Advertisement

அத்தியாயம் 3

உனக்கு விடை கொடுக்கத்

தெரியாமல் தடுமாறித்

தவிக்கிறது எந்தன் காதல்!!!

ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ்

ஆல் தி ரஜினி பேன்ஸ்.. டோன்ட் மிஸ் தி சான்ஸ்

ஹே லுங்கி ஹே லுங்கி டென்ஸ் லுங்கி டேன்ஸ்

லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ் லுங்கி டேன்ஸ்

     என்று வீடே அதிரும் அளவுக்கு பாடல் சத்தம் காதைப் பிளந்தது ராயரின் கடைசி மகன் விக்கியின் அறையில். அது மட்டுமல்லாமல் அவன் ஆடிய ஆட்டம் அந்த வீட்டையே அதிர வைத்தது. ராயர் வீட்டில் இல்லை என்றால் அவன் இந்த அக்கப்போர் தான் செய்வான்.

     வீட்டின் கடைக்குட்டி என்பதால் செல்லம் கொஞ்சம் அதிகம் தான். “ஐயோ இவன் இம்சை தாங்கலையே”, என்று தலையைப் பிடித்தாள் அவனது பக்கத்து அறையில் இருந்த நந்தினி. தம்பியால் அதிகம் பாதிக்கப் படுவது எப்போதும் நந்தினி தான்.

     ஆனால் அவள் போய் சத்தத்தைக் குறைக்கச் சொன்னால் இன்னும் அதிகமாக தான் சத்தம் வைப்பான் என்பதால் பொறுமையாக இருந்தாள். அதே நேரம் அவனைப் பற்றி தந்தையிடம் போட்டுக் கொடுக்கவும் அவளுக்கு மனது வராது.

     எப்படி நான்கு பிள்ளைகளும் தந்தை மீது அன்பு வைத்திருந்தார்களோ அது போல ஒருவரின் மீது மற்றவர் அதிக அன்பும் வைத்திருந்தனர்.

     தனது அறையில் ஆஃபிஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்த ஆதியின் காதில் அந்த சத்தம் விழ உடனே தன்னுடைய போனை எடுத்து தம்பியை அழைத்தான்.

     “சொல்லுங்கண்ணா”, என்று அவன் சொல்லும் போதே அந்த பாட்டு சத்தம் ஆதியின் காதையும் நிறைத்தது.

     “சவுண்ட் அதிகமா இருக்கு விக்கி. அப்பா கிளம்பி வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்க. கொஞ்சம் குறைச்சிக்கோ”, என்று சொன்னதும் “சரிண்ணா”, என்று சொல்லி போனை வைத்தவன் உடனே பாட்டை நிறுத்தி விட்டு கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பித்தான். என்ன ஆனாலும் தந்தையிடம் கெட்ட பேர் மட்டும் வாங்கக் கூடாது என்பது தான் பிள்ளைகளின் எண்ணம். அதனால் அவர் முன்பு சரியாகவே இருப்பார்கள்.

     வி. என் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே நல்ல முறையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பி. டி டீச்சர்கள் பொறுப்பாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து விளையாட்டுகளும் முடிந்து பிரைஸ் கொடுப்பது மட்டும் பாக்கி இருந்தது. அதற்காக வரும் எம். எல். ஏவை வரவேற்க அனைவரும் காத்திருந்தார்கள்.

     “மதி சாருக்கு நீ தான் சால்வை போடணும்”, என்று சாவித்ரி சொல்ல அவளும் தயாராக இருந்தாள். “அவனும் வருவானா?”, என்று ஒரு சின்ன எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

     “என்ன டி டென்சனா இருக்கா?”, என்று கேட்டாள் மஞ்சரி. “ம்ம் லைட்டா? இந்த மேடம் ஏன் என்னைச் சொன்னாங்க? அவங்களே போடலாம்ல? என்ன இருந்தாலும் வரவர் அரசியல்வாதி. அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு”, என்றாள்.

     “யாரா இருந்தா என்ன? இப்போதைக்கு அவர் சீஃப்  கெஸ்ட். அவ்வளவு தான். வேற எதுவும் யோசிக்காத”, என்றாள்.

     அப்போது எம். எல். ஏவும் மூன்று கார்களுடன் அங்கே வர சாவித்ரி அவரை வரவேற்றாள். “வணக்கம் சார்”, என்ற படி மதியும் அவருக்கு சால்வை அணிவித்தாள். அவர் அவளை பெரிதாக எல்லாம் கவனிக்க வில்லை. “வணக்கம் மா”, என்ற படி மேடையை நோக்கிச் சென்று விட்டார்.

     “ஆதி வந்திருக்கிறானா?”, என்று ஒரு நொடி தேடியவள் பின் உள்ளே சென்று விட்டாள். அந்த தேடல் எதனாலோ? அன்றைய விழா நல்ல படியாக முடிந்தது.

     அடுத்த நாள் காலையில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வந்த காலிங்கராயர் கை கால் கழுவி விட்டு உணவு உண்ண அமர அவருக்கு அன்புடன் பரிமாறினாள் தமயந்தி. அவர் சாப்பிட்டு முடித்து அமரும் போது தரகர் வீட்டுக்கு வந்தார். அவரைக் கண்டதும் “வாங்க உக்காருங்க”, என்று வரவேற்றார் ராயர். தமயந்தி காபி எடுத்து வந்து கொடுத்தாள். சேதுராமனும் பார்வதியும் அங்கே வந்து அமர்ந்தார்கள்.

     “தரகர் எதுக்குப்பா வந்திருக்கார்? நீ வரச் சொன்னியா?”, என்று கேட்டாள் பார்வதி. அவளது மனது திக்கென்று இருந்தது. அன்று பெண் பார்க்கச் சொன்னது பார்வதிக்கு கடுப்பாக தான் இருந்தது. ஆனால் உடனே பெண் அமையாது என்று தான் எண்ணியிருந்தாள்.

     “ஆமா மா, நான் தான் வரச் சொன்னேன் மா. ரெண்டு நாளுக்கு முன்னாடி ஆதிக்கு பொண்ணு பாக்க சொன்னேன்ல? அதான் தரகர் வந்திருக்கார்”, என்று பார்வதியிடம் சொல்லி விட்டு தரகர் புறம் திரும்பி “சொல்லுங்க தரகரே. நல்ல விஷயம் தானே?”, என்று கேட்டார் காலிங்கராயர்.

            “ஆமாங்க ஐயா, நீங்க உங்க மூத்த மகனுக்கு பொண்ணு பாக்கச் சொன்னீங்கல்ல? அது விஷயமா தான் பேச வந்தேன்”, என்று சொல்ல பார்வதிக்கு மட்டும் திக்கென்று இருந்தது.

            “பொண்ணைப் பத்திச் சொல்லுங்க, தரகரே. என் மகனுக்கு பொருத்தமா இருப்பாளா?”

            “பொருத்தம் பாக்காம நான் இங்க வருவேனா? நல்ல பொண்ணு. நல்ல குடும்பம் ஐயா. உங்க மகனுக்கு பொருத்தமா இருப்பா”

            “எந்த ஊரு பொண்ணு?”

     “நம்ம ஊரு தான் ஐயா. பொண்ணுக்கு அம்மா இல்லை. அப்பா மட்டும் தான். இன்னும் சொல்லப் போனா அப்பாவும் மகளும் மட்டும் தான். சொந்தங்கள் எல்லாம் அதிகம் இல்லை. உங்க அளவுக்கு பெரிய குடும்பம் இல்லைங்க. ஆனா பொண்ணுக்கு நிறைவா செய்வார். அதை விட பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கும். நீங்க வேணும்னா போட்டோ பாருங்க”, என்று சொல்லி வான்மதியின் புகைப்படத்தை நீட்டினார்.

     ராயர் அதை வாங்கிப் பார்த்தார். அவர் கண்களுக்கு நிறைவாக தெரிந்தாள். மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று எண்ணிக் கொண்டார். அவளை பள்ளியில் பார்த்த நினைவு எல்லாம் அவருக்கு வரவில்லை.

     மனதுக்குள் மகனுக்கும் அந்த பொண்ணுக்கும் பொருத்தம் பார்த்தவர் வேறு யாரிடமும் எதுவும் கேட்க வில்லை. மனைவியிடம் கூட ராயர் கேட்க வில்லை. ஃபோட்டோவில் இருந்து பார்வையைத் திருப்பி தரகரைப் பார்த்தவர் “வெள்ளிக்கிழமை சாயங்காலம் பொண்ணு பாக்க வரோம்னு அவங்க வீட்ல சொல்லச் சொல்லுங்க தரகரே. அன்னைக்கு வசதி இல்லைன்னா கூட அவங்களுக்கு எப்ப வசதிப் படும்னு கேட்டு எனக்கு கால் பண்ணுங்க”, என்று முடிவையே சொல்லி விட்டார். அவரை எதிர்த்து பேச அங்கே யாரும் துணிய வில்லை.

     “சரிங்க ஐயா. நான் அவங்க கிட்ட கேட்டுட்டு உங்களுக்கு சொல்றேன்”, என்று சொல்லி விட்டு தரகர் கிளம்பிச் சென்றதும் காலிங்கராயரும் எழுந்து சென்று விட்டார். பார்வதி பொருமிக் கொண்டிருந்தாள். சேதுராமன் மகன் எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டார். கணவர் பிறகு இதைப் பற்றி தன்னிடம் பேசுவார் என்று தெரிந்த தமயந்தியும் வேலையைப் பார்க்கச் சென்றாள்.

     அனைவரும் சென்றதும் மணிமேகலையை போனில் அழைத்தாள் பார்வதி.

     “சொல்லுங்கம்மா, என்ன காலைலே கால் பண்ணியிருக்கீங்க?”

     “என்னத்த டி சொல்ல சொல்ற? ஆதிக்கு உங்க அண்ணன் கல்யாணம் பேசுறான் டி”

     “என்ன மா சொல்றீங்க?”

     “ஆமா, எதுக்கும் இன்னைக்கு சாயங்காலம் கிளம்பி வீட்டுக்கு வா. அவன் விஷயம் சொல்லும் போது அவன் கிட்ட பேசலாம்”, என்று சொல்லி போனை வைத்தாள்.

     அதே நேரம் தரகர் மதியின் தந்தை பரமசிவத்தை அழைத்தார். “சொல்லுங்க தரகரே, என் மகளுக்கு நல்ல வரன் வந்திருக்கா?”, என்று அவர் எதிர் பார்ப்புடன் கேட்க “ஒரு வரன் வந்திருக்கு டீச்சர்”, என்று சொல்லி ராயரின் விவரம் சொல்ல அவ்வளவு பெரிய இடமா என்று தயங்கினார் பரமசிவம்.

     “நம்பிக் கொடுங்க டீச்சர். பொண்ணு நல்லா இருப்பா. பையன் ரொம்ப நல்ல மாதிரி. அரசியல்வாதி குடும்பம்னாலும் அவங்க மக்களுக்கு செய்யுற நன்மையை பாக்குறீங்க தானே? அவங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. மகாராணி மாதிரி வச்சிக்குவாங்க. உங்க பொண்ணு வாழ்க்கைக்கு நான் கேரண்டி”, என்று சொல்ல“சரி தரகரே, முதல்ல அவங்க வந்து என் பொண்ணைப் பாக்கட்டும். அப்புறம் பேசுவோம்”, என்று அரை மனதாக சம்மதம் சொன்னார்.

     “அவங்க வெறும் பொண்ணைப் பாக்க மட்டும் வராங்கன்னு நினைச்சிறாதீங்க டீச்சர். அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா பொண்ணு பாக்கவே வர மாட்டாங்க. எனக்கு தெரிஞ்சு உங்க பொண்ணு போட்டோ பாத்ததும் ராயர் ஐயா முகத்துல அவ்வளவு திருப்தி. பேசி முடிக்கிற மாதிரி தான் வருவாங்க. நான் ராயர் ஐயாவோட நம்பர் அனுப்புறேன். பேசுங்க”, என்று சொல்லி விட்டு போனை வைத்தார் தரகர்.

            ராயரின் நம்பர் வந்ததும் அந்த எண்ணுக்கு அழைத்தார் பரமசிவம். “ஹலோ யாருங்க?”, என்று ராயர் கேட்க “சார் என்னோட பேர் பரமசிவம்”, என்று ஆரம்பித்தார்.

     “தரகர் சொன்னாங்க சார். எங்களுக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு. என் பையனை நீங்க ஆல்ரெடி பாத்துருப்பீங்க. நீங்க என்ன சொல்றீங்க?”

     “இல்லை, நீங்க பெரிய இடம். உங்க அளவுக்கு எல்லாம் எங்களால?”

     “பணமும் பதவியும் எப்ப வேணும்னாலும் வரும் போகும். ஆனா நல்ல மனுசங்களுக்கு அன்பும் மரியாதையும் தான் முக்கியம். உங்க பொண்ணு தான் எங்க வீட்டுக்கு மருமகள்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் நீங்க என் மகனை நேர்ல பாத்துட்டு சொல்லுங்க. உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுறலாம். வெள்ளிக்கிழமை பாக்கலாம்”, என்று சொல்லி ராயர் போனை வைக்க திகைப்பில் இருந்தார் பரமசிவம்.

Advertisement