Advertisement

அத்தியாயம் – 16
அளவெடுத்துத் தைத்ததுபோல பிளவுஸ் கச்சிதமாக இருந்தது. வெங்காய நிற பட்டுப்புடவையை நேர்த்தியாக அணிந்து அறையிலிருந்த கண்ணாடி முன் சென்று நின்றாள் வித்யா. சுடிதாரை விட சேலையில் சற்று பெரியவளாக தெரிவதாகத் தோன்றியது.
ஹாலுக்கு வந்து பார்த்தபோது நிவேதாவும் புது உடையிலிருந்தாள்.
காஃபி கொண்டு வந்து கொடுத்த வசுமதி “சேலை உனக்கு பிடித்திருக்கிறதா..?” என்று கேட்க “ம்… ரொம்ப…” என்று சிரித்தாள்.
தாயாரைப் பார்த்தவாறே “பாட்டி என்கிட்ட கேட்கமாட்டீங்களா?” என்று கேட்டவளிடம்¸ “சொல்லுடா குட்டி… உனக்கு டிரெஸ் பிடிச்சிருக்கா?” என்று கேட்க “ம்…” என்று யோசனை செய்வதுபோல பாவனை செய்து “சூப்பரா இருக்கு என் அம்மா டிரெஸ் போலவே… இல்லையாம்மா..?” என்று கேட்டதும் வித்யாவும் “ரொம்ப அழகு” என்றதும் தாயாரின் கன்னத்தில் இதழ் பதித்தாள் நிவேதா.
வசுமதியுடன் மித்ராவும் சேர்ந்துகொள்ள நால்வருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது சித்தப்பாவுடன் உள்ளே நுழைந்த கோகுல், வித்யாவை ஆவலாகப் பார்த்தவாறே நடந்தான்.
காலையில் கட்டியிருந்த கல்யாணப் புடவையில் கூட இப்படி பளிச்சென்று தெரியவில்லை… சுடிதாரில் சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். இப்போது உடுத்தியிருக்கும் இந்த சேலை உடலைச் சுற்றி¸ உடல் வளைவுகளை அழகாக எடுத்துக் காட்டியது. ‘அந்தப் புடவையாக தான் இருக்கக்கூடாதா?’ என்றெண்ணத் தூண்டியது.
மித்ராவுடன் பேசிக் கொண்டிருந்தவளது பார்வை சற்று விலகிய அந்த நேரத்தில் அவனது பார்வையை சந்தித்துவிட அவளுக்கு படபடப்பாகிவிட்டது.
‘இது என்ன ஆளை விழுங்கும் பார்வை?’
சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளது முகம் திருப்புதலைக் கவனிக்காதது போல அவர்களை நெருங்கியவன்¸ “சித்தி எனக்கும் ஒரு கப் காஃபி தர்றீங்களா..? கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்குது…” என்றதும் “இதோ… இப்பவே கொண்டு வர்றேன்ப்பா…” என்று சமையலறை நோக்கி நடந்தார் வசுமதி.
“மித்ரா… ஒரு சின்ன ஹெல்ப்!” என்றவன்¸ தங்கள் மூவரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுக்குமாறு கூறி அவளையும் எழுப்பிவிட்டுவிட்டு வித்யாவை நெருங்கியவாறு அமர்ந்தான்.
சட்டென வித்யா எழப்போகவும் முகம் இறுகியவன்¸ அவளது கையைப் பிடித்து அமரவைத்தான். அப்போதும் முறைத்தவாறே அமர்ந்தவளிடம் “போட்டோ எடுக்கத்தான் வந்தேன்¸ உன்னை ரேப் பண்ண இல்லை” என்று தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு மகளை அழைத்துத் தன் மடியில் அமர்த்தி ‘தயாரா?’ என்று கேட்டு நின்ற மித்ராவிடம் “ஓ.கே. இப்போ எடுக்கலாம்” என்று தலையாட்டினான்.
மித்ரா சில போட்டோக்களை எடுத்து முடித்ததும் வசுமதி கொண்டு வந்த காஃபியைக் குடித்தவன்¸ “சரி சித்தப்பா நேரமாயிடிச்சு… நாங்க கிளம்புறோம்” என்று எழுந்தான்.
“புதன்கிழமை நான் கார் அனுப்புறேன்… நேரா மண்டபத்துக்கு வந்துடுங்க…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
வீடு திரும்பும்போதும் நிவேதா தூங்கிவிட்டாள். இந்த முறை வித்யாவும் பின்பக்கமே அமர்ந்திருந்ததால் மகளது கால்களை அவள் தூங்குவதற்கு வசதியாகத் தன் மடியில் போட்டுக் கொண்டாள்.
கோபமாக இருந்தான் போலும்¸ போகும்போது ஒரு வார்த்தைகூட அவன் பேசவில்லை… முகமும் உர்ரென்று இருந்தது.
வீட்டையடைந்ததும் அவன் தாயாரிடம் சற்றுநேரம் பேசியிருந்து இரவுச் சாப்பாட்டையும் முடித்துவிட்டு தூங்கச் சென்றனர். நிவேதா வரும்போதே தூங்கியிருந்ததால் அவளது அறையில் படுக்க வைக்கப்பட்டிருக்க… வித்யா அவளை பார்க்கச் சென்றாள்.
சின்னவளைப் பார்த்துவிட்டு வெளியே வந்தவள்¸ எங்கு தூங்குவது என புரியாமல் மாடியில் உலாவத் தொடங்கினாள்.
மகளைப் பார்க்கச் சென்றவள் வெகுநேரமாகியும் வரவில்லை என்றதும் அவளைத் தேடி வந்தவனுக்கு… முகத்தில் யோசனையுடன் நகத்தைக் கடித்தவாறு உலாவிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் புரிந்துவிட்டது.
‘இரவை எப்படி என்னுடன் கழிப்பது என்றுதான் பயங்கர யோசனைபோல?’
அருகில் சென்று “ம்க்கும்…” என்று தொண்டையை கனைத்துக் கொண்டான்.
நடந்துகொண்டிருந்தவள் நின்று திரும்பிப் பார்க்கவும் “அளந்துவிட்டாயா? எத்தனை அடி?” என்று கேட்டான் கோகுல்.
“எ.. என்ன? எத்தனை அடி?”
“ரொம்ப நேரமாக நடந்துகொண்டிருந்தாயே! இந்த வராண்டாவின் தூரத்தை அளக்கத்தான் நடக்கிறாயோ என்று நினைத்தேன்…” என்று சாதாரணமாகச் சொல்வதுபோல சொல்லவும்¸ “அது… வந்து… எனக்குத் தூக்கம் வரவில்லை அதனாலதான் நடந்து கொண்டிருந்தேன்” என்று திக்கித் திணறினாள் அவள்.
“பொய் சொல்றே…”
“இல்லை…” என்று அவள் மறுக்க¸ “ஆமாம் பொய்தான். மணி என்ன தெரியுமா? பதினொன்று முப்பது” என்றவன் அவள் நடந்து கொண்டிருந்ததற்கான காரணத்தைக் கேட்காமல் “எனக்கு நல்லா தூக்கம் வருது… வா¸ உள்ளே வந்து படு” என்று அழைத்தான்.
“இல்லை¸ நான் இதைவிட அதிக நேரம்கூட தூங்காமல் இருந்திருக்கிறேன்” என்றாள் அவள் செல்லாமல்.
“லேட்டாகி தூங்கினா தலைவலி வரும்… வந்து படு” என்றான் அவன் மறுபடியும்.
“உங்களுக்குத் தலைவலி வரும்னா நீங்க போய் படுங்க. என்னை ஏன் கூப்பிடுறீங்க?” என்றாள் அவள் பயத்தை வெளிக்காட்டாதவாறு.
“ஏய் மரமண்டை உனக்கு தூக்கம் வருது..! ஆனால் என்கூட ஒரே ரூம்ல இருக்க பயப்படுறே! அதானே உண்மை?” என்று அவன் கேட்க¸ “ஏன் நீங்க சிங்கமா? இல்லை புலியா? உங்களைப் பார்த்து பயப்படுவதற்கு?”  என்றாள் அவள். ‘உனக்கு நான் பயப்படவில்லை’ என்று காட்ட எண்ணி.
“சரி சரி உனக்கு பயம் இல்லை… நீ பெரிய ‘ஜான்சி ராணி’ தான் என்று ஒத்துக் கொள்கிறேன். பேசி நேரத்தை வீணாக்காமல் வந்து படு” என்றான் மீண்டும்.
“படு… படு… ஒரே படுதானா? எனக்கு தூக்கம் வரும்போது நானே வந்து படுக்கிறேன்” என்றாள் எரிச்சலைக் காட்டி¸ அப்போதும் அவன் போகாமல் நின்று பார்க்கவும் “நீங்க போங்க… போய் தூங்குங்க¸ குட்நைட்” என்று முடித்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கிவிட்டாள்.
அதற்குமேல் வற்புறுத்த விரும்பாமல் சென்று படுத்தவன் உடனே தூங்கிவிட்டான்.
அவன் சென்ற பின்னரும் அரைமணி நேரம் நடந்தவள்¸ கால்கள் வலிக்க ஆரம்பிக்கவும் அங்கே கிடந்த ஒற்றை சோபாவில் படுத்து உறங்கினாள்.
இடையில் விழித்த கோகுல் மணியைப் பார்த்தான்¸ இரண்டு.
கட்டிலில் அவள் இல்லையென்றதும் அறையிலிருந்த சோபாவைப் பார்த்தான். அதிலும் அவள் இல்லை எனவும் ‘இன்னமுமா அவள் நடந்து கொண்டிருக்கிறாள்?’ என்று கோபத்துடனேதான் வெளியேறினான்.
அங்கே… அந்த ஒற்றை சோபாவில் கால் மடித்து அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தாள். அருகில் சென்றவனுக்கு அவளது உதடுகள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
அடுத்த அறையிலிருந்த மகள் நிம்மதியாகத் தூங்குவதை சென்று பார்த்துவிட்டு வந்தவன்… மனைவியை மெதுவாக அவளது தூக்கம் கலைந்துவிடாமல்¸ கையில் தூக்கி வந்து தங்கள் கட்டிலில் படுக்கவைத்து போர்த்திவிட்டு… அறையின் மறுபுறத்திலிருந்த நீண்ட சோபாவில் படுத்து உறங்கிவிட்டான்.
எப்போதும் சீக்கிரமாக எழுந்துவிடும் பழக்கமுடையவளுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்துவிட புரண்டு படுத்தாள்… மெத்தை சுகமாக அமுங்கிக் கொடுக்க… சட்டென எழுந்து அமர்ந்தாள்.
‘வெளியே சோபாவில் படுத்திருந்த நான் எப்படி இங்கே?’
என்றெண்ணியவாறே கட்டிலைவிட்டு இறங்கினாள்.
நடந்தவளுக்கு ஆழ்ந்த தூக்கத்திலிருந்த கோகுல் தென்பட்டான்.
இவன் சோபாவில்¸ அப்படியானால் இவன்தான் என்னைத் தூக்கி வந்திருக்க வேண்டும்.
என்ன தைரியம் இவனுக்கு?
ஆனால்… இவன் என்னைத் தூக்கி வந்ததைக் கூட அறியாமல்… அப்படியென்ன பெரிய தூக்கம்? தூக்கி வந்தவன் என்னைத் தொடாமல் தூக்கியிருக்க முடியாது. அப்படி தூக்கும்போது அந்நியர் தொட்டால் ஏற்படும் தொடுஉணர்ச்சியைக் கூட அறியாமல் ஜடம்போல கிடந்திருக்கிறேன் என்றால்… மேலே யோசிக்கப் பிடிக்காமல் குளிக்க சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்தபோதும் தூக்கத்திலிருந்தவனைப் பார்த்தவாறே அறையைவிட்டு வெளியேறினாள்.
காலை ஆரத்திக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மாமியாரிடம் சென்று “நான் ஏதாவது செய்யட்டுமா அத்தை?” என்று கேட்டாள்.
“வாம்மா…! படத்துக்கு இந்த மலர்களை வைத்துவிட்டு விளக்கை ஏற்று…” என்றதும்¸ அவர் சொன்னதை செய்து அவளும் அவருமாக சில ஸ்லோகங்களையும் சொல்லி முடித்துவிட்டு வெளியே வந்தனர்.
“என்ன சமையல் அத்தை? நானும் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டவளிடம் “என்ன சமையல் என்று சொல்லிவிட்டால் சமையல்காரியே செய்துவிடுவாள். இன்றைக்கான காலை மெனுவை நான் நேற்றைக்கே சொல்லிவிட்டேன். அதனால் இப்போதைக்கு நான் ஃப்ரீ தான். உனக்கு நேரம் போகவில்லையென்றால் புத்தகம் படி¸ டி.வி. பார்¸ இல்லையென்றால் தோட்டத்தைப் பாரேன்” என்று தனக்குத் தெரிந்த சில வழிகளைக் கூறியவர் தன்னறைக்குள் புகுந்து கொண்டார்.
‘ஏன் உடனே போய்விட்டார்?’ என்ற யோசனையிலிருந்தவளை¸ நிவேதாவின் ஜல்ஜல்லென்ற கொலுசு சத்தம் கலைக்க “அடடே..! நிவிக்குட்டி எழுந்தாச்சா? வாங்க… ஹாலிடேன்னதும் சீக்கிரமே எழுந்தாச்சா..? இல்லை எப்பவுமே இப்படித்தானா?” என்று கேட்டாள்.
பள்ளி விடுமுறையானதால்தான் இப்படி என்று அவள் சொன்னதும் “பரவாயில்லைடா… ஆனால் எப்போதும் இந்த நேரத்துக்கே எழ முயற்சிக்கணும்” என்றவள்¸ “பிரஷ் பண்ணியாச்சா?” என்று கேட்டாள்.
“இன்னும் இல்லைம்மா…” என்று பதிலளிக்க¸ “காலையில எழுந்ததும் முதல் வேலையா பல்சுத்தம் பண்ணிடணும். அப்புறம்தான் ரூமைவிட்டே வெளியே வரணும்” என்றாள் தாயாக.
“ஓ.கே.ம்மா… இன்றைக்கு எனக்கு நீங்க பிரஷ் பண்ணி விடுறீங்களாம்மா? கவிதாக்கு தினமும் அவ அம்மாதான் பிரஷ் பண்ணி விடுவாங்களாம்மா!” என்று கேட்டு எப்போதும் குறிப்பிடும் தோழியைப் பற்றியும் சொல்லிவிடவும்¸ “சரி வா..” என்று அவளை அழைத்துச் சென்று பல் துலக்கி¸ தலைக்கு குளிக்க வைத்து¸ பெரியவர்கள் டவலால் முடியைச் சுற்றி கொண்டையிடுவதுபோல சுற்றிவிட்டாள்.
“ஹை..!! எனக்கு நிறைய முடி வந்துடிச்சி!! அதான் எனக்கு இவ்வளவு பெரிய கொண்டை வந்திருக்கு இல்லைம்மா..!” என்றாள் குதூகலத்துடன்.
ஒவ்வொரு பேச்சிலும் அவள் அம்மா என்ற வார்த்தையை விடாமல் பேசியது வித்யாவை இந்தப் பெண் தாய்ப் பாசத்திற்கு எவ்வளவு ஏங்கிப் போயிருக்கிறாள்? என்றெண்ண வைத்தது.
ஆனால் இவளைப் பெற்றவள் எங்கே? இவள் பாட்டியும் புதியவளைப் பார்ப்பது போலில்லாமல் நீண்ட நாள் பழகியவளிடம் பேசுவதுபோலவே பேசுகிறார். ஒரே குழப்பமாக இருக்கிறது…
இந்த குழப்பத்திலும் நிச்சயமாகத் தெரிந்த ஒரு முக்கியமான விஷயம் ‘அவளுக்குத்தான் இங்கிருப்பவர்கள் அனைவரும் புதுமுகம்! அவர்கள் எல்லோருக்குமே இவள் ஏற்கனவே அறிமுகமானவள்!’ என்பதுதான். இந்த விஷயத்தில் அவளுக்கு சந்தேகமே கிடையாது.
அவளுக்கு உண்மையைச் சொல்வதென்றாலும்… அது தெரிந்த¸ சொல்லக்கூடிய ஒரே நபர் அவன்தான்! கோகுல கிருஷ்ணன்!
இந்த யோசனைகளுடனே மகள் பேச்சிற்கு அவ்வப்போது பதில் பேசியபடி அவளுக்குத் தலைவாரிக் கொண்டிருந்தபோது கோகுல் அங்கு வந்து சேர்ந்தான்.
வந்தவன் “வித்யா… என்னோட ப்ரெண்ட் கூட சொல்வான்¸ அவனை தினமும் அவன் மனைவிதான் குளிக்க வைப்பாங்களாம்! எனக்குகூட ஆசையா இருக்கு… நீ என்னை குளிப்பாட்டி விடணும்னு.. செய்வியா?” என்றான் கண்களில் குறும்புடன்.
‘இவனை நான் குளிப்பாட்டணுமாமா..?’
அவன் முகத்தைப் பார்த்தாள்¸ கண்சிமிட்டிச் சிரித்தான் கோகுல்.
“நிவிக்குட்டி பெரியவங்க எல்லாம் அவங்களேதான் குளிக்கணும்னு உன் அப்பாகிட்ட சொல்லு” என்றவள் அறையைவிட்டு வெளியேறி தோட்டத்திற்குச் சென்றாள்.
மகளை சாப்பிடப் போகச் சொன்னவன்¸ தோட்டத்திற்குச் சென்று அவளை சாப்பிட அழைத்தான். நேரம் ஒன்பதைத் தாண்டியிருக்கவே பிகு செய்யாமல் அவனுடன் சென்று சாப்பிட்டாள்.
கோகுல் காலை உணவை முடித்துக் கொண்டு வெளியே சென்றுவிட¸ அன்றைய தினம் அவளுக்கு நீண்டு போரடித்து ஒருவாறு முதல்நாளைப் போலவே… ஆனால் எந்தவித வருத்தமும் இல்லாமல் கழிந்துவிட்டது.

Advertisement