Advertisement

ஓம் ஓங்காரனே போற்றி!!
11
ஒன்பது மணி பத்து மணித்துளிகள்..!  
கடிகாரம் காட்டிய நேரத்தில் குற்றவுணர்வு ஓங்க, ஒடுங்கிப்போய் நின்றிருந்தனர் ஸ்வரனும் பல்லவியும். 
சுந்தரேஸ்வரனை வீடு முழுக்கத் தேடிவிட்டனர். எங்கு சென்றார் என்று இதுவரையில் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
“என்னால தான் தாத்தா எங்கயோ போயிட்டாரு” என்று புலம்பிய பல்லவியிடம்,
“அனு..! நீ கொஞ்ச நேரம் பேசாம இரு. போதும் இவ்வளவு நேரம் பேசுனதே” என்ற ஸ்வரன், தன் தாத்தா குறித்த சிந்தனையில் இருந்தான். 
இப்படி தகவல் தெரிவிக்காது அவர் எங்கும் சென்றதில்லை இதுவரை. அக்கம் பக்கம் எல்லாம் விசாரித்து வந்தவன் பின் யோசனையோடு சுரேகாவிற்கு அழைத்தான்.
“அண்ணா..! தாத்தா இங்கதான் இருக்காரு. நீங்க நம்ம சிங்கத்தோட இங்கயே வாங்க” என்று மறுமுனையில் பதில் வரவும்.. ஒரு நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டவன், பின் விரைந்து வீட்டைப் பூட்டிவிட்டு.. பல்லவியோடு அங்கு கிளம்பினான்.
செல்லும் வழியெல்லாம் ஸ்வரனோடான உரையாடல்களே பல்லவியின் நினைவில் இருந்தது.
“ஆதி..! நான் ஃபர்ஸ்ட் டைம் அன்னிக்கு லேட்டா வந்தேன்ல, அப்போ எனக்கு ஆபிஸ் வொர்க் எல்லாம் இல்லை. நான் வெளிய போயிருந்தேன்” என மெல்ல ஆரம்பித்தாள், அவன் அதிர்ச்சி அடைவான் என்று எண்ணி.
“தெரியும் அனு. அன்பு அறக்கட்டளை தானே போயிருந்த?” என்று சொல்லி அவளுக்கு அவன் தான் அதிர்ச்சி அளித்திருந்தான்.
“நான் யாரை பார்க்கப் போனேன்னா…” 
“சரண்…” என்றிருந்தான் ஸ்வரன்.
அவன் தவறாக எடுத்துக் கொண்டானோ என்று எண்ணி உடனே
“சரண் யாருன்னா…” என்று கூற வர,
“உன் தம்பி” என்றிருந்தான் வெகு இயல்பாய்.
‘உங்களுக்கு எப்படி’ என ஆச்சர்யமாய் பார்த்திருக்க
“இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு நீயே தெரிஞ்சுக்கோ” என்றிருந்தான் அழகாய் கண்சிமிட்டி.
“எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட இதைப்பத்தி பேசல?”
“நீயே ஒருநாள் இதை பத்தி என்கிட்ட சொல்லுவைன்னு தெரியும். அதான் சொல்லும்போது சொல்லட்டும்னு விட்டுட்டேன்”
“சாரி ஆதி. உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும்னு தான் இருந்தேன், ஆனா நமக்குள்ளயே ஒரு மிஸன்டர்ஷ்டாண்டிங் இருந்துது. அப்போ இதை பத்தி என்னால பேசமுடியல” 
“சுரேகா கிட்ட பணம் ஏற்பாடு செஞ்சதும் சரணுக்காக தானே?”
ஆமாம் என்று தலையசைத்தாள்.
“ஏன் அதை என்கிட்ட கேட்டிருக்க கூடாதா”
“கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆனாலும் நீங்க இதுவரைக்கும் என்கிட்ட ஒருமுறை கூட என் சேலரி பத்தி விசாரிச்சதில்ல. எனக்குன்னு ஒரு ட்ரெஸ் கூட நான் இதுவரைக்கும் எடுத்ததில்லை. என்னோட தேவைகள் எல்லார்த்தையும் நீங்களே தான் தொடர்ந்து பார்த்துக்கறீங்க. அப்படி இருக்க, உங்ககிட்ட எப்படி கேட்குறது? இது என் கடமை. நான் தான் செய்யணும். உங்களுக்கும் அதிக செலவு வைக்க கூடாதில்லை”
“இப்போ சொல்லுறேன் நல்லா புரிஞ்சுக்கோ அனு. நமக்கு இடையில என்னிக்கும் பணத்தை கொண்டு வராத. இதுவே வேற சூழ்நிலையா இருந்தா உன்கிட்ட பேசி இருக்கிற விதமே வேற. உனக்கு செய்ய கணக்கு பார்ப்பேனா நான்? உன்னோடது எல்லாம் என்னோடதுன்னு ஆனப்பறம் சரண் உன் பொறுப்பில்லை.. இனி அவன் நம்ம பொறுப்பு” என்றான், நம்ம பொறுப்பு என்பதில் அழுத்தம் கூட்டி.
அவன் கொடுத்த அழுத்தத்தில் அவள் அகம் ஆனந்தமடைந்தாலும், சரிவிகிதத்தில் வருத்தமும் இருந்தது அதில். 
“இன்னும் என்ன அனு..?” என்றான் அவள் வருத்த ரேகைகளை சரியாய் படித்து.
“சரண் என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டுவான் போல ஆதி” என்றவள் சரண் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தைச் சொல்ல, அனைத்தையும் பொறுமையாய் கேட்டவன்
“உன் மூலமா விஷயம் தெரிஞ்சிருந்தா அவன் இப்படி ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டான் அனு. இனி நான் பார்த்துக்கறேன். நீ கவலைப் படாத” என்றுவிட்டான் முடிவாய். 
சிவகாமியின் வீடு வந்திருக்க.. பல்லவி வண்டியில் இருந்து இறங்காதிருப்பது கண்டு அவள் புறம் நோக்கினான்.
“அனு..!” என்ற ஸ்வரனின் உள்ளம் வருடும் அழைப்பில், சிந்தனை கலைந்து சுற்றுப்புறம் உணர்ந்து கீழே இறங்கினாள். 
“கொஞ்ச நாள் பொறு. சரணை நானே உன்கிட்ட கூட்டிட்டு வர்றேன்” என்றதும் ஆம்பல் மலரென அவளிதல்களில் அழகாய் விரிந்தது.
இருவரும் ஜோடியாய் வீட்டினுள் நுழைய, அங்கே அவர்கள் கண்ட காட்சியில் கண்கள் விரிய, இருவரிடமும் அழகிய புன்னகை.
தோளில் கிடந்த துண்டை எடுத்து தன் தலையில் கட்டியபடி, குருமாவை கலக்கிவிட்டுக் கொண்டிருந்தார் சுந்தரேஸ்வரன். அவரருகில் தோசை வார்த்துக் கொண்டிருந்தார் சிவகாமி.
“சிவகாமி..! இதை ருசி பார்த்து சொல்லுங்க” என அவர் கரண்டியை நீட்ட
“நீங்க சமைச்சதை ருசி பார்க்கவே வேண்டாம். அதெல்லம் ஜம்முனு இருக்கும்” என்று சிவகாமி கூற
“கைய நீட்டுங்க முதல்ல. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க” என விடாப்பிடியாய் இருக்க.. சிவகாமி தன் வலக்கையை நீட்டியதும், கரண்டியில் உள்ள குருமாவின் சூட்டை ஊதிக்கொண்டே அவர் கையில் ஊற்றினார். 
சிவகாமி சுவை பார்த்து, தலையை அசைத்து தன் கைகளால் சூப்பர் என்று காண்பிக்கவும் தான் அவர் முகத்தில் புன்னகை அரும்பியது.
“நல்லா இருக்கா சிவகாமி..?” என்றார் குழந்தையின் உற்சாகத்தில்.
“சூஊஊப்பர்ர்ர்….” 
அவர்களுக்கு பின்னால் கேட்ட குரலில் இருவரும் திரும்ப, ஸ்வரனும் பல்லவியும் வந்திருப்பது கண்டு
“வா பல்லவி மா.. வாங்க தம்பி” என்று புன்னகையுடன் அவர்களருகில் வந்தார் சிவகாமி. சுரேகாவும் அப்போது அங்குதான் இருந்தாள். 
“கல்யாணப் பொண்ணும் இங்க தான் இருக்கீங்களா..” என்றபடி ஸ்வரன் உள்ளே வர,
“அண்ணா..! அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு. நிச்சயம் மட்டும் தான் முடிஞ்சிருக்கு” என்றாள், கல்யாணப் பெண் என்று கூறியதில் உண்டான வெக்க ரேகைகளுடன்.
“நீ இங்க என்ன பண்ணுற..? இந்நேரத்துல உன் வருங்காலத்தோட போன் பேசிட்டு இல்ல இருப்ப” என்றபடி பல்லவி அவளருகே வர, 
“அவரு கொஞ்சம் பிஸி. இனிமேல் தான் போன் பேசணும். அதுக்குள்ள பாட்டியை பார்த்துட்டு போலாமேன்னு வந்தேன். நுழையும்போதே குருமா வாசனை மூக்கை துளச்சுது. நம்ம பாட்டி தாத்தா கம்போ வேறயா, அதான் வந்தது வந்துட்டோம் அப்படியே தோசையும் குருமாவும் வாங்கிட்டு போலாம்னு உக்காந்திருக்கேன்” என்றவள் அவர்களோடு சிறிதுநேரம் பேசிவிட்டு, பின் கிளம்பும்போது பல்லவியை தனியே அழைத்து வந்தாள்.
“நீ என்கிட்ட கேஷ் அரேன்ஜ் பண்ண சொன்னதுக்கு அண்ணா உன்மேல கோபமா இருக்காறா?” என்று அக்கறையாய் வினவ
“அதெல்லாம் இல்ல ரேகா. உங்கொன்னனாவது என்மேல கோபமா இருக்குறதாவது.. அப்படியே கோபமா கிட்ட வந்தா இந்த சிங்கம் கடிச்சு கொதறிராது” என்று கூறிய விதத்தில் பெரிதாய் சிரித்த சுரேகா
“அதுதானே..! உங்கிட்ட சிக்கிட்டு அவருதான் கஷ்டப்படுறாரு. உன்ன கட்டிவெச்சு அவரு வாழ்க்கைய நானே இருட்டாக்கிட்டேன்” என, 
உடனே அவளை முறைத்த பல்லவி,
“இரு என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லுறேன். என்னங்க.. இங்க வந்து கேளுங்க உங்க தொங்கச்சி சொல்லுறதை. இருண்ட உங்க வாழ்க்கைல நான் ஒளியேத்தி வெச்சேன்னு நீங்க சொல்லுறைங்க.. ஃப்யூஸ மொத்தமா புடுங்கிட்டேன்னு உங்க தொங்கச்சி சொல்லுறா” என்று குரல் கொடுக்க, அவள் வாயை அடைத்த சுரேகா
“ஹே..! எப்போ இருந்து நீ இப்படி மாறுன? கல்யாணம் பிடிக்கலை கல்யாணம் பிடிக்லைன்னு சொல்லுற புள்ளைகளை கடைசி வரைக்கும் நம்பக் கூடாது” என்றவள்
“இனி அண்ணாவுக்கு தெரியாம ஏதும் செஞ்சு பிரச்சனையை இழுத்து வெச்சுக்காத பல்லவி” என்று கண்டிப்புடன் தெரிவித்துவிட்டு தான் நகர்ந்தாள்.
“ஏன் ப்பா சொல்லாமையே வந்துட்டீங்க..? என்கிட்ட சொல்லிருந்தா நான் அழச்சிட்டு வந்திருப்பேனே” என்றான் ஸ்வரன் வருத்தமாய்.
“இல்லப்பா.. மெல்ல நடக்கலாம்னு அப்படியே வந்தேன். சிவகாமியை பார்த்து ரொம்ப நாள் அச்சே அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என சுந்தரேஸ்வரன் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க,
“தாத்தா..! என்னை மன்னிச்சிருங்க தாத்தா.. நான் எதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன்” என்றாள் பல்லவி அவரிடம். சுந்தரேஸ்வரன் முதலில் சிவகாமியை தான் தேடினார். நல்லவேளை அவர் உள்ளே சென்றுவிட்டிருந்தார்.
“பரவால்ல பல்லவி மா. பாட்டி முன்னாடி சொல்லாத அவங்க வருத்தப் படுவாங்க”
“உங்களுக்கு எதுவும் வருத்தம் இல்லையே” என்றாள். லேசாய் புன்னகைத்தவர்,
“அதெல்லாம் இல்லை பல்லவி மா. நீ சந்தோசமா இருக்கையா..? உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? நீ சோர்ந்துபோய் வீட்டுக்கு வரும்போது உன்ன பார்க்கத்தான் வருத்தமா இருந்துது. ஸ்வரன் ஏதாவது சொன்னா என்கிட்ட சொல்லு பல்லவி மா.. நான் பார்த்துக்குறேன் நீ ஒன்னும் வருத்தப்படாத” என்றார்.
அவள் ஸ்வரனைப் பார்த்து சிரிக்க,
“ப்பா.. எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்க பல்லவி சந்தோசமா தான் இருக்கா.. நீங்க வாங்க, வந்து முதல்ல சாப்பிடுங்க. உங்களை சமைக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல..? ம்ம்ம்.. எனக்கு தெரியாம நிறைய வேலை பண்ணுறீங்க” என்று அவர் தலையில் கட்டியிருந்த துண்டை விலக்கி அவரை இருக்கையில் அமரவைத்தான் ஸ்வரன். 
சிவகாமியும் வந்துவிட, நால்வரும் வட்டமாய் அமர்ந்து இரவு உணவை சுவைக்கத் துவங்கினர். இன்றுதான் ஒரு குடும்பம் போல் தோன்றியது பல்லவிக்கு. அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த மற்ற மூவருக்கும் கூட அப்படித் தான் தோன்றியது.
பல்லவியின் மனதில் அந்நேரத்தில் ஒன்று மட்டும் வரத் தவறவில்லை. 
சரண்..! 
அவனும் உடன் இருந்தால் குடும்பம் முழுமை பெற்றிருக்கும் என்று எண்ணியவளுக்கு விழியோரம் ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வரனும் அவள் மனதை அறிந்துதான் இருந்தான்.
இரவு உணவை முடித்துவிட்டு பல்லவியும் சுந்தரேஸ்வரனும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சிவகாமியிடம் வந்த ஸ்வரன்
“இன்னைக்கு அத்தைக்கு நினைவு நாள்னு என்கிட்ட சொல்லியிருக்கலாமே பாட்டி. நம்ம திதி கொடுத்திருக்கலாம்” என்றான்.
“மஹாலய அமாவாசை அப்போதான் வழக்கமா கொடுப்போம் தம்பி. இன்னைக்கு வேற எதுவும் பண்ணினதில்லை. நானும் பல்லவியும் ஆளுக்கு ஒரு மூலைல உக்காந்து அழுதே பொழுதை கழிப்போம் இத்தனை நாள். இனி நீங்க அவளை பார்த்துப்பீங்கன்னு தான் நான் பல்லவியை பார்க்கவே வரலை” என்றார் சிவகாமி.
அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் தலையசைத்து ஒரு புன்னகையை சிந்திச் சென்றான். அவ்விரவு அனைவரும் அங்கேயே தங்கிக்கொண்டனர். விடிந்ததும் காலை உணவை முடித்துக்கொண்டு  பல்லவியையும் சுந்தரேஸ்வரனையும் அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றான் ஸ்வரன். 
ஸ்வரன் சொன்னதை செய்து முடிப்பான் என்ற உறுதியில் வந்த நாட்களை எல்லாம் பல்லவி போராடி நகர்த்திக் கொண்டிருந்தாள்.  
ஒருவாரம் கழிந்த நிலையில்.. 
சிவகாமியின் இல்லத்தில் இருந்தார் சுந்தரேஸ்வரன். பல்லவியும் கோவிலில் இருந்து அப்போது தான் திரும்பி இருந்தாள். உள்ளே பேச்சு சத்தம் கேட்க, யார் வந்திருப்பது என்று யோசனையோடு வந்தவளுக்கு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது.
சரண்..! 

Advertisement