Advertisement

அத்தியாயம் – 24
திரும்பி வந்து கதவை தாழிட்டுவிட்டு கட்டிலை நோக்கிச் சென்றவளை “வித்யா!” என்றழைத்து ‘என்னிடம் வருவாயா?’ என்பதுபோல தன் இருகரங்களையும் விரித்தவாறு நின்றான் கோகுல்.
ஓடிச்சென்று மார்பில் முகம் புதைத்தவளை அணைத்தபடி சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன்¸ அவளது நெற்றியில் முத்தமிட்டு “வா… வந்து உட்கார்…. உன்னிடம் கொஞ்சம் பேசணும்…” என்றழைத்துச் சென்று அவளைக் கட்டிலில் அமரவைத்துத் தானும் அமர்ந்தான்.
“வித்யா நான் சொல்வதற்கு முன்… இதற்கு பதில் சொல். என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா? என்னிடம் வெறுப்பாக இருக்கிறதா?” என்று கேட்டான்.
அவள் இல்லையென்றதும்¸ “நிஜமாகவே அப்படி ஒன்றும் இல்லையா?” என்று மீண்டும் அதையே கேட்க “காலையில் அந்தக் கட்டிடத்தில் வைத்தும்¸ சற்றுமுன் இங்கே உங்கள் மார்பில் சாய்ந்து நின்றதைப் பார்த்தபிறகும் இந்த கேள்வி அவசியமா?” என்று கேட்டாள் அவள்.
“அது… உணர்ச்சி வேகத்தில் வந்து அணைத்ததாக இருக்கலாமல்லவா?” என்று கேட்டான் அவன்.
“நான் உணர்ச்சிவசப்படுகிறவளாக இருந்தாலும் உணர்ச்சிகளின் வேகத்தை கட்டுப்படுத்தத் தெரியாதவள் அல்ல” என்றாள் ஆத்திரத்துடன்.
அவளது கோபத்தை பொருட்படுத்தாமல் தன் பேச்சின் போக்கிலே “அப்படின்னா… என்னை உனக்கு பிடிச்சிருக்கு¸ அப்படித்தானே?” என்று கேட்டான்.
“ஆமாம்…”
“என்னிடமிருக்கும் குறைகளை பெரிதாக நினைக்காமல் என்னை அப்படியே ஏற்றுக் கொள்வாய் அப்படித்தானே?”
“ஆமாம்…”
“நம் திருமணம் நடந்தது..?”
“அதை நான் எப்போதோ மறந்துவிட்டேன்” என்று வித்யா சொன்னதும் “என்ன!! நம் திருமணத்தை மறந்துவிட்டாயா?” என்று அதிர்ந்ததுபோல நடித்தான் அவன்.
“ஹைய்யோ!! நான் நடந்த திருமணத்தை மறந்ததாக சொல்லவில்லை… அது நடந்த விதத்தை மறந்துவிட்டதாகக் கூறினேன்” என்று விளக்கினாள் அவள்.
“அப்படியானால் உனக்கு வேறெதுவும் தெரிய வேண்டாமா?” என்றான் கோகுல்.
“வேண்டும்தான்… உங்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லுங்கள். கட்டாயமாக எனக்குத் தெரிந்தாக வேண்டுமென நான் நினைக்கவில்லை” என்றவள்¸ அவன் மேலே பேசாமல் சொல்வதா வேண்டாமா என்ற யோசனையோடு தன்னையே பார்த்திருப்பதைக் கண்டதும் “காரணம் தெரிந்தால்தான் உங்களை என் கணவனாக ஏற்றுக் கொள்வேன் என்றில்லை. இன்று என்னுடன் இருக்கும் இந்த கோகுலகிருஷ்ணன் எனக்கு சொந்தமானவர்… அவரை நான் எதற்காகவும் விட்டுத் தரமாட்டேன்” என்று உறுதியாகக் கூறினாள்.
“நான் உன்னை விரும்புகிறேன் என்று சொன்னால் நம்புவாயா?” என்று கேட்டான் அவன் சந்தேகமாக.
“நீங்கள் என்னை விரும்பியதால்தானே அந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தி நீங்கள் மணந்துகொண்டீர்கள்” என்றாள் அவள். தெரிந்த விஷயம்தானே என்பது அவளுக்கு.
“என் முதல் மனைவியின் முகச்சாயல் உன்னிடம் இருப்பதால்¸ உன்னை மணந்து கொண்டேன் என்று எண்ணுகிறாயா..?”
கணவன் எதையோ சொல்வதற்கு ரொம்பவே முயன்றுகொண்டிருப்பதை உணர்ந்தாலும் அது என்னவென்று சரியாகத் தெரியாததால் அவனுக்கு கஷ்டத்தைக் கொடுக்காமல் தனக்குத் தெரிந்தவற்றை அவளே கூறலானாள். “ஆமாம்! அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது¸ உங்களை விட்டுப் போய்விட்டாள். அவள் முகத்தை உங்களால் மறக்கமுடியவில்லை… அதனால் அவளைப் போல இருக்கும் என்னைத் திருமணம் செய்ய நினைத்து… அதை செயலிலும் காட்டியவர் என்பதை நம்புகிறேன்” என்றாள் அவள் விளையாட்டு போல.
“முன்பு ‘நீ’ என்று நினைத்து நான் ‘அவளை’ மணந்து கொண்டேன் என்றால் நம்புவாயா?” என்று கேட்டான் அவன்.
“அது எப்படி முடியும்? நீங்கள் என்னைப் பார்த்ததே நிவேதா பள்ளியில் வைத்துத்தான். அதன்பிறகு நீங்கள் ‘முன்பு’ என்று சொன்னால் எப்படி நம்ப முடியும்?” என்று தன் நம்பாமைக்கான காரணத்தையும் சேர்த்தே கூறிவிட்டாள்.
“ஆனால்… அதுதான் உண்மை. இதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்” என்றவன் “இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அவளது பெயரும் வித்யா என்பதுதான்” என்றான்.
நம்ப முடியாத செய்தியைக் கூறிய கணவனை வித்தியாசமாகப் பார்த்தவள் “இப்பொழுது என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லுங்கள்… எனக்காகவே என்னை விரும்புவதாக சொன்னாலும் நம்புவேன். அதைவிடுத்து முன்பே என்றால் ம்கூம்… என்னால் நம்பவே முடியாது” என்று தன் நம்பாமையை வெளிப்படையாகவே கூறினாள்.
“ஒரு நிமிடம்” என்று அணைப்பிலிருந்தவளை விலக்கி எழுந்தவன்¸ தன் அலமாரியிலிருந்த ‘ஹேண்டி கேமரா’ ஒன்றை எடுத்து வந்து அதிலிருந்த வீடியோவைக் காட்டினான்.
அதைப் பார்த்ததும் அது தான்தான் என்று அவளுக்குப் புரிந்துவிட்டது. கல்லூரியிலிருந்து ஊட்டி பொட்டானிக்கல் கார்டனிற்கு அழைத்துச் சென்றபோது… மலர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவளை வீடியோ எடுத்திருக்கிறான். வீடியோவிலே நாள்¸ நேரம் எல்லாம் தெளிவாக இருந்தது. தனக்குமே அங்கு சென்றது நன்றாக நினைவிலிருக்க “பின்னே.. எப்படி அவளை மணந்தீர்கள்?” என்று கேட்டாள்.
“இப்போது நம்புகிறாயல்லவா?” என்று அவன் உறுதிபடுத்திக் கொள்வதற்காகக் கேட்க “ம்ம்…” என்று தலையாட்டிவிட்டு “சொல்லுங்கள்” என்றாள்.
மனைவி தான் சொன்னதை நம்புகிறாள் என்றதும்¸ அந்த நிகழ்வைப் பற்றி¸ அந்த… முதல் மனைவியைப் பற்றி பேசத் தொடங்கினான்.
“உன்னைப் பார்த்ததுமே… அந்த இடத்தில் வைத்தே உன்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால்… உன்னுடன் வந்திருந்த உன் வகுப்புத் தோழர்¸ தோழியர் ஒருவரும் வாய் திறக்கவில்லை. யாரோ ஒரு பெண் ‘வித்யா’ என்று அழைத்ததால் உன் பெயர் ‘வித்யா’ என்று அறிந்துகொண்டேன்”
“நான் விசாரிப்பதைப் பார்த்த ஒரு பெரியவர் என்னிடம் வந்து உன்னை அவருக்குத் தெரியும் என்று சொல்லி எதற்காக விசாரிக்கிறேன் என்று கேட்டார். திருமணம் செய்ய ஆசைப்படுவதாக நான் சொன்னதும்¸ என்னைப் பற்றி விசாரித்தார். அந்த சமயத்தில்தான் அப்பா இறந்திருந்ததால் நான்தான் தொழிலை கவனித்துக் கொண்டிருந்தேன்¸ அதை சொன்னதும் நீயிருக்கும் இடத்துக்கு அழைத்துப் போவதாக கூட்டிச் சென்றார். அங்கே போன பிறகுதான் சொன்னார்… அவர் அவளுடைய அப்பா என்பதை…” என்றதும்¸ நிமிர்ந்து பார்த்தவளுக்கு கணவன் சொல்லப்போவதும் ஏமாந்திருப்பதும் புரிந்துவிட்டது.
“போனதுமே ‘என் மகளை உங்களுக்கு மணமுடித்துத் தர சம்மதம்’ என்று சொல்லி¸ ‘திருமணம் செய்து அழைத்துப் போகிறீர்களா?’ என்று கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாகிப் போனது. என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கவில்லை… நான் சொன்னது மட்டும்தான். அத்தோடு நானும் காதலித்து திருமணம் செய்ய எண்ணியிருந்ததால் தயங்கினேன்… எனக்கு விருப்பமிருந்தும் தயங்குவதை புரிந்துகொண்டவர்¸ தன் மகளுக்கு நிறைய வரன்கள் வருவதாகவும்… சீக்கிரமே மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லவும் எங்கே நீ எனக்குக் கிடைக்காமல் போய்விடுவாயோ என்றெண்ணி உடனே சம்மதித்துவிட்டேன்”
“அங்கிருந்தே அம்மாவுக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு கோவிலில் திருமணம் செய்த பிறகுதான் இங்கு அழைத்து வந்தேன். நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்… விரும்பிய பெண்ணையே மணந்த சந்தோஷம் எனக்கு. அவளும் ஆரம்பத்தில் நன்றாகத்தான் நடந்துகொண்டாள். அதன் பிறகுதான்… தன் குணத்தை காட்டத் தொடங்கினாள். அம்மாவையும் என்னையும் மதிக்கமாட்டாள். அவள் கேட்டதை வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் வீட்டை ரெண்டு பண்ணிவிடுவாள். அப்போது நான் வருத்தப்பட்டேன்¸ கொஞ்சநாள் பொறுத்துத் திருமணம் செய்திருக்க வேண்டுமோ… என்று. உன்னைப் பார்த்தது ஒரே ஒருநாள் தான். அந்த உன்முகம் எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்¸ அந்த நேர மோகத்தில் தலையாட்டி… தாலி கட்டிவிட்டோனோ… என்று வருந்தினேன். அப்போதுதான் பெண்களுக்கு சராசரி திருமண வயதிருப்பதுபோல¸ ஆண்களுக்கு இருபத்தி ஆறிலிருந்து இருபத்தி எட்டு என்பது என் கருத்தாகிப்போனது”
“அவள்… உங்கள் முதல் மனைவி… எப்படி… அவளுக்கு என்னானது?” என்று கேட்டாள் தயங்கி. ‘அவளுக்கு என்னானது என்றே தெரியவில்லையே! அவன் அம்மாவுக்கும் தெரியவில்லை… அப்படியானால் விவாகரத்தாகியிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படியிருந்தால் அதை இவன் அவருக்கு சொல்லவில்லை’
“சொல்கிறேன்… ஒன்றுவிடாமல் உன்னிடம் சொல்லிவிட வேண்டுமென்றுதான் முதலிலிருந்தே சொல்லத் தொடங்கினேன்” என்று வறண்ட புன்னகையொன்றை வெளியிட்டவன் தொடர்ந்தான்.
“அவளுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நிறைவே இருக்காது¸ கேட்டுக் கொண்டே இருப்பாள். கேட்டது கிடைக்கவில்லையென்றால் கையில் கிடைப்பதை வீசிவிடுவாள். விரும்பி மணந்த பெண் அவசரப்பட்டு கைநீட்டிவிடக்கூடாது என்று கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்வேன். அந்த சமயத்தில்தான் நிவேதா வந்தாள். அந்த மாதங்களில் ரொம்பவும் பொறுமையாக நடந்துகொண்டாள். குழந்தைப் பேறுக்குகூட தாய்வீடு வேண்டாம் என்றுவிட்டாள். எனக்கும் அடிப்படை வசதி கூட இல்லாத அந்த வீட்டிற்கு அனுப்ப மனமில்லை. அங்கேயும் அவள் அப்பாவைத் தவிர வேறு யாரும் கிடையாதா… அதைச் சொல்லி மறுத்துவிட்டோம். நிவேதா பிறந்த ஒருமாதம் வரை நன்றாக இருந்தவள்… அந்த சமயத்தில் அவளுடைய அப்பா இறந்துவிட தன் துக்கத்தை இந்த மாதிரி காட்ட நினைத்து மீண்டும் தொடங்கிவிட்டாள். கார் வேண்டுமென்று கேட்டாளென்று அவளுக்காக ஒரு கார் வாங்கிக் கொடுத்தேன். நன்றாக ஊரைச் சுற்றிவிட்டு நடுராத்திரியில் வீடு திரும்பியதைப் பார்த்து ‘இவளை எங்கேடா பிடித்தாய்?’ என்று வெறுத்தபடி அம்மா ஒருமுறை கேட்டார்கள்”
“எனக்குமே அன்று பார்த்த அழகுமுகமா இது? என்றுதான் தோன்றியது. நாலுநாள் ராத்திரி லேட்டாகி வருவதைப் பார்த்த அம்மா அவளைக் கூப்பிட்டு அட்வைஸ் செய்தார்களென்று அம்மாவையும் நன்றாகத் திட்டிவிட்டாள். அதற்குப் பிறகு அம்மா அவளிடம் அதிகமாக எதையும் பேசிக் கொள்வதில்லை” என்றவுடன் “ஓ..!! அதற்குத்தான் அத்தை அன்றைக்கு அப்படி சொன்னார்களா?” என்று வித்யா சொல்லவும் “எப்படி?” என்று கேட்டான்.
“எனக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்காது என்று…”
“ம்…” என்று தலையாட்டிவிட்டு தொடர்ந்தான். “உளவியல் பிரச்சினையோ என்றெண்ணி டாக்டரிடம் கூட்டிப் போனேன். குழந்தை பிறந்ததால் தன் அழகு கெட்டுப் போய்விட்டதாக சில பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும்… அதை எப்படி வெளிக்காட்டுவதென்று தெரியாமல் இப்படி நடந்துகொள்வார்கள்… எங்காவது சுற்றுலா மாதிரி அழைத்துப் போங்கள்” என்று சொல்லவும் “அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் சென்றேன்..” என்றவன் நிறுத்தி மனைவியின் முகம் பார்த்தான்.

Advertisement