Advertisement

அத்தியாயம் – 18
வித்யா மகளுடன் கீழே சென்றபோது கோகுலும் கனகமும் சாப்பிடத் தயாராக அமர்ந்திருந்தனர்.
“வாம்மா வந்து உட்கார்…” என்றவரிடம் “சாரி அத்தை… அங்கே ரொம்ப நேரம் நின்றது¸ காலில் நல்ல வலி. அதான் அப்படியே தூங்கிவிட்டேன்” என்றவாறு அமர்ந்தாள். மகளை விழிக்கச் செய்து மடியில் அமர்த்தி ஊட்டிவிடத் தொடங்கியவள் “என்னை நீங்க எழுப்பியிருக்கலாமே அத்தை?” என்றாள்.
“நீ தூங்கும்போது இடையில் எழுப்பினால் உனக்குப் பிடிக்காதேம்மா… அதனால்தான் எழுப்பவில்லை” என்று அவர் சொல்ல ‘நான் எப்போது…? என்ன சொல்கிறார்கள் இவர்கள்? நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்றைக்கு வந்து இவர்கள் எழுப்பினார்கள்? இங்கு வந்த இந்த மூன்று நாட்களில் நான் பகலில் தூங்கவேயில்லை… பின் எப்போது?’ என்று யோசித்தவள் சட்டெனத் திரும்பி கணவனைப் பார்த்தாள்.
அவன் இவர்களது பேச்சைக் கண்டுகொள்ளாமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.
அவளுக்குப் புரிந்துவிட்டது ‘ம்… இவர்கள் சொல்வது அந்த யாரோ ஒருத்தியையாகத்தான் இருக்கும்!’ இதுபற்றி இப்போது கேட்க முடியுமா என்றும் தெரியவில்லை…
சாப்பிட வைத்து ஒரு கப் பாலையும் கொடுத்ததும் வித்யாவின் மடியிலே தூங்கிவிட்டாள் நிவேதா.
இனி அவள் சாப்பிட வேண்டும். நிவேதாவை அவளறையில் விட்டுவிட்டு வந்துவிட வேண்டியதுதான் என்றெண்ணி அவளைத் தூக்கியவாறு எழுந்தவளின் கையைப் பிடித்தமர்த்தினான் கோகுல்.
“நீ சாப்பிடு… நான் தூக்கிட்டுப் போறேன்” என்று சொல்லி மகளைத் தூக்க குனிந்தான்.
குனிந்து தூக்கியபோது அவனது மூச்சுக் காற்று வித்யாவுக்கு வெகு அருகில் வீசி அவளை என்னவோ செய்தது… மூச்சை இழுத்துப் பிடித்தவாறு அமர்ந்திருந்தவள்… அவன் விலகிய பிறகுதான் இயல்பாக மூச்சை வெளியிட்டாள்.
சாப்பிட்டு முடித்தவள் சற்றுநேரம் மாமியாருடன் பேசலாமென்று அமர்ந்தாள். தானும் பேச எண்ணியவறாக “வித்யா… முன்னாடி உங்களுக்குள் என்ன மனக்கசப்பு இருந்து நீ அவனை விட்டுப்போனாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால்… இந்த நான்கு வருடமும் அவன் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். நீ அவனைப் புரிந்து கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளம்மா…” என்றவர்
தொடர்ந்து “இந்த மாதிரி நான் அட்வைஸ் பண்ணுவது உனக்குப் பிடிக்காது என்று தெரியும். இருந்தாலும் மகன் வாழ்க்கை பாழாகிவிடுமோ என்ற கவலையில் சொல்லிவிட்டேன் தவறாக இருந்தால் மன்னித்துவிடம்மா…” என்று மன்னிப்பும் கோரினார்.
“ஐயோ அத்தை..! என்ன நீங்க பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க! எனக்கு எதுவுமே புரியவில்லை…  நீங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றாள் நிஜமாகவே அவளுக்கு அவர் இப்படியெல்லாம் பேசுவதற்கான காரணம் தெரியவில்லை.
“நீ இப்படி தன்மையாக பேசுவதிலிருந்தே… முன்பு போலில்லாமல் ரொம்பவும் மாறிவிட்டாய் என்பது தெரிகிறது. ரொம்ப சந்தோஷம்மா… போ… போய்த் தூங்கு. கோகுல் உனக்காக காத்திருப்பான்” என்று மருமகளை மேலே அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்.
அறைக்குச் சென்றவள் கணவனிடம் “உங்கக்கிட்ட கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள்.
“என்ன பேசணும்?” என்று கேட்க
“உங்கள் மனைவி யார்? அவர்கள் இருக்கிறார்களா..? இல்லையா..?” என்று நேரடியாகத் தான் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டாள்.
ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் “என்ன கேள்வி இது? என் மனைவி நீதான். நீ இங்கேதானே இருக்கிறாய்?” என்று அவளைக் கேட்டான்.
“இல்லை… நான் கேட்பது என்னைப் பற்றியில்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதோடு உங்கள் அம்மா நான் மரியாதையில்லாமல் நடந்ததாக சொன்னார்கள். அப்படி எதுவும் நடந்ததாக எனக்கு நினைவில்லை… உண்மையைச் சொல்லுங்கள்¸ உங்கள் மனைவி யார்?”
“நீதான் என் மனைவி. நீ இங்கே… என்னருகிலே இருக்கிறாய் இதுதான் உண்மை. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்று முடித்துவிடப் பார்த்தான் அவன்.
“இப்போது நீங்கள் எனக்கு உண்மையை சொல்லவில்லையென்றால்… நான்… நான்… போலீசில் புகார் செய்வேன்” என்றாள் அவள்.
அவள் அப்படி சொன்னதும் அவனுக்கு சிரிப்புண்டாகிவிட “போலீசிடமா..? என்னவென்று புகார் செய்வாய்?” என்று புன்னகையுடனே கேட்டான்.
‘நான் இவ்வளவு சீரியசாகப் பேசிக் கொண்டிருக்கும்போது சிரிப்பு வருகிறதா?’ என்று நினைத்தவள்,
“நான் உங்கள் மனைவி இல்லை என்று சொல்வேன். கூடவே நீங்கள் சொன்ன எல்லா பொய்களையும் சேர்த்து சொல்வேன்” என்றாள்.
“அட மண்டு வித்யா!! போலீசிடம் போவதானால் ஆதாரம் வேண்டும். அதற்கு என்ன செய்வாய்?” என்று கேட்டவன்¸ அவள் தன்னிடம் இல்லையென்பதைச் சொல்லாமல் விழித்துக் கொண்டிருப்பதை சற்றுநேரம் பார்த்திருந்துவிட்டு “உன்னிடம் எந்த ஆதாரமும் இல்லையென்று எனக்குத் தெரியும். ஆனால்… என்னிடம் நம் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறது¸ பார்க்கிறாயா..?” என்று அந்த ஆல்பத்தை எடுத்து நீட்டினான்.
இப்போது நடந்த இவர்கள் திருமணத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அல்லது சர்ட்டிபிகேட்டைக் காட்டுவான் அதை வைத்தே அவன் சொல்வதுபோல ஐந்து வருடங்களுக்கு முன்பாக அவனுடன் தனக்குத் திருமணம் நடக்கவில்லை என்பதை நிரூபித்துவிடலாம் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு அந்த ஆல்பத்தைப் பார்த்ததும் திகைப்பானது.
ஏனெனில் அவனுடன் திருமணக் கோலத்தில் புன்னகைத் தவழ நின்றுகொண்டிருந்தது சாட்சாத் ‘அவளே’தான்.
திகைப்பால் மூச்சுவிடக்கூட மறந்து நின்றிருந்தவளை நெருங்கி “என்னம்மா..? ஆதாரம் எப்படி?” என்று கேட்டு சிரித்தான்.
வெறித்துப் பார்த்தவாறு அவள் நின்றிருக்க “இதை அவர்களிடம் காட்டிவிட்டால் அதன்பிறகு உன் கேசை எடுத்து நடத்துவார்கள் என்றா நினைக்கிறாய்? ம்… சொல்லு…”
அவனது பேச்சை கவனிப்பதைவிடுத்து ஆல்பத்திலிருந்த திருமண நாளை ஆராய்ந்தாள்.
திருமணமான ஆண்டு இரண்டாயிரத்து பதினைந்து என்றிருந்தது.
அப்போது அவள் மதுரையில் படித்துக் கொண்டிருந்தாள்¸ கல்லூரி முதல் ஆண்டு.
உடனே கணவனிடம் திரும்பி “இல்லை… இது நானில்லை. நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய். இதிலிருப்பது என்னைப் போல இருக்கும் வேறு யாரோ… இவள்தான் உங்கள் மனைவி… நானில்லை” என்றவள்¸ அவன் ஒரு ஏளனச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க தொடர்ந்து பேசினாள்.
“அத்தோடு என்னால் நான் உங்கள் மனைவி இல்லையென்பதை நிரூபிக்க முடியும். குழந்தை பிறந்தால் பெண்களுக்கு வயிற்றில் வரைவரையாக இருக்கும் என்பார்கள்… நான் என்னிடம் பார்த்திருக்கிறேன்¸ அதுபோல எதுவும் இல்லை. இதையும் நீங்கள் மருந்து வாங்கி கொடுத்ததால் இல்லை என்று மறுத்துவிட்டால் இருக்கவே இருக்கிறது விர்ஜினிட்டி டெஸ்ட்… அதை செய்துவிட்… விடுங்கள்… விடுங்கள் என்னை…” என்று பேசிக் கொண்டேயிருந்தவள் அவனது பிடியிலிருந்து விடுபட முயன்று கொண்டிருந்தாள்.
அவ்வளவு நேரமும் அவள் பேசுவதை வேடிக்கையாகவே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘விர்ஜினிட்டி டெஸ்ட்’ என்ற வார்த்தையை அவள் சொன்னதும்¸ “ஏய்!” என்று ஆத்திரத்துடன் அவளது தோளைப் பற்றி உலுக்க ஆரம்பித்திருந்தான்.
உலுக்குவதை நிறுத்தியபின்னரும்¸ வலியால் துடித்தவளது தோளை அழுந்தப் பற்றியவாறே “அந்த டெஸ்ட எதற்கு செய்வார்கள் தெரியுமா?” என்று கேட்டான்.
“ஏன் தெரியாது? நான் உங்கள் குழந்தையின் அம்மா இல்லை¸ உங்கள் மனைவியும் இல்லை… கன்னிப் பெண்தான் என்று நிரூபிக்க” என்றாள் வலியுடனே.
“நீ இப்போது என் மனைவி… அதற்கு இது சான்று…” என்று அவளது தாலிக் கொடியை தூக்கிக் காண்பித்துவிட்டு “இதைக் கட்டினால் அந்தப் பெண் கணவனுக்கு சொந்தம் என்று உனக்குத் தெரியாது? அத்தோடு உனக்கு அந்த டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் வராது” என்றான்.
“ஏன் வராது..? நான் நாளைக் காலையிலே மருத்துவமனை போய் டெஸ்ட் எடுத்துவிட்டு போலீசிடம் போவேன்” என்றாள் அவள்.
“நாளை காலை உன்னை போகவிட்டால்தானே போவாய்?” என்றான் அவன் திமிராக.
“ஏன் போகவிடாமல் என்ன செய்வீர்கள்? கட்டிப்போடுவீர்களா? அல்லது…” என்று ஆரம்பித்தவள் அவனது பார்வை தன் உடல்மீது படிவதைக் கண்டதும் உடல் விறைத்துவிட¸ தோள் மீது படிந்திருந்த அவனது கரங்களைத் தட்டிவிட்டு வெளியே செல்லத் திரும்பினாள்.
“உன்னை கட்டிப் போட்டுத்தான் தடுக்க முடியுமென்றில்லை” என்றவன் சட்டென அவளைத் தூக்கி படுக்கையில் போட்டு இருபுறமும் கைகளைப் பற்றி அவள் நகரமுடியாதபடி செய்து “சொல்லு… என்னால் உன்னை என்ன செய்யமுடியும் என்று கேட்டாயல்லவா..? செய்து காட்டட்டுமா..?” என்று கேட்டு அவள் முகம் நோக்கி குனிந்தான்.
“வேண்டாம்..!! வேண்டாம்…! நான் ஏதோ வேகத்தில் உளறிவிட்டேன். என்னை விட்டுவிடுங்கள்!! எனக்கு கை வலிக்கிறது… ப்ளீஸ்…” என்று கண்ணீர் சிந்த ஆரம்பித்த பின்னரும்கூட விலகாமல் அவள் முகம் நோக்கி குனிந்தான்.
வெறுப்பாலும் கோபத்தாலும் கண்களை இறுக மூடிக்கொண்டவளின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்தவன் எழுந்துவிட்டான்.
“மறுபடியும் இந்த மாதிரி முயற்சி செய்ய யோசிக்க வேண்டாம். அப்புறம் நான் என்ன செய்யவும் தயங்கமாட்டேன்” என்றவன் குட்நைட்டுடன் சோபாவில் படுத்துவிட்டான்.
வித்யாவுக்கு அழுகையாக வந்தது.
ஏன் கடவுளே என்னை இப்படி சாகடிக்கிறாய்? இவன் என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?
இவனை வருத்தப்பட வைக்க வேண்டுமென்று மணந்து வந்து இதுவரை எந்தவொரு விஷயத்திலும் அவனை வருந்த வைக்க இயலவில்லை. அவனது தாயாரிடமோ மகளிடமோ அவன் மீதான கோபத்தைக் காட்டலாம் என்றால் அவர்கள் முகத்தைப் பார்த்தாலே அப்படி எண்ணியிருந்ததே நினைவிற்கு வருவதில்லை.
இவன் ஏன் என்னை மணந்தான்? அவன் மனைவியைப் போலவே நான் இருக்கிறேன் என்பதால் மட்டுமே என்னை எப்படியேனும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெண்ணி மணந்து கொண்டானா?
ஏனெனில் அவனாக வேறு எதையுமே அவளிடம் கேட்டதில்லை.
மனைவியாக நடந்துகொள்ள முயற்சி செய் என்றான். அதையும் கூட வற்புறுத்தி சொன்னதில்லை. அவள் அதிகமாகப் பேசும் சமயங்களில் இந்த மாதிரி அத்துமீறல்களை செய்கிறான். மற்றபடி பார்வையால் ஒரு வருடல்¸ அவ்வளவுதான் அவள் விஷயத்தில் அவனது செயலாக இருக்கும்.
எப்படியானாலும் என்னை அந்த மாதிரி குணமுள்ளவளாக… எல்லோர் முன்பாக அவமானப்படுத்தி அவனை மணந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கிய இவனை… சும்மா விடக்கூடாது. இவன் செய்ததை மறக்கவும் முடியாது¸ மன்னிக்கவும் கூடாது.
தன் மனம் ஏன் இப்படி எதையெல்லாமோ நினைத்துத் தவிக்கிறது என்று புரியாமலே தூங்கிப்போனாள்.

Advertisement