 
“என்னாச்சு அனும்மா?” 
வார்த்தை வரவில்லை வஞ்சியவளுக்கு.
“ஹா.. ஹாஸ்பிடல் போகணும்..!!”
அவள் தன் நிலை உரைக்காமலே இவனால் உணர முடிந்தது போல.
“ஹாஸ்பிடல் தானே.. போலாம்.. நாம போலாம்..!” கொஞ்சம் அமைதியை அவளிடம் விதைத்து அழைத்து வந்தான்.
“பல்லவி என்னாச்சும்மா? ஏன் ஒரு மாதிரி இருக்க” என்ற சுந்தரேஸ்வரனிடம்
“நாங்க ஹாஸ்பிட்டல் போகணும் தாத்தா. சரணும் நீங்களும் இங்கயே இருங்க. நீங்க அங்க வரவேண்டாம். நாங்க முதல்ல அங்க போய் பார்த்துட்டு அப்பறம் சொல்லுறோம்” கொஞ்சம் தெளிந்தாலும் தெளிவாய் அவரிடம் உரைக்காமல் அவள் சென்றிட, குழப்பம் குடியேற நின்றிருந்தார் தாத்தா.
சிவகாமி பாட்டிக்கு தான் எதோ சரியில்லை என்று நினைத்த ஸ்வரன் வண்டியை மின்னலென செலுத்தி அடுத்த பத்து நிமிடங்களில் மருத்துவமனையின் முகப்பில் நிறுத்தியிருந்தான்.
வண்டியில் இருந்து இறங்கிய பல்லவியோ வேகமாய் ரிசப்செனில் சென்று நிற்க, ஸ்வரன் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தான்.
“என்னங்க ஐ.சி.யூ ல வெச்சிருக்காங்க” என்று கண் கலங்கியபடி கூற, ஐ.சி.யூ எங்கிருக்கிறதென விசாரித்தவன் பல்லவியின் கைப்பற்றி அங்கு அழைத்துச் சென்றான்.
“நீ பயப்படாத அனு. தைரியமா இரு. ஒன்னும் ஆகாது அவங்களுக்கு” என்றபடி இருவரும் ஐ.சி.யூவை நெருங்கி இருந்தனர்.
“பேசன்ட்டை தொந்தரவு செய்யாம பாருங்க” என்று செவிலிப்பெண் சொல்ல, தலையசைத்துவிட்டு இருவரும் உள்ளே நுழைய, அங்கிருப்பவரை எதிர்பாராது பெரிதாய் அதிர்ந்துபோனான் ஸ்வரன்.
ஸ்வரன் இல்லத்தில்..
“சரண்..! எனக்கு என்னமோ ஒரு மாதிரி இருக்குப்பா..” என சுந்தரேஸ்வரன் தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சொல்ல
“என்னாச்சு தாத்தா” என அவன் பயந்துபோய் அவரருகில் வந்தான்.
“சிவகாமிக்கு எதோ சரியில்லை போல அதான் பல்லவி அப்படி பதட்டமா கிளம்பி போகுது. நாமலும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திரலாம்ப்பா” என்று சொல்ல, அவனுக்குமே அப்படி தான் தோன்றியது.
விரைந்து வீட்டை பூட்டி வந்தவன் ஆட்டோ பிடித்துவந்து தாத்தாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினான்.
மருத்துவமனையில்..
பல்லவி அவர் அருகில் சென்று அவர் தலையை மெல்ல வருடியபடி “அத்தை” என்றழைக்க, கருமணிகள் அசைய மெல்ல கண்திறந்து பார்த்தார் அம்பிகா.
ஆம் அம்பிகாவே தான். 
அவளைப் பார்த்து புன்னகைக்க முயன்றவர் கண்களை திருப்ப வெகுவாய்  கஷ்டப்பட்டு தன் பார்வை வட்டத்திற்குள் ஸ்வரனை கொண்டுவந்து நிறுத்தினார். 
இருந்த இடம் விட்டு இம்மியும் அசையாது அதிர்ச்சியோடு அப்படியே நின்றிருந்தான் ஸ்வரன். 
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த பல்லவி பின் ஸ்வரனிடம், 
“ஆதி..! நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
தாய்க்கும் மகனிற்கும் இடையில் நீண்டதொரு மனப்போராட்டம்..! 
இருவரும் ஒருவரை ஒருவர் இமைக்காது பார்த்துக் கொண்டே இருந்தனர். மௌனம் அவர்களுக்கிடையில் மொழியாடியது. 
கையை மெல்ல உயர்த்திய அம்பிகா, ஸ்வரனைத் தன் அருகில் அழைக்க.. அவர் விழியோரம் தேங்கிய நீர்த்துளியானது மெல்ல வடிந்து தலையணையை நனைத்தது. அது அவனை மொத்தமாய் கரைத்து அவர் புறம் நகர்த்தியது. 
தன் இறுதி நிமிடங்கள் என்ற கலக்கமோ தன் மகனைக் கண்டதும் உண்டான பரிதவிப்போ அவனிடம் பேசாமலே கண்மூடி விடுவோமோ என்ற பயமோ எல்லாம் சேர்ந்து கொள்ள அவரது மாஸ்கை மெல்லக் கழற்றியவர்,
“என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுப்பா” என்றார். 
ஸ்வரனால் அவர் பார்வையை சந்திக்க முடியாது போக தன் பார்வையை திருப்பிக்கொள்ள, அவன் கண்களும் மெல்லப் பனித்தது. 
“உன்னால சொல்லமுடியாது. உன்கிட்ட இதை நான் கேட்குறதும் நியாயம் இல்லை. இருந்தாலும் ஒரு முறை எனக்காக பொய்யாவது சொல்லிடுப்பா” என்றபோது அம்பிகாவின் இரு கண்களிலும் கரை புரண்டது கண்ணீர் வெள்ளம்.
அவனுமே தன் கண்களை ஒரு நொடி அழுந்த மூடித்திறந்தான். 
“யாருமே இல்லைன்னு தான் நான் உன்ன தேடி வந்திருக்கேன்னு நினச்சிடாதப்பா.. நீ என்னை ஏத்துக்கனும்ங்கற எண்ணத்துல நான் வரலை. இந்த பாவியை நீ ஏத்துக்கவும் வேண்டாம். உன்ன தூரத்துல இருந்தாவது பார்த்து என் பாவத்தை கழுவதான் நினச்சேன். ஆனா உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டா கூட என் பாவம் கொஞ்சமும் கரையாதுப்பா” என்று கரைய, அதில் அவன் ஒருவித வலியோடு நின்றிருந்தான்.
டாக்டர் கூறிய விடயத்தை கேட்ட பல்லவி, தன் புருவங்கள் இரண்டும் முடிச்சிட ஒருவித யோசனையோடு அடியெடுத்து வைத்தபடி மெல்ல அவ்வறைக்குள் நுழைந்தாள். அம்பிகா தன் மகனையே பார்த்திருக்க.. அவனோ சுவரைப் பார்த்தபடி எதுவும் பேசாது நின்றிருக்க.. இப்போது பல்லவியின் பார்வை ஸ்வரனிடம்.
“உன்கிட்ட இதெல்லாம் சொல்லாமையே போய்டுவனோன்னு ரொம்ப பயமா இருந்துதுப்பா..” என்று அம்பிகா கூறியதில் 
“ப்ச்.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று அதுவரை பேசாதிருந்த ஸ்வரன், அவர் புறம் திரும்பி தன் திருவாய் திறந்து வார்த்தை உதிர்த்திருந்தான்.
அதில் அவனைப் பெற்றவருக்கு சிறு நம்பிக்கை உண்டாக, தன் சக்தியை திரட்டிக் கொண்டு 
“நான் உன்னை சுமக்க மட்டும் தான் செஞ்சேன் ஒரு அம்மாவா உனக்குன்னு நான் எதுவுமே செஞ்சதில்ல.. உன்னை விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. அந்த வயசுல எனக்கு அது தப்புன்னு புரியல கண்ணா. எனக்குன்னு ஒரு பாதுகாப்பு வேணும்னு மட்டுமே தோணுச்சு. ஆனா அது தப்புன்னு புரிஞ்சதும் ஒவ்வொரு நொடியும் முள்ளு மேல நிக்குறமாதிரி தான் கடத்திட்டு இருந்தேன்” என்று மெல்ல விசும்பியவர்
“மனசாட்சி விழிக்குற வரைக்கும் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. செஞ்ச தப்பும் கண்ணுக்கு தெரியாது. அதோட வீரியமும் புரியாது. ஆனா அது விழிச்சதும் நம்மள நொடியும் தூங்கவிடாம பண்ணிடும். கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம் பண்ணி என்னப்பா பிரயோஜனம். உனக்கு என் மேல இருக்குற வெறுப்பை எல்லாம் கொட்டி தீர்த்திடுப்பா.. உன் கையால எனக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் சந்தோசமா ஏத்துக்குறேன்” என்று சிரமப்பட்டு கூறி முடித்தார்.
ஸ்வரன் அதற்குமேலும் மௌனத்தை போர்த்திக் கொள்ளவில்லை. 
“நீங்க என்கூட இல்லைனாலும் எங்காவது நல்லா இருப்பீங்கன்னு தான் நிம்மதியா இருந்தேன். ஒவ்வொரு முறையும் உங்களை பார்க்கும்போதும் உங்களை விட்டுட்டு போக என் மனசு இடம் கொடுக்காது” என்றிருந்தான்.
அவன் கண்களின் அவருக்கான அன்பை நன்கு கண்டார் அம்பிகா.
“உங்களை என்னோட அழச்சிட்டு போறதுக்கு உங்க மகன்கிற உரிமையையும் நீங்க எனக்கு கொடுத்தில்ல. உரிமை இருந்தும் உரிமை இழக்குற வலி.. அதை அனுபவிச்சா மட்டுமே புரியும்” என்றவன்,
“உங்களை பார்த்ததும் அடுத்த நொடியே அந்த இடத்தை விட்டு விலகிப்போறனே ஏன்..?” என்று கேட்க, அவனது இந்தக் கேள்வியில் அவனிடமே அதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார் அம்பிகா.
“அது என்னை கட்டுப்படுத்திக்க எனக்கு நான் போட்ட வேலி” என்றான்.
பல்லவி அவளது இதயத்தில் கூடிய வலியுடன் பேசாது நின்றிருந்தாள். கோவிலில் அம்பிகாவை சந்தித்த போதெல்லாம் அவன் அவ்வளவு அவசரமாய் கிளம்பச் சொல்லி நின்றதெல்லாம் அவள் கண்முன்னே நின்றது.
“நீங்க வருத்தப்படுவீங்கன்னு தெரிஞ்சும் ஒவ்வொரு முறையும் உங்க மனசு புண்படுற மாதிரி பேசுனேன். ஏன் தெரியுமா ..?” என்று கேட்டான் 
இப்போது. அம்பிகாவுக்கு அவன் உருவமே மறைந்துபோகும் அளவில் கண்களில் குளம் கட்டியிருந்தது. 
“அது நீங்க என்கிட்ட இருந்து ஒதுங்கியிருக்க நான் போட்ட வேலி” என்றான் வலியோடு.
“இந்த வேலியை தாண்டாம இருக்குறது தான் நமக்கு நல்லது. தாண்டனும்னு நினச்சா வலிகள் தான் அதிகம். இதுக்கும் மேல அன்பை எதிர்பார்த்து ஏமாந்துபோக எனக்கு சக்தியில்லை. நாளைக்கே உங்க பையன் வந்து உங்களை அழச்சிட்டு போனாலும் தடுக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை” என்றான்.
என்னவெல்லாம் யோசித்திருக்கிறான் என்னைப் பற்றி. என்ன செய்திருக்கிறேன் நான் இவனுக்கு என்று எண்ணிட, நெஞ்சை அடைத்தது அம்பிகாவிற்கு.
ஸ்வரனின் பேச்சை கேட்டு அவனையே இமைக்காது பார்த்திருந்த பல்லவிக்கு லேசாய் மயக்கம் வருவதுபோல் இருந்தது. கண்களை மூடித் திறந்து நிதானித்துக் கொண்டாள்.
அம்பிகாவிற்கு துக்கம் தாளவில்லை. தன் உடலில் உள்ள மொத்த சக்தியும் வடிந்தது போல் சோர்வாக ஒலித்தது அவர் குரல்.
“எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கிடைச்சா எல்லார்த்தையும் சரி பண்ணிடுவேன் ஆனா என் துரதிஷ்டம் நீயும் எனக்கு அந்த வாய்ப்பை கொடுக்கல கடைசி வரைக்கும் கடவுளும் அந்த வாய்ப்பை கொடுக்கல” என்றிருந்தார்.
சில நொடி மௌனம். இருவரும் உணர்சிகளின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
“அம்மாவை முடிஞ்சா மன்னிச்சிருப்பா” என்றார் அம்பிகா மூச்சுத் திணறியபடி. அதில் கண்கள் சிவக்க அவரைப் பார்த்தான் ஸ்வரன்.
அவன் இதுவரையுமே அவரை அம்மா என்று அழைக்கவில்லை. அதுவே அவருக்கு நெஞ்சைத் தாவிப் பிடித்தது. தான் செய்த காரியங்களால் அவன் வாயார கூட தன்னை அம்மா என்று அழைக்கவில்லை விரும்பவில்லை என்று நினைக்க உயிர் போகும் அளவில் வலித்தது.
“என்னங்க..! அவங்களை மன்னிச்சுட்டேன்னு சொல்லிடுங்க.. இல்லைனா அவங்க ஆன்மா சாந்தியடையாது. உங்களையே சுத்தும்” என்றாள் பல்லவி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு. ஸ்வரனின் கோபப் பார்வையில் தன் கண்களைத் துடைத்தவள்
“டாக்டர் கிட்ட பேசினேன்…” என்றுவிட்டு வாக்கியத்தை முடிக்காது தலையை இடவலமாய் அசைத்தாள்.
இன்னும் சில நொடிகளோ நிமிடங்களோ நாழிகைகளோ அவ்வளவே..! நாட்களை நீட்டிக்க முடியாதென்று வாக்கியத்தை நீட்டிக்கவில்லை அவள் என்றுணர்ந்தான் ஸ்வரன்.
இத்தனை வருடங்கள் பேசாததை மிச்சம் இருக்கும் சொற்ப நேரத்தில் பேசிவிட முடியுமா..? இத்தனை வருடம் அவன் தாயிடத்தில் பொழியாத அன்பை அணைப்பை எல்லாம் பொழிந்துவிட முடியுமா..? எதை செய்வது எதை விடுவது. மூளை மரத்துப்போய் நின்றிருந்தான்.
அவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான், இதுநாள் வரையில் தன்னோடு இல்லாவிட்டாலும் தன் தாயென்ற அடையாளத்தில் இவ்வுலகத்தில் இருந்தவர் இனி இவ்வுலகத்திலும் இல்லாமல் போகப் போகிறார் என்பதே.
தன் நிலை புரிந்துவிட்டதோ என்னவோ.. அம்பிகாவிடம் அவனைக் காட்டிலும் அவசரம்
“உனக்கே வந்து பிறக்கணும்னு ஆசையா இருக்குப்பா. அப்படியாவது உன் பக்கத்துல இருந்து உன்னப் பார்த்துக்கணும்.. ஆனா அதை சொல்லக் கூட இந்த பிறவியில எனக்கு அருகதை இல்லை”  
“அத்தை அப்படி எல்லாம் பேசாதீங்க.. நாங்க நல்லா பார்த்துப்போம் உங்களை” என்றாள் பல்லவி. 
அவள் கூறியதை கூட அவன் கவனித்திருக்கவில்லை. அம்பிகாவின் வார்த்தைகள் மட்டுமே அவனுள் சென்று கொண்டிருந்தது. இனி விட்டால் எப்போது கேட்போம்..? கேட்க நினைத்தாலும் கேட்க முடியாதே என்ற பயம். 
“நீ என்னை மன்னிக்கலைனாலும் பரவாயில்லப்பா. ஒரே ஒரு தடவ அம்மான்னு மட்டும் கூப்பிடுறையா..?. அதுக்கப்பறம் எனக்கு என்ன ஆனாலும் கவலையில்ல” யாசகம் கேட்டாள் அந்தத் தாய். 
எதிரில் நின்றவன் அணு அணுவாய் உடைந்து கொண்டிருந்தான்.
“முதலும் கடைசியுமா ஒரே ஒருமுறை ஸ்வரன்..” என கைகளை சேர்க்க பெரிதாய் சிரமப்பட்டு அவனை கும்பிட்டுக் கேட்க, 
“ம்மா..!!!” பதறிப் போய் அவர் கை பற்றி தட்டி விட்டிருந்தான்.
அவர் அவனைப் பெற்றவர் தான். பெற்றதோடு சரி. தன் பிள்ளை முதல் முதலில் திருவாய் மலர்ந்து அம்மா என்று உதிர்க்கும் வார்த்தை கேட்கக் கூட கொடுத்து வைத்திருக்கவில்லை அவருக்கு. உயிர் பிரிவதற்குள் ஒரு முறை அவன் வாயாரக் கேட்டதே போதுமென 
“போதும்ப்பா.. இது போதும் எனக்கு. நான் என் கடமையை செய்யலைனாலும் நீ உன் கடமைல இருந்து இதுவரை தவருனதில்லை. எனக்கு கடைசியா செய்ய வேண்டியதையும் நீ தான் செய்யணும். அதை மட்டும் செஞ்சிடுப்பா. இது போதும் எனக்கு” என்றபடியே கண்களை இறுக மூடிக்கொண்டார். 
“அம்மா.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது. கண்ணை திறந்து பாருங்க” என பதறியபடி அவர் கன்னத்தை மெல்ல தட்ட, பல்லவிக்கோ நொடிக்கு ஒருமுறை தலை சுற்றல் அதிகரித்தது. தன்னை சமாளித்துக் கொண்டு
“அத்தை பிழைச்சு வந்தா அவங்களை நீங்க ஏத்துப்பீங்களா..?” என்றாள். அவன் பதிலளிக்காமல் அம்பிகாவையே எழுப்ப முயற்சித்திருக்க
“சொல்லுங்க ஆதி ஏத்துப்பீங்களா..? அப்படி ஏத்துக்காம தனியா விடுறதுக்கு அவங்க பிழைக்கவே வேண்டாம். அவங்க உங்களுக்கு செஞ்ச தப்புக்கு எல்லாம் தண்டனையா அவங்களை கடவுளே அழைச்சுக்கட்டும்” என்றிருந்தாள்.
“அனு..!!” வெடித்தான் அவளிடம்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆட, தன் அன்னையின் கோலம் கண்டு பதறியபடி டாக்டரை அழைத்துவர விரைந்தான்.
அதற்குள் மருத்துவனமனை வந்திருந்தனர் சுந்தரேஸ்வரனும் சரணும்.
“சிவகாமின்னு இங்க யாராவது அட்மிட் ஆகிருக்காங்களா..?” என சரண் ரிசப்சனில் விசாரிக்க, இல்லை என்று பதில் வரவும் தான் சுந்தரேஸ்வரனிற்கு மனம் லேசானது.
குழப்பத்துடன் சரண் அவனது அக்காவை மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள, இப்போது தான் அழைப்பையே ஏற்றிருந்தாள்.
“அக்கா..! நீயும் மாமாவும் எதுவும் சொல்லாம கிளம்பிப்போனா எப்படி..? போனையும் எடுக்கல. தாத்தா பயந்துட்டார். பாட்டிக்கு என்னமோ ஏதோன்னு நானும் பயந்துட்டேன்” என்று பொரிந்தவன்
“இப்போ எங்க இருக்க..? யாருக்கு என்னாச்சு” என, 
அவள் அம்பிகா பற்றி கூற,
“நாங்க இங்க தான் இருக்கோம் வர்றோம் இரு” என அழைப்பை துண்டித்தவன் தாத்தாவோடு அங்கு விரைந்தான்.
அம்பிகாவை அந்நிலையில் காண சுந்தரேஸ்வரனிற்கும் கவலையாய் இருந்தது.
“அம்பிகாவுக்கு என்ன ஆச்சு பல்லவி மா” என,
“அத்தை கோயில் போய்ட்டு வரும்போது ரோட்ல மயங்கி விழுந்திருக்காங்க தாத்தா. அங்கிருக்குறவங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி அவங்க போன்ல என் நம்பர் பார்த்து எனக்கு தகவல் சொன்னாங்க. அதான் உடனே அவரை அழைச்சிட்டு இங்க வந்துட்டேன். அம்பிகா அத்தை பேரை சொன்னா இவரு வரத் தயங்குவாறோன்னு தான் எதுவும் சொல்லாம வந்துட்டேன் என்னை மன்னிச்சிருங்க தாத்தா” என 
“எதுக்கு மா மன்னிப்பு எல்லாம். நீ சரியா தான் செஞ்சிருக்க” என்றவர் அம்பிகாவின் அருகில் சென்று பார்த்துவிட்டு
“அம்பிகாக்கு பயப்படுற மாதிரி எதுவும் பெருசா இல்லையே பல்லவி மா” என்று கவலையுடன் கேட்டார். 
இல்லை என்று மெல்ல தலையசைத்தாள் பல்லவி.
“மாமா எங்க க்கா..?” என சரண் கேட்க, சில நொடிகளில் அவளை நோக்கிப் பாயக் காத்திருக்கும் ஸ்வரன் புயலின் வருகையை தான் அவளும் எதிர்பார்த்திருந்தாள். 
அவள் எதிர்பார்த்ததுபோல் தான் அவனும் வேகமாய் உள்ளே பிரவேசித்தான்.
யாரும் இல்லாது போயிருந்தால் இந்நேரம் பல்லவிக்கு ஸ்வரனின் ருத்ர தாண்டவத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். உள்ளே வந்தவனை சுந்தரேஸ்வரன் எதிர்கொள்ள, கட்டுக்கடங்காத தன் கோபத்தை எல்லாம் நொடியில் கட்டுக்குள் கொண்டுவந்து அடக்கியிருந்தான் ஸ்வரன்.
“பேசன்டை தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லிட்டு தானே போனேன்.  எதுக்கு இவ்வளவு பேர் உள்ள இருக்கீங்க யாரோ ஒருத்தர் மட்டும் இருங்க. மத்தவங்க எல்லாம் வெளிய போங்க” என செவிலிப்பெண் கூற, ஸ்வரனின் கோபத்தில் இருந்து தப்பிக்க வழிதேடி பல்லவி மட்டும் உள்ளே இருந்துகொண்டாள். 
மற்ற மூவரும் வெளியே காத்திருக்க, ஸ்வனிற்கு சற்றுமுன் நடந்த டாக்டரோடான உரையாடல் மனதில் வந்தது.
“டாக்டர் அவங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை பெஸ்ட் ட்ரீட்மென்ட் அரேன்ஞ் பண்ணுங்க” என ஸ்வரன் கேட்டுக் கொண்டிருக்க
“ரிலாக்ஸ்.. அவங்க நல்லா இருக்காங்க. சாப்பிடாம இருந்திருக்காங்க அதோட பிரஷர் கொஞ்சம் அதிகம் ஆனதுல மயக்கம் வந்திருக்கு. இப்போ கொஞ்சம் பெட்டராவே இருக்காங்க நான் ரௌண்ட்ஸ் முடிச்சிட்டு ஒன்ஸ் செக் பண்ணிடறேன். தென் நார்மல் வார்ட்க்கு மாத்துறது பத்தி சொல்லுறேன் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க” என்றுவிட
“நிஜமா அவங்களுக்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே டாக்டர். க்ரிடிக்கல்னு நீங்க சொன்னதா..”
“நத்திங்.. யாரு இப்படி சொன்னது உங்களுக்கு..? அவங்க மருமக கிட்டயே தெளிவா சொன்னனே” என்று சொல்ல, புருவங்கள் முடிச்சிட யோசனையோடு
“தேங்க்ஸ் டாக்டர்” என்றுவிட்டு வெளியேறினான். 
அப்போதே அம்பிகாவின் உண்மை நிலை விளங்கிட பெரிதோர் பாரம் நீங்கியது அவனுக்கு. அவரை இழக்க அவனுமே தயாராய் இல்லை. ஆனால் பல்லவி அப்படி செய்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதென்ன தன் உணர்வுகளோடு விளையாடுவது..? சற்றுமுன் தான் துடித்த துடிப்பென்ன அனைத்தையும் கண்டும் வாய்திறக்கவில்லை அவள். தன் அனு தனக்கு இப்படி செய்வாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை. அவளிடம் பெரும் கோபம் கொண்டு வந்த நேரத்தில் தாத்தா குறுக்கே வந்து பெரிதோர் நிகழ்வை நடக்க விடாது தடுத்துவிட்டார். 
சில மணி நேரத்தில் அம்பிகாவை நார்மல் வார்டிற்கு மாற்றியும் இருந்தனர். அவருமே சற்றுமுன் இருந்த மரணபயம் நீங்கி மனநிறைவோடு மகனை பார்த்திருந்தார். 
தாத்தாவையும் சரணையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு பல்லவியும் ஸ்வரனுமே அம்பிகாவோடு இருந்தனர். அம்பிகாவிற்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தவள் 
“அத்தை..! கொஞ்ச நேரம் தூங்குங்க” என்றுவிட்டு அமர்ந்திருக்க, இதுவரை தன் மனதில் இருந்த பாரமெல்லாம் நீங்கியதிலும் மருந்தின் வீரியத்திலும் சிறிது நேரத்தில் நிம்மதியான உறக்கத்திற்குச் சென்றிருந்தார் அம்பிகா. அவரையே பார்த்தபடி பல்லவி அமர்ந்திருக்க,
“பல்லவி..!” 
ஸ்வரனின் குரலில் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க.. வெளியே வருமாறு கண் காண்பித்துவிட்டுச் சென்றான்.  
அவன் பல்லவி என்று அழைத்ததிலேயே பகீரென்ற உணர்வுடன் எழுந்தவளுக்கு மீண்டும் தலை சுற்ற.. சிலநொடி நின்று நிதானித்து பின் தண்ணீர் பருகிவிட்டுச் சென்றாள். 
கலையில் இருந்து ஒன்றும் உண்ணவில்லை. ஸ்வரன் அம்பிகாவிற்கு ஜூஸ் வாங்கி வரும்போது பல்லவிக்கும் வாங்கி வந்திருந்தான். அதை மட்டுமே பருகியிருந்தாள். சாப்பிடாததால் உண்டான மயக்கம் என்று எண்ணியபடி அவள் வெளியே வர, அவள் பின்தொடர்கிறாளா என்று பார்த்துவிட்டு ஒரு தனிமையான இடம் தேடி வெளியே வந்திருந்தான் ஸ்வரன்.
பல்லவியும் அவனைத் தொடர்ந்து அவ்விடத்தை அடைய, வலது காலை சுவரில் ஊன்றியபடி தன் மார்பிற்கு குறுக்காய் கை கட்டிக் கொண்டு அவளையே முறைத்துப் பார்த்தபடி அவனிருக்க.. அவனை நிமிர்ந்து பார்ப்பதும் பின் இமை தாழ்த்துவதுமாய் அவள் இருந்தாள்.
முழுதாய் ஒரு நிமிடம் கடக்க, 
“ஆதி..! அது வந்து.. நான்..” என்று வார்த்தை திரட்டி முடிக்கும் முன் 
“எதுல விளையாடுறதுன்னு விவஸ்தை இல்லையா உனக்கு” உறுமியபடி அவளருகில் வர, லேசாய் மிரண்டவள் இரண்டெட்டு பின்னால் வைக்க, அப்படியே மயங்கிச் சரிந்திருந்தாள்.
“ஹேய்ய்ய்ய்…!” என விரைந்து அவள் விழாது பிடித்தவன் மறுநொடி தன்னவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான்.
கீதமாகும்…..

Advertisement