Advertisement

அத்தியாயம் – 9
வீடு வந்து சேர்ந்த வித்யாவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
வருணை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது எந்நாளையும் விட சற்று அதிகத் தாமதமாகிவிடவே பெரியம்மாவிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று பயந்து கொண்டேதான் வந்தாள்.
ஆனால்…. அன்றைக்கு அவளுக்கு பெரியம்மாவிடமிருந்து பேச்சு கிடைக்கவில்லை. பதிலாக ஒரு அதிர்ச்சி செய்திதான் கிடைத்தது.
வீட்டு வாசலையடைந்ததுமே அவளருகில் வந்த பெரியம்மா “ஏன் இவ்வளவு நேரம்?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார்.
அறையில் புதிதாக அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துவிட்டு அவளும் தாழ்ந்த குரலிலே “மழை பெய்ததால டிரைவருக்கு சரியா வெளிச்சம் தெரியலை பெரியம்மா… அதனால ஒரு இடத்துல நின்னுட்டு மழைவிட்டதும் வந்தோம்” என்று சூழ்நிலைக்குத் தக்க ஒரு பதிலைக் கூறி தப்பிவிட்டாள்.
மீண்டும் ஒருமுறை விருந்தாளிகளைப் பார்த்தவள் “என்ன பெரியம்மா? பலகாரம் எதாவது செய்யணுமா?” என்று கேட்டாள். ஒருவேளை இவர்களுக்கு பலகாரம் செய்து கொடுக்க தான் இல்லையென்ற காரணத்தால் திட்டுவார்களோ என்ற எண்ணம் அவளுக்கு.
“நீ ஒன்னும் செய்ய வேண்டாம்¸ பேசாமல் வா…” என்று அவளை புதியவர்களான அந்த மூவரின் முன் அழைத்துச் சென்றார்.
“இதுதான் பொண்ணு… பேரு வித்யா லெட்சுமி. நாங்க வித்யான்னு கூப்பிடுவோம்” என்று அவளை அறிமுகப்படுத்தியவர் “பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லு” என்று அவளைப் பணிக்க¸ அவ்வாறே செய்தாள் வித்யா.
பெரியம்மா தனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார் என்று அறிந்ததும் மனம் மகிழத்தான் செய்தது. இந்த வீட்டிலிருந்தும் பெரியம்மாவின் வாய்ப்பேச்சிலிருந்தும் விடுதலை கிடைக்குமே என்ற நினைப்பு அவளை அவ்வாறு எண்ணத் தூண்டியது.
திருமணம் என்றதும் மகிழ்ந்த மனதில் ஒருநொடி இன்று… சற்று முன்னர் சந்தித்த அவன் நினைவிற்கு வரவும்… ‘சேச்சே..! ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தைக்குத் தகப்பனையா நினைக்கிறாய்… அது தப்பும்மா!’ என்று தன்னைத்தானே திருத்திக் கொண்டாள்.
தன் சிந்தனையிலிருந்தவளை “எங்க பையனை நிமிர்ந்து பாரும்மா வித்யா…” என்ற குரலும்¸ பெரியம்மாவின் கையழுத்தமும் கலைத்தன.
‘என்ன?’ என்பது போல பேசியவரைப் பார்க்க¸ அவர் மீண்டும் “மாப்பிள்ளையை நிமிர்ந்து பாரும்மா…” என்றார் மாப்பிள்ளையின் தாயார் சரஸ்வதி அமைதியாக.
சற்று தலைகுனிந்தவாறு நின்றிருந்தவள்¸ நிமிர்ந்து அவருக்கருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள்.
“பிரபாகரனை… அதுதான் மாப்பிள்ளையின் பெயர்¸ உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டார் சரஸ்வதி புன்னகையுடனே.
ஒரு ஜவுளிக்கடையில் வைத்து வித்யாவைப் பார்த்தவனுக்கு பிடித்துவிட்டதாம். உடனே பெண் யார்¸ எங்கே இருக்கிறாள் என்ற விபரம் அறிந்து பெண்கேட்டு வந்துவிட்டார்கள்.
அவனைப் பார்த்தாள் வித்யா.
ஃபாரின் ரிட்டர்னாம்¸ அதற்கேற்றவாறுதான் இருந்தான். லண்டன்வாசிகள் போலவே கோட் அணிந்திருந்தான். இன்னமும் நம்மூர் பழக்கத்திற்கு மாறவில்லை அல்லது மாறும் எண்ணமில்லை போலும் என்றெண்ணிக் கொண்டாள்.  சிவப்பாய்… அமுல்பேபி போல சராசரி உயரத்துடன் இருந்தவனது இளந்தொப்பையைக் கண்டதும் நிவேதாவின் தகப்பன் நியாபகத்திற்கு வந்துவிட்டான்.
அவனை ஒரு குழந்தையின் அப்பா என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்… ஆனால் இவன் தன் சற்று பெரிய தொப்பையை மறைக்க முயன்றவாறே அமர்ந்திருந்தான். தன்னை பெண்ப் பார்க்க வந்திருப்பவனை அந்த யாரோ ஒரு நபரோடு ஒப்பிட்டுப் பார்த்த தன் புத்தியை கடிந்து கொண்டாள்.
காஞ்சனாவிற்கு முதலில் விருப்பமில்லைதான்.
அவர்களாகவே விரும்பிக் கேட்டு வந்திருக்கிறார்கள் என்றதும் ‘காதலா?’ என்றுதான் கேட்டார்.
ஆனால் மாப்பிள்ளையின் அப்பா குணசீலன் “இல்லைம்மா¸ என் பையன் உங்க பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறான். பார்த்ததும் அவனுக்குப் பிடித்துவிடவே விலாசமறிந்து வந்து எங்களிடம் சொன்னான். நாங்களும் பெண்கேட்டு வந்துவிட்டோம்… அதனால் இது நீங்க நினைப்பதுபோல காதல் இல்லை…” என்று விளக்கிச் சொன்னவர்¸ “நீங்க வித்யாவுக்கு எதுவுமே செய்ய வேண்டாம்மா… நாங்களே அவளுக்கு எல்லாம் செய்வோம். கல்யாணச் செலவைக்கூட நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அவளை எங்கள் மருமகளாக அனுப்பினாலே போதும்” என்று ஒப்புக்கொள்ளும்படியாகப் பேசினார்.
எங்கே இவளுக்கு கல்யாண செலவை நாம்தான்  செய்ய வேண்டும் என்று தன் மகன் சொல்லிவிடுவானோ என்று ஏற்கனவே பயந்திருந்தவர்¸ தாங்கள் அவளுக்கு எதுவும் செய்ய வேண்டியதிருக்காது என்றானதும் “சரி… இன்றைக்கு பொண்ணை பார்த்துட்டுப் போங்க… மாசக்கடைசியில் நிச்சயம் வைத்துவிடுவோம். அடுத்த மாசம் வர்ற முதல் நல்ல நாளில் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று சம்மதம் தெரிவித்திருந்தார்.
‘மருமகளாக வரப் போகிறவள் மகனைப் பிடித்திருக்கிறதா?’ என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருக்கவும்¸ வெட்கப்படுவதாக எண்ணிக் கொண்ட சரஸ்வதி வித்யாவின் அருகில் சென்று “அவ்வளவு வெட்கமா?” என்று கிண்டலடித்துப் போனார்.
திருமணம் என்பது இந்த வீட்டிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்றெண்ணியவளுக்கு… அடுத்ததாக நிச்சயம்¸ முகூர்த்தம் என எல்லாம் சீக்கிரமே நடக்கப் போவதாகக் கூறியதைக் கேட்டதும் ‘தனக்கு இவ்வளவு சீக்கிரமே திருமணமா?’ என்றிருந்தது.
தனக்கு ஏன் இப்படி மாற்றி மாற்றி எண்ணத் தோன்றுகிறது என்றும் புரியவில்லை. முதலில் திருமணம் என்றதும் நிம்மதியாக உணர்ந்தவளுக்கு¸ ‘இப்போது இந்த பிரபாகரனைப் பிடிக்கவில்லையா..? இல்லை இப்போதைக்கு கல்யாணம் என்பதே பிடிக்கவில்லையா..?’ அவளால் தன் மனதின் ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை.
மொத்தத்தில் கடைசியாக அவள் உணர்ந்ததெல்லாம் அந்த பிரபாகரன் மீதான எரிச்சல் மட்டுந்தான். ‘இவனை யார் என்னை பெண் கேட்டு வரச் சொன்னது?’ என்ற கேள்விதான் மிஞ்சி நின்றது.
அவர்களை அனுப்பிவிட்டு திரும்பி வந்த காஞ்சனா “என்ன… கல்யாணம்ன்னதும் அப்படியே கனவு கண்டுகிட்டு நின்னுட வேண்டியதுதானா? போ… போய் வேலைகளைக் கவனி” என்று உள்ளே அனுப்பினார்.
வித்யாவைப் பெண் கேட்டு பெரிய இடத்திலிருந்து வந்திருக்கிறார்களே! என்று பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்த கௌரி¸  தாயார் திரும்பி வந்ததும் “என்னம்மா… இவளை இவ்வளவு பெரிய இடத்தில் கட்டிக் கொடுக்கணுமா?” என்று கேட்டுவிட்டாள்.
மகளின் எண்ணத்தைப் புரிந்துகொண்டவர் தானும் மகளுக்கேற்ற தாய்தான் என்பதைக் காட்டுவதாகவே பதிலளித்தார்.
“என்ன கௌரி பெரிய இடம்? நாம நகை¸ சீர்¸ பணம் என்று எதுவுமே கொடுக்க வேண்டாம். மற்றபடி அவர்கள் என்ன வசதியுடனிருந்தால் நமக்கென்ன? உனக்கு இதைவிடப் பெரிய இடமாகப் பார்த்து சீர் செனத்தியோடுதான் திருமணம் செய்து கொடுப்போம். நீ இவளைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்காதே…”
நேரடியாக பொறாமைப்படாதே என்று சொல்லாமல்¸ கண்டுகொள்ளாதே என்னுமாறு கூறினார். “என்னவோ… போங்க…” என்று சலித்துக் கொண்டு போனாள்.
நாட்கள் சென்றது. வித்யாவைக் கண்ட நாளிலிருந்து தினமும் மகளை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வந்தான் கோகுல். வருணின் வற்புறுத்தலால் அவளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் நாட்கள் எப்போதும்போல கோகுலுக்கு மகிழ்வுடன் சென்றது.
வித்யாவைக் காணும் ஆவலில் சில நாட்கள் வெகு சீக்கிரமாகவே வந்து காத்திருக்கத் தொடங்கினான்.
நிவேதாவைக் காண்பதை¸ அவளுடன் பழகுவதை விரும்பிய வித்யா… அவளது தந்தை தன் தீவிரமான பார்வையால் வைத்த கண் வாங்காமல் தன்னைப் பார்ப்பதை விரும்பவில்லை.
விரும்பவில்லை என்று சொல்வதைவிட அவனது பார்வையின் தீவிரம் அவளுள் ஒரு பயத்தைத் தோற்றுவித்தது. என்றாவது ஒருநாள் அவனது கண்களை நேருக்குநேர் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துவிட்டால் அவ்வளவுதான்… அவளது நெஞ்சு சில்லிட்டுப்போகும். தனக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தை சொல்லி சில நாட்கள் வருணை அழைக்கச் செல்வதை தவிர்த்தாள்.
வித்யாவின் இந்த சிலநாள் மறைவால் நிவேதா வெளிப்படையாகவும் கோகுல் மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.  ‘அம்மா வரவில்லையே!’ என்று மகளும் ‘அவள் ஏன் வரவில்லை?’ என்று கோகுலும் ஒவ்வொரு விதமாக வருந்தினர்.
நிவேதாவேறு அவனது வருத்தத்தை அதிகப்படுத்துமாறு “அம்மா மறுபடியும் நம்மளை விட்டுப் போயிடுவாங்களாப்பா?” என்று கேட்டுவைத்தாள்.
தொலைவிலிருந்து அவளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தவன் அந்த சந்தோஷமும் தடைபட¸ தொடர்ந்து மூன்று நாட்களாக அவள் வரவில்லை என்றதும் தகப்பனும் மகளுமாக வருணைப் பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இருவருமே யு.கே.ஜி.யில் படித்தாலும் வேறு பிரிவு என்பதால் நிவேதாவால் வருணைப் பார்க்க இயலவில்லை என்றானதும்¸ வேன் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தவனை நிறுத்திக் கேட்டபோது “அத்தைக்கு உடம்பு சரியில்லை” என்றான்.
“சரி நீ போ..” என்று அவனை அனுப்பியதும் தகப்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அம்மாக்கு காய்ச்சலாம்ப்பா.. அதனாலதான் வரலையாம்…” என்று தகப்பனும் அருகில்தான் நின்றிருந்தான் என்பதை அறியாமல் சொன்னவள்¸ “நான் அம்மாவுக்கு சீக்கிரமே சரியாக கடவுளை வேண்டிக்கிறேன்ப்பா…” என்றாள். மகளைப் போல அவனுமே கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
இதனிடையில் நேர்ந்த காஞ்சனா¸ சரஸ்வதியின் சந்திப்பின் பலனாக நிச்சயத்தை ஊரைக் கூட்டி நடத்தாமல் இருவீட்டாருக்குள்ளேயே முடித்துவிடுவது என்று முடிவாகி… ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மோதிரம் மாற்றும் சம்பிரதாயம் எளிமையாக நடத்தப்பட்டது.
ஒரு வாரத்திற்கும் மேலாக வருணின் பள்ளிக்குச் செல்லாதிருந்தவள் அன்று சென்றாள். எப்போதும் அவள் வந்த பின்னரே வரும் நிவேதாவின் தகப்பன் அவளுக்கும் முன்பாக வந்திருப்பதைக் கண்டதும் ஆச்சர்யமாக இருந்தது.
ஆம்… வித்யாவைக் காணும் ஆவலில் நேரமாகவே வந்து காத்திருப்பவன்¸ அவள் வரும் ஆட்டோ பள்ளி வளாகத்ததினுள் நுழைந்த பின்னரே உள்ளே வருவான்.
‘இவன்… நிவேதாவின் அப்பா மகளை அழைத்துச் செல்ல இன்று சீக்கிரமாகவே வந்துவிட்டானே! பரவாயில்லை… இப்போதாவது மகள்மேல் அக்கறை வந்ததே! நல்லது’
அவன் மகளை அழைத்துச் சென்றுவிட்டானென்றால் நிவேதா தன்னை ‘அம்மா’ என்றழைக்கும் சங்கடம் இராது என்றெண்ணினாள்.
இன்னும் பள்ளி நேரம் முடியவில்லை என்பதால் ஆட்டோவைவிட்டு இறங்காமல் உள்ளேயே அமர்ந்திருந்தாள். வெளியே வராததற்கு முக்கிய காரணம் அவனது துழைக்கும் பார்வையிலிருந்து தப்பிக்கலாம் என்பதுதான்.
ஆனால்… அவளை வெகுநாட்களுக்குப் பிறகு பார்க்கும் இப்போதும் அவளது தரிசனம் சரியாகக் கிடைக்கவில்லை என்றதும் ஆட்டோவுக்கு அருகில் சென்று குனிந்து “ஹாய் வித்யா!” என்றழைத்து அவளை திகைக்க வைத்தான்.
திடுக்கிட்டுத் திரும்பியவளைப் பார்த்து புன்னகைத்தான் கோகுல்.
பளீரென்ற புன்னகை… வரிசையாக அமைந்த வெண்ணிற பற்கள். பேஸ்ட் விளம்பரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்றது மூளை. அந்த மூளையை நன்றாகத் திட்டி அடக்கிவிட்டு… நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
தன் அதிக உயரத்தின் காரணமாக அவன் நன்றாகவே குனிந்து நின்று கொண்டிருக்க… அவன் அப்படி நிற்பதைக் கண்டதும் ஆத்திரம் உண்டானது.
தன் முழு உயரத்திற்குமாக இவன் இப்படி ஆட்டோவை மறைத்தவாறு நின்று கொண்டிருப்பதை யாரேனும் பார்த்தால் அவளைத்தான் தப்பாக நினைப்பார்கள். அவன் மறைத்த பக்கத்தைத் தவிர்த்து ஆட்டோவின் முன்புறமும்¸ மறுபுறமும் நோக்கினாள்.
ஒரு ஓரமாக நின்று வேன் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவரின் வித்தியாசமான பார்வையைக் காண நேரிட்டதும்¸ இவன் மேலுண்டான கோபம் அதிகரித்தது.
‘என்ன மனுஷன் இவன்? மற்றவர்களின் பார்வைக்கு தப்பாகத் தோன்றும் என கொஞ்சமும் யோசிக்காமல் இப்படி வந்து நிற்கிறானே?’
முகத்தில் எரிச்சலைக் காட்டியபடி “என்ன?” என்றதும் “கொஞ்சம் வெளியே வர்றியா? உன்கிட்ட பேசணும்” என்று கேட்டான்.
அவள் உள்ளே அமர்ந்திருந்து அவன் இப்படி குனிந்து நின்று பேசுவதற்கு… வெளியே நின்று பேசுவது எவ்வளவோ பரவாயில்லை என்றெண்ணி¸ இறங்குவதற்காக சற்று நகர்ந்தாள்.
அவள் நகருவதைக் கண்டதும் அவன் வழிவிட¸ அவள் இறங்கி நின்று “நீங்க என்கிட்ட என்ன பேசணும்?” என்று கேட்டாள்.
“அது…” என இழுத்தவன்¸ அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்தவாறு “உனக்கு உடம்பு சரியாகிவிட்டதா?” என்று கேட்டான்.
அவள் வியப்புடன் பார்க்க¸ பார்வையின் பொருள் உணர்ந்து “போனவாரம் நீ ஸ்கூலுக்கு வரவில்லை என்றதும் வருணிடம் விசாரித்தேன்” என்று உள்ளதைச் சொன்னான்.
“நான் நல்லாயிருக்கிறேன். ஆனா… நீங்க ஏன் என்னைப் பத்தி விசாரிக்கணும்?”
“என்ன வித்யா இப்படி கேட்கிறாய்?” என்றான் அவன் சற்று ஆச்சர்யமான குரலில்.
அப்போதுதான் அவள் கவனித்தாள்… அவன் தன்னை ஒருமையில் அழைத்து பேசிக் கொண்டிருப்பதை. ‘இவன் என்ன இப்படி.. ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிறான்?’ என்று நினைத்தவள்¸ “ஏன் விசாரிக்கணும்?” என்று மீண்டும் கேட்டாள்.
“ஏன் என்று கேட்டால் எப்படி…? மனைவியின் உடல்நிலை பற்றி ஒரு கணவனுக்குத் தெரியவேண்டாமா?” என்று கேட்டு புன்னகைத்தான் கோகுல்.

Advertisement