Advertisement

அத்தியாயம் – 22
உறவினர் கூட்டம் முழுவதாக மறைந்ததும் பேத்தியுடன் அமர்ந்து மகனை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயாரிடம் சென்று “அம்மா வித்யாவை எல்லா இடத்திலும் தேடிவிட்டேன் காணவில்லை..! யாரும் கடத்தியிருப்பார்களோ..!” என்றான் பயத்தை வெளிக்காட்டிவிடாதவாறு.
“என்னப்பா சொல்றே!!” என்று அதிர்ந்தவர் “அப்படியெல்லாம் இருக்காது… நானும் தேடினேன்… எதுக்கும் இன்னொரு முறை தேடிவிடலாம்” என்று தாயார் சொல்ல¸ சரி என்று நிவேதாவை சமையல்காரனிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு இருவருமாக சேர்ந்து தேடினர்.
அப்போதும் இருவருமே இல்லையென்று திரும்ப “வெளியே கூட பார்த்துட்டேன்மா… நீங்க நிவேதாவை கூட்டிட்டு போங்க. நான் இந்த பக்கம் வித்யாவோட போட்டோவைக் காட்டி விசாரிக்கிறேன்” என்றவன்¸ தாயாருக்கு கார் அரேஞ்ச் பண்ணிவிடுமாறு அந்த பொறுப்பையும் வேறொருவரிடமே ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.
நடந்தவனை நிறுத்தி “என்ன கோகுல்… மறுபடியும் உங்களுக்குள்ள பிரச்சினையா? வித்யா உன்னை விட்டுப் போய்விடுவாளா?” என்று கேட்டார் கனகம் கலக்கத்துடன்.
“அப்படி எதுவும் இல்லைம்மா… எங்களுக்குள்ள பிரச்சினையே கிடையாது. ‘என் வித்யா’ என்னைவிட்டு எங்கேயும் போகமாட்டாள்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் “நீங்க போங்க நான் அவளை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு சாலையை நோக்கி ஓடினான்.
சாலையோரத்திலிருந்த கடைக்காரர்களிடம் வித்யாவின் புகைப்படத்தைக் காட்டி கேட்க¸ பலர் தெரியவில்லை என்றே சொன்னனர்.
வலதுபக்கமிருந்த கடைமுழுவதும் ‘தெரியவில்லை’ என்ற பதிலே கிடைக்க¸ அடுத்த பக்கம் சென்று விசாரித்தான். அங்கும் பலர் அதையே சொல்ல¸ பதற்றத்தை மறைத்தபடி விசாரித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒருவரிடமிருந்து “மினிவேனில் வந்த ஒருத்தர் கூட்டிட்டுப் போனார்” என்று கிடைத்த பதிலால்¸ தேடுவதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டதென்பது ஓரளவு நிம்மதியைக் கொடுத்தது.
இன்னும் வித்யா கிடைத்துவிடவில்லை என்பது அவனது வேகத்தைத் தூண்ட “வண்டி நம்பர் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.
அவர் இல்லையென்றதும் முகம் வாடியவன் “அழைத்துப் போனவனை நன்றாகப் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.
விற்பனை சமயத்தில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து எரிச்சலானாலும்… கேட்டுக் கொண்டிருப்பவனது செல்வ நிலையையும் பதற்றத்தையும் கவனித்து நன்றாக யோசித்து “ஆமாம்.. நன்றாகவே பார்த்தேன்” என்று பதிலளித்தவனிடம்¸ அழைத்துச் சென்றவனது அடையாளத்தைக் கேட்டறிந்து கடைக்காரனுக்கு சில நூறைக் கொடுத்துவிட்டு போலீஸ் கமிஷ்னருக்கு போன் செய்து பிரபாகரனைப் பற்றி விசாரித்தான்.
கோகுலை ஏற்கனவே அறிந்திருப்பது மட்டுமின்றி¸ அந்த பிரபாகரனைப் பிடிப்பதற்கு துணையாக இருந்ததே இவன்தான் என்பதால் அவர் தயக்கமின்றி பேசினார்.
“இந்த மாதிரி தப்பு செய்றவங்களுக்கு உடனே தண்டனை கொடுக்காமல் கேஸை தள்ளிப்போடுவது மட்டுமல்லாமல்… ஜாமீன் அல்லது பரோலில் விடுவித்து அவர்கள் அடுத்த தப்பு செய்வதற்கு சட்டமே வழிவகுத்துக் கொடுக்கிறது” என்றவரிடம்  “நீங்கள் சொல்வது புரியவில்லை சார்” என்றான் கோகுல்.
“ஜாமீன்ல வெளியே வந்துவிட்டான்” என்றார் அவர் தெளிவாக¸ திடீரென்று அவன் விசாரிப்பதை உணர்ந்து ஏனென்று கேட்பதற்குள் “என்ன ஜாமீன்லயா??” என்று கோகுல் அலறிவிட¸ “அங்கே ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டார் பொதுமக்கள் மீது அக்கறையுள்ள போலீஸ் அதிகாரியாக.
அவன் அவசரமாக “என் மனைவியைக் காணவில்லை” என்று சூழ்நிலையை அப்படியே சொல்லிவிட “ஓ.கே. நான் நேரில் வருகிறேன்” என்றவர்¸ “அதுக்கு முன்னால எனக்கு சில டீடெய்ல்ஸ் கிடைத்தால் நாம உடனே தேட ஆரம்பிச்சிடலாம்” என்று சொல்லி “என்ன வண்டி? நம்பர் தெரியுமா?” என்று கேட்டார்.
“மினிவேனில்” என்றவன் “வண்டி எண்ணை யாரும் பார்க்கவில்லை” என்றவுடன்¸ “உங்க மனைவிகிட்ட செல்போன் இருக்கா?” என்று கேட்டார்.
“இருக்கு சார்… நான் நிறைய தடவை முயற்சி பண்ணிவிட்டேன்… நாட் ரீச்சபிள்னு வருது” என்று சொல்ல¸ மீண்டும் ஒருமுறை அவனை முயற்சி பண்ண சொன்னவர்¸ அவன் மறுபடி அழைப்பதற்குள் பிரபாகரனுடைய போட்டோவைக் எடுத்துவரச் செய்து இந்த நபர் மினிவேனில் என்று போட்டோவைக் கொடுத்து எல்லா செக் போஸ்ட்டிலும் சோதனையிட உத்தரவிட்டார்.
அதே பதிலே கிடைத்ததாக கமிஷ்னரை மீண்டும் அழைத்து சொன்ன கோகுல்¸ அவரை நேரில் சந்தித்து பிரபாகரனுடன் அன்று வந்திருந்தவர்களின் அட்ரஸை பெற்றுக்கொண்டு அவர்களை சந்திக்கச் சென்றான்.
முதலில் சந்தித்த மூவரும் ‘அந்த ஆளோட சகவாசம் வேண்டாமென்று விட்டுவிட்டோம்’ என்ற பதிலையே மாற்றி மாற்றி சொல்ல¸ கலக்கம் அதிகரித்தாலும் தன் முயற்சியை விட மனமற்று மற்றவர்களை சந்திக்கச் சென்றான்.
அவ்வப்போது கமிஷ்னருக்கும் போன் செய்து தகவல் கேட்டுக் கொண்டவனுக்கு அவர் ஒரு தகவல் கூறினார். வித்யாவின் செல்போன் நம்பரை டிரேஸ் செய்ததில் ஒரு விஷயம் தெரிந்தது. அந்த கடத்தல்காரன் வித்யாவைக் கடத்திய ‘உடனே’ அதாவது… மண்டபத்தின் வாசலிலே செல்போனிலிருந்து சிம்கார்டை வெளியே எடுத்து ‘போன்¸ சிம்கார்டு’ இரண்டையும் அந்த இடத்திலே தனித்தனியாகப் போட்டுவிட்டான் என்பது.
வருத்தத்துடன் தகவலுக்கு நன்றி தெரிவித்து போனை வைத்தவனுக்கு தாயாரிடமிருந்து அழைப்பு வந்தது.
‘மருமகள் கிடைத்துவிட்டாளா?’ என்று நேரடியாக கேட்காமல் “அம்மாகிட்ட போகணும்னு சொல்லி நிவேதா அழுதுட்டே இருக்குறாப்பா… நீங்க ரெண்டுபேரும் எப்போ வருவீங்க?” என்று கேட்ட தாயாரிடம் “இன்னும் வித்யா கிடைக்கலைம்மா… நான் சீக்கிரமே கண்டுபிடிச்சி கூட்டிட்டு வந்துவிடுவேன்” என்றான்.
அழுது கொண்டிருந்த பேத்தியிடம் பேசி சமாதானப்படுத்துமாறு கனகம் கொடுத்துவிட அவன் ஆரம்பிப்பதற்குள் “அப்பா… அம்மாவை கூட்டிட்டு வாங்கப்பா. எனக்கு அம்மாவை உடனே பார்க்கணும்” என்று அவள் தொடங்கிவிட்டாள்.
அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருப்பதாகவும் காலையில் அழைத்து வந்துவிடுவதாகவும் சொன்னபின்னரே அவள் சமாதானமாக¸ தாயாரிடம் கொடுக்கச் செய்து ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னவன்¸ இன்டர்காம் மூலம் வேலைக்காரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு வைத்தான்.
வித்யாவுக்கு தலை வலிப்பது போலிருந்தது.
மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள். ஒரே இருட்டு… சுத்தமாக வெளிச்சம் இல்லை. எழுவதற்காக கை¸ கால்களை அசைத்தால்.. முடியவில்லை… கட்டப்பட்டிருக்கிறது.
உடலை அசைக்க முடியவில்லை என்றதும் “காப்பாத்துங்க.!! காப்பாத்துங்க.!!” என்று கத்தினாள்.
கத்தத் தொடங்கிய சில நொடிகளிலே கதவைத் திறக்கும் சத்தம் கேட்க¸ யாரென்று பார்ப்பதற்குத் தயாராக இருந்தாள்.
“ம்… மயக்கம் தெளிந்துவிட்டதா..?” என்று கேட்டபடி உள்ளே வந்தவனைப் பார்த்ததும் “பிரபாகரன் நீயா..!!” என்று அதிர்ந்தாள். அதிர்ச்சியிலிருந்து விடுபட்டதும் “என்னை எதுக்குடா கடத்திட்டு வந்தாய்?” என்று கேட்டாள்.
“உன்னை எதுக்கு கடத்தினேன்…??” என்று யோசிப்பது போல நடித்தவன் “உன் கணவனை பழிவாங்கத்தான்” என்று காரணத்தை உடனே ஒத்துக் கொண்டான். 
“ஏன் பழிவாங்க நினைக்கிறேன் என்று தெரியுமா?” என்று கேட்டவன்¸ அவள் ஏனென்று கேட்காமலே கடத்தியதற்கான காரணத்தையும் சொல்லத் தொடங்கிவிட்டான்.
“அவன் உன்னைத் திருமணம் செய்ய நினைத்திருந்தால் வேறு எந்த வழியிலாவது செய்திருக்க வேண்டும். அதைவிட்டு மண்டபம் வரை கொண்டு வந்துவிட்ட என் திருமணத்தைக் கெடுத்து¸ என்னையும் போலீசில் பிடித்துக் கொடுத்து… பாவி. எத்தனை வருடமாக போலீசுக்கு தண்ணி காட்டினேன் தெரியுமா? எத்தனை பெண்களை அப்படி விற்றிருக்கிறேன் என்றுதான் தெரியுமா? அதன் மூலம் எவ்வளவு வருமானம்..! இதெல்லாம் உங்களுக்கென்ன தெரியும்!”
என்னவோ அவனது செயற்கரிய நற்செயல் அவர்களால் தடைபட்டதுபோல பேசிக் கொண்டே போனான்.
“என்னிடம் இருந்த பணத்துடன் சேர்த்து உன்னை விற்பதன் மூலம் கிடைப்பதையும் எடுத்துக் கொண்டு வேறெங்காவது போய்விட வேண்டுமென்று நினைத்திருந்தேன்… என் திட்டத்தையெல்லாம் பாழடித்துவிட்டு… அவன் உன்னோடு சந்தோஷமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான். என்னை மாட்டிவிட்டதற்கு தண்டனையாக அவன் கொஞ்சமாவது துடிக்க வேண்டாம்?” என்று பேசிக் கொண்டே போனவன் விழிகள் தெறித்துவிடும்போல பயத்தால் தன்னையே வெறித்துக் கொண்டிருந்தவளிடம்¸
“என்ன பார்க்கிறாய்? அன்று அவ்வளவு அமைதியாக இருந்தவன் இன்று இப்படிப் பேசுகிறானே என்றா?” என்று கேட்டான்.
அவள் பயத்துடனே பார்த்துக் கொண்டிருக்க “இதுதான் நான்! என் உண்மை உருவம் இதுதான்!” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு “நன்றாக கேட்டுக் கொள். ஏற்கனவே உனக்கு என்னைப்பற்றி தெரியும். அதனால் மிச்சமிருப்பதையும் நீ தெரிந்து கொள்வதில் புதிதாக எந்த பிரச்சினையும் வந்துவிடப் போவதில்லை” என்றவன் கூறலானான்.
“மொத்தம் ஆறு பெண்களை திருமணம் செய்திருக்கிறேன்… ஒரு பெண்ணைக் கூட தொட்டதில்லை¸ அப்படியே கொண்டு போய் விற்றிருக்கிறேன். ஆனால்… உன்னை அப்படித் தொடாமல் அனுப்ப மனமில்லை. உன்னோடு ஒரு இரவையாவது கழிக்க எண்ணியிருந்தேன். அதன் பிறகும் உன்னை அனுப்ப விருப்பமில்லைதான்… ஆனால் டப்பு ஆசை யாரை விட்டது. அதிலும் அவன் உனக்கு இரண்டு மடங்கு பணம் தருவதாக சொன்னபிறகு எப்படி மறுக்க முடியும்? எவ்வளவு சாமர்த்தியமாக உன்னைப் பற்றி விசாரித்து பெண்கேட்டு திருமணம் வரை கொண்டு வந்தேன் தெரியுமா? அதையெல்லாம் அந்த மடையன் கோகுல்…” என்றபோது “அவர் ஒன்றும் மடையனில்லை!!” என்று அவள் கத்தியதை கவனிக்காததுபோல தொடர்ந்து பேசினான்.
“சிதறடித்துவிட்டான். இதற்கெல்லாம் சேர்த்து அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்” என்று அவன் முடித்தபோது “இங்கே பார் பிரபாகர்… நீயாக என்னை விட்டுவிடுவது உனக்கு நல்லது! வெகுசீக்கிரமே அவர் இந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்துவிடுவார். நீதான் என்னைக் கடத்தினாய் என்று தெரிந்தால்… அவர் உன்னை சும்மா விடமாட்டார்!! அதனால் என்னை விட்டுவிடு..!!” என்று தனக்குள்ளிருக்கும் பயத்தை மறைத்து எச்சரிப்பதுபோலப் பேசினாள்.
“இந்த இடம் யாருக்கும் தெரியாது… இதைக் கண்டுபிடித்து வருவதும் அவ்வளவு சுலபமல்ல!” என்றான் தைரியமாக.
“அவர் கண்டுபிடித்துவிடுவார்” என்று அவள் நம்பிக்கையோடு சொல்ல¸ “எப்படி கண்டுபிடிப்பான்? உன் செல்போனிலிருந்த சிம்கார்டைப் பிடுங்கிவிட்டேன். என் செல்போன் நம்பர் புதியது… யாருக்குமே தெரியாது. அப்புறம் அவன் எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடித்து வருவான்?” என்று நக்கலாகக் கேட்டு முடித்தான்.
‘ஒருவேளை கோகுலால் கண்டுபிடித்து வர இயலாதோ!!’ என்று அவளது நம்பிக்கை குறைந்த அந்த நொடியில் பிரபாகரன் மீண்டும் பேசினான்.
“அப்படியே அவன் இங்கு வந்தாலும்… அந்த சமயத்தில் நான் உன்னை விமானம் ஏற்றி அனுப்பியிருந்திருப்பேன்” என்று ஒரு குண்டை வீசிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
மறுநாள் காலை பத்து மணியளவில் வித்யா அடைத்து வைக்கப்பட்டிருந்த… புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து போலீசார் துணையுடன் காப்பாற்றப்பட்டாள்.
ஒரு மணி நேரத்திற்குள்ளாக போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று செய்ய வேண்டிய பார்மாலிட்டீஸை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டான் கோகுல்.
காப்பாற்றப்பட்டதிலிருந்து கணவனின் அருகில் இருப்பதே போதுமென்று அமைதியாக இருந்தவள் “எப்படியப்பா காப்பாற்றினாய்?” என்று மாமியார் கேட்ட பிறகுதான்¸ தானும் பதிலை அறிய விரும்பியவளாக கணவன் முகம் நோக்கினாள்.

Advertisement