Advertisement

“நீ இப்போ எழலைன்னா அடுத்து நான் உன் கால்ல விழவேண்டி இருக்கும் பரவாயில்லையா..?” என்றதில் வேகமாய் எழுந்து அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.
அவன் எதோ யோசனையில் இருக்க.. அவனையே பார்த்திருந்தவள் அவனை இதற்குமேலும் கடந்ததை எண்ணி கலங்க விட வைக்கக்கூடாது என்று நினைத்தாள்.
அதற்கு என்ன செய்வதென்று யோசித்த மறுநொடி.. மின்னலென அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்துத் திரும்பினாள். அதில் சிந்தனை கலைந்து அவள் புறம் பார்த்தவன் 
“இப்போ என்ன பண்ணுன?” என்றான் சந்தேகமாய். நறுமணம் மிக்க பன்னீர் ரோஜா மலரிதழ்கள் கொண்டு அவன் கன்னம் தீண்டிப்போனது போல் இருந்தது ஒரு நொடி. 
“அது.. அன்னிக்கு தெரியாம அடிச்சேன்ல..”
“ப்ச்.. அப்போ இல்லை. இப்போ”
“அதான்.. அதுக்கு.. இப்போ சாரி கேட்டேன்” என்று இமை தாழ்த்திக்கொண்டு வார்த்தைகளில் புள்ளிவைத்து கோலமிட்டவளிடம் தொலைந்துதான் போனான் ஆதீஸ்வரன்.
“நானும் தான் அடிச்சேன்….” என்றதில் பல்லவி அவனை நிமிர்ந்து பார்க்க.. சற்றுமுன் அவனுக்கு அவள் கொடுத்த காதல் பரிசை அவளுக்கும் திருப்பிக் கொடுக்க, அவள் அனுமதி வேண்டி காத்திருந்தான்.
அவளோ புன்னகையுடன் அவன் தோளை இடித்துக்கொண்டு சாய்ந்து தன் கன்னத்தை காட்ட, அவள் செய்கையில் அரும்பிய புன்னகையுடன் அவள் ஆப்பிள் கன்னத்தில் தன் அதரங்களை அழகாய் அழுந்தப் பதித்திருந்தான். 
இருவரது இதழ்களும் மலர்ந்திருக்க, இதுவரை இருந்த மன பாரங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாது காணாமல் சென்றிருந்தது ஸ்வரனிற்கு.. செல்ல வைத்திருந்தாள் அவனவள்.
“உங்க புத்தகத்தை முழுசா படிச்சுட்டேன்னு நினைக்குறேன் ஆதி” என்றாள் பல்லவி.
“அதுல இனிமையா எதுவும் இல்லை அனு. எல்லாம் கருப்புப் பக்கங்கள் தான். முதல்ல நீ படிக்க வேண்டாம்னு தான் நினச்சேன். ஆனா நீ புத்தகத்தை படிக்காம விடுறதா இல்லைன்னு தெரிஞ்சதும் மொத்தமா தூக்கி உங்கிட்ட கொடுத்துட்டேன்”
“நான் முழுசா படிச்சா தானே உங்க கருப்பு பக்கங்களுக்கு முழுசா சுண்ணாம்பு அடிக்க முடியும். அப்பறம் அதில விதவிதமா வண்ணம் தீட்ட முடியும். நீங்க எனக்கு செஞ்ச மாதிரி” என்று கண்ணடிக்க, அவள் எண்ணம் உணர்ந்து ஸ்வரன் அவளை ஆழமாய் பார்க்க.. நேரத்தை கண் காண்பித்தவள் விளக்கணைத்து வந்து படுத்துக் கொண்டாள். 
கடந்ததை மீட்டுத் தர முடியும் என்றால் எப்படியும் போராடி அவன் இழந்ததை எல்லாம் மீட்டிருப்பாள். அதற்கு வழியில்லாது போக, இனி வரும் நாட்களையும் அவன் இழந்துவிடாது பார்த்துக்கொள்ள முடிவெடுத்தாள்.
நடந்தது அனைத்தையும் ஸ்வரன் வாயாரக் கேட்ட பின்னரும் கூட அவள் முடிவு என்னவோ மாற்றம் கண்டிருக்கவில்லை. அவள் எடுத்த முடிவில் உறுதியாய் நின்றிருந்தாள் பல்லவி. 
நாட்கள் நகர்ந்திருக்க.. சரண் தனது கல்லூரி விடுமுறையில் சிவகாமியின் இல்லம் திரும்பி இருந்தான்.
அவனைச் சென்று பார்க்க பல்லவிக்கு பலத்த தடை போடப் பட்டிருந்தது. ஸ்வரன் தான் அதனைப் போட்டிருந்தான். சரணையே இங்கு அழைத்து வந்து ஓர் நாள் தங்கவைப்பதாய் கூறியதால் மட்டுமே அவன் சொல் கேட்டு அமைதிகாத்தாள் பல்லவி. 
சரண் வரப் போகிறான் அவர்களோடு தங்கப் போகிறான் என்றதுமே பல்லவிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தாள். இதுநாள் வரையில் ஸ்வரனிற்காக சமையலை கையில் எடுத்தவள் இப்போது சரணிற்காக எடுத்திருந்தாள். 
அடுத்து ஒரு மணி நேர முடிவில், சரணோடு அவர்களது இல்லத்தில் இருந்தான் ஸ்வரன்.
ஆசையாய் தன் தம்பியின் அருகில் வந்தவள்,
“உள்ள வா சரண்” என்று அழைக்க, அவளை நிமிர்ந்தும் பாராது அவளுக்கும் பின்னால் நின்றிருந்த சுந்தரேஸ்வரனின் அழைப்பிற்கு
“வரேங்க தாத்தா” என பதிலளித்தபடி உள்ளே சென்றான். செல்லும் அவனை புரியாது பார்த்திருந்தவள், அவனை அடுத்து உள்ளே வரவிருந்த ஸ்வரனை உள்ளே வர விடாது தடுத்து நிறுத்தினாள்.
“என்னாச்சுங்க இவனுக்கு..? அன்னைக்கு நல்லா தானே இருந்தான். அதுக்கப்பறம் போன்லையும் என்னோட பேசவே இல்லை இப்போவும் மூஞ்சிய திருப்பிட்டு போறான்” என அவனிடம் கேட்டுவைக்க
“உன் தம்பி தானே..! எப்போ எப்படி இருப்பான்னு கண்டு பிடிக்குறது கஷ்டம் தான்” என்றுவிட, தம்பியை முறைக்க முடியாது தன்னவனை முறைத்து நகர்ந்தாள்.
இரவு உணவிற்கு அவள் சமைத்ததை எல்லாம் எடுத்து டேபிள் மீது வைத்து அலங்கரித்தாள். சரண் எதை விரும்பி உண்கிறான் எனவும் பார்த்துப் பார்த்து பரிமாறினாள். 
“இது எல்லாம் புதுசா இருக்கே பல்லவி மா.. இதெல்லாம் நீ எங்க இருந்து கத்துகிட்ட” என்ற சுந்தரேஸ்வரனிடம்,  
“யூ ட்யூப் தான் தாத்தா” என்று பல்லவி கூறியதில் பலமாய் புரை ஏறியது ஸ்வரனிற்கு.
“உங்களுக்கு பனீர் டிக்கா வேணுமா இல்ல சன்னா டிக்கி வேணுமா..” என்று கேட்டபடி அவன் அருகில் வர,
“தயவ செஞ்சு யூ ட்யூப் பார்த்து பேரு வைக்காத அனு.. அது நீ சமைக்குறதை விட ரொம்ப மோசமா இருக்கு” என்றான். அதில் பல்லவி அவனை முறைக்க அந்நேரத்தில் சரண் சிரிப்பை அடக்க முடியாது வாய்விட்டே சிரித்துவிட்டான்.
அவன் சிரித்ததில் பல்லவி தன்னவனை விடுத்து தம்பியைப் பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்த சரணோ பின் விரைந்து உண்டுவிட்டு எழுந்துகொண்டான். 
“ஏங்க.. நீங்க இன்னைக்கு தம்பியோட படுத்துக்குறீங்களா..?” என்றதில் மறுப்பேதும் சொல்லாமல் ஸ்வரன் செல்ல, கொஞ்சம் வியப்பாய் தான் இருந்தது பல்லவிக்கு. 
அவனுக்கும் அதுதானே வேண்டும். அவளாகவே அதை சொல்லும்போது கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது சென்றுகொண்டான்.
நேரம் கடந்தும் பல்லவிக்கு தான் உறக்கம் வரவில்லை. கைப்பேசியை எடுத்து ஸ்வரனை அழைத்தவள்
“ஏங்க என்ன பண்ணுறீங்க.. தூங்கிட்டீங்களா..? தம்பி தூங்கிட்டானா..?” என,
“தூங்குறவனை எழுப்பி இதென்ன கேள்வி.. போனை வெய்” என அழைப்பை துண்டித்துக் கொண்டான்.
அவன் மீதுள்ள ஆத்திரத்தை எல்லாம் தலையணை மீது தாறுமாறாய் கண்பித்தவள் வெகு நேரத்திற்கு பின்னரே உறக்கத்தை தழுவினாள்.
அவள் உறக்கத்தை கலைக்கவென்றே அவளது கைப்பேசி அலற, பதறி எழுந்தவள் இந்நேரத்திற்கு யாரென்று பார்க்க, அது ஸ்வரனிடம் இருந்து என்றதும் உடனே அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தாள்.
அவளை மேலே வரும்படி கூறினான். 
ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காது மறுநொடியே விரைந்து படிகளில் ஓடினாள். மேல் அறைக்கு வந்து கதவைத் திறக்க.. அதிர்ந்து போய் நின்றாள்.
சுந்தரேஸ்வரன் தன் தலையில் பர்த்டே பார்டி ஹேட் அணிந்தபடி நின்றிருந்தார். அவரோடு சேர்ந்து அழகாய் புன்னகைத்தபடி ஸ்வரன்.. அவன் அருகில் சரண்.. மூவருக்கும் இடையில் ‘ஹாப்பி பர்த்டே அனு குட்டி’ என்று எழுதப்பட்டு, ஸ்வரன் கைப்பட தயாரிக்கப் பட்ட ஃப்ரூட்  கேக். 
அனைத்தையும் பார்த்தவளது விழிகள் இரண்டும் ஆனந்த மழையை பொழிவிக்க, அவளை அவர்களுக்கு இடையில் அழைத்துவந்த ஸ்வரன், கேக்கை வெட்டுமாறு கண்கான்பிக்க.. இடவலமாய் தலையசைத்து மறுத்தாள்.
“சிவகாமி பாட்டி அவங்க முடிவுல ரொம்ப உறுதியா இருக்காங்க.. இப்போவும் வர மறுத்துட்டாங்க” என ஸ்வரன் சொல்ல, பரவாயில்லை என்ற பாவனை பல்லவியிடத்தில்.
“என்ன பல்லவி மா மெழுகுவர்த்தி இல்லையேன்னு பார்க்குறையா அதெல்லாம் ஸ்வரன் வாங்கிட்டு வந்தான் மா.. நான் தான் நம்ம வீட்டுக்கு விளக்கேத்த வந்த புள்ள விளைக்கை ஊதி அணைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றார். 
அதெல்லாம் ஒன்றும் இல்லை தாத்தா என்னும் பாவனை அவளிடம். 
பின் சரண் வந்து கத்தியை எடுத்துக் கொடுக்க, ஆச்சர்யமாய் அவனைப் பார்த்தவள், மறுக்காது அவனிடம் இருந்து அதைப் பெற்று கேக்கை வெட்டியிருந்தாள்.
முதலில் சுந்தரேஸ்வரனிற்கு கொடுத்தவள் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சரணிற்கு நீட்ட, மறுக்காது அவள் கையால் வாங்கிக்கொண்டான். அதில் அகம் மகிழ்ந்து போனவள் அவனையே பார்த்திருக்க.. அக்கா தம்பி இருவரையும் அழகாய் தன் கைப்பேசியில் சேமித்துக் கொண்டிருந்தான் ஸ்வரன்.
அனைவருக்கும் கேக்கை கொடுத்த பல்லவி, ஸ்வரனிற்கு மட்டும் கொடுக்கவில்லை. அவன் அவளுக்கு கொடுத்த போது அவனை முறைத்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள். அவள் கோபம் எதற்காக என்று அறிந்த அவனும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. 
சில நொடிகளில் சுந்தரேஸ்வரன் கீழே சென்றுகொள்ள அதன்பின் பல்லவியும் அங்கிருந்து வெளியேறிக் கொள்ள, 
“சரண்..! நீ ரூம் லாக் பண்ணிட்டு தூங்கு ப்பா” என்று சரணிடம் கூறிவிட்டு பல்லவியின் பின்னால் சமாதானக் கொடியோடு சென்றான் ஸ்வரன். 
அவன் வருவதைப் பார்த்தவள் உடனே தன் நடையின் வேகத்தைக் குறைத்து படிகளில் ஒரு ஓரமாய் நின்றுகொள்ள, அவளருகில் வந்தவன்  
“அனு மா..!” என,
“எதுக்குங்க இதெல்லாம்..? சிவகாமி அம்மாவும் பல தடவ மறந்திருவாங்க.. சொல்லப் போனா எனக்கே ஞாபகம் இருக்காது என் பிறந்தநாள். நான் இதுவரைக்கும் இப்படி எல்லாம் கொண்டாடுனதும் இல்லை” என வருத்தமாய் பேச
“இதுவரை இல்லை.. இனிமேல் ஞாபகம் வெச்சுக்கத்தான் நான் இருக்கேனே” என்றான்.
“அப்படி இல்ல ஆதி. உங்களுக்கு புரியலை” என்றவள் தெளிவாய் விளக்கினாள்,
“நம்ம சந்தோசம் இன்னொருத்தரை வருத்தப்பட வைக்கக்கூடாதுன்னு நினைக்குற ஆள் நான். அப்படி இருக்கும் போது என் தம்பியையே எப்படி..? எனக்காவது பிறந்தநாள் இது தான்னு தெரியும். ஆனா அவனுக்கு அது கூட தெரியாது ஆதி. இதை எல்லாம் பார்க்கும்போது அவன் ஃபீல் பண்ண மாட்டானா..? அவன் மனசு வருத்தப் படுறமாறி நானே எப்படி நடந்துக்க முடியும்” 
அதுவரை அவர்களது உரையாடல்களை மறைவான மேற்படியில் நின்றபடி கேட்ட சரண், மேலும் அங்கிருக்க முடியாது உள்ளே சென்றுகொண்டான்.
“பனில நிக்காத அனு. உள்ள வா” என பல்லவியை அவர்களது அறைக்கு அழைத்து வந்த ஸ்வரன், கதவை சாற்றிவிட்டு வந்து 
“நான் இதெல்லாம் செஞ்சிருப்பேன்னு நினைக்குறையா அனு..?” என்று கேட்க, அவனது இந்தக் கேள்வியில் பல்லவி நிமிர்ந்து அவன் முகம் காண
“இதெல்லாம் ஏற்பாடு செஞ்சதே சரண் தான்” என்றான். 
நம்பாது பார்த்தவளிடம்,
“என்கிட்ட போன்ல பேசும்போது திடீர்னு உன் பர்த்டே எப்போன்னு கேட்டான். ஊருக்கு வந்ததும் அவன் ப்ளானை சொல்லி உனக்கு சர்ப்ரைஸ் பண்ணினது எல்லாம் அவன் தான்” என்று கூறியதும் அகம் ஆனந்தத்தில் மிதந்தாலும் 
“இதெல்லாம் என் தம்பி செஞ்சதா..! அதானே பார்த்தேன்.. இல்லைனா நீங்க அப்படியே செஞ்சிட்டாலும்..” என்றாள் ஒரு ஓரத்தில் எட்டிப் பார்த்த ஏமாற்றத்தில். 
அதில் உள்ளுக்குள் சிரித்தவன்,
“எல்லாருக்கும் கேக் கொடுத்த ஆனா கேக் செஞ்சவனுக்கு ஒன்னும் கொடுக்கல” என்றதும், கண்கள் விரியப் பார்த்தவள்
‘அது நீங்க செஞ்சதா..?’ என கண்களால் வினவ
‘ஆமாம் எப்படி இருந்தது’ என புருவம் உயர்த்தி அவனும் வினவ 
‘சூப்பர்’ என்றாள் கண்களை உருட்டி. 
‘ப்ச்..’ என கேக் கிடைக்காத ஏமாற்றத்தில் அவன் உதடு பிதுக்க.. 
தன் பிறந்தநாள் பரிசாக தன் தம்பியை தன்னிடம் திருப்பித் தந்த தன்னவனுக்கு வெறும் ப்ரூட் கேக் தருவது உகந்ததல்ல என்று அதனை விட தித்திப்பான ஒன்றை அவள் இதழ் கொண்டு அளித்திருந்தாள். 
அதன் சுவையில் சுற்றும் மறந்திருந்தான் ஸ்வரன்.
கீதமாகும்…  

Advertisement