Advertisement

ஓம் கிரிமகள் புதல்வா போற்றி!!
15
ஆதீஸ்வரனின் அகத்தினில் அளவிற்கும் அடங்காத ஆழிப்பேரலைகள் ஆர்ப்பரித்தது.! 
ஆனால் முகமோ பேரமைதியை சுமந்திருக்க.. அவன் முன் எழுந்து வந்து மண்டியிட்டு அமர்ந்த அனுபல்லவி, அவன் இருபக்கத் தொடை மீது தன்னிரு கைகளையும் ஊன்றியபடி அவன் முகம் கண்டாள். 
ஒற்றைத்துளி..!
அவள் கைமேல் விழுந்த அவனது கண்ணீர் துளி அவளுக்கு அவன் நிலையை நன்கு உணர்த்தியது.
அவன் விழிகள் சிந்திய ஒற்றைத் துளியில் அவள் இதயம் உதிரம் சிந்த, அந்நொடி எழுந்து நின்று, துடிப்பது யார் இதயம் என்று தெரியாத வகையில் அவனை தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தாள்.
கீழ் அறையில், 
சுந்தரேஸ்வரன் கூறியதில் சிவகாமியிடம் அதிர்வலைகள் எழ, அது அடங்கும் முன்னரே
“ஸ்வரன் என்னோட பேரன் இல்லைங்க சிவகாமி” என்றிருந்தார்.
அதிர்ச்சி குறையாது பார்த்திருந்த சிவகாமி,
“என்ன சொல்லுறீங்க..?” என்று வினவ,
“ஆமாம் சிவகாமி ஸ்வரன் என் பேரன் இல்லை. என் அண்ணனோட பேரன்” என்றார்.
தன்னைப் புரியாது பார்த்திருந்தவருக்கு தெளிவாய் அவரது கதையைக் கூறத் துவங்கினார் சுந்தரேஸ்வரன்.
மேல் அறையில், 
ஸ்வரன் அவள் வயிற்றில் முகம்புதைத்து அவளிடையை இறுகப் பற்றிக்கொள்ள, அவன் கேசத்தை மெல்ல வடுடிக்கொடுத்தவளின் கண்களில் ஓர் அருவிப் பெருக்கு.
நான் இருக்கிறேன் உனக்கென்று அவன் பலமுறை கூறி இருக்கிறான். ஆனால் அவளுக்கு பேசக்கூட நா எழவில்லை தற்போது. நானிருக்கிறேன் உனக்கென்று உணர்த்திக் கொண்டிருந்தாள் அவள் அணைப்பில். 
அந்நேரத்தில் தாரம் தாயாகிப்போய் அவன் அவளின் சேயாகினான்.
ஸ்வரன் பல்லவி திருமணத்தின் போது ஸ்வரனிற்கு தான் மட்டுமே உறவு என்று சுந்தரேஸ்வரன் கூறியிருந்தார். அதுபோல் தான் சிவகாமியும், பல்லவிக்கு தான் மட்டுமே என்றிருந்தார். பின்புலம் எல்லாம் இருவரும் பகிர்ந்திருக்கவில்லை. பகிரும் நேரமும் இதுவரை வரவில்லை. இப்போது அதற்கான நேரம் வந்திருக்க, இதுவரை யாரிடமும் பகிரப்படாத விடயங்களை எல்லாம் சிவகாமியிடம் பகிர்ந்துகொண்டார் சுந்தரேஸ்வரன்.
“எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருசத்துல என் மனைவி பிரசவத்துல இறந்துட்டாங்க சிவகாமி. குழந்தையும் போய் அவளும் போய் அன்னைல இருந்து நான் தனிமரம் தான். வேற கல்யாணமும் பண்ணிக்கல. விருப்பமும் இல்லை. வாழ்க்கை மேல ஒரு பற்றுதலே இல்லை. சமைக்குறதை மட்டும்தான் சகலமுமா நினச்சு வாழ்ந்துட்டு இருந்தேன்” என்றார்.
கிட்டத்தட்ட சிவகாமியைப் போல்தான் அவரது வாழ்க்கையும். துவங்கிய வேகத்தில் முடிந்துபோன அத்தியாயம். 
“என் அண்ணன் குடும்பம் தான் எனக்கு சொந்தமுன்னு சொல்லிக்க.. என் அண்ணன் போனப்பறம் ஒரு வருசத்துல நோய்வாய்ப்பட்டு அண்ணியும் தவறிட்டாங்க. அப்பெல்லாம் போதிய மருத்துவ வசதி இல்லாமையே அத்தனை உயிரும் அநியாயமா போச்சே சிவகாமி” என்றவர் சில நொடி அமைதி காத்துவிட்டு,
“எங்கள்ள மிச்சம் இருந்தது என் அண்ணன் மகன் பரமேஸ்வரன் தான். அவனுக்கு நான் தான் முன்னிருந்து கல்யாணம் பண்ணி வெச்சேன். அவன் வாழ்க்கையும் நல்லா போய்ட்டு இருந்துது நானும் ஊரு ஊரா கான்ட்ராக்ட் எடுத்து நடத்திட்டு மாசத்துக்கு ஒருமுறைன்னு அவனை பார்க்க வந்துட்டு இருந்தேன்” என்றார்.
“நீங்களும் அவங்களோடயே இருந்திருக்கலாமேங்க” என்று இடையில் குறுக்கிட்டார் சிவகாமி. 
“இல்ல சிவகாமி. அதுக சின்னஞ்சிறுசுக நம்ம எதுக்கு இடைஞ்சலா இருந்துட்டுன்னு தான் தனியா வந்துட்டேன். எனக்கு தனிமை ஒன்னும் புதுசில்லையே. நம்ம கையும் காலும் நல்லா இருக்கு உழைக்க. எனக்கும் உழைச்சுட்டே இருந்ததால தான் வாழ்க்கை உயிர்ப்பா இருந்துது. அப்படி உழைச்சும் நான் யாருக்கு தரப்போறேன்..? பரமேஸ்வரனை விட்டா எனக்கு அப்போ ஒருத்தரும் இல்லை. அவனும் நம்ம ஸ்வரன் மாறி தான் அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுவான். ஸ்வரன் பிறந்ததும் நான் தான் முதல்ல அவனை கையில வாங்குனேன். அவனுக்கு ஆசையா ஆதீஸ்வரன்னு பேரு வெச்சேன். ஸ்வரன் பொறந்ததுல அவன் அப்பனுக்கு அத்தனை சந்தோசம். தலைகால் புரியாம கொண்டாடிட்டு இருந்தான்” 
அதைச் சொல்கையில் ஸ்வரன் பிறந்த நாளின் போதிருந்த அதே மகிழ்ச்சியை சுந்தரேஸ்வரனின் முகத்தில் கண்டார் சிவகாமி. ஆனால் அதற்கு அடுத்த நொடியே அவர் முகம் நேர்மாறாக மாறத் துவங்கியது. 
“எங்க குடும்பத்துக்குன்னு என்ன சாபமோ.. பரமேஸ்வரன் நல்லா வாழ வேண்டியவன் சிவகாமி. ஆனா அவனும்..” என நா தழுதழுக்க 
“நம்ம நெனச்சு என்ன பண்ணுறதுங்க.. மேல ஒருத்தன் இருக்கான்.. அவன் நினைக்கணுமே. விதிப் பயன் யாரை விட்டது” என்றார் சிவகாமியுமே  குரல் கம்ம.
“நான் வெளியூருல இருந்த சமயம் அது. எந்த தகவலும் எனக்கு கிடைக்கல. போன் வசதியும் இல்லை. என்ன கெட்ட நேரங்காலமோ நான் ஊர் ஊரா வேலை பார்த்துட்டு பல மாசம் கழிச்சு தான் சொந்த ஊர் திரும்புனேன். ஸ்வரனுக்கு பார்த்து பார்த்து துணிமணி விளையாட்டு சாமான்னு வாங்கிட்டு வந்தப்போ தான் அந்த செய்தி கேட்டு என் தலையில இடி விழுந்த மாதிரி இருந்துது சிவகாமி. பரமேஸ்வரன் எங்களை விட்டு போனதை நினச்சு இடிஞ்சுபோய் நின்னா.. அம்பிகா அதுக்குமேல ஒரு இடியை இறக்கியிருந்தா. கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு அம்பிகா என்னென்ன கஷ்டப்பட்டாளோ.. என்ன நெனச்சு அப்படி ஒரு முடிவெடுத்தாளோ.. அந்த வீட்டை விட்டே போயிட்டா” என்றிருக்க
“அப்போ ஸ்வரன் தம்பி..?” என்று நெஞ்சம் படபடக்க கேட்டிருந்தார் சிவகாமி.
“அவனையும் அவளோட அழச்சிட்டு போயிருந்தா பரவாயில்ல.. நான் வந்தப்பறம் என்கிட்ட கொடுத்துட்டு போயிருந்தாலும் அவ முடிவுல குறுக்க நிக்காம என் பேரனை நான் கையில வாங்கியிருப்பேன். என் ஸ்வரனை ஆசிரமத்துல விட்டுட்டு போக அவளுக்கு எப்படி தான் மனசு வந்ததோ”
“அம்பிகா இப்படியுமா செஞ்சா..? ஸ்வரன் தம்பியை நீங்க எப்படிங்க கண்டுபிடிச்சீங்க” என்று கேட்டார் இன்னும் படபடப்பு குறையாது.
“அந்த ஆசரமம் நடத்துறது என் சிநேகிதன் தான். நான் எத்தனையோ தடவ எதையும் எதிர்பார்க்காம அந்த குழந்தைகளுக்காக மட்டுமே சமைச்சு போட்டிருக்கேன். ஸ்வரனை அங்க விடும்போது என் சிநேகிதன் அம்பிகாவ கவனிச்சிருக்கான். நான் ஊருக்கு வந்ததும் அவன் என்கிட்ட வந்து விசயத்தை சொன்னபின்ன தான் எனக்கே தெரிய வந்துது அம்பிகா ஸ்வரனுக்கு செஞ்ச துரோகம். அதுவரை அவனையும் கூட்டிட்டு தான் எங்கயோ போய்ட்டான்னு நினச்சிருந்தேன். நான் செஞ்ச தர்மம் தான் என் பேரனை எனக்கு திருப்பி கொடுத்திருக்கு சிவகாமி” என்று கண்கலங்க
“நீங்க வருத்தப்படதீங்க.. உடம்புக்கு எதாவது ஆகப்போகுது” என்றார் சிவகாமி.
“இனி இந்த உடம்புக்கு என்ன ஆனா என்ன சிவகாமி. வாழவேண்டிய பசங்களே போய்ட்டாங்க நான் வாழ்ந்து முடிச்ச கட்ட தானே” என்றார் விரக்தியாய். 
அதை சிவகாமியால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.
“என்ன இப்படி சொல்லுறீங்க..? அப்படி எல்லாம் பேசாதீங்க. இன்னும் நம்ம கொள்ளுப் பேரன் பேத்தியை எல்லாம் நாம தானே கூட மாட இருந்து வளர்த்திக் கொடுக்கணும்” என்றார். அதில் லேசான புன்னகை சுந்தரேஸ்வரனுக்கு.
பற்றற்ற வாழ்கையில் யரோ ஒருவர் பற்றாக இருந்து வாழ்வின் மீது பற்றை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
முதலில் ஸ்வரனின் தந்தை பரமேஸ்வரன்.. பிறகு ஸ்வரன்.. இப்போது சிவகாமி.. நாளை அவர்களது கொள்ளுப் பேரப்பிள்ளைகள் என சுந்தரேஸ்வரனின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது மேலிருப்பவனின் எண்ணம்.
சற்று தன் மனப் போரட்டங்களை கட்டுக்குள் கொண்டுவந்த ஸ்வரன், பல்லவியிடமிருந்து விலகி ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டான்.
“தண்ணி கொண்டு வரட்டுமா ஆதி” என்றாள் மெல்ல.
வேண்டாம் என்று தலையசைத்து அவள் கைப்பிடித்து தன்னருகே அமரும்படி கண்களால் காண்பித்தான். அவள் அமர்ந்ததும்
“நான் உன் மடியில கொஞ்சம் நேரம் படுத்துக்கட்டுமா அனு” என,
“ஹ்ம்ம்..” என்று அவள் தலையசைத்ததும் அவள் மடிமீது தலை வைத்து படுத்துக் கொண்டான். அவள் அவன் தலையை மெல்ல வருட சற்றுநேரம் கண்களை மூடிக்கொண்டவன், 
“இப்படி தான் அனு, அம்மா மடியில படுக்கணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன்” என்றான். சிறுவயதில் உண்டானே அதே ஏக்கம் தற்போதைய குரலிலும் இருந்தது. அதை அவளால் உணர முடிந்தது.
“அவங்க ஞாபகமா இருந்தது அந்த போட்டோ ஒன்னு தான். முதல்ல அவங்க இறந்துட்டாங்கன்னு தான் நினைச்சேன் அனு. சுந்தரேஸ்வரன் அப்பாவும் அப்படித் தான் சொன்னார் எனக்கு அம்மா இல்லைன்னு. அந்த இல்லைக்கு என்ன அர்த்தம்னு பின்னாடி தான் புரிஞ்சுது” என்றான். 
பல்லவி அவனையே தான் பார்த்திருந்தாள். 
இருந்தும் இல்லை என்பதற்கும் இல்லாது போவதற்கும் வித்தியாசம் உண்டல்லவே..! இரண்டாவதை காலம் மறக்கடிக்கும். ஆனால் முதலாவதை..? 
“அவங்களை சந்திக்காம இருந்திருந்தா நிம்மதியா இருந்திருப்பேனோ என்னவோ.. ஆனா விதி யாரை விட்டது. வெளியூர்ல திருவிழாக்கு போனப்ப அவங்களை அங்க பார்த்தேன். பார்த்ததும் என்னனு சொல்லத் தெரியல அனு. அவங்க தான் என் அம்மான்னு.. அதும் அவங்க உயிரோட இருக்காங்கன்னு தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷம்” என்றவனின் முகத்தில் அன்றைய நாளின் அதே சந்தோஷம் தென்பட்டது.  
இல்லை என்று நினைத்து ஏங்கிய ஒன்று கண்முன்னே இருக்கும்போது ஏற்படும் சந்தோஷம். தற்போது அவள் முன் இளம் வயது ஸ்வரனைத் தான் கண்டாள் பல்லவி.
“அவங்க கிட்டப் போக நெனச்சப்போ சுந்தரேஸ்வரன் அப்பா என் கையை பிடிச்சுக்கிட்டார். அவர் மேல அப்படி ஒரு கோபம் எனக்கு. என் அம்மா கிட்ட போகணும் விடுங்கன்னு கத்தனும் போல இருந்துச்சு. ஏன் எனக்கு அம்மா இல்லைன்னு சொன்னீங்கன்னு கேட்கணும் போல இருந்துச்சு.. அவர் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னார் அனு” என்றுவிட்டு அவளைப் பார்க்க, 
அவன் கண்கள் பணிக்கவில்லை.. மாறாக பணித்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் பல்லவி. 
“அது உன் அம்மா இல்லை ஸ்வரன்னு சொன்னார்” என்றான் ஒருமுறை கண்களை அழுந்த மூடித்திறந்து.
“அவங்களுக்கு இன்னொரு குடும்பம் இருந்தது அனு. அவங்களுக்கு இன்னொரு பையனும் இருந்தான். சுந்தரேஸ்வரன் அப்பா சொன்னமாதிரி அவங்க என் அம்மா இல்லை அனு. அவங்க அப்போ இன்னொருத்தர் மனைவி” என்றான் அத்தனை வலியோடு.
ஒரு மகன் தன் தாயை அடையாளப்படுத்தும் முறையா இது..? கேட்கும் தனக்கே இப்படி வலித்தால் அதைச் சொல்லும்போது அவனுக்கு எப்படி வலித்திருக்கும் என்று நினைத்து அவனையே பார்த்திருந்தாள் பல்லவி. 
“தூரத்தில இருந்து அவங்களையே பார்த்தேன். எனக்கு கிடைக்க வேண்டிய பாசம் எல்லாம் அவங்க இன்னொரு பையனுக்கு கிடைச்சிட்டு இருந்துது. அவங்களும் அவங்க குடும்பத்தோட ரொம்ப சந்தோசமா இருந்தாங்க. அதுக்கு மேலயும் அங்க இருக்க முடியாம நான் கிளம்ப நினைச்ச கொஞ்ச நேரத்துல.. அவங்க என்னை பார்த்துட்டாங்க அனு” என்று நிறுத்தி அவளைப் பார்த்தபடியே,
“மனசுல ஒரு ஓரத்துல ஒருவேள என்னை அவங்களுக்கு அடையாளம் தெரிஞ்சா என்னைத் தேடி வருவாங்களான்னு பார்த்திருந்தேன்” என்றவனின் கண்களில் தற்போதும் ஒரு எதிர்பார்ப்பு தென்பட்டது.
வேண்டாம் இது ஏமாற்றத்தில் தான் முடிந்ததென்று தெரிந்தும் அதை தெரிவித்து வருந்தாதே என தன் மென்கரம் கொண்டு அவனை வாயைப் மூடினாள் பல்லவி.
தலையை இடவலமாய் அசைத்தவன் அவள் கரத்தை மெல்ல விலக்கி, தன்னிரு கைகளுக்குள் சிறைவைத்துக் கொண்டு,
“என்னைப் பார்த்ததும் பாசம் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா சுந்தரேஸ்வரன் அப்பாவோட என்னைப் பார்த்ததும் அவங்க கண்ணுல பயம் தான் வந்தது. உடனே அங்கிருந்து கிளம்பிப் போய்ட்டாங்க அனு” என்றான் வேதனையோடு. 
பாசம் கொண்டு பார்க்க வேண்டிய விழிகளில் பயம் எதற்கு..? அதை ஏற்றுகொள்ளவே முடியவில்லை அவனால்.
“வீட்டுக்கு வர்ற வரைக்கும் ஒரு வார்த்தை பேசல நான். வந்ததும் சுந்தரேஸ்வரன் அப்பா கிட்ட நடந்ததை எல்லாம் ஒன்னுவிடாம சொல்லச் சொன்னேன். அவர் சொன்ன விஷயம் என் நெஞ்சுல ஈட்டியைப் பாய்சுனது போல இருந்துது அனு” என்றவன் அவளிடமிருந்து மெல்ல எழுந்தமர்ந்து
“அந்த வலியை விட, உங்க அம்மா உன்னை விட்டுட்டு ஓடிப் போய்டான்னு ஒருசிலர் சொல்லும் போது அப்படி கோபம் வரும். அந்த வார்த்தையை கேட்டாவே நான் என் கண்ட்ரோல்ல இருக்க மாட்டேன்” என்றான் கண்களை இறுக மூடிக்கொண்டு தன் இரு கை விரல்களையும் இறுக மடித்தபடி.  
இதே வார்த்தையை தான் அவனோடு வண்டியில் வரும்போது தானும் ஒருமுறை கூறி இருக்கிறோம் என்று பல்லவிக்கு நினைவு வந்தது. அந்த வார்த்தைகளை பிரயோகப் படுத்தியதற்கு தன்னையே கடிந்துகொண்டாள்.
“அப்போ முடிவு பண்ணுனேன் அனு. எனக்கு சுந்தரேஸ்வரன் அப்பா மட்டும் தான்னு. அவரு உட்கார வேண்டிய வயசிலையும் எனக்காக ஓடி ஓடி உழைச்சாரு. என்னை படிக்க வெச்சாரு. இன்னிவரை எனக்காகவே வாழ்ந்திட்டு இருக்காரு. அவருக்காக அவரோட கேட்டரிங் பிஸ்னசையே எடுத்துப் பண்ணுனேன். இந்த வீட்டை மாத்தி பெருசா கட்டுனேன் தொழிலை முன்னுக்கு கொண்டு வந்தேன். அவரை நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன்” என்றான். 
பல்லவிக்கு அவனை எண்ணி பெருமையாய் இருந்தது. அவளும் அப்படித்தானே தன்னைத் தூக்கி வளர்த்திய சிவகாமிக்காக எதையும் செய்பவள் ஆயிற்றே. 
“என்னதான் அவங்கமேல வெறுப்பு இருந்தாலும் அவங்க ரோட்ல தனியா உக்காந்து அழுதுட்டு இருந்ததை பார்த்துட்டு என்னால அவங்களை அவ்வளவு சுலபமா கடந்து போகமுடியல அனு. அதான் அவங்களுக்கு தெரியாம வீடு பார்த்து கொடுத்து அவங்க செலவுகளையும் நானே கவனிச்சிட்டு வர்றேன். அவங்க கடமை தவறி இருந்தாலும் என்னால அப்படி இருக்க முடியலை. நான் என் கடமையை சரியா செய்யணும்னு நெனச்சேன்” என்றான்.
எப்படிப்பட்டவன் இந்த ஆதீஸ்வரன்.. இவனை தவற விட்டதற்கு அவன் அன்னை தான் வருத்தப்பட வேண்டும்.. அதான் இப்போதே பெரிதாய் பட்டுக் கொண்டிருகிறாரே என நினைத்து அவனையே பார்த்திருந்தாள் பல்லவி. 
“அன்னிக்கு நீ அடிச்சதை கூட நான் பெருசா எடுத்துக்கலை அனு. அதுக்கு அப்பறம் சொன்னயே ஒரு வார்த்தை.. வளர்ப்பு சரியில்லைன்னு அது தான் என்னை யோசிக்கமா கை நீட்ட வெச்சுது” என்றான்.
அவள் அடித்ததை விட அவள் கூறிய வார்த்தைகள் தான் அவனை கட்டுப்பாடிழக்கச் செய்து அறைய வைத்திருக்கிறது என்று தெரிந்ததும்.. அதுவரை மெத்தையில் அமர்ந்திருந்த பல்லவி திடீரென்று மண்டியிட்டு கீழே அமர்ந்து
“என்ன மன்னிச்சிருங்க ஆதி. நான் எதோ தப்பா நினச்சு தான் அன்னிக்கு அப்படி பேசிட்டேன். அம் ரியல்லி சாரி” என்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டாள்.
“அனு..! என்ன பண்ணற” எனப் பதறியவன் அவளை எழுப்ப முயல
“நான் இதுவரைக்கும் நிறைய தப்பு பண்ணிட்டேன் ஆதி.. என்னை மன்னிச்சுட்டேன்னு சொன்னா தான் காலை விடுவேன்” என இன்னும் கெட்டியாய் பிடித்துக் கொண்டாள். 
“ப்ச்.. அனு..! அப்படிப் பார்த்தா நானும் தான் செஞ்சிருக்கேன். தவறு செய்யுறது மனித இயல்பு தானே. நீ முதல்ல எழுந்திரு..” 
“மாட்டேன். நீங்க முதல்ல என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க ஆதி.. சீக்கிரம் சொல்லுங்க” என அவனை நகர விடாது பிடித்துக் கொண்டாள்.

Advertisement