Advertisement

“இதெல்லாம் தெரிஞ்சதும் உடனே நான் உன்னை தேடி வந்தேன் சரண்” என்ற பல்லவியின் வார்த்தைகளில் அவள் புறம் திரும்பினான்.
“நீ டென்த் ஸ்டாண்டர்ட்ல இருந்த. இவ்வளவு பெரிய தம்பியான்னு ஆச்சர்யம் ஒருபுறம், உன்கூட சேர்ந்து ஓடி விளையாண்டு சண்டை போட்டு வளர முடியாம போனதை நினச்சு வருத்தம் ஒருபுறம். மறஞ்சிருந்து உன்னவே பார்த்துட்டு இருந்தேன். ஓடி வந்து நான் உன் அக்காடான்னு சொல்ல தோணுச்சு. ஆனா என்னால அதை உன்கிட்ட சொல்ல முடியல சரண்..” என அவன் கையை பிடித்துக் கொண்டு அழுதாள்.
“ஏன்..?” என்றான் ஏமாற்றமாய். அன்றே சொல்லி இருந்தால் மறுக்காது உன்னோடு வந்திருப்பேனே என அவன் பார்வை சொல்லியது.
“சொல்லுற மாறியா இருக்கு நம்ம கடந்த காலம். அன்னிக்கு உன் முகத்துல அவ்வளவு சந்தோசத்தை பார்த்தேன் சரண். அங்க நீ ரொம்ப சந்தோசமா இருந்த. எந்தக் கவலையும் இல்லாம உன் உலகம் ரொம்பவே அழகா இருந்தது. அதை மாத்த விரும்பல நான். அப்போ உனக்கு பப்ளிக் எக்ஸாம் வேற, இதெல்லாம் சொல்லி உன் படிப்பு பாதிக்குமோன்னு பயம் வேற. அதான் கொஞ்ச நாள் காத்திருந்தேன்” 
“எக்ஸாம் முடிஞ்சதும் என்னை வந்து கூட்டிட்டு போயிருக்கலாமே” என்றான். உன்னோடு அப்போதாவது வந்திருப்பேனே கொஞ்ச காலம் உன் அன்பில் நனைந்திருப்பேனே என்ற ஏக்கத்தில்.
“அப்போ தான் என் படிப்பை முடிச்சிருந்தேன் சரண். ஒரு நல்ல வேலை தேடிட்டு இருந்தேன். நம்ம குடும்ப சூழல் சரி இல்லை. உன்னையும் என்னோட அழச்சிட்டு வந்திருந்தா எப்படியும் கஷ்டப்பட்டு என்னால உன்னை படிக்க வெச்சிருக்க முடியும் தான்.. ஆனா உன்னால நிம்மதியா படிக்க முடிஞ்சிருக்குமானு தெரியல. கரென்ட் இல்ல.. குடிக்க சுத்தமான தண்ணி இல்ல.. நல்ல சாப்பாடு இல்ல.. போட்டுக்க நல்ல ட்ரெஸ் இல்ல.. முக்கியமா பணம் இல்ல..” என்றாள் கண்கள் சிவக்க மூக்கு விடைக்க,
“நான் தான் உன் கூட இல்லை ஆனா மத்தது எல்லாம் இருந்துச்சு அங்க. நீ நல்லபடியா படிச்சு முடிச்சு வரட்டும்னு முடிவெடுத்து தான் என் தம்பின்னு தெரிஞ்சும் உன்ன அங்கேயே விட்டுட்டு வந்தேன்” என்றாள் கீழுதட்டை அழுந்த கடித்து அழுகையை அடக்கியபடி. 
எப்படிப்பட்டவள் இவள். உண்மை தெரிந்தும் அவளோடு வந்து நானும் கஷ்டப்படக் கூடதென்று எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறாள்.. அவன் அன்னை முகம் அறியவில்லை. கண்டான் அவன் அக்காவினிடத்தில்.
“உனக்கு உண்மை தெரிஞ்சதுல இருந்து நீ தான் எனக்கு ஸ்பான்சர் பண்ணுனியா க்கா” என்றான்.
ஆம் என்று தலையசைத்தவள்
“நீ இதுநாள் வரைக்கும் அவங்களோட அரவணைப்புல இருந்திருக்கலாம். உண்மை தெரிஞ்சும் என்னால அப்படி விட முடியல. அதான் ரஞ்சிதா மேடம் கிட்ட பேசி உன் செலவுகளை எல்லாம் நானே கவனிச்சுக்கிட்டேன். உன்ன பார்த்துக்க முடியாம ஒன்னும் நான் உண்மையை மறைக்கல சரண். உன் படிப்புக்காகவும் உன் எதிர்காலத்தையும் நினச்சு தான் அமைதியா இருந்தேன். இதை எல்லாம் ஏத்துக்குற பக்குவம் உனக்கு இருக்கும்னு எனக்கு தோணலை. எல்லார்த்தையும் விட உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியமா பட்டுது சரண். உன் அழகான உலகத்தை அடியோட மாத்த முடியல என்னால” 
“இப்போ உன்னோடவும் என் உலகம் அழகா தானே க்கா இருக்கு. சொல்லப்போனா இது தானே உண்மையான சந்தோசம். அங்க நான் சந்தோசமா தான் இருந்தேன்.. மறுக்கல.. ஆனா எனக்குன்னு அங்க யாருமே இல்ல. ஆனா உன்கூட இருக்கும் போது நான் கஷ்டப்பட்டாலும் அது சந்தோசம் தான் க்கா..” என்றான் அந்த பக்குவம் நிறைந்தவன்.
“அக்கா மேல கோபமா டா.. தப்பா நினைக்குறையா என்னை..?”
“நான் உன்ன தப்பா நினைக்கல க்கா.. நினைக்கவும் முடியாது. நீ எனக்காக தானே இவ்வளவும் செஞ்சிருக்க. உன்ன நினச்சு எனக்கு பெருமையாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. பாட்டி கிட்ட கூட ஏன் க்கா மறச்சுட்ட.. நீ மட்டுமே தனியா கஷ்டப்பட்டிருக்க.. என்னை அவங்க ஏத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சயா”
“இல்ல சரண்.. அவங்களை ரொம்ப கஷ்டப் படுத்துறோமோன்னு என் மனசுக்குத் தோணும். அதான் உன்னை நான் என் சம்பாத்தியத்துல பார்த்துக்கணும்னு நினச்சேன். அவங்களுக்கு நம்மால இனியும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு நினச்சேன். இந்த உண்மையை அவங்க கிட்ட இருந்தும் மறைச்சேன். நீ ஸ்கூலிங் முடிச்சதும் சிவகாமி அம்மாகிட்ட உண்மையை சொல்லி உன்னையும் கூட்டிட்டு போற முடிவுல தான் இருந்தேன். அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருச்சு” என்றாள்.
“உன் மேரேஜ மிஸ் பண்ணிட்டேன் க்கா” 
“அதை நானே எதிர்பார்க்கலை.. திடீர்னு சிவகாமி அம்மா உடம்பு முடியாம போய்டாங்க. அவங்களுக்காக அவசர அவசரமா செய்துகிட்ட மேரேஜ். என் வாழ்க்கைல நடந்த ஒரே நல்ல விஷயம் உங்க மாமா தான்” என்றாள். 
“மாமா ரொம்ப நல்லவர் க்கா. அவர் கிடைக்க நீ ரொம்ப லக்கி” என்றதில் நீண்ட இடைவெளிக்குப் பின் பல்லவியிடத்தில் அழகான புன்னகை.
“அக்கா..!” என்றழைத்தான் அகத்தின் அடி ஆழத்தில் இருந்து.
பல்லவி அவனைப் பார்க்க,
“உன்ன ஒரே ஒரு தடவ ஹக் பண்ணிக்கவா” என்றான். 
அவள் பதில் தரவில்லை. அதிவேகமாய் அவனை அணைத்திருந்தாள்.
இருவரது கண்களும் கண்ணீர் சொரிய, இவ்விருவரும் உள்ளே வந்து நீண்ட நேரம் ஆகியதில் ஸ்வரன் அவர்களைக் காண அறைக்குள் வந்ததில் இக்காட்சியைக் கண்டான்.
அமைதியாய் அவன் ஒரு ஓரத்தில் நின்றிருக்க,
“கூடப் பிறந்தவங்களையே பார்க்காத பலபேருக்கு மத்தியில நீ எப்படி க்கா என்னை தேடி வந்து எனக்காக இவ்வளவும் செஞ்சிருக்க.. தனியா ரொம்பவே கஷ்டப்பட்டிருக்க.. நான் இங்க வந்ததும் மத்த எல்லோரோடையும் பேசிட்டு உன்னை தான் ஒதுக்கி வெச்சேன். சொல்லப்போனா உன் மூலமா தான் இங்க இருக்குறவங்களே எனக்கு உறவு. நான் அவ்வளவு காயப்படுத்தியும் உனக்கு என்மேல கோபமே இல்லையா..? உன்னால எப்படி இப்படி இருக்க முடியுது” என அவள் தோளில் தன் முகம் புதைத்தபடி வினவ, அவன் கண்களின் ஈரம் அவள் தோளை நனைத்தது.
“அது தான் அனு…” என்று ஒலித்த குரலில் சரணை தன்னிடம் இருந்து விலக்கிய பல்லவி, அவன் கண்களைத் துடைத்துவிட்டுத் திரும்ப, இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி நின்றிருந்தான் ஸ்வரன்.
“அவ உன்னை அக்கா ஸ்தானத்துல இருந்து பார்க்கலை.. அம்மா ஸ்தானத்துல இருந்து பார்க்குறா” என்று கூற, சரண் தன் அக்காவை அன்பொழுகப் பார்த்துவிட்டு
“அப்போ நீங்க மாமா..?” என்று ஸ்வரனிடம் திரும்பிக் கேட்டான்.
“அவ உன்னை அம்மா ஸ்தானத்துல இருந்து பார்க்கும் போது நான் எப்படி பார்ப்பேன்” என்றபடி சரண் அருகில் வந்தவன் அவன் தலையை வாஞ்சையாய் தடவி,
“நாளைக்கு எங்க குழந்தை வந்தாலும் கூட அது உனக்கு அடுத்து தான் சரண்” என்றான் மனதார. 
ஸ்வரனது இந்த வார்த்தைகளில் அவனையே இமைக்காது பார்த்திருந்தனர் பல்லவியும் சரணும்.
இந்த வார்த்தைகளில் சரணின் கடந்த காலம் ஏற்படுத்திய காயம் எல்லாம் காணாமல் போயிருக்க.. அவனுக்கு இதுவரை கிடைக்காத அன்பை எல்லாம் அள்ளிக் கொடுக்க அவன் அக்காவும் மாமாவும் உடன் இருக்க.. இனிவரும் நாட்களில் இன்பம் மட்டுமே இருக்கப் போகிறதென்று காலம் அறிவிப்பு விடுத்தது.
தற்போது சரண் முகத்தில் துளியும் துயரமில்லை. தெளிவு தான் குடிகொண்டிருந்தது.
“சரண்..! நீ போய் பேஷ் வாஸ் பண்ணிட்டு வா சூடா டீ போட்டு கொடுக்கிறேன்” என பல்லவி சொல்ல அங்கிருந்து கிளம்பச் சென்றவன்
“அக்கா..! ஹாஸ்டல் போறக்குள்ள ரஞ்சிதா மேடமை ஒரு தடவ பார்க்கணும்” என,
“அதுக்கு என்னடா ஒரு நாள் நானும் மாமாவும் உன்னை கூட்டிட்டு போறோம். பார்த்துட்டு வரலாம்” என்றதும், தலையசைத்து நகர்ந்தான். 
அவன் சென்றதும் ஸ்வரன் அருகில் வந்த பல்லவி, 
“ஆதி..! சரணுக்கு ஏன் அப்படி நம்பிக்கை கொடுத்தீங்க..? நாளைக்கு உங்களால அதை நிறைவேற்ற முடியாம போனா..?” என்று கேட்க,
“நீ என்னை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா அனு..?” என்ற அவனது பதில் கேள்வியில், அப்படி இல்லை என்னும் விதமாய் பார்த்தாள்.
“அவனும் என்னை மாதிரி தான் அனு. அன்பு செலுத்த ஆள் இருந்தும் அன்பு கிடைக்காம போன ஒருத்தன். அவன் வலி என்னனு எனக்கு நல்லா தெரியும். என்ன சொல்லுறோம்னு உணர்ந்து தான் சொன்னேன். அவன் நம்பிக்கையை நீ உடைச்சாலும் நான் உடைக்க மாட்டேன்” என்றுவிட்டு செல்லும் அவனையே பார்த்திருந்தாள் பல்லவி.
முழுதாய் ஒரு நிமிடம் அப்படியே நின்றிருந்தாள். 
பெரிதோர் பாரம் நீங்கியதுபோல் இருந்தது. சரண், நடந்தது அனைத்தையும் அப்படியே ஏற்றுக் கொண்டதில் அவள் மனம் நிம்மதியடைந்தது என்றால்.. அவள் உச்சி முதல் பாதம் வரையில் புது இரத்தத்தைப் பாய்ச்சி புத்துணர்வு அளிக்கச் செய்திருந்தது ஸ்வரனின் செய்கை.
நாளுக்கு நாள் உறவுகள் வலுப்பெற, உலகையே எதிர்கொள்ளும் அளவிற்கு உள்ளமும் வலுப்பெற்றது. 
அனைத்தும் நல்லவிதத்தில் முடிந்ததை எண்ணி அவள் நிம்மதியாய் அமரப்போக, அறையின் ஒரு மூலையில் கிடந்த அவள் கைப்பேசி அலறத் துவங்கியது. அதைத் தேடி கையிலெடுத்தவள், அழைப்பை ஏற்று காதிற்கும் கொடுத்தாள். 
காதிற்கு கொடுத்தவள், மறுமுனையில் கூறிய செய்தியைக் கேட்ட அடுத்த நொடியே பெரிதாய் அதிர்ந்தும் போனாள்.
“என்ன சொல்லுறீங்க..? உடனே வர்றோம்” என அதை வைத்துவிட்டு, விடயத்தை ஸ்வரனிடம் தெரிவிக்க வேகமாய் வெளியே ஓடினாள்.
அவளுக்கான மிக முக்கிய கடமை ஒன்று காத்திருந்தது.. 
மருத்துவமனையில்..! 
கீதமாகும்…..

Advertisement