Advertisement

அத்தியாயம் – 7
“அத்தை!” என்று சிறுவனின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தவள்¸ “என்ன வருண் தூங்கலையா?” என்று கேட்டு சிறுவனிடம் சென்றாள்.
“பேய் கனவா வருது¸ எனக்கு பயமா இருக்கு. என்னை கட்டிப்பிடிச்சிக்கோ அத்தை” என்று அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டான்.
தானும் சிறுவனை நன்றாக அணைத்தவாறு “பேயெல்லாம் கிடையவே கிடையாது. கனவு வந்ததற்கே இப்படி பயந்தால்¸ என் வருண்குட்டி எப்படி படுதைரியமாக வளர முடியும்? ஆண்பிள்ளை நீ தைரியமாக வளர வேண்டாமா?” என்று கேட்டாள்.
“நான் இன்னிக்கு டி.வி.யில பேய் பார்த்தேன் அத்தை பயங்கரமா இருந்தது” என்றான் சிறுவன்.
“அதெல்லாம் வெறும் கிராபிக்ஸ்டா. அதற்கெல்லாம் பயப்படக்கூடாது சரியா?” என்றவள்¸ “வா¸ நாம தூங்கலாம்” என்று சிறுவனை தூக்கிச் சென்று படுக்க வைத்து தானும் படுத்து அவனுக்குப் போர்த்திவிட்டாள். வித்யா தூங்க முயல… அந்த முயற்சியைக் கூடத் தோற்கடிக்குமாறு அவளது ரத்த சொந்தத்தின் கடைசி நாளையப் பேச்சு நினைவிற்கு வந்தது.
வருண் அவள்மேல் காலைத் தூக்கிப் போட்டுத் தூங்கவும்¸ அவனை அணைத்தவாறே அவளும் தூங்கிப்போனாள்.
அதிகாலையில் எழுந்ததும் குளித்து முடித்து அனைவருக்கும் காபி கலந்து அவரவர் அறைக்குச் சென்று வைத்துவிட்டு வந்தவளிடம், குளித்துத் தயாராக வந்த காஞ்சனா சாமிக்கு மலர்க் கொண்டு வரச் சொன்னார்.
தோட்டத்திற்கு சென்று மலர்களைப் பறிக்கும்போது மனதில் ஒருவித அமைதி நிலவியது. உதட்டில் விரக்திப் புன்னகை ஒன்றும் வந்து மறைந்தது.
இந்த வீட்டில் அவளுக்கு சற்று இதம் தரும் விஷயங்கள் மூன்று. தினமும் காலையில் தோட்டத்திலிருக்கும் இந்த நேரம் அவள் விரும்பி ஏற்பது¸ இரண்டாவதாக அவ்வப்போது வித்யாவுக்காக தாயாரிடம் பரிந்துபேசும் அண்ணன் சரவணன் மற்றும் அவளையே சுற்றி வரும் அவனது மகன் வருண். இந்த மூன்று காரணங்கள் மட்டுமே அவளை இன்னமும் இந்த வீட்டில் பிடித்து வைத்திருக்கிறது.
வீட்டின் மற்ற உறுப்பினர்களான பெரியப்பா¸ பெரியம்மா¸ மகள் கௌரி¸ மருமகள் விஜயா இந்த நால்வரில் ஒருவர்கூட அவளை மனிதப்பிறவியாக நினைப்பதில்லை.
‘தூத்துக்குடியிலிருந்து புறப்படும்வரை நன்றாகப் பழகிய பெரியம்மா¸ தன் வீட்டிற்கு வந்ததும் எப்படி மாறிவிட்டாள்’ என்று அவ்வப்போது வித்யா நினைப்பதுண்டு.
வித்யா குடும்பத்தின் பொருளாதார நிலையோடு ஒப்பிடும்போது அவளது பெரியம்மா வீட்டினர் சற்று வசதியாகவே இருந்தனர். பொருளாதார நிலையில் தாழ்ந்திருந்ததால்தான் எனக்கு வசதிகளைக் கொடுப்பதாக எண்ணி என்னை இப்படி நடத்துகிறார்களோ?
என்னதான் பல வசதிகள் இந்த வீட்டில் இருந்தாலும் அங்கிருந்த மகிழ்ச்சி¸ நிம்மதி போன்றவை அவளுக்குக் கிட்டவே இல்லை. இனி தன் குடும்பத்தாருடன் வாழும் அந்த மகிழ்ச்சியான காலம் வரவே வராது என்பதை நினைக்கும்போது அவளுக்கு மூச்சடைத்தது போலிருக்கும்.
“வித்யா! ஏய் வித்யா…! எவ்வளவு நேரம்தான் ஆக்குவ? தோட்டத்துக்கு போனோமா வந்தோமான்னு இல்லாம¸ அங்கே நின்னு எவனைப் பார்த்துக்கிட்டு இருக்கே?” என்று வார்த்தைகளைத் துப்பினாள் பெரியம்மா.
‘இந்தப் பெரியம்மாவிற்கு இதே வேலையாகப் போய்விட்டது. வீட்டை விட்டு வெளியே வந்தாலே இந்த மாதிரி வார்த்தைகளால் குத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்’ வேறு போக்கிடம் இல்லையென்பதால் பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டாள்.
“இதோ பெரியம்மா! வந்துட்டேன்” என்று வீட்டை நோக்கி விரைந்தாள்.
வழியில் பல்லை இளித்துக் கொண்டு நின்ற கார் டிரைவரை காணாதது போல் சென்றாள். ‘ச்சே! இது ஒரு பைத்தியம். எப்போப் பார்த்தாலும் பல்லைக் காட்டிக்கிட்டு நிக்குது… இனி இதுக்காக வேற தனியா ஒரு திட்டு விழும்’ என்று மனதுக்குள் டிரைவரைத் திட்டியபடியே சென்று பறித்து வந்த மலர்களை பெரியம்மாவிடம் நீட்டினாள்.
வாங்கிக் கொண்டவர் “இனி நீ போ¸ போய் சமையலைக் கவனி. கௌரி இன்றைக்கு முறுவல் தோசை கேட்டா¸ அவளுக்கு அதை செய்துடு. பெரியப்பாக்கு ஓட்ஸ் கஞ்சி¸ எனக்கு சப்பாத்தி¸ மத்தவங்களுக்கு இட்லி ஊத்திடு” என்று அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகவும் வித்யாவுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.
சமையலே தெரியாமல் இருந்தவள்¸ கற்றுக் கொண்டதே இங்கு வந்து சேர்ந்த இந்த ஆறு மாதத்தில்தான். அதுவும் ஓரளவிற்குத்தான் தெரியும். அவளது சமையல் எப்படி இருந்தாலும் வீட்டுச் சமையலை செய்வது சமையல்காரி அல்ல¸ வித்யாதான் செய்ய வேண்டும் என்பது இந்த வீட்டு மகாராணியாரின் உத்தரவு. ஏதேனும் விசேஷம் என்றால் சமையல்காரியின் ஒத்துழைப்பும் கிடைக்கும் அவ்வளவுதான்.
“என்ன அப்படி பார்க்குறே? போய் வேலையைப் பாரு” என்று அதட்டிச் சொன்னவர்¸ “எப்பவும் மசமசன்னு எதையாவது நினைச்சிக்கிட்டே இருக்க வேண்டியது… அப்புறம் ஒருத்தருக்கும் சாப்பாடு சரியா செய்றது கிடையாது” என்ற முணுமுணுப்புடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
‘அம்மா… ஏம்மா என்னை இப்படிப்பட்டவங்க கிட்ட விட்டுப் போனீங்க? என்னவெல்லாம் பேசுறாங்க…’ இந்த வீட்டிலிருந்து எப்போது வெளியேறுவோம் என்றிருந்தது அவளுக்கு.
வந்து சேர்ந்த இரண்டு வாரங்களில் இவரது கடுஞ்சொல்லாலும்¸ வீட்டு வேலைகளை செய்ய இயலாததாலும் “நான் எங்காவது லேடீஸ் ஹாஸ்டலில் போய் தங்கட்டுமா?” என்று கேட்டதற்கு “ஏன் அப்போதான் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றலாம் என்ற நினைப்பா? அதெல்லாம் ஒன்னும் போகவேண்டாம்” என்று தடுத்துவிட்டார்.
தோழியரின் உதவியைப் பெறலாமென்றால் தன்னுடைய மொபைலையும் தொலைத்துவிட்டிருந்தால்¸ தெரியாத ஊரில் வேறு யாரையும் நம்பி வெளியேற முயலாமல் இந்த வீட்டிலே தன்னைப் பழக்கிக் கொண்டாள்.
யோசனையிலிருந்து விடுபட்டு அவசர அவசரமாக சமையலை முடித்தவள்¸ சாப்பாட்டைக் கொண்டு டைனிங் டேபிளில் வைக்கும்போதே மனதின் குரல் கேட்டது ‘எப்படியும் சாப்பிட்டுவிட்டு குறைதான் சொல்லப் போகிறார்கள்¸ இதற்கு நீ இவ்வளவு மெனக்கெட வேண்டுமா?’ என்று. நல்லவேளை இந்த வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டுவிடுவதால் அவளுக்கு அந்த வேலை மட்டும் இல்லை.
“அத்தை!” என்று மகிழ்ச்சியுடன் அழைத்தவாறு பள்ளிச் சீருடையில் வந்த வருணைக் கண்டதும் தானும் புன்னகையுடனே சென்று அவனுக்காக ஒரு தட்டில் இட்லி எடுத்து ஊட்டிவிட்டாள். அவள் கொடுத்தால்தான் அடம்பிடிக்காமல் சாப்பிடுவான் என்பதால் மற்றவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
மறுக்காமல் முழுவதையும் சாப்பிட்டு முடித்தவன்¸ சரவணனுடன் காருக்குச் சென்றான். எப்போதும்போல அவனுக்கு கை காட்டுவதற்காக வித்யா சென்றாள்.
அத்தையிடம் கையசைத்து விடைபெற்றவன்¸ திடீரென “அத்தை இன்னிக்கும் நீதான் என்னைக் கூப்பிட வரணும்” என்றான். சரவணன் மகனது தலையை வருடியவாறு “கண்டிப்பா வருவாங்க…” என்று சொல்லிக் காரை ஸ்டார்ட் செய்தான்.
வருணின் நினைவில் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைய¸ “என்ன சிரிப்பு?” என்று வந்தாள் பெரியம்மா மகள் கௌரி.
வித்யாவின் சிரிப்பு அப்படியே மறைந்தது.
மீண்டும் அவள் “என்ன சிரிப்புன்னு கேட்டேன்?” என்று கேட்க¸ “வருண் இன்றைக்கும் ஈவ்னிங் கூப்பிட வரச் சொன்னான்” என்று சொன்னாள்.
“இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டாள் நக்கலாக.
‘உனக்கு ஒன்றுமில்லைதான். ஆனால்¸ எனக்கு இந்த வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்திற்காவது விடுதலை கிடைக்குமே என்ற சந்தோஷம்தான்!’ என்றெண்ணியதை சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
பதில் பேசாமல் நின்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே கிளம்பிவிட்டாள் கௌரி.
வித்யாவும் இந்த வீட்டிற்கு வந்த அன்றிலிருந்து பார்க்கிறாள்¸ தினமும் காலையில் காரை எடுத்துக் கொண்டு செல்லும் கௌரி கல்லூரிப் படிப்பை முடித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது. எந்த வேலையும் பார்க்கவில்லை¸ பின்னே ‘எங்கேதான் செல்கிறாள்? அதுவும் தினமும்?’ இந்தக் கேள்வியை அவள் மனதிற்குள்தான் அடிக்கடி கேட்டுக் கொள்வாள்.
தங்கள் மகள் மேல் அவர்களுக்கு இல்லாத அக்கறை நமக்கெதற்கு என்றெண்ணி அந்த வீட்டிலிருக்கும் ஒருவரிடமும் கேட்காமலிருந்தவள்¸ ஒருமுறை பெரியம்மாவிடமே கேட்டுவிட்டாள்.
அவரது பதில் அவளுக்குத்தான் வருத்தத்தை உண்டாக்கியது.
“என் மகளை என்ன உன் அம்மாவைப் போலன்னு நினைத்தாயா? ஓடிப் போய்விடுவாள் என்று பயப்படுவதற்கு… நீ வேண்டுமானால் அப்படியிருப்பாய்” என்று சொல்லிவிட அவளுக்குத்தான் வலித்தது.
அம்மா செய்த தவறுதான் என்ன? தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
சரி¸ அவர்களைப் பொறுத்தவரை அதை மாபெரும் குற்றமென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால், என்னை ஏன் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்? அந்த நிலைமையிலிருந்த அம்மாவிடம் மறுக்க முடியவில்லை என்றாலும்¸ காரியமெல்லாம் முடிந்த பிறகு என்னிடமாவது முடியாது என்று சொல்லியிருக்கலாம். அதைவிட்டு எப்பொழுதும் தேள் கொட்டுவது போல வார்த்தைகளை கொட்டிக்கொண்டு ச்சே..! என்ன மனிதர்கள்!
யோசனைகளை உதறிவிட்டு மதிய சாப்பாட்டுக்கான வேலைகளை முடித்து¸ இரண்டு மணிவாக்கில் சற்று ஆசுவாசமானபோது வருணின் நினைவு வந்தது.
மாலை அவனைக் கூப்பிடச் செல்ல வேண்டுமென்பதை நினைத்ததுமே இரண்டு நாட்களாகச் சந்தித்த அந்தச் சிறுமியின் நினைவும் கூடவே வந்தது.
‘பெயர்கூட என்னவோ சொன்னாளே…! ஆங்… நினைவு வந்துவிட்டது ‘நிவேதா!’ அழகான பெயர்¸ பழகுவதற்கும் இனிமையானவளே! ஆனால், அவள் அழைக்கும் விதம்தான் கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது’
பின்னே திருமணமாகாத ஒரு பெண்ணை¸ அது சிறுமியாகவே இருந்தபோதும் ‘அம்மா’ என்றழைப்பதை யாராவது பார்த்தால் என்ன நினைக்கக்கூடும். அதை எண்ணியே அவளிடம் தன்னை ‘ஆன்ட்டி’ என்று அழைக்கச் சொன்னாள்.
ஆனால்… அவள் எங்கே அதைக் கேட்டாள்¸ வருணிடம் அல்லவா ‘இது என் அம்மா’ என்று சண்டையிடுகிறாள். நேற்றைய மாலை வேளையின் நினைவு சிரிப்பையே வரவழைத்தது.
மாலை வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அன்று சந்திக்க இருக்கும் நபரால்¸ தன் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழப்போவதை அவள் அறிந்திருக்கவில்லை.
“பெரியம்மா நான் வருணை கூட்டிட்டு வர்றேன்” என்று அனுமதி வேண்டி நின்றாள் வித்யா.
“ஏய் நில்லு!”
“என்ன பெரியம்மா?”
“நான் நேற்றைக்கே கேட்கணும் நினைத்தேன். ஆமா¸ உன்கிட்ட சேலையே இல்லையா? எப்பவும் சுடிதாரையே போட்டுட்டுப் போறே¸ சேலை கட்ட வேண்டியதுதானே?”
‘அவருடைய மகள் ஜீன்சும் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்டுமாக வெளியே போகிறாள். ஆனால் நான் சுடிதார் அணிந்து வெளியே செல்லக்கூடாதா? என்ன கொடுமைடா!’ என்று மனதிற்குள் பொறுமியவள் தயக்கத்துடனே¸
“அது… பெரியம்மா… எனக்கு சேலை கட்டத் தெரியாது” என்றாள்.
“என்ன சேலை கட்டத் தெரியாதா? ஏன் இதைக்கூட உன் அம்மா உனக்கு கத்துத் தரலையா?” என்றவர் அவளிடமிருந்து பதிலை எதிர்பாராமலே “என்னதான் பிள்ளைகளை வளர்த்தாளோ! எல்லாம் அவளைச் சொல்லணும்” என்று தங்கையைப் பேசத் தொடங்கிவிட்டார்.
தன் தாயாரைத் திட்ட இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று உள்ளுக்குள் கொதித்தபோதும்¸ தன் தாயாருக்குப் பேச்சு வாங்கிக் கொடுத்த தன் மீதும் கோபம் வந்தது.
எத்தனை முறை அம்மா சேலை கட்டிப் பழகிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். முதல் முறையாக கோவில் திருவிழாவின் போது தன் இரு மகள்களுக்கும் தானே சேலை கட்டிவிட்ட செண்பகம் வித்யாவிடம் ‘வீட்டுக்கு மூத்தவள் நீ.. சேலை கட்ட பழகிக் கொள்’ என்று சொன்னபோதும் ‘என்னால முடியாதும்மா. எத்தனை பின் குத்தணும். அது மட்டுமா அது எங்கே கழண்டு விழுந்துடுமோன்னு பயந்துகிட்டே ஒரு இடத்துக்கு ஒழுங்கா போயிட்டு வரமுடியுமா? இல்லை ஜாலியா பொழுதைத்தான் ஓட்ட முடியுமா? பொம்மைபோல ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கணும். அதனால் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்மா’ என்று தாயாருக்கு ஐஸ் வைத்து தப்பிக் கொண்டாள்.
அதன்பின் இரண்டு வருடங்கழித்து ‘இப்போ சேலை கட்டிப் பழகட்டுமாம்மா?’ என்று கேட்டபோது ‘இவ்வளவு சீக்கிரமே எதுக்கும்மா? நீ உன் புருஷன் வீட்டுக்குப் போய் அவனையே கட்டிவிடச் சொல்லு. ரொம்ப நல்லாயிருக்கும்’ என்று மகளின் காலை வாரிவிட்டவர்¸ மகளுக்கு சொல்லிக் கொடுக்க முன்வரத்தான் செய்தார். ஆனால் அவளால்தான் பழகிக் கொள்ள முடியவில்லை. கடினமாகத் தோன்றவே பின்னர் கற்றுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
அந்த மகிழ்ச்சியான நாட்களின் நினைவில் பெருமூச்சொன்று வெளியேற¸ “என்ன அவ்வளவு பெரிய மூச்சு?” என்று கேட்டார் காஞ்சனா.
“ஒன்றுமில்லை பெரியம்மா. வருணைக் கூப்பிட நேரமாகிவிட்டது” என்றவாறு விஜயாவைப் பார்த்தவள்¸ கடிகாரத்தைப் பார்த்தாள்.
அப்போதுதான் நேரத்தை கவனித்த விஜயா “ஆமா அத்தை¸ நேரமாகிவிட்டது. இப்போ அவள் போகட்டும்¸ வந்தபிறகு பேசிக் கொள்ளுங்கள்” என்று வித்யாவுக்குப் பரிந்துபேசினாள்.
“சரி.. சரி.. சீக்கிரம் போயிட்டு வா” என்று அனுமதி வழங்கியவர்¸ “புடவை கட்டத் தெரியாதாம்… இவளையெல்லாம் எவன் கட்டி மேய்க்கப் போறானோ?” என்று மருமகளிடம் வசைபாடத் தொடங்கினார்.
‘இவர் மகளை எவன் கட்டி மேய்க்கப் போகிறான் என்று பார்க்க வேண்டும். எப்போ பார்த்தாலும் திட்டிக் கொண்டு…’ என்றெண்ணியவள்¸ “சேச்சே.. நானா இப்படி மட்டமாக நினைக்கிறேன்” என்று தன்னையே திட்டிக் கொண்டாள். இந்த பெரியம்மாவுடன் இருந்தால் இன்னும் மோசமான வார்த்தைகளைக் கூட கற்றுக் கொள்வேன் போலிருக்கிறதே என்று கவலையும் கொண்டாள்.
வீட்டிலிருக்கும் இரண்டு காரையும் சரவணனும் கௌரியும் எடுத்துச் சென்றுவிடுவதால் மற்றவர்கள் ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். கார் வீட்டிலிருந்தால்கூட வித்யாவுக்கு ஆட்டோதான்.

Advertisement