Advertisement

ஓம் கார்த்திகேயா போற்றி!!
14
அந்தி வான வண்ணப் பட்டுடுத்தி, அங்கத்தில் அழகிய ஆபரணங்கள் பூட்டி, அளவான ஒப்பனைகளோடு அலங்காரப் பூஷிதையாய் காட்சிகொடுத்தாள் சுரேகா.
கல்யாணப் பெண்ணிற்கே உரிய கலையான முகத்தோடு, இன்னும் சற்று நேரத்தில் தன் சகலமும் ஆகப் போகிறவனின் கைப்பற்றி திருமணச் சடங்குகளில் ஈடுபட்டிருந்தாள். 
மணமக்கள் இருவரும் அன்யோன்யமாய் சடங்குகளில் ஈடுபட்டு, இனிமையாய் பேசி சிரித்து, அவர்களது அழகிய மணநாளுக்கு கூடுதல் அழகு சேர்த்து, அதை அவரவர் மனதில் சேமித்துக் கொண்டிருக்க.. அவர்களை சத்தமில்லாது சேமித்துக் கொண்டிருந்தது கேமெராமேனின் கேமெரா.
மணமக்களையே இமைக்காது பார்த்தபடி இருந்தாள் பல்லவி.
எப்படியான நாள் இது..! அகமெங்கிலும் ஆனந்தம் மட்டுமே நிறைந்து, புறமெங்கிலும் இருப்போரை எல்லாம் புறக்கணித்து, தனித் தீவில் தானும் தனது வாழ்க்கைத் துணையும் மட்டுமே உலா வருவதாய் எண்ணிக் களித்து இன்புற வேண்டிய நாள். 
நாம் எப்படி இருந்தோம்..? என்று யோசித்தவளுக்கு அவள் திருமணத்தின் போது ஸ்வரனைப் படுத்திய பாடு நினைவில் வர, கண்கள் இப்போது அவசரமாய் அவளவனைத் தேடியது.
ஓரிடத்தில் நில்லாது சுழன்று கொண்டிருந்தான் தன் உடன் பிறவா தங்கையின் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த ஸ்வரன். அவன் செல்லும் திசையெல்லாம் உடன் பயணித்தது பல்லவியின் விழிகள். 
தான் செய்ததை எல்லாம் தாங்கிக்கொண்டு, தன்னையும் தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு மனதில் தாஜ் மஹால் எழுப்பிக் கொண்டிருந்தாள்.
அதை உணர்ந்தானோ என்னவோ ஓர் நொடி நின்று மணமேடையைக் கண்டவன், பல்லவியின் பார்வையை அறிந்து அதரங்களில் அரும்பிய புன்னகயுடன் அங்கிருந்தபடியே பறக்கும் முத்தத்தை பறக்க விட, வேகமாய் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
சிவகாமியும் சுந்தரேஸ்வரனும் முன்வரிசையில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் முகூர்த்த நேரம் கூடிவந்தது. அனைவரிடமும் ஆசிபெற்று வர அர்ச்சதைத் தட்டை எடுத்துவந்தாள் பல்லவி. பந்தி போடும் இடத்தில அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்த ஸ்வரன், அதை முடித்துவிட்டு நேரத்தை உணர்ந்து மேடைக்கு அருகே வந்துகொண்டான்.
ஒவ்வொருவரிடமும் தட்டை நீட்டியபடியே வந்தாள் பல்லவி. அவ்விருக்கையில் அமர்ந்த பெண்மணி ஒருவர் அர்ச்சதை எடுக்க கையை நீட்டியதில் அவர் வளையல்களைப் பார்த்தவள் உடனே அவர் முகத்தைப் பார்க்க.. இருவரிடமும் அழகிய புன்னகை. 
பின் லேசான தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்துகொண்டவள் ஐயரிடம் அதை ஒப்படைத்துவிட்டு ஸ்வரன் அருகில் வந்து அமைதியாய் நின்றுகொண்டாள்.
பல்லவியின் பார்வை மட்டும் நொடிக்கு ஒருமுறை கூட்டத்தை ஊடுருவிச் சென்று அதன் மையத்தில் அமர்ந்திருந்த பெண்மணியை தொட்டு மீண்டது. மனதிலும் ஒரு சில யோசனைகள் வந்து போக,
“என்ன யோசனை அனு” என்று ஸ்வரன் சரியாக அவள் மனம் படிக்க,
“அது.. அது நான் நம்ம கல்யாணத்தப்போ நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டேன் ஆதி. அதை நினச்சேன்” என்றாள்.
“உனக்கு தான் சிங்கம் சிறுத்தைன்னு பன்ச் டயலாக் பேசவே நேரம் சரியா இருந்துதே. அப்பறம் எங்க போய்..? ஆனா நீ ஒரு புலி வேஷம் போட்ட பூனைன்னு எனக்கு அப்போவே தெரியும்” என்று சொல்லி அவளிடம் கிள்ளுகளைப் பெற்றுக் கொள்ள, அவனைக் கிள்ளிவிட்டு திரும்பிய பல்லவியோ சிவகாமியின் முறைப்பில் அமைதியாய் நின்றுகொண்டாள்.
“மியாவ்…” என்று ஸ்வரன் அவளை மேலும் வம்பிழுக்க, பல்லவி பாய்வதற்குள் அங்கு ஒலித்த ஐயரின் குரலில் இருவரின் பார்வையும் மேடையைத் தழுவியது. 
மங்கள இசை முழங்க மங்கள நாணை தன் சங்குக் கழுத்தில் வாங்கியிருந்தாள் சுரேகா. 
சுரேகா, திருமதி சுரேகாவானதில் பல்லவிக்கு அதீத மகிழ்ச்சி. விழியோரம் துளி நீர் எட்டிப் பார்க்க, தன் தோழியை இமைக்காது பார்த்திருந்தாள். சடங்குகள் முடிந்ததும் அவளருகில் சென்று அவளை ஆரத்தழுவிக் கொண்டாள். 
ஸ்வரன் மாப்பிளைக்கு தன் வாழ்த்துகளைத் தெரிவித்து அவர்கள் இருவருக்கும் வாங்கி வைத்திருந்த தங்க மோதிரத்தை அளிக்க
“எதுக்கு பல்லவி இதெல்லாம்” என்ற சுரேகாவை செல்லமாய் முறைத்தவள்
“நான் கூட இவளுக்கு எதுக்கு இதெல்லாம்னு கேட்டேன் ரேகா, உங்க அண்ணன் தான் அவரு தொங்கச்சிக்கு வாங்கியே ஆகணும்ன்னு வாங்கினார்” என்றதும் அவளை செல்லமாய் அடித்த சுரேகா,
“பார்த்து பல்லவி. உங்களை ஜோடி சேர்த்ததே நான் தான் அதை மறந்துடாத” என்றாள் போலியாய் எச்சரித்தபடி. அதில் ஸ்வரனும் பல்லவியும் இணைந்து புன்னகைத்தனர். 
“நீதான் இவங்களுக்கு மேரேஜ் பண்ணி வெச்சியா..? இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்லையே ரேக்ஸ்” என்று சுரேகாவிடம் அவள் சரிபாதி கேட்க
“நான் இதுமாதிரி நிறைய பண்ணிருக்கேங்க. என் சாகசங்களை எல்லாம் இனி உங்ககிட்ட தானே சொல்லப் போறேன். ஒன்னொன்னா சொல்றேன் ஒரே அடியா சொன்னா நீங்க ஓடிட மாட்டீங்க”  என்று சுரேகா சொல்ல, அங்கு பல்லவியைத் தவிர மற்றவர்களிடம் எழுந்தது சிரிப்பலைகள். 
பல்லவிக்கு மட்டும் சிந்தனை அலைகள். அவள் பார்வை கூட்டத்தில் இருந்தவரை காணாது அங்கும் இங்கும் தேடியது.
அதன்பின் மேடையிலேயே மணமக்களை மோதிரம் மாற்ற வைத்து அழகு பார்க்க,
“சார்.. மேடம்.. போஸ்..” என்ற குரலில் நால்வரும் சேர்ந்து நிற்க, அவர்களை அழகாய் படம்பிடித்தது கேமெரா.
நேரம் அப்படியே நகர, பந்தி பரிமாறப் பட்டது. நளன் கேட்டரிங் சர்விஸ் ஆட்கள் அனைத்தையும் சிறப்பாய் கவனித்துக் கொள்ள, வந்திருந்தோர் அனைவரும் மெனுவில் இருந்த அனைத்து உணவு வகைகளை வெகுவாய் பாராட்டி, செல்லும்போது ஸ்வரனையும் சந்தித்து மறக்காது விசிடிங் கார்டையும் பெற்றுச் சென்றனர். 
அதுவரை அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது ஸ்வரனிற்கு. அவரைக் காணும் வரை. அப்போது தான் அவரைக் கண்டான். 
அந்நொடியே கட்டுப் படுத்த முடியாத அளவில் உணர்ச்சிப் பெருக்கு அவனுள். கோபமா ஆதங்கமா வெறுப்பா வேதனையா என்ன ஓடுகிறது என்று தெரியவில்லை ஆனால் துளியும் உவப்பில்லை.
அவர் அவனருகே வர, அவன் அங்கிருந்து நகரச்செல்ல
“ஸ்வரன்…” அழைத்திருந்தார் அவனை.
அதில் ஓர் நொடி நின்றவன், மெல்லத் திரும்பினான் அவர் புறம்.
“நான் உன்கிட்ட பேசணும் ப்பா” என்றார் தவிப்பில். 
ஆம் தவிப்பு தான் அத்தாயுள்ளத்தில். தன்னிடம் ஒரு வார்த்தை பேசிவிட மாட்டானா தன் தனயன் என்று தவிக்காத நாளில்லை. 
அவரது தவிப்பு துளியும் வேலை செய்யவில்லை அவர் பெற்றவனிடத்தில்.
“உங்களை யார் இங்க வரச் சொன்னது” என்றிருந்தான். 
அவனது வார்த்தையில் நெஞ்சம் வலிக்க அவ்வலி விழிவழி வெளிப்பட்டது அவருக்கு. 
“நான் தான்” என்ற குரலில் ஸ்வரன் தனக்கு பின்புறம் திரும்ப, லேசாய் அதிர்ந்தான். 
அதைக் கூறி இருந்தது பல்லவி.
அதுவரை அவர்களுக்கு இடையில் செல்லாது ஒதுங்கி நின்றிருந்தவள் இப்போது அவ்விருவருக்கும் இடையில் வந்தாள். 
“என்ன சொல்லற அனு” என்றான் அழுத்தமாய்.
“ஆமாங்க.. நான் தான் அவங்களை இங்க வரச் சொன்னது”
அப்போது அவர்களைத் தேடிக்கொண்டு அங்கு வந்தார் சுந்தரேஸ்வரன். அங்கு எதிர்பாராத விதமாய் அப்பெண்மணியை அவர்களுடன் காண நேரிட, உடனே அவ்விடம் விரைந்தவர்
“அம்பிகா..!” என்றழைக்க,
பெரியவர் குரல் கேட்ட மறுநொடி அம்பிகாவிற்கு அவரைக் காணவும் கூசியது. பின் ஒருவாராக அவர் முகம் கண்டு குரல் தழுதழுக்க
“எப்படி இருக்கீங்க மாமா” என்று கேட்டார்.
“இருக்கேன் ம்மா.. நல்லா இருக்கேன். எனக்கென்ன குறை என் பேரன் இருக்கையில” என்றார் ஸ்வரனை பார்த்துக் கொண்டே. அதில் கொஞ்சம் கர்வம் கூட இருந்தது. 
அம்பிகா தன் மகனையே பார்த்திருக்க, அவன் பார்வையோ பல்லவியை எரித்துக் கொண்டிருந்தது. 
“நீ எப்படி மா இருக்க” என்று சுந்தரேஸ்வரன் மேலும் அம்பிகாவிடம் பேச,
“அப்பா.. உங்களுக்கு எதுக்கு இதெல்லாம். நீங்க வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்றிருந்தான் ஸ்வரன்.
“ஸ்வரன்..! இருப்பா.. நன் உன்கிட்ட ரெண்டே நிமிஷம் பேசணும்” என கண் கலங்கியபடி அம்பிகா அவன் கையைப் பிடிக்க, அதை தட்டி விட்டவன்
“எந்த உரிமைல என் கையை பிடிக்குறீங்க.. மிசெஸ். அம்பிகா புருஷோத்தமன்” என்றான் அவரது அடையாளத்தை அழுத்தமாய். 
அதில் அவர் வலியோடு அவனைப் பார்க்க,
“நான் பேசுன நேரத்துல எல்லாம் அதை கேட்க நீங்க இருந்தீங்களா..? உங்களோட பேச எனக்கும் ஒன்னும் இல்ல” என அவர் முகத்தைக் கூட பார்க்க விரும்பாதவனாய் அவன் கூற, அதில் அவர் வெடித்து அழ ஆரம்பித்தார். 
“ஆதி..! அத்தை தான் இவ்வளவு சொல்லுறாங்கல்ல எனக்காக என்னனு தான் கேளுங்களேன்” என்ற பல்லவியை அவன் பார்த்த விதத்திலேயே அவள் அமைதியாகிவிட்டாள்.
“அப்பா.. இப்போ வரப் போறீங்களா இல்லையா” என்ற குரலில் சுந்தரேஸ்வரன் அம்பிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னே செல்ல,
“நீ வர்றதுனா வா..” என்றான் பல்லவியைப் பார்த்து. 
என்ன செய்வதென்று அவள் புரியாது நின்றிருக்க,
“நீ போ மா” என்றார் அம்பிகா.
“அத்தை நீங்க தனியா…”
“நான் பார்த்துக்குறேன். நீ போ மா” என, மனமே இன்றி அங்கிருந்து சென்றாள் பல்லவி. 
இதற்கு இன்றே இப்போதே ஒரு முடிவு கட்டும் தீவிரம் அவளுள் இருந்தது. இப்போது பேசினால் பிரச்சனை தான் அதிகரிக்கும் என்று அறிந்தவள் இன்று இரவு ஸ்வரனோடு இது குறித்து நிச்சயம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
நேரம் நில்லாது நகர்ந்திருந்தது.
மணமக்களை வீட்டிற்கு அழைத்து வந்து அனைத்து சம்பிரதாயங்களையும் சரியாய் நடந்தி முடித்து, இறுதியில் சுரேகாவிற்கே அறிவுரை கூறிய பல்லவியை வியந்துபோய் கன்னத்திற்கு கைகொடுத்துப் பார்த்திருந்தனர் சிவகாமியும் சுரேகாவும்.
“நம்ம பல்லவியா இது” என சிவகாமி திருஷ்டி கழிக்க
“அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு பாட்டி.. நான் கூட, கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொன்ன புள்ளைய புடிச்சு இழுத்து கல்யாணம் பண்ணி வெச்சிட்டோமே.. இவ நாளுக்கு ஒரு பஞ்சாயத்தை இழுத்து நம்ம தலையில வைக்கப் போறான்னு நினச்சு ரொம்பவே பயந்தேன். ஆனா இப்போ எவ்வளவு பொறுப்பா மாறிட்டா” என்றாள் சுரேகா. அந்த பொறுப்பு பற்ற வைத்திருக்கும் நெருப்பு பற்றி அறியாமல்.
இருவருக்கும் ஒரு புன்னகையை சிந்திய பல்லவி,
“சரி நான் கிளம்புறேன். அவரு வெயிட் பண்ணுவாரு” என்றுவிட்டு நகர்ந்தாள், ஸ்வரனோடன பஞ்சாயத்தைத் துவங்க.
அன்றைய தினம் அனைவரும் சிவகாமியின் இல்லத்தில் தான் இருந்தனர். மாடிக்கு வந்த பல்லவி தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று விளக்கை ஒளிரவிட்டுப் பார்க்க, ஸ்வரன் அவன் முகத்தைக் காண்பிக்காது போர்வையால் முழுதாய் மறைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
“என்னங்க.. என்னங்க…” என மெல்ல அவனை தட்டி எழுப்ப, அவனிடம் அசைவே இல்லை.
ஒரு முறை முறைத்தவள் அங்கிருந்து எழுந்து வந்து அவன் முன் நின்றுகொண்டு
“சும்மா நடிக்காதீங்க நீங்க தூங்கியிருக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்” என்றாள். அதற்கும் பதிலில்லை அவன் புறம்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசியே ஆகணும். இப்போ எழுந்திரிக்க போறீங்களா இல்லையா..?” என்று குரலை உயர்த்த, மெல்ல எழுந்தமர்ந்தவன்
“என்ன தான் உன் பிரச்சனை பல்லவி” என்றான் பாதி உயர்ந்த குரலில்.
“ஓஹோ கோபம் வந்தா மட்டும் பல்லவி.. மத்த நேரத்துல எல்லாம் அனு” என கண்களை உருட்டி முறைக்க, ஒரு பெருமூச்சோடு ஸ்வரன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான். 
“நீங்க பண்ணுறது உங்களுக்கே நல்லா இருக்காங்க..? இப்படி தான் உங்க அம்மா மனசு நோகுரமாதிரி பேசுவீங்களா.. பாவம் அவங்க. அவங்களுக்குன்னு உங்களை விட்ட யாரும் இல்லை. அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு கூட கேட்க மாட்டீங்குறீங்க.. இப்படி இருந்தா எப்படி. உங்ககிட்ட இதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல ஆதி. என்னை பொறுத்த வரையில நீங்க செஞ்சது தான் தப்பு” என்று பேசிக்கொண்டே போனாள்.
“போதும் நிறுத்து அனு”  
அவனது கத்தலில் அதுவரை ஓயாது பேசிக்கொண்டிருந்தவள் ஒருநொடியில் பேச்சிழந்தவள் போல் காணப்பட்டாள். 
ஸ்வரன் முகம் முற்றிலுமாய் மாறி இருந்தது. அதை கவனித்தவள் உடனே சென்று தண்ணீர் எடுத்துவந்து அவனுக்கு கொடுக்க, கோபத்தில் அதை தட்டி விட்டிருந்தான். 
சத்தத்தோடு கீழே விழுந்து கண்ணீர் விட்டு உருண்டோடி ஒரு மூலையில் அடைக்கலமான டம்ளரைக் கண்டு பல்லவியின் கண்களும் பணிக்கத் துவங்கியது. ஸ்வரனின் வேகத்தில் பயந்து போய் சுவரை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தவள் முழுதாய் ஒரு நிமிடம் கண்ணீர் வடித்திருக்க, அதுவரையுமே இருவருக்குள்ளும் பலத்த மௌனம். 
அவள் பார்வை தரையில் அவன் பார்வை அவளிடம்.
“இங்க வா அனு”
மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கேயே நின்றிருக்க
“இங்க வான்னு சொன்னேன்” என்ற அழுத்தமான உச்சரிப்பின் அடுத்த நொடி அவன் அருகில் வந்து நின்றாள்.
“சாரி அனு” என்றிருந்தான். 
அவன் அப்படிக் கூறியது தான் தாமதம்,
“உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது. டம்ளர் எல்லாம் தட்டி விடுறீங்க. நானே ரொம்ப பயந்துட்டேன்” என்றிருந்தாள் படபடப்பு குறையாது.
“ஏன் நீ இப்படி செஞ்சதே இல்லையா” என்றதும் தான் நினைவில் வந்தது முன்பொருநாள் அவள் தட்டிவிட்ட டம்ளர் அறையைத் தாண்டி உருண்டோடி ஹாலில் இருந்த அவன் பாதத்தை சரணடைந்ததை. 

Advertisement