Advertisement

அத்தியாயம் – 23
பதிலை அறிய ஆவலாக தன் முகம் நோக்கியவளைப் பார்த்து சிறு புன்னகையொன்றை உதிர்த்த கோகுல் “வித்யாவோட பெரியம்மா மகன் சரவணன்தான் இவளைக் கடத்தி வைத்திருக்குமிடம் பற்றி தகவல் சொன்னார்…” என்றதும்¸ வித்யா “அண்ணனா..! அண்ணனுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாளென்றால் “வித்யாவுக்குத்தான் சொந்தத்தில்கூட அண்ணனே கிடையாதே!” என்று கேட்டார் கனகம்.
“உங்களுக்கு நான் அதுபற்றி அப்புறமா சொல்கிறேன்மா…” என்றவன்¸ மனைவியைக் காப்பாற்றியதைப் பற்றி கூறினான்.
“அந்த கட்டிடம் இருந்த பக்கமாக ஏதோ வேலையாக சென்ற சரவணன் இந்த பிரபாகரனும் இன்னொருவனுமாக சேர்ந்து கட்டிடத்திலிருந்து வெளி வருவதைப் பார்த்திருக்கிறார். ஜெயிலில் இருந்தவனுக்கு இங்கென்ன வேலையென்று அவர்கள் சென்றதும் போய் ஒவ்வொரு அறையாக பார்த்திருக்கிறார். கை¸ கால் கட்டப்பட்டு ஒரு பெண் படுத்திருப்பதைக் கண்டதும் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டார்.  ஆள் கடத்தல் கேஸ் என்பதால் எல்லா ஸ்டேஷனுக்கும் தகவல் அனுப்பப்பட்டிருக்க கமிஷ்னர் ஆபீசுக்கும் தகவல் வந்தது…”
“சரவணனை அவன் திரும்பி வருகிறானா என்று மறைந்திருந்து பார்க்கச் சொல்லிவிட்டு கமிஷ்னர் எனக்கு தகவல் தந்தார். பத்துமணிக்கு இவளை அனுப்புவதாக திட்டமிட்டிருப்பான் போல… நாங்களும் அங்கு சென்ற பிறகுதான் வந்தான். மறைந்திருந்த போலீசார் அவனோடு இருந்தவனையும் சேர்த்துப் பிடித்துவிட்டார்கள். அதன்பிறகும் இவளை நேரில் பார்க்கும்வரை என்னுயிர் என்னிடமில்லை! ஏற்கனவே அவனைப் பற்றி தெரிந்ததால் மனம் பதறிக் கொண்டே இருந்தது வீடு வந்து சேர்ந்த பிறகுதான் நிம்மதியாக இருக்கிறது…” என்று அவன் ரிலாக்ஸ்ஸாக சொல்ல¸ கனகம் மீண்டும் கேட்டார்.
“நீயே சொல்வதாக சொன்னாய்தான்… நீ பேசி முடித்துவிட்டதால் இப்போது கேட்கலாம் என்று நினைக்கிறேன். யார் அந்த பிரபாகர்? அவன் ஏன் நம்ம வித்யாவை கடத்த வேண்டும்? எனக்குத் தெரிந்து வித்யாவுக்கு சொந்தமென்று யாரும் கிடையாது? அந்த சரவணன் யார்?” என்று தனக்குத் தெரிய வேண்டிய எல்லாவற்றையும் கேட்டுவிட்டார்.
இந்த விஷயத்தை கடைசிவரை தாயாருக்கும் மகளுக்கும் தெரியவிடக்கூடாது என்று நினைத்திருந்தவன் “அம்மா…” என்று தயங்கிவிட்டு¸ ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தொடங்கினான்.
“நிவேதா ஸ்கூல் போயாச்சாம்மா?” என்று கேட்டு மகள் இல்லையென்பதை உறுதி செய்துகொண்ட பின் பேசலானான்.
முதலில் மனைவியிடம் திரும்பி “நீ ஏன் அவன் கூப்பிட்டானென்று வெளியே போனாய்?” என்று கேட்டான்.
தன்னிடம் வந்து கடிதத்தைக் கொடுத்த சிறுவன் தந்தது யாரென்று கேட்டதற்கு பதிலளிக்காமலே ஓடிவிட கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவளுக்கு ‘ரொம்ப முக்கியம் சீக்கிரம் வெளியே வா வித்யா’ என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும்¸ தனக்குத் தெரிந்த யாருமோ என்றெண்ணி பதற்றம் உண்டாகிவிட அவசரமாக வெளியே சென்றுவிட்டதைக் கூறினாள்.
“இனிமேல் இந்த மாதிரி மொட்டையாக வருவதைப் பார்த்துவிட்டு அவசரப்பட்டு எதுவும் செய்துவிடக்கூடாது” என்று மனைவியிடம் வலியுறுத்திவிட்டு தாயாரிடம் திரும்பினான்.
“அம்மா… நான் சொல்லப்போற விஷயத்தைக் கேட்டு என்மேல் கோபப்படக் கூடாது…” என்று சொல்லி வித்யாவை மகளது ஸ்கூலில் பார்த்ததில் தொடங்கி திருமணம் வரை நடந்த எல்லாவற்றையும் கூறிவிட்டான்.
“இதை ஏன் நீ முதலிலே சொல்லவில்லை?” என்று கேட்டவர் “நிவேதா கூட சொல்லவில்லையே!” என்று வியந்தார்.
“அது… நான்தான் சொல்ல வேண்டாம் என்றேன். உங்களுக்கு சர்ப்பிரைஸாக இருக்கும் என்று சொல்லிவிட்டதால் அவளும் வீட்டில் வித்யா பற்றிய பேச்சை எடுப்பதை விட்டுவிட்டாள்”
கடைசியாக மகன் சொன்னவற்றை காதிலே வாங்காமல்… ஏற்கனவே அவன் சொன்னதையெல்லாம் உள்வாங்க சற்றுநேரம் எடுத்துக் கொண்டு “அப்படின்னா…! இது ‘நம்ம வித்யா’ இல்லையா?” என்று கேட்டார்.
‘வேறுயாரோ என்பதால்தான் அவ்வளவு அமைதியாக நடந்து கொண்டிருக்கிறாள்… முதலிலே இந்தப் பெண்ணை மணந்து கொண்டிருக்கலாம். அதைவிட்டு அந்த பிசா… அவளை மணந்து எவ்வளவு கஷ்டம்?’ என்று அவரது சிந்தனை ஓடியது.
தாயாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அறிந்ததால் “அம்மா எப்பவும் ‘இந்த வித்யா’ தான் உங்கள் மருமகள்” என்று ‘இந்த வித்யா’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துக் கூறியவன் “என் மனைவியும் இவள்தான்” என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு தங்களறை சென்றான்.
முதல்நாள் திருமணத்திற்குக் கட்டிச் சென்ற பட்டுப் புடவையிலே களைத்துப் போய் இருந்தவளை குளித்து வரச் சொன்னான்.
தன் தாயாரிடம் சொன்னதன் தொடர்ச்சியாக தன்னிடமும் கணவன் பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தவள்¸ அவன் குளிக்கப் போக சொன்னதும் சற்று வருத்தமானாலும் அதை மறைத்தவாறு சென்றாள்.
இரவு முழுவதும் அமைதியற்று மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்ததால் களைப்புற்றிருந்தவன் தானும் குளித்து வந்தான். அவன் வந்த சற்றுநேரத்திலே வித்யாவும் வர இருவருமாக சென்று உண்டு வந்தனர்.
அதன் பின்னராவது அவன் பேசுவான் என்று எதிர்பார்த்தால் “தூக்கம் வந்தால் தூங்கு வித்யா…” என்று சொல்லிவிட்டு கட்டிலில் படுத்தவன் உடனே தூங்கியும்விட்டான்
சோபாவிற்கு செல்லாமல் அதே கட்டிலின் மறுஓரம் படுத்தவளுக்கு தூக்கம் வராதுபோக எழுந்தவள்¸ கணவனை நெருங்கி அமர்ந்து அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்போதும் நீட்டாக உடையணிந்து தலைமுடி களையாமலிருக்கும் அவனைக் காலையில் கண்ட கோலம் நினைவுக்கு வந்தது.
முடியெல்லாம் கலைந்து கசங்கிய சட்டையுடன்… ‘ரொம்பவே தவித்திருப்பான் போல!’ என்றெண்ணியவளுக்கு இப்போதும் களைந்து நெற்றியில் பரவிக் கிடந்த அவனது கேசத்தைக் கண்டதும்… அதை ஒதுக்குவதற்காகத் தன் கரங்கள் நீளவும் ஆச்சர்யமாகிப் போனது. புன்னகையுடனே கரத்தை தாழ்த்திக் கொண்டாள்.
கணவன் தன்னை அவமானப் படுத்தியதையெல்லாம் மறந்து அவனுடன் மனம் ஒன்றி வாழ ஆசைப்படுகிறாள் என்பது உண்மையே! அவனது முதல் மனைவியைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோதும் அவனை விரும்புகிறாள் என்றால்… அவன் நிச்சயம் அவள் மனதுக்குள் புகுந்திருக்க வேண்டும். ஆனால்… இது எப்படி நடந்தது? திருமணம் செய்தபோதும் இவனைப் பழிவாங்க வேண்டுமென்று எண்ணித்தானே செய்தேன்! எப்படி?
முதல்முறை கோகுலைப் பார்த்ததும் அசையாமல் நின்றது நினைவுக்கு வந்தது. அன்றைக்கே இவனை ஐந்து வயது குழந்தையின் தந்தை என்று எண்ண முடியவில்லை. பெண் பார்ப்பதற்காக அந்த பிரபாகரன் வந்திருந்தபோதும் கூட இவனுடன் அவனை ஒப்பிட்டுப் பார்த்து… இவனைத்தானே உயர்வாக எண்ணத் தோன்றியது. அதெல்லாம்கூட இவன் மீது உண்டாகியிருந்த ஈர்ப்பினாலாகத்தான் இருக்கும்.
திருமணத்தன்று மணமேடையில் வைத்து ‘விர்ஜினிட்டி டெஸ்ட்’ பற்றி பேசியிருந்தால் கோகுலே ஒதுங்கியிருப்பான். அன்றைக்கு அதைச் சொல்லாமல் அவனோடான திருமணத்தை எதிர்பார்த்ததால்தான்… திருமணத்தை நிறுத்துவதாகச் சொன்னவன் வருகிறானா என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்.
திருமணத்திற்குப் பின்னர் அவ்வப்போது அவளிடம் சில அத்துமீறல்களை அவன் செய்திருந்தாலும்… அவன் மீது வெறுப்பு வரவில்லையே! அவன் தொடுவது பிடிக்கவில்லையென்றால் வெறுக்க வேண்டும். ஆனால்… அந்த மாதிரி எதுவும் தோன்றவில்லையே!
அதிலும் அவள் குடும்பத்தாரை இழந்த ஓராண்டு நிறைவின்போது எவ்வளவு பரிவாக நடந்துகொண்டான். எப்போதும் உனக்கு நானிருக்கிறேன் என்று எவ்வளவு தெளிவாகக் காட்டினான். அந்த நாளுக்குப் பிறகு இன்றுவரை விழிகள் ஏக்கத்தை சுமந்திருந்தாலும் அவளை நெருங்க முயலவுமில்லை.. எந்த உறவுக்கும் வற்புறுத்தவுமில்லை. இந்த கட்டிலில்கூட அதீத களைப்பினாலோ… அன்றி காலையில் கட்டப்பட்டிருந்த கை¸ கால்களை அவிழ்த்துவிட்டதும் தானாக ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டதாலோ தான் இருக்கக்கூடுமே தவிர இவளை எந்த உறவுக்கும் வற்புறுத்தும் நோக்கம் இராது.
‘என்ன இருந்தாலும் அந்த முதல் மனைவியைப் பற்றி அறிந்து கொள்ளாமல்… எப்படி மனம் ஒன்றி வாழ முடியும்? இதற்கான தீர்வை சொல்லுங்களேன் கோகுல்… ப்ளீஸ்!!’
மென்மையாகத் தன் இதழ்களை அவன் நெற்றியில் பதிக்கவும்¸ அவனிடம் அசைவு தெரிய விலகிச் சென்று படுத்துக் கொண்டாள்.
படுத்தவள் நன்றாகத் தூங்கிவிட்டு விழித்தபோது மணி ஏழு.
மறுபுறம் கோகுல் இருக்கிறானா என்று பார்த்தாள்… அவன் இன்னமும் தூக்கத்திலே இருக்க¸ எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள். ‘நிவேதா என்னை எழுப்பவில்லையே!’ என்றெண்ணியவாறு மகளை காணச் சென்றாள்.
தன்னறையில் அமர்ந்து படமொன்றை வரைந்து கொண்டிருந்தவளை தொந்திரவு செய்ய விரும்பாமல் அருகில் சென்று பார்த்தாள். அவர்களது குடும்பப் படத்தை வரைந்துகொண்டிருந்தாள் அவள். ஆறு பொம்மைகளை வரைந்து அம்மா¸ அப்பா¸ பாட்டி¸ நிவேதா¸ தம்பி¸ தங்கை என்று எழுதியிருந்தாள்.
மகளை முத்தமிட்டவள் “நிவிக்குட்டி ஏன் அம்மாவை எழுப்பவில்லை?” என்று கேட்டாள்.
“நீங்க டயர்டா இருப்பீங்க எழுப்ப வேண்டாம்னு பாட்டி சொன்னாங்க…” என்றவள் “அம்மா காய்ச்சல் சரியாயிடிச்சா?” என்று கேட்டாள்.
“தூங்கி எழுந்ததும் காய்ச்சல் ஓடியே போச்சு” என்று சொல்லி சிரித்துவிட்டு “கீழே போகலாமா?” என்று கேட்டு மகளை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.
மாமியாரின் அறைக்குச் சென்றால்¸ அவர் அங்கில்லை. சமையலறையில் அவர் குரல் கேட்க¸ மகளை சாப்பாட்டறையில் அமர்த்திவிட்டு அங்கே சென்றாள்.
“நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டபடியே சென்றாள்.
“இல்லைம்மா… நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்றுதான் நான் நிவியிடம்கூட உன்னை எழுப்பக்கூடாது என்று சொல்லியிருந்தேன். நீ என்னடாவென்றால் வேலை செய்யட்டுமா என்று வந்து நிற்கிறாய்…” என்றவர்¸ பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போகுமாறு வேலைக்காரியிடம் சொல்லிவிட்டு மருமகளிடம் பேசினார்.
“வித்யா… காலையில் உன்னைப் பிரித்துப் பேசியதாக நினைத்துவிடாதே!” என்று காலையில் அவளை ‘நம்ம வித்யா இல்லையா?’ என்று கேட்டதற்காகப் வருத்தம் தெரிவிப்பது போலப் பேசியவர் “அவளைப் பற்றி எதைச் சொல்வதாக இருந்தாலும் கோகுல்தான் உன்னிடம் சொல்ல வேண்டும். உன் குணத்தை வைத்தே நீ அவளில்லை என்பதை அறிந்திருக்க வேண்டும். ஆனால்… நீ மாறியிருப்பதாக நினைத்தேனே தவிர ஆளே வேறென்பதை கண்டுகொள்ள முடியவில்லை” என்று தன் மனதிலிருந்ததைக் கூறியவர் “வித்யா… உன.. உனக்கு இரண்டாம்தாரம் என்று வருத்தமா?” என்று தயங்கியவாறு கேட்டார்.
“ஐயோ… அப்படியெல்லாம் இல்லை அத்தை!” என்று மறுத்தவளிடம் “இல்லைம்மா… அந்த வருத்தம் இல்லையென்றாலும் ஐந்து வயது மகளுக்கு தகப்பன் என்றாவது தோன்றத்தானே செய்யும்?” என்று கேட்டார் அவர்.
“அத்தை… எனக்கு முதலில் நிவேதாவைத்தான் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியும். நிவேதாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும்… அப்போதே நிவி என்னை ‘அம்மா’ என்றுதான் கூப்பிடுவாள் தெரியுமா? அப்புறம் உங்கள் மகன்… அவரை… அவரை..” என்று தடுமாறியவள்
“அவரை எனக்கு அவருக்காகவே பிடிக்கும்” என்று சொல்லவும் நிம்மதியுற்ற கனகம் “நல்லதும்மா… எங்கே உனக்கு அந்த வருத்தம் இருந்ததோ என்று ரொம்பவும் பயந்திருந்தேன். என் மகனை நல்லா பார்த்துக்கோம்மா… இப்போ வா சாப்பிடப் போகலாம்” என்று சொல்ல இருவரும் சாப்பிட வந்தனர்.
மகன் இல்லையென்பதைக் கண்டதும் “வித்யா… கோகுல் இன்னும் எழும்பவில்லையா?” என்று கேட்க “ஆமா அத்தை… நான் அவருக்கு சாப்பாடு ரூமுக்கே எடுத்துப் போய்விடுகிறேன்” என்று சொல்ல மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லக்கூடாது என்பதால் நிவேதா கார்ட்டூன் புரோகிராம் ஒன்றைப் பார்க்க அமர்ந்துவிட¸ கனகம் மருமகளது குடும்பம்¸ படிப்பு¸ என்று ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து கொண்டார்.
பேச்சிலே ஒருமணி நேரம் கடந்துவிட மாமியாரைத் தூங்கச் சொல்லிவிட்டு¸ வேலையாட்களைக் கொண்டு வீட்டுக் கதவை லாக்பண்ணி¸ விளக்குகளையெல்லாம் அணைத்து¸ கணவனுக்கான சாப்பாட்டை கையில் எடுத்துக் கொண்டு மகளுடன் படியேறினாள்.
அறையில் விட்டதும் “அம்மா எனக்கு கதை சொல்லுங்கம்மா…” என்று கேட்க¸ மூடிய சாப்பாட்டை அந்த அறையிலே வைத்துவிட்டு விக்கிரமாதித்தன் கதை சொல்லத் தொடங்கினாள். கதை முடியும் முன்பே நிவேதா தூங்கிவிட¸ அவளுக்குப் போர்த்திவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
தங்கள் அறைக்குச் சென்று இன்னமும் துயிலில் இருந்தவனை கோகுல் என்றழைத்து எழுப்பினாள். அவன் மறுபுறம் புரண்டு படுத்து “என்ன வித்யா?” என்று கேட்டானேயொழிய எழவில்லை.
“மணி பத்தாகுது… எழுந்திரிங்க… சாப்பிட்டுவிட்டுப் படுங்க…” என்று மீண்டும் எழுப்ப மனமின்றியே எழுந்தவன் சென்று உடல் கழுவி வந்தான்.
சாப்பிட அமர்ந்ததும் “நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா?” என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டவன் சாப்பாட்டை முடித்து¸ மனைவி கொடுத்த பாலைக் குடித்து அவளையும் குடிக்கச் செய்து¸ பாத்திரங்களை கீழே வைப்பதற்காக அவள் செல்லவும் அவளது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

Advertisement