Advertisement

அதில் அவள் உடனே அவனிடம் இருந்து விலகி அவன் முகம் காண,
“சரி நேரம் ஆச்சு. நாளைக்கு ஆபிஸ் இருக்கில்ல. நீ தூங்கு” என்று நகரச் செல்ல, அவனை நகரவிடாது பிடித்தவள்
“நான் உங்களுக்கு எப்படி பட்ட வைஃப் ஆதி..?” என்றாள்.
அன்றே இதற்கான பதிலைக் கூறிவிட்டான். இதென்ன மறுபடியும் கேட்கிறாள். அவள் சாதாரணமாய் கேட்பதுபோல் படவில்லை அவனுக்கு.
“நான் என்ன சொல்லணும்னு நீ நினைக்குற..?” என அவன் கேள்வியை முன்வைக்க..
“உங்க அம்மா மாறி….!”
“அப்படி சொல்லணும்னு நீ எதிர்பார்த்தா நிச்சயம் நான் அப்படி சொல்லமாட்டேன்” என்றுவிட்டு படுத்துக் கொண்டான்.
இதை அவள் எதிர்பார்த்ததுதான். எழுந்து சென்று விளக்கணைத்து வந்தவள்
“ஆதி..! என்னை எப்படி உங்களுக்கு பிடிச்சிது, என்னை எப்படி மேரேஜ் பண்ணிக்கிட்டீங்க..?” என்று புதிதாய் ஒரு டாப்பிக்கை துவங்கினாள். 
இன்று உன் மனைவி உன்னை தூங்கவிடமாட்டாள் ஆதீஸ்வரா.. நான் உன்னை விட்டு வெகு தூரம் செல்கிறேன். என்னைத் தேடவேண்டாம் என்று நித்ரா தேவி அவனுக்கு அறிவிப்பு விடுத்தார்.
“பிடிக்காததுக்கு காரணம் சொல்லலாம் அனு. பிடிச்சதுக்கு காரணம் சொல்ல முடியாது” என்றான்.
“இது பதில் சொல்லத் தெரியாதவங்க சொல்லுற பதில். இது ஒரு பதில்னு எனக்கு சொல்லாதீங்க. ஒழுங்கா பதில் சொல்லுங்க” என்றாள். 
அவன் மனைவி சொன்ன தத்துவ வரிகளைப் புரிந்து கொள்ளவே அவனுக்கு முழுதாக ஒரு நிமிடம் தேவைப்பட்டது.
“என்னையே கை நீட்டி அடிச்ச இந்த சிங்கப் பெண்ணை என் வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாதுன்னு தோணுச்சு. மிஸ் பண்ணுனா இது வேற யாராவதுக்கு மிச்செஸ் ஆகிடும்ன்னு அதுக்கு வாய்ப்பே கொடுக்காம நானே இந்த சிங்கத்தை சிறை பிடிச்சுட்டேன் போதுமா..?” என்றான்.
“போதாது…” என அவள் இழுக்க..
“போச்சுடா…” என அவன் எழுந்தே அமர்ந்துகொண்டான்.
“அப்போ உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்குமா..?” என்றவள் குரலில் அத்தனை ஆசை இருந்தது. 
“பிடிக்காம எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாரையும் அவசரக் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றான் அழுத்தமாய்.
“அதானே.. அன்னிக்கு ஐயர் முன்னாடி அந்தக் கிள்ளு கிள்ளுறேன் அசையாம கல்லு மாறி உக்காந்திருக்கும் போதே நினச்சேன்” என்றுவிட்டு சிரிக்க, அவனுமே அவள் சிரிப்பில் இணைந்து கொண்டான்.
“நீ ஏன் அனு கல்யாணத்தை நிறுத்த சொன்ன..? உனக்கு என்னை பிடிக்கலையா அப்போ..?” 
அவனது கேள்வியில் சிறு வலியை உணர்ந்தாளோ..!
“அது அப்போ தெளிவா யோசிக்கத் தெரியல ஆதி. கல்யாணம் வேண்டாம்னு நினச்சேன். பாட்டிக்காக பண்ணிக்கணும்னும் நினச்சேன். எனக்கு விருப்பம் இருக்கா இல்லையான்னு நான் யோசிச்சதெல்லாம் இல்லை” என்றவள்
“உங்களை தான் நிறுத்த சொன்னேன், ஆனா நான் நிறுத்தனும்னு நினைக்கலையே” என்றுவிட்டு ஓரக் கண்ணால் அவனைப் பார்க்க.. அவளையே பார்த்தபடி பதிலற்றிருந்தான் ஸ்வரன்.
“உங்களை மிஸ் பண்ணியிருந்தா நான் தான் ரொம்பவே வருத்தப் பட்டிருப்பேன் ஆதி” என்றாள் மனதார. அவனிடம் அழகிய புன்னகை, அவள் மனதில் இருந்து வந்த வார்த்தைகளில்.
“ஐ லவ் யூ மிஸ்டர். புருஷ்.. லவ் யு சோ மச்” என்றாள் அவன் கைக்கு தன் இதழ்களால் ஒரு காதல் பரிசளித்தபடி.
அதில் நெகிழ்த்து.. அகம் மகிழ்ந்து போனவன், 
“லவ் யூ டூ மை ஸ்வீட் ஆந்த” என அவளை அணைத்து சில நொடி கழித்து விடுவித்து 
“சரி அனு நீ தூங்கு நாளைக்கு ஆபிஸ் போகணும்” என்று அலாரம் போல் ரிமைண்டர் வைத்துக் கொண்டே இருக்க
“ச்சே.. எவ்வளவு ரொமாண்ட்டிக்கா பேசிட்டு இருக்கேன், அந்த கிரகத்தை ஏன் நியாபகப் படுத்துறீங்க” என்றாள்.
“அப்போ சரி நாளைக்கு லீவ் சொல்லிக்கோ, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றுவிட்டு அவன் படுத்துக் கொண்டான்.
“நான் வேண்டா வெறுப்பா தான் அங்க போய் கம்ப்யூட்டரை தட்டிட்டு இருந்தேன் ஆதி. அந்த லைஃப் சுத்தமா பிடிக்கலை எனக்கு. சொந்தமா எதாவது தொழில் தொடங்கணும் எனக்கு. அப்படியே உங்களை மாறி” என்று கண்கள் மின்னக் கூறிக் கொண்டிருக்க
“பிடிக்கலைனா வேலைய விட்டுடு அனு. ஏன் உன்ன கஷ்டப் படுத்திக்குற” என்றான் திரும்பிப் படுத்தவாறு.
“அது.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நான் யோசிக்குறேன்” என்றவள் அவனருகே படுத்துக் கொண்டு
“கோவில்ல பார்த்தோமே அந்த ஆண்ட்டி.. அவங்க மேல என்ன கோபம் உங்களுக்கு” என்று மெல்ல ஆரம்பித்தாள்.
அவளது கேள்வியில் கண்திறந்தவன், அவள் புறம் திரும்பிப் பார்க்க
“இல்ல.. உங்களை அடிச்ச முன்ன பின்ன தெரியாத என்னையே பழி வாங்காம கல்யாணம் பண்ணி கூட வெச்சு இந்தத் தாங்கு தாங்குறீங்க. அவங்க என்ன உங்களை அடிச்சிருக்கவா போறாங்க..” என்றதில் அவன் முறைப்பை முன்வைக்க
“நீங்க ரொம்ப நல்லவர்ன்னு தான் சொல்லுறேன். முறைக்காதீங்க மிஸ்டர். புருஷ்” என்றவள்
“சரி நீங்க ரொம்ப கஷ்டப்படாதீங்க. எனக்கு அவங்க யாருன்ற உண்மை தெரியும்” என்றுவிட்டாள். 
அதில் அவன் அதிர்வான் என்று பார்க்க.. அப்படி ஒரு அதிர்ச்சியும் தென்படவில்லை அவன் முகத்தில்.
“எனக்கு எப்படி தெரியும்னு நீங்களே கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்கோங்க” என்றாள். சரண் விசயத்தில் அவன் சொன்ன வார்த்தைகளை அச்சு பிசகாது அவள் திருப்பிக் கூற, ஒரு பெருமூச்சை வெளியிட்டவன்
“கோவில்ல வெச்சு நீ அவங்ககிட்ட குரலை உயர்த்தி பேசும்போதே எனக்கு தெரியும்” என்றுவிட்டான் சர்வ சாதாரணமாய்.
சரண் விசயத்தில் ரஞ்சிதா மூலம் தான் ஸ்வரன் உண்மையை தெரிந்து கொண்டுள்ளான் என்பதை கண்டு பிடிக்கவே பல்லவி ஒரு நாள் எடுத்துக் கொண்டாள். ஆனால் அவனோ அடுத்த நொடியில் அவளுக்கான பதிலைக் கூறியிருந்தான். அதிர்ந்தது அவள் முறை ஆனது.
ஆக, அன்று கோவிலில் ஸ்வரன் பிரசாதம் வாங்கி வருவதற்குள் பல்லவிக்கும் அப்பெண்மணிக்கும் இடையில் நடந்த உரையாடல் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவன் வருகையை உணர்ந்து, உடனே குரலை உயர்த்துவதுபோல் காட்டிக்கொண்டு அவள் அங்கிருந்து திரும்பியது எல்லாம் நாடகம் என்று அப்போதே அறிந்திருக்கிறான். 
தான் இப்படி மாட்டிக்கொண்டதை அறிந்தவள், இப்போது இது பற்றி பேசுவது சரியல்ல என்று அதை உடனே ஒதுக்கி அடுத்த டாப்பிக்கை முன்வைத்தாள்.
“ஆதி.! சிவகாமி ம்மா நம்ம வீட்டுக்கு இனிமேல் வரவே மாட்டாங்களாமா.. நீங்க கூட ஏன்னு கேட்டீங்களேஏஏ..” என்றாள் இழுத்து. 
“ஹ்ம்ம்.. ஏன் வரமாட்டாங்க எதாவது பிரச்சனையா..?” என்றான் அவனும் புரியாததுபோல்.
“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை. எதாவது விசேஷம்னா தான் வருவாங்கலாம்” 
“ஓஹோ..!”
“நீங்க உடனே அவசரப்பட்டு அவங்களை இங்க கூட்டிட்டு வந்துறாதீங்க. அவங்க சொன்ன மாதிரி பேரனோ பேத்தியோ வரும்போதே வரட்டும்” என்றுவிட்டாள் போனால் போகிறதென. அதைக் கூறிவிட்டு அவன் முகம் காண
“ஹ்ம்ம்.. சரி அனு” என்றுவிட்டு திரும்பி படுத்துக் கொண்டான். சில நிமிடங்களில்,
“ஆதி.!” என அவன் முதுகை சொரிய
“என்ன தான் வேணும் அனு..?” என்றேவிட்டான்.
“நம்ம வீட்டுல ரோஸ் செடியே இல்ல. எனக்கு பிங்க் ரோஸ்னா ரொம்ப பிடிக்கும்” என்று பதினோரு மணிக்கு பிங்க் ரோஸை இழுத்தாள் பேச்சிற்கு.
“சரி ஒன்னு வாங்கிடலாம்” என்றான்.
“அப்பறம்.. தாத்தாக்கு கிட்டப் பார்வை வந்திருச்சு. பேப்பர் படிக்க சிரமப் படுறார். டாக்டர் கிட்ட காமிச்சு ஒரு கண்ணாடி வாங்கணும்”
“சரி வாங்கிடலாம்”
இப்படியே சிவகாமி அம்மா, சரண் என ஒவ்வொருவராய் இழுத்தாள். அவனும் சரியை மட்டுமே பதிலாய் கொடுத்தான்.
“நம்ம பக்கத்துக்கு வீட்டு பூஜா அக்காக்கு பொண்ணு பொறந்திருக்கா. செம க்யூட். அப்படியே பூப்பந்து மாதிரி சாஃப்டா இருந்தா… கையில ஏந்துனதுமே சட்டுன்னு எனக்கு கண்ணுல தண்ணி வந்திருச்சு..” என்று நெகிழ்ச்சியாய் கூறிக் கொண்டிருந்தவள் பின்,
“எனக்கும் அப்படி ஒன்னு வேணும்” என்றாள் மெல்ல.
“சரி வாங்…” என்றவன் வார்த்தையை பாதியில் நிறுத்திவிட்டு கண்களைத் திறந்து பல்லவியைப் பார்க்க.. அவளோ தன் நகத்தை கடித்துக்கொண்டு புன்னகையுடன் மறுபுறம் திரும்பி அமர்ந்திருந்தாள்.
சில நொடிகள் கடந்து திரும்பிப் பார்க்க இடையில் மூன்று தலையணைகள் பார்டர் வகுத்திருக்க,
“ஆதிஈஈ…” என அவனைப் பிடித்து உலுக்கினாள்.
“டோன்ட் டச்” என்றான் அவள் கையை தட்டிவிட்டு. 
அப்படிச் சொல்லிவிட்டு அவன் சிரிப்பை அடக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்க அவன் அனுவோ அழுகையை ஆரம்பித்திருந்தாள்.
விசும்பல் சத்தம் கேட்டு எழுந்தவன்
“ஹே அனு..! ஏன் அழுற இப்போ” என்றது தான் தாமதம்
“என்ன டோன்ட் டச் சொல்லுறீங்க..?” என்றாள்.
இத்தனை நாள் அத்தனை முறை அவள் சொன்னதெல்லாம் நினைவில் இல்லை. அவன் ஒருமுறை சொன்னது மூன்றாம் உலகப் போரில் வந்து நின்றது. 
“நான் உங்களை அடிச்சதை மனசுல வெச்சிட்டு தானே அவாய்ட் பண்ணுறீங்க..?” என்று ஆரம்பிக்க 
“கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்தா நீ விடமாட்ட போலயே” என அதற்குமேல் அனுவை பேச விடவில்லை அவன்.
பட்டாசாய் வெடிக்கும் பல்லவியின் வாய்க்கு பலத்த பூட்டானது பூட்டப்பட, முதலில் திகைத்தவள் பின் திளைத்து அவளுமே அதில் விரும்பி மாட்டிக் கொண்டாள்.. மௌனத்தைப் போர்த்திக் கொண்டாள். 
சில நிமிடங்களுக்கு பூட்டை விலக்க இருவருமே முயற்சிக்கவில்லை. பல்லவிக்கு சுவாசம் தடைபடவே சாவியைத் தேடி எடுத்தான் ஸ்வரன்.
இதற்கு மேலும் நாங்கள் பாகப் பிரிவினை வகுக்க வேண்டுமா என்று தலையணைகள் எண்ணியபோது ஆளுக்கொரு மூலையில் சென்று சிதறி விழுந்திருந்தது.   
அவள் காதோரக் கூந்தலை மெல்ல விலக்கியவன், தன் அதரத்தால் அதில் கோலமிட்டு 
“அனு..!” என்று அகத்தின் அடி ஆழத்தில் இருந்து அழைக்க
“ஹ்ம்ம்..” என்றவள் குரல் அவளுக்கே கேட்டிருக்க வாய்ப்பில்லை.
“நமக்கு நடந்தது நம்ம குழந்தைக்கு நடக்காது அனு. அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்” 
அது அவளது அரை மயக்க நிலையிலும் அவள் மனதிலும் மூளையிலும் சென்று ஆழமாய்ப் பதிந்தது.
“நீ படிக்காத பக்கங்கள் என் புத்தகத்துல நிறையவே இருக்கு அனு” என்றான்.
“அதை படிக்கும்போது படிக்குறேன். இப்போ உங்க புத்தகம் முழுக்க நான் மட்டும் தான் இருக்கணும்” என்றுவிட்டாள். 
அவன் அதரங்களில் அரும்பிய புன்னகையுடன் அகத்தினில் பெருகிய காதல் அணுக்களுடன் அவன் அனுவை அணு அணுவாய் ஆராதித்து ஆக்கிரமிக்க.. அகமகிழ்ந்து போனாள். 
இனி கீதத்தில் இருந்து ஸ்வரமும் தப்பாது.. பல்லவியும் தப்பாது.. 
ஸ்வரமும் பல்லவியும் இணைந்து ஸ்வரபல்லவி ஆனது. 
 
கீதமாகும்…..

Advertisement