Advertisement

அத்தியாயம் 2

அதிகாலைச் சூரியனே,

கடனாகத் தருவாயா

காதல் என்னும் ஒளியை!!!

     காலை ஐந்து மணி ஆனதும் அடித்த அலாரம் சத்தத்தில் எழுந்து அமர்ந்தவள் காலைக் கடன்களை முடித்து விட்டு பல் துலக்கினாள். பின் அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு குடித்தாள். பின் பால்கனி கதவைத் திறந்து அங்கிருந்த படிக்கட்டுகள் வழியாக மொட்டை மாடிக்குச் சென்றவள் இந்த உலகையே வெளிச்ச மாக்க காத்திருக்கும் ஆதவனின் வருகையை ஒரு நொடி சந்தோஷமாக பார்த்தாள்.

            அவள் வான்மதி தேவி. வயது இருபத்தி ஐந்து. அனைவரும் அவளை மதி என்று தான் அழைப்பார்கள். பெண்மைக்கு இலக்கணம் அவள். மற்ற பெண்களைப் போல ஐந்து ஐந்தரை அடி என்று இல்லாமல் ஐந்தே முக்கால் அடிக்கும் கொஞ்சம் கூட தான் இருந்தாள். சிறு வயதில் இருந்தே செய்த உடற்பயிற்சி அவள் வளர்ச்சியையும் அதிகப் படுத்தியதோ என்னவோ?

            சந்தனமும் மஞ்சளும் கலந்த நிறம், அர்ஜுனனின் வில் போன்று வளைந்து நிற்கும் புருவங்கள், மீன்கள் போன்ற கண்கள், கூர் நாசி, செரிப்பழ இதழ்கள், ஒள்ளியும் இல்லாத குண்டும் இல்லாத தேகம், இருக்கா இல்லையா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் இடை, சிறிதளவு கூட தொப்பையே இல்லாத வயிறு நீண்ட கால்கள், நிமிர்ந்த நடை என இருக்கும் அழகான யுவதி.

            ஆண்களை கண்டு தலை குனிந்து பயந்து செல்லும் பெண் அல்ல அவள். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் கொண்ட இயல்பான பெண். யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்ற எண்ணம் கொண்டவள். அவள் கண்களில் இருக்கும் ஸ்நேக பாவம் அனைவரையும் அவளுடம் நட்பு கொள்ள தூண்டும். சிறு சிரிப்பிலும் கண் அசைவிலும் அனைவரையும் அவள் வசம் வைத்துக் கொள்வாள்.

            மனதில் இருப்பதை வெளியே சொல்லி அழும் சில பெண்களைப் போல அல்லாமல் உள்ளுக்குள்ளே அனைத்தையும் வைத்துக் கொள்ளும் அழுத்தமானவள். அவள் என்ன நினைக்கிறாள், என்ன செய்யப் போகிறாள் என்று எவராலும் கண்டு பிடிப்பது அரிதே.

            முதலில் சூரிய நமஸ்காரத்தை ஆரம்பித்தவள் பின் சில பல உடற்பயிற்சிகளை செய்தாள். பின் அந்த மொட்டை மாடியிலே சரியாக அரை மணி நேரம் நடந்தாள். அவர்கள் வீடு ஒரு மூன்று பெட்ரூம் கொண்ட வீடு. நடுவில் வீடு, சுற்றி தோட்டம் என ஐந்து சென்ட் தான்.

     அது அவளது தந்தை பரமசிவத்தின் சொத்து. அவர் ஒரு ரிட்டயர்ட் ஹெச். எம். உடல் பயிற்சிகளை முடித்து விட்டு அறைக்குச் சென்றவள் குளித்து கிளம்ப ஆரம்பித்தாள்.

     நேற்றே ரெடியாக எடுத்து வைத்திருந்த காட்டன் சேலையை நேர்த்தியாக கட்டி விட்டு தலை சீவ ஆரம்பிக்கும் போது அவளுடைய அறைக் கதவைத் தட்டினார் அவளது தந்தை. “இதோ வரேன் பா”, என்ற படி அவள் கதவைத் திறக்க “பாப்பா எந்திச்சிட்டியா டா?”, என்று கேட்டார்.

            “எழுந்து குளிச்சிட்டேன் பா. ஸ்கூல்க்கு இன்னைக்கு சீக்கிரமா போகணும்”, என்று மென்மையாக ஒலித்தது அவள் குரல். தந்தையிடம் அவளது குரல் எப்போதும் மென்மையாக தான் ஒலிக்கும்.

     “நீ சீக்கிரம் போகணும்னு சொன்னது நினைவு இருக்கு டா. அதான் எழுப்ப வந்தேன். சரி நீ கிளம்பி வா”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

            மதி தலை பின்னி அந்த நீண்ட பின்னலை கொண்டையாக போட்டாள். அழகாக சேலை கட்டுவது, நேர்த்தியாக கொண்டை போடுவது எல்லாமே அவள் பி.எட் படிக்கும் போது கற்றுக்கொண்டாள். வான்மதி ஒரு பள்ளி ஆசிரியை. பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் எடுக்கிறாள். அவள் இந்த பள்ளியில் வேலைக்கு சேர்த்து ஆறு மாதம் தான் ஆகிறது.

     அவளது தந்தை பரமசிவம் ஒரு ரிட்டயர்ட் ஹெட் மாஸ்டர் என்பதால் சிறு வயதில் இருந்தே வான்மதிக்கு தந்தையைப் போலவே டீச்சர் ஆக வேண்டும் என்பது தான் கனவு. அதனால் கணித துறையில் இளநிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வி முடித்து விட்டு பி.எட் படிப்பையும் படித்தவள் பள்ளியில் வேலைக்கும் சேர்ந்து விட்டாள்.

            டீச்சர் என்று சொல்லுக்கேற்ப அவ்வளவு அழகாக இருப்பாள். அவளது பள்ளியில் அவளுக்கு நிறைய விசிறிகள் இருக்கிறார்கள். மொத்தத்தில் பார்ப்பவர்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்க வைக்கும் அழகி.

            அவளுடைய பதிமூன்றாம் வயதில் அவளது தாய் நாச்சியார் மலேரியா காய்ச்சலால் இந்த உலகத்தை விட்டுச் சென்றார். அதற்கு பிறகு அப்பாவும் மகளும் தான். இருவரும் மற்றவர் மேல் உயிரையே வைத்திருந்தனர். அவள் தான் அவளுடைய தந்தையுடைய வாழ்வின் ஆதாரம்.

     ஆனாலும் சில நாட்களாக அவர் மனதை கவலை அரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியதில் இருந்தே பிரிவை எண்ணி கவலைப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்.

            அதை விட ஒரு நல்ல குடும்பத்தில் அவளை சேர்க்க வேண்டும் என்ற கடமையும் சேர்ந்து அவரை படுத்தி எடுக்கிறது. இத்தனை வருடம் கஷ்டப் பட்டு மகளை நல்ல படியாக வளர்த்து விட்டார். பெண் பிள்ளை என்பதால் அவளுக்கு அதிக செல்லம் கொடுக்க வில்லை. அதே நேரம் அதிக கண்டிப்பையும் ஒரு நாளும் காட்டியதிலை.

            தந்தையின் மீது வைத்த அன்பினால் அவளும் நல்ல படியாகவே வளர்ந்தாள். படிக்கும் போது அவளது அழகைக் கண்டு காதல் என்று ஆண்கள் வந்தால் கூட தன்னுடைய தந்தையிடம் சென்று பேசச் சொன்னாள். அந்த அளவுக்கு தெளிவுடன் கூடிய சிந்தனை உடையவள்.

     கிளம்பி முடித்து ஹேன்ட் பேகை மாட்டிய படி வந்த மதி நேராக சமையல் அறைக்குச் சென்றாள். ஒரு அடுப்பில் தோசை வெந்து கொண்டிருக்க மற்றொரு அடுப்பில் சட்னி கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்காக சமைத்துக் கொண்டிருந்தார் பரமசிவம்.

            “அப்பா நான் வந்து தோசை ஊத்திருப்பேன்ல? நீங்க ஏன் கஷ்டப் படுறீங்க?”, என்ற படி வந்தவள் அவரை லேசாக கட்டிப் பிடித்து விலகி நின்றாள்.

            அவள் கன்னத்தை வருடியவர் “பரவால்ல டா. நீ உக்காந்து சாப்பிடு. எனக்கும் நேரம் போகணும்ல?”, என்றார்.

            “அப்படின்னா ரெண்டு பேரும் சேந்து சாப்பிடலாமா?”, என்று கேட்டதும் அவளையே பார்த்தார்.

            அவர் எப்போதும் பத்து மணிக்கு மேல் தான் காலை உணவை உண்ணுவார். ஆனால் மகள் ஆசையாக கேட்கவும் “சரி டா”, என்று சொல்லி மேலும் நான்கு தோசைகளை சுட்டு விட்டு அவளுடன் சாப்பிட அமர்ந்தார். இருவரும் பேசிய படியே உண்டார்கள்.

     “இன்னைக்கு எதுக்கு மா சீக்கிரம் போகணும்னு சொன்ன?”, என்று கேட்டார் பரமசிவம்.

     “வர பதினஞ்சாம் தேதி கல்வி வளர்ச்சி நாள் பா. அன்னைக்கு ஸ்கூல்ல ஏதோ புரோகிராம் மாதிரி ஏற்பாடு பண்ணப் போறாங்க. அதுக்கு எம்.எல்.ஏவை சீஃப் கெஸ்ட்டா போடப் போறாங்களாம். அதுக்கு அவர் கிட்ட பெர்மிசன் வாங்கணும்ல? அதுக்கு என்னையும் பிரின்சி மேடம் கூப்பிட்டாங்க. அவங்களுக்கு நான் பெட் ஆச்சே? அதான் சீக்கிரம் போகணும்”

     “சரி டா”, என்று முடித்துக் கொண்டார். அவளும் உண்டு விட்டு கை கழுவ எழுந்தாள். அவர் மதியத்துக்கு என்று செய்து வைத்திருந்த தயிர் சாதம் மற்றும் தக்காளிசாதம் கொண்ட கேரியலையும், உருளைக் கிழங்கு பொரியலையும் லன்ச் பேகில் எடுத்து வைக்கும் போது மற்றொரு டப்பாவோடு வந்தார். அதில் இருந்த பழத் துண்டுகளை பார்த்தவள் சிறு சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள்.

            மகள் பள்ளிக்கு கிளம்பிச் சென்றதும் சிறிது நேரம் அவளைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார். பின் தோட்டத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். அவரது பொழுதுப்போக்கு கார்டனிங்க் தான்.

     வான்மதி பள்ளிக்குச் சென்றதும் நேராக ஸ்டாப் ரூம் சென்று அமர்ந்தவள் அன்றைய வகுப்புகளை பார்வையிட்டாள். அவளது உலகம் மிகவும் சிறியது. தந்தை, இந்த பள்ளி, மஞ்சரி உள்ளிட்ட சில தோழிகள் இது தான் அவளது உலகம். அவள் உலகத்தில் அடிதடி கிடையாது, வன்முறைகளும் அடக்கு முறைகளும் கிடையாது. நினைப்பதை செய்வாள், தோன்றியதைப் பேசுவாள்.

            தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சாதாரண பெண். ஆனால் கண் முன் அநியாயம் நடந்தால் தட்டிக் கேட்பாள். அதற்காக போராட்டம் என்றெல்லாம் இறங்க மாட்டாள். மனதுக்குள் ஒன்று வைத்து வெளியே வேறு பேசத் தெரியாது.

     எப்போதும் ஆதவனுக்கும் நிலவுக்கும் இடையே ஒரு ஈர்ப்பு இருக்கும். அதே போல இந்த ஆதித்யனுக்கும் வான்மதிக்கும் என்ன முறையில் ஈர்ப்பு வருகிறது என்று பார்க்கலாம்.

            அன்றைய டைம்டேபிளை எடுத்து மதி பார்த்துக் கொண்டிருக்க அப்போது சாவித்ரியிடம் இருந்து போன் மூலமாக அவளுக்கு அழைப்பு வந்தது. சாவித்ரி தான் வான்மதி வேலை பார்க்கும் பள்ளியின் ஹெச். எம். சிறு வயதிலே அழகாக பாடம் எடுப்பதாலும் மாணவர்களை கவரும் வகையில் இருப்பதாலும் மதியை சாவித்ரிக்கு மிகவும் பிடிக்கும். ஹெச்.எம் அவள் மேல் அன்பாக இருப்பதால் சில டீச்சர்களுக்கு வான்மதி மீது பொறாமையும் உண்டு. போனை எடுத்து “சொல்லுங்க மேம், கிளம்பலாமா?”, என்று கேட்டாள் வான்மதி.

     “காலேஜ் கேட் கிட்ட தான் நிக்குறேன் மதி. வரியா போகலாம். சாரைப் பாக்க ஒன்பது மணிக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிருக்கேன். இப்ப கிளம்பினா சரியா இருக்கும்”

     “இதோ வந்துட்டேன் மேம்”, என்று சொல்லி போனை அணைத்தவள் ஹேன்ட் பேகை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். சாவித்ரி காருடன் தயாராக இருக்க இவளும் அவர் அருகே ஏறி அமர்ந்தாள்.

     அதே நேரம் ஆதியின் அலுவலகத்துக்கு ஆதியைக் காண வந்தார் ராயர். அவரைக் கண்டு “வாங்கப்பா”, என்ற படி எழுந்து நின்றான் ஆதி.

     “உக்காரு ஆதி”, என்ற படி அவன் எதிரே அமர்ந்தார்.

     “என்னப்பா காலைலே ஆபீஸ் பக்கம் வந்துருக்கீங்க? தொகுதிக்கு போகலையா? ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டான். அவனது பொறுப்பில் விட்ட பிறகு ராயர் அலுவலகத்துக்கு எல்லாம் வர மாட்டார். திடீரென்று வந்ததால் தான் அப்படிக் கேட்டான்.

Advertisement