Advertisement

அத்தியாயம் – 14
மூவராக வீட்டை அடைந்தபோது கனகம் ஆரத்தியுடன் காத்திருந்தார்.
காரிலிருந்து இறங்கிய மருமகளையே பார்த்திருந்தவர் மகனிடம் திரும்பி ‘எப்படி?’ என்பது போல பார்க்க¸ அவன் லேசாக தலையசைத்தான்.
“வா போகலாம்…” என்று மனைவியின் கைபிடித்து நடந்தான். வித்யாவின் மற்றொரு கரம் நிவேதாவின் பிடியிலிருந்தது.
தகப்பனும் மகளும் இருபுறமும் நடக்க… வீட்டு வாசலை அடைந்தவளுக்கு இருவரோடும் சேர்த்து ஆரத்தி சுற்றிய கனகம் “வலது காலை எடுத்து வைத்து உள்ளே வாம்மா…” என்று அழைத்தார்.
‘இவருடைய மகன் என்னை இப்படித் திருமணம் செய்து கொண்டது இவருக்குத் தெரியுமா..?’ என்று யோசித்தவாறே நடந்தவளை அழைத்துச் சென்று  விளக்கேற்றச் சொல்ல¸ கணவனுடன் சென்று விளக்கேற்றி வந்தாள்.
திரும்பி வந்து தம்பதியராக காலில் விழுந்தவர்களை “எப்போதும் பிரியாமல் சந்தோஷமாக இருக்கணும்” என்று ஆசீர்வதித்தவர் “எப்படியிருக்கே வித்யா…? பார்த்து எவ்வளவு நாளாகிவிட்டது… நான்கு வருடங்கள்… நீ ஏன் அப்படி எங்களை விட்டுச் சென்றாய்? ஏன் எங்களிடம் வரவில்லை?” என்று கேட்டுவிட்டு “முடிந்தது போகட்டும்… இனிமேல் ஒற்றுமையாக இருங்கள்” என்றதுடன் முடித்துக் கொண்டார்.
‘என்னை இவருக்குத் தெரியுமா..?’ என்பது போல திகைத்துப் போய் பார்க்க “என்னம்மா அப்படி பார்க்கிறாய்?” என்று கேட்டார் அவர்.
“ஒன்றுமில்லை…” என்று அவள் தலையசைக்க¸ அத்தோடு அவளது பிரிவைப் பற்றிய அந்தப் பேச்சை விடுத்தவர் “சீக்கிரமே நம்ம நிவிகுட்டிக்கு ஒரு தம்பியோ தங்கையோ கொடுத்துவிடும்மா… அப்பத்தான் இந்த வீடு கலகலப்பாக மாறும்” என்று சொன்னார்.
அவரது பேச்சைக் கேட்டு சிரித்த கணவனை முறைத்துப் பார்த்தாள். அவன் அதற்கும் சிரிக்க¸ ‘சிரிக்கிறாயா…? நன்றாக சிரி… மறுபடி நீ சிரிக்கப்போவதே இல்லை… அதனால் நன்றாக சிரித்துக் கொள்’ என்று கறுவினாள்.
கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவாறே தாயாரிடம் பேசியவன்¸ பேசிமுடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு தன்னறைக்கு நடந்தான்.
உடன் நடந்தவனைப் பார்த்தவளது மனம் சற்றுமுன் சந்தித்த தன் மாமியாரைப் பற்றி சிந்தித்தது. ‘இவன் அம்மா என்ன இவனிடம் இவளை எப்படி¸ எங்கிருந்து அழைத்து வந்தாய்? என்று கேட்கவேயில்லை… ஒருவேளை மகனது வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லையோ..! ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி அக்கறையற்றவர் போலத் தோன்றவில்லையே…!’
அறைக்குச் சென்றதும் பார்வையும் சிந்தனையும் அந்த அறையின் வடிவமைப்பில் ஆழ்ந்தது. மிகப்பெரிய அந்த அறையின் அலங்காரம் அவளை மிகவும் ஈர்த்தது.
அங்கிருந்த சோபா¸ கார்ப்பெட்¸ வார்ட்ரோப்¸ டிரெஸ்ஸிங் டேபிள்… என ஒவ்வொன்றாக பார்வை செல்ல “அந்தப் பக்கம் பாத்ரூம் இருக்கு… வார்ட்ரோப்ல ரெண்டாவதுலயிருந்து உன் துணிகள்தான் இருக்கும்” என்று சொன்னவன்¸ மாற்றுடை எடுத்துக் கொண்டு வேறொரு அறைக்குள் நுழைந்து கொண்டான்.
‘அதுவும் பாத்ரூமா..? இல்லை உடைமாற்றும் அறையா…?’ என்றவளது கேள்விக்கு பதிலே போல சற்றுநேரத்தில் தண்ணீர் பாயும் சத்தம் கேட்டது.
அவன் சென்ற மறுநிமிடமே “அம்மா என்னோட ரூமை பார்க்க வர்றீங்களா..?” என்று வந்து நின்றாள் மகள்.
‘அப்புறம் பார்க்கிறேன்’ என்று சொல்ல நினைத்தவள்¸ இவனது அறை  இவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது… மகளது அறையை எப்படி அமைத்திருக்கிறான் என்று பார்க்க எண்ணி அவளுடன் நடந்தாள்.
அவளது அறையும் வெகு அழகாகவே இருந்தது.
இரண்டு சிறியவர்கள் தூங்கும் அளவிலான கட்டிலின் மேல் பிங்க் நிற படுக்கை விரிப்புடன் கூடிய மெத்தை¸ சுவற்றில் நுரையுடன் கூடிய கடல் அலை போன்ற வால்பேப்பர்¸ சீலிங்கில் இரவில் மிளிரும் ரேடியம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தகப்பனது அறையைப் போலவே இவளது அறைக்கும் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்தது.
தன் விளையாட்டுப் பொருட்கள்¸ பொம்மைகள்¸ பொம்மைகளுக்கு அணியும் ஆடைகள் என ஒவ்வொன்றாக காட்டினாள்.
குளித்துவிட்டு வெளியே வந்தவன் மனைவி அறையில் இல்லையென்றதும் வெளியே வந்தான்.
வித்யாவைத் தேடியவாறே நடந்தவனுக்கு மகளது அறைக்கருகில் சென்றபோது இருவரது குரலும் கேட்க அறை வாசலுக்குச் சென்றான்.
வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் இவனை கவனிக்கவில்லை.
நிவேதா நிறைய பேசப் பேச… வித்யா சலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தாள். சின்னவளின் பேச்சை கவனித்து அதற்கேற்ப பேசிக் கொண்டிருந்தவளுக்கு திடீரென முதுகில் துளைப்பது போன்ற உணர்வு ஏற்பட திரும்பினாள். அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவளது சிறுபிள்ளைத்தனமான செயலில் சிரிப்பு உண்டாக¸ புன்னகையுடன் “அம்மாவும் மகளும் என்ன பண்றீங்க..?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான்.
வித்யாவின் முகம் சிடுசிடுப்புக்கு மாற “அம்மாவுக்கு கதை சொல்லிட்டிருந்தேன்ப்பா…” என்றாள் நிவேதா.
“என்ன…! நிவிக்குட்டிக்கு கதை சொல்லக்கூட தெரியுமா..? நீ எனக்கு ஒருநாளும் சொன்னதில்லையே?” என்று கேட்டான்.
“நீங்க கேட்டதில்லையே..!” என்றாள் மகள் தகப்பன் தொணியிலே.
“ஓ.கே. கேட்காதது என் தப்புதான்… டைம் கிடைக்கும்போது அம்மாவோடு சேர்த்து எனக்கும் கதை சொல்ல வேண்டும்” என்று சொல்லி மகளைத் தூக்கி முத்தமிட்டு இறக்கியவன் “நீ குளிக்கவில்லையா வித்யா…? போ… போய் சீக்கிரம் ப்ரெஷ்ஷாயிட்டு வா… சாப்பிடப் போகலாம். அம்மா காத்திருப்பாங்க…” என்று அவளை அனுப்பினான்.
கணவன் சொல்வதற்குப் பணிந்து உடனே செல்ல விரும்பாவிட்டாலும்¸ குழந்தையின் முன்பாக மறுத்துச் சொல்ல மனமின்றி நடந்தாள்.
அறைக்குச் சென்றவள் மாற்றுடைக்காக வார்ட்ரோப்பின் முதல் கதவை திறந்து பார்த்தாள். பட்டுச் சேலைகள்¸ சாதாரண புடவைகள்¸ சுடிதார்¸ நைட்டி¸ உள்ளாடைகள் என அனைத்துமே புதிதாக இருந்தன. அடுத்ததை திறந்து பார்த்தாள்… விதவிதமான நகைகள்… சில நகைகள் புதிதாக வாங்கியது போலத் தோன்றியது.
தனக்குப் பிடித்த இளம்பச்சை நிற சுடிதாரை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அங்கேயும் டவல்¸ சோப் என தேவையான அனைத்துமே இருந்தன.
குளித்து உடைமாற்றி வெளியே வந்தபோது கோகுல் அறையில் இருந்தான்.
அவனிருப்பதை கவனிக்காததுபோல சென்று தலை துவட்டத் தொடங்கினாள்.
கட்டிலில் அமர்ந்து காட்டன் மில்லுக்கான பைலை பார்த்துக் கொண்டிருந்தவன்¸ சந்தனமும் மஞ்சளும் கலந்த சோப்பின் வாசனையில் திரும்பினான். கண்ணாடி முன்பாக நின்று தலை துவட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவளிடம் விளையாடத் தோன்ற… கண்ணாடியில் தன் பிம்பம் பிரதிபலித்து விடாதவாறு கவனமாக அவளது பின்புறம் சென்று “ஹேய்!!” என்றான் சத்தமாக.
பயத்தில் அலறித் திரும்பியவள் கீழே விழப்போக இடைபற்றி நிறுத்தி “கூல்..! கூல்…! நான்தான் சும்மா விளையாட்டாக கத்தினேன். ரொம்பவும் பயந்துவிட்டாயா?” என்றான்.
எதுவும் பேசாமல் அவன் கைகளை விலக்கிவிட்டு நகர்ந்தவளின் வலக்கரத்தைப் பிடித்துத் திருப்ப “என்ன?” என்றாள் கோபமாக.
“இந்தா… இதையும் வைச்சிட்டு வா¸ அம்மா கொடுத்தாங்க” என்று அவள் கையில் மல்லிகைச் சரத்தை வைத்தவன்¸ விலகி கதவை நோக்கி நடந்தான்.
“ஊப்…!” என்று ஆசுவாச மூச்சொன்றை வெளியிட்டவள்¸ தலையில் ஒரு க்ளிப்  வைத்து அவன் கொடுத்த மல்லிகையையும் சூடிக் கொண்டு கீழே வந்தாள்.
மற்ற மூவரும் சாப்பிடுவதற்கு ரெடியாக அமர்ந்திருக்க இவள் வந்ததும் “கோகுல் பக்கத்துல உட்காரும்மா…” என்றார் கனகம்.
“ஊகூம் நான்தான் அம்மாகிட்ட உட்காருவேன்” என்ற நிவேதா தகப்பனருகில் சென்று அமர்ந்துகொள்ள வித்யா அவளுக்கு அடுத்ததாக அமர்ந்தாள்.
தாயாரைப் பார்த்து சிரித்தவாறே “சரியான வாலு…” என்று மகளது மூக்கைப் பிடித்து ஆட்டியவன் வேலையாளை பரிமாறச் சொன்னான்.
பெற்றோருக்கிடையில் அமர்ந்திருந்தவள் வாய் ஓயாது பேசிக் கொண்டிருக்க கோகுலும் அவளுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
ஆரம்பத்தில் பேச விரும்பாமல் அமைதியாகவே இருந்த வித்யா… நிவேதாவின் முகவாட்டத்தைக் காணப் பொறுக்காமல் பேசத் தொடங்கி நன்றாக என்றில்லாவிட்டாலும் ஓரளவிற்கு அவர்களது பேச்சில் கலந்துகொண்டாள்.
வெகுநாட்களுக்குப் பிறகு சாப்பாட்டறையில் கலகலப்பான பேச்சைக் கேட்டது கனகத்திற்கு இதமாக இருந்தது.
உணவருந்தி அரைமணி நேரம் கழித்து மகளுடன் ஓய்வாக அமர்ந்திருந்த தாயாரின் அறைக்கு வந்து “அம்மா நாங்க மூன்றுபேரும் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு வர்றோம்…” என்று சொன்னவன்¸ “நான் வித்யாவை கூட்டிட்டு வர்றேன் இவள் இங்கே இருக்கட்டும்” என்று மனைவியை அழைக்கச் சென்றான்.
கோகுல் வெளியே செல்ல அழைத்ததும் “நான் எங்கும் வரவில்லை” என்று பதிலளித்தவள் ஜன்னல்புறமாக திரும்பி தோட்டத்தைப் பார்ப்பதுபோல  நின்றுகொண்டாள்.
“ரொம்ப நாளாகவே உன்னை அழைச்சிட்டு வரச் சொல்லி கேட்டுக்கிட்டாங்க வித்யா. இன்றைக்குத்தான் சந்தர்ப்பம் அமைந்திருக்கு… அதோட நாளை மறுநாள் மித்ராவுக்கு நிச்சயதார்த்தம். அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் நாமதான் செய்யணும்” என்று சொல்லி அழைத்துப் பார்த்தான்.
அப்போதும் அப்படியே நின்றவாறு “நீங்க சொல்ற மித்ரா யாருன்னே எனக்குத் தெரியாது” என்று சொல்லவும் “இப்போ நீ…” என்று கோபமாக ஏதோ சொல்லத் தொடங்கியவனுக்கு சண்டையிட்டு அவள் வராமல் போய்விடக்கூடாது எனத் தோன்றிவிட “மித்ரா என் தங்கை¸ சித்தப்பா மகள். அவளுக்கு உன்னை ரொம்பவும் பிடிக்கும். உன் போட்டோவைப் பார்த்துவிட்டே அடிக்கடி உன்னை அழைத்து வரச் சொல்லுவாள். இப்போது நீ வந்தால் ரொம்பவும் சந்தோஷப்படுவாள்” என்று கூறினான்.
அதையும் என்ன சொல்லி மறுக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே¸ மருமகளை அழைத்துச் செல்வதற்காக வந்த மகனை இன்னும் காணவில்லையே எனத் தேடிவந்த கனகம் “போயிட்டு வாம்மா… ரொம்ப நாளாக விட்டுப் போயிருந்த சொந்தம் இப்போதுதான் ஒன்றுகூடியிருக்கிறது. நீயும் போனால் நன்றாயிருக்கும்” என்றார்.
அவர் சொன்னதும் மறுக்காமல் “சரி அத்தை… போயிட்டு வர்றோம்” என்றவள்¸ “வாங்க…” என்று கணவனிடம் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கிவிட்டாள்.
காரின் முன்பக்கக் கதவைத் திறந்து ஏற்றிவிட்டவளிடமிருந்து விடுபட்ட நிவேதா “நான் பின்னாடிதான் உட்காருவேன்” என்று கதவைத் திறந்து அமர்ந்து கொள்ள “நீயும் பின்னாடியே உட்கார்ந்து கொள்ளலாம்” என்றான் கோகுல்.
பதில் பேசாதவள் அவன் சொன்னதை செய்ய விரும்பாமல் முன்பக்கம் அமர்ந்து கொள்ள¸ காரை ஸ்டார்ட் செய்தான்.
“என் பேச்சைக் கேட்க விரும்பாவிட்டாலும் அம்மா சொன்னதை ஏற்று என்னுடன் வந்தாயே அதுவே பெரிய விஷயம்தான்” என்றவன் “சொல்லு… நம்ம வீடு பிடிச்சிருக்கா…? ஊர் எப்படி இருக்கு..?” என்று கேட்டான்.
“இதை மட்டும் ஏன் என்கிட்ட கேட்குறீங்க? என்னமோ கல்யாணம் என் விருப்பத்தோட நடந்த மாதிரி… இது என்ன கேள்வி..! அப்புறம் உங்க வீடும் ஊரும் பிடிக்கலைன்னா உடனே ஊர்மாற்றிப் போயிடுவீங்களா என்ன..?” என்று  நக்கலாகக் கேட்டாள்.
திருமணம் பற்றிய அவளது பேச்சைக் கேட்டு கடுப்பானவன் “உன் கையை காலை கட்டி வைத்தா தாலி கட்டினேன்?” என்று கேட்டான். அவள் அமைதியாக இருக்க “நீதான் அசையாமல் உட்கார்ந்திருந்தாயே..! அப்படியானால் என்னோடான திருமணத்தை நீ மறுக்கவில்லை என்றுதானே அர்த்தம்..!” என்று என்னவோ அவளும் விரும்பி வந்து அவனைத் திருமணம் செய்துகொண்டது போல பேசினான்.
“எல்லாம் நீங்கள் சொன்ன பொய்யால் வந்தது..” என்று தன் மறுப்பின்மைக்கும் சேர்த்து அவனையே காரணமாக்கிக் கூறினாள்.
திரும்பி மகளைப் பார்த்தான்.
வெளியே வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தவள் அப்படியே தூங்கிவிட்டிருக்க பேச்சைத் தொடர்ந்தான். “இங்க பாரு சும்மா பொய் சொன்னேன்னு அதையே திரும்ப திரும்ப சொல்லாதே.. எரிச்சலாக வருகிறது”
‘என்ன! உண்மையைச் சொன்னால் எரிச்சலாக வருகிறதாமா..!’
“எனக்கும் என் மகளுக்கும் நீ வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும்போது ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்தேன்¸ செய்தேன். அதன் பலனாக இப்போது நீ எங்களுடன் இருக்கிறாய் எனக்கு இது போதும்” என்று சொன்னவன் “நான் உன்னிடம் முதலிலே சொல்லியிருந்தேன்¸ கல்யாணத்தை நீயே நிறுத்திவிடு என்று. நீ கேட்டாயா…? இல்லையே..! அதனால் உனக்கு நடக்க இருந்த அந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு நான் நினைத்தபடி உன்னை என் மனைவியாக்கிக் கொண்டேன்” என்று சாதாரணமாகக் கூறினான்.
அவன் சொன்னவற்றை ஏற்றுக் கொள்ள இயலாமல் “யாரோ ஒருத்தர் வந்து உன் திருமணத்தை நிறுத்திவிடு என்று சொன்னால் உடனே செய்துவிட வேண்டுமா..?” என்று கேட்டாள்.
“என்ன! யாரோ ஒருத்தனா…?” என்று கேட்டவனது பார்வை அவளது கழுத்தில் தொங்கிய தாலிக்குப் போக¸ இதற்கு என்ன சொல்வானோ என்றெண்ணி “அப்போது நீங்கள் யாரோ தானே..!” என்று சொல்லி சமாளித்துவிட்டாள்.
அவளது பதிலே தற்போது அவள் தன்னை கணவனாகத்தான் நினைக்கிறாள் என்று உணர்த்த மென்மையாகப் புன்னகைத்தான் கோகுல்.

Advertisement