Advertisement

ஓம் அமரர் பிரானே போற்றி!!
தேவதைகள் வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் உஷத் காலமான பிரம்ம முகூர்த்த வேளை அது. விடியல் தொடா வானமும், மேனி தொடும் குளிர் காற்றும், இசைக்கப் படாத வானம்பாடிகளின் சங்கீதமும், ஆள் அரவம் அற்ற வீதிகளும் அது அதிகாலை நான்கு மணி முப்பது மணித்துளிகள் என்று அமைதியாய் அறிவித்தது. 
தேனுபுரீஸ்வரர் ஆலயம்..!!
பழமையும் புதுமையும் சரிபாதி சங்கமிக்க, கம்பீரமாய் எழுந்து நின்றிருந்தது
மங்கல நாணை தேங்காயில் சுற்றி மஞ்சள் கலந்த அரிசித் தட்டில் அலங்கரித்து வைத்திருக்க.. அதில் திருமாங்கல்யத்தை மட்டும் மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் இட்டு தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தைத் தொட்டுக் கொண்டு தமிழில் வேத மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார் ஐயர்.
தங்கநிறப் பட்டுடுத்தி தங்கத் தாமரையாய் அமர்ந்திருந்த அவளிடமே நிலைபெற்று நின்றது அங்கிருந்த அனைவரது கண்களும். 
இதற்கும் தன்னைத் தங்கத்தினாலேயே தழுவும் விதம் ஆபரணம் ஏதும் பூட்டியிருக்கவில்லை அவள். தலையில் ஸ்பீட் பிரேக்கர் முளைத்ததுபோல் பஃப் வைத்தெல்லாம் அலங்காரம் செய்யப் பட்டிருக்கவில்லை. தொலை தூரத்தில் இருந்து பார்த்தாலும் வெள்ளை வெளேர் என்று தெரியும்படி முகத்திற்கு நான்கு கோட்டிங் சுன்னாம்பு அடித்திருக்கவில்லை. 
செயற்கை அழகு சிறிதும் இன்றி இயற்கை அழகுடன் மணவறையில் வீற்றிருந்தாள் அந்த மாநிற மேனியாள். உச்சியில் வகுடெடுத்து தளரப் பின்னப் பட்ட கார் கூந்தல். அதில் மல்லிச் சரம் மணமணக்க, அவள் சங்குக் கழுத்தை அலங்கரித்த ஒற்றைச் சங்கிலியும் காதில் நர்த்தனம் ஆடும் சிறு ஜிமிக்கி கம்மலும் அவளை பேரழகியாய் காட்டியது. 
அவள் பல்லவி.. அனுபல்லவி !
வதனம் தனில் வதுவுக்கான நாணம் இருந்ததா..?
நிச்சயம் இல்லை. 
தன் அருகில் வெண் பட்டு வேட்டி சட்டையில் ஆண்மையின் கம்பீரத்தோடு வீற்றிருந்தவனைக் காணக் காண நொடிக்கு நொடி அவள் மனவெளிகளில் அதிகரித்தது சீற்றம். அதுவும் சுனாமியின் போது வரும் பேரலைகளின் சீற்றம். 
அவனோ அருகிலிருந்தவளை ஏறிட்டும் பாராது ஐயர் சொல்வதை எல்லாம் கர்ம சிரத்தையுடன் செய்து கொண்டிருந்தான். அவன் தன் உள்ளங்கையை விரித்து மடிமேல் வைத்து சாங்கியம் செய்து கொண்டிருக்க, அதைக் கண்டவள் அனிச்சையாய் அவள் கன்னத்தை தடவிக்கொண்டாள்.
முன்பொருநாள் அவனிடம் வாங்கிய அறையில் இப்போதும் அவள் பட்டுக் கன்னம் பற்றி எரிவது போல் இருந்தது.
அவனை முதல் முதலாய் சந்தித்த நாளை மெல்ல நினைத்துப் பார்த்தாள் பல்லவி.
பத்தொன்பது வயது பட்டாம் பூச்சியாய் அவள் கல்லூரி சென்று கொண்டிருந்த நேரம் அது. 
அழுது சிவந்த முகத்தோடு பல்லவியின் முன் வந்து நின்றாள் சுரேகா. பல்லவி வசிக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் மகள் தான் சுரேகா. அவள் தோழியும் கூட. சுரேகாவின் முகம் கண்ட மாத்திரம் 
“ஹேய்.. என்னாச்சு ரேகா..?” என இவள் வினவ
“கடைல தக்காளி வாங்கிட்டு வந்துட்டு இருந்தேன் பல்லவி. அப்போ ஒருத்தன் திடீர்னு என்மேல வந்து விழுந்தான். நானும் தடுமாறி கீழே விழுந்துட்டேன். முதல்ல அவன் தெரியாம விழுந்துட்டான்னு தான் நினச்சேன். ஆனா தெரிஞ்சே தான் விழுந்திருக்கான்னு அப்பறம் தான் தெரிய வந்துச்சு. அவன் என்மேல விழுறதை அங்கிருந்த அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போட்டோ எடுத்து..” என சுரேகா மேலும் கூறமுடியாது தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தாள்.
“ச்சே.. அழாத ரேகா.. மேல சொல்லு”
“தக்காளி நசுங்கிடுச்சேன்னு கேலி பண்ணி சிரிச்சானுங்க பல்லவி. ஒரே அவமானமா இருந்துது. நான் உடனே அங்கிருந்து வந்துட்டேன். இதை எங்காவது இண்டர்நெட்ல அப்லோட் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு”
“அந்த மளிகை கடை முக்குல தானே..?” என பல்லவி கேட்ட விதத்தில் மெல்லத் தலையசைத்த சுரேகா, 
“வேண்டாம் பல்லவி அவனுக எல்லாம் தெரு பொறுக்கிங்க. நமக்கு எதுக்கு வம்பு” என்றாள் பயந்தவாறு.
“நீ என் கூட வந்து அவன் யாருன்னு அடையாளம் மட்டும் காமி” என அவள் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடம் வந்தாள்.
சுரேகா கூறிய அதே இடத்தில் நின்றுகொண்டு தங்களுக்குள் பேசியபடி இருந்தனர் சிறிய வட்டத்தினர். இந்த குரூப் சற்றுமுன் அவளை கேலி செய்தவர்களைப் போல் தான் இருந்தது சுரேகாவிற்கு. நிமிர்ந்து நன்றாய் பார்க்கவும் பயம். அவர்களை ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் நிமிர்ந்து பார்த்தவள் பல்லவியின் பின்னால் மறைந்து கொண்டாள். 
“இதுல உன்மேல விழுந்தது யாரு?” என்ற பல்லவியின் கேள்விக்கு அவள் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தவள், ஒவ்வொருவரின் சட்டையின் நிறத்தையும் பார்த்துவிட்டு
“க.. கருப்பு சட்டை போட்டவன்” என கருப்பு சட்டையை இறுதித் தேர்வாக லாக் செய்தாள். 
“நீ இங்கயே நில்லு” என்றுவிட்டு அவர்களிடம் விரைந்த பல்லவி கருப்பு சட்டை அணிந்தவனின் தோளைத் தட்ட.. அவன் மெல்லத் திரும்ப.. அவன் யாரென்றும் பாராது அவன் கன்னத்தில் பளாரென்று வைத்திருந்தாள் ஒன்று.
அங்கு அதிர்வலைகள் எழும்முன்னரே,
“இன்னொரு முறை போற வர்ற பொண்ணுக மேல எல்லாம் வேணும்னே வந்து விழுறது அதை கீழ்த்தனமா போட்டோ எடுக்குறது இதெல்லாம் பண்ணிட்டு இருந்தா தக்காளி நசுங்காது உனக்கு மூஞ்சி மொகரை எல்லாம் தான் நசுங்கும் பாத்துக்கோ.. பொறுக்கி” என்று விரல் நீட்டி எச்சரிக்க
“ஏய்..!” என்ற அங்கிருந்தவர்களின் கூட்டுக் குரலில் அனைவரையும் முறைத்தவள், தன்னை எரிப்பதுபோல் பார்க்கும் தான் அடித்த அவனையும் ஒரு முறை முறைத்துவிட்டு
“ஒழுங்கு மரியாதையா அந்த போட்டோஸ் எல்லாம் நீயே டெலீட் பண்ணு இல்ல பண்ண வைப்பேன்.  என்னடா முறைக்குற? உனக்கெல்லாம் வெக்கமா இல்லை. உன்னை சொல்லக் கூடாது உன்ன வளர்த்துனவங்களை தான் சொல்லணும். ஒழுக்கம் கெட்ட…” என அவள் முழுதாய் முடித்திருக்கவில்லை, அதற்குள் அவன் கரம் அவள் கன்னத்தில் இடியென இறங்கி இருந்தது.
வாங்கிய அறையில் தலை கிர்ரென சுற்றுவதுபோல் இருக்க.. தன்னை சமாளித்துக்கொண்டு நின்றிருந்தவளிடம் பறந்தடித்து ஓடிவந்தாள் சுரேகா. அவளது பெண் சிங்கமே அங்கு அசிங்கப்பட்டு நின்றிருப்பது கண்டு,
“பல்லவி! அது இவங்க இல்லடி” என்றாள் வேகமாய். மிக வேகமாய். 
மின்னலென தன் தோழியின் புறம் திரும்பியவள், 
“என்னடி சொல்ற? நீதானே கருப்பு சட்டைன்னு சொன்ன” என்று மெல்ல அதேநேரம் கோபமாய் வினவ
“அந்தக் கருப்பு சட்ட இந்தக் கருப்பு சட்ட இல்லடி. அவனுக போய்ட்டானுக போல இவங்க வேற யாரோ” என்ற சுரேகாவின் வார்த்தைகளில் விழிகள் விரிய தன்னை அடித்த அவனையே பார்த்திருந்தாள் பல்லவி.
ஐயர் கூறியதைக் கூட காதில் வாங்காது பல்லவி அமர்ந்திருப்பது கண்டு மெல்ல அவள் புறம் திரும்பினான். அவள் தன் கன்னத்தைப் பிடித்திருப்பதைக் கண்டு அவளது தற்போதைய சிந்தனை எல்லாம் எங்கிருக்கும் என்றறிந்து 
“க்கும்…” எனத் தொண்டையைச் செருமினான். 
அதில் பல்லவி அவன் புறம் திரும்ப, லேசாய் புன்னகைத்துத் திரும்பினான். அது ஏளனமாய் தான் பட்டது அவளுக்கு. அவள்முன் வளர்க்கப் பட்ட அக்னிக்கு ஐயர் நெய் வார்க்க, அவளுக்குள் எரியும் அக்னிக்கு இவன் எண்ணெய் வார்ப்பது போல் இருந்தது. 
இரண்டு தீயும் தகதகவென பற்றி எரிந்துகொண்டிருந்தது.
“ச்சே” என்று தன் ஆத்திரத்தை எல்லாம் மலர் மாலையின் மீது காண்பித்துக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.
“பல்லவி கொஞ்சம் சிரிச்ச மாதிரி தான் இரேன். ஏன் மூஞ்சிய உர்ருன்னு உராங் உட்டான் மாதிரி வெச்சிருக்க” என்றாள் ஏதுமறியா சுரேகா. இல்லை இல்லை எல்லாம் அறிந்த சுரேகா.
‘செய்யுறதையும் செஞ்சிட்டு சிரிக்க வேற சொல்லுறயா’ என அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் பல்லவி.
இத்திருமணம் நடக்க சுரேகாவின் பங்கு தான் பெரும்பான்மை. இரு வீட்டுப் பெரியோரும் கலந்து பேசி திருமணத்தை உறுதி செய்த உடனேயே பல்லவியின் திருமண வேலைகளை அதிவிரைவாக நடத்தி முடித்திருந்தாள் சுரேகா. பல்லவியின் இரும்பு மனதை அவள் பாட்டியின் பெயரைக் கூறிக் கூறியே இளகி உருகவைத்து, இத்திருமணத்திற்கு ஒரு வழியாக சம்மதிக்கவும் வைத்து, அவளுக்கு புடவை எடுப்பதில் இருந்து அனைத்தையும் அவள் தான் முன்னின்று பார்த்துக் கொண்டாள். எங்கு நேரத்தைக் கடத்தினால் பல்லவி அந்தர் பல்டி அடித்தாலும் அடிப்பாள் என்று நன்கு அறிந்ததினால் இத்தனை அவசரம் அவர்களிடத்தில்.  
“சிங்கம் சிரிங்க ப்ளீஸ்” என்றாள் சுரேகா, மணப்பெண் கசக்கிய மலர் மாலைகளை மணப்பெண்ணின் தோழியாய் சரி செய்தபடி. 
“சிங்கத்துக்கு சிரிப்பு வரல போதுமா” என்றாள் பல்லவி ஏகக் கடுப்பில்.
“எனக்கென்னடியம்மா அப்பறம் போட்டோல்ல நீதான் படு கேவலமா இருப்ப. உன் மூஞ்சிய பார்க்கும் போதெல்லாம் பல்லவி ஏன் இப்படி இருக்குன்னு பாட்டி தான் ஃபீல் பண்ணுவாங்க” என்று அமைதியாய் அஸ்திரத்தைக் கையில் எடுத்தாள்.
உடனே தன் பாட்டியைப் பார்த்தாள் பல்லவி. அவரும் அவளையே தான் பார்த்திருந்தார். மறுநொடி தன் முகத்தை மலர்ச்சியாய் மாற்றிக் கொண்டாள்.
“யாராவது இந்த அர்ச்சதைத் தட்டை எடுத்துப்போய் பெரியவாள்ட்ட ஆசீர்வாதம் வாங்கி வாங்கோ” என்று ஐயர் கூறவும் 
“கொடுங்க சாமி” என சுரேகா அதை அவரிடமிருந்து பெற்றுச் சென்றாள்.
பல்லவிக்குத் தான் நொடிக்கு நொடி உள்ளுக்குள் படபடப்பு அதிகரித்தது. அதை முடிந்தவறை மறைத்துக்கொண்டு அருகிலிருந்த அவன் காதருகே மெல்லக் குனிந்து,
“இப்போவும் ஒன்னும் கெட்டுப் போகல மிஸ்டர். இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லி ஒழுங்கா எழுந்து ஓடிடு. அதான் உனக்கு நல்லது” என்றாள். 
அவன் ‘என் காது கேட்காது’ என்பதுபோல் வீற்றிருக்க, லேசாய் அவன் தொடையைக் கிள்ளினான். உடனே திடுக்கிட்டு அவளைத் திரும்பிப்  பார்த்தவனிடம் ‘எழுந்து போடா’ என்பதாய் அவள் விழிகள் இரண்டும் செய்தி கூற, அவளை ஒரு முறை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டான். 
மீண்டும் அவனைக் கிள்ளச் சென்ற அவள் கரத்தை யாருமறியாமல் அழகாய் சிறைபடுத்திக் கொண்டான். அதை விடுவிக்க அவள் போராடியதில் கை சிவந்தது தான் மிச்சம்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த சுரேகா ஐயரிடம் அர்ச்சதைத் தட்டைக் கொடுத்தாள். முகுர்த்த நேரம் கூடி வர, 
“பெரியவா வந்து தாலி எடுத்துக் கொடுங்கோ” என்று குரல் கொடுத்ததும் மஞ்சள் கையிற்றால் கோர்க்கப்பட்ட பொன் தாலியைக் கைகளில் ஏந்திய அவனது தாத்தா, இனி தன் பெயரனின் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசவேண்டும் என கண்மூடி கடவுளை வேண்டிக்கொண்டு அவனிடம் தாலியை அளிக்க, அவரை வணங்கிப் பெற்றுக்கொண்டான்.
அடுத்து அவன் பல்லவியைப் பார்த்தபடியே அவள் கழுத்தருகில் மெல்லக் கொண்டு வர,
“சிங்கத்தோட வால்னு தெரிஞ்சே பிடிச்சிருக்க.. இனி வர்ற சேதாரத்துக்கு சிங்கம் பொறுப்பில்ல..!!” என்றாள் மெல்ல அவனுக்குக் கேட்கும்படி.
“கெட்டிமேளம்!! கெட்டிமேளம்!!” என்ற ஐயரின் குரலில் மத்தளம் கொட்ட நாதஸ்வரம் இசைக்க அட்சதைகள் வந்து விழ மங்கள நாணை அனுபல்லவியின் சங்குக் கழுத்தில் பூட்டியிருந்தான் அவன். 
நாத்தனார் முடிச்சை சுரேகா போட்டு முடிக்க,
“அவா நெத்தியிலே திலகம் இடுங்கோ.. கையப் பிடிச்சுட்டு அக்னியை வலம் வாங்கோ” என ஐயர் ஒவ்வொன்றாய் கூறிக் கொண்டிருக்க.. 
“ச்சே..” என்றபடி ஒவ்வொரு சடங்கிற்கும் பல்லவி சலிக்காது கூறிக் கொண்டிருந்தாள். அதை மட்டும்தான் கூற முடிந்தது அவளால். 
அடுத்து ஐயர் கூறிய சடங்கில் அவள் முகம் ஆயிரம் சூரியனாய் பிரகாசித்தது. 
“இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல் நீ மனம் கலங்காது உறுதியாய் இருந்து இல்லற வாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களை பொறுத்து சகித்துக் கொள்வாயாக. எது வந்தபோதும் அசையாது ஏற்றுக் கொள்வாயாகன்னு மணமகன் மணமகளுக்கு சொல்லி மனோபலம் அளிக்கறது தான் இந்த சடங்கு. எந்தக் உலோகத்தை விடவும் உறுதியான கல்லை நம்ம அசைக்கவோ உருக்கவோ முடியாது. அதான் இந்த சடங்கிற்கு உறுதியான கல்லான அம்மியை வைக்குறா” என அம்மி மிதிப்பதைப் பற்றித் தான் அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.
பல்லவி அதை எல்லாம் கவனிக்கவில்லை. அவன் அவளது காலை பிடிக்கவேண்டும் என்று சொன்னதை மட்டுமே கேட்டுக்கொண்டு, ‘என்னை அடிச்சவனை இத்தனை பேரு முன்னாடி என் கால்ல விழ வைக்கப் போறார் கடவுள். காட் இஸ் கிரேட்’ என கெத்தாய் நின்றிருந்தாள்.
ஆனால் அவனோ ஒவ்வொரு சடங்கையும் அதன் விளக்கத்தையும்  மனதில் பதியவைத்தபடி, அவள் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து அக்னிக்கு வலப்புறம் அம்மி மீது ஏற்றி வைத்தான்.
ஒருவழியாக அம்மி மிதிப்பதை சிறப்பாய் நடத்தி முடித்த ஐயர் அடுத்து
“பெரியவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்கோ” என்றதும் பல்லவி தன் பாட்டியைத் தேடினாள். ஒரு ஓரமாய் நின்றபடி அவளையே இமைக்காது பார்த்திருந்தார் சிவகாமி. உறவென்று சொல்லிக்கொள்ள அவர் மட்டுமே அவளுக்கு.
சிவகாமியிடம் இன்று அத்தனை ஆனந்தம். இத்தனை ஆண்டுகளில் இப்படி ஒரு மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தி ஒருமுறையேனும் அவள் கண்டதில்லை. அவருக்காகத் தானே அவள் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்தாள். அவரது சந்தோசத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம், தன்னை வளர்த்தியவருக்காக தன் வாழ்வைக் கூட இழக்கலாம் என்று தோன்றியதால் தானே விருப்பம் இல்லாத போதிலும் இன்று அவனது மனைவியாக நின்றிருக்கிறாள்.
அதே போல் தான் அவனும். ஆசீர்வாதம் வாங்க அவனுக்கென்று இருக்கும் ஒரே உறவான தாத்தா சுந்தரேஸ்வரனைத் தேடினான். அவரும் ஒரு ஓரமாய் நின்றபடி தன் பெயரனைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். 
கண்களால் அவரை அருகில் அழைத்தான். அவர் வந்து நிற்க, அவரிடம் அவன் ஆசி வாங்கச் செல்ல.. முதலில் தன் பாட்டியிடம் வாங்க வேண்டுமென்றாள் பல்லவி. இல்லை தாத்தாவிடம் தான் என்றான் அவன்.
இத்தனை போராட்டத்தையும் கடந்து இவர்களை ஜோடி சேர்த்தால் இதில் ஒரு பிரச்சனையைக் கொண்டு வருகிறார்களே என்றெண்ணிய சுந்தரேஸ்வரன், பல்லவியின் பாட்டி சிவகாமியைத் திரும்பிப் பார்க்க.. அவரும் என்ன செய்வதென்று அவரைப் பார்த்திருந்தார்.
இருவரும் பின் இணைந்து நிற்க, சண்டைக்கு வழியில்லாது போக அவனும் பல்லவியும் இணைந்த அவ்விருவரது பாதத்திலும் விழுந்து நமஸ்கரித்துக் கொண்டனர். 
அடுத்து அருந்ததியைப் பார்க்க புறப்படச் சொன்னார் ஐயர்.
“ச்சே.. இதென்ன தொல்லையாப் போச்சி.. அதெல்லாம் நான் போய் யாரையும் பார்க்க மாட்டேன். வேணும்னா அந்த அருந்ததிய இங்க வந்து என்னைப் பார்த்துட்டுப் போகச் சொல்லு” என்ற பல்லவியின் தலையில் லேசாய் தட்டிய சுரேகா,
“அது நட்சத்திரம் பல்லவி.. பேசாம ஐயர் சொல்லுறதை கேளேன்” என்று கெஞ்சினாள்.
“நான் கேட்குறேன்றதுக்காக அந்த ஆளு அவரு இஸ்டத்திற்கு சொல்லுறதா? இதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியாது ரேகா”
“உன் பாட்டிக்காக.. ப்ளீஸ்” என்று அவளை ம்யூட் செய்து அழைத்துப் போனாள் சுரேகா.
அருந்ததியைக் காண பல்லவியின் சரிபாதியான அவன் விரைந்து முன்னே செல்ல, அவளுக்கோ புடவை தடுக்க, சமாளித்துக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள்.
‘அருந்ததின்னு பொண்ணு பேர் சொன்னதும் இப்போவே என்னை இப்படி பாதில விட்டுட்டுப் போறான். இவனா கடைசி வரைக்கும் என் கூட வரப்போறான்!’ என அவள் எண்ணியது அவனுக்கு எட்டியதோ என்னவோ உடனே அவனது அதிவேகம் மிதவேகமாகிவிட, பின் அவளும் அவனோடு இணைந்து நடந்தாள். 
மணமக்கள் வெளியே வந்ததும் ஐயர், 
“எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாம ஏழேழு ஜென்மமும் இணைந்தே இருக்கணும்னு நினைச்சிட்டு அருந்ததியை பாருங்கோ” என்றார்.
அவர் அப்படிக் கூறியதும் தன் அருகிலிருப்பவனை ஒரு ஓரப் பார்வை பார்த்தாள் பல்லவி. இவனோடா! ஏழு ஜென்மத்துக்குமா! என்று தோன்றாமலில்லை. பின் சிவகாமி தன்னையே பார்ப்பதை உணர்ந்து, அவனோடு சேர்ந்து நின்று கண்சிமிட்டும் நட்சத்திரங்களைப் பார்த்தாள். 
ஆகாயத்தில் அத்தனை நட்சத்திரங்கள் அழகாய் பிரகாசித்திருக்க அதில் அருந்ததி யாரென ஆராய்ந்தது அவள் விழிகள். அந்நேரம் அவளருகே மெல்ல தலை சாய்த்தவன் அவள் காதோரம் கிசுகிசுப்பாய், 
“என்ன சொன்ன சிங்கத்தோட வால தெரிஞ்சே பிடிச்சேனா?” என்றதும் பல்லவி அருந்ததியை அங்கேயே விட்டுவிட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் அவன் புறம்.
வெகு அருகில் அவன் முகம். 
“கூண்டுல அடைபட்ட இந்த சிங்கத்தை இனி ஆட்டிவைக்கப் போற ரிங் மாஸ்டரே நான் தான்” என்றான் அவன்.
அவன் ஸ்வரன்.. ஆதீஸ்வரன்.
ஸ்வரன் அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, ‘ஆங்’ என வாயைப் பிளந்தாள் பல்லவி. குளிர் காற்றோடு போட்டிபோட்டு அவன் கண்களும் அவளைத் தழுவ, அவள் உடலெங்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அவன் அதரங்களில் லேசான புன்னகை விரிய.. அவள் தன் விழிகளைப் பெரிதாய் விரிக்க.. அனுபல்லவியையும் ஆதீஸ்வரனையும் அழகாய் படம் பிடித்துக் கொண்டது கேமராமேனின் கேமரா.
கீதமாகும்…

Advertisement