Advertisement

ஓம் கதிர்காமனே போற்றி!!
13
இரண்டு வாரம் கடந்திருக்க, சரண் சிவகாமியோடு இயல்பாய் பேசிப் பழக ஆரம்பித்திருந்தான். தன் பாட்டி தன் குடும்பம் என தன் மனதில் ஆழமாய் பதியவைத்தவன், இனி அவரைப் பார்த்துக்கொள்வதும் தன் பொறுப்பு என்று எண்ணினான்.
பார்க்கிறானே அவனும், அவன் இரவெல்லாம் கண்விழித்துப் படிக்கும்போது துணைக்கு அவனருகில் தூங்காது விழித்திருக்கிறார் சிவகாமி. அதிகாலையில் அவன் எழுந்து அறையின் விளக்கைப் ஒளிரவிட்டால், சிறிது நேரத்தில் தேநீரோடு அவனறைக்குள் நுழைந்துவிடுகிறார். தான் பார்த்துக் கொள்வதாய்க் கூறினாலும் அதை மறுத்து அவன் அருகிலேயே அமர்ந்துகொள்கிறார். 
இதெல்லாம் அவனுக்கு புதிதாய் இருந்தது. அவன் ஏங்கியதும் இதற்குத் தானே..! தனக்கென ஒரு குடும்பம் அதில் தன்னுடன் ஒருத்தர் இருந்தால் கூடப் போதுமே. இப்போது அப்படி ஒரு குடும்பம் கிடைத்திருந்தும், அதுவும் நிலைக்குமா அப்படியே நிலைத்தால் இன்னும் எத்தனை நாட்களுக்கு என்றொரு கேள்வி எழுந்தது மனதில்.
பெற்றவர்கள் முகம் கூடத் தெரியாது. இப்போது இவர்கள் சொல்லித்தான் தனக்கும் இவர்களுக்கும் உறவென்று தெரியும். நாளையே அப்படி இல்லை என்று கூறினாலும் அவன் ஏற்றுக்கொண்டு இங்கிருந்தும் சென்று தான் ஆகவேண்டும். எதுதான் நிரந்தரம்..? இந்த நிரந்தரம் இல்லா வாழ்வில்.. இந்த நிரந்தரம் இல்லா உலகில்.. என பலவித எண்ணங்கள்  அந்த பதின்வயதினனுக்கு.
அவன் புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு படிக்காது யோசனையில் இருக்க, அதைக் கண்ட சிவகாமி 
“என்ன கண்ணு யோசிக்குற..?” என்று கேட்க, அதில் சிந்தனை கலைந்தவன்
“ர.. ரஞ்சிதா மேடம் ஞாபகம் வந்திடுச்சு பாட்டி” என்றான். 
“அவங்க உன்ன நல்லா பார்த்துகிட்டாங்களா..?” என்றார் அவன் அங்கு எப்படி இருந்தான் என்று தெரிந்துகொள்ள.
அங்கிருந்த அனைவரையும் சரிசமமாக கவனிப்பார் ரஞ்சிதா. எந்தவொரு உயர்வு தாழ்வுமின்றி அனைவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பார். அதை எண்ணிப் பார்த்தவன் 
“எல்லாரையும் எப்படி பார்த்தாங்களோ அப்படித்தான் என்னையும் பார்த்தாங்க பாட்டி” என்றான். அதைத் தொடர்ந்து ஒரு கசந்த முறுவலை அளித்தவன்
“அவங்களாவது பார்த்தாங்களே பாட்டி. அவங்களும் இல்லைனா நான் பிச்சை தான் எடுத்திருக்கணும். இந்நேரம் இருந்திருப்பேனோ இல்லையோ யாருக்கு தெரியும்” என்று வலியோடு சொன்னதில் சட்டென  கண்கலங்கிப் போன சிவகாமி,
“சரண்..! என்னப்பா இப்படி எல்லாம் பேசுற..? அந்த ஆண்டவன் நம்மள அந்த நிலமைக்கெல்லாம் கொண்டுபோய் விட மாட்டான். இனிமேல் இதுமாறி எல்லாம் பேசிப் பழகாத” என அவன் வார்த்தைகளின் வீரியம் தாங்காது கண்ணீர் விட்டிருந்தார்.
இருவரிடமும் சிலநொடி மௌனம். சிவகாமியை அப்படிப் பார்க்க முடியாது சரணே பேச்சை ஆரம்பித்தான். அவனுக்கும் புரிந்திருந்தது அவனது பாட்டியும் பல இன்னல்களை சந்தித்து இருக்கிறார் என. அதை தெரிந்துகொள்ளும் எண்ணத்தில் அவரது கடந்த காலத்தை பற்றி எல்லாம் அவன் கேள்வி எழுப்ப, அவனுக்கு விளக்கும் பொருட்டு அனைத்தையும் கூறிக் கொண்டிருந்தார் சிவகாமி. 
அவன் தந்தையைப் பற்றிக் கூறியவர் அவன் அன்னையைப் பற்றி அவ்வளவாய் கூறவில்லை. பல்லவியைப் பற்றித் தான் பெரும்பாலும் கூறினார். அதை எல்லாம் கவனித்திருந்தாலும் இடையில் குறுக்கிடவில்லை அவன். அவர் சொல்வதை மட்டும் முழுதாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
“உன் அப்பன் குடிச்சு குடிச்சே அவனையும் அழிச்சுகிட்டு உங்கம்மா வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிட்டான். நீ இருக்குறதே எங்களுக்கு தெரியாது ப்பா.. தெரிஞ்சிருந்தா எங்களுக்கு என்ன கஷ்டம் வந்திருந்தாலும் உன்னையும் எங்களோடவே வெச்சு வளர்த்திருப்பேன்” என்றார்.
அதுவரை தன்னை தனித்து விட்டுச் சென்றவர்கள் என்ற கோணத்தில் இவர்களைப் பார்த்தவன், தன்னவர்களால் தனிமையில் விட்டுச் செல்லப்பட்ட தன்னை, தேடி வந்தவர்கள் இவர்கள் எனப் பார்க்கலானான்.
ஹாஸ்டலில் வளர்ந்தவனுக்கு அன்பிற்கு மட்டுமே பஞ்சம், ஆனால் இவர்களுக்கோ உணவு உடை உறைவிடம் என அனைத்திற்கும். சொந்தங்களின்றி சொந்தக் காலில் நின்று இந்நிலைக்கு வந்திருக்கின்றனர் அறுபத்தி ஆறும் இருபத்தி நான்கும். 
அப்போதெல்லாம் தானும் அவர்களுடன் இருந்திருந்தால் தன் பங்கிற்கு உதவி இருக்கலாமே என்று எண்ணம் தான் அவனுக்கு வந்தது. 
“உன் அக்கா அப்போவே எனக்கு மாவு வித்துட்டு வந்து கொடுப்பா.. அதுவேணும் இதுவேணும்னு இதுவரைக்கும் எதையும் என்கிட்ட வாங்கித்தரச் சொல்லிக் கேட்டதில்ல. இருக்குறதை பேசாம சாப்பிட்டுக்குவா. அவ காலேஜ் போகைல கூட இருந்த நாலு சுடிதார தான் திரும்ப திரும்ப போட்டுட்டு போவா. ட்யூசன் எடுத்து சேமிச்சு வெச்ச காசுல எனக்கு தான் ஒரு புடவை எடுத்து கொடுத்தா. அவளுக்குன்னு இதுவரைக்கும் வாழ்ந்ததே இல்லை கண்ணு” என்று சொல்லியபோது, பல்லவியின் முகம் அவன் மனக்கண்ணில் தோன்றியது.
அன்பு அறக்கட்டளை வரும்போது பல்லவியைப் பார்த்திருக்கிறானே. அவனையே அன்பொழுக பார்த்திருப்பாள். எங்கு சென்றாலும் அவள் பார்வை தன்னை பின்தொடர்வதை உணர்வான். அவனுக்கும் அவளைக் கண்டாலே அகத்தினில் அன்பு தானாய் பல்கிப் பெருகும். அதற்கான காரணம் அப்போது தெரியவில்லை. இப்போது தெரியவர, கோபம் தான் வந்தது அவள் மீது.
ஒரு வார்த்தை சொல்லவில்லையே அவள் தனது அக்கா என்று. தான் அவளது தம்பி என்று. சொல்லியிருந்தால் உடனே கிளம்பியிருப்பேனே அவளோடு. அவளை கஷ்டப்பட விடாது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். உண்மை தெரிந்திருந்தும் அனைத்தையும் மறைத்துவிட்டாள் என்ற கோபம் அவனுக்கு. 
“நீயும் எங்களோடவே இருந்திருக்கலாம். உன்னை மட்டும் பிரிச்சு வெச்சுட்டார் கடவுள். இதுல கடவுள் மேல பழி போடறது நியாயம் இல்லப்பா. மனுஷங்க பண்ணுற தப்புக்கு கடவுள் என்ன செய்வார். அதுவும் நல்லதுக்கு தான். நீயும் எங்களோட இருந்து அனுதினமும் கஷ்டப்படுறதுக்கு இத்தனை வருசமா எங்கயோ ஒரு மூலைல இருந்தாலும் நிம்மதியா இருந்திருக்க. அதுக்காகவே கடவுளுக்கு நன்றி சொல்லணும்” என்றார் சிவகாமி உணர்ச்சிப் பெருக்கில்.
“தூரமா இருந்து நமக்கு யாருமே இல்லையேன்னு நினச்சு கஷ்டப் படுறதுக்கு, பக்கத்துல இருந்து உங்க கஷ்டத்துல பங்கேற்றிருந்தா ரொம்ப நிம்மதியா இருந்திருப்பேன் பாட்டி” என்றான் அந்த வளர்ந்தவன்.
அவன் முதிர்ச்சியான இந்தப் பேச்சு அவரையே வியப்படையச் செய்தது. 
“தண்ணில அடிச்சிட்டு போற இலையா தான் இருக்கு இங்க பலபேரோட வாழ்க்கை. அதன் போக்குல போய்தான் கரை சேர முடியும். உன்னையும் அந்த ஆண்டவன் அப்படித்தான் கரை சேர்த்திருக்கான். நடந்து முடிஞ்சதை மாத்த முடியுமா..? அதை எல்லாம் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதையே நினைச்சிட்டு இருந்தா இனி நடக்கப் போறதை எல்லாம் யாரு பார்ப்பா..? இனிமேல் நடக்கவிருக்கிறதுக்கு மட்டும் தான் நம்மள தயார் படுத்திக்கணும். எக்காரணத்தைக் கொண்டும் வாழ்க்கையை கீழ விட்டுடக் கூடாது கண்ணு. தூக்கிப் பிடிச்சு தடைகளை தாண்டி போய்கிட்டே இருக்கணும். நிச்சயம் எல்லாம் ஒருநாள் மாறும்” 
அந்த அனுபவசாலியின் வார்த்தைகளைஆமோதிப்பதாய் மெல்லத் தலையசைத்தான் சரண்.
“நீ படி கண்ணு. ஏதேதோ பேசிட்டு நேரம் போய்ட்டு இருக்கு பாரு. உனக்கு எதோ முக்கியாமான பரிச்சை வருதாமா, உங்கக்கா சொன்னா. உன்னை தொந்தரவு செய்யாம கூட இருந்து பார்த்துக்கோணும்னு எனக்கே உத்தரவு போடுறா” என்று சொல்லி புன்னகைத்தவர்
“படிச்சு என்ன ஆகப் போற” என்று கேட்க
“டாக்டர் பாட்டி” என்றார் ஒரு மிளிர்வாய்.
“அப்போ நீயே உங்க அக்காளுக்கு வலிக்காம ஊசி போடு. சின்ன வயசுல இருந்து ஒரு ஊசி போடறதுக்கு என்னைய அந்தப் பாடு படுத்துவா” என்று சொல்லிக்கொண்டிருக்க லேசாய் புன்னகைத்த சரண் பின் மெல்ல,
“என்னை எப்படி இவ்வளவு வருசத்துக்கு அப்பறம் கண்டு பிடிச்சீங்க..? உண்மை தெரிஞ்சும் என்னை ஏன் உடனே வந்து அழச்சிட்டு போகலை” என கேட்க, அவனது கேள்விக்கெல்லாம் பதிலில்லை சிவகாமியிடம். 
அவன் இதற்காகவே காத்திருந்தவன் போல் அவர் பதிலை எதிர்பார்த்திருக்க, சிவகாமியோ இதை எதிர்பாராது பின் தயங்கியபடி பல்லவியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி கூறினார்.
“பல்லவி பல்லவி பல்லவி.. ரஞ்சிதா மேடம், ஸ்வரன் மாமா, இப்போ நீங்க யாரை கேட்டாலும் பல்லவியை தான் கேட்க சொல்லுறீங்க. ஏன் உங்களுக்கு எல்லாம் தெரியாதா..? தயவு செஞ்சு சொல்லுங்க பாட்டி என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும். நீங்களும் உங்க பேத்தியும் எப்படி தனியா வந்தீங்க நானும் அம்மாவும் எப்படி தனியா போனோம்..?” என்று ஆவேசமாய் ஆரம்பித்து கெஞ்சலாய் முடித்தான்.
உங்க பேத்தி என்று அவன் சொன்னதிலேயே பல்லவி மீதான அவனது மனக்கசப்பை உணர்ந்தார் சிவகாமி. அக்கா என்று அவன் வாயில் தப்பியும் வரவில்லை இதுவரை.
சிவகாமி செய்வதறியாது யோசனையோடு திரும்ப, அங்கு கதவோரம் நின்றிருந்த பல்லவியைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து பின் தன்னை சமாளித்துக் கொண்டு
“வா மா.. எப்போ வந்த..? ஏன் அங்கேயே நின்னுட்ட” என, அவரது வரவேற்பில் மெல்லத் திரும்பிப் பார்த்தான் சரண். 
இன்றுதான் சிவகாமியின் இல்லத்திற்கு வருகை புரிந்திருந்தாள் பல்லவி. சற்றுமுன் சரணைக் காண அவன் அறைக்குள் செல்ல முயற்சித்தவளின் செவிகளில் அவர்களது பேச்சு சத்தம் விழ, முன்னேறாது அப்படியே நின்றுகொண்டாள்.
பல்லவியின் பார்வை சரணிடமே. அவன் பார்வையும் அவளிடமே நிலைத்து நின்றது. அவள் உள்ளே அடியெடுத்து வைத்ததும் அவன் அவ்வறையில் இருந்து வெளியேற எத்தனிக்க, 
“சரண்..!” என்ற அவளது குரலில் ஒருநொடி நின்றான்.
“நீ படி.. நான் போறேன்” 
முகம் சுருங்கிப் போனவள் உடனே அங்கிருந்து சென்றும் கொண்டாள். அவள் செல்வதைக் கண்ட சிவகாமி,
“நாளைக்கு நான் இருப்பேனோ இல்லையோ. உனக்குன்னு இனி அவதான். எனக்கு அடுத்து அவளுக்குன்னு இனி தம்பி நீதான் இருக்க. நீ பேசாம இருந்து அவளை ஒதுக்கி வெச்சு கஷ்டப் படுத்துறியே கண்ணு” என்று அவனிடம் கூறிவிட்டு வெளியேற, சரணுக்கு தான் என்னவோ போல் இருந்தது.
ஒருவாரம் சென்றிருக்க.. அன்றைய தினம் சரணின் நீட் தேர்வுக்கான நாள்.
ஸ்வரன் அவனை தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல சிவகாமியின் இல்லத்தில் காத்திருந்தான். கோவிலுக்கு சென்று தன் தம்பி பெயரில் அர்ச்சனை செய்து வந்த பல்லவி, பிரசாதத்தை அவனுக்கு நீட்ட, அவனோ அவளையும் அவள் நீட்டிய கரத்தில் இருந்ததையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு 
“போலாம் மாமா” என்று ஸ்வரன் அருகில் சென்று நின்றுகொண்டான்.
இதைக் கூட தன்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாதா என லேசாய் வருந்தியவள், அதை எல்லாம் காட்டிக் கொள்ளாது  
“சரண்..! ஆல் தி பெஸ்ட். எக்ஸாம் நல்லா பண்ணிட்டு வா” என்று வாழ்த்த, யாருக்கோ சொன்ன வாழ்த்து போல் அவன் கண்டுகொள்ளாது நின்றிருந்தான்.
உடனே பல்லவி ஸ்வரனைப் பார்க்க, அவளிடம் இருந்து திருநீர் மடித்திருந்த கவரை வாங்கி அவன் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். எப்படியும் அது சரண் நெற்றியை சென்றடைந்து விடும் என்ற நம்பிக்கையில் பல்லவி அவர்களுக்கு விடைகொடுக்க, சரணை அழைத்துக் கொண்டு தேர்வுமையம் நோக்கிப் புறப்பட்டான் ஸ்வரன்.
அனைத்தையும் சரிபார்த்துக்கொண்டு உள்ளே செல்லும் நேரத்தில் ஸ்வரனிடம் திரும்பி வந்தவன்,
“மாமா..! அதை கொடுங்க” என்று கையை நீட்ட
“எதை மச்சா பிட் ஆஹ்..?” என புரிந்தும் புரியாதவன் போல கேட்க,
“ப்ச்.. மாமா அந்த திருநீரை கொடுங்க” என்றதும், அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க, லேசாய் தொட்டு தன் நெற்றியில் வைத்துக்கொண்டான்.
“நல்லா எழுதீட்டு வாங்க டாக்டர். என் மச்சானை டாக்டர்ன்னு சொல்லலாம் தானே..?” என்று புருவம் உயர்த்த
“நிச்சயம் சொல்லலாம் மாமா” என்று வார்த்தைகளில் அசைக்க முடியா உறுதி வெளிப்பட, புன்னகையுடன் உள்ளே சென்றுகொண்டான் சரண்.
அவன் சென்றதும் வெளியில் காத்திருந்த ஸ்வரன் தன் மனையாளுக்கு அழைத்து விடயத்தைக் கூற,
“அவனே கேட்டு வாங்கி வெச்சிட்டு போனானாங்க…?” என பத்தாவது முறையாக கேட்டுவிட்டாள்.
“இன்னும் எத்தனை தடவ தான் கேட்ப அனு..? அவனுக்கு உன்மேல பாசம் இல்லாம எல்லாம் இல்ல. உண்மை தெரிஞ்சும் நீ மறச்சிட்டைன்னு  ஒரு சின்ன வருத்தம் தான். உன்மேல கோபத்தையும் காட்ட முடியாம பாசத்தையும் காட்ட முடியாம என்ன பண்ணுறதுன்னு புரியாம தான் உன்ன அவாய்ட் பண்ணுறான். கொஞ்சம் டைம் கொடு உன்ன புரிஞ்சுக்குவான்” என்று சொன்னதில் அமைதியானாள்.
ஆனால் அடுத்து வந்த நாட்களும் அப்படியே தான் தொடர்ந்தது. பல்லவி அவனிடம் தொடர்ந்து பேச முயற்சித்தாள். ஆனால் அவனோ அவளிடம் பேசுவதையே தவிர்த்து வந்தான். பெரிதாய் ஒதுக்கம் காண்பித்தான். எப்படி அவனுக்குச் சொல்லிப் புரிய வைப்பதென்று தெரியாது தவித்திருந்தாள் பல்லவி. 

Advertisement