Advertisement

அவனுக்கான உண்மைகள் அத்தனை உவப்பானதாய் இல்லை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அதை போட்டு உடைக்க முடியாது தானே இத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறாள். இன்று மனதை தயார் படுத்திக்கொண்டு அவள் சொல்ல நினைக்கும் போது, அவன் கேட்கத் தயாராய் இல்லை. 
அப்படியே நாட்கள் கடந்து தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்க, சரண் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று தரவரிசைப் பட்டியலில் முதன்மை பெற்று சிறந்த மருத்துவக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருந்தான். பல்லவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வீட்டினர் அனைவரது வாழ்த்தையும் ஏற்ற சரண் அன்றும் பல்லவியை கண்டுகொள்ளது போக, அதில் வருத்தம் இருந்தாலும் அவன் எதிர்காலம் நன்றாய் அமையவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள். அவனுக்காக அவள் வாங்கி வைத்திருந்த ஸ்மார்ட் போனை பெரியவர்களிடம் கொடுத்து கொடுக்கச் செய்தாள்.
இதற்கு இடையில் சுரேகாவின் திருமணத்திற்கான நாள் நெருங்கி வர, பல்லவி தான் முன் நின்று அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். சுரேகா மட்டும் இல்லாது போயிருந்தால் ஸ்வரனோடன அவளது திருமணம் அத்தனை சிறப்பாய் நடந்திருக்காது. அப்படிப்பட்ட தோழியின் விசேஷத்தில் எந்தக் குறையும் வராது முன் நின்று நடத்திக் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறாள். 
மண்டபத்தில் ஆ முதல் ஃ வரை செய்துகொடுக்க ஸ்வரன் பொறுப்பேற்றிருந்தான். சரணை கல்லூரியில் சேர்க்கும் வேலைகள் தலைக்கு மேல் இருந்தது அவனுக்கும். ஒரு நாள், சரனை ரஞ்சிதாவிடம் அழைத்துச் சென்று அவரிடம் ஆசிபெற்று அழைத்து வந்தான். மற்றொருநாள் அவனது நண்பர்களை சந்தித்து வந்தனர். அதன்பின் அவனை வெளியே அழைத்துச் சென்று கல்லூரிக்குத் தேவையானவற்றை வாங்கி வந்தான். சரணோடு அதிக நேரம் ஸ்வரன் தான் செலவழித்தான்.
எண்ணம் என்னவோ பல்லவி, ஆனால் அதற்கான செயல்கள் அனைத்தும்  ஸ்வரன் என்றாகிப் போனது சரண் விசயத்தில்.
அன்றைய தினம் சரணை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டிருந்தனர் சிவகாமியும் சுந்தரேஸ்வரனும். பல்லவி அவனுக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். நாளை முதல் கல்லூரி தொடங்கவிருக்கிறது, இன்றே கிளம்பி ஹாஸ்டல் செல்லவிருக்கிறான் சரண். அதற்கான கவனிப்புகள் தான் அனைத்தும். 
“சரண்..! நல்லா படிக்கணும்ப்பா.. தினமும் பாட்டிக்கு போன் பண்ணி பேசணும். அங்க போனதும் என்னை மறந்திடக் கூடாது” என சிவகாமி பேசிக்கொண்டிருக்க
“ஏதாவது தேவைன்னா எங்ககிட்ட தயங்காம சொல்லணும் கண்ணா. நாங்க உன் அக்கா மாமா கிட்ட கொடுத்து விடுறோம். பார்த்து பத்திரமா இருந்துக்கப்பா” என சுந்தரேஸ்வரன் அவர் பங்கிற்கு கூற, அவனோ
“அதெல்லாம் என்னை நான் நல்லா பார்த்துக்குறேன். நீங்க உங்க உடம்ப பார்த்துக்கோங்க.. என்னை பத்தி கவலைப் படாதீங்க” என்று அவர்களுக்கு கூறினான்.
கால் டேக்சி பிடித்து வந்து அவனது லக்கேஜுகளை எல்லாம் எடுத்துவைத்துவிட்டு வந்த ஸ்வரன் 
“சரி நேரம் ஆச்சு கிளம்பலாமா சரண்” என்று கேட்கவும் தலையசைத்தவன் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிகொண்டு வாசல் வரையில் வந்துவிட, அதற்குமேல் கால்கள் நகர மறுத்தது. 
திரும்பி ஒருமுறை சுற்றிலும் தேடிப் பார்த்தான்,
“என்னாச்சு எதாவதை மறந்துட்டயா..?” என்ற ஸ்வரனின் குரலில் திரும்பியவன், இல்லை என்று ஒரு தலையசைப்பை அளித்துவிட்டு வந்து கார் கதவைத் திறக்க உள்ளே பல்லவி வீற்றிருந்தாள்.
லேசான மலர்ச்சி அவன் முகத்தில் வந்து போனது. அதை பல்லவி கவனித்து தான் இருந்தாள். கதவைத் திறந்தபடியே நகராது நின்றிருக்க,
“சரண் சீக்கிரம் ஏறு” என்று ஸ்வரன் குரல் கொடுக்கவும் பல்லவியின் அருகில் அமைதியாய் அமர்ந்துகொண்டான். 
இப்போது தான் ஒரு கூட்டை விட்டு மற்றொரு கூட்டிற்குள் வந்திருந்தான். படிப்பிற்காக அங்கிருந்தும் பிரிந்து செல்லும்படி நேர்ந்திருக்கிறது. அதை நினைத்தபடி வந்துகொண்டிருந்தான். அவனுள் இருக்கும் விடைகாண முடியா கேள்விகள் என்னவோ இன்றுவரை அப்படியே தான் உள்ளது. பல்லவியால் மட்டுமே அதற்கு விடைகூற முடியும். மெல்ல அவள் புறம் பார்வையை செலுத்தினான். 
அவளோ வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தாள். அவளிடம் பேச எண்ணி அவன் வாய் திறந்தபோது திடீரென விக்கல் வந்தது பல்லவிக்கு. சில நொடிகள் கடந்தும் அது நில்லாமல் வந்து கொண்டிருக்க, ஸ்வரன் ரியர் வ்யூ மிரரின் வாயிலாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாது அமைதியாய் இருக்க
‘ஒருத்தி விக்கிட்டு இருக்கேன் தண்ணி கொடுக்காம இவரு பாட்டுக்கு வேடிக்கை பார்த்துட்டு வராரு’ என்று அவனை முறைத்தவள்
“என்னங்க தண்ணி..” என்று சொல்லி முடிப்பதற்குள் சரண் அவளுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்டியிருந்தான்.
பல்லவி அவன் புறம் திரும்ப, அவன் கை மட்டுமே அவள்புறம் நீண்டிருந்தது. அவன் பார்வை வெளியே கடந்துபோகும் மேகங்களைக் கண்டிருந்தது. தன் தம்பியிடம் இருந்து அதைப் பெற்று மிடறு மிடறாகப் பருகியவள் இப்போது ஸ்வரனைப் பார்க்க, அவனிடம் ஒரு அழகான புன்னகை.
சில மணிநேர பயணத்தின் முடிவில் கல்லூரியும் வந்திருந்தது. இனி ஐந்தாண்டுகளுக்கு சரணின் வாசஸ்தலம் இதுவே. அங்குள்ள நடைமுறைகளை எல்லாம் பின்பற்றி இறுதியில் அவனது அறையில் அவனை விட்டுவிட்டு திரும்பும்போது, பல்லவியின் விழிகளில் ஆர்ப்பரித்தது அருவிப் பெருக்கு. 
“பார்த்து இருந்துக்கோ சரண். எதாவதுனா எனக்கு போன் பண்ணு” என வார்த்தை வர மறுக்க, அவளுக்கு ஒரு சிறு தலையசைப்பையும் கூட அளிக்கவில்லை சரண். இருந்தும் அவனுமே முகம் சோர்ந்துபோய் தான் காணப்பட்டான்.
அப்போது அவன் அறைக்கு மற்றுமொரு மாணவன் வர, அவனோடான அறிமுகம் என சிரித்து நேரம் கழிந்தது.
“சரி அனு நம்ம கிளம்பலாம். சரண்.! நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் போய்ட்டு கால் பண்ணுறேன்” என்று ஸ்வரன் கூற, லேசாய் தலையசைத்து அவர்களுக்கு விடைகொடுத்தான்.
பல்லவி திரும்பித் திரும்பி சரணைப் பார்த்தவாறே வந்துகொண்டிருக்க,
“அனு..! அவன் தைரியமா இருக்கான் நீ ஃபீல் பண்ணி அவனையும் ஃபீல் பண்ண வெச்சிடுவ போல இருக்கே” என அவளை சமாதானம் செய்தபடி அழைத்துச் சென்றான் ஸ்வரன். 
அவர்கள் தலை மறையும் வரை நின்று பார்த்திருந்த சரண் பின் உள்ளே வந்தமர்ந்து அவனது கைப்பேசியை உயிர்ப்பித்தான். அதில் சில படங்களையும் போன் நம்பர்களையும் பதிவேற்றி வைத்திருந்தான் ஸ்வரன். அனைத்தையும் ஒரு சில நொடிகள் பார்வையிட்டவன் பல்லவியின் ஒரு படத்தை மட்டும் ஜூம் செய்து உற்றுப் பார்த்திருந்தான். 
அதில் அத்தனை மகிழ்ச்சியைத் தாங்கி இருந்தது அவள் முகம். அவனது தேர்வு முடிவுகள் வெளியாகிய நாளில் எடுத்த படம் அது. அதை நினைவு கூர்ந்தவன் பின் அதையே தனது வால்பேப்பராக சேமித்துக்கொண்டான்.
“யாரு இவங்க..?” என அவன் அருகிலிருக்கும் புதியவன் கேட்டதற்கு, சில நொடி மௌனம் காத்துவிட்டு பின் சொன்னான்.
“என் அக்கா” 
அவன் அகம் ஆழமாய் கூறியதை அவன் அதரங்கள் அழுத்தமாய் கூற, அதைக் கேட்டதும் அறை வாயிலில் நின்றிருந்த பல்லவியின் இதழ்கள் தானாய் விரிந்து மலர்ந்தது. 
மீண்டும் ஒரே ஒருமுறை சரணை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி திரும்பி வந்தவள் கண்ட காட்சியை அவள் பின்னால் வந்த ஸ்வரன் காணத் தவறிவிட்டான்.
“நீ ரொம்ப லக்கி.. உன் அக்கா உன்னை பிரியரதை நினச்சு அழுதுட்டு போறாங்க. என் அக்கா திரும்ப வீட்டு பக்கம் வந்துடாதைன்னு வார்னிங் கொடுத்து தான் வழியனுப்பி வெச்சா” என்று புதியவன் பேசிக்கொண்டிருக்க சரண் மௌனமாய் தன் கைப்பேசியில் இருந்த பல்லவியின் முகத்தையே தான் பார்த்திருந்தான்.
அறை வாயிலில் ஆள் அரவம் உணர்ந்து இருவரும் திரும்பிப் பார்க்க, பல்லவியைக் கண்ட சரண் உடனே எழுந்து நின்றுவிட்டான்.
கண்கள் பணிக்க அவன் அருகில் வந்தவள் அவன் தலையை வாஞ்சையாய் வருடி, பின் உச்சியில் முத்தமிட்டுவிட்டு தன் கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுகொண்டாள். சரணின் கைப்பேசியில் இருந்த பல்லவியின் படத்தைப் பார்த்த ஸ்வரனும் ஒரு புன்னகையுடன்
“சரிங்க டாக்டர் சார்.. டேக் கேர். நாங்க கிளம்புறோம்” என்று கிளம்பிக் கொண்டான்.
திரும்பும் வழியெல்லாம் கடந்து செல்லும் சாலையையே வேடிக்கை பார்த்தவாறு அமைதியாய் வந்துகொண்டிருந்தாள் பல்லவி. அவள் அகமும் வெகுவாய் அமைதி கொண்டிருந்தது. அதை ஸ்வரனும் கவனித்து தான் இருந்தான். அவளை தொந்தரவு செய்யாது அவளருகில் அமர்ந்திருந்தான்.
சில நொடிகளில் திடீரென அவன் புறம் திரும்பியவள்
“ஏங்க உங்க போன் கொடுங்க” என்று கேட்க, யோசிக்காது உடனே எடுத்து அவளிடம் நீட்டியிருந்தான்.
அவன் போனைப் பார்த்துவிட்டு அவனை முறைக்க, எதற்காக முறைக்கிறாள் என்று புரியாது அவனும் பார்த்திருக்க.. அவனிடமே அவனது கைப்பேசியை திருப்பி அளித்தவள் உடனே தன்னுடையதை எடுத்து அதில் வைத்திருந்த ஸ்வரனது புகைப்படத்தை நீக்கிவிட்டு சரணுடைய படத்தை வால்பேப்பராக மாற்றி வைத்தாள்.
‘அடிப்பாவி’ எனப் பார்த்திருந்தவன் 
“நீ சரியில்ல அனு. உன் தம்பி வந்ததும் உடனே என்னை தூக்கி தூரப் போட்டுட்ட” என போலியாய் கவலைகொள்ள
“அவனை பாருங்க.. என் போட்டோவ வெச்சிருக்கான். எப்போ போன் எடுத்தாலும் என் ஞாபகம் தான் வரும். ஆனா உங்களுக்கு தோணுச்சா..? உங்களுக்கு தான் என்மேல பாசமே இல்ல” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.
“நீ என் கூடவே இருக்கும் போது நான் எதுக்கு உன் போட்டோவை பார்க்கப் போறேன்..? இந்த அனு என் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்குற அப்போ வெறும் போட்டோவை பார்த்து தான் இந்த ஆதி அவனோட அனுவை நினைக்கணுமா என்ன..?” என்று கேட்க, அவனது கேள்வியில் தன் விழி விரித்து அவனைப் பார்த்து வைத்தாள்.
“அப்போ உனக்கு தான் என் நினைப்பே இல்ல. என்னை மறந்திடக் கூடாதுன்னு தான் இத்தனை நாளா உன் போன்ல என் போட்டோவ வெச்சிட்டு இருந்திருக்க” என்று தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அவன் கூற, இது எதோ வில்லங்கமாய் சென்று முடியப் போகிறது என்று அவள் நினைத்து முடிக்கவில்லை
“சரி ஒன்னும் பிரச்சனை இல்ல அனு. இந்த ஆதியை என்னிக்கும் மறக்காதபடி இன்னைக்கு நைட் பார்த்துக்கலாம்” என்று அவள் காதருகே மெல்லக் கூறியவன் பின் அவளைப் பார்த்து கண்ணடிக்க, 
“ச்சே..” என தன் தலையில் அடித்துக் கொண்டவள் தன் முட்டைக் கண்களை விரித்து, முன்பிருக்கும் டிரைவரை கண்களால் காண்பித்து அமைதியாய் இருக்கும்படி ஜாடை செய்தாள்.
“அண்ணா ஒரு நிமிஷம். இப்போ நான் சொன்னது எதாவது உங்களுக்கு கேட்டுதா..?” என்று அவரிடமே ஸ்வரன் கேட்டுவைக்க
“இல்லைங்களே தம்பி” என்று அவரும் பதிலளிக்க, பல்லவியின் முறைப்பை எல்லாம் பொருட்படுத்தாது
“கேட்கலையாம் அனு” என்று சொல்லி அவளிடம் நறுக்கென்று ஒரு கிள்ளை வாங்கிக்கொண்டு பேசாமல் அமர்ந்துகொண்டான் ஸ்வரன். அவள் கிள்ளிய இடத்தை அவன் தடவிக் கொண்டு அமர்ந்திருப்பது கண்டு சிரிப்பை அடக்க வெகு பாடுபட்டாள். 
இன்றும் அதீஸ்வரனின் அதரங்களில் தான் அழகாய் கோலமிட்டிருந்தாள் அனுபல்லவி.
கீதமாகும்….

Advertisement