Advertisement

நம்ப முடியாமல் ஸ்வரனைப் பார்க்க.. அவனோ அழகாய் கண் சிமிட்டி புன்னகைத்தான். 
பின் பல்லவி சரணையே பார்க்க, அவனோ அவளைக் கண்ட மாத்திரம் நாற்புறமும் கயிற்றால் கட்டி இழுக்கப்பட இளஞ்சிறுத்தை போல் எந்தப் பக்கம் பாய்வதென்று தெரியாது சீறிக் கொண்டு நின்றிருந்தான்.
“சரண்..! நீ உள்ள போ ப்பா” என்று சுந்தரேஸ்வரன் கூற, பல்லவியை முறைத்துக் கொண்டே அவனது பேகை தூக்கிச் சென்றான். அதெல்லாம் அவளுக்கு கவலையில்லை.. அவன் வந்ததே போதுமானதாய் இருந்தது.
தாத்தா அவன் பெயரைக் கூறி அழைத்ததை கவனித்தவள், 
“சரண் பத்தி நம்ம தாத்தாக்கு தெரியுமாங்க?” என சந்தேகமாய் வினவினாள் ஸ்வரனிடம்.
“இன்னொருத்தருக்கும் தெரியும் அனு. பின்னாடி திரும்பி பாரு” என்றதும் மெல்லத் திரும்பினாள். 
அங்கு கண்கள் சிவக்க நின்றிருந்தார் அவளது சிவகாமி அம்மா.
“பல்லவி கொஞ்சம் இங்க வா” என்ற அவரது குரலில் அவள் ஸ்வரனைத் திரும்பிப் பார்க்க, 
“ஆல் தி பெஸ்ட்” என அர்ச்சனைகள் வாங்கி வர அனுப்பி வைத்தான்.
‘தனியா கோர்த்து விட்டுட்டீங்களே’ என அவனைப் பார்த்தபடியே சிவகாமியோடு சென்றாள்.
உள்ளே அமர்ந்திருந்த சரணுக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை. அன்பு அறக்கட்டளையில் நடந்தவற்றையே நினைவில் வந்து போனது.
ரஞ்சிதாவின் எந்த ஒரு விளக்கத்தையும் அவன் ஏற்பதாய் இல்லை.
“உங்களுக்கு தெரிஞ்சிருந்தும் நீங்களும் என்கிட்ட இருந்து மறச்சிடீங்க மேடம். நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க” என்று சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பவனைக் காண அவருக்குமே வருத்தமாய் இருந்தது.
“பல்லவி உன்னை அழச்சிட்டு போறதா தான் ப்பா இருந்தா.. அதுக்குள்ள அவளுக்கு எதிர்பாராம கல்யாணம் ஆகிடுச்சு. அவ என்னப்பா செய்வா?”
“நான் இப்போவும் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல மேடம். இப்படியே இங்கயே இருந்துக்குறேன். உங்களுக்கு நான் இருக்குறது கஷ்டமா இருந்தா சொல்லுங்க நான் இங்க இருந்து போய்டுறேன்”
“என்ன சரண், இப்படி எல்லாம் பேசுற? இவ்வளவு நாள் இங்க இருந்த, இனி நீ உன் குடும்பத்தோட இருக்குறது தானப்பா சரி. அவங்க வந்து உன்னை அழைக்கும்போது அதை மறுக்க நான் யாருப்பா?”
“இவ்வளவு நாள் இல்லாத அக்கறை இனிமேலும் எதுக்கு மேடம்? நீங்க தானே என்னை ஆரம்பத்துல இருந்து பார்த்துக்கிட்டீங்க. நான் இங்கயே இருந்துக்குறேன். எங்கயும் போகல” என்றுவிட, அவர் வெளியில் நின்றிருந்த ஸ்வரனைப் பார்த்தார். 
இனி தான் பார்த்துக் கொள்வதாய் ஜாடை செய்தவன், உள்ளே வந்தான்.
“உனக்கு உங்க அக்கா மேல தானே கோபம்.. மாமா மேல இல்லையே..?” என்றதில் அவனை நிமிர்ந்து பார்த்தான் சரண்.
“எனக்காக வர மாட்டியா?” என்றதில் உடனே தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.
அவனது செய்கை பல்லவி செய்வதுபோல் இருந்தது ஸ்வரனுக்கு. அதில் லேசாய் புன்னகைத்தவன்,
“சரி நீ என்கூட வா. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து உங்க அக்காவை ஒரு வழி செய்யலாம். அங்க வந்து நீயே அவளை பனிஷ் பண்ணு. வேணும்னா அவளை வீட்ட விட்டு அனுப்பிடலாமா..?” என்றதும்
“அதெல்லாம் வேண்டாம்” என்றான் உடனே. 
அதில் மீண்டுமோர் லேசான புன்னகை ஸ்வரனுக்கு விரிய,
“நீ எங்க யாருக்காவும் வர வேண்டாம். உனக்கு ஒரு பாட்டி இருக்காங்க. ரொம்ப வயசானவங்க. உன் அக்கா அங்கிருந்து வந்தப்பறம் அவங்க மட்டும் தனியா இருக்காங்க. உன்னை பார்த்தா அவங்க ரொம்ப சந்தோசப்படுவாங்க. நீ உன் பாட்டிய பார்க்க அங்க வர மாட்டியா?” என்றதில் சரண் கொஞ்சம் யோசிப்பதாய் தான் பட்டது.
மீதத்தை ரஞ்சிதா பார்த்துக் கொண்டார். 
“என் பேச்சை கூட கேட்க மாட்டியா ப்பா? நான் உனக்கு நல்லது தான் நினைப்பேன்னு நீ நம்புனா உன் மாமாவோட உடனே கிளம்பிப்போ. அப்பறம் உன் விருப்பம். உன்னை இங்க யாரும் கட்டாயப்படுத்தல” என்றுவிட, அவனால் மறுக்க முடியாது மனதே இல்லாது ஸ்வரனுடன் கிளம்பி வந்திருந்தான்.  
வந்ததும் முதலில் அவன் கண்கள் தேடியது என்னவோ பல்லவியைத் தான். அவனை அழைத்துச் செல்லக் கூட அவள் வரவில்லையே..! அவனுக்கும் அவள்மீதான கோபத்தின் அளவு துளியும் குறையவில்லை. அந்நேரத்தில் அவளைக் கண்டிருந்தாலும் முகத்தில் அடித்தாற்போல் கேள்விக் கணைகளை தான் முன்வைத்திருப்பான்.
அப்போது அவன் எதிர்கொண்டது..? 
அவன் முன்னால் பல்லவியை நிறுத்தாது சிவகாமியை நிறுத்தியிருந்தான் ஸ்வரன்.
சரணனின் மனநிலையில் தான் சிவகாமியும் இருந்தார். சரண் அருகில் வந்தவர் அவன் கன்னத்தில் இருந்து ஆரம்பித்து தோள்கள் வரை தொட்டுப் பார்த்து பெயரனை உச்சி முகர, அவன் கண்களிலும் நீர் கோர்த்தது.
“நீ அழாத கண்ணு. உனக்கு இந்த பாட்டி இருக்கேன். முதல்ல உள்ள வா, எதாவது சாப்பிடு. மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்” என அவனை அழைத்துச் செல்ல, அவனும் அமைதியாய் உடன் சென்றான். 
வீட்டில் இருக்கும் எள்ளுரண்டை, கடலை உருண்டை என அனைத்தையும் தட்டில் பரப்பி எடுத்து வந்து அவனுக்கு நீட்ட, அவன் தயங்கியபடியே எடுத்துக் கொள்ள.. அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை. 
அவன் அருகிலேயே அமர்ந்து அவனையே பார்த்திருந்தார் சிவகாமி. அவனும் புன்னகையுடன் அவரையே பார்த்திருந்தான். சுந்தரேஸ்வரன் தான் பேசிக் கொண்டிருந்தார். ஸ்வரன் பார்வையாளனாய் நின்றிருக்க, பல்லவி அப்போது தான் உள்ளே வந்தாள். 
அவளைக் கண்டதும் அத்தனை நேரம் இருந்த அமைதி அவனிடம் இருந்து போயிருக்க, அதை கவனித்து சரணை உள்ளே அனுப்பி வைத்துவிட்டார் தாத்தா. 
வாழ்க்கை ஒரு நொடியில் எப்படி எல்லாம் திசை மாறிப் போகிறது. உறவுகளும் உணர்வுகளும் புதிது புதிதாய் உருவாக.. உருமாற.. கண்மூடித் திறக்கும்முன் இதுவரை இருந்த உலகத்தையே உருட்டிப் போட்டு விடுகிறது. காலம் ஏற்படுத்திய காயத்தைப் போக்க காலத்தால் மட்டுமே முடியும். 
இன்னுமே பல விடை தெரியா கேள்விகள் சரணுக்குள் இருந்தது. அதற்கு பல்லவியிடம் மட்டுமே விடையை எதிர்ப்பார்க்கலாம். அவளிடம் விடை கேட்க அவனுக்கு விருப்பம் இல்லை. பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள தக்க நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
பல்லவியை அழைத்துக் கொண்டு பின்வாசலுக்கு சென்றார் சிவகாமி.
“நான் தூக்கி வளர்த்தவ எனக்கு தெரியாமையே ரகசியமா எல்லா விசயத்தையும் செய்யுற அளவுக்கு வந்துட்டா.. அவ்வளவு பெரிய மனுசி ஆகிட்ட..? ரொம்ப சந்தோசம் பல்லவிமா” என்றார் ஆதங்கமாய்.
“ம்மா.. அப்படி எல்லாம் இல்ல ம்மா. உங்ககிட்ட சொல்லி அவனையும் நம்ம வீட்டுக்கு அழச்சிட்டு வரலாம்னு தான் இருந்தேன். ஆனா அப்போதைய சூழ்நிலையில சரண் அங்கேயே இருக்குறது தான் சரின்னு பட்டுது. அப்பறம் உங்களுக்கும் உடம்பு முடியாம போய்டுச்சு, அவசரமா எனக்கு கல்யாணமும் நடந்திருச்சு. சொல்றதுக்கான சந்தர்ப்பமே அமையலை” என்று தன் பக்கத்தை விளக்க.. அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர சிவகாமிக்கும் வேறு வழியில்லை.
“எது எப்படியோ கடவுள் அவனை நம்ம கிட்ட கொண்டாந்து சேர்த்திட்டாரு. என்ன நடந்துது பல்லவி..? குழந்தை மாறி போயிடுச்சா..? நம்ம தான் குழந்தை இறந்து போயிடுச்சுன்னு நினச்சிச்டோமா? இத்தனை வருசத்துக்கு அப்பறம் எப்படி உன் தம்பிய கண்டு புடிச்ச?” என்று கேட்கவும் தான் புரிந்தது, அவர் தன் தாய்க்கு பிறந்த குழந்தையை சரண் என்று எண்ணிக்கொண்டார் என.
மேலறையில், யோசனையில் இருக்கும் சரணைப் பார்த்தபடி அறைக் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தான் ஸ்வரன். அவனருகில் அமர்ந்தவன்,
“சரண்..! இதுவரைக்கும் உனக்கு யாருமில்லைன்னு நீ நினைச்சிருக்கலாம்  ஆனா இனி உனக்குன்னு உன் குடும்பத்துல நாங்க இருக்கோம்” என்றான் உன் குடும்பம் என்றதில் அழுத்தம் கொடுத்து. 
அதற்கு மெல்ல தலையசைத்தான் சரண்.
“உடனே இத்தனை உறவுகல உன்னால ஏத்துக்க முடியாது தான். மெல்ல மெல்ல நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். நீ இன்னும் சின்னப் பையன் இல்ல. எல்லார்த்தையும் புரிஞ்சுக்கற பக்குவம் உனக்கு இருக்குன்னு நான் நம்புறேன். இதுவரை நீ இருந்த நிலைக்கு சூழ்நிலை தவிர பல்லவி காரணமில்லை” என தொடர்ந்து பேச, அவனிடம் அமைதி மட்டுமே. 
அவன் முகமாற்றத்தை கவனித்து,
“கொஞ்சம் வெளிய போய்ட்டு வரலாம் வா” என அதற்குமேல் வேறெதுவும் பேசாது சரணை தன்னுடன் வெளியில் அழைத்துச் சென்றிருந்தான் ஸ்வரன்.
நேரம் கடக்க, இங்கு பல்லவி கூறிய செய்திகளைக் கேட்டு அதிர்ந்துபோய் நின்றிருந்தார் சிவகாமி. 
“இதெல்லாம் முன்னாடியே ஏன் என்கிட்ட சொல்லல பல்லவி நீ..? நீ ஒருத்தியே எவ்வளவு சிரமப் பட்டிருக்க” என கோபமாய் வினவ, 
சில நொடி அமைதி காத்தவள்,
“இதுக்கு மேலயும் உங்களுக்கு பாரம் ஏத்த நான் விரும்பல ம்மா” என்றாள்.
அவளது பதிலில் அவளை ஆரத்தழுவிக் கொண்ட சிவகாமி,
“அதுக்காக பாரத்தை நீ சுமக்க ஆரம்பிச்சுட்டயா..?” என்று கண்கள் கலங்க கேட்க
“அவன் என் தம்பி ம்மா.. எனக்கு என்னிக்கும் அவன் பாரம் இல்லை” என்றாள் உறுதியுடன். அவளை எண்ணி அத்தனை பெருமையாய் இருந்தது சிவகாமிக்கு.
“அவனுக்கு முழு உண்மையும் தெரியாது ம்மா.. இப்போ அவன் என்மேல கோபமா இருக்கான். கொஞ்ச நாளைக்கு உங்க கூடவே இருக்கட்டும்..” என கெஞ்சலாய் கேட்க
“உனக்கு தம்பினா எனக்கு யாரு பல்லவி..? இனி என் பேரனை நான் பார்த்துக்குறேன். என்கூடத்தான் இருப்பான். நான் எங்கயும் அனுப்பமாட்டேன்” என்றதில் பல்லவி கண்கலங்க தன் சிவகாமி அம்மாவை அணைத்துக் கொண்டாள். 
“நீ எனக்கு தெரியாம மறச்சிருந்தாலும் மாப்பிள்ளை கிட்ட மறைக்காம உண்மையை சொன்னதே எனக்கு சந்தோசம் பல்லவி” என்று அவர் சொன்னதும் தான் அவளுக்கு நினைவே வந்தது, ஸ்வரன் எப்படி விடயத்தை தெரிந்துகொண்டான் என்று. 
அன்றைய நாளில் அவனிடம் அனைத்தையும் மறைக்காது கூறிவிட்டோம் என்ற நிம்மதியில் அனைத்தையும் மறந்திருந்தாள். சரண் விடயம் அவனுக்கு எப்படி தெரிந்தது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை.
“எங்க தேடினாலும் ஸ்வரன் தம்பி மாதிரி ஒருத்தரை பார்க்க முடியாது பல்லவி மா.. நீ புரிஞ்சு நடந்துக்கறது வேற, உன்னை ஒருத்தர் புரிஞ்சு உன் மனசு நோகாம நடந்துக்கறது வேற. இந்த வாழ்க்கை கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கணும்” என்று சொல்ல, மனம் நிறைந்துபோய் புன்னகைத்தாள் பல்லவி.
வெளியே சென்ற ஸ்வரன் திரும்பி இருந்தான். சரணுக்குத் தேவையான உடைகள் மற்றும் இதர பொருட்கள் எல்லாம் வாங்கிவிட்டு அவனை மேல் அறைக்கு அனுப்பிவிட்டு பின்வாசலுக்கு பல்லவியைத் தேடி வந்திருந்தான். 
அவன் சென்று திரும்பும் வரையில் அவர்களது உரையாடல் தொடர்ந்திருக்க.. பல்லவிக்கு பாட்டியிடம் நிறைய கிடைத்திருக்கும் என்ற எண்ணத்தில் அங்கு வந்தான்.
“சரண் இங்கயே இருக்கட்டும் பல்லவி. உனக்கு பார்க்கணும்னு தோணுனா நீ இங்க வந்துட்டு போ” என்றார் சிவகாமி.
“நீங்களும் அவனோட அங்க வந்து ரெண்டு நாள் இருந்துட்டு போலாம் தானே ம்மா” என கெஞ்ச
“நான் அங்க வரமாட்டேன். நான் சொன்னா சொன்னது தான்” என்றபடி திரும்ப, அங்கு ஸ்வரன் நின்றிருப்பது கண்டு வேகமாய் உள்ளே வந்துகொண்டார்.
“என்ன அனு பாட்டி சமாதானம் ஆகிட்டாங்களா..? எனக்கு தெரியும் நீ சாமதானம் செய்திடுவேன்னு”
“அதான் என்னை தனியா விட்டுட்டு போய்ட்டீங்களா..?” என்று முறைக்க,
“உன் சிவகாமி அம்மா கிட்ட உனக்கென்ன பயம்..? நீதானே அவங்ககிட்ட இவ்வளவு பெரிய விசயத்தை மறச்சது. சோ நீதான் பேசணும். இதுக்கெல்லாம் உனக்கு நான் சப்போர்ட் பண்ணமாட்டேன்” என்றுவிட்டான்.
“சரி போங்க நானே பேசிட்டேன். ஆமா சரண் எங்கங்க..?” என்று கேட்க
அவர்கள் வெளியே சென்றுவந்ததை எல்லாம் கூறினான். அவளும் பாட்டியோடான உரையாடலைத் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்டவன்
“கடைசியா பாட்டி ஏன் நம்ம வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னாங்க?” என்று கேட்டதில் தன் முட்டைக் கண் விரித்து முழித்தவள் அங்கிருந்து நகர எத்தனிக்க, அவள் கைப்பிடித்து தன்னருகில் இழுத்தவன்
“எங்க ஆந்த ஓடப் பார்க்குற? பதில் சொல்லிட்டு போ” என 
“நைட் சொல்லுறேன்” என்று அவன் கையை உதறிவிட்டு ஓடியவள் வாசற்படி ஏறுவதற்கு ஒரு நொடி நின்று அவனைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றுகொண்டாள்.
அவள் செய்கையை ரசித்துப் பார்த்தபடி இருந்த ஸ்வரனிற்கு, பாட்டி கூறியதன் பொருள் புரிய தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கீதமாகும்….

Advertisement