Advertisement

“என் அப்பா பேச்சுக்கு நான் கட்டுப்படுவேன் தான். ஆனா என் அம்மாவுக்கு என் அப்பா மரியாதை கொடுக்கலைன்னா நான் என் அப்பாவைக் கூட மதிக்க மாட்டேன். ஆனா என் அப்பா அப்படி பண்ண மாட்டாங்க. எங்க அம்மாவை பேசினதுக்கு நானாவது வாய்ட்டு தான் மிரட்டிட்டு இருக்கேன். என் அப்பாவா இருந்தா இந்நேரம் நீங்க வீட்டை விட்டு வெளிய போயிருந்துருப்பீங்க. இனி கவனமா இருங்க. பாட்டி உங்களுக்கும் தான் சொல்றேன். எங்க அம்மா இந்த வீட்டோட மகாராணி. எல்லாரும் அவங்களை அப்படி தான் பாக்கணும்”, என்று சொல்ல அனைவரும் பிரம்மிப்பாக தான் அவனைப் பார்த்தார்கள். அன்று இரவு மகனைப் பற்றி பெருமையாக ராயரிடம் சொன்னாள் தமயந்தி.

“என் மகன் டி”, என்று மீசையை முறுக்கியவர் தாயையும் தங்கையையும் ஒரு வாங்கு வாங்கி விட்டு தான் விட்டார். அப்போதில் இருந்து பார்வதியும் சரி மணிமேகலையும் சரி தமயந்தியை ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள். தந்தைக்கு மட்டும் அல்ல தாய்க்கும் மரியாதையை பெற்றுத் தந்த மகன் அவன். அவனின் அந்த கோபத்தை இன்றளவும் யாரும் மறக்கவே இல்லை.

அவனுக்கு அஞ்சனாவைத் திருமணம் செய்து வைப்பது தான் மணிமேகலை மற்றும் பார்வதியின் ஆசை. ஆனால் பிள்ளைகள் இருவருக்கும் அந்த எண்ணம் துளி கூட இல்லை. ஆதிக்கு எப்போதும் அஞ்சனாவும் நந்தினியும் ஒன்று தான். அவன் இது வரை எந்த பெண்ணைக் கண்டும் சலனம் அடைந்ததில்லை. ஆனால் ஒரே ஒரு முகம் மட்டும் அவ்வ போது அவன் மனதில் வந்து போகும். அந்த அழகு முகமும் அந்த கண்களில் இருந்த கனலும் இப்போதும் அவனுக்கு நினைவில் இருக்கிறது. ஆனால் அந்த முகத்தைக் கண்டு மனதில் எழுந்த ஈர்ப்பு அவனுக்கு அஞ்சனா மீது ஒரு நாளும் ஏற்பட்டதில்லை.

அஞ்சனா கலகலப்பான பெண் தான். ஆனால் அந்த கலகலப்பை ஆதியிடம் எல்லாம் காட்ட மாட்டாள். காலிங்கராயரிடம் கூட மாமா என்று செல்லம் கொஞ்சுபவள் ஆதியிடம் அத்தான் என்ற சொல்லுக்கு மறு சொல் சொல்ல மாட்டாள். அவள் எப்போதும் வம்பிழுப்பது ஒரே ஒருவனிடம் தான்.

சின்னத்தான், செல்லத்தான், மக்கு அத்தான் என்று விதவிதமாக வம்பிழுப்பது இளஞ்செழியனிடம் மட்டுமே. ஆதியிடம் மரியாதை கொடுத்து பேசுபவள் விக்கியுடன் சேர்ந்து கொட்ட மடிப்பாள். இது தான் காலிங்கராயரின் குடும்பம்.

அன்று அதிகாலை ஐந்து மணி. சூரியன் மெதுவாக தன்னுடைய தூக்கத்தை துறந்து மேல் எழும்ப ஆரம்பித்தான். அவனுக்காகவே ஆவலாக காத்திருந்த பூமிப் பெண்ணும், பூக்களும் மெல்ல மெல்ல அவன் வரவால் மலர்ந்தது.

தன்னுடைய போனில் அலாரம் அடித்ததும் எழுந்து அமர்ந்தான் ஆதித்யன். அவன் இருப்பது அவர்களது பரம்பரை வீட்டில் தான். அந்த வீடு நான்கு அடுக்கு கொண்டது. உயரமான காம்பவுண்ட் சுவரும் நடுவே இருந்த வீடும் சுற்றி இருந்த தோட்டமும் அவ்வளவு அழகாக இருந்தது.

தரைத்தளம் மட்டும் அல்ல. மொத்த வீடுமே பிரமாண்டமாக இருந்தது. தரைதளத்தில் பொதுவான வரவேற்பறை நடுவில் இருக்க அதைச் சுற்றி ஏழு அறைகள் உண்டு. அது போக சமையல் அறை, பூஜை அறை, டைனிங் கால் எல்லாமே தரைதளத்தில் இருந்தது.

வரவேற்பு அறையில் தொடங்கும் படிக்கட்டுகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து முதல் தளத்தில் சென்று முடிந்தது. முதல் தளத்தில் இருந்தே இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்துக்கு போவது மாதிரி வடிவமைக்கப் பட்டிருந்தது. வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் மூன்று தளங்களுக்கும் செல்ல ஒரு லிப்ட் வசதியும் ஏற்படுத்தப் பட்டிருந்தது.

கீழே இருந்த அறைகளில் ஒன்று சேதுராமனுடையது. மற்றொரு அறை காலிங்கராயருடையது, மூன்றாவது அறை அலுவல் அறை, இன்னும் சில அறைகள் விருந்தினர் வந்தால் தங்குவதற்கு என்று இருந்தது. வீட்டின் பின் பக்கம் இருந்த அவுட் ஹவுஸ் தான் ராயருடைய அரசியல் பேச்சுகள் நடைபெறும் இடம். அவரைக் காண வரும் மக்களை நேராக அங்கு தான் செக்யூரிட்டி அனுப்புவான். எம். எல். ஏ வைக் காண வரும் யாரையும் ராயர் பார்க்காமல் அனுப்ப மாட்டார். அவர் வீட்டில் இல்லையென்றால் கூட அவர் வந்ததும் பார்த்து விட்டுச் செல்வார்கள். அந்த வீட்டில் வேலை செய்பவர்களே பதினேழு பேர்.

வேலை செய்பவர்களுக்கு என வீடும் பக்கத்து தெருவில் இருந்தது. இங்கே வேலை முடிந்ததும் அங்கே சென்று விடுவார்கள். சமையல் வேலை பெரும்பாலும் தமயந்தி தான் செய்வாள். வீட்டினருக்கு என்று பார்த்து பார்த்து செய்வாள். காய்கறி வெட்டுவது, பாத்திரம் விளக்குவது என வேலை செய்யும் பெண்கள் தமயந்திக்கு உதவுவார்கள். ஆனால் கரண்டி பிடிப்பது அவள் தான். அவள் முடியாது என்று சொன்னால் ராயர் சரி என்றிருப்பாரோ என்னவோ? ஆனால் தமயந்திக்கு தன் கையால் சமைத்து அனைவருக்கும் கொடுக்க பிடிக்கும் என்பதால் யாரும் எதுவும் சொல்ல வில்லை. அவள் செய்தது போல அவளது மருமகள்களும் செய்வார்களா?

  வீட்டின் முதல் தளத்தில் இளஞ்செழியன் தங்கி இருந்தான். அந்த ஃபுளோர் முழுக்க அவனுக்கே அவனுக்கானது. அங்கே ஒரு பெரிய அறையும் இரண்டு சிறிய அறைகளும் உண்டு. அவனுக்கு பெயிண்டிங் பிடிக்கும் என்பதால் அவன் வரைந்த பெயிண்டிங்களை பிரிண்ட் போட்டு ஒரு அறையில் மாட்டி அதை அலுவல் அறையாக வைத்திருப்பவன் மற்றொரு அறையில் பெயிண்டிங் பொருள்களைப் போட்டு குப்பையாக வைத்திருப்பான். அவன் ஓவியத்தை தான் கிண்டல் செய்து வெறுபெற்றுவாள் அஞ்சனா.

வீட்டின் இரண்டாவது தளத்தில் நான்கு அறைகள் உண்டு. நந்தினியின் படுக்கை அறை, விக்கியின் படுக்கை அறை, இருவரும் புத்தகங்களை வைத்திருக்கும் பொது அறை, அது போக இன்னொரு அறை உண்டு. அந்த அறையில் கேரம் போர்ட், செஸ், இன்னும் பல கேம்ஸ் விளையாட பொருள்கள் குவிந்திருக்கும். அந்த அறையில் தான் அஞ்சனா, நந்தினி, விக்கி மூவரும் கொட்டம் அடிப்பார்கள். அவர்கள் மூவரும் சேர்ந்தால் வீடே கலகலப்பாக இருக்கும். ராயர் வீட்டில் இருந்தால் மட்டும் எந்த சத்தமும் கேட்காது.

கலகலப்பு ராயருக்கு பிடிக்காது என்பது தான் பிள்ளைகள் எண்ணம். ஆனால் அவர் சத்தம் வந்தால் கண்டிக்க எல்லாம் மாட்டார். வீட்டின் மூன்றாவது தளம் முழுக்க ஆதித்யனுடையது. அங்கிருக்கும் அனைத்து பொருள்களும் அவனது ரசனைக்குட்பட்டது. ஒவ்வொன்றையும் அவனே பார்த்து பார்த்து வடிவமைத்தான். அந்த தளத்திலே அவனுக்கு என்று மினி நூலகம், ஜிம், ஒரு சின்ன ஸ்விம்மிங் ஃபூல், அவனது அறையில் குட்டி பிரிட்ஜ், ஒரு ஷோபா செட், நான்கு பேர் படுக்க கூடிய பெரிய கட்டில் என அனைத்து வசதிகளும் உண்டு. அந்த தளம் முழுக்க அவனது சாம்ராஜியம் தான்.

அவனது அறையில் இருக்கும் நீச்சல் குளத்தில் சில நேரம் அண்ணன் தம்பி மூன்று பேரும் கொட்டம் அடிப்பார்கள். அப்போது மட்டும் ஆதி தம்பிகளுடன் சரிக்கு சரியாக கதை அடிப்பான். அவ்வளவு சந்தோஷமாக நீச்சல் அடித்து போட்டி போட்டு விளையாடுவார்கள். இது தான் அவர்களுடைய வீடு.

அலாரம் அடித்ததும் எழுந்து அமர்ந்து காலைக் கடன்களை முடித்து விட்டு மொட்டை மாடியில் அந்த ஆதவனுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தான் ஆதித்யன். வெறும் சார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தான். மேல் சட்டையில்லாமல் இருந்ததால் லேசான வெயில் பட்டு அவனது வெற்றுடம்பு பளபளத்தது. பறந்து விரிந்த மார்பும் அதில் இருந்து வழிந்தோடிய வியர்வையும் உருண்டு திரண்டிருந்த புஜங்களின் திண்மையும் அவனைக் கம்பீரமாக காட்டியது.

அகலமான நெற்றி, கூர்மையான கண்கள், கூர் நாசி, அழுத்தமான உதடுகள், அதற்கு மேலே கருத்த கற்றையான மீசை என கம்பீரமாக இருந்தான். சின்ன ஐயனார் போன்ற தோற்றத்தில் இருந்தான் என்று சொல்லலாம். அப்போது அவனது ஐபோன் இசைத்தது. அதை ராயர் தான் அவனது பிறந்தநாளுக்கு என பரிசளித்திருந்தார்.

போனை எடுக்க அவன் திரும்பியதில் நெற்றியில் இருந்து இறங்கிய வியர்வைத் துளி அவன் கண்களுக்குள் செல்லப் போனது. அதை சுண்டி விட்டவாறே போனை எடுத்து “என்ன டா?”, என்று கேட்டான்.

“அண்ணே, ஐயா உங்களை தொழிற்சங்கத்துக்கு வரச் சொன்னாங்க. அங்க பேச்சு சரி இல்லையாம். கிரி கிட்ட இருந்து தகவல் வந்துச்சு”, என்று அவன் சொன்னதும் அவன் முகத்தில் கடுமை ஏறியது.

“வண்டியை செட்டில் இருந்து வெளிய எடுத்து விடு”, என்று கர்ஜனையாக சொல்லி போனை வைத்தவன் உடலில் வழிந்த வியர்வையையும் பொருட்படுத்தாமல் ஒரு சட்டையை மாட்டிக் கொண்டவன் கபோர்டைத் திறந்து ஒரு வெள்ளை வேட்டியை எடுத்து சார்ட்ஸ் மேலேயே கட்டிக் கொண்டு லிப்ட்டுக்குள் நுழைந்தான்.

Advertisement