Advertisement

அத்தியாயம் – 8
ஆட்டோவில் போகும்போது தன் எண்ணத்திற்காகத் தன்னைத் திட்டிக் கொண்டவள்¸ அம்மா சொல்பேச்சுக் கேட்டு சேலை கட்டப் பழகியிருந்தால் இந்தப் பேச்சுக்களை கேட்க வேண்டியிருந்திருக்காதே என்றும் எண்ணாமலில்லை. பள்ளி வளாகத்தை நெருங்கியதும் தன் எண்ணங்களுக்குத் தடைபோட்டாள்.
ஆட்டோ நுழைவுவாசலைத் தாண்டி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சென்று நின்றது. அவள் இறங்கியதும் “அத்தை…!” என்று ஓடிவந்து அவளது கால்களை கட்டிக் கொண்டான் வருண்.
இவர்களுக்கருகில் வந்த நிவேதா வருணைப் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டு “இது என்னோட அம்மா… நான்தான் கட்டிப்பேன்” என்று வித்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
சிறுவர்களின் சண்டையில் எதுவும் பேச இயலாமல் வித்யா பார்த்திருக்க¸ சற்று விலகியிருந்த வருண் மீண்டும் வந்து “இல்லை¸ இது என் அத்தைதான். உன் அம்மா இல்லை… நீ தள்ளிப் போ” என்று அவளது கைகளை வித்யாவின் கைகளிலிருந்து விலக்கினான்.
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட தன் கரங்களைப் பார்த்தவாறே “இரு.. இரு… இன்னிக்கு எங்கப்பா வருவாங்க. வந்து என் அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க பாருடா…” என்று சவால் விட்டாள் நிவேதா.
“அத்தை இவ என்னை ‘டா’ சொல்றா..” என்று வித்யாவிடம் முறையிட¸ அவளோ இவர்கள் இருவருக்குமிடையில் என்ன பேசுவது என்று புரியாமலே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அத்தையின் உதவி கிட்டவில்லை என்றானவுடன் “உன் அப்பா வந்தா.. நா.. நான்… அவரை அடிச்சுப் போட்டுட்டு என் அத்தையை வீட்டுக்கு கூட்டிட்டுப் போவேன்டி” என்று சொல்ல¸ அவர்களுக்குள் “என் அத்தை!” “என் அம்மா!” என சொற்போர் தொடர்ந்தது.
சற்றுநேரம் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தவள்¸ அவர்கள் நிறுத்தப் போவதாகத் தோன்றவில்லை என்றானதும் அப்படியே முட்டியிட்டு அமர்ந்து இருவரது கன்னத்திலும் முத்தமொன்றை பதித்தாள்.
குழந்தைகள் இருவருமே சிரித்துவிட்டனர்.
“நீ என் அத்தைதானே?” என்று வருண் தன் கூற்றை நிரூபிப்பதற்காகக் கேட்க “ஆமாம்” என்று ஒத்துக்கொண்டாள் வித்யா.
முகம் வாட “அப்போ… நீங்க என் அம்மா இல்லையா?” என்று நிவேதா கேட்க¸ “இல்லை குட்டி” என்று மறுத்தவள் சிறுமிக்காக “நீ என்னை அம்மான்னு கூப்பிடலாம். ஆனால்¸ அது வேற யாருக்கும் தெரியக்கூடாது” என்று தன்னை அப்படி அழைக்க அனுமதியளித்து நிபந்தனை ஒன்றையும் விதித்தாள்.
“சரிம்மா…” என்று வித்யாவின் கன்னத்தில் இதழ் பதித்தாள்.
அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து இனி நண்பர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லி¸ அவர்களையும் ஒப்புக்கொள்ளச் செய்தாள்.
“போகலாமா வருண்?” என்று கேட்டவுடன் “ஓ.கே. போகலாம் அத்தை. பை நிவேதா…” என்று சந்தோஷமாகக் கிளம்பினான்.
வாட்டத்துடன் நின்றவளைப் பார்த்துவிட்டு “வருண் நீ ஆட்டோல இரு. நான் போய் இவளை வண்டி ஏற்றிவிட்டு வர்றேன்” என்று நிவேதாவின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
சற்றுதூரம் வரை சென்று பார்த்துவிட்டு “எல்லா வேனும் போய்விட்டது போலிருக்கே! நீ எப்படி வீட்டுக்குப் போவாய்? வீட்டிலிருந்து யாராவது வருவாங்களா?” என்று கேட்டாள்.
“அப்பா வருவேன்னு சொன்னாங்க. ஆனா… இங்க இல்லம்மா” என்று காரைத் தேடியவாறே சொன்னாள் அவள்.
ஆட்டோ டிரைவர் ஹார்ன் அடிக்கவும் “இதோ இப்ப வந்திடுவேன்… ரெண்டே நிமிடம்” என்றவள்¸ ஆட்டோவை நோக்கி நடந்தவாறே நிவேதாவிடம் “எப்படிடா போவாய்? இன்னும் உன் அப்பாவைக் காணவில்லை… சின்ன பிள்ளைகளை சரியான நேரத்திற்கு கூப்பிட வரவேண்டாமா? அப்படி என்ன மகளை விட முக்கியமான வெட்டி முறிக்கிற வேலையைப் பார்க்கிறாரோ உன் அப்பா…” என்று சற்று எரிச்சலுடனே பேசினாள். சிறுமியின் தகப்பன் மீதான எரிச்சல்.
காரை பார்க் செய்ய வசதியான இடத்திற்காகவும் மகளைத் தேடியவாறும் வந்து கொண்டிருந்த கோகுல் கார் செல்லும் பாதையில் நின்று பேசிக் கொண்டிருந்த மகளையும் அருகே நின்ற பெண்ணையும் பார்த்துவிட்டு, அவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக ஹாரனை அழுத்தினான்.
சத்தத்தில் திரும்பிப் பார்த்த நிவேதா “ஹை.. அப்பா வந்தாச்சு!” என்று தகப்பனிருந்த பக்கமாகச் சென்றாள்.
வித்யாவும் திரும்பினாள்.
காரை விட்டிறங்கி அவளைப் பார்த்தவன் அசையாமலே நின்றுவிட்டான். உதடுகள் தானாக அவளது பெயரை உச்சரித்தது “வித்யா!” என்று.
வித்யாவுக்கும் வந்தவனைக் கண்டதும் சற்று வியப்புதான். ஏனெனில் நிவேதாவின் தகப்பன் என்றதும் சரவணனைப் போன்ற சற்று அதிக வயதில் தொப்பையுடன் கூடிய ஒருத்தரை. அதுவும் நிவேதாவின் நிறத்தைப் பார்த்து வெளிர் நிறமுடைய ஒருத்தரையே எதிர்பார்த்திருந்தவளுக்கு¸ இப்படி மாநிறத்தில் உயரமாக¸ கச்சிதமான உடற்கட்டும்¸ அலையலையான கேசமும்¸ ட்ரிம் செய்யப்பட்ட மீசையுமாக வந்திருந்தவனைக் கண்டதும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
ஆச்சர்யமான அவளது பார்வை அவனை மேலும் ஆராய்ந்தது.
பார்மல் பேன்ட் சட்டையில் இருந்தவன்¸ சட்டையை டக்இன் செய்திருந்தான். சட்டையின் மேல் இரு பட்டன்கள் திறந்துவிடப்பட்டிருந்தன. கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலி ஒரு ஓரமாகத் தெரிந்தது. கை பட்டன்கள் மூடப்படாமல் முழங்கைக்கு கீழே மடித்துவிடப்பட்டிருந்தது.
ஆட்டோக்காரர் மீண்டும் ஹாரனை ஒலிக்க¸ திடுக்கிட்டுத் திரும்பியவள் சட்டென ஆட்டோவுக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள்.
பயணம் முழுவதும் ‘ச்சே… நான் ஏன் அந்தாளை அப்படிப் பார்க்க வேண்டும்? ஏற்கனவே திருமணமாகி¸ ஒரு குழந்தைக்கு அப்பா… அவனைப் போய்… அப்படி பார்த்துக் கொண்டு நின்றது தப்பு. அதைவிட கேவலம் தன்னையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான்?’ என்று அதை எண்ணித் தன்னை நொந்து கொள்வதிலே கழிந்தது.
கோகுல் நிச்சயமாகத் தன் மனைவியை அங்கு எதிர்பார்க்கவில்லை.
மகள் பார்த்ததாகக் கூறியபோதும் வேறு யாரோவாகத்தான் இருக்கும் என்றெண்ணி வந்தவன்¸ அவள் பார்த்தது தன் மனைவியைத்தான் என்றதும் அப்படியே உறைந்துவிட்டான்.
‘ஆனால்… அவளிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே!’ என்று யோசிக்க¸ அந்த சில நொடிப் பார்வையிலும்கூட அவளை நன்றாக உள்வாங்கியிருந்த இதயம் மூளையின் உதவியுடன் ‘உடைதான் அந்த வித்தியாசம்’ என்று எடுத்துக் கூறியது.
முன்பு எப்போதும் லாங்ஸ்கர்ட்¸ ஜீன்சுடன் கையில்லா சட்டை அணிந்திருப்பவள் இப்போது சுடிதார் அணிந்திருந்தாள். அவர்களது திருமண நாளைத் தவிர்த்து அவளை சேலையிலோ¸ சுடிதாரிலோ பார்த்திராதவனுக்கு வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. தலைமுடியைக் கூட பாப் கட்டிங் செய்திருந்தவளுக்கு¸ முடி இடையை தாண்டித் தொங்கியது.
இளமஞ்சள் நிற சுடிதாரில் சூரியகாந்தி மலர்போல இருந்தாள். இவள் நிச்சயமாக அவன் தாலி கட்டி மணந்த அவனது மனைவி இல்லை. ஆனால்… முகம் அப்படியே இருக்கிறது. முகம் மட்டுமல்ல¸ உயரம்¸ உடல்நிறம் என அனைத்தும் அப்படியே…
வெகுநேரமாக அசையாமல் அப்படியே சிலைபோல நின்றுவிட்ட தகப்பனின் கையைப் பிடித்திழுத்து அவனை சுயநினைவுக்குக் கொண்டு வந்தாள் மகள்.
ஆட்டோ நின்ற இடத்தைப் பார்த்தால் காலியாக இருந்தது.
“நிவி அம்மா எங்கே போனாங்க?” என்று அவசரமாகக் கேட்டான்.
“அம்மா அந்த வருணைக் கூட்டிட்டு போய்ட்டாங்கப்பா…”
“வருணா? வருண் யாரு?” அவனுக்கு வித்யாவைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை.
“தெரியாது… ஆனா… அவன் அம்மாவை அத்தைன்னு கூப்பிட்டான்”
“ஓ…! அவன் வீடு எங்கேயிருக்கு தெரியுமா?” என்று கேட்டான்¸ மகளுக்குத் தெரிந்திருந்தால் அங்கு செல்லலாமே என்ற எண்ணத்துடன். சிறுமியான அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுகூட அவனுக்குத் தோன்றவில்லை.
தந்தையின் வேகமான பேச்சைக் கேட்டு பயந்தவள் “வாங்கப்பா நாம வீட்டுக்குப் போகலாம்… அம்மாவை நாளைக்கு வந்து பார்க்கலாம்…” சற்று விலகி நின்றே அழைத்தாள்.
மழைப் பொழிய போவதன் அறிகுறியாக மேகம் கருத்து¸ இடமே இருள் சூழத்தொடங்கி¸ பள்ளியில் நின்றிருந்த ஒன்றிரண்டு வாகனங்களும் செல்லத் தொடங்கவும் பயத்துடனே “அப்பா… மழை வரும் போல இருக்குப்பா… வாங்கப்பா…” என்று தகப்பனை அழைத்துப் பார்த்தாள்.
“நீ உள்ளே உட்காரு நிவி…” என்று திரும்பாமல் பதில் மட்டும் அளித்தவன்¸ கொட்டும் மழையில் நனைந்தவாறு அசையாமலே நின்றான்.
நெடுநாளைய உடலின் வேட்கை தணிவது போலத் தோன்ற மழை ஓயும் வரை அப்படியே நின்றுகொண்டிருந்தான் கோகுல்.
பத்து நிமிடத்திற்கும் மேலாக பொழிந்த மழை விடைபெற்றது.
கோகுல் திரும்பி காருக்குள் பார்த்தான்¸ நிவேதா தூங்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பக்கம் பார்க்க அவனை நோக்கி வந்த வாட்ச் மேன் “சார் கிளம்பலையா…?” என்று கேட்டார்.
அவன் அசையாமல்¸ பதிலும் பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க கையைப் பிடித்து உலுக்கி “சார் நேரமாகிவிட்டது… கேட் மூடணும். சீக்கிரம் கிளம்புங்க சார்¸ இல்லைன்னா எனக்குத்தான் பிரச்சினை வரும்” என்று அவனை வெளியேறச் சொல்லி துரிதப்படுத்தினார்.
காருக்குள் அமர்ந்தவன்¸ தூங்கிக் கொண்டிருந்த மகளிடம் திரும்பி “உன் அம்மா கிடைத்துவிட்டாள். இனி அவளை நம் வீட்டிற்கு சீக்கிரமே அழைத்து வந்துவிடலாம்” என்று பேசிவிட்டு மகிழ்ச்சியாக வீட்டுக்குக் கிளம்பினான்.
போகும்போதே மழையில் நனைந்ததன் விளைவாக அவனுக்குத் தும்மல் வரத் தொடங்கிவிட்டது.
மகளது தூக்கத்தைக் கலைக்காமல் வேலையாளின் உதவியுடன் அவளது அறையில் படுக்க வைத்துவிட்டு¸ குளித்து உடைமாற்றி சாப்பிட வந்தான்.
சாப்பிட்டு முடித்ததும் தாயாரும் மகனும் நிவேதாவைப் பார்க்கச் சென்றனர். “அவள் இன்னும் சாப்பிடவில்லை¸ எழுப்ப வேணாமா?” என்று கேட்டவாறே பேத்தியை நோக்கிச் சென்ற தாயாரைத் தடுத்து “வேண்டாம்மா… அவள் அப்படியே தூங்கட்டும்” என்று சொன்னான்.
‘ஏன்?’ என்பதுபோல தாயார் நோக்க¸ பதில் கூறாமலே “வாங்கம்மா…” என்றழைக்க இருவருமாக அறையை விட்டு வெளியேறுவதற்காகத் திரும்பியபோது “அம்மா..! அம்மா..!” என்ற அவளது மெல்லிய புலம்பல் இரவின் நிசப்தத்தில் இருவருக்கும் துல்லியமாகக் கேட்டது.
“கோகுல் அவகிட்ட சொல்லிடலாம்ப்பா…” என்றார் தாயார் தயக்கத்துடன்.
“என்னம்மா? எதை சொல்லிடலாம்னு சொல்றீங்க?”
“அதான்.. அவ அம்மா உன்னை விட்டுட்டுப் பொய்ட்டான்றதை… பாவம் அம்மாவுக்கு ரொம்பவே ஏங்கிப் போயிருக்கா. இந்த நாலு வருஷமும் அவள் தனியா இருந்தது போதும். அவளிடம் சொல்லிவிட்டு உனக்கு இன்னொரு கல்யாணம் செய்வோம். நீதான் தனியா வளரும்படி ஆகிவிட்டது! இவளாவது ரெண்டுபேரோட சேர்ந்து வளரட்டும். இவ்வளவு பெரிய வீட்டில் பேச்சுத் துணைக்கும் விளையாடுவதற்கும் ஆளில்லாமல் அவள் எப்படி தவிக்கிறான்னு உனக்குத் தெரியுதா? ஒரு கல்யாணம் பண்ணி இன்னும் ரெண்டு குட்டிப் பிள்ளைகள் வந்துவிட்டால் இந்த வீடு கலகலப்பாக மாறிவிடும்…” என்று பலவாறாகப் பேசிவிட்டு¸
“ம்.. சொல்லுப்பா… தரகரை வரச் சொல்லட்டுமா?” என்று மெதுவாக மகனின் சம்மதம் கேட்டார் கனகவள்ளி.
“இப்ப வேண்டாம்மா… கொஞ்ச நாள் போகட்டும்…” என்று மகன் சொன்னதும்¸ மகன் திருமணத்தை மறுப்பதைத்தான் நேரடியாக சொல்லாமல் தள்ளிப் போடுவதாக எண்ணி “அப்ப நீ வேற கல்யாணம் செய்துக்க மாட்டியா கோகுல்?” என்று கேட்டார் குரலில் வருத்தம் வெளிப்படையாகவே தெரிந்தது.
“இல்லைம்மா… நான் கண்டிப்பா செய்துகொள்வேன். ஆனால்.. அதற்கு நீங்கள் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்” என்றான்.
நான்கு ஆண்டுகளாக சரி என்ற வார்த்தையையே சொல்லாதிருந்தவன் சில மாதங்கள் பொறுத்திருக்கச் சொன்னது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க “ரொம்ப சந்தோஷம்ப்பா.. நீ இவ்வளவு சொன்னதே போதும். அந்த நாளுக்காக காத்திட்டிருப்பேன்…” என்று மகனின் திருமணத்தில் தனக்கு எவ்வளவு ஆனந்தம் என்பதை கோடிட்டுக் காட்டினார்.
தாயாரின் மனதைப் புரிந்து தானும் புன்னகைத்தவன் “அச்…!” என்று தும்மினான்.
ஏற்கனவே பலமுறை அவன் தும்மியதைக் கண்டிருந்தவர் “நான் கஷாயம் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று சமையலறை நோக்கித் திரும்பினார்.
விசிலடித்தவாறே மாடியை நோக்கிச் சென்ற மகனை கவனித்தவரது முகத்திலும் புன்னகை விரிந்தது.

Advertisement