Advertisement

அத்தியாயம் – 21
சின்னதாய் தங்க மணிகள் கோர்த்த பிரேஸ்லெட் ஒன்றை எடுத்து இது மகளுக்கு என்று தாயாரிடம் காட்டியவன்¸ ‘மற்றதெல்லாம் வித்யாவுக்குத்தான்’ என்றான்.
“எனக்கு இவ்வளவு நகை எதற்கு? நிவேதாவுக்கு சேர்த்து வையுங்கள்” என்றாள் அவள் உடனே.
“இந்த வயசில் அவளுக்கு இந்த நகைகளை அணிந்தால் நன்றாக இருக்காது” என்றவன்¸ சிறுவர்களுக்கு அதிக நகை அணிவதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி பேசினான்.
“தினசரி செய்தியில் வருவதை… நகைகளுக்காகவே சிறுவர்களைக் கடத்திச் செல்கிறார்கள் என்று நீ படித்ததில்லையா?” என்று கேட்டு பெற்றவனுக்குள்ள அக்கறையைக் காட்டியவன் “உரிய வயது வரும்போது அவளுக்கு இதைவிட அதிகமாகவே என்னா… இல்லை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியும்” என்று தன்னால் முடியுமென்பதையும் சொல்லி முடித்துவிட்டான்.
அதற்குமேல் வித்யாவும் ஒன்றும் சொல்லவில்லை. தானே மகளுக்கு பிரேஸ்லெட்டைப் போட்டுவிட்டு “நன்றாக இருக்கிறதா அத்தை?” என்று கேட்டு கணவனைப் பார்த்தாள்.
தான் வாங்கிக் கொடுத்த நகைகளை மனைவி வேண்டாம் என்று சொன்ன கோபத்தில் பேசியவன்¸ அவள் தன்னை சமாதானப்படுத்துவதைப் போல நடந்துகொண்ட இந்த செயலில் மனம் லேசாகிவிட “நான் குளித்துவிட்டு வருகிறேன்” என்று அறைக்குச் சென்றான். வித்யா வாங்கி வந்த துணிகளை மாமியாருக்கு காட்டலானாள்.
ரெடிமேட் பட்டுப்பாவாடை சட்டையும்¸ ஒரு ப்ராக்¸ ஒரு காக்ரா சோளி மற்றும் சில புதுவகை கவுன்கள் என மகளுக்காகத் தேர்ந்தெடுத்திருந்த ஆடைகளை காண்பித்தவள்¸ மாமியாருக்காக எடுத்திருந்த மூன்று பட்டுப் புடவைகளை எடுத்துக் கொடுத்தாள்.
விசேஷங்களில் கலந்துகொள்ளும்போது கனகம் அதிகமாக உடுத்தும் வகைத் துணியிலே¸ ஆனால்… அவர் அணிந்து தான் பார்த்திராத தனக்குப் பிடித்த நிறங்களைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.
அடுத்ததாகத் தனக்காகத் தேர்ந்தெடுத்திருந்த புடவைகளையும்¸ கணவனுக்கான பட்டுவேட்டி சட்டை¸ பார்மல் சூட் மற்றும் ஒரு கேசுவல் டிரெஸ் என எல்லாவற்றையும் காட்டியவள்¸ மாமியாருக்கும் திருப்திதானா என்று கேட்டு அவர் அவளைப் பாராட்டவே ‘முதல்முறையாக தான் சென்று தேர்ந்தெடுத்து வந்திருக்கிறோம் அத்தை என்ன சொல்லப்போகிறாரோ’ என்று பயந்திருந்தவள் மகிழ்ச்சியுற்றாள்.
இரவுசாப்பாடு ஒன்பது மணியளவிலே முடிந்துவிட¸ சற்றுநேரம் தோட்டத்தில் நடந்துவிட்டு வருவதாக சொல்லி வெளியேறினாள் வித்யா.
குளிர்க்காற்று சில்லென்று உடலை தீண்டிச் செல்ல¸ துப்பட்டாவைப் போர்த்தியவாறு நடந்தாள்.
அவள் வந்த பத்துநிமிடத்தில் அங்கு வந்த கோகுல்¸ அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவளைப் பார்த்தவாறே தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
இருட்டில் அமர்ந்திருந்தவனைக் கவனிக்காமல் மேலும் பத்து நிமிடங்கள் நடந்தவள்¸ வீட்டினுள் செல்வதற்காகத் திரும்பியபோது தன் கால்மேல் வளவளப்பாக ஏதோ ஒன்று ஏறிச் சென்றதை உணர்ந்து “அம்மா..!!” என்று அலறினாள்.
“என்னாச்சு வித்யா?” என்று ஓடிவந்தவனிடம் “பாம்பு!! பாம்பு!!” என்று அது சென்ற திசையை நோக்கி ஒரு கரத்தையும்¸ பயத்தில் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்த தன் நெஞ்சில் ஒரு கரத்தையும் வைத்தவாறே சொன்னாள்.
“பாம்பு போயிடிச்சி வித்யா..! கத்தாதே!!” என்று அழுத்திச் சொன்ன அதே சமயத்தில்¸ “என்னப்பா சத்தம்?” என்று தாயாரின் குரலும்… இரண்டு வேலையாட்கள் அந்தப் பக்கமாக ஓடிவருவதும் தெரிய… “ஒன்றுமில்லைம்மா… எதையோ பார்த்து பயந்துவிட்டாள்… நான் பார்த்துக்குறேன்” என்று சொன்னவன், வேலைக்காரர்களையும் அதையே சொல்லி அனுப்பிவிட்டு மனைவியிடம் திரும்பினான்.
“அதான் பாம்பு போயிடிச்சில்லே..! அப்புறம் ஏன் கத்தினாய்?” என்று கேட்டு அதட்ட “இல்லைங்க… அது என் கால்மேல ஏறி போச்சா… கால்ல சுத்திடிச்சோன்னு பயத்துல கத்திவிட்டேன்” என்று சொன்னதும், அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“சாரி…” என்று அசடுவழிந்தவளிடம் “சரி¸ வா போகலாம்” என்றழைத்த பின்னரும் அவள் நடக்காமல் அப்படியே நிற்கவும்¸ கையைப் பிடித்து “இன்னும் என்ன? வா…” என்று அழைத்தான்.
கையைப் பிடித்தவனுக்கு பயத்தில் அவள் நடுங்குவது புரிய அவளைத் தன் பக்கம் இழுத்தவாறு மீண்டும் அழைத்துப் பார்த்தான். சுற்றியிருந்த புல்வெளியை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாலேயொழிய அந்த இடத்தைவிட்டு அவள்  நகரவில்லை.
அவள் நகருவதாகவும் இல்லை என்பது புரிந்துவிட “ம்ப்ச்..!” என்று சலித்தவன்¸ சட்டென அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
ஹாலுக்கு வந்ததும் கீழே இறக்கிவிட்டவன்¸ அதன் பின்னரும் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் யாரும் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு அவளைத் தூக்கியவாறு மாடியேறினான்.
‘எப்படித்தான் இவ்வளவுஎளிதாக தூக்கிச் செல்கிறானோ? கனமாக இருக்கமாட்டேனா?’
அறைக்குள் வந்ததும் கட்டிலில் அமர வைத்தவனிடம் “தேங்க்ஸ்..!” என்று சொன்னவளுக்கு “யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்..!” என்று உடலை வளைத்து அவன் சொல்ல சிரிப்பு வந்துவிட்டது.
சிரித்தவளிடம் குட்நைட் சொல்லி அவளை படுக்க சொன்னவன்¸ கட்டிலைவிட்டு சற்று விலகியிருந்த பால்கனிக்கு சென்று பாதி வளர்ந்திருந்த நிலவை வெறித்தவாறு நின்றான்.
‘அவளைப் பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும். சொன்னாலும் புரிந்துகொள்வாளா..? புரிந்து ஏற்றுக் கொள்வாளா என்பது சந்தேகம்தான். ஒரே அறையில் மனதிற்கினியவளை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தவிப்பது எவ்வளவுபெரிய கொடுமை’ எல்லாவித உரிமையும் இருந்து எதுவும் செய்ய இயலாமல் விலகியிருப்பது அவனுக்கு கொடுமையாகத்தான் பட்டது.
இப்போதென்றாலும்கூட தன் உரிமையை செயலில் காட்டிவிடலாம்தான். ஆனால்… அது அவளது வெறுப்பை வளர்க்குமே தவிர¸ அன்பையில்லை. இப்போதிருக்கும் சகஜமான சூழல்கூட மாறிவிடக்கூடும். அதனால்… பொறுமையாக இருந்தாக வேண்டிய கட்டாயம்.
“ம்கூம்…..” பெருமூச்சொன்றை வெளியிட்டவன்¸ பாடல் கேட்டால் மனம் சமாதானப்படுமென்றெண்ணி அறைக்குச் சென்று பழைய பாடல்களின் தொகுப்பொன்றை ஓடவிட்டு அமர்ந்தான்.
சேரில் சாய்ந்தமர்ந்து எதிரில் கிடந்த டீபாயில் காலைத் தூக்கி வைத்து¸ தூங்கிக் கொண்டிருந்த மனைவியை தொந்திரவு செய்யாதவாறு சத்தத்தை குறைத்து வைத்து கேட்க ஆரம்பித்தான்.
தூக்கத்தினிடையில் வித்யா விழித்தபோது அறையில் இனிமையான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் ஈர்க்க மனம் பாடலில் லயிக்கத் தொடங்கியது.
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
    நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
    முள்ளாய் மாறியது’
தொடர்ந்து ஒலித்த பாடலுடன் இணைந்து மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருந்த கோகுலின் குரலைக் கேட்டவளுக்கு ‘இன்னுமா தூங்கவில்லை?’ எனத்தோன்ற¸ புன்னகையுடனே “கோகுல்..!” என்றழைத்தாள்.
‘என்ன?’ என்பதுபோல படுக்கையைப் பார்த்தவனிடம் “படுத்துத் தூங்குங்க… ரொம்ப நேரம் கண் விழித்தால் உங்களுக்கு தலைவலிக்கும்” என்றாள்.
மனைவியாக உணர்ந்து அக்கறையுடன் சொல்லும் முதல் வார்த்தை. மறுக்காமல் பாடலை அணைத்துவிட்டு சென்று சோபாவில் படுத்தான்.
இன்று மித்ராவுக்குத் திருமணம்.
அதிகாலையிலே குளித்து திருமணத்துக்காக வாங்கியிருந்த பட்டுப் புடவையணிந்து¸ அதற்கு மேட்சிங்காக நகையணிந்து… தன் அழகு பலமடங்கு அதிகரித்திருப்பதை உணராமல் உடைமாற்றும் அறையிலிருந்து வெளிப்பட்டவளைக் கண்டவனால் அவளிடமிருந்து விழியகற்ற இயலவில்லை.
‘அப்படியே கடிச்சி தின்றுவிடலாம் போல இருக்கிறாளே!’ பார்வை மாறாமல் காத்து எச்சிலை விழுங்கினான். கணவனின் பார்வையை புரிந்துகொள்ளாமல் அவனைப் பார்த்து புன்னகை சிந்தியவள் மகளைத் தயாராக்க அவளறைக்கு சென்றாள்.
நிவேதாவுக்கும் பட்டுப் பாவாடை¸ சட்டையுடன் சில நகைகளும் அணிந்து அவர்கள் வெளியே வந்தபோது¸ கோகுல் தாயாருடன் தயாராக நின்றிருந்தான்.
அவனது உயரத்துக்கு பட்டு வேட்டி¸ சட்டை கம்பீரமளிப்பதாகத் தோன்றினாலும்¸ அந்த கருத்தைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றாததால் விரிந்த புன்னகையொன்றை வெளிப்படுத்தியதோடு விட்டுவிட்டாள்.
சீக்கிரமே சித்தப்பா வீட்டிற்கு சென்று தயாராக இருந்த அவர்களையும் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்தை அடைந்தனர்.
உறவினர்களை வரவேற்று¸ மாப்பிள்ளைக்கு மாலை மாற்றி¸ அண்ணன் பங்காக  மாப்பிள்ளைக்கு பிரேஸ்லெட் அணிவித்து¸ முகிலனின் கைப்பிடித்து உள்ளே அழைத்துவந்தான் கோகுல்.
இந்த சூழ்நிலையில் வசுமதிக்கும் வெங்கட்ராமனுக்கும் தங்கள் மகன் நினைவிற்கு வந்து வருந்தினாலும்¸ தங்கள் மகன் செய்ய வேண்டியதை ஆவலோடு செய்ய ஒரு மகன் இருக்கிறானே என்று மனதை தேற்றிக் கொண்டனர்.
முகிலனின் உறவுப்பெண்கள் உதவியுடன் முகூர்த்தப் புடவை அணிந்து மித்ரா மணமேடைக்கு அழைத்துவரப்பட்டாள்.
கெட்டி மேளம் முழங்க¸ ஐயர் தாலியை எடுத்துக் கொடுக்க மித்ராவின் கழுத்தில் அணிவித்தான் முகிலன்.
திருமணம் முடிந்துவிட்ட திருப்தியில் வெங்கட்ராமன் சோர்வுடன் அமர்ந்துவிட¸ அருகில் அமர்ந்திருந்த கனகம் அவரது மனநிலையை மாற்றும் பொருட்டு பேச்சு கொடுக்கலானார்.
திருமண மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமும் கச்சேரி¸ சாப்பாடு¸ மணமகன் – மணமகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளுதல் என ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது.
தானிருந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்த கோகுல்¸ அதன் பின்னர் வாசலில் நின்று வந்தவர்களை வரவேற்பதும்¸ வெளியே செல்பவர்கள் சாப்பிட்டார்களா? மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்களா? என்று உபசரித்து அனுப்புவதில் பிஸியாக இருந்தான்.
அண்ணன் மனைவியாக வித்யா மித்ராவின் அருகிலே நிற்க வேண்டியதாகிவிட்டது. நிவேதா தன் வயதையொத்த சிறுவர்களுடன் விளையாடச் சென்றுவிட¸ மித்ராவின் சிறுசிறு தேவைகளில் உதவியவாறு அருகிலே நின்று கொண்டிருந்தாள் வித்யா.
வாசலில் நின்றிருந்தவனது பார்வை அவ்வப்போது மனைவியின் பக்கம் சென்றது. அவளும் அதே சமயங்களில் பார்த்துவிட்டால் சிரித்தனர். இப்படியே பலமுறை நடந்தது. இதே மணமக்களின் நிச்சயத்தன்று வித்யா முகத்தைக் திருப்பிக் கொண்டது நினைவிற்கு வர இருவரும் நன்றாகவே சிரித்தனர்.
மறுபடி ஒருமுறை பார்க்கையில் ஒரு சிறுவன் வித்யாவிடம் சிறு காகிதத்தைக் கொடுத்து வெளியே கைநீட்டி ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதையும் பார்க்க நேர்ந்தது.
வந்த சிலரை வரவேற்று சாப்பாட்டு அறைக்கும் மணமக்கள் நின்ற இடத்திற்குமாக அனுப்பிவிட்டு மேடையைப் பார்த்தால் அவள் அங்கே இல்லை.
ரெஸ்ட்ரூமிற்கு சென்றிருப்பாள் என்றெண்ணியவன்¸ வெளியே செல்லத் தொடங்கியவர்களை கவனிப்பதில் ஆழ்ந்தான்.
முன்போல அவ்வப்போது திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் வரவேயில்லை என்றதும் மனம் பதறிவிட¸ சித்தப்பாவை அழைத்து வெளியே செல்வோரை கவனித்து அனுப்புமாறு சொல்லிவிட்டுத் தாயாரிடம் சென்று கேட்டான்.
“நிவேதாவோட தான் நின்றாள்” என்றவாறு பேத்தியைப் பார்த்தவர்¸ அவள் தனியே நிற்பதைக் கண்டதும் “வேறு எங்கே போனாளென்று தெரியவில்லையே! என்னிடமும் சொல்லவில்லை” என்று அங்கலாய்த்தவாறு தானும் சென்று தேடத் தொடங்கினார்.
மகளிடம் கேட்டதற்கு “அம்மா வெளியே போனாங்கப்பா…” என்று அவள் சொல்ல¸ மண்டபத்தைவிட்டு வெளியேறி மண்டபத்தைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும்¸ மண்டப சுற்றுச்சுவரை விட்டு வெளியேயும்கூட தேடிப் பார்த்தான்.
பதற்றம் அதிகமாக மீண்டும் மண்டபத்தை அடைந்தவனுக்கு மணமக்கள் கிளம்பத் தயாராக இருப்பது தென்பட அங்கே சென்றான். அவர்களுடன் வருமாறு அழைத்த சித்தி சித்தப்பாவிடம் நிலைமையை கூறாமல்¸ “நான் கடைசியாக வருகிறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
வேலையாட்களைத் தவிர கிட்டத்தட்ட எல்லா உறவினர்களும் செல்வதுவரை ‘நாட் ரீச்சபிள்’ என்று பதிலளித்த வித்யாவின் போனுக்கு திரும்பத் திரும்ப முயன்றபடி மண்டபத்திலிருந்த டைனிங் ஹால்¸ ரெஸ்ட்ரூம்¸ மணமக்கள் அறை என ஒவ்வொரு அறையாக சென்று தேடினான்.
மனம் மட்டும் ‘எங்கே போனாய் வித்யா? எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேனே! ஆனால் உன்னையே இழந்துவிடுவேன் போலிருக்கிறதே! எங்கே போனாய்? என்னைவிட்டு எங்கேயும் போய்விடாதே..! ப்ளீஸ் என்னிடம் வந்துவிடு…’ என்று மானசீகமாக அவளிடம் பேசிக் கொண்டே இருந்தது.

Advertisement