Advertisement

அவன் லிப்டில் இருந்து வெளியே வர அவனைக் கண்ட தமயந்தி “காபி தரட்டா ஆதி?”, என்று கேட்டாள்.

“வெளிய போறேன் மா”, என்று சொல்லி விட்டு வெளியே வரும் போது அவனது கருப்பு நிற ராயல் என்பீல்ட் அவனைப் போலவே கம்பீரமாக நின்றிருந்தது. அங்கு நின்ற யாரையும் கவனிக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தவன் அடுத்த நொடி பஞ்சாக பறந்திருந்தான். அவன் வேகத்தை அனைவரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொழிற்சங்கம் அமைந்த இடத்தில் தான் பெரிய பஞ்சாயத்து ஒன்று நடந்து கொண்டிருந்தது. வேகமாக அங்கே சென்றவன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்.

வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல உள்ளே வந்தவனைக் கண்டு ஒரு பார்வை பார்த்த அவனது தந்தை பொறுமையாக இரு என்னும் விதமாய் கண்ணைக் காட்ட தந்தையின் கண்ணசைவுக்கு கட்டுப் பட்டு கைகளை கட்டிக் கொண்டு அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றவன் அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்தான். அவன் வந்ததை வேறு யாருமே கவனிக்க வில்லை. அங்கே அவ்வளவு தீவிரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அந்த மார்க்கெட்டில் ராயரும் சில கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்ததால் ஆதியும் அந்த சங்கத்தில் உறுப்பினர் தான்.

தொழிற்சங்க தலைவர் தான் ராசு என்பவனின் மீது எம். எல். ஏவான ராயரிடம் புகார் கொடுத்திருந்தார். ராயர் எம். எல். ஏ வாக வராமல் ஒரு பெரிய மனிதராக வந்து பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார். இதெல்லாம் அவ்வப்போது நடப்பது தான். எதற்கு எடுத்தாலும் போலீஸ் கேஸ் என்று போகாமல் அவரே சுமுகமாக சில பிரச்சனைகளை முடிப்பார்.

“ஏப்பா ராசு, இங்க எல்லாரும் பரம்பரை பரம்பரையா தொழில் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீ நேத்து வந்துகிட்டு இங்க பிரச்சனை பண்ணக் கூடாது. அதை விசாரிக்க தான் நாங்க ராயர் ஐயாவை வரச் சொன்னோம். நீ அவரையே மரியாதை இல்லாம பேசுற?”, என்றார் தொழிற்சங்கத் தலைவர். தந்தையையே மரியாதை இல்லாமல் பேசினானா என்று கொலைவெறியாக ராசுவை முறைத்துக் கொண்டிருந்தான் ஆதி.

“நான் என்ன பண்ணுனேன்? நான் உண்டு என் வேலை உண்டுன்னு தானே இருக்கேன்? நீங்க தேவையில்லாம என்னைப் பத்தி பேசிட்டு இருப்பீங்க? நான் எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணுமா?”, என்று தெனாவெட்டாக கேட்டான் ராசு.

“நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருந்திருந்தா நாங்க ஏன் பா சங்கத்தைக் கூட்டப் போறோம்? ஐயா எதுக்கு விசாரிக்க வரப் போறாங்க?”

“எல்லாப் பொருளையும் விலை குறைச்சு வித்தா தப்பா? இதுக்கு ஒரு பஞ்சாயத்து, அதுக்கு ஒரு தலைவர் வேற”, என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான் ராசு.

“விலை குறைச்சு வித்தா நீ புண்ணியவான் தான். ஆனா உன் பொருள்ல நீ கலப்படம் இல்ல பண்ணுறியாம்? நாங்க வச்ச விலையை விட நீ கம்மியா விலை வச்சு காசு பாக்குற? அது நல்ல விஷயம் தான். ஆனா உன் தரம் இல்லாத பொருளுக்கு நீ வைக்கிற விலை அதிகம்னாலும் எங்க வியாபாரமும் பாதிக்க படுது. அது மட்டுமில்லாம நீ கலப்படம் செஞ்ச பொருளை தின்னுட்டு மக்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்ய?”

“நான் கலப்படம் பண்ணுறேன்னு கண்டீங்களா?”

“தெரியாம சொல்லுவோமா பா? பல கெமிக்கல் ஸ்ப்ரே, மருந்து எல்லாம் உன் குடவுன்ல இருக்குறதைப் பாத்துட்டோம். வீடியோ ஆதாரம் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் அரிசி பருப்பு காய்கறின்னு அடிச்சு வச்சா அது உடம்புக்கு எவ்வளவு கெடுதல்? இது எல்லாம் பாவம் டா”

“அதெல்லாம் எங்கயும் நடக்காதது இல்லை. எனக்கு பொழைக்க தெரிஞ்சிருக்கு நான் பொழைக்கிறேன். உங்களுக்கு என்ன? உங்க கடைகள்ல மக்கள் வாங்கலைன்னு உங்களுக்கு பொறாமை. ஆமா யா. நான் ஒத்துக்குறேன். கலப்படம் தான் பண்ணுறேன். என்ன பண்ண முடியும் உங்களால?”

“டேய் நாங்க பொறாமை படுற நிலைமைல நீ இல்லை. எங்களுக்கு தேவை நீ கலப்படம் செய்யுறதை நிறுத்து. இல்லை, உன்னோட கடையை காலி பண்ணு”, என்றார் தொழிற்சங்கத் தலைவர். இந்த பேச்சு வார்த்தையை எல்லாம் ராயர் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். ஆதியும் கொலைவெறியுடன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

“அதைச் சொல்ல நீ யாரு யா? உங்க கட்டப் பஞ்சாயத்து எல்லாம் என் கிட்ட காட்டாதீங்க. நான் இப்படி தான் பண்ணுவேன். உங்களால என்ன முடியுமோ பண்ணுங்க. இதுக்கு மேல பேசினா உங்களுக்கும் அசிங்கமாகிரும். உங்க தலைவருக்கும் மரியாதை கெடும்”, என்று ராசு சொல்ல அடுத்த நொடி ராயர் ஆதியைப் பார்த்து கண்ணைக் காட்டினார்.

அதற்காக காத்திருந்தவன் சிறுத்தையின் வேகத்துடன் ராசுவை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறை வைத்தான். ராசு அதிர்ந்து நிற்க மேலும் பல அடிகள் அவனுக்கு விழுந்தது.

அங்கிருந்த அனைவரும் அவனையும் அவன் அடியையும் கண்டு திகைத்து நிற்கும் அளவுக்கு அவனை அடி பின்னி விட்டான். “எங்க அப்பாவையே எதிர்த்து பேசுவியா? அவ்வளவு பெரிய ஆளா டா நீ? பண்ணுறது கேப்மாறித்தனம். இதுல லா பேசுவியா? ஒழுங்கா வியாபாரம் பண்ணத் தெரியாதவன் எல்லாம் எதுக்கு டா கடை போடுறீங்க?”, என்று கேட்டு கேட்டு ஆதி அவனை அடிக்க “இவனுக்கு இது தேவை தான். ஆதி நம்பி செய்யுறது கரெக்ட் தான். இன்னும் நாலு போடுங்க”, என்று சொன்னார்கள் அங்கிருந்தவர்கள். ராயர் அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

ஆதி பேசியதை விட அவன் அடிகள் ஒவ்வொன்றும் இடி மாதிரி உடலில் இறங்க வலியால் துடித்தான் ராசு. அடி வாங்கி துவண்டு போன ராசுவை எழுப்பி அவன் சட்டையைக் கொத்தாக பற்றிய ஆதி “ஒழுங்கு மரியாதையா கடையை காலி பண்ணிட்டு போயிரு. இன்னும் உனக்கு இங்க யாரும் கடையை வாடகைக்கு விட மாட்டாங்க”, என்று சொன்னான்.

பதில் சொல்ல முடியாமல் அவன் அமைதியாக இருக்க ஆதி மீண்டும் அவனை அடிக்கப் போனான். “விடு ஆதி, செத்துறப் போறான்”, என்று ராயர் சொன்னதும் அவனை அப்படியே விட்டுவிட்டான் ஆதி.

அவன் விட்டதும் ராசுவின் சட்டையை பற்றிய ராயர் “இது என்னோட தொகுதி. என் தொகுதில கடைக்காரங்களுக்கு பிரச்சனை வந்தாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். என் தொகுதி மக்களுக்கு பிரச்சனை வந்தாலும் சும்மா இருக்க மாட்டேன். நீ கண்ட மருந்தை அடிச்சு மக்கள் உடல் நலத்தைக் கெடுக்குறதை என்னை பாத்துட்டு இருக்கச் சொல்றியா? நீ திருந்தினா உன்னை அப்படியே விட்டுறலாம்னு தான் நினைச்சேன். ஆனா நீ பேசினதுக்கு உனக்கு எல்லாம் சரியான தண்டனை கிடைக்கணும்”, என்றவர் “ஆதி”, என்றார்.

“அப்பா”

“நம்ம இன்ஸ்பெக்டர்க்கு போனை அடிச்சு இவனை வந்து அள்ளிக்கிட்டுப் போகச் சொல்லு. தொழிற்சங்கதலைவர் கம்ப்லைண்ட் கொடுப்பார். இவன் கலப்படம் செஞ்சதை எல்லாம் வீடியோ எடுத்து வச்சிருக்காங்க. இவங்க கிட்ட இருக்குற வீடியோ ஆதாரத்தை போலீஸ்ல ஒப்படைச்சிரு. இவன் எல்லாம் ஜெயில்ல கலி தின்னுட்டு வரட்டும். அப்ப தான் திருந்துவான். நான் கிளம்புறேன். நீ இங்க இருந்து பாத்துக்கோ ஆதி”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

அவர் சென்றதும் தன்னுடைய போனில் இருந்து இன்ஸ்பெக்டரை அழைத்த ஆதி நடந்ததைச் சொல்லி அவரைச் வரச் சொல்லி, வியாபாரிகளிடம் கம்ப்லைண்ட் எழுதச் சொல்லி போலீஸ் வந்து வாசுவை அரஸ்ட் செய்யும் வரை அங்கேயே இருந்து அதற்கு பிறகு தான் வீட்டுக்கு கிளம்பினான்.

அவன் வீட்டுக்கு வந்த போது ராயரைக் காண சில பேர் வரிசையில் நின்று ராயரைப் பார்த்து விட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். அவரின் அலுவல் அறைக்குச் சென்றவன் அங்கு நடந்ததை தந்தையிடம் சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே வந்த போது சேதுராமனும் பார்வதியும் ஹால் சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்கள். சிறு சிரிப்புடன் அவர்கள் அருகே சென்று அமர்ந்தான். அவனைக் கண்டதும் உள்ளே சென்ற தமயந்தி அவனுக்கு பிடித்த வகையில் காபி எடுத்து வந்து கொடுக்க “தேங்க்ஸ் மா”, என்று சொல்லி அதை வாங்கி அருந்தினான்.

“எங்க டா அவ்வளவு அவசரமா போன?”, என்று கேட்டார் சேதுராமன். “ஒரு சின்ன பிரச்சனை தாத்தா”, என்று ஆரம்பித்து அங்கே நடந்ததை தாத்தாவிடம் சொல்லி விட்டு அறைக்குச் சென்றான். அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து கிளம்பி கீழே வந்தவன் காலை உணவை உண்டு விட்டு அலுவலகம் விரைந்து விட்டான். அவன் போவதற்கு முன் அங்கே வேலைகளை ஆரம்பித்திருந்தான் இளஞ்செழியன்.

“அண்ணா, லோட் ஏத்தி அனுப்பியாச்சு. நான் எல்லாம் வெரிபை பண்ணிட்டேன். நான் இப்ப ஸிபின்னிங்க் மில்லுக்கு போறேன்”, என்றான் செழியன்.

“ஓகே டா, சாப்பிட்டியா?”

“இல்லைண்ணா. இனி தான்”

“அப்படின்னா நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு மில்லுக்கு போ”

“சரிண்ணா”, என்று சொல்லி விட்டுச் சென்ற தம்பியைக் கண்டு ஆதியின் புன்னகை விரிந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற சொல் உண்மை தான் போலும் என்று எண்ணிக் கொண்டவன் தன்னுடைய வேலைகளை ஆரம்பித்தான். இவனுக்கு அந்த நாள் அப்படி சென்றது என்றால் அதே ஊரில் மற்றொரு இடத்தில் இருந்த வான்மதியின் நாள் வேறு மாதிரி நகர்ந்தது.

காதல் தொடரும்…..

Advertisement