Advertisement

அத்தியாயம் – 15
அவளது பதிலே தற்போது அவள் தன்னை கணவனாகத்தான் நினைக்கிறாள் என்று உணர்த்த புன்னகைத்தவன் பிரபாகரனைப் பற்றி பேசினான்.
“அந்த பிரபாகரனைப் பற்றி படித்தாயல்லவா..? அவனுடன் திருமணம் நடந்திருந்தால் நாளை நீ எங்கு இருந்திருப்பாய் தெரியுமா..? சவுதியோ… துபாயோ… ஏதோ ஒரு அரபு நாட்டில்… ஏதோ ஒரு சேக்கிடம் அடிமையாக இருந்திருப்பாய். அவன் உனக்கு பேசிய விலை என்ன தெரியுமா? முப்பது லட்சம்… அதிலிருந்து தப்பித்தாய் என்று சந்தோஷப்படு. அதைவிட்டு சும்மா என்னிடம் கோபப்படாதே..!  அது நம் வருங்கால உறவுக்கு நல்லதல்ல” என்று நல்லவிதமாகவே முடித்துக் கொண்டான் கோகுல்.
அவன் எனக்கு தீமை செய்ய இருந்தான்¸ அது ஒ.கே… ஆனால்¸ அதிலிருந்து காப்பாற்றி இவன் மட்டும் என்ன செய்திருக்கிறானாம். என் விருப்பமில்லாமல் கட்டாயத்தால்தானே இவனது தாலியை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. இது எதையும் அவனிடம் கேட்காமல்¸ அவன் கடைசியாக சொன்ன வார்த்தையை மட்டும் பிடித்து “அது என்ன வருங்கால உறவு?” என்று கேட்டாள்.
“ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள் வித்யா… நீ என் மனைவி! எனக்கு சொந்தமானவள்! திருமணம் முடிந்த பின் ஒரு தம்பதிக்குள் என்ன உறவு இருக்கும் என்று தெரியாத அளவு நீ ஒன்றும் சின்னப்பெண் இல்லை. அதனால் எதைப் பேசும் முன்பும் சற்று நிதானித்துப் பேசு” என்றவன் “இதைப்பற்றி மறுபடியும் நான் சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டாய் என நம்புகிறேன்” என்று சொல்லி காரை நிறுத்தினான்.
காரை விட்டிறங்கி அவளருகில் வந்த போதும் கூட அவள் அசையாமலே அமர்ந்திருக்க அவளைத் தொட்டு “சித்தப்பா வீட்டிற்கு வந்துவிட்டோம்… இறங்கு” என்றான்.
எந்திரத்தனத்துடனே அவள் இறங்கியபோது “ஹாய் அண்ணா¸ வாங்க..! இது அண்ணிதானே..! வாங்க அண்ணி” என்று அவர்களையடைந்ததும் வித்யாவின் கையைப் பிடித்த மித்ரா பேசத் தொடங்கிவிட்டாள். “அண்ணி உங்களை போட்டோவில் பார்த்த அன்றிலிருந்தே அழைத்து வரச் சொல்லி கேட்டேன். அண்ணா இன்றைக்குத்தான் அழைத்து வருகிறார்…”
கணவனின் பேச்சில் ஆடிப்போய் இருந்தவள்¸ மித்ராவின் பேச்சில் சற்று தேறினாலும் கணவனை மிரட்சியுடனே நோக்கினாள்.
அவளது பார்வையை புரிந்து கொண்டாலும் மித்ரா முன்பாக எதுவும் பேச இயலாததால் புரியாததுபோலக் காட்டி “இது என் தங்கை.. மித்ரா” என்று அறிமுகப்படுத்தினான்.
நாத்தனாரை நோக்கி சிறு புன்னகையொன்றை வெளியிட “அண்ணி நீங்க சிரிக்கும்போது ரொம்ப அழகா தெரியுறீங்க” என்றாள்.
அந்த சிறு புகழ்ச்சியிலே வித்யாவின் முகம் சிவந்துவிட்டது. அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் அவளது முகத்தையே பார்த்திருந்த கோகுல் “வாங்கண்ணா… உள்ளே போகலாம்” என்ற மித்ராவின் குரலில் கலைந்து விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்துவிட்டான்.
அண்ணனைத் தொடர்ந்து நடந்த மித்ரா அண்ணியார் தங்களைத் தொடரவில்லை என்பதை உணர்ந்ததும் அவளிடம் சென்று “என்ன அண்ணி?” என்றாள்.
“கார்ல நிவேதா தூங்கிட்டு இருக்கா… அவளைத் தூக்கணும். அவர் காரை லாக் பண்ணி…” என்று சொல்லி வந்தவள் மித்ராவின் சிரிப்பில் பேச்சை நிறுத்திவிட்டாள்.
எதற்கு சிரிக்கிறாள் என்பது புரியாமல் வித்யா பார்த்திருக்க¸ “அண்ணா…!” என்று கூவி அழைத்தாள் மித்ரா.
மனைவியும் தங்கையும் பின்னால்தான் வருகிறார்கள் என்றெண்ணி வீட்டுப் படியை அடைந்துவிட்டவன் தங்கையின் குரலில் திரும்பினான்.
வித்யா இன்னமும் காரின் அருகிலே நிற்பதைக் கண்டதும் புருவச் சுளிப்புடனே அவளிடம் வந்து “என்ன?” என்றான் கடுப்பாக.
அவள் பதில் பேசும் முன்பாக “என்ன அண்ணா… அண்ணியோடு வந்தால் மகளைக்கூட மறந்து காரை லாக் பண்ணிவிடுவீர்களா..?” என்று கேட்டு மீண்டும் நகைத்தாள் மித்ரா.
“ஓ..!!” என்று தன் பின்னந்தலையில் தட்டிக் கொண்டவன்¸ வித்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு கார்க்கதவைத் திறந்து மகளைத் தூக்கி தோளில் போட்டான்.
தூக்கம் கலைந்து விழித்தவள் தன்னை இறக்கிவிடச் சொல்லி வித்யாவின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்துவிட “சரியான அம்மா பைத்தியம்” என்று செல்லமாக சிறுமியின் தலையை வருடிவிட்டாள் மித்ரா.
நிச்சயம் சம்பந்தமான சில விஷயங்களை பேசி முடித்துவிட்டு “நீங்க யாரையெல்லாம் அழைக்கனும்னு நினைக்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் சொல்லிவிடுங்கள் சித்தப்பா..” என்றவன் எழுந்தான்.
“சரி…” என்று அவர் இழுக்கவும்¸ அமர்ந்து “என்ன சித்தப்பா… சொல்லுங்க..?” என்று கேட்க¸ அப்போதும் “கோகுல்… மாப்பிள்ளை.. வீட்டாருக்கு கொடுக்க என்னிடம் பணம் எதுவும் இல்லையே..!” என்று தயங்கித் தயங்கி தன் காரணத்தைக் கூறினார்.
“சித்தப்பா நான் முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறீர்கள்” என்றதும் “கமலேஷ் இருந்து செய்ய வேண்டியது.. அந்த படுபாவி எங்கே இருக்கிறானோ…!” என்றார் அவர்.
“மித்ரா எனக்கும் தங்கைதான் சித்தப்பா… அதனால் நானும் செய்யலாம்” என்றவன்¸ “நகையெல்லாம் அம்மா வாங்கி வைத்திருக்குறாங்க… கொஞ்சம் பட்டுப்புடவையும் எடுத்திருந்தார்கள். எல்லாமே மித்ராவுக்கு பிடித்ததாகத்தான் இருக்கும். கையில் ரொக்கம் கொடுப்பதற்குப் பதிலாக நிலம் எழுதிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நிலத்திற்கு எப்போதும் மதிப்பு ஏறிக் கொண்டே போகும். நம்ம மித்ரா பெயரில்தான் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறேன்…”
“முகிலனும் இதுவே சரியென்று சொல்லிவிட்டான். நிச்சயத்தை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எத்தனை பேருக்கு அழைப்பு கொடுப்பீர்கள் என்று சொல்லிவிட்டால் ஹோட்டலிலிருந்து சாப்பாடு சொல்ல வசதியாயிருக்கும்… அது வேண்டாமென்றால் சமையலுக்கு ஆள் ரெடி பண்ணிவிடலாம்…” என்று ஒவ்வொன்றாக அவன் பேசிக் கொண்டே போக பார்த்துக் கொண்டிருந்த வித்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
கமலேஷ் பெயர் வந்ததுமே வசுமதி மருமகளிடம் தான் பெற்ற மகனைப் பற்றி சொன்னதால்¸ அவளது மனம் தன் கணவனை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நோக்கியது.
தங்கை மகளாகவே இருந்தபோதும் காஞ்சனா வித்யாவுக்கு அவளுக்குரிய நகையைக்கூட கொடுக்க முன்வரவில்லை. இந்த கமலேஷ் பெற்ற தகப்பனாருக்கு ஆபரேஷனில் உதவவில்லை… இப்போது தங்கையின் திருமண ஏற்பாட்டிலும் பங்கு கொள்ள வரவில்லை. இவர்களுக்கு மத்தியில் சித்தப்பா மகளான தங்கைக்குச் செய்யும் கணவன் உயர்ந்தே தெரிந்தான்.
ஆனாலும்… எவ்வளவு நல்ல மனம் இவனுக்கு! நகை¸ நிலம்¸ திருமணச் செலவு என்று… கோடிகளில் இல்லாவிட்டாலும் லட்சங்களில் வருமே..!
‘என்னிடம் மட்டும் ஏன் கெட்டவனாகவே நடந்துகொள்கிறான்?’ என்றெண்ணியவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்த மனைவியின் பார்வை தன்னிடமே நிலைத்திருப்பதைக் கவனித்தவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டான்.
‘ச்சே..!’ என்று முகத்தை குனிந்து கொண்டாள் அவள். ‘என்ன நினைத்திருப்பான் என்னைப் பற்றி?’ என்று அந்த சிந்தனையிலே அமர்ந்திருந்தாள்.
அவளிடமிருந்து பார்வையைத் திருப்பி சித்தப்பாவிடம் பேச்சைத் தொடர¸ வெளியேயிருந்து வந்த மித்ரா வித்யாவிடம் “வாங்க அண்ணி… வீட்டை சுற்றிப் பார்க்கலாம்” என்று அழைத்தாள்.
இவர்களது வீடு கோகுலின் வீட்டைப் போல மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் அளவில் பெரியதுதான். பார்ப்பதற்கும் நிறைய இடங்கள் இருக்கும் நேரமும் சீக்கிரமாகக் கடந்துவிடும் என்றெண்ணி எழுந்தவளது பார்வை மகளைத் தேடி அலைந்தது.
“நிவேதா எங்கே? காணவில்லையே..!” என்று கேட்டாள்.
“உங்க மகளுக்கு வால் மட்டுந்தான் இல்லை.. அவள் என்ன பண்றான்னு தோட்டத்தில் வந்து நீங்களே பாருங்க” என்று சொல்லி முன்னே நடந்தாள்.
தோட்டத்திலிருந்த மலர்களை மொய்த்துக் கொண்டிருந்த பட்டர்பிளையை பிடிக்க நிவேதா முயன்று கொண்டிருக்க¸ அவளுக்கு உதவியாக தோட்டக்காரனும் அவற்றின் பின்னால் அலைந்துகொண்டிருந்தான்.
அத்தையுடன் வெளியே வந்த தாயாரைக் கண்டதும் “அம்மா இந்த பட்டர்பிளையை பிடிச்சி தாங்கம்மா… என் கையில சிக்க மாட்டேங்குது..” என்று அன்னையிடம் கேட்டவாறு தன் முன்னால் பறந்த பட்டர்பிளையை பிடிக்க ஓடினாள்.
வித்யாவுக்கும் தன் சிறு வயது நினைவிற்கு வந்துவிட… அவளும் பட்டர்பிளையை விரட்டினாள்.
தாயும் மகளும் சேர்ந்து பட்டர்பிளையின் பின்னால் ஓடுவதைக் கண்டதும் தோட்டக்காரன் ஒதுங்கிவிட¸ அவர்களைப் பார்த்து சிரித்தபடியே மித்ரா உள்ளே சென்று அண்ணனிடம் கூறி அவனை அழைத்து வந்தாள்.
வாசற்படியில் நின்று இருவரையும் ரசிக்கத் தொடங்கினான் கோகுல்.
ஒரு சாமந்தியின் மீதமர்ந்த பட்டர்பிளையைப் பார்த்தவள் மகளின் வாய்மேல் விரல் வைத்து ‘ஷ்ஷ்!’ என்று அவளை அசையாமலிருக்கச் சொல்லி அதைப் பிடிக்க குனிந்தாள்.
கீழே பாத்தி கட்டி தண்ணீர் பாய்த்திருந்ததைக் கவனிக்காமல் வித்யா ஓரடி எடுத்து வைக்க… அம்மாவை நெருங்கி வந்த நிவேதாவும் அவள் மேல் சாய… இருவரும் சேர்ந்து சகதியில் விழுந்தனர்.
இருவரும் கீழே விழுந்ததைக் கண்டதும் அவர்களிடம் ஓடினான் கோகுல். ஆனால் அவன் தங்களை நெருங்குவதற்க்கு முன்பாக எழுந்து மகளையும் எழுப்பிவிட்டிருந்தாள் வித்யா.
மனைவியும் மகளும் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்துவிட்டு உள்ளே சென்ற மித்ரா¸ கோகுல் அவசரமாக ஓடுவதைக் கவனித்து வெளியே வந்து பார்த்தபோது வித்யாவும் நிவேதாவும் சகதியில் உருண்டு எழுந்துநிற்க அவர்களுக்கருகில் நின்று சிரித்துக் கொண்டிருந்தான் கோகுல்.
பார்த்த மித்ராவுக்கும் சிரிப்புதான் வந்தது.
அண்ணனின் சிரிப்பால் அண்ணியின் கண்களில் நீர் பெருகிவிட தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு அண்ணனை அதட்டினாள்.
“பாருங்கண்ணா… அண்ணி அழறாங்க. நீங்க ஏன் இப்படி சிரிச்சீங்க? உங்களைப் பார்த்து நானும் சிரித்துவிட்டேன். ஒருத்தர் கீழே விழுந்தால் தூக்கிவிடாமல் இப்படித்தான் சிரிப்பாயா…?” என்று சிரிக்காமல் கேட்டாள்.
“மித்ரா… நான் அவர்களைப் பார்த்து சிரிக்கவில்லை” என்று சிரிப்பை அடக்க முயன்றவாறே பேசினான் கோகுல்.
“பின்னே.. எதற்காக சிரிச்சீங்கண்ணா?”
“அதுவா..?” என்று கேட்டு சிரிப்பை அடக்கிவிட்டு “ம்… இப்போ சொல்றேன். ஒரு சோப் விளம்பரம் பார்த்திருக்கிறாயா..? அதில் ஒரு டயலாக் வரும் கறை நல்லதுன்னு… குழந்தைங்க சகதி¸ பெயிண்ட் எதுலயாவது… இதோ இவங்களை மாதிரி வரும்போது அம்மாக்கள் இந்த டயலாக்கை சொல்லுவாங்க…”
“இவங்க ரெண்டுபேரையும் இந்தக் கோலத்தில் பார்த்ததும் அந்த விளம்பரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதா..? என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை” என்று மீண்டும் சிரித்தான்.
‘அப்பாடி..! அவன் என்னைப் பார்த்து சிரிக்கவில்லை. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?’ என்று தோன்றினாலும் இருவரின் விளையாட்டையும் ரசித்துதான் சிரித்திருக்கிறான் என்றதும் வித்யாவுக்கும் சிரிப்புவர¸ இவர்களைப் பார்த்து நிவேதாவும் சிரித்தாள்.
“வாங்க அண்ணி¸ நீயும் வாடா குட்டி… ரெண்டுபேரும் குளிச்சி வேற டிரெஸ் மாத்திட்டு வாங்க” என்று அழைத்தாள் மித்ரா.
“நாங்க வேற டிரெஸ் எடுத்துவரவில்லையே!” என்றாள் வித்யா மெதுவாக.
“நீங்க மூன்று பேரும் சேர்ந்து இன்றைக்கு வருவதாக அண்ணன் சொல்லியிருந்ததால்… முதன்முதலாக வருகிறவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று சொல்லி அப்பா வாங்கி வரச் சொல்லியிருந்தார். நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று அண்ணனிடம் கேட்டு நானே உங்களுக்கு பிளவுசும் தைத்துவிட்டேன். போட்டுப் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்” என்று சேலையைக் கொடுத்து அவளை ஒரு அறையில் விட்டுவிட்டு நிவேதாவை தன்னுடன் அழைத்துச் சென்றாள்.
இன்று மட்டுமே மூன்று முறை குளித்தாகிவிட்டது. எப்போது ஜலதோஷம் வரப்போகிறதோ..! என்றெண்ணியபடியே குளித்து உடைமாற்றினாள் வித்யா.

Advertisement