Advertisement

அது வேறு ஒன்றும் இல்லை. அவளுக்கு நிரஞ்சன் என்றால் உயிர். சிறு வயதில் இருந்தே அவன் மீது ஒரு ஈர்ப்பு. அவ்வப்போது பார்வதி பாட்டியும் மணிமேகலை அத்தையும் நிரஞ்சன் தான் உன்னை திருமணம் செய்வான் என்று சொல்வதால் வந்த ஆசை. அது அவள் மனதில் வேரூன்றி இருந்தது. அது காதலா என்று தெரியாது. அதை அவள் வெளியே எல்லாம் சொல்ல மாட்டாள். அவளுக்கு அப்பா என்றால் உயிர். ராயர் என்ன சொன்னாலும் கேட்பாள். நீ நிரஞ்சனை திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் உடனே சந்தோஷமாக சரி என்பாள். அதே போல அவளுக்கு அவர் வேறு மாப்பிள்ளை பார்த்தால் அதற்கும் இயல்பாக சரி என்று தான் சொல்லுவாள்.

அவள் ஆசை அப்படி இருந்தாலும் நிரஞ்சன் அவளை அப்படி எல்லாம் நினைத்ததில்லை. அதே போல அவன் அதிகம் அவளிடம் பேச மாட்டான். அவளிடம் மட்டும் அல்ல. வேறு யாரிடமும் கூட அதிகம் பேச மாட்டான். இவர்களை அந்த கடவுள்… இல்லை இல்லை ராயர் இணைப்பாரா?

நந்தினிக்கு நேர் மூத்தவன் இளஞ்செழியன். ராயரின் இரண்டாவது மகன். வயது இருபத்தி ஐந்து. அவனும் நிரஞ்சன் போலவே பி. பி. ஏ மற்றும் எம். பி. ஏ முடித்து விட்டு அவர்களது குடும்ப தொழிலான டெக்ஸ்டைல் பிஸ்னசைப் பார்த்துக் கொள்கிறான். சின்ன அளவிலான முறுக்கு மீசையும், கோதுமை நிறமும், கூர்மையான கண்களும் கொண்ட ஆண் மகன். அவனும் நிரஞ்சன் போல அமைதியானவன் தான். ஆனால் அவனை எப்போதும் அஞ்சனா வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். அவனும் அவளை முறைத்துக் கொண்டே தான் திரிவான். இளஞ்செழியனுக்கும் தந்தை மீது அதிக அன்பு இருந்தாலும் அவனது ரோல் மாடல் அவனது அண்ணன் ஆதி தான்.

காலிங்கராயனின் மூத்த மகன் தான். ஆதி என்ற ஆதித்யன். அவனது முழுப்பெயர் ஆதித்ய கரிகாலன். அந்த கரிகால சோழனின் கம்பீரம் மகனிடமும் எப்போதும் இருக்க வேண்டும் என்று எண்ணி அவனுக்கு பெயர் வைத்திருந்தார் காலிங்கராயர். ஆனால் அவன் அந்த கரிகாலனையே மிஞ்சியவன் என்று அவன் வளர வளர புரிந்து கொண்டார்.

காலிங்கராயருக்கு பிள்ளைகள் என்றால் தனிப் பிரியம் என்றாலும் மூத்த மகன் மீது தீராக் காதல் தான். அவரை ஆண் என்று உணர வைத்தான் என்பதாலோ சிறு வயதில் இருந்து அவனுடன் அப்படி ஒரு ஒட்டுதல் அவருக்கு. ராயரின் அடுத்த வாரிசு அவன் தான் என்று கோவையில் பல இடங்களில் அவனுக்கும் பேனர் உண்டு. சேது குருப் ஆப் கம்பெனிசின் அடுத்த சேர்மன் அவன் தான் என்றும் பேச்சு அடி படுகிறது. அவரது அடையாளமே அவன் தான் என்று ராயரே சொல்லிக் கொள்வார். எந்த பொறுப்பையும் ஆதியை நம்பிக் கொடுக்கலாம் என்று நம்புபவர்.

அவனும் அப்படியே. தந்தைக்கு என்றால் உயிரையே கொடுப்பான். அதே நேரம் அவருக்கு ஒன்று என்றால் உயிரையும் எடுப்பான். அச்சம் என்பதே அவன் வாழ்க்கையில் கிடையாது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பு லண்டனில் இன்ஜினியரிங் முடித்து அங்கேயே எம். பி. ஏ முடித்தவன். படித்து முடித்து அவன் வீட்டுக்கு வந்ததும் மகனிடம் குடும்ப தொழில்களை ஒப்படைத்தவர் அரசியலில் முழு மூச்சாக இறங்கி விட்டார்.

அதில் இருந்து ஆதித்யா தான் அவர்கள் தொழிலைப் பார்க்க ஆரம்பித்தான். பார்க்கிறான் என்று கூட இல்லை. அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றே விட்டான். அவனின் வளர்ச்சி ராயரையும் சேதுராமனையும் பிரமிக்க வைத்தது என்பது தான் உண்மை. ஆனால் அவனிடம் அந்த கர்வமும் திமிரும் ஒரு சதவீதம் கூட இருக்காது. ஆனால் கம்பீரமும் நிமிர்வும் இருக்கும். அலுவலகம் செல்லும் போது ஃபுல் ஹேன்ட் ஷர்ட்டை டக்கின் செய்து பிஸ்னஸ்மேன் லுக்கில் இருப்பவன் தந்தையுடன் போகும் போது வெள்ளைச் சட்டை கருப்பு பேண்ட் அணிந்து அடியாள் போன்று இருப்பான்.

பார்க்க முரடன் போன்று இல்லாவிட்டாலும் ஆதியிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அடாவடியான ஆள். முதலில் அனைத்து தொழில்களையும் ஆதி தான் பார்த்தான். தம்பி இளஞ்செழியன் படித்து முடித்து வந்ததும் அவனிடம் பாதிப் பொறுப்பை ஒப்படைத்தான். ராயருக்கு எப்படி ஆதியோ அதே போல ஆதிக்கு பக்கபலமாக இருப்பது இளஞ்செழியன். செழியன் அமைதியாக இருந்தாலும் அண்ணன் என்ன சொன்னாலும் கேப்பான். அது சரியா தவறா என்று கூட கேட்க மாட்டான். செழியனைப் பொருத்தவரைக்கும் அண்ணன் என்பவன் அவனுக்கு இன்னொரு அப்பா போல தான். அவனுக்கு ராயரும் ஆதியும் ஒன்று தான்.

ஆதி இருபத்தி ஏழு வயதான கட்டிளங்காளை. கோவை மாநகரில் மட்டும் அல்ல. தமிழ்நாட்டிலே ஆதித்யாவுக்கு பெண் கொடுக்க நீ நான் என்று போட்டி போடுகிறார்கள் தான். ஆனால் அவன் தான் கொஞ்ச நாள் போகட்டும் என்று தட்டிக் கழித்து வருகிறான். குடும்பத்து மேல அதிக அன்பு உண்டு. தன்னுடைய குடும்பம் அத்தையின் குடும்பம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க மாட்டான். அஞ்சனாவும் நிரஞ்சனாவும் அவனைப் பொறுத்த வரை தம்பி தங்கை தான்.

ஒரே ஒரு முறை தவிர வீட்டில் உள்ளவர்களிடம் அவன் கோபப் பட்டதே இல்லை. ஆனால் வெளியே யோசிக்காமல் கை வைத்து விடுவான். அந்த ஒரு முறை அவன் பட்ட கோபத்தை யாருமே இன்றளவும் மறக்க வில்லை.

ஒரு நாள் மணிமேகலை தமயந்தியை மரியாதை இல்லாமல் பேசி விட பார்வதியும் மகளுக்கு பரிந்து மருமகளை பேசி விட்டார். அப்போது ஆதி பன்னிரெண்டாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் பேசுவதையும் அதற்கு தமயந்தி கண் கலங்கியதையும் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். காலிங்கராயர் அங்கே இல்லை. அவர் இல்லாததால் தான் அவர்கள் பேச்சு அப்படி இருந்தது. ஆனால் இதைக் கவனித்த ஆதி “அத்தை”, என்று அழைத்தான்.

“என்ன ஆதி கண்ணா?”

“இந்த கொஞ்சல் எல்லாம் இங்க வேண்டாம். நீங்களும் பாட்டியும் பேசுறதை கேட்டுட்டு தான் இருந்தேன். எங்க வந்து யாரைப் பேசுறீங்க? அவங்க கோவையையே ஆட்டிப் படைக்கும் காலிங்கராயரோட மனைவி. ராயரோட சம்ஸாரம்னு அவங்களை ஊரே வணங்குது. அதையும் விட அவங்க எங்க அம்மா. இந்த வீட்டோட மகாராணி. அவங்களை நீங்க அதிகாரம் பண்ணுவீங்களா? வந்தோமா சாப்பிட்டோமோ சொந்தம் கொண்டாடினோமா போனோமான்னு இருக்கணும். உங்களுக்கு சேவகம் பண்ண ஒண்ணும் எங்க அம்மா இங்க இல்லை. அவங்களுக்கு அண்ணின்னு நீங்க மரியாதை கொடுத்து தான் ஆகணும். அப்படி இல்லைன்னா இந்த வீட்ல இனி உங்க காலடி பட முடியாது”, என்று மிரட்ட அந்த சின்ன வயதிலே அவனிடம் இருந்த கம்பீரத்திலும் அவன் பேச்சில் இருந்த ஆதிக்கத்திலும் திகைத்து நின்றார்கள் அனைவரும். தமயந்தி கண்கள் ஒளிர்ந்தது.

இதற்கு மேல் ஒரு அன்னைக்கு என்ன வேண்டுமாம்? தமயந்தி புன்னகைக்க மணிமேகலை முகம் இறுகியது. ஒரு சிறுவன் தன்னை மிரட்டுவதா என்று எண்ணி சுதாரித்த மணிமேகலை “என்ன டா ஆதி, என்னை இங்க வரவே கூடாதுன்னு சொல்ற? இது என் அம்மா அப்பா வீடு. அது தெரியும்ல?”, என்று கேட்டாள்.

“எங்க அப்பாவுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி தான் இது உங்க அம்மா அப்பா வீடு. இப்ப இது உங்க அண்ணன் வீடு மட்டும் தான். அப்படின்னா இது எங்க அம்மா வீடு தான். இதை எங்க பாட்டி தாத்தாவே இல்லைன்னு மறுக்க முடியாது. இல்லை இது எங்க வீடு எங்க பொண்ணுக்கு தான் பாட்டி தாத்தா சொன்னா அடுத்த நிமிசமே எங்க அப்பா எங்களை எல்லாம் கூட்டிட்டு இந்த வீட்டை விட்டு போயிருவார்”, என்று சொல்ல பார்வதியோ “இந்த ராயர் கண்டிப்பா செய்வான்”, என்று எண்ணிக் கொண்டாள்.

“இங்க வந்தோமா, அம்மா அப்பா கிட்ட செல்லம் கொஞ்சினோமா. அவங்க ஏதாவது அன்பா கொடுத்தா வாங்கினோமான்னு போயிறனும். அதை விட்டுட்டு இங்க வந்து பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்க கூடாது. இனி ஒழுங்கா இல்லைன்னா நானே உங்களை இங்க இருந்து விரட்டுவேன். ஞாபகம் வச்சிக்கோங்க”, என்றான் ஆதி.

“என்னையே விரட்டுவியா டா நீ? இரு இரு என் அண்ணன் வரட்டும். அப்புறம் உனக்கு இருக்கு. அவன் கொடுக்குற செல்லம் தான் நீ இப்படி எல்லாம் பேசுற?”, என்று கோபமாக கேட்டாள் மணிமேகலை.

Advertisement