Advertisement

அத்தியாயம் – 17
புதன்கிழமை காலையில் “வித்யா சீக்கிரம் கிளம்பு! மித்ரா நிச்சயத்திற்கு நாம்தான் மண்டபத்தில் எல்லா வேலையும் பார்க்கணும்” என்ற கோகுலிடம் “நான் வரவில்லை” என்றாள் அவள்.
“ஏன் வரவில்லை?”
“ஏனா..¸ அன்றைக்கு அந்த மண்டபத்தில் வைத்து அத்தனைபேர் முன்னிலையில் என்னை அசிங்கப்பட வைத்தீர்களே..! அது போதாதென்று மீண்டும் இந்த மண்டபத்தில் வைத்து அவமானப்படுவதற்கு நான் வர வேண்டுமா?” என்றாள்.
“அங்கே யாரும் உன்னை எதுவும் சொல்லமாட்டார்கள்… புறப்படு” என்று அன்றைக்கு அவள் கட்டுவதற்காகத் தான் வாங்கி வைத்திருந்த புடவையை எடுத்துக் கொடுத்தான்.
“இல்லை… அன்றைக்கு வந்திருந்த யாராவது இன்றும் வந்து அன்றைக்கு நடந்ததையெல்லாம் சொல்லி… நான் வரவில்லை” என்றாள் பிடிவாதமாக.
“ப்ச்… என்ன வித்யா இது சிறுபிள்ளை போல? அன்றைக்கு அந்த மண்டபத்திற்கு வந்திருந்த எல்லாருமே உன் பெரியம்மாவிற்குத் தெரிந்தவர்கள்¸ எனக்குத் தெரிந்தவர்களோ என் உறவினர்களோ இல்லை. இங்கு வரும் யாருக்கும் உன்னைத் தெரியாது அதனால் கவலைப்படாமல் கிளம்பு” என்று அமைதியாகவே எடுத்துக் கூறினான்.
புரிந்து கொள்ளாமல் ‘திருமண மண்டபம்’ என்ற அந்த வார்த்தையிலே நின்றவள் “என்னால் அங்கெல்லாம் வரமுடியாது… அன்று வந்திருந்த யாராவது வந்து எதையாவது சொல்லிவிட்டால் என்னால் அந்த அவமானத்தைத் தாங்கமுடியாது” என்று மீண்டும் அதையே சொல்ல¸
“அதுதான் அங்கிருந்தவர்களில் யாரும் எனக்குத் தெரிந்தவர்கள் கிடையாது என்றேனே! அதனால் அதையே வளவளவென்று பேசிக் கொண்டிராமல் கிளம்பு” என்றான் எரிச்சலுடன்.
கோபத்துடன் “என்ன வளவளன்னு பேசுறேனா? நான் என் கஷ்டத்தை சொல்வது உங்களுக்கு வளவளப்பாகப் படுகிறதா? நான் இப்படித்தான் பேசுவேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்” என்றாள் அவள்.
கையிலிருந்த சேலையை கட்டிலில் வீசியவன் “நீ இப்போது பேசாமல் கிளம்பிவிடுவது நல்லது… இல்லையென்றால் நான் உன் பேச்சை நீயே நிறுத்தும்படி செய்வேன்” என்றான் எச்சரிப்பது போல.
“என்ன.. அப்படி என்ன செய்துவிடுவீர்கள்? அடிப்பீங்களா..? இல்லை வேறெதுவுமா…?” என்று கேட்டவள்¸ அவன் எதுவும் பேசாமலிருக்க தொடர்ந்து பேசினாள்.
“என்வாய் நான் பேசத்தான் செய்வேன். உங்களால் என்ன…” என்று அவள் ஆரம்பிக்கும்போதே அவளை இழுத்தணைத்து அவள் இதழில் அழுத்த முத்தமிட்டான்.
முதலில் இதை எதிர்பார்க்காதவள் அவனது செயலைப் புரிந்து கொண்டதும் அவனிடமிருந்து விடுபட எண்ணி அவன் மார்பில் கை வைத்து அவனை விலக்கித்தள்ள முயன்றாள்.
ஆனால் அது இயலாமல்… அவனது பிடி இறுக்கமாக இருந்து அவளது முயற்சி வீணாகவும் கண்களில் கண்ணீர் வடியலாயிற்று.
கண்ணீரை உணர்ந்தவன் சட்டென அவளை விடுவித்து… பதட்டத்தில் உடல்நடுங்க நின்று கொண்டிருந்தவளிடம் “நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கிறேன் என்னிடம் பேசும்போது கொஞ்சம் நிதானித்து.. என்ன பேசுகிறோமென்று யோசித்து பேசு என்று. ஆனால் நீ அதை சுத்தமாக மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன். இப்போது அடம்பிடிக்காமல் சீக்கிரமாகப் புறப்பட்டு கீழே வா” என்று சொல்லிவிட்டு நடந்தான்.
அப்பொழுதும் “நான் கிளம்பவில்லையென்றால் என்ன செய்வீர்களாம்?” என்று அவள் கேட்கவும்¸ வாசலை நோக்கி நடந்து கொண்டிருந்தவன் திரும்பிவிட்டான்.
அவள் பக்கமாக அவன் நடக்கத் தொடங்கவும் கைகளால் வாயைப் பொத்திக் கொண்டாள்.
“ம்… இது நல்லது” என்றவன் “ஆனாலும் உனக்கு நான் புடவை கட்டிவிட வேண்டுமென எதிர்பார்க்கமாட்டாய் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என்றால் சொல்லிவிடு… நானே உனக்கு புடவை கட்டிவிடுகிறேன்” என்றவாறே புடவையைக் கையில் எடுத்தான்.
அதை அவன் கையிலிருந்து பிடுங்கி “நானே புறப்பட்டு வருகிறேன்” என்று அவனை வெளியேறச் சொன்னாள்.
“செய்” என்றவன் புன்னகையுடனே வெளியேறினான்.
தாயார்¸ மகள் மற்றும் மனைவி மூவரையும் மண்டபத்திற்க்கு அழைத்துச் சென்றான் கோகுல்.
வேலையாட்கள் மூலமாகவும் அலைபேசி மூலமாகவுமே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததால் அவர்கள் மண்டபத்திற்கு சென்றபோது கிட்டத்தட்ட எல்லாமே ரெடியாக இருந்தது. ஆனாலும் தன்னை உடன் வைத்துக் கொண்டு சில வேளைகளைப் பார்த்தவனுடன் அவனை நிமிர்ந்துபாராமலே சுற்றினாள் வித்யா. சற்று நேரத்தில் உறவினர்கள் வரத் தொடங்கி மித்ரா குடும்பத்தினரும் வந்தனர்.
“வாங்க அண்ணி!” என்றழைத்த மித்ரா¸ வித்யாவைத் தன்னருகிலே நிறுத்திக் கொண்டாள்.
மித்ரா புதுப் பெண்ணிற்குரிய அத்தனை அடையாளங்களுடனும் ஜொலித்தாளென்றால்¸ மணமகனாக வந்த முகிலனும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தான்.
நிச்சயப் பத்திரிக்கை வாசித்து தட்டு மாற்றிக் கொண்டனர். மோதிரம் மாற்றும் சடங்கின்போதும் அப்படியே மித்ராவின் அருகிலே இருக்க நேர்ந்தது.
கணவனருகில் நிற்பதற்கு இது பரவாயில்லை என்றே அவளுக்குத் தோன்றியது. ஏனோ..! அவனை நிமிர்ந்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.
காலையில் அவன் நடந்து கொண்டதை இப்போது நினைத்தாலும் உடல்நடுங்க ஆரம்பித்துவிடுகிறது.
கோகுலும் அவளைப் புரிந்து கொண்டதுபோல அவளிடம் அதிகமாகப் பேசவில்லை. அவனுக்குத் தெரிந்த மற்ற உறவினர்களிடமே பேசிக் கொண்டிருந்தான்.
அவர்களுக்கும் அவனது மனைவி எப்போது¸ எப்படி¸ எங்கே கிடைத்தாள் என்று தெரிய வேண்டியிருந்ததால் ஒருவர் மாற்றி ஒருவராக அவனிடம் விசாரித்தவண்ணமே இருந்தனர்.
எதையோ… ஆனால் மாற்றாமல் ‘அம்மா வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தாள்¸ படிப்பு முடிந்ததும் அழைத்து வந்தேன்’ என்ற ஒரே வாக்கியத்தையே அனைவருக்கும் சொல்லி சமாளித்தான். அவ்வப்போது மேடையில் நின்றிருந்த மனைவியிடம் பார்வை போகும்.
அவனைப் போல திரும்பித் திரும்பி பார்க்காவிட்டாலும் தங்கள் திருமணம் தொடர்பான நினைவுகளால் கணவன்புறம் திரும்பியவள்… அவன் பார்த்த அந்த நொடியிலே தானும் பார்த்துவிட… சட்டெனத் திரும்பி மித்ராவிடம் பேசிக் கொண்டிருப்பதுபோல பாவனை செய்தாள்.
மித்ரா தன் கோகுல் அண்ணனைப் பற்றி நிறைய பேசினாள்.
அண்ணன் தங்களுக்கு நிறையவே செய்திருக்கிறான்… தனக்கு இப்படி ஒரு நல்ல வரன் அமைவதற்கும் தன் கோகுல் அண்ணன்தான் காரணம் என்றாள்.
“அப்படி என்ன செய்தார்?” என்று கேட்டவளுக்கு¸ “என்ன செய்யவில்லை?” என்று கேட்டு சொல்லத் தொடங்கினாள்.
ஒரே ஊரிலிருந்தும் ஒட்டுதலின்றி இருந்ததைக் கூறினாள். தன் அண்ணனால் ஏற்பட்ட கஷ்டத்தையும்¸ தன் அப்பாவால் முன்பு கோகுல் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட துன்பத்தையும் சேர்த்து கூறினாள்.
‘இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்’ அவனது நல்ல குணத்தைக் கேட்டதும் மரியாதை உண்டானது. இந்த காலத்தில் எல்லோராலும் இப்படி தனக்கு துரோகம் இழைத்தவருக்கும் நல்லது செய்ய முடிவதில்லையே..! இவன் பரவாயில்லை…
என்னதான் அவன் மேல் மரியாதை உண்டானாலும்¸ அவன்மேல் பாசம்¸ நேசமெல்லாம் உண்டாகுமா என்று தெரியவில்லை.
‘அவன் ஏன் என்னிடம் இப்படி? ம்கூம்…’ என்று பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.
அவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் தன்னால் அவனுக்கு ஒரு முழுமையான மனைவியாக மாற முடியாது என முடிவு செய்தாள்.
முடிவை அவள் மட்டும் எடுத்தால் போதுமா? அவனது எண்ணம் வேறாக அல்லவா இருந்தது.
நிச்சயதார்த்த விழாவின்போதே கனகம் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தன் மருமகளை அறிமுகம் செய்து வைத்தார்.
“இவ்வளவு நாட்களாக எங்கள் கண்ணில் காட்டாமல் எங்கேதான் ஒளித்து வைத்திருந்தீர்களோ?” என்றார் தூரத்து உறவுக்கார பெண்மணி ஒருவர்.
“எங்கேயும் ஒளித்து வைக்கவில்லை. அவள் அம்மா வீட்டிலிருந்து படித்துக் கொண்டிருந்தாள். படிப்பு முடிந்ததும் மகன் போய் அழைத்து வந்துவிட்டான்” என்றார் அவர்.
“நாலு வருடமாக கண்ணிலே காணவில்லை..?” என்றார் அந்த பெண்மணி அப்போதும் திருப்தியுராமல்.
“பையனும் பேத்தியும் அப்பப்போ போயிட்டுத்தான் வருவாங்க… இவள் படிப்பு முடிந்த பிறகுதான் வருவேன் என்று சொல்லி… அப்படியே வந்திருக்கிறாள்” என்று சாதாரணமாகக் கூறுவதுபோலப் பேசி சமாளித்துவிட்டார்.
அவர்களும் அதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்காமல் வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு பெண் நான்கு ஆண்டுகளாக இல்லாமல்.. திடீரென வந்துவிட்டதால் விசாரிக்கிறார்கள். அது தப்பில்லை¸ ஆனால்… மாமியாரின் பதிலும் சமாளிப்பாகவே தோன்றியது.
எல்லா விஷயமும் தெரிந்தவன் அவன் ஒருவன்தான். கேட்டால் சொல்வானா? பார்க்கலாம்.
மித்ராவிடமிருந்து விலகி… சற்றுநேரம் மாமியாரை கவனித்தவளது பார்வை நிவேதாவின் புறம் திரும்பியது. மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுக்கு ஆடிக் கொண்டிருந்தவள் அருகில் வந்து “அம்மா நான் நல்லா ஆடறேனா..?” என்று கேட்டு கையைக் காலை நீட்டி ஆடினாள்.
“ம்ம்… சூப்பரா ஆடுறே..” என்று மகளை உற்சாகப்படுத்துமாறு கைத்தட்டினாள். அடுத்து ஒலித்த பாடல் அவளுக்கு மிகவும் பிடித்த நண்பன் படப்பாடல்.
“ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே…” என்று மென்மையாக ஒலித்தது. பாடலுடன் சேர்ந்து அவளும் பாடல் வரிகளை முணுமுணுத்தாள்.
அதன்பின்னர் விழா முடிந்து உறவினர்கள் சென்று இவர்களும் விடைபெற்றுக் கிளம்பும்வரையும் கூட வித்யா அவ்வப்போது அந்தப் பாடலை முணுமுணுத்தவண்ணமே இருந்தாள்.
எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தபோது மாலையாகிவிட்டது.
அறைக்குள் சென்று புடவையைக் களைந்து குளித்துவிட்டு சுடிதாருக்கு மாறியவள் நிவேதாவையும் குளிக்க வைத்து சற்றுநேரம் படுக்க வைத்தாள். தூங்காமல் இவளது கையைப் பிடித்து “நீங்களும் படுங்கம்மா…” என்று இழுத்தவளிடமிருந்து விலகிச் செல்ல விரும்பாமல் அருகில் படுத்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.
தூக்கத்தில் யாரோ அவள் பெயர் சொல்லி அழைப்பதுபோலத் தோன்ற மெதுவாக கண் திறந்து பார்த்தாள்.
கூப்பிட்டுப் பார்த்து அவள் எழவில்லை என்றதும் தட்டி எழுப்பலாம் என்று அருகில் வந்த கோகுலின் முகத்தை வெகுஅருகில் கண்டவள்¸ அவசரமாக எழுந்தமர்ந்து உடை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு “என்ன?” என்றாள்.
அவளது செய்கையில் சிரித்தவன் “ஒன்பது மணி ஆகிறது… ரெண்டுபேரும் சாப்பிடாமலே படுத்துட்டீங்க. சாப்பிட்டுவிட்டு வந்து படுங்க” என்று அவளிடம் சொல்லிவிட்டு¸ மகளை எழுப்பினான்.
அவள் எழாமல் முரண்டு பண்ணவே “நீங்க போங்க… நான் கூட்டிட்டு வர்றேன்” என்றதும் அவன் வெளியேறினான்.
“நிவிம்மா… எழுந்திரிங்க… கொஞ்சமா சாப்பிட்டு வந்து படுக்கலாம்… வாடா கண்ணா… சீக்கிரம்…” என்றழைத்தாள்.
“வேண்டாம்மா…”
“என் பட்டுக்குட்டி இல்லே! நிவேதா எழுந்திருங்க செல்லம்…” என்று அப்படியே அவளை தூக்கிச் சென்று முகம் கழுவிவிட்டாள். உறக்கம் சரியாகக் கலையாததால் வித்யாவின் தோளில் சாய்ந்தவாறு படுத்துவிட¸ தானும்  முகம் கழுவி கீழே வந்தாள்.

Advertisement