Advertisement

     அவள் முறைத்த படி இருக்க சிறு சுவாரசியம் ஏறியது அவன் பார்வையில். நிதானமாக அவளை நெருங்கிச் சென்றவன் அவள் முன்பு நின்றான். அங்கே நின்றிருந்த அனைவரின் கவனமும் இப்போது அவர்கள் மேலே தான் இருந்தது.

     “ஹேலோ மேடம் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”, என்று ஆதி கேட்க அவளோ பேகை மறைத்துக் கொண்டு உனக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று சைகையில் சொன்னாள். அவள் செய்கை அவனுக்கு வியப்பைக் கொடுக்க “இங்க பக்கத்துல கடை இல்லை. அதான் கேட்டேன்”, என்றான்.

     “காட்டுமிராண்டிக்கு எல்லாம் நான் தண்ணி கொடுக்க மாட்டேன்”, என்று அவள் நிமிர்வாகவே சொல்ல அவன் கவனம் கொஞ்சம் கூடுதலாக அவள் மேல் படிந்தது.

     அப்போது அங்கே போலீஸ் வர அவனைக் கண்டதும் அவர்கள் வணக்கம் சொல்ல அவர்களையும் மதி முறைத்தாள். “ரொம்ப நல்லா இருக்கு சார். ஒருத்தன் ஒரு சின்ன பையனைப் போய் மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறான். நீங்க அவனுக்கே வணக்கம் வைக்கிறீங்க?”, என்று அவள் கோபத்துடன் கேட்க “இங்க என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாதமா. அவன் சின்னப் பையன் தான். ஆனா அவனால எத்தனை பொண்ணுங்க டிஸ்டர்ப் ஆகுறாங்கன்னு தெரியுமா? அதுவும் சார் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக் கிட்ட வம்பிழுத்தா பாத்துட்டு சும்மா இருப்பாங்களா?”, என்று அவளிடம் எகிறிய இன்ஸ்பெக்டர் அவனை அங்கிருந்து போகச் சொல்ல அவளை ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டுச் சென்றான். அன்றைய நினைவு இருவருக்குமே இப்போது நினைவில் வந்தது.

     “குட், இப்ப உங்க ஒப்பினியன் மாறிருச்சா? இப்பவும் நான் காட்டு மிராண்டி தானா?”, என்று கேட்டான் ஆதி.

     “அன்னைக்கே மாறிருச்சு? உங்க மேல தப்பு இல்லைன்னு புரிஞ்சது”, என்று சிறு குற்ற உணர்வுடன் சொல்ல “அப்படியா? நம்ப முடியலையே?”, என்று கேட்டான் ஆதி.

     “ஏன் நம்ப முடியலை?”

     “இல்லை தப்பு புரிஞ்சா ஒரு சாரி கேப்பாங்க. நீங்க கேக்கலையே? ஒரு சாரி கேட்டா குறைஞ்சு போயிருவீங்களா?”, என்று அவன் வம்பிழுக்க “சாரியை எல்லாம் கேட்டு வாங்குவாங்களா?”, என்று அவனுக்கு பதில் தந்தாள் அவள். அவளின் பட்டென்ற பதிலில் அவனுக்கு அவளுடன் வார்த்தையாட பிடித்திருந்தது,

     “அப்படின்னா நீங்க இன்னும் என்னை தப்பா தான் நினைக்கிறீங்களா டீச்சர்?”

     “என் பேர் வான்மதி. வான்மதின்னே கூப்பிடலாம்”

     “ஓகே வான்மதி. சொல்லுங்க. தப்புனு புரிஞ்சிருந்தா சாரி கேட்டுருப்பீங்களே?”

     “அன்னைக்கே கேக்கணும்னு நினைச்சேன். நீங்க கிளம்பினதுனால கேக்க முடியாம போச்சு”, என்றவள் அன்றைய அவனின் தோற்றத்தையும் இப்போதைய அவன் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.

     கிட்டத்தட்ட ஆறரை அடி உயரம்…. கிளீன் ஷேவ் செய்ததால் பளபளவென்று இருந்தது அவனது கன்னங்களும் தாடைகளும். அன்றைக்கு படித்த ரவுடி போன்ற தோற்றத்தில் இருந்தவன் இப்போதோ கோர்ட் சூட் அணிந்து பிஸ்னஸ்மேன் லுக்கில் இருந்தான். அவள் அவனை அவளவிடுவதை எல்லாம் அவன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

            “அன்னைக்கு பாக்க சண்டியர் மாதிரி இருந்தான். இன்னைக்கு பக்கா பிஸ்னஸ் மேனா இருக்கான்? இவன் தான் அவனா?”, என்று அவளுக்கே குழப்பம் வந்தது. இது தான் அவனது இயல்பு என்றும் ஆனால் தந்தை என்று வந்து விட்டால் கொலை செய்யக் கூட தயங்க மாட்டான் என்று அவளுக்கு யார் சொல்வது?

            “சாரி. உங்களை தப்பா நினைச்சதுக்கும். தண்ணி கேட்டதுக்கு கொடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கும். போதுமா?”, என்றாள் மதி.

     “பரவால்ல விடுங்க. சரி பங்ஷன் விவரம் சொல்லுங்க. நானும் நோட் பண்ணிக்கிறேன்”, என்று அவன் சொல்ல அவள் மேலோட்டமாக சொன்னாள்.

            அதைக் குறித்துக் கொண்டவன் “அப்பா கண்டிப்பா வருவாங்க. ஹெச். எம் மேடம் வெளிய வெயிட் பண்ணுறாங்க. போகலாமா?”, என்று அவன் கேட்க அவள் வியப்பாக அவனைப் பார்த்தாள்.

     அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “அவங்க வெளிய வெயிட் பண்ணுறதை சிசிடிவில பாத்தேன்”, என்று சொல்ல “ஓகே சார். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

     அவனும் அவளுடன் நடக்க அவள் குழப்பமாக பார்த்தாள். “மேடத்தைப் பாக்க வரேன்”, என்று சொல்ல அவள் முன்னே நடக்க அவன் பின்னே நடந்தான். இருவரும் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவள் படியில் இறங்கப் போக “வாங்க லிஃப்ட்ல போகலாம்”, என்று அழைத்தான்.

     அவளும் சரி என்று அவனுடன் சென்றாள். அவன் உள்ளே சென்று தரைத் தளத்துக்காக பட்டனை அழுத்த உள்ளே வந்த மதி சேலை தடுக்கி அப்படியே அவன் மீது சாய்ந்தாள்.

     “ஹே பாத்து”, என்றவன் அவளை பிடித்துக் கொண்டான். கீழே விழுந்து விடுவோமோ என்ற படபடப்பில் அவன் மீது சாய்ந்திருந்தாள். அவனோ அவள் அருகாமையில் புது வித உணர்வை அடைந்தான். முதல் முறை உணர்ந்த பெண்ணின் பரிசம் அவனை எதுவோ செய்தது. அவள் தலையில் இருந்த மல்லிகை வாசம் அவனை மயக்கியது. இது வரை எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறான். ஆனால் யாரிடமும் இப்படி ஒரு உணர்வை உணர்ந்ததில்லை. ஏதோ ஒரு சுழழுக்குள் சிக்கியது போல ஒரு உணர்வை அடைந்தான்.

            அவளுடைய மெல்லிடையில் அவனது முரட்டுக் கரம் பதிந்திருக்க அவனுக்கு ஏதோ பட்டுப் பூச்சியை தொட்ட உணர்வு தான் வந்தது. நல்ல நிறத்தில் அதிக அழகில் கண்ணுக்கு லட்சணமாக அம்சமாக இருந்தவளின் மீது அவன் பார்வை சற்று அதிகமாகவே பதிய “சாரி சிலிப் ஆகிருச்சு”, என்று சொல்லி விட்டு விலகி நின்றாள். அவன் முன்னால் இப்படி ஆகி விட்டதே என்று அவள் முகம் சிவந்தது.

     “இட்ஸ் ஓகே”, என்றவன் அமைதியாக அவள் அறியாதவாறு அவளைப் பார்வை இட்டான். முதல் முறை அவளைப் பார்த்த போதும் பெரிய அளவில் பாதிக்கப் பட்டான். இப்போதும் அவனுக்கு அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலவும் அவளுடனே இருக்க வேண்டும் போலவும் உணர்வு எழுந்தது.

            அவளைக் கண்டதும் தனக்குள் எழுந்த உணர்வுகளுக்கு பெயர் என்ன என்று அவனுக்கு தெரிய வில்லை. இது ஒரு ஆணுக்கு அழகான பெண்ணைக் கண்டதும் வரும் காதலா, காமமா, ஈர்ப்பா இல்லை ரசனையா என்று தெரியாமல் குழம்பினான்.

     அவளுடன் கீழே வந்தவன் சாவித்ரியிடமும் பேசி விடை கொடுத்தான். “நாங்க வரோம் சார்”, என்று சாவித்ரி சொல்ல வான்மதியும் அவனைப் பார்த்து தலை அசைத்து விட்டு நடந்தாள்.

     போகும் அவளையே பார்த்த படி அசையாமல் நின்றான் ஆதி. அவள் தன்னை விட்டு நீங்கிச் செல்ல செல்ல ஏனோ அவள் தன்னை விட்டு ஒரெடியாக விலகிப் போகும் உணர்வைக் கொடுக்க அவனுக்கு மனது வலித்தது. அவள் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றான். ஆனால் அவளோ சாவித்ரியிடம் பேசிக் கொண்டே அவனை மறந்து சென்று விட்டாள்.

     அதற்கு பின் அறைக்கு வந்தவனுக்கு எந்த வேலையும் செய்ய ஓட வில்லை. அவள் மட்டுமே நினைவில் இருந்தாள். நிச்சயம் இவள் மேல் எழுந்த இந்த உணர்வுகள் இன்னொரு பெண் மீது எழாது என்று உறுதியாக நம்பியவன் தன்னுடைய நண்பனிடம் அவளைப் பற்றி விசாரிக்கச் சொல்லி விட்டே வீட்டுக்குச் சென்றான்.

     அன்றைய இரவில் அனைவரும் இரவு உணவை உண்டு கொண்டிருக்க அவன் மட்டும் கற்பனையில் அமர்ந்திருந்தான். அவன் மனதில் மதி மட்டுமே உலா வந்தாள். எப்போதும் அவன் அதிகம் பேச மாட்டான் என்பதால் அவன் அமைதி யாரையும் கவர வில்லை. அது மட்டுமில்லாமல் ராயர் இருந்தால் யாருமே அதிகம் பேச மாட்டார்கள் என்பதால் அங்கே உணவு உண்ணும் சத்தம் மட்டுமே கேட்டது.

     அப்போது ராயரின் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதை எடுத்தவர் “சொல்லுங்க தரகரே”, என்றார். தரகர் என்றதும் அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது.

            “இல்லை, இந்த நம்பர்ல இருந்து மிஸ்டு கால் கிடந்துச்சு. யாரு நீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”, என்று தரகர் கேட்டதும் “நான் எம். எல். ஏ காலிங்கராயன் பேசுறேன்”, என்றார்.

            “ஐயா நீங்களா? சொல்லுங்க”

            “என் பெரிய பையனுக்கு பொண்ணு பாக்கணும்”, என்று ராயர் சொல்ல அனைவரும் சிறு திகைப்புடன் ஆதியைப் பார்க்க அவனோ உணவில் கவனமாக இருந்தான்.

     “அவன் கல்யாணத்தைப் பத்தி பேசுறாங்க. ஆனா அவன் எந்த டென்சனும் இல்லாம அசால்ட்டா இருக்கான் பாரேன்”, என்று அவனது தங்கை நந்தினி விக்கியின் காதில் முணுமுணுக்க “அதானே, இவன் என்ன மேக்குன்னே தெரியலையே?”, என்று முணுமுணுத்தான் விக்கி.

     “டேய் பேசாம சாப்பிடுங்க”, என்று செழியன் அவர்களை கண்டிக்க வாயை மூடிக் கொண்டார்கள். ஆனால் பார்வதி தேவி மட்டும் மகனை முறைத்துக் கொண்டு இருந்தாள். அஞ்சனாவை ஆதிக்கு திருமணம் செய்து வைக்க அவள் எண்ண மகன் இப்படி சொன்னால் அவளுக்கு எரிச்சல் வராதா?

            “பாத்துறாலாங்க ஐயா? நீங்க பெரிய இடம். ராஜ வம்சம் வேற. ரொம்ப பெரிய இடமா பாக்கணுமா?”, என்று தரகர் கேட்பது வெளியே அனைவருக்கும் மெல்லியதாக கேட்டது.

            “ரொம்ப பெரிய இடம் அப்படி எல்லாம் வேண்டாங்க? கௌரவமான நடுத்தரக் குடும்பமா இருந்தா கூட போதும்? அந்த பொண்ணு கொண்டு வர சீர்வரிசைல தான் எங்க வீடு நிறைய போகுதா? ஆனா ஒரே ஒரு விஷயம் தான். பொண்ணு நல்லவளா அழகா இருக்கணும். என் மகனோட கம்பீரத்துக்கு குறையாம இருக்கணும். நான் ஜாதகம் எல்லாம் அனுப்பி வைக்கிறேன்”

            “சரிங்க ஐயா, நான் நல்ல இடமா பாத்துட்டு சொல்றேன்”, என்று அவர் சொன்னதும் ராயர் போனை வைக்க அந்த பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆதியின் மனதில் உலா வந்தது மதி தான். அவளைத் தவிர தனக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது அவனுக்கு.

     “ஆதி உனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டேன். உனக்கு சம்மதம் தானே?”, என்று ராயர் கேட்க “நீங்க செஞ்சா சரியா தான் பா இருக்கும்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.

            அன்றைய இரவில் தூக்கத்தை தொலைத்தான் ஆதி. அவளின் நினைவே அவனுக்கு வந்தது. அவளின் குழந்தை முகம் அவனை நிம்மதியாக தூங்க விட வில்லை. இனி இப்படி ஒரு எண்ணம் மற்றொரு பெண்ணின் மீது தனக்கு வராது என்று எண்ணியவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான். அவளை எண்ணி அவன் உடலின் ஒவ்வொரு அணுவும் சிலிர்க்க அவனது இதயத் துடிப்பின் வேகமும் சற்று கூடியது. முதன்முதலாக ஆண் என்று அவனை உணர வைத்தாள் அவள்.

காதல் தொடரும்…..

Advertisement