Advertisement

அத்தியாயம் – 20
ஓய்வில்லாமல் திருமண வேலையையும் தன் அலுவலையும் பார்த்துக் கொண்டிருந்தவன்¸ சற்று ஓய்வாக அமர்ந்திருந்த மாலை வேளையில்… பள்ளிவிட்டு வந்ததும் தன் தாயாரிடம் சென்ற நிவேதா “அம்மா எனக்கு எப்போ தம்பி பாப்பா பிறக்கும்?” என்று கேட்டாள்.
மகள் கேட்டதும் சட்டெனத் திரும்பி கணவனை நோக்கிவிட்டவளுக்கு கணவனும் மாமியாரும் தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் கூச்சமுண்டாகிவிட அவனைப் பார்ப்பதைவிடுத்து தரையை நோக்கினாள்.
மனைவியின் பார்வை தன்னை நோக்கிவிட்டுத் திரும்பியதை கவனித்தவன் சிரிக்கத் தொடங்கிவிட¸ கனகம் “ஏன்டா குட்டி இப்படி கேட்கிறே?” என்று பேத்தியிடம் அவளது கேள்விக்கான காரணத்தைக் கேட்டார்.
“அதுவா பாட்டி…” என்று இழுத்தவள் “என் ஃப்ரண்டு கவிதா இருக்கால்லே அவ அம்மா வயித்துல தம்பி பாப்பா இருந்ததாம். அவன் நேற்றைக்கு வெளியே வந்துவிட்டானாம். பார்க்க ரொம்ப அழகா இருந்தானாம்..! என்கிட்ட கொண்டு வந்து காட்டுடி நான் திருப்பி தந்துடுவேன்னு சொன்னேன் பாட்டி… அதுக்கு நான் தரமாட்டேன் நீ உங்க அம்மாகிட்ட போய் கேளுன்னு சொல்லிட்டா… அதான்” என்று பாட்டியாரிடம் சொல்லிவிட்டு¸ மீண்டும் வித்யாவிடம் திரும்பி “சொல்லுங்கம்மா… தம்பி எப்போ வருவான்?” என்று தாடையைப் பிடித்து ஆட்டியவாறு கேட்டாள்.
சிரித்துக் கொண்டிருந்த கோகுல் “நிவிக்கு தம்பி மட்டும் போதுமா..? தங்கை வேண்டாமா..?” என்று கேட்க¸ “ம்… ம்.. எனக்கு ரெண்டுபேரும் வேணும்ப்பா” என்று சந்தோஷமாகக் கூறினாள்.
“சரிடா… உனக்கு சீக்கிரமே தம்பியும் தங்கையும் வருவாங்க… இப்போ நீ பாட்டிகூட போய் ஹார்லிக்ஸ் குடி” என்று மகளை தாயாருடன் அனுப்பி வைத்தவன்¸ தலைகுனிந்தவாறு சோபாவில் அமர்ந்திருந்த வித்யாவிடம் சென்று “என்ன வித்யா? சீக்கிரமே நிவிக்கு தம்பியோ தங்கையோ கொடுத்துடலாம்தானே?” என்று கேட்டு அவளருகில் அமரப்போக¸ அவன் முகம் பார்க்க வெட்கியவள் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அன்று காலையிலிருந்தே கனகம் கவனித்தார் ஏனோ வித்யா சரியாகவே இல்லை… சோகமாக இருப்பதுபோலவே தோன்றியது. ‘உடம்பு சரியில்லையா?’ என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்று பதிலளித்தாள். மேலும் வற்புறுத்திக் கேட்க மனமற்று அவரும் அப்போதைக்கு விட்டுவிட்டார்.
காலையில் கணவனுடன் அமர்ந்து சாப்பிடும் போதும் யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் ஒரே ஒரு இட்லி சாப்பிட்டவள்¸ மதியம் சாப்பிடவும் வரவில்லை.
அறையிலேயே அடைந்திருந்தவளை அழைத்து மகன் திட்டியிருப்பானோ என்றெண்ணி கேட்க¸ அதற்கும் இல்லையென்றுவிட்டாள். “சரி வா சாப்பிடலாம்” என்றழைக்க “இல்லை அத்தை… எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் படுத்துக்கிறேன்” என்று மீண்டும் அறைக்குள் அடைந்துகொண்டாள்.
பள்ளியிலிருந்து வந்த பேத்தி சென்று அழைத்ததற்கும் ‘உடம்புக்கு முடியவில்லை… இன்றைக்கு ஒருநாளும் பாட்டியுடன் இரு’ என்று சொல்லிவிட்டாள்.
‘ஏன்? என்னாச்சு?’ என்று யோசித்தபடியே பேத்தியைத் தானே கவனித்து மகனது வரவை எதிர்பார்த்து காத்திருந்தால் அவன் வர ஒன்பது மணியாகிவிட்டது.
வந்ததும் மனைவியையும் மகளையும் கேட்டபடி அமர்ந்து சாப்பிடத் தொடங்கியவன் பேத்தி தூங்கிவிட்டதாகக் கூறிய தாயார் “நீ வித்யாகிட்ட சண்டை போட்டாயா?” என்று தாயார் கேட்கவும்
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு “இல்லையே! ஏன்மா கேட்குறீங்க?” என்று பதற்றத்துடன் கேட்டான்.
“இன்று காலையிலிருந்தே வித்யா சோகமாக இருப்பது போலவே தோன்றியது. நான் பார்த்து ஒருமுறை தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டும் இருந்தாள். என்னவென்று கேட்டதற்கு ஒன்றுமில்லை என்றுவிட்டாள். நிவேதா போய் எழுப்பிய பிறகும் ரூமைவிட்டு வெளியே வரவில்லை. காலையில் சாப்பிட்ட இட்லியைத் தவிர வேறொன்றும் சாப்பிடவும் இல்லை” என்று எல்லாவற்றையும் கூறிவிட்டார்.
சாப்பிடுவதை விடுத்து அவன் எழவும் “நீ சாப்பிட்டுப் போப்பா…” என்று சொன்னதை காதில் வாங்காமல் கைகழுவி வந்தான்.
வருத்தத்துடன் நின்றிருந்த தாயாரிடம் “நான் அவளோட சேர்ந்து சாப்பிடுறேன்மா. நீங்க போங்க… போய்த் தூங்குங்க” என்று தாயாரை அனுப்பிவிட்டு தங்கள் அறைக்கு சென்றான்.
வேகமாகப் படியேறி அறைக்கு சென்று பார்த்தால்… குழந்தையைப் போல சுருண்டு படுத்திருந்தாள் வித்யா.
சீரோ வால்ட் பல்பின் ஒளியில் அவளது உடல் குலுங்குவதுபோலத் தோன்றியது. விசும்பல் ஒலி கூட… ‘அழுகிறாளா என்ன?’
“வித்யா!” என்று அழைத்துப் பார்த்தான். அவள் திரும்பாமலே படுத்திருக்க¸ அருகில் அமர்ந்து அவளது தோளைப் பற்றி தன்புறம் திருப்புவதற்காகத் தொட்டதுமே உடல்சூடு இருப்பது தெரிந்தது.
வெளியே சென்று அவளுக்கு பிரட்¸ பால் மற்றும் காய்ச்சல் மாத்திரையுடன் வந்தவன்¸ அருகில் அமர்ந்து அவளைத் தன்புறம் திருப்பி “வித்யா எழும்பும்மா… இதை சாப்பிட்டுவிட்டுப் படு” என்றழைத்தான். கண்களைத் திறவாமல் அவள் விசும்பியவாறே இருக்க “காலையிலிருந்து நீ சரியாக சாப்பிடவில்லையாமே! ஏன்? உ… உனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லையா..? அதனால்தான் அழுகிறாயா..?” என்று தயங்கித் தயங்கி கேட்டுவிட்டான்.
பதிலில்லை… அதோடு அழுகையும் நிற்கவில்லை என்றதும் “வித்யா இங்கே பாரு… வித்யா கண்ணைத் திறந்து என்னைப் பாரு” என்று அவளை உலுக்கியவன்¸ விழி விரித்து பார்த்தவளிடம் “என்ன கோபமென்றாலும் சாப்பாடு மேல காட்டக்கூடாது. வா… எழும்பி இந்த பிரட்டை சாப்பிடு¸ அப்புறம் மாத்திரையும் சாப்பிடணும்” என்று கண்டிப்பு காட்டுவது போலப் பேசி அவளை எழுப்பினான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனக்குத் தேவையான நேரத்தில் கரிசனையும் பரிவுமான பேச்சு… அதுவும் தனக்குப் பிடிக்காத கணவனிடமிருந்து… அழுகை வெடித்து வரவே எழுந்து அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
“வித்யா..? என்னாச்சு..? ஏன் அழறே? எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லும்மா… ப்ளீஸ் அழாதே! எனக்கு கஷ்டமாயிருக்கு..!” என்று வருந்திய குரலில் பேசி அவளது முதுகை வருடிக்கொடுக்கவும்¸ அவனிடம் கூறினாள்.
இன்று அவளது குடும்பத்தினர் அவளை விட்டுச் சென்ற நாள்.
“இன்றுடன் ஓராண்டு முடிகிறது… என்னால் அவர்களுக்கு திதி கூட கொடுக்க முடியவில்லை” என்று கணவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
அழுது கொண்டிருந்தவளின் முதுகை வருடிக்கொடுத்து சமாதானப்படுத்தியவாறே அனைத்து விபரங்களையும் பெற்றவன் “நாளைக்கே நாம் அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இப்போது நீ அழாமல் இந்த பிரட்டை சாப்பிட்டுவிட்டுத் தூங்கு” என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டு விலகியவன்¸ அவளை சாப்பிட வைத்து மாத்திரையும் கொடுத்து படுக்கச் செய்து போர்த்திவிட்டு தன் இடம் சென்று படுத்தான்.
மாத்திரை சாப்பிட்ட சற்றுநேரத்திலே அவள் உறங்கிவிட அருகில் சென்று காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தவன்¸ உடல்சூடு குறைந்திருக்கவே நிம்மதியுடன் சென்று தூங்கினான்.
காலையில் எழுந்ததும் “இப்போ எப்படியிருக்கு வித்யா?” என்று கேட்க
“ம்… பரவாயில்லை” என்று புன்னகைத்தவளிடம் “நிவேதாவை ஸ்கூலுக்கு அனுப்பியதும் நாமளும் கோவிலுக்கு போகணும்… கிளம்பிவிடு” என்று சொன்னவன்¸ மில்லுக்கும் அரிசி மண்டிக்கு போன் செய்து வரவில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு குளிக்கச் சென்றான்.
கனகத்திடம் கோவிலுக்கு சென்று வருவதாகக் கூறி இருவருமாகச் சென்று அவளது குடும்பத்தினருக்கு திதி கொடுத்துவிட்டு வந்தனர்.
அவள் இன்னமும் சோகமாக இருப்பதாகவே எண்ணியவன் அவளது சோகத்தைப் போக்க காரை மித்ரா வீட்டுக்கு செலுத்தினான்.
மித்ராவின் கலகலப்பான பேச்சில் மனைவியின் சோகம் பின்னுக்குத் தள்ளப்படுவதை மகிழ்ச்சியுடன் பார்த்திருந்தவன்… திருமண வேலைகள் ஒழுங்காக நடப்பதைப் பற்றி சித்தப்பா குடும்பத்தினருக்கு தெரிவித்துவிட்டு வித்யாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
வித்யா இப்பொழுதெல்லாம் கோகுலிடம் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தாள். அதற்காக தங்கள் திருமணம் சம்பந்தமான தன் கோபத்தை குறைத்துக் கொண்டாள் என்றில்லை. எக்காரணம் கொண்டும் அதை மறக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
அவ்வப்போது அவன் கண்களில் ஏதோ ஒரு தேடல் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனால் தன்னைப்போலவே இருந்த அந்த முதல் மனைவியைப் பற்றி எந்த விபரமும் தெரியாததால் அவள் நெருங்கிப் பழக முயலவில்லை.
கணவன் மார்பில் சாய்ந்து தன் துக்கத்தை சொல்லி அழுத அன்றைய இரவுக்குப் பிறகு அவள் தினமும் நன்றாகவே தூங்கினாள்.
ஆரம்பத்தில் “தம்பி…!” என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்த நிவேதா¸ இப்பொழுதெல்லாம் அடிக்கடி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தது… அதுவும் அநேகமாக கோகுலின் முன்னிலையிலேயே கேட்டு வைத்தது அவளுக்கு நாணத்தைக் கொடுத்தது.
அன்று இரவிலும் தன் பாடப் புத்தகத்திலிருந்த குழந்தையைப் பார்த்தவள் உடனே¸ “அம்மா தம்பிப் பாப்பா..?” என்று கேட்டுவிட்டாள்.
‘நல்லவேளை கோகுல் இன்னும் வந்திருக்கவில்லை. இருந்திருந்தால் தன் பங்குக்கு எதையேனும் சொல்லி ஆளை சிவக்கடித்துவிடுவான்’ என்று அவன் இல்லாததை எண்ணி நிம்மதியுற்றாள்.
ஆனால் பேத்தி அடிக்கடி இதையே கேட்பதைக் கவனித்த கனகம் மகன் வந்ததும் “என்ன கோகுல்… வித்யா வீட்டிற்கு வந்து எத்தனை மாசமாகுது..? அடுத்த பேரப்பிள்ளை எப்போது?” என்று கேட்டார்.
“அதும்மா… இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னு…” என்று இழுத்தவனிடம்¸ “அதுதான் நிவேதாவுக்கு ஐந்து வயது முடியப்போகிறதே! இன்னும் என்ன கொஞ்சநாள்? தள்ளிப்போடாமல் சீக்கிரம் அடுத்த குழந்தையைப் பெற்றுவிடுங்கள்” என்று வித்யாவுக்கும் கேட்குமாறு சொல்லிவிட்டார்.
“சரிம்மா நாங்க பார்த்துக்கிறோம்..” என்றவன்¸ மகளுக்கு தலைவாரி விட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்தான்.
அவள் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது
போல அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.
சின்னவள் தலைவாரி முடித்ததும் வெளியே ஓடிவிட “வித்யா நாளைக்கு ஜவுளி எடுக்கப் போகணும்… ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்ததும் போகணும்” என்றவாறே அவளருகில் சென்றமர்ந்து தாயாரிடம் “அம்மா நீங்க வர்றீங்களா?” என்று கேட்டான்.
“இல்லைப்பா.. நீங்க ரெண்டுபேருமே போயிட்டு வாங்க. மத்யானம்தானே போறீங்க..¸ அப்படியே வரும்போது நிவேதாவை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துடுங்க” என்றார்.
மறுநாள் மத்யானம் இரண்டு மணிவாக்கில் “வித்யா போகலாமா..?” என்றவாறே வந்து சேர்ந்தான் கோகுல்.
“இதோ இரண்டே நிமிடத்தில் வந்துவிடுகிறேன்” என்று குரல் கொடுத்தவள்¸ சொன்னதுபோல இரண்டு நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டாள்.
சிவப்பு நிற காட்டன் சுடிதார் அணிந்து…
‘சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!’
மனதின் பாடலை நிறுத்தி பார்வையை அவளிடம் செலுத்தினான். கூந்தலை அழகாகப் பின்னலிட்டு… சிவப்பு ரோஜா ஒன்றைச் சூடி… எளிமையான அலங்காரம்தான். ஆனால் அதுவே அவளை பேரழகியாகக் காட்டியது.
“அத்தை போயிட்டு வர்றோம்” என்ற அவளது குரலில் கலைந்து தாயாரிடம் தலையசைத்துவிட்டு நடந்தான்.
அவனது வேக நடைக்கு ஈடுகொடுத்து வேகமாக நடந்தவளுடன் பேசியவாறே நடந்தான் அவன்.
கோகுலின் காரை பின்தொடர்ந்து வந்திருந்த ஒருவன்¸ இருவரும் காரிலேறி சென்றதும் வாட்ச்மேனிடம் வந்து விசாரித்தான். சில மாதங்கள் முன்பாகத் திரும்பி வந்த அழகிய¸ அன்பான சின்ன முதலாளியம்மாவைப் பற்றி பெருமையாக வாட்ச்மேன் கூறியவற்றைக் கேட்டவன் கார் பார்வையிலிருந்து மறையும் முன்பாக சென்றுவிட எண்ணி கிளம்பிவிட்டான். துணிக்கடைக்கு சென்றவர்களை தொடர்ந்து அங்கு சென்றவன்¸ நகைக் கடைக்கும் அவர்களைத் தொடர்ந்து சென்றான்.
தேர்ந்தெடுத்த ஒவ்வொரு நகையையும் மனைவிக்கு வைத்துப் பார்த்து அவளுக்குப் பொருந்துவதை மட்டும் பில் போடக் கொடுத்தான் கோகுல்.
‘உனக்குப் பிடித்ததை எடு வித்யா’ என்று சொன்னபோது அவள் எதையும் செலக்ட் பண்ணாமல் அப்படியே அமர்திருந்ததால்¸ கோகுல் தானே செலக்ட் செய்யத் தொடங்கிவிடவும் அவள் ஒன்றும் பேசாமல் அப்படியே… ஆனால் சிரித்த முகமாக அவனுடன் பேசியபடியே இருந்தாள்.
அத்துடன் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டவர்கள் பேசிக் கொண்டதுபோல மகளையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

Advertisement