Advertisement

            அதே நேரம் பள்ளிக்கு கிளம்பி வந்தவள் தந்தை ஏதோ யோசனையில் இருக்க “என்ன ஆச்சுப்பா?”, என்று கேட்டாள்.

     அவளுக்கு இட்லியை சாப்பிடக் கொடுத்த பரமசிவம் “மதி குட்டி”, என்ற படி அவள் அருகில் வந்து அமர்ந்தார்.

            “சொல்லுங்கப்பா”

            “உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டா”

     “சொல்லுங்க பா. உங்க முகம் ரொம்ப சந்தோஷமா வேற இருக்கு? ஆனா குழப்பமாவும் இருக்குற மாதிரி இருக்கு”

     “ஆமா டா.  நல்ல விஷயம் தான். நாளான்னைக்கு சாயங்காலம் உன்னை பொண்ணு பாக்க வராங்க. நீ ஸ்கூல் முடிஞ்சு சீக்கிரம் வந்துரு சரியா?”, என்று அவர் சொல்ல “என்னப்பா சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

     “ஆமா டா”, என்றவர் ராயரின் குடும்பத்தைப் பத்திச் சொன்னார். அவனா மாப்பிள்ளை என்று அவள் அதிர்ச்சியில் இருக்க “அவங்க பொண்ணு பாக்க வரதுன்னா இதை வேண்டாம்னு சொல்லுறதுக்கா இருக்காது. உன்னைப் பிடிச்சதுனால தான் பொண்ணு பாக்கவே வராங்க. நீ தான் அவங்க வீட்டு மருமகள்ன்னு வேற சொன்னாங்க. மாபிள்ளையும் ரொம்ப அழகு. அவங்க வந்து பூ வச்சாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்லை”, என்று சொல்லிக் கொண்டே சென்றார் பரமசிவம்.

            “என்னப்பா இப்படிச் சொல்றீங்க? எல்லாமே பேசி முடிச்ச மாதிரி சொல்றீங்க? மாப்பிளையைக் கூட நாம பாக்கலை”

     “நாம தான் டி‌வி பேப்பர்ல எல்லாம் பாத்துருக்கோம் தானே? உனக்கு பொருத்தமா இருப்பார் டா”, என்று சொல்ல “அவர்கள் குடும்பத்திலா? இது சரியா வருமா?” என்று குழப்பமாக இருந்தது அவளுக்கு.

     “இவ்வளவு பெரிய சம்பந்தம் தேவையா பா? அவங்க எல்லாம் பெரிய பணக்கார குடும்பம். அரசியல் செல்வாக்கும் இருக்கு? நமக்கு ஏன் அங்க சம்பந்தம் பண்ணனும்? என்னை மாதிரி டீச்சரோ இல்லைன்னா ஒரு ரயில்வே வேலையோ இல்லைன்னா ஒரு இஞ்சினியராவோ இருக்குற மாப்பிள்ளையை பாக்க கூடாதா?”, என்று கேட்டாள்.

     ஆதியை பிடித்திருந்தாலும் அவ்வளவு பெரிய இடம் தேவை இல்லை என்று தான் அவளுக்கு தோன்றியது.

     “நீ என் கிட்ட என்ன சொன்ன? உங்களுக்கு பிடிச்ச மாதிரி பாருங்க. ஆனா கூட்டுக் குடும்பமா இருக்கணும்னு தானே சொன்ன? அது மட்டும் இல்லாம இது நாமளா தேடிப் போகலை டா. கடவுள் அனுப்பின மாதிரி தான் எனக்கு தோணுது. ராயர் ஐயாவைப் பாக்க வெளிய அவ்வளவு கம்பீரமா தெரிஞ்சாலும் போன்ல அவ்வளவு சாப்ட்டா பேசினார் மா. எனக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கு”, என்று அவர் உறுதியாக சொல்ல அதற்கு மேல் அவரிடம் வாதாடாமல் “அப்புறம் உங்க விருப்பம் பா”, என்று சொல்லி விட்டு பள்ளிக்குச் கிளம்பிச் சென்றாள்.

     அங்கே சென்ற பின்னரும் அவள் ஒரு மாதிரி இருக்க “என்ன ஆச்சு டி டல்லா இருக்க? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள் அவளது தோழி மஞ்சரி.

            “நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன் டி. நீ வேற கிண்டல் பண்ணி சாகடிக்காத”

     “என்ன ஆச்சு மதி? ஏதாவது பிரச்சனையா? அப்பாக்கு உடம்பு சரி இல்லையா?”

     “அதெல்லாம் இல்லை மஞ்சு. அப்பா எனக்கு கல்யாணம் பண்ண நினைக்கிறாங்க”

     “நல்ல விஷயம் தானே?”

     “அது நல்ல விஷயம் தான். ஆனா, பாத்துருக்குற மாப்பிள்ளை யார் தெரியுமா?”

     “யாரு?”

     “அன்னைக்கு வந்தாரே ராயர். அவரோட மூத்த பையன் ஆதி”

     “வாட்? அன்னைக்கு பாத்தியே அவங்களா மாப்பிள்ளை?”

     “ஆமா டி, நாளான்னைக்கு பொண்ணு பாக்க வராங்க. ஆனா அப்பா முடிவு பண்ணிட்டதா சொல்றாங்க. உனக்கே சாக்கிங்கா இருக்கு தானே?”

     “ஆமா டி, அவங்க எப்படி உன்னை பொண்ணு கேட்டாங்க. வேற ஏதாவது பிளான் இருக்குமா?”

     “அப்படி எல்லாம் தெரியலை. அப்படி ஏதாவது பிளான் இருந்திருந்தா அன்னைக்கு என் கிட்ட அவங்க காமிச்சிருப்பாங்க. அவங்களும் தரகர் கிட்ட தான் சொல்லி வச்சாங்களாம்”

     “அப்புறம் என்ன உனக்கு டென்ஷன்? கோயம்பத்தூர்லே பெரிய குடும்பத்துல மூத்த மருமகளா போகப் போற? இதுல என்ன பிரச்சனை உனக்கு?”, என்று கேட்டாள் வனிதா.

     அவளிடம் என்ன சொல்லி சமாளிக்க என்று தெரியாமல் “இப்ப நீ சொன்னியே? அதை நினைச்சு தான் பயமே? அவ்வளவு பெரிய குடும்பத்துல மூத்த மருமகன்னா எவ்வளவு பொறுப்பா இருக்கணும்? அதான் டென்ஷன்?”, என்றாள்.

     “எனக்கு என்னமோ இது கடவுள் போட்ட முடிச்சின்னு தோணுது மதி. இல்லைன்னா இப்படி எல்லாம் நடக்காது. அப்பா கேப்பியா இருக்காங்க தானே? உனக்கு சரியா இல்லாததை அப்பா தேர்ந்தெடுக்க மாட்டாங்க. அவங்களுக்கு சரின்னு தோணப் போய் தான் உன் கிட்ட கூட கேக்காம முடிவு பண்ணிட்டாங்க. எல்லாம் நல்லதுக்கு தான் மதி”

     “இருந்தாலும்”

     “எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”

     “என்ன?”

     “ஆதி சாரை உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா?”

     “பிடிக்கலைன்னு சொல்ல எந்த காரணமும் இல்லை டி. ஹேண்ட்சம் மேன்”, என்று சொல்லும் போதே அவள் முகம் சிவக்க “பாரு டா ரசனையை. அப்படின்னா உனக்கு பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன டோன்ட் வொர்ரி. ஹேப்பியா இரு. சரி கிளாஸ்க்கு நேரம் ஆச்சு. வா போகலாம்” என்று சொல்ல மதியும் தெளிந்தாள்.

            அன்று இரவு காலிங்கராயர் வீட்டில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மணிமேகலையின் குடும்பமும் அங்கே தான் இருந்தது. தமயந்தி அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

            “நீயும் உக்காந்து சாப்பிடு கண்ணு”, என்றார் சேதுராமன்.

            “பரவால்லைங்க மாமா. நான் அப்புறம் சாப்பிடுறேன்”, என்று நல்ல மருமகளாக மறுத்தாள்.

     யார் என்ன கட்டாய படுத்தினாலும் மற்றவர்களை சாப்பிட வைத்த பிறகு தான் தமயந்தி சாப்பிடுவாள் என்று அனைவரும் அறிந்ததே. அதனால் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் அனைவரும் அமைதியாக உண்ண அப்போது “ஆதி”, என்று அழைத்தார் காலிங்கராயர்.

            “சொல்லுங்க பா”

            “நாளான்னைக்கு சாயங்காலம் உனக்கு பொண்ணு பாக்க போறோம்”, என்று சொல்ல அனைவரும் ஆதி முகத்தை திடுக்கிட்டு பார்த்தார்கள். அவன் எந்த அதிர்ச்சியையும் காட்டாமல் இயல்பாக “சரிப்பா”, என்றான். பெண் யார் என்றோ, என்ன பெயர் என்றோ போட்டோ காட்டுங்க என்றோ அவன் எதுவுமே கேட்க வில்லை.

     அவ்வளவு பெரிய உருவம் கொண்டவனே ராயருக்கு மதிப்பு கொடுத்து சரி என்று சொல்ல தான் என்ன சொல்ல என்று தெரியாமல் மனம் குமைந்தாள் மணிமேகலை.

     விவரம் எதுவுமே கேட்காமல் மகன் சரி என்று சொல்லவும் ராயர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம்.

            “என்னங்க இவன் இப்படி சொல்றான்? ஆதியும் சரினு சொல்லிட்டான். ஆனா நம்ம ஆசை?”, என்று சேதுராமனிடம் கேட்டாள் பார்வதி.

            “உன் அசைனு சொல்லு. அப்புறம் ராயர் என்ன சொன்னாலும் அவன் பிள்ளைகள் கேக்கும். ஆனா நம்ம பிள்ளை கேப்பானா? அவனுக்கு என்ன தோணுதோ அதை தான் செய்வான். அதுல மூக்கை நுழைச்சு என் மரியாதையை கெடுக்க முடியாது. பேசாம சாப்பிடு பார்வதி”

            “என்னங்க, நான் மணிக்கு வாக்கு கொடுத்துருக்கேன். அஞ்சனாவை ஆதிக்கு தான் கட்டி வைக்கணும்”

     “அதை உன் மகன் கிட்ட சொல்லு”

            “சொல்லத் தான் போறேன்”, என்றவள் “காலிங்கராயா”, என்று அழைத்தாள்.

            “சொல்லுங்கம்மா”

            “வீட்ல பொண்ணு இருக்க வெளிய பாக்கணுமா பா?”, என்று கேட்க அஞ்சனாவுக்கு பாட்டியின் பேச்சு திக்கென்று இருந்தது.

            “ஒரே வீட்ல வளர பிள்ளைக கிட்ட எப்படி மா கல்யாணம் பேச? நான் எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும்“, என்று ராயர் கண்டிப்புடன் சொல்ல மனதுக்குள் திடுக்கிட்டுப் போனாள் நந்தினி. அப்படி என்றால் நிச்சயம் தனக்கும் நிரஞ்சனுக்கும் தந்தை திருமணம் செய்து வைக்கக் மாட்டார் என்று எண்ணி அவனைப் பார்க்க அவனோ கருமமே கண்ணாக உண்டு கொண்டிருந்தான். ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

     மகனின் பேச்சு கண்டிப்புடன் இருக்க அதற்கு மேல் என்ன பேச என்று தெரியாமல் அருகில் அமர்ந்திருந்த மணிமேகலையை அழைத்து “ஏதாவது பேசு டி”, என்றாள் பார்வதி. “அண்ணா சொன்னதைக் கேட்டீங்க தானே? இப்ப நான் ஏதாவது பேசினா அது மரியாதையா இருக்காது. என் புருசனும் பிள்ளைகளுமே என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. பொறுமையா இருங்க பாப்போம்”, என்றாள் மணிமேகலை.

            “ஆதி, உனக்கு இந்த ஏற்பாட்டுல சம்மதம் தானே? அப்பா சொல்லிட்டாங்கன்னு சம்மதிக்கிறியா?”, என்று கேட்டார் சேதுராமன்.

            “அப்பா எது செஞ்சாலும் சரியா தான் தாத்தா இருக்கும். எனக்கு கல்யாணத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வர போற மனைவியை அனுசரிச்சு போற அளவுக்கு பொறுமை இருக்கு. அது மட்டுமில்லாம நம்ம குடும்ப கௌரவம் பாதிக்க படாத அளவுக்கு குடும்பம் நடத்த உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு. எனக்கு ஏத்தவளா இந்த குடும்ப கௌரவத்தை காப்பாத்துறவளா இருக்குற பொண்ணைத் தான் அப்பா பாத்திருப்பாங்க. அதனால எனக்கு சம்மதம்”, என்று சொன்னான் ஆதி. ஆனால் அவன் அறிய வில்லை. அவன் மனைவி அவனை தலையால் தண்ணீர் குடிக்க வைப்பாள் என்று. அவளையும் அவளது செயல்களையும் சமாளிக்கவே அவன் திணறப் போகிறான் என்று அவனுக்கு யார் சொல்வது?

Advertisement