Advertisement

ஓம் ஔவைக்கு அருளினோய் போற்றி!!
12
கூடத்தில் இருந்து அறுசுவை உணவின் மணம் கமழ்ந்து வந்தது..! 
விரிக்கப்பட்டிருந்த தலை வாழை இலையின் ஒரு ஓரத்தில், உப்பும் நார்த்தங்காய் ஊறுகாயும் இடம்பெற்றிருக்க.. இனிப்பு வகையில் பல்லவி கைப்பட தயாரித்த கருப்பட்டி லட்டோடு, சிவகாமி வைத்த காய்கறி அவியலோடு, சுந்தரேஸ்வரனின் சாம்பார் மணந்து கொண்டிருக்க, உளுந்து வடையும் பாசிப்பருப்பு பாயசமும் ஸ்வரன் கொண்டுவர, அதை எல்லாம் கண்டு வாயடைத்துப் போயிருந்தான் சரண்.
அவன் ஒருவனுக்காக அனைவரும் சேர்ந்து தயார் செய்த உணவு வகைகளே அங்கு இடம்பெற்றிருந்தன.
“எதுக்கு பாட்டி இவ்வளவு..?” என தன் முன்பிருந்த உணவு வகைகளைக் கண்டு மலைத்துப்போய் கேட்டான் சரண்.
“எல்லாம் உனக்குத்தான் கண்ணு. முதல் தடவயா இந்த பாட்டி கையால சாப்பிடுற.. உனக்கென்ன பழைய சோத்தையா நான் போடுவேன்? ஒரு காலத்துல நானும் பல்லவியும் தான் அப்படி இருந்தோம்..” என்றதும் அவன் கண்கள் ஒருநொடி பல்லவியை தேடியது.
“கடவுள் புண்ணியத்துல இப்போ எல்லாரும் நல்லா இருக்கோம். இதுக்கு முன்னாடி நீயும் எப்படி இருந்தையோ, என்னென்ன சிரமத்தை எல்லாம் அனுபவிச்சயோ.. எல்லார்த்தையும் மறந்திரு கண்ணு. இனி எந்தக் குறையும் இல்லாம நான் உன்ன பார்த்துக்குறேன். நீ வயிறார சாப்பிடு” என்று அவனுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறினார். 
பல்லவி தப்பித் தவறியும் சரண் அருகில் வரவில்லை. சற்று முன் அவள் அவனுக்கு பரிமாறச் செல்ல, உடனே அவன் அங்கிருந்து எழச்செல்ல.. அதைக் கண்டதும் அவள் அங்கிருந்து சென்று கொண்டாள். வந்த நாளே சரண் மனம் நோகும்படி நடக்காது, அக்கா தம்பிக்குள் இடையே செல்லாது மற்றவர்களும் அமைதியாய் இருந்து கொண்டனர். 
சிவகாமியின் அன்பில் நெகிழ்ந்த சரணோ எதையும் மிச்சம் வைக்காது உண்டு முடித்தான் ஒன்றைத் தவிர. எதை பல்லவி தயாரித்தாள் என்று சொன்னார்களோ அதை அவன் தொட்டும் பார்க்கவில்லை. 
அவன் உண்பான் என கடைசி வரை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவள் தன் கலங்கிய கண்களை பிறர்முன் காண்பிக்காது உள்ளே சென்று கொண்டாள்.
மதிய உணவை முடித்துக்கொண்ட சரண், மாடிப்படியேறி அவன் அறைக்குச் சென்றபின்னரே உள்ளிருந்து வெளியே வந்தாள் பல்லவி. அனைவருக்கும் பரிமாறிவிட்டு பெயருக்கு சில பருக்கைகளை கொறித்துக் கொண்டு கைகழுவிக் கொண்டாள். அதை கவனித்த ஸ்வரன்
“அனு..!” என்றழைத்து “நீ செஞ்ச ஸ்வீட் எல்லாம் உன் தம்பிக்கு மட்டும் தானா..? எங்களுக்கு எல்லாம் இல்லையா..?” என்று கேட்க 
“ச்சே.. வைக்க மறந்துட்டேங்க” என்றவள் உள்ளே சென்று அனைவருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். 
“ரொம்ப நல்லா இருக்கே.. இன்னும் ஒன்னு கொடு” என்று கேட்டு வாங்கிச் சுவைத்தவன்
“நீ ஒன்னு சாப்பிட்டு பாரு” என்று அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் வாயில் ஒன்றை திணிக்க.. அவனை முறைத்துக்கொண்டே மெல்ல முடியாது மென்றாள். 
ஸ்வரன் செய்யும் இனிப்பு வகைகளுக்கு முன் பல்லவியின் லட்டால் போட்டிபோட முடியாது. ஏன் பக்கத்தில் கூட நிற்கமுடியாது. அதை அறிந்தவளோ 
“உங்க அளவுக்கு எல்லாம் வரலை சும்மா சொல்லாதீங்க” என்று சொல்ல, 
“அந்த லட்டு டேஸ்ட் பத்தலை இதை ட்ரை பண்ணு” என அவனிடம் இருந்த ஒன்றை மீண்டும் அவள் வாயில் வைத்து அழுத்த.. அவள் முட்டைக் கண்கள் பெரிதாய் விரிந்தபடி அதையும் வாங்கிக் கொண்டாள். சுந்தரேஸ்வரன் சிவகாமியின் பார்வை அவர்களிடமே. 
லட்டு வாயை அடைத்திருக்க, அவர்களைக் கண்டு புன்னகைக்க முடியாது முயன்று ஒரு புன்னகையை சிந்தி அங்கிருந்து ஓடி மறைந்தாள் பல்லவி. அவளை பின்தொடர்ந்த சிரிப்பு சத்தத்தில் ஐயோவென இருந்தது. 
தலையில் அடித்துக் கொண்டவள் எதேர்ச்சியாக ஜென்னலின் வழியே பார்க்க, சரண் இவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பது தெரிய, உடனே அவன் தன்னை பார்க்காதவாறு மறைந்து நின்றுகொண்டு அவனைப் பார்த்திருந்தாள்.
என்ன நினைத்தானோ சில நொடிகளில் மீண்டும் மாடிக்கே திரும்பிவிட்டான் சரண். 
அவன் நின்றிருந்த விதத்தில், எந்த அளவிற்கு குடும்பத்தாரின் அன்பிற்கும் அரவனைப்பிற்கும் ஏங்கிருப்பான் என்பது புரிந்தது பல்லவிக்கு. அது தன்னால் தான் அவனுக்குக் கிடைக்காது போனது என்ற எண்ணத்தில் தன்னிடம் வெறுப்பை உமிழ்கிறான் என்றும் புரிந்தது. 
அதை சரிசெய்தே ஆகவேண்டும். அவன் வாய்ப்பளித்தால் தானே அது சாத்தியம். கடந்ததை எல்லாம் பேசி அவன் நிம்மதியை இழக்கச்செய்ய விரும்பவில்லை அவள். அதற்கு அவளை தவறாக எண்ணுவதே மேல் என்று தோன்றியது. இவ்வளவு நாள் எங்கோ இருந்தான்.. இன்று தன்னோடு இருப்பதே போதுமானதாய் இருக்க, மற்றவர்களை ஏற்றுக் கொண்டதுபோல் தன்னையும் ஒருநாள் ஏற்றுக்கொள்வான் என்று நினைத்தாள்.. நம்பினாள்.
அன்றைய நாள் சரண் வந்த நிம்மதியிலேயே இனிமையாய் கழிந்தது பல்லவிக்கு. அலுவலகத்திற்கும் விடுப்பு கூறியிருந்தாள். மறுநாள் அலுவலகம் சென்றுவிட்டு சிவகாமி அம்மாவின் இல்லத்திற்கே வர, அதுவரை இயல்பாய் சிவகாமியோடு பேசிக்கொண்டிருந்த சரண் அவளைக் கண்டதும் உடனே எழுந்து வேகமாய் உள்ளே சென்றுகொண்டான்.
அவளும் அவனோடு பேச முயற்சித்துக் கொண்டே இருக்க, அவனோ அவளைப் பார்த்தாலே பத்தடி தள்ளியே சென்று கொண்டிருந்தான். தாத்தா பாட்டியோடு அவனாகவே இயல்பாய் பேச முயற்சித்தான். ஸ்வரனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினான். ஆனால் பல்லவியிடம் காண்பித்த ஒதுக்கத்தை மட்டும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சிவகாமியோடு சரண் நன்கு ஒட்டிக்கொண்டான். அவர் பல்லவியிடம் காட்டும் அன்பில் அவன் அவரிடமும் ஒதுக்கம் காண்பித்தாலும் காண்பிக்கலாம். அவனுக்கு தற்போது தனிமை தேவை. அது அவன் வீடு.. அவன் பாட்டி.. அவன் குடும்பம் என்ற எண்ணம் வரவேண்டும். தான் இங்கிருக்கும் வரை அவன் கூட்டிற்குள் அடைந்து கொள்வான் என்று தோன்ற, அன்றைய நாளை மட்டும் அங்கு கழித்துவிட்டு மறுநாள் மாலை ஸ்வரனை அழைத்துக்கொண்டு அவர்கள் இல்லம் திரும்ப முடிவெடுத்தாள் பல்லவி. அவள் கூறியது ஸ்வரனிற்கும் சரியெனப்பட, தன் தாத்தாவையும் அவளையும் அழைத்துக்கொண்டு அவன் வீட்டிற்கே வந்துவிட்டான். 
மூவரும் ஒன்றாய் அமர்ந்து இரவு உணவை முடித்துக்கொண்டு பின் அவரவர் அறையில் அடைக்கலம் புக, மீதி வேலையை முடித்துவிட்டு ஸ்வரனோடு பேசவே காத்திருந்தவளாய் அவர்களது அறைக்குள் நுழைந்தாள் பல்லவி. 
அவளுக்காகவே காத்திருந்தவன் போல் அவனும் அமர்ந்திருந்தான். கதவை சாற்றி தாளிட்டவள்,
“தூங்கலையா நீங்க..?” என்று கேட்டபடி அவன் அருகில் வந்தாலும்,
‘நீ இன்னைக்கு தூங்கி தான் பாரேன்’ என்னும் பாவனை இருந்தது அவளிடத்தில்.
“சப்போஸ் நான் தூங்கியிருந்தாலும் நீ வந்து என்னை தட்டி எழுப்பத்தான் போற” என்றான் அவனும்.
“கரெக்ட்.. நான் உங்ககிட்ட நெறைய பேசணும். அங்க அம்மா வீட்ல பேச சந்தர்ப்பமே கிடைக்கல” என்று குறைபட்டுக் கொண்டவள்
“சரண் எப்படி உங்களோட வர சம்மதிச்சான்..?” என்று தனது முதல் கேள்வியை முன்வைத்தாள்.
“வரலைனா உன்ன வீட்ட விட்டு அனுப்பிடுவேன்னு சொன்னேன். உடனே வந்துட்டன்” என்று விளையாட்டாய் அவளிடம் கூற, அவனை பஞ்சணையால் பதம் பார்த்தவள்
“அவன் உங்ககிட்ட எப்படி இயல்பா பேசுறான்..? எனக்கு ஆச்சர்யமா இருக்கு” என்றாள் உள்ளே ஒரு ஓரத்தில் எட்டிப் பார்த்த பொறாமையில்.
“உன் புருஷன்னு தெரிஞ்சிருந்தும் என்னை மனுஷனா மதிச்சு அவன் என்கிட்ட பேசுறானேன்னு நான் அதிர்ச்சில இருக்கேன் இதுல உனக்கு ஆச்சர்யமா வேற இருக்கா..? இது ஆச்சர்யம் மாதிரி தெரியலையே பொறாமை மாதிரி இல்ல தெரியுது”
“போங்க ஆதி” என அவள் முகம் சுருங்கிட,
“அனு.! சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். நான் இருக்கேன் தானே” என்றதும் தான் அவளிடம் கொஞ்சம் எட்டிப் பார்த்தது புன்னகை.
“ஆதி.! சரண் விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுதுன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்றாள் சி.ஐ.டி போல்.
‘எப்படி’ என அவன் புருவம் உயர்த்த
“ரஞ்சிதா மேடம்..?”
‘சரி’ என தலையசைத்தான்.
“அவங்க மூலமான்னு உறுதி படுத்திட்டேன். அவங்களை உங்களுக்கு எப்படித் தெரியும்னு நீங்கதான் சொல்லணும்” என்றுவிட, அவன் சொல்லத் துவங்கினான்.
“இந்த ஆந்தைக்கு எதோ பிரச்சனை இருக்குன்னு இது நைட் ஷிஃப்ட் போகும்போதே கண்டுபிடிச்சுட்டேன். அப்போவே இதை பாஃலோ பண்ணி அன்பு அறக்கட்டளைக்கு தான் போகுதுன்னு தெரிஞ்சுகிட்டேன். ரஞ்சிதா மேடம் கிட்ட விசாரிச்சப்போ, நீ அங்கிருக்கறவங்களுக்கு கான்ட்ரிப்யூட் பண்ணுறதா சொல்லி உன்ன பத்தின மத்த டீடைல்ஸ் சொல்ல மறுத்துட்டாங்க. அதை அப்போ நான் பெருசா எடுத்துக்கலை” 
‘நமக்கு தெரியாம என்னென்னவோ நடந்திருக்கே’ என்று பார்த்திருந்தாள் பல்லவி.
“நீ அன்னிக்கு லேட்டா வந்ததும் இல்லாம ஆபிஸ் தான் போய்ட்டு வரேன்னு என்கிட்ட பொய் சொன்னபோதே அகைன் நீ அங்கதான் போயிருப்பைன்னு ஒரு கெஸ் இருந்துது. அப்போ அதீஸ்வரனா இல்லாம மிஸ்டர். அனுபல்லவியா அவதாரம் எடுத்து ரஞ்சிதா மேடமை மறுமடியும் சந்தித்து பேசும்போது..” என நிறுத்திவிட்டு அவளைப் பார்க்க, 
‘நீ பொய் சொன்னாய்’ என்பதிலேயே அவள் முகத்தை கீழே தொங்கப் போட்டுக் கொண்டாள்.
“அப்போவும் அவங்க உண்மையை சொல்லல. ரொம்ப கான்ஃபிடன்சியலா தான் வெச்சிருந்தாங்க. பல்லவிக்கு இப்போதிக்கு நல்லது பண்ணுறதா நினைச்சிட்டு நாளைக்கு நீங்களே அவளுக்கு கெடுதல் பண்ணிடாதீங்கன்னு சொன்னதும் தான் சரண் பத்தின உண்மையை சொன்னாங்க. சரண் என் பொறுப்புன்னு நான் நம்பிக்கை கொடுத்ததால தான் நீ அங்க போன போது.. அவங்க சரண் கிட்ட, தெரியாம உண்மையை சொல்லியிருக்கணும். நீ அவனை என் சம்மதத்தோட அழைச்சிட்டு போக வந்திருப்பைன்னு அவங்க நினச்சிருக்கலாம். சரி எல்லாம் நன்மைல தானே முடிஞ்சிருக்கு” என்றான்.
அவள் மௌனமாய் கண்ணீர் வடிக்க.. அவளது முகத்தை நிமிர்த்தியவன், வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு அழாதே என்று இடவலமாய் தலையசைக்க.. லேசாய் புன்னகைத்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
“சரண் என்ன ரொம்ப வெறுக்குறான் ஆதி. கஷ்டமா இருக்கு” 
“அனு.! நான் தான் சொன்னனே.. கொஞ்ச நாள் பொறு. அவனுக்கு கொஞ்சம் டைம் கொடு. அப்பறம் அவனே உன்கிட்ட வருவான்”
“நீங்க வர வைப்பீங்களா..?” என்று அவனை நிமிர்ந்து பார்க்க,
இல்லை என தலையசைத்தவன் 
“அவனே வருவான். அவன் அக்கா மேல அவனுக்கு அவ்வளவு பாசம் இருக்கு. இப்போதிக்கு சரியான புரிதல் இல்லை. கோபம் அவனை புரிஞ்சுக்க விடாம தடுக்குது. சின்னப் பையன் தானே.. இத்தனை வருஷம் எங்கயோ தனியா இருந்தான் திடீர்னு அவனுக்கு குடும்பம்னு ஒன்னை காட்டுனா, உள்ள வரவும் முடியாம விட்டு விலகிப் போகவும் முடியாம இருக்கான். கொஞ்சம் டைம் கொடு. புரிஞ்சுப்பான். உன்ன புரிஞ்சுகிட்டதும் அவனே வருவான்” என்றான்.
“அப்படியும் அவன் வரலைன்னா..?” 
“அப்போ நான் நிச்சயம் ஸ்டெப் எடுப்பேன்” என்றதும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். 
சில நொடிகளில் அவன் சட்டையை நனைத்த ஈரத்தில்,
“என்ன அனு மறுபடியும் அழறியா..?” என அவளை பிரித்தெடுக்க.. அட்டை போல் ஒட்டிக் கொண்டவள்
“ப்ளீஸ் ஆதி” என்றுவிட்டாள். அதில் அவன் அமைதியாகிவிட, அவள் இறுக்கம் கூடியது. அவள் தலையை மெல்ல நீவிக் கொடுத்தான்.
“என் அப்பா அம்மாகிட்ட கிடைக்காத அன்பும் அரவணைப்பும் பாசமும் பாதுகாப்பும் எல்லார்த்தையும் நான் உங்ககிட்ட பார்க்குறேன் ஆதி” என்றாள் உணர்வுப்பூர்வமாய்.
“நீ சொல்லிட்ட நான் சொல்ல அவ்வளவு தான் நமக்குள்ள வித்தியாசம் அனு” என்றான்.

Advertisement