Advertisement

அவள் அமைதியாய் இருக்க,
“கோபம்.. யோசிக்குற சக்தியையே நம்ம கிட்ட இருந்து பறிச்சிடுது. அது அந்த ஒருநொடி நிகழ்வு தான். தெரிஞ்சே யாரும் செய்யுறதில்ல. அந்த ஒருநொடி நம்ம கட்டுப்பாட்டை இழந்திடுறோம். ஆனா தெளிவானதும், நம்ம நடந்துகிட்ட விதத்தை நினைச்சு ஒவ்வொரு நொடியும் வருந்துவோம். உன்னை முதல் முறையா சந்திக்கும்போது நான் அடிச்சதும் அப்படித்தான். இன்னுமே அதை நினச்சு நான் வருந்திட்டு தான் இருக்கேன்” என்று அவளைப் பார்க்க, அவளும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.
“சரி சொல்லு அனு. உனக்கு என்கிட்ட இருந்து என்ன தெரியணும்” என்றான்.
“அம்பிகா அத்தை மேல அப்படி என்ன வெறுப்பு உங்களுக்கு” என்றிருந்தாள். 
அவளுக்கும் தற்போதைய நிலையில் தொடர்ந்து பேச விருப்பம் இல்லை தான். இருந்தாலும் மற்றுமொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க விரும்பாது விரைவில் தீர்வு காண விழைந்தாள்.
“உனக்கு அவங்களை பத்தி என்ன தெரியும் அதை முதல்ல சொல்லு” என்றான். 
பல்லவி தன் மனதில் பல விசயங்களை ஏற்றிக்கொண்டு அவன் மீது தவறிருப்பதாய் எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் பேசும்போதே தெரிந்துகொண்டான். அவள் மனதில் நிறைந்திருக்கும் கோப்பையை காலி செய்தால் தான் அவன் சொல்லப்போகும் விடயங்கள் அதனுள் செல்லும். அதை விட்டுவிட்டு என்ன தான் தன் பக்கத்தைக் கூறினாலும் கோப்பை நிரம்பி வழிந்துகொண்டு தான் இருக்கும்.
“நம்ம முதல் தடவை கோவில் போனோமே.. அப்போ நீங்களும் அவங்களும் நடந்துகிட்ட விதத்தை வெச்சு உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சிக்க நினச்சேன். அப்போவே தாத்தா கிட்ட கேட்டேன். அவரு அப்படி யாரும் நமக்கு சொந்தம் இல்லைன்னு சொல்லிட்டாரு” என்றாள்.
மேலே சொல் என்பதுபோல் அவன் பார்த்திருக்க,
“அதுவரை நல்லா இருந்த தாத்தா முகம் லேசா மாறிடுச்சு. அவர் எதையோ மறைக்குற மாதிரி இருந்துது. நானும் வற்புறுத்தல. நானே தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுனேன். எனக்கும் ஒரு கெஸ் இருந்துது. நம்ம வீட்டுல பழைய போட்டோஸ் எதாவது கிடைக்குமான்னு தேடித் பார்த்தேன். ஒரே ஒரு போட்டோ தான் இருந்தது” என்றாள்.
“…..”
“அது உங்க அப்பா அம்மா கல்யாண போட்டோ. ரெண்டு பேருக்குமே ரொம்ப சின்ன வயசு. அது அம்பிகா அத்தை மாதிரி தான் இருந்துது அவ்வளவா என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியலை. அவங்களை சந்திக்கும்போது அவங்ககிட்ட கேட்கலாம்னு என் போன்ல ஒரு போட்டோ மட்டும் எடுத்து வெச்சுகிட்டேன்” 
“சோ.. அதை தெரிஞ்சுக்க தான் கோவில்ல அவங்களை சந்திச்சு பேசுனையா” 
“உடனே இல்ல. நம்ம பிரச்சனை போய்ட்டு இருந்ததுல கொஞ்ச நாள் அவங்களை மறந்துட்டேன். அகைன் உங்களோட கோவில் போகும்போது தான் அவங்களை திரும்பவும் மீட் பண்ணுனேன். நீங்க பிரசாதம் வாங்க போன நேரத்துல நாங்க பேசிட்டு இருந்தோம்” என்றாள் உண்மையை மறைக்காது.
“நான் வர்றதை பார்த்துட்டு தான் அவங்ககிட்ட குரலை உயர்த்தி பேசிட்டு இருந்திருக்க.. சாரி, அப்படி நடிச்சிட்டு இருந்திருக்க ரைட்..?” என்றான் சரியாய். 
பல்லவிக்கு தன் முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக் கொள்ளவது என்றே தெரியவில்லை. அவளை முழுதாய் படித்து வைத்திருப்பவனிடம் அவளுக்கான ரகசியங்கள் என்று எதுவுமே இல்லாதிருக்க, இத்தனை நாள் இவள் எதை காப்பாத்த நினைத்தாள் என்றே ஒன்றும் புரியவில்லை.
“ஏன் என்கிட்ட இதை பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கல..?” என்றாள் மெல்ல.
“நீயா சொல்லும்போது சொல்லட்டும்னு தான்” என்றான் வழமைபோல்.
அனைத்தையும் அறிந்து வைத்துக்கொண்டு எப்படி தன் மீது இவ்வளவு அன்பாய் இருக்கிறான் என்றெண்ணி வியந்தாள். இவன் கிடைக்க தான் போன ஜென்மத்தில் தண்ணீரில் நின்று தவம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
“ஆனா உண்மை தெரிஞ்சதும் நீயும் ஒதுங்கி வருவைன்னு நினச்சேன். அவங்களோட ஒட்ட நினைப்பைன்னு எதிர் பார்க்கலை அனு” என்றிருந்தான் சிறு ஏமாற்றத்தோடு.
“உங்க அம்மான்னு தெரிஞ்சும் என்னால எப்படி அவங்களை விட முடியும்” என்றுவிட்டு அவனைப் பார்த்தாள். 
ஒட்ட நினைப்பதே உனக்காகத் தான் என்று புரியவைக்க முயற்சித்தாள். அவன் ஒரு பெருமூச்சோடு திரும்பிக் கொள்ள,
“அவங்க நிஜமாவே பாவம் ஆதி. உங்களை விட்டா அவங்களுக்கு யாரும் இல்லை…” என்று துவங்கியவள் கோவிலில் அவர்களுக்குள் நடந்த உரையாடலை அவன் முன் வைத்தாள்.
“நீ ஒருநாள் ஆச்சும் இங்க வர மாட்டியான்னு நான் ஒவ்வொரு நாளும் இங்க வந்து காத்திருக்கேன்” என அம்பிகா கூறியதும் பல்லவிக்கு விவரிக்க முடியா ஒரு உணர்வு உள்ளுக்குள் ஓங்கியது.
“எ… எனக்காக எதுக்கு காத்திருக்கீங்க”
“எதையும் எதிர்பார்த்து நான் காத்திருக்கல மா.. உங்களை பார்க்கணும் போல இருந்துது. தூரத்துல இருந்தாவது பார்த்துட்டு போனா மனசுக்கு ஆறுதலா இருக்குமேன்னு தான் தினமும் வருவேன். ஆனா உன்ன பார்த்ததும் தூரமாவும் என்னால இருக்க முடியாம தான் கிட்ட வந்திடுறேன்” 
உடனே போட்டோ நினைவில் வர,
“இது நீங்களா பார்த்து சொல்லுங்க” என பல்லவி அவள் கைப்பேசியில் அந்த புகைப்படத்தைக் காட்ட, அதைப் பார்த்து ஒரு நொடி திகைத்தவர் பின் மெல்ல ஆம் என்று தலையசைத்தார். இப்போது திகைப்பது பல்லவியின் முறையானது.
“அவரோட அம்மாவா நீங்க..?”
“அப்படி சொல்ற அருகதையை நான் எப்போவோ இழந்துட்டேன் மா” 
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்களேன்”
“ஸ்வரன் அப்பா எங்களை விட்டுப் போகைல அவன் எட்டு மாசக் கைக்குழந்தை. எனக்கும் பத்தொன்பது வயசு தான். தெளிவான சிந்தனைகள் இல்ல. சாப்பாட்டுக்கு வழியில்லை. வேலையும் இல்ல. அப்போ புருஷோத்தமன்னு ஒருத்தர் என்னை கல்யாணம் செய்துக்குறதா விருப்பம் தெரிவிச்சப்போ நானும் உடனே மறுமணம் செஞ்சுகிட்டேன்” என்றார்.
“நல்ல விஷயம் தானே.. உங்களுக்குன்னு ஒரு குடும்பம் அமைஞ்சிருக்கும். ஆதிக்கு நீங்க கல்யாணம் செய்துகிட்டவரை பிடிக்கலையா அதான் அவரை அப்பாவா ஏத்துக்க முடியாம பிரிஞ்சு வந்துட்டாரா..?” என்றாள் பல்லவி.
“இல்லை மா. நான் தான் அவனை விட்டுட்டுப் போய்டேன்” என்றதில் பல்லவி பெரிதாய் அதிர்ந்து போனாள்.
“என்னோட விருப்பம் மட்டுமே எனக்கு பெருசா பட்டுது. புருஷோத்தமனும் என்னை மட்டுமே ஏத்துக்கிட்டார். என் வாழ்கையை மட்டுமே பார்த்த நான், நான் சுமந்தவனோட வாழ்க்கையை பத்தி கொஞ்சமும் யோசிக்கலை. அவனை ஆதரவற்றோர் இல்லத்துல விட்டுட்டு போய்டேன்” என்றதில் பல்லவிக்கு அவர் மீது அத்தனை ஆத்திரம். 
அதை காண்பிக்காது அமர்ந்திருந்தாள். அவள் சிந்தனை எல்லாம் ஸ்வரனை சுற்றியே. எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருப்பானோ என நினைக்க அவள் இதயம் கனத்தது.
“புருஷோத்தமனுக்கு திருமணமாகி ஒரு பையன் இருந்தான். மனைவி தவறிட்டாங்க. அவருக்கும் இது மறுமணம் தான். இருந்தும் என்னை நல்லா பார்த்துக்கிட்டாரு. எந்தக் குறையும் வெச்சதில்ல. அவரோட மகனை என் மகனா எடுத்து வளர்த்துனேன். எனக்கு கிடச்ச வாழ்கையை சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தேன். 
ஒரு ஓரத்துல என் மகனுக்கு செஞ்ச துரோகம் மட்டும் உறுத்திகிட்டே இருந்துது. நாளடைவுல அவனுக்காக ரொம்பவே ஏக்கம் வந்துச்சு. புருஷோத்தமன் கிட்ட பேசி திரும்ப அவனையும் என்னோட அழைச்சிட்டு போக வந்தேன். என் மகன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியாத தூரத்துக்கு அவன் போய்ட்டான். யாரோட இருக்கான் யார் அழச்சிட்டு போனாங்கன்னு எதுவும் தெரியலை” என்றார் கண்களை துடைத்துக் கொண்டே.
பல்லவி குறுக்கிடாது கேட்டுக் கொண்டிருந்தாள். வேறு யாராவதாய் இருந்திருந்தால் இந்நேரம் இதயத்தைக் கூறு போடும் அளவில் கூரிய வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும் அவளிடம் இருந்து. ஸ்வரனின் அன்னை என்று தெரிந்தபின் எதுவும் பேச முடியவில்லை அவளால்.
“அப்பறம் தான் அவன் தாத்தா அழச்சிட்டு போய்ட்டார்னு தெரிஞ்சுது” என்று அம்பிகா கூற,
“உடனே நீங்களும் இனி பிரச்சனை இல்லைன்னு திரும்ப உங்க வாழ்க்கையை பார்க்க போய்ட்டீங்களா” என்றாள் அவளையும் மீறி.
“பாவம் தான் மா.. பெரிய பாவம் தான். அதுக்கு இந்த ஜென்மத்துல எனக்கு மன்னிப்பு கிடையாது. மன்னிப்பும் எனக்கு வேண்டாம். இப்போ தனிமைல நான் அனுபவிக்குற தண்டனையும் போதாது எனக்கு” என முகத்தை மூடி அழ, அவர் தோலை ஆதரவாய் பற்றினாள் பல்லவி. தன்னை சமாளித்துக் கொண்டு நிமிர்ந்தவர்
“விவரம் வந்ததும் நான் அவன் அம்மா இல்லைன்னு தெரிஞ்சதும் நான் எடுத்து வளர்த்த பையனும் என்னை வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சான். அவரோட சொந்த பந்தம் எல்லாம் அவரு இருக்கும் போது ஒரு மாதிரியும் அவரு இல்லாத போது வேற மாதிரியும் நடத்துவாங்க. எல்லார்த்தையும் சகிச்சிட்டு வாழ்ந்தேன் அவருக்காகவும் பையனுக்காகவும். ஆனா அவன் ஆறு வருசத்துக்கு முன்னாடி அவங்க அப்பாவை மட்டும் அழச்சிட்டு வெளிநாடு போய்ட்டான்” 
“அதுவரை எனக்கு ஆதரவா இருந்தவரு என்னை விட்டுட்டு அவரு மகன் பின்னாடி போய்ட்டாரு. அப்போ தான் மறுபடியும் தனிமையை உணர்ந்தேன். ஆறு மாசத்துல வந்திடறேன்னு நம்பிக்கை கொடுத்துட்டு போனவரு அதுக்கு அப்பறம் வரவே இல்லை. மொத்தமா இந்த உலகத்தை விட்டே போய்ட்டாரு” 
“கடைசில அவரை கண்ணுல கூட பார்க்க முடியலை. அங்கேயே அவன் எல்லார்த்தையும் செஞ்சு முடிச்சிட்டான். அவரு கூட இருக்குற வரைக்கும் தன் சுயரூபத்தை காட்டாத அவரோட உறவுகள் எல்லாம் அவரு போனப்பறோம் என்னை சொத்துக்காக துரத்த ஆரம்பிச்சாங்க. எல்லார்த்தையும் நான் வளர்துனவன் பெயர்ல எழுதி வெச்சுட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன். திரும்பவும் தனியா முதல்ல இருந்து என் வாழ்க்கையை துவங்க வேண்டிய நிலை” என்று தன் நினைவுகளில் கரைந்து கொண்டிருந்தார்.
“இப்போ எங்க இருக்கீங்க..? இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க” என்றாள் பல்லவி. 
“தெருவுல தான் மா.. நான் இருந்த நிலைமையைப் பார்த்து எனக்கு தங்க இடம் கொடுத்து அதுக்கு வீட்டு வாடகையும் வாங்காம, எனக்கு ஒரு வேலையும் போட்டுக் கொடுத்து ஒரு அம்மா தான் பார்த்துக்குறாங்க. அவங்க மட்டும் இல்லைன்னா எனக்கு போகறதுக்கு இடம் இருந்திருக்காது மா” என்று சொல்ல, பல்லவிக்கு அது ஸ்வரனின் ஏற்பாடாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது.
“எனக்கு வேற எந்த ஆசையும் இல்ல மா. அவன்கிட்ட ஒருமுறை மன்னிப்பு கேட்கணும் என்னை நிச்சயம் மன்னிக்க மாட்டான். முடிஞ்சா என்னை ஒருமுறை அம்மான்னு கூப்பிட சொல்லணும். நான் நிம்மதியா என் வாழ்க்கை பயணத்தை முடிச்சுக்குவேன். அதுக்கும் கொடுத்து வைக்கலைன்னா ஸ்வரன் சந்தோசமா இருக்குறதை பார்த்துட்டே போய்டணும் அவ்வளவு தான் ஆசை” என விரக்தியாய் பேச 
“அத்தை…!” என அழைத்திருந்தாள் பல்லவி. 
அதுவரை அழைக்கவில்லை ஆனால் அப்போது அழைத்துவிட்டாள் தன்னையும் மீறி. அதில் அம்பிகாவின் முகம் கொஞ்சம் மகிழ்ச்சியை வெளிபடுத்தியது.
“உங்களை அவரோட சேர்த்து வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றிருந்தாள்.
“ஒரு வேகத்துல வாக்கு கொடுக்காத மா.. என் மனசுல நம்பிக்கையை வளர்த்து அது நடக்காம போனா அந்த ஏமாற்றத்தை தாங்கிக்க இனியும் எனக்கு சக்தி கிடையாது”
“நான் நல்லா யோசிச்சு தான் சொல்லுறேன். என்னை நம்புங்க” என்று அவர் கையை அழுந்தப் பற்றினாள் பல்லவி. அம்பிகாவிற்கு அந்நொடி தான் ஒரு உயிர்ப்பு வந்தது.
“சாரி பல்லவி. இதுதான் நீ அவங்களுக்கு கொடுத்த வாக்குனா அது இந்த ஜென்மத்துல நிறைவேறாது” என்ற ஸ்வரனின் குரலில் தன் சிந்தனை கலைந்தவள் அவனை ஆழமாய் பார்த்தாள். 
“நீங்க தானே அவங்களுக்கு வீடு பார்த்து வேலையும் பார்த்து கொடுத்தது..?” என்று கேட்க, அவள் கேள்வியை எதிர்பாராது ஸ்வரன் திகைத்தான்.
“உங்களுக்கு பாசம் இல்லாமையா இதெல்லாம் செஞ்சிருக்கீங்க..? அவங்க எப்படியோ போகட்டும்ன்னு விட்டிருக்கலாமே. அவங்களுக்கு தெரியாம அவங்களை ஏன் பாதுகாக்குறீங்க” என்றாள். 
ஸ்வரன் பேச்சற்று அமர்ந்திருந்தான்.
சுரேகாவை தயார் படுத்தி அனுப்பிவிட்டு அவர் இல்லம் வந்த சிவகாமி உள்ளே நுழைந்து விளக்கைப் போட, தூங்காது விழித்திருந்த சுந்தரேஸ்வரனைக் கண்டார். 
நேரத்தைப் பார்க்க மணி பத்தரை எனக் காட்டியது. அவர் வந்தது கூடத் தெரியாது சிந்தனையில் இருந்தார் சுந்தரேஸ்வரன்.
“நீங்க இன்னும் தூங்கலையா..?” என்றபடி அவர் அருகில் வர, சிவகாமியை நிமிர்ந்து பார்த்தவர் இல்லை என தலையசைத்தார்.
“என்ன ஒரு மாதிரி இருக்கீங்க எதாவது பிரச்சனையா” என்று கேட்கவும் ஆமாம் என்று தலையசைத்தார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க. இப்படி மனசுல வெச்சு குழப்பிட்டு தூக்கத்தை கெடுத்துக்காதீங்க” என, மெல்ல எழுந்தவர் நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டு
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் சிவகாமி” என 
“சொல்லுங்க” என அவரும் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அருகில் அமர்ந்துகொண்டார்.
“ஸ்வரனுக்கு என்னை விட்டா யாரும் இல்லைன்னு உங்ககிட்ட சொல்லி இருந்தேனே”
“அதுதானே உண்மை”
“இல்ல சிவகாமி. நான் உங்ககிட்ட ஒரு விசயத்தை மறைச்சிட்டேன்” என, அவரை புரியாது பார்த்திருந்தார். 
“ஸ்வரனுக்கு அவன் அம்மா அம்பிகா இருக்கா” என்றதும் சிவகாமியிடம் மெல்ல எழுந்தது அதிர்வலைகள்.
 கீதமாகும்…..

Advertisement