Advertisement

அத்தியாயம் – 19
பள்ளி விடுமுறை முடிந்து நாளை நிவேதாவுக்கு வகுப்பு தொடங்கிவிடும் என்ற நிலையில் மகளுக்குத் தேவையானவற்றை கணவனும் மனைவியும் சென்று வாங்கிவந்தனர். நிவேதாவும் ஒன்றாம் வகுப்பு செல்லத் தொடங்கினாள்.
வித்யாவுக்குத் திருமணமாகி ஒரு மாதத்திற்கும் அதிகமாகவே ஆகிவிட்டது. நிவேதா மற்றும் மாமியாருடன் ரொம்பவே ஒன்றிப் போனாள்.
நிவேதாவிற்கு இவள் மீதான பாசம் அதிகரித்துக் கொண்டே போனது. எப்போதும் போல “அம்மா..! அம்மா..!” என்று இவள் பின்னாலே சுற்றினாள்.
ஆரம்பத்தில் இவள் முன்போல கோபப்படுவாளோ என்று பேசத் தயங்கிய கனகமும் இவளது குணமறிந்து இயல்பாக எல்லா விஷயத்தையும் இவளிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். ஆனால் கோகுலிடம் மட்டும் விலகி விலகிச் சென்றாள்.
மித்ரா திருமண நிச்சயத்தன்று நடந்த சம்பவத்திற்குப் பிறகு வித்யா கோகுலிடம் சட்டென எதுவும் பேசுவதில்லை. அதற்காக அவன் விலகிப் போய்விடவில்லை.
சாதாரண விஷயத்தைக்கூட விடாமல் அவளிடம் சொல்வான். அவளும் கேட்பாள். ஆனால் பதிலாக அவசியமின்றி ஒரு வார்த்தைகூட அவளிடமிருந்து வெளிப்படாது.
ஒருநாள் “நீ இப்பொழுதெல்லாம் அதிகமாகப் பேசுவதில்லையே?” என்று கேட்டான்.
“நமக்குள் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையே!” என்றாள் அவள் அசிரத்தையுடன்.
ஒரு விஷமச் சிரிப்புடன் “என்ன! நாம் பேசுவதற்கு ஒன்றுமில்லையா?” என்று கேட்டவன்¸ அவள் ‘என்ன?’ என்பதுபோல பார்க்க “வித்யா… நாம் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி பேசலாம்… குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென்று பேசலாம்… உன் மணி வயிற்றில் ஒரு குழந்தை வந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று யோசித்துப் பார்! இப்படி நிவேதாவுக்கு ஒரு தம்பியோ¸ தங்கையோ வருவதைப் பற்றி பேச எவ்வளவோ இருக்கும்போது நீ நமக்குள் பேச எதுவும் இல்லை என்கிறாய். இது உனக்கே நன்றாக இருக்கிறதா?” என்று சிரித்தவாறே கேட்டான்.
அவன் என்ன சொல்லப்போகிறானோ என்று இறுக்கத்துடனே நின்று கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அவன் குழந்தை பற்றிப் பேசியதும் வெட்கத்தில் முகம் சிவந்துவிட்டது.
“ஹப்பா..!! இத்தனை நாள் கழிந்த பிறகுதான் உன் முகம் வெட்கத்தில் சிவப்பதை பார்க்க முடிந்திருக்கிறது” என்றவன் அவளது கன்னத்தை கிள்ளிவிட்டுச் சென்றான்.
வித்யா வயிற்றில் குழந்தை!
அவளது குழந்தை எப்படி இருக்கும்? ஆணா…? பெண்ணா…? அவளைப் போல இருக்குமா..? இல்லை அவனைப் போலவா…? என்று ஓடிய தன் எண்ணத்திற்கு தடை போட்டு நிறுத்தினாள்.
அவன் குழந்தை பற்றி பேசினான் என்றால் உடனே தானும் கற்பனையில் மிதந்துவிட வேண்டுமா?
அவன் சென்று நிமிடங்கள் பல கடந்தபின்னரும் அசையாமலே நின்றவளை “அடடே!! வாங்க முகில் தம்பி… உட்காருங்க…” என்ற மாமியாரின் குரல் கலைத்தது.
சாப்பாட்டறையில் நின்றிருந்தவளை அழைத்து “முகிலன் தம்பி வந்திருக்கிறாரு… காஃபி கொண்டு வாம்மா…” என்றவர் வந்தவனுடன் அமர்ந்து பேசலானார்.
காஃபியை தானே கலந்து எடுத்துவந்து விருந்தாளிக்கு கொடுத்தவள் மாமியாரின் அருகில் அமர்ந்து நலம் விசாரித்தாள்.
அவன் குடித்து முடித்ததும் “என்ன விஷயம்ப்பா..? கோகுல் கொஞ்ச முன்னாலதான் வெளியே போனான்” என்று அவன் வந்த காரணத்தை வினவினார்.
“நான் கோகுலைப் பார்க்க வரவில்லைம்மா… கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்தேன். அப்பாவும் அம்மாவும் சொந்தங்களுக்கு பத்திரிக்கை கொடுப்பதில் பிசியாக இருப்பதால் நான் மட்டுமே வந்தேன்¸ தவறாக நினைக்க வேண்டாம்” என்று சொல்லி பையிலிருந்து பத்திரிக்கை ஒன்றை எடுத்து பெரியவளின் கையில் கொடுத்து “நான் சொல்ல வேண்டிய தேவையே இல்லையென்று தெரியும். இருந்தாலும் சொல்றேன்… எல்லாரும் கண்டிப்பா வந்துடுங்க அம்மா..” என்று அனைவருக்குமாக அழைப்பு விடுத்து எழுந்தான்.
கோகுலிடம் பழகிய அளவுக்கு அவன் தாயாரிடமோ மனைவியிடமோ பழக்கமில்லாததால் “அப்போ நான் கிளம்புறேன்மா…” என்று சொல்லி உடனே சென்றுவிட்டான்.
அவனை வழியனுப்பிவிட்டு வந்த கனகம் பத்திரிக்கையைப் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தவளிடம் கல்யாண தேதியை உறுதிபடுத்திக்கொள்ள ஒருமுறை கேட்டுக்கொண்டு “இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம்… சீக்கிரமே உங்க மூணு பேருக்கும் தேவையான துணி வாங்கப் போகனும். என்றைக்குப் போகலாமென்று கோகுலிடம் கேட்டு ரெண்டுபேரும் போயிட்டு வந்துடுங்க” என்றார் அவர்.
“ஏன் அத்தை? நீங்க வரவில்லையா?” என்று கேட்டவளிடம் “இல்லையம்மா.. நான் அதிகமாக வெளியே போவதை விரும்புவதில்லை. நீங்க ரெண்டுபேருமே போய் வாங்க” என்று முடித்துவிட்டார்.
‘இனி இதைவேறு அவனிடம் நான் கேட்க வேண்டுமா?’
மாலையில் கேட்டைத் தாண்டி கார் உள்ளே நுழையும்போதே கூச்சல் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே என்று கண்ணாடியை இறக்கிப் பார்த்தவனுக்கு மனைவியும் மகளும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சில சிறுவர்களுடன் கண்ணைக் கட்டி விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
தோட்டத்தில் மட்டுமாக விளையாடாமல் கார் செல்லும் சிமெண்ட் தரைக்கும் சிலர் வந்திருப்பதைக் கண்டவன்¸ அவர்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் காரை சற்று தொலைவிலே நிறுத்தி விட்டு நடந்துவந்தான்.
விளையாட்டு ஆர்வத்தில் யாருமே இவன் வந்ததை கவனித்திருக்காததால் அவர்களது விளையாட்டு தொடர்ந்தது.
இது வித்யாவின் முறை.
கண்கள் கட்டப்பட்டிருக்க… அங்கேயும் இங்கேயுமாக நடந்து யாராவது அகப்படுவார்களா என்று பிடிக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.
சிறுவர்களும் “ஆன்ட்டி இந்த பக்கம்…”¸ “அம்மா இங்கே…”¸ “இங்கே…” என்று ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி அவளை ஏமாற்றிக் கொண்டிருக்க “நிவி அம்மா உன்னை கண்டிப்பாக பிடிப்பேன் பாரு…” என்று நிவேதாவின் கொலுசொலியை இனங்கண்டு அவளைப் பிடிக்க முயல… சின்னவள் ஓடினாள்.
ஓடிய வேகத்தில் யாரையோ இடித்துக் கொண்ட நிவேதா தந்தை எனக் கண்டதும் “அப்…!” என்று கத்தப்போக வாயில் விரல் வைத்து “ஷ்!! சத்தம் போடாதே!” என்றதும் அவள் அமைதியாகிவிட்டாள்.
“அப்பா கொஞ்சநேரம் அம்மாவோட விளையாடட்டுமா?” என்று அனுமதி கேட்பதுபோல வினவினான் கோகுல்.
மகள் ஓ.கே. சொன்னதும் “நீங்க எல்லாரும் உள்ளே போங்க…” என்றவன்¸ “மெதுவா… சத்தம் எழுப்பாம… நடந்து வீட்டுக்குள்ள போகணும்” என்றான் நிபந்தனை போல. அனைவரையும் அழைத்துக் கொண்டு மகள் வீட்டினுள் செல்வதைப் பார்த்துவிட்டு மனைவியை நோக்கி நடந்தான்.
சற்றுநேரம் மகளது கொலுசொலியைக் கொண்டு அவளைத் துரத்த முயன்றவள்… கொலுசொலியும் நின்றுவிட எந்தப் பக்கம் செல்வதென்று புரியாமல் குழம்பி… தட்டுத் தடுமாறி நடந்தவாறே மகளை அழைத்தாள்.
“நிவேதா! எங்கடா இருக்கே? அம்மா எவ்வளவு நேரமா தேடுறேன்… அம்மாக்கு கண் வலிக்குதுடா… யாராவது என்கிட்ட வந்து மாட்டுங்க. இல்லைன்னா… அப்புறமா அம்மா உங்ககூட விளையாட வரமாட்டேன்” என்று அவர்களை பிளாக்மெயில் செய்வது போலப் பேசியவள் கைகளை முன்னே நீட்டியவாறே நடந்தாள்.
அவள் நடந்துகொண்டிருந்த வழியில் சென்று நின்று கொண்டவன் மனைவியின் கைகள் தன்னை அடைந்து அவள் “அவுட்!! அவுட்!! நான் பிடிச்சிட்டேன்!” என்று மகிழ்வதை ரசித்துக் கொண்டிருந்தான்.
சில நொடிகள் மகிழ்ந்தவள் உடனே ‘ஆனால்… இது யாரோ பெரிய உருவம்…’ என்று யோசித்து அவள் கண்கட்டை அவிழ்க்கப் போக¸ அதற்குள் அவள் செய்யப் போவதை அறிந்து கொண்டவன் அவளது இடைவளைத்து அணைத்து இரு கரங்களையும் பின்புறமாக பிடித்துக் கொண்டான்.
“ஏய்!! யாரது? விடு..! விடு என்னை..!” என்று பயத்தில் கத்தியவள் விடுபட முயன்றவாறே “நிவேதா!!” என்று அழைத்துப் பார்த்தாள்.
அவன் அணைப்பு இறுகவும் “ஏய் சொன்னா கேட்கமாட்டே? நீ இப்படி என்னைப் பிடித்து வைத்திருப்பது மட்டும் என் கணவனுக்கு தெரிந்தது… அவ்வளவுதான் உன்னைக் கொன்று போட்டுவிடுவார்” என்று மிரட்டினாள்.
அப்போதும் அவனது பிடி தளராமல் மேலும் இறுகவும் பயந்துபோய் “வாட்ச்மேன்!! அத்தை…!! யாராவது வாங்களேன்!!” என்று மீண்டும் கத்தத் தொடங்கினாள்.
பயத்திலும் மிரட்டி¸ கத்தி என்று தன் பிடியிலிருந்தவளை ரசித்துக் கொண்டிருந்தான் கோகுல்.
பச்சையும் நீலமும் கலந்த அந்த நீண்ட சுடிதார் அவளது உயரத்திற்கு எடுப்பாக இருந்தது. கருநிற துணியால் கண்கள் கட்டப்பட்டிருக்க¸ அதைத் தாண்டியும் அவள் நெற்றியில் வைத்திருந்த வட்டவடிவ ஸ்டிக்கர் பொட்டு தெரிந்தது. வகிட்டிலிருந்த குங்குமம் ‘நான் கோகுலின் மனைவி’ என்பதை பறைசாற்றுவதற்காக இடப்பட்டிருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.
பயத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்த அந்த நிலையிலும் அவள் வார்த்தைகளால் மிரட்டியது சிரிப்பை வரவழைக்க “கட்டிப் பிடித்ததற்கே உன் கணவன் என்னைக் கொன்றுவிடுவானா?” என்று குரலை வித்தியாசப்படுத்திப் பேசினான்.
சாதாரணமாக கண்டுபிடிக்கக் கூடிய அளவிலே இருந்த அவனது குரலை பயத்தால் இனங்காண இயலாமல் “ஆமாம்… கண்டிப்பா உன்னை அவர் கொல்லுவார்” என்றவாறே விடுபட முயன்றாள்.
“அப்படியா..!! அப்போ இதுக்கு என்ன செய்வானாம்?” என்று கேட்டு அவளது இதழில் முத்தமிட்டவன்¸ பின்பக்கமாகப் பிடித்திருந்த அவளது கைகளை விடுவித்தான்.
சட்டென அவனிடமிருந்து விலகி கட்டை அவிழ்த்தவள் எதிரே நின்றிருந்தவனைப் பார்க்க முயன்றாள். வெகுநேரமாக கண்களைக் கட்டியிருந்ததால் கண்கள் கூச¸ கண்களைக் கசக்கி வெளிச்சத்திற்கு பழக்கப் படுத்திக் கொண்டு மீண்டும் அவன் முகம் நோக்கினாள்.
கண் சிமிட்டியவன் “என்னம்மா… உன் கணவனிடம் நான் கட்டிப்பிடித்ததை சொல்வாயா..? இல்லை முத்தமிட்டதையா..? “என்று குறும்பாகக் கேட்டு “என் கணவனுக்கு தெரிந்தது… உன்னைக் கொன்று போட்டுவிடுவார்”   அவள் சொன்னதுபோலவே பேசிக் காட்டினான்.
இவ்வளவு நேரமும் யாரோ பொறுக்கி என்று பயந்து போயிருந்தவளுக்கு கணவன்தான் என்று தெரியவும் கோபம் வந்தது.
அதை அவன் கிண்டல் வேறு செய்யவும் “உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னிடம் இப்படி நடப்பீர்கள்?” என்று கேட்டு கையை ஓங்கிவிட்டாள்.
ஓங்கிய கை அவன் கன்னத்தில் படும்முன் பிடித்து “ ‘என் மனைவி’க்கு ‘நான்’ முத்தம் கொடுப்பதற்கு துணிச்சல் என்ன வேண்டிக்கிடக்கு¸ அத்தோடு என் துணிச்சலின் அளவு உனக்கு நன்றாகத் தெரியும். மீண்டும் காட்டினால்தான் இந்த மாதிரி பேசுவதை குறைப்பாய் என்று நான் நினைக்கிறேன்… நீ என்ன நினைக்கிறாய்?” என்று தானும் ஆத்திரப்பட்டு பேசத் தொடங்கியவன்¸ ஏளனமாகக் கேட்டு முடித்தான்.
“ஒரு மண்ணும் நினைக்கவில்லை” என்று வெடித்தவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
காரை அதற்கான இடத்தில் பார்க் செய்துவிட்டு அவன் வந்தபோது சிறுவர்கள் அனைவரும் சென்றிருந்தனர். வித்யாவும் இவன் கண்ணில் படும்படியான இடத்தில் இல்லை.
‘ஒழிந்துகொண்டாள் போல!’ என்றெண்ணியவாறு அமர்ந்தவனிடம் வந்த கனகம் முகிலன் கொண்டுவந்த பத்திரிக்கையைக் கொடுத்து “நம் சார்புப் பத்திரிக்கை ரெடியா கோகுல்?” என்று கேட்டார்.
“நேற்றைக்கே வந்துவிட்டதுமா… நான் ஆபிசில் விட்டு வந்துவிட்டேன். இன்றைக்குத்தான் எடுத்துவந்தேன்” என்று சொல்லி தன் அலுவலகப் பையில் இருந்தவற்றிலிருந்து ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
“என்றைக்கு கொடுக்கத் தொடங்குகிறாய்? சித்தப்பா வீட்டில் காட்டினாயா?” என்று கேட்க¸ “இன்றைக்கு வரும்போதே சித்தப்பா வீட்டுக்கு போயிட்டுதான் வந்தேன். நாளைக்கே தொடங்கிவிட வேண்டியதுதான்” என்று சொன்னவன்¸ சொன்னதுபோல மறுநாளே தொடங்கிவிட்டான்.

Advertisement