Advertisement

ஓம் கீர்த்தியனே போற்றி!!
16
அவன் ஒற்றைப் புன்னகை அத்தனை வசீகரம்.!
அவர்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பகற்கனவில் பாகாய் உருகிக்கொண்டிருந்தாள் பல்லவி.
ஸ்வரனையே ரசித்துப் பார்த்திருந்தவள் பார்வை மெல்ல அவனருகில் நின்றிருக்கும் தன்புறம் செல்ல, உடனே உதட்டை நெளித்து சுளித்தாள்.
‘கொஞ்சம் சிரிச்சிருக்கலாம் பல்லவி நீ.. அப்போவே சுரேகா சொன்னா ஒழுங்கா போஸ் கொடுன்னு. கேட்டியா..? இப்போ பாரு உன் வீட்டுக்கார் சூப்பரா இருக்கார் நீ சுமாரா இருக்க’ என விசனப் பட்டபடி அதை வைத்துவிட்டு அடுத்த போட்டோ ப்ரேமை எடுத்துப் பார்த்தாள்.
அது அவளும் சரணும் இருக்கும் புகைப்படம். அதைக் கண்டதும் கை ஆசையாய் அதை வருட.. விவரிக்க முடியா உணர்வொன்று உட்புக, அந்நேரத்தில் சரியாய் அவள் சரிபாதியும், சகோதரனும் உள்ளே புகுந்தனர்.
ஸ்டூலில் ஏறி நின்றபடி புகைப்படங்களை சுவரில் மாட்ட சரியான இடத்தை தேர்வு செய்து கொண்டிருந்தவள் இவர்களை கவனிக்கவில்லை. ஒரு படத்தை மாட்டிவிட்டு திருப்திப்பட்டுக் கொண்டவள் அடுத்த படத்தை மாட்டச் செல்லும்போது ஸ்டூல் இடறிவிட, 
“அனு..!” என்றழைத்தபடி அவளருகில் விரைந்திருந்தான் ஸ்வரன்.
ஸ்டூல் இடறியதில் லேசாய் பதற்றமடைந்தவள் ஸ்வரனைப் பார்க்க, அவன் அவளுக்கு வலப்புறம் முறைப்பை முன்னிறுத்தி நின்றிருந்தான். மறுநொடி தன் இடப்புறம் திரும்பிப் பார்க்க, அவள் விழாதபடி ஸ்டூலைப் பிடித்திருந்தான் சரண்.
அவள் கீழே இறங்க உதவி செய்த ஸ்வரன் அவளுக்கான அர்ச்சனைகளை ஆரம்பிப்பதற்குள்,
“அக்கா..!” என்ற குரலில் தன் சரிபாதியை சந்திப்பதை விடுத்து சகோதரனை சந்தித்தாள்.
“பார்த்து நிக்க மாட்ட.. கீழ விழுந்திருந்தா என்ன ஆகுறது. மாமா கிட்ட கொடுத்திருந்தா அவர் மாட்டியிருப்பார். நீயே தான் செய்யணுமா..? அப்படி என்ன போட்டோ அது” என்றபடி அவள் கையில் இருந்ததை ஏறிட்டவன், அவர்கள் கூட்டில் தனக்கான இடத்தைக் கண்டு பேச்சிழந்து தான் போனான். 
அவன் அழைப்பிலும்.. உரிமையாய் உரைத்த வார்த்தைகளிலும் பல்லவி நெஞ்சம் நெகிழ்ந்துபோய் நின்றிருக்க.. பாசப் பறவைகளுக்கு மத்தியில் பார்வையாளனாய் நின்றிருந்தான் ஸ்வரன்.
சில நொடிகள் மௌனமே ஆட்சி செய்ய, 
“நீ உக்காரு.. நான் பிக்ஸ் பண்றேன்” என அவள் கையில் இருந்த புகைப்படங்களை வாங்கிக்கொண்டு மேலே ஏறிய சரண், முதலில் சுந்தரேஸ்வரன் சிவகாமியோடு அவர்கள் அனைவரும் இருக்கும் படத்தை மாட்டிவிட்டு அடுத்த படத்தை கையில் எடுக்க.. அவன் கண்கள் அதை விட்டு விலகவில்லை.   
திருமணக் கோலத்தில் அவன் அக்காவும் மாமாவும் இருக்க, உள்ளுக்குள் லேசாய் எட்டிப் பார்க்கிறது ஒரு ஏமாற்றம். அதை உணர்ந்த ஸ்வரனும் பல்லவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள
‘அவன் கிட்ட சொல்லு’ என்றான் ஸ்வரன், பார்வையில் பல செய்திகளை உள்ளடக்கி.
‘வேண்டாம்’ என்றாள் பல்லவியும் பதில் செய்தியில்.
இப்போது இருவரையும் கவனித்த சரண்,
“அக்கா..! நான் உன்கிட்ட பேசணும்” என அழுத்தமாய் கூற, அவனைப் பார்த்த பல்லவி உடனே ஸ்வரனைப் பார்க்க..
‘போ’ என்றான் கண்களால். 
‘இங்கயே இருங்க.. ப்ளீஸ்..’ என அவசரமாய் கெஞ்சல் பார்வை ஒன்றை பதிவு செய்தபடி சரணை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் செல்ல, ஸ்வரனும் ஹாலிலேயே அமர்ந்துகொண்டான்.  
பேச்சு எதில் சென்று முடியப் போகிறதென்று இருவருக்கும் தெரியும் இருந்தும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியாது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  
“நேத்து ஏன் மாமா மேல கோபமா இருந்த..?” என சரணே ஆரம்பித்தான்.
“அதெல்லாம் இல்..” என பல்லவி முழுதாய் முடித்திருக்கவில்லை 
“பொய் சொல்லாத” என அவன் சொல்லி முடித்திருந்தான்.
அதில் அவனை ஆழமாய் பார்க்க..
“எனக்காக தானே..!” என்றான். 
அவள் பேசாதிருக்க..
“என் பிறந்தநாள் எப்போன்னு எனக்கு தெரியலைனாலும் பரவாயில்ல.. ஆனா உனக்குமே தெரியாதா க்கா..?” என்ற அவனது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலி.
நேற்று ஸ்வரனிடம் தான் கூறியதை கேட்டிருக்கிறான் என்று புரியவர, இதைக் கேட்டபின் நேற்றிலிருந்து என்னென்னவெல்லாம் சிந்தித்திருப்பானோ என்று எண்ணவே மனம் கனத்தது. 
அவள் அமைதியில் அவன் அமைதி அகன்றுவிட.. ஆக்ரோஷம் அதிகரிக்க,
“நம்ம பாட்டிக்கு இத்தனை நாள் நான் இருக்குறதே தெரியல, நீயும் பாட்டியும் இங்க இருக்கும் போது நானும் அம்மாவும் எப்படி பிரிஞ்சு போனோம்..? யார் கிட்டயும் இதுக்கான பதில் இல்லை. உன்னை தவிர. இதுக்கு மேலயும் என்னால தெரிஞ்சுக்காம இருக்க முடியாது.. நீ எல்லார்த்தையும் என்கிட்ட சொல்லித்தான் ஆகணும். இதவே நினச்சு நினச்சு ஒவ்வொரு நொடியும் பைத்தியம் பிடிக்குற மாறி இருக்கு. ப்ளீஸ் சொல்லு க்கா..” என்று கத்தியபடி தளர்ந்துபோய் மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.
“சரண்..!” என அவனோடமர்ந்து ஆதரவாய் அவன் தோள் பற்றியவள், அவனை எழுப்ப முயல.. அவன் நகர மறுக்க,
“உன் எல்லா கேள்விக்கும் நான் பதில் சொல்லுறேன்” என்றதும் தான் அவளோடு மேலே அமர்ந்தான்.
கேள்வியை எங்கிருந்து ஆரம்பிப்பதென்று ஒரு நொடி சிந்தித்தவன், சிந்தனையின் முடிவில் 
“நீ ஒரு மூலைல.. நான் ஒரு மூலைல.. ஏன் இப்படி..? நம்ம அப்பா என்ன தான் செஞ்சார்..?” என்றிருந்தான்.
அதில் ஒரு கசந்த முறுவல் பல்லவிக்கு. 
“அப்பா தானே..! சொல்ற அளவுக்கு அவர் எதுவும் செய்யலை. சொல்ல முடியாத அளவுக்கு நிறைய செய்திருக்கார்” என, அவளையே பார்த்திருந்தான் சரண். 
அவளது இளமை காலம் தொட்டு கூறத் துவங்கினாள். 
“பாவம் க்கா நம்ம அம்மா.. ரொம்பவே கஷ்டப் பட்டிருக்காங்க அதனால தான் அப்பா மேல சிவகாமி பாட்டி இன்னுமே வெறுப்பா இருக்காங்க. அப்பா எப்படி இறந்தாரு..?” 
என்னதான் தம்பியாய் இருந்தாலும் கூட, தன் துணைவனிடம் தயங்காது கூறியதை எல்லாம் இப்போது அவனிடம் கூற முடியவில்லை பல்லவிக்கு. அது தெரியாததால் தான் அவனும் தன் தந்தையை இதுவரை மரியாதையாக அழைத்து வருகிறான்.
“அவரு எங்காவது வாழ்ந்துட்டு இருப்பாருன்னு தான் நினச்சேன்.. ரெண்டு பெண்களோட வாழ்க்கைல விளையாடின அவரை ரொம்ப நாள் அந்த கடவுள் வாழ வைக்கலை” என்றாள்.
“ரெண்டு பேரோட வாழ்க்கையா..?” என புருவங்கள் முடிச்சிடப் பார்த்தவனைக் கண்டு ஒரு பெருமூச்சை வெளியிட்டவள்
“நமக்கு அம்மா வேற சரண்” என்று ஒருவாராக வார்த்தைகளை திரட்டி கூறிவிட்டிருந்தாள்.
அவன் இதுநாள் வரை சந்தித்ததில் இதுதான் பேரதிர்ச்சி என்பதை அவன் வெளிறிய முகத்தோற்றமே வெளிக்காண்பித்தது. கண்களில் கட்டுக்கடங்காத கண்ணீர் பெருக அவனையே பார்த்திருந்த பல்லவி,
“கூடப் பிறந்தா தான் உறவா.. நீ என்னிக்கும் என் தம்பி தான் டா” என நா தழுதழுக்க அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னை எப்படி கண்டு பிடிச்ச” என அதிர்ச்சி குறையாது ஒலித்த அவனது குரலில் அவனிடமிருந்து விலகி, தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு கூற ஆரம்பித்தாள்.
தன் தாயின் இறப்பு அதன் பின்னான இடம் பெயர்வு வரை தெரிவித்தாள்.
“அந்த ஊரை விட்டு ரொம்ப தூரம் வந்துட்டோம். எங்க வாழ்க்கையே இங்க தான் தொடங்குச்சு. நாங்களும் யாரை தேடியும் போகலை எங்களைத் தேடி வரவும் யாருக்கும் வாய்ப்புத் தரலை. ஒரு நாள் காலேஜ்ல என்.சி.சி கேம்ப்க்காக அந்த ஊருக்கு போகவேண்டிய சூழல், அத்தனை வருஷம் கழிச்சு அப்போ தான் அங்க போனேன் நான். என் பழைய வீட்டையும் பார்த்தேன்” என்றுவிட்டு அவனைப் பார்க்க, 
“அங்க யார் இருந்தா..? என் அம்மா இருந்தாங்களா” என்றான் ஓவ்வொரு செல்லிலும் அவன் முகம் தெரியா அன்னையின் நினைவுகள் எழ,
“அந்த வீடு சிவகாமி அம்மாவோடது சரண். சொல்லப் போனா அவங்களுக்குன்னு இருந்த ஒரே சொத்து. அதையும் என் அம்மாவுக்காக கொடுத்தாங்க.. ஆனா நீ அப்பான்னு சொன்னயே அந்தாளு, அதையும் வித்து அழிச்சிட்டார். நான் சந்தித்தது அந்த வீட்டோட அப்போதைய உரிமையாளரை” என்றாள். 
அவள் சொன்னதிலேயே அவனுக்கு தன் தந்தை எப்படிப்பட்டவர் என்று புரிந்து போனது. 
“அங்கதான் எனக்கான ஒரு திருப்பு முனையே காத்திருந்துது சரண்” என்றாள்.
“என் அம்மா பத்தி தெரிஞ்சுதா” என்றான் அடுத்து அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்துகொள்ள காத்திருக்க முடியாது.
“உன் அம்மா மட்டும் இல்ல.. உன்னை பத்தியும் அப்போ தான் தெரிஞ்சிது” என்றவள் சில நொடி இடைவெளிவிட்டு
“என் அம்மா உயிரோட இருந்தப்போவே அவங்களுக்குத் தெரியாம சித்தியை கல்யாணம் செய்திருக்கார் அந்த மனுஷன். அம்மா போனதும் நாங்க அந்த ஊரை விட்டு வந்தப்பறம், சித்தி அந்த ஆளை தேடி அந்த ஊருக்கு வந்திருக்காங்க. ஆனா அவங்களோடையும் வாழாம அவங்க வாழ்க்கையும் அழிச்சு.. குடி குடின்னு குடிச்சே அழிஞ்சும் போய்ட்டார் அந்த புண்ணியவான். குழந்தையோட நிற்கதியா நின்ன சித்தி உன்னை வளர்க்க அதே வீட்ல வேலை பார்த்திட்டு இருந்திருக்காங்க”  
அவள் எந்தவித வெறுப்பும் இன்றி வாய்க்கு வாய் தன் அன்னையை சித்தி என்று முறை சொல்லி அழைத்ததில் மகிழ்வதா, இல்லை ஒரு குடிகாரனை நம்பி வாழ்க்கையை தொலைத்து வீதியில் நின்ற தன் அன்னையை எண்ணி வருந்துவதா என்று தெரியாது அமர்ந்திருந்தான் சரண்.
“அதுவும் நிலைக்கல சரண். நல்லவங்க தான் அதிக சோதனைக்கு ஆளாகுறாங்க. என் அம்மா மாதிரி தவறான முடிவுக்கு போகாம மனோதிடமா இருந்து உனக்காக வாழணும்னு நினச்ச சித்தி, தனியா உழைக்க ஆரம்பிச்சு உன்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் உனக்கு நாலு வயசு இருக்கும் போது அவங்களுக்கு மஞ்சள் காமாலை தாக்கி..” எல்லாம் முடிந்ததென வார்த்தைகளையும் முடித்துக் கொண்டாள்.  
தன் முகம் தெரியா அன்னைக்கு உரிய ஒட்டுமொத்த அன்பையும் தன் கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் சரண். நிச்சயம் மேலிருந்து அவர் பார்க்கக் கூடும் என்ற நம்பிக்கையில்.
“அழாத சரண். நீ அழுறத என்னால தாங்க முடியாது” என பல்லவிக்கு குரல் உடைய
“நீ மேல சொல்லு க்கா..” என்றான் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு.
“அங்கிருந்தவங்க உனக்கு யாரும் இல்லைன்னு சொல்லி உன்னை அன்பு அறக்கட்டளைல சேர்த்திருக்காங்க..” என்றதும் புரிந்து போனது அவனுக்கு. 
அவன் இதுவரையில் எத்தனையோ முறை ரஞ்சிதாவிடம் அவன் கடந்த காலம் குறித்து விசாரித்துள்ளான். அவனது எந்தக் கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்ததில்லை. அப்போது அவரே அவனது கடந்த காலத்தை எல்லாம் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்ற ஆதரவற்ற குழந்தைகளைப் போல் அவனையும் ஏற்று, அவரது அறக்கட்டளை சார்பில் பார்த்து பராமரித்து வந்திருக்கிறார்.  

Advertisement