“அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆதி. வி. என் ஸ்கூல் ஹெச். எம் என்னை பாக்கணும்னு சொல்லி அப்பாயின்மெண்ட் வாங்கிருக்காங்கன்னு பி. ஏ சொன்னான். அவங்க அங்க இருந்து கட்சி ஆஃபிஸ்க்கு வந்தா ரொம்ப நேரம் ஆகும். அதான், நான் இங்க வந்தேன். அப்படியே நம்ம ஆபிசையும் பாத்த மாதிரி இருக்கும்ல? கம்பெனியை சூப்பரா கொண்டு போற ஆதி. எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்கு டா”

     “என்னோட ரோல் மாடல் நீங்க தான் பா. உங்களைப் பாத்து வளந்தவனுக்கு உங்க அறிவும் சாமர்த்தியமும் திறமையும் இல்லாமலா போயிரும்”, என்று சிரிப்புடன் சொன்னான்.

     “என் ரத்தம் தோத்து போகாது டா. சரி செழியன் எப்படி வேலை பாக்குறான்? ஸ்பின்னிங்க் மில் மொத்தத்தையும் அவன் கிட்ட தூக்கி கொடுத்துட்ட? அப்ப அப்ப பாத்துக்கோ ஆதி. சின்னப் பையன்”

     “இப்ப தானே பா சொன்னீங்க உங்க ரத்தம் தோத்துப் போகாதுன்னு. அவன் மட்டும் யாராம்? உங்க ரத்தம் தானே? சூப்பரா கொண்டு போறான் பா. அவன் அதை நல்லா பாத்துக்குவான். நான் நம்புறேன் பா அவனை”

     “நீ சொன்னா சரியா தான் இருக்கும்”, என்று ராயர் சொல்லும் போதே அவரது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவரின் முகம் பதட்டத்தைக் கொடுக்க “உடனே வரேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு எழுந்தவர் “நான் உடனே கிளம்பனும் ஆதி”, என்றார்.

     “என்ன பிரச்சனை பா? யாரு போன்ல? நானும் உங்க கூட வரவா?”

     “இன்ஸ்பெக்டர் தான் கால் பண்ணினார். கவர்ன்மெண்ட் நடத்திட்டு வர மைன்ஸ்ல ஏதோ ஆக்ஸிடெண்ட்டாம். ஏதோ ஒரு தொழிலாளிக்கு கை போயிருச்சாம். குடிச்சிட்டு வேலை செஞ்சிருப்பான் போல? அதுக்கு மத்தவங்க ஏதோ பிரச்சனை பண்ணுறாங்களாம். என்னை வரச் சொன்னார். நான் பாத்துக்குறேன். நீ வேலையைப் பாரு”

     “சரிப்பா, ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணுங்க”

     “சரி ஆதி”, என்று சொல்லி விட்டுக் கிளம்பியவர் வாசல் அருகே சென்று “ஆதி அந்த ஸ்கூல்ல இருந்து வரவங்க கிட்ட என்ன ஏதுன்னு கேட்டு விசாரிச்சு வை. முடிஞ்ச அளவுக்கு செஞ்சு கொடு”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

     அவர் சென்று சிறிது நேரம் கழித்து சேது குருப் ஆப் கம்பெனிசின் மெயின் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்கினார்கள் வான்மதியும் சாவித்ரியும். அவனது அலுவலகமாக இருந்த அந்த கட்டிடத்தை பிரம்மிப்பாக பார்த்தாள் வான்மதி. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது அந்த கண்ணாடியால் ஆன கட்டிடம். அதை இமைக்காமல் பார்த்தவள் சாவித்ரியுடன் உள்ளே சென்றாள். ரிசப்சனிஸ்ட் யார் என்ன என்று கேட்டு விசாரித்து அவர்களை ஒரு இடத்தில் அமரச் சொன்னாள்.

     ஒரு பைலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதியிடம் ரிசப்சனிஸ்ட் விஷயத்தைச் சொன்னதும் அவர்களை வரச் சொன்னான். அவனது அலுவலகத்தில் இருந்தவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி. ரிசப்சனிஸ்ட் சொன்னதும் இருவரும் அவனைக் காணச் சென்றார்கள். மேனேஜிங்க் டேரெக்டர் என்று பொன்னிற எழுத்துக்களால் மின்னிய அறையை தட்டி விட்டு உள்ளே நுழைந்தார்கள்.

            “உள்ளே வாங்க”, என்று அழைத்த ஆதி அவர்களை வரவேற்கும் விதமாய் புன்னகையுடன் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே வந்த அவளைக் கண்டதும் அவனுக்கு திகைப்பு தான். ஹெச். எம் என்றதும் ஒரு வயதான ஆண் வருவார் என்று எதிர் பார்க்க இங்கே வந்ததோ இரண்டு பெண்கள். அதிலும் அங்கே வான்மதியை எதிர் பார்க்கவே இல்லை. அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட்டான்.

     “இவளா?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க அவளுக்கும் அதே திகைப்பு தான்.  இருவரும் தங்கள் திகைப்பில் இருக்க “குட் மார்னிங் சார். நான் வி. என் ஸ்கூல் ஹெச். எம். இவங்க எங்க ஸ்கூல் டீச்சர்”, என்ற சாவித்ரியின் குரலில் தான் நடப்புக்கு வந்தார்கள். “இவ ஒரு டீச்சரா?”, என்று எண்ணியவனுக்கு அவள் ஒரு பள்ளியின் ஆசிரியர் என்று தெரியாது. இன்னும் சொல்லப் போனால் அவள் பெயர் கூட அவனுக்கு தெரியாது.

            “வெரி குட் மார்னிங் மேம். பிளீஸ் பி சீட்டட் போத் ஆப் யு”, என்று ஆதி சொன்னதும் இருவரும் அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தார்கள். அப்போது அவன் ஒரு பெல்லை அடித்ததும் அடுத்த நொடி அங்கே இரண்டு காபி கப்களுடன் வந்தாள் ஒரு பெண்.

     “ஐயோ இதெல்லாம் எதுக்கு?”, என்று சாவித்ரி சொல்ல “பரவால்ல குடிங்க”, என்றவன் ஒரு நொடி மதியின் மீது பார்வையை நகர்த்தினான். பின் மீண்டும் சாவித்ரியை பார்த்தான்.

     அதற்கு மேல் பிகு செய்யாமல் இருவரும் காபியை எடுத்துக் கொண்டார்கள். “சார் உங்களுக்கு”, என்று சாவித்ரி கேட்க “இல்லை இப்ப வேண்டாம். நீங்க குடிங்க”, என்றான்.

     அவனைப் பார்க்க வைத்து குடிக்கிறோமே என்று சிறு சங்கடத்துடன் அதை இருவரும் பருக அவன் பார்வை அடிக்கடி வான்மதி மீதே இறங்கியது. அவன் பார்வையை வைத்தே அவனுக்கும் தன்னை நினைவு இருக்கிறது என்று புரிந்தது வான்மதிக்கு.

            அவர்கள் காபி குடித்து முடித்ததும் மீண்டும் அவன் பெல்லை அடிக்க மற்றொரு பெண் வந்து காபி கப்களை எடுத்துச் சென்றாள். அப்போது தான் ஆதி பேச்சையே ஆரம்பித்தான். “நீங்க அப்பாவைப் தானே பாக்க வந்தீங்க? நீங்க வருவீங்கன்னு அப்பா சொல்லிட்டு தான் போனாங்க”

     “ஆமா சார், சாரை இப்ப பாக்க முடியாதா?”, என்று கேட்டாள் சாவித்ரி.

      “அப்பா இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க. அப்புறம் அவங்க தொகுதில ஒரு இஸ்ஸுன்னு வெளிய போனாங்க. நீங்க என்ன விஷயமா பேச வந்தீங்க? சொல்லுங்க. நான் அப்பா கிட்ட சொல்லிறேன். ஸ்கூல்க்கு ஏதாவது பண்ட் வேணுமா?”, என்று கேட்டான்.

            “அதெல்லாம் வேண்டாம் சார். வர பதினைந்தாம் தேதி எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே வச்சிருக்காங்க. அதுக்கு ராயர் சார் சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கிட்டா நல்லா இருக்கும்னு பீல் பண்ணுறோம். அதான் அனுமதி கேக்க வந்தோம்”

            “ஒரு நிமிஷம்”, என்று சொன்னவன் தன்னுடைய போனை எடுத்து தந்தையின் பி. ஏ வை அழைத்தான்.

     “சொல்லுங்க தம்பி”

     “ஸ்பாட்க்கு போய்ட்டீங்களா?”

     “வந்துட்டோம் தம்பி. அப்பா மக்கள் கிட்ட பேசிட்டு இருக்காங்க. அடி பட்டவனை ஹாஸ்பிட்டல்ல சேத்தாச்சு. ஆனா குடிச்சதுனால டிரீட்மெண்ட் ஆரம்பிக்க சிக்கலா இருக்கும் போல? கை திரும்ப வருமா வராதான்னு தெரியலை. இங்க மக்கள் கம்பெனியை குறை சொன்னாங்க. ஆனா அவன் ரத்தத்துல ஆல்கஹால் கலந்துருக்குன்னு டாக்டர் நூத்தி எட்டுல ஏறும் போதே சொல்லிட்டாங்க. அதனால பேசுறவங்க  பம்மிட்டாங்க. அப்பா இப்ப கிளம்பிருவாங்க தம்பி”

     “சரிண்ணா. அப்புறம் வர பதினைந்தாம் தேதி அப்பா அப்பாயின்மெண்ட்ல ஏதாவது கரெக்சன் பண்ண முடியுமா?”, என்று கேட்டான்.

     “அன்னைக்கு காமராஜர் பிறந்தநாள் தம்பி. ஃபுல் அப்பாயின்மெண்ட் போட்டாச்சு. இப்ப எதுவும் பண்ண முடியாது”

     “ஸ்கூல் பங்ஷன்க்கு போகணும் அண்ணா. அப்பா அதுக்கு சரின்னு தான் சொல்லுவாங்க. ஒரு அரை மணி நேரம் பிரி பண்ணினா போதும்”

     “அப்படியா? ஒரு நிமிஷம்”, என்று சொல்லி  பைலை ஆராய்ந்தவர் “தம்பி சாயங்காலம் ஒரு அஞ்சறைக்கு வேணும்னா வரச் சொல்லலாம். ஆனாலும் ஆறு மணிக்கு மேல வேற அப்பாயின்மேண்ட் இருக்கு”

     “அவ்வளவு நேரம் போதும் அண்ணா. நீங்க அதுல வி. என். ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே ஆட் பண்ணிக்கோங்க. அப்பா வந்ததும் சொல்லிருங்க”

     “சரிங்க தம்பி”, என்று சொல்லி அவர் போனை வைத்ததும் அவர்களைக் கண்டவன் “ஒரு அரை மணி நேரம் தான் அப்பா பங்ஷன்ல இருக்க முடியும். வேணும்னா பைனலா பிரைஸ் கொடுக்குறதை அப்பா வந்தப்புறம் வச்சிக்குறீங்களா? இது தான் பண்ண முடியும். உங்களுக்கு ஓகே வா?”, என்று கேட்டான்.

     உடனே சரியென்று சம்மதம் சொன்னாள் சாவித்ரி. மீண்டும் ஒரு பெல்லை அடித்த ஆதி உள்ளே ஒரு பெண் வந்ததும் “நிஷா இவங்க வி. என். ஸ்கூல் ஹெச். எம் இவங்களை ஷெடியுல் ரூமுக்கு கூட்டிட்டு போய் டீட்டேயில்ஸ் வாங்கி அப்பாக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணிருங்க”, என்றான்.

     “வாங்க மேம்”, என்று அந்த பெண் சொல்ல சாவித்ரி எழுந்து கொண்டாள். மதியும் எழுந்து கொள்ள “நீங்க உக்காருங்க டீச்சர். உங்க கிட்ட சில இன்பர்மேசன் வாங்கணும்”, என்றான்.

     “நீ எல்லா டீட்டேயிலும் சொல்லு மதி மா. நான் அங்க தகவல் சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லிச் சென்றாள் சாவித்ரி.

     அவர்கள் சென்றதும் “உங்களுக்கு என்ன தகவல் வேணும் சார்?”, என்று நிமிர்வாகவே கேட்டாள்.

     “முதல்ல உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்”

     “என்ன?”, என்று அவள் வெடுக்கென்று கேட்க “என்னை நினைவிருக்கா?”, என்று மென்மையாக கேட்டான்.

     “ம்ம்”, என்றவள் அன்றைய நினைவுக்குச் சென்றாள். அவனுக்கும்  அதே நினைவு தான்.

     சிறிது நாட்களுக்கு முன் கல்லூரியில் அஞ்சனாவிடம் ஒரு மாணவன் காதலைச் சொல்ல அவள் அதை மறுக்க அவன் அடங்காமல் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தான். கடைசியில் அவளை அவன் ஓவராக டீஸ் செய்ய அதை அஞ்சனா செழியனிடம் சொல்லி அழுதாள்.

     செழியன் அவனைப் போய் மிரட்டியும் அவன் கேட்க வில்லை. அதனால் அவன் உடனே அதை ஆதியிடம் சொல்ல காலேஜுக்குள் புகுந்து அவனை அடி பின்னி விட்டான் ஆதி. அவன் வெளியே ஓட நடு ரோட்டில் போட்டு அவனை அடிக்க அப்போது அங்கே ஒரு இண்டர்வியூக்காக போய் விட்டு வந்த மதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்றிருந்தவள் கண்டாள்.

     அவளுடன் இன்னும் சில பேர் நின்று வேடிக்கைப் பார்க்க ஆதியோ அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் அவனை அடி பின்னி விட்டான். “அரசியல்வாதி பையன்னா என்ன வேணும்னாலும் செய்யலாமா? எல்லாம் பணமும் அதிகாரமும் இருக்குற திமிர். இவங்களை எல்லாம் நம்பி ஓட்டுப் போட்டா இப்படி தான் நடக்கும்”, என்று ஒரு பெண் சொல்ல ஆதியை ரவுடியாக தான் அந்த நேரம் பார்த்தாள் மதி. கருப்பு பேண்ட்டும் வெள்ளைச் சட்டையும் கழுத்தில் தடிமனாக இருந்த புலி நகம் டாலர் வைத்த செயினும் முறுக்கு மீசையும் அந்த நேரம் அவனை ரவுடியாக தான் காட்டியது.

     அவனை புரட்டி போட்டு அடித்தவன் அவன் தோய்ந்து போய் விழுந்ததும் போனை எடுத்து அவனது ஆட்களை அழைக்க அவனது ஆட்கள் அவனை தூக்கிக் கொண்டு சென்றார்கள். அப்போது ஆதிக்கு தண்ணீர் தாகமாக இருக்க கண்களைச் சுழற்றி கடையைத் தேடினான்.

     அங்கே ஒரு பூக்கடையை தவிர வேறு எந்த கடையும் இல்லை. அப்போது ஒரு பெண்ணின் ஹேண்ட்பேகில் வாட்டர் பாட்டீல் இருப்பது தெரிய உடனே அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் கண்களில் அப்படியே ஒட்டிக் கொண்டாள் மதி. அவன் முகம் முதல் முறையாக ஒரு பெண்ணை ரசனையாக பார்க்க அவளோ படத்தில் வரும் வில்லன்களைப் பார்ப்பதைப் போல அவனைப் பார்த்தாள்.