Advertisement

அத்தியாயம் 1

கர்வமும் சரிந்து தான் போகும்

காதலின் முன்னே நிற்கையில்!!!

நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கோவை மாவட்டம் தான் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் ஆகும். கோவன் என்ற தனி மனிதன் உருவாக்கிய ஊரே கோயம்பத்தூர் என்று வரலாறு சொல்கிறது. இது தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம், தென்னிந்தியாவின் ஜவுளி உற்பத்தியின் தலைநகரம், கொங்கு நாடு என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.

இதனை சோழர்கள், ராஷ்டிரக்கூடர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசுகள் என பல மன்னர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர். பாலக்காட்டுக் கணவாய்க்கும் சகல்கட்டி கணவாய்க்கும் இடையே இந்த ஊர் அமைந்திருப்பதால் இது சரித்திர முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது.

இங்கே ஆழியார் அணை, மருதமலை கோவில், வைதேகி அருவிகள், கோவை குற்றாலம், வால்பாறை, உக்கடம் குளம் போன்ற சுற்றுலாத் தலங்கள் காணப் படுகின்றன.

முதலில் பெரிய பெரிய பேரரசர்கள் ஆண்டு அதற்கு பின் குறுநில மன்னர்கள் ஆண்டு என்று பல தலைமுறைகளை பார்த்த ஊரில் பல ராஜாக்களின் அடையாளம் உண்டு. அந்த அடையாளம் வெறும் அவர்கள் ராஜாக்கள் என்பதால் மட்டும் வந்தது அல்ல. அவர்களின் ஆட்சிமுறை, மக்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு, அவர்களின் கொடை குணம் என்று பல காரணங்களால் அவர்கள் புகழ்பெற்றனர்.

அப்படி மக்களுக்கு நல்லது செய்து புகழ்பெற்று விளங்கும் குடும்பம் தான் சின்னஜமீன் சேதுராமனுடையது. இவர்களின் முன்னோர்களும் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் தான். கோவையில் இப்போதும் இவர்கள் குடும்பம் புகழ் பெற்று விளங்குகிறது. சேது குருப் ஆப் கம்பெனிசில் பல கம்பெனிகள் அடங்கி இருக்கிறது. அதில் முக்கியமானது ஆயத்த ஆடைகள் தயாரிப்பது. அது போக சூப்பர் மார்க்கெட், பல பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் இம்போர்ட் எக்ஸ்போர்ட் தொழிலையும் செய்கிறார்கள்.

இந்த குடும்பத்தின் மூத்தவர் தான் சேதுராமன். வயது எழுபது. அவரது மனைவி பார்வதி தேவி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். காலிங்கராயன் மற்றும் மணிமேகலை. மணிமேகலையை அதே கோவையைச் சேர்ந்த மற்றொரு பெரிய குடும்பத்தில் தான் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தார்கள். மணிமேகலையின் கணவன் சுந்தரேஸ்வரரும் ஒரு தொழில் அதிபர். காலிங்கராயருடன் அவருக்கு சில தொழில்களில் பார்ட்னர்ஷிப்பும் இருக்கிறது. மச்சான் மாப்பிள்ளை என்ற உறவைத் தாண்டி இருவருக்கும் இடையில் இறுகிய பிணைப்பும் மிகுந்த மரியாதையும் உண்டு.

சுந்தரேஸ்வரருக்கு வேறு ஒரு இடத்தில் பெரிய பங்களா இருந்தாலும் அவர்கள் குடும்பம் அடிக்கடி இருப்பது மணிமேகலையின் பிறந்த வீட்டில் தான். மணிமேகலை சுந்தரேஸ்வர் தம்பதிக்கு நிரஞ்சன் அஞ்சனா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். நிரஞ்சன் பாரினில் எம்.பி. ஏ முடித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்கிறான். நடிகர் ஸ்ரீகாந்த் போன்ற தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் அமைதியானவன்.

அன்பையும் கண்டிப்பையும் அமைதியாவே வெளிபடுத்தும் ரகம். அவனுக்கு அப்படியே எதிர்பதம் அஞ்சனா. கலகலப்பாக இருப்பவள். ஆனால் நல்லவள். நிரஞ்சன் அஞ்சனா மேல் மிகவும் அன்பாக இருப்பான். சுந்தரேஸ்வரர் பிள்ளைகளை நல்ல முறையாக வளர்த்திருந்தார். மணிமேகலையும் நல்லவள் தான். ஆனால் அவளுக்கு தங்களின் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடைய அண்ணன் காலிங்கராயனின் பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்பது தான் கனவு. சுந்தரேஸ்வர் அதெல்லாம் கண்டு கொள்ள மாட்டார். பிள்ளைகள் விருப்பம் என்று  சொல்லி விடுவார். அதனால் பிள்ளைகளுக்கு தாயை விட தந்தை மேல அலாதி பிரியம்.

மணிமேகலை மட்டும் அப்படி ஆசைப் பட வில்லை. அந்த குடும்பத்தின் மூத்த பெண்ணான பார்வதிக்கும் தன்னுடைய மகளின் பிள்ளைகளை மகனின் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசை. ஆசை என்பதை விட வெறி என்று கூட சொல்லலாம். அம்மாவுக்கும் மகளுக்கும் இருக்கும் ஆசை வேறு யாருக்கும் தெரியாது. இது தான் மணிமேகலையின் குடும்பம்.

இப்போது காலிங்கராயரின் குடும்பத்தைப் பற்றிப் பாப்போம். இப்போது காலிங்கராயர் பிரபல கட்சியில் எம். எல். ஏ வாக இருக்கிறார். எப்போதும் நேர்மையை எதிர் பார்த்தாலும் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவ்வப்போது அதர்மத்தையும் கையில் எடுக்கும் சாதாரண அரசியல்வாதி. அரசியலைத் தவிர்த்து கோவையிலே பிரபலமான சேது குருப் ஆப் கம்பெனிசின் இப்போதைய சேர்மன் அவர் தான். தன்னுடைய பிஸ்னசை மகன்களிடம் ஒப்படைத்து விட்டு முழு நேர அரசியல்வாதியாகவும் சில நேரம் கட்டப்பஞ்சாயத்து செய்யும் தாதாவாகவும் இருக்கும் இயல்பான கரைவேட்டி மனிதர்.

காலிங்கராயரின் மனைவி தமயந்தி. பெயருக்கு ஏற்றார் போல அன்பும் கருணையும் கொண்ட இல்லத்தரசி. கணவன் மேல் அதிகமான அன்பு, திகட்டாத காதல் மட்டும் இல்லை, தீவிரமான பக்தியும் கொண்ட பெண். கணவன் என்ன தான் செய்தாலும் என் புருஷன்….. இல்லை இல்லை…. என் புருசர் நல்லவர் என்று சொல்லும் அப்பாவி பெண். வந்தவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளல் குணம் கொண்டவள் என்பதால் தமயந்தி மீது காலிங்கராயருக்கும் அதிக அளவில் அன்பு உண்டு.

காலிங்கராயர் மற்றும் தமயந்தி தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். பிள்ளைகள் என்றால் பெற்றவர்களுக்கு உயிர் தானே? இங்கேயும் அப்படி தான். பிள்ளைகளும் பெற்றோரை மதிக்கும் ஒழுக்கமான பிள்ளைகள். அதுவும் காலிங்கராயரின் மேல் பிள்ளைகள் நால்வரும் பயம் கலந்த மரியாதையும் அப்பா எது செய்தாலும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையும் கொண்டவர்கள்.

காலிங்கராயரின் இந்த அழகான குடும்பத்தில் பார்வதி மற்றும் மணிமேகலையைத் தவிர மற்ற அனைவரும் மிக மிக நல்லவர்கள் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் கூட மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் கொடை வள்ளல் தான். ஆனால் இரண்டு வீட்டுப் பிள்ளைகளையும் திருமணத்தில் இணைத்து சொத்து வெளியே போகக் கூடாது என்று நினைக்கும் பெண்கள்.

நிறைய ஊர்களில் குடும்பத்தில் வாரிசு என்றால் ஆண்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் பெண்ணுக்கு சொத்தை எல்லாம் கொடுக்க சொல்லி மகன்களிடம் நச்சரிக்கும் பெற்றோர்களும் உண்டு. அப்படிப் பட்டவள் தான் பார்வதி தேவி. எப்போதும் மணிமேகலைக்குச் செய்ய வேண்டும் என்று காலிங்கராயரிடம் சொல்லிக் கொண்டே இருப்பாள்.

அன்னை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காலிங்கராயர் தங்கைக்கு தேவைக்கு அதிகமாகவே சீர் செய்தார். இன்னும் செய்வார். ஆனால் அவரிடம் சொத்தை எதிர் பார்க்காமல் சொந்தத்தை எதிர் பார்க்கிறார்கள் அன்னையும் மகளும். காலிங்கராயரின் பிள்ளைகள் விஷயத்தில் இது நடக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பெற்ற அன்னையே ஆனாலும் உடன் பிறந்த தங்கையே ஆனாலும் அவர்களின் பேச்சை விட பிள்ளைகள் விருப்பத்துக்கு தான் காலிங்கராயர் முதலிடம் கொடுப்பார் என்று அவர்களுக்கு யார் சொல்வது. காலிங்கராயர் நிச்சயம் தான் சொல்வதை தான் கேட்பார் என்று பார்வதி நம்பிக் கொண்டிருப்பது மட்டும் அல்லாமல் மணிமேகலையையும் அதற்கேற்ப மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்.

கோவையே `ராயர் அண்ணாச்சி` என்று சொல்லும் பேர் பெற்றவர் அன்னை மற்றும் தங்கையின் ஆசையை நிறைவேற்றுவாரா? அப்படி அவர் செய்ய வில்லை என்றால் வீட்டில் என்ன என்ன பிரளையம் வெடிக்கும் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். இப்போது காலிங்கராயரின் பிள்ளைகளைப் பற்றி பார்ப்போம்.

ராயருக்கு கடைசியில் பிறந்தவன் விக்கி என்ற விக்னேஷ். எப்போதும் அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. பேசாத பெண்களையும் பேச வைத்து கடலை போடும் ரகம். அதற்காக கெட்டவன் கிடையாது. ஜாலியானவன் என்று சொல்லலாம். கோவையில் இருந்த பிரபல பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்டைல் இஞ்சினியரிங்க் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வீட்டின் கடைக்குட்டி என்பதால் அந்த வீட்டில் அனைவருக்கும் செல்லம் அவன் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பவன். ஆனால் தந்தையிடம் எப்போதும் அவனுக்கு பயம் உண்டு. அரும்பு மீசையும், உதட்டில் நிறைந்திருக்கும் புன்னகையும் கொண்ட இயல்பான கல்லூரிப் பையன்.

விக்கிக்கு முன்னால் பிறந்தது நந்தினி தேவி. இப்போது மருத்துவம் நான்காம் ஆண்டு படிக்கிறாள்.  அன்னையை போன்று அமைதியானவள். வீட்டில் அனைவருக்கும் செல்வ சீமாட்டி. ராயரின் ஒரே பெண் என்பதால் அனைவரும் அவள் மீது உயிரையே வைத்திருந்தனர். தந்தை, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி என அவளை அனைவரும் கைக்குள் வைத்து தாங்கத் தான் செய்தனர். மணிமேகலையின் மகள் அஞ்சனா தான் நந்தினியின் நெருங்கிய தோழி.

இருவரும் குண்டூசி முதல் ஏரோபிளேன் வரை அலசி ஆராயுவார்கள். சைட் அடிப்பது பற்றி கூட பேசுவார்கள். பேசிக் கொண்டே இருக்கும் அஞ்சனாவுக்கும் அதிகம் பேசாத நந்தினிக்கும் எப்போதுமே ஒத்துப் போய்விடும். அவர்கள் நட்பு அனைவரின் கண்களையுமே குளிர வைக்கும். அவ்வளவு அமைதியான நந்தினி மனதிலும் ஒரு சின்ன ஆசை உண்டு. அந்த விருப்பத்தை வெளியே சொன்னால் நிச்சயம் அது நிறைவேறும் தான். ஆனால் சொல்லும் அளவுக்கு தைரியம் எல்லாம் அவளுக்கு கிடையாது.

Advertisement