Advertisement

அத்தியாயம் – 13
மண்டபத்தில் இருந்த அனைவருமே அதிர்ந்துபோய் எழுந்து நின்றனர்.
“என்ன!! அப்படியா…! இருக்காது..! அவள் அப்படிப்பட்ட பெண்ணில்லையே!” என உணர்வுகளின் பிரதிபலிப்பு விதவிதமாக இருந்தது.
பிரபாகரனும் “என்ன மிஸ்டர்? கல்யாணத்தில் வந்து கலாட்டா பண்றீங்களா?” என்று கேட்டவாறே எழுந்து நின்றான்.
“நான் கலாட்டா பண்ண வரவில்லை… என் மனைவியை அழைத்துச் செல்லவே நானும் என் மகளும் வந்தோம்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியதைக் கேட்ட பிரபாகரன் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக நின்றுவிட்டான்.
திருமணத்தை நிறுத்துவதற்காக இவன் இதைத்தான் சொல்வான் என்பதை எதிர்பார்த்திருந்ததால்¸ வித்யாவுக்கு இது அதிர்ச்சியாக இல்லை.
தந்தையின் அருகில் நின்றிருந்த நிவேதா “அப்பா நான் அம்மாகிட்ட போறேன்…” என்று சொல்லிவிட்டு வந்து வித்யாவை ஒட்டி நின்று “அம்மா..” என்றாள் புன்னகையுடன்.
இனி பெரியம்மா தன்னிடம் இதைப்பற்றி கேட்பார் அதற்கு பதிலளிக்க வேண்டுமென்று அவரது கேள்வியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு…
“ஏய்! என்ன நெஞ்சழுத்தமடி உனக்கு..! ரகசியமாக கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் பெத்த பிறகு புத்தி மாறிப் போச்சா? இவ்வளவு நாளும் எதுவுமே தெரியாத அமுக்கினியாட்டம் இருந்து எங்களையெல்லாம் ஏமாத்திருக்கே..! அந்த தம்பிக்கு என்னடி குறச்சல்..,இவ்வளவு அழகான புருஷன் இருக்கும்போதே உனக்கு அடுத்த ஆம்பிளை கேட்குதோ..?” என்ற பெரியம்மாவின் கடுஞ்சொற்கள்தான் கேட்டது.
கோகுலை நம்பாமல் தன்னிடம் கேட்பார்கள் என்றெண்ணியிருந்தது மாறி பெரியம்மா தன்னை வசைபாட ஆரம்பித்துவிட “ஐயோ!! இல்லை பெரியம்மா…! இவர் பொய் சொல்றாரு… இவரையே இப்போ வருணை கூப்பிடப் போனபிறகு கொஞ்ச நாளாகத்தான் தெரியும். மற்றபடி… நான் இவரை பார்த்ததுகூட கிடையாது… நான் சொல்றதை நம்புங்க பெரியம்மா. இந்தமாதிரி அசிங்கமாக பேசாதீங்க உடம்பெல்லாம் கூசுது…” என்று உடல் நடுங்கப் பேசினாள்.
“என்ன… உடம்பு கூசுதா..? ஒருத்தன் மாற்றி ஒருத்தனை கல்யாணம் செய்ய நினைச்சப்போ இந்த உடம்பு கூசல… இப்போ நான் பேசினதைக் கேட்டதும் கூசுதா..? ஆகா..கா.. என்ன நடிப்பு? என்ன பொம்பளை நீ…? சை…!” என்று வெறுப்பை வார்த்தைகளில் உமிழ்ந்தார்.
“என்னை நம்புங்க பெரியம்மா… என் அம்மா¸ அப்பா மேல சத்தியமா சொல்றேன் எனக்கு இதற்குமுன் திருமணம் நடக்கல.. இதோ… இவருக்கு நான் மனைவியும் இல்லை¸ இவளுக்கு நான் அம்மாவும் இல்லை…” என்று உரக்கக் கூறியவள்¸ “இப்பொழுதாவது என்னை நம்புங்க பெரியம்மா…” என்று கெஞ்சினாள்.
“உன் அப்பன் ஆத்தா மேல சத்தியம் பண்ணி அவங்ளை ஏன்டி அசிங்கப்படுத்துறே…¸ நீ இப்படி செய்ததை கேள்விப்பட்டுத்தான் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிட்டாங்களோ.. என்னவோ..?” என்று சொல்லி அவளது முகவாயில் இடித்தார்.
வலியுடன் “இல்லை பெரியம்மா… இவர் சொன்ன எல்லாமே பொய்தான்” என்றதுமே “சரி… அந்த தம்பி பொய் சொல்றதாகவே வைத்துக்கலாம். ஆனா… இந்த சின்னக்குழந்தையுமா பொய் சொல்லும்..?” என்றவர்¸நிவேதாவிடம் “இவள் உனக்கு யாரும்மா..?” என்று கேட்க “அம்மா..!!” என்றாள் தெளிவாக.
“கேளு.. நல்லா கேளு… இந்தக் குழந்தையே உன்னை அம்மான்னு தெளிவாகச் சொல்லும்போது நான் எப்படி உன்னை நம்புவது? உன் அம்மாவாவது காதலித்தவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ஓடினாள். ஆனால்… நீ அவளைவிடவும் மட்டம்… கல்யாணம் பண்ணியிருந்தால் உன் புருஷன் கூடப் போயிருக்க வேண்டியதுதானே! அதைவிட்டு எங்களையெல்லாம் அவமானப்படுத்தத்தான் இவ்வளவு நாளும் காத்திருந்தாயா…?” என்று சரவணன் தடுக்கத் தடுக்க பேசிக் கொண்டே போனவரை கோகுலின் குரல் தடுத்தது.
“மேடம் போதும்! இதுக்கு மேல நீங்க அவளைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகப் பேசினாலும் நான் சும்மா இருக்கமாட்டேன்!” என்றான்.
“ம்… அதிசயம்தான். இப்படித் திரியற பொண்டாட்டிக்கே  இவ்வளவு கிராக்கியா..?” என்று முகத்தை சுளித்தார் காஞ்சனா.
‘நேற்றுதானே பெரியம்மா உங்களுக்கு என்மேல் அக்கறை இருப்பதாக நம்பினேன். அதற்குள்ளாக என்னை இப்படி கீழ்மட்டத்திற்குத் தள்ளி என் நம்பிக்கையை பொய்யாக்குகிறீர்களே!’ என்று அவள் மனம் அழுதது.
அவரது முகச்சுளிப்பை கண்டுகொள்ளாமல் “அவளுக்கு சின்னதா ஒரு குழப்பம்… அதை என்னிடம் பேசித் தீர்க்காமல் என்னைவிட்டுப் பிரிந்து வந்துவிட்டாள். தூத்துக்குடியிலிருந்து பிரிந்த பிறகு இப்போதுதான் பார்த்தேன். பார்த்ததும் பேசி அழைத்துப் போகப் பார்த்தேன்… ஆனால் என் மேலுள்ள கோபத்தில் என்னுடன் வரமறுத்தவள்¸ என்னை காயப்படுத்துவதாக எண்ணி திருமணத்திற்கும் சம்மதித்துவிட்டாள். அவ்வளவுதான் விஷயம்..” என்றவன் “இப்போதும்கூட நான் எப்போது வருவேன் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்திருப்பாள்..” என்று சொல்லி முடித்தான்.
கண்களில் வழிந்த நீருடன் சுற்றியிருந்த கூட்டத்தைப் பார்த்தவள்¸ நிமிர்ந்து கோகுலின் முகத்தைப் பார்த்தாள்.
எவ்வளவு அவமானம்!!
எல்லாவற்றுக்கும் காரணம் இவன்தான்!
ஏதாவது செய்தாக வேண்டும்… என்னை திருமணம் செய்யத்தானே இவன் இப்படியெல்லாம் செய்கிறான்! அவனது எண்ணம் நிறைவேறக்கூடாது.
அவன் தன்னைத் திருமணம் செய்வதைத் தடுத்துவிட எண்ணியவள் பிரபாகரனிடம் திரும்பி “நீங்க என்னை நம்புறீங்களா?” என்று கேட்டாள்.
“நான் உன்னை முழுவதாக நம்புகிறேன் வித்யா. நீ உட்கார்… இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்” என்று அவளை அமரச்சொல்லி தானும் அமர்ந்து தாலியைக் கையில் எடுத்தான்.
“மிஸ்டர் பிரபாகர் ரொம்ப அவசரப்படுறீங்களே..!” என்ற கோகுல் “கொஞ்சம் இதைப் பார்க்கிறீர்களா..?” என்று ஒரு பேப்பர் கட்டிங்கை அவனிடம் நீட்டினான்.
வாங்கிப் பார்த்தவனது முகம் வெளுத்துவிட¸ சட்டென்று எழுந்துவிட்டான்.
‘திருமணம் செய்து பெண்களை ஏமாற்றும் மன்னனுக்கு வலைவீச்சு’ என்று பெரிய எழுத்தில் பிரபாகரனது புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகியிருந்தது.
இன்னொரு காப்பியை வித்யாவின் முகத்திற்கு முன்பாக விரித்துக் காட்டி “இவனைத்தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டாயா…?” என்று அவளிடம் கேட்டவன்¸ “சார் நீங்க உள்ளே வரலாம்” என்று யாருக்கோ குரல் கொடுத்தான்.
மண்டபத்திற்குள் நுழைந்த போலீசார் பிரபாகரனையும் அவனது கூட்டாளிகளான அவனது தாய் தந்தையாக நடித்த வள்ளியம்மாள்¸ ராசப்பன் மற்றும் பணத்திற்காக உறவினர்களாக நடித்தவர்களையும் கைது செய்து கோகுலுக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினர்.
“என்ன வித்யா? இப்பொழுதாவது நம்ம வீட்டுக்குப் போகலாமா?” என்று கேட்டவாறே அவளருகில் சென்றான்.
“ஏன் என்னை இப்படி இம்சை பண்றீங்க? என்னை விட்டுட்டுப் போங்க… போங்க…” என்று கத்தினாள்.
ஆனால் மிகவும் பொறுமையாக “இதற்கு மேலும் நீ என்னை விட்டுப் பிரிவதை நான் அனுமதிக்கமாட்டேன்…” என்றவன்¸ “அத்தோடு… இனி உன் பெரியம்மா வீட்டினர் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதையும் புரிந்துகொள்” என்று உண்மை நிலவரத்தை எடுத்துரைத்தான்.
“என்… அதாவது நம் வீட்டிற்கு வருவதுதான் உனக்கு நல்லது. எனக்காக இல்லையென்றாலும் உன்னையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் நிவேதா¸ அம்மா இவர்களுக்காகவாவது வாயேன்…” என்று மீண்டும் அழைத்தான்.
கூட்டத்தினரைப் பார்த்தவள் நிவேதாவிடம் திரும்ப “ஆமாம்மா… நம்ம வீட்டுக்கு வாங்கம்மா… ப்ளீஸ்மா வாங்க…” என்று தன் பங்குக்கு அழைத்தாள்.
இவள் என்னை ஏன் அம்மா என்றழைக்கிறாள் என்பது அங்கு சென்றால்தான் தெரியும். அத்தோடு என்னை இப்படி இத்தனை பேர் முன்பாக அவமானப்படுத்தியதற்கு இவனை கொஞ்சமாவது கஷ்டப்படுத்த வேண்டாமா..? அதற்கு அவனோடு செல்வதுதான் சரியான முடிவு என யோசித்து¸ சம்மதம் தெரிவித்தாள்.
பிரச்சினை ஆரம்பமானதிலிருந்து இந்தத் திருமணம் நடக்கப்போவதில்லை என்பதை தெரிந்துகொண்டாலும் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக கலையத் தொடங்கவும்¸ “எல்லோரும் சற்று நில்லுங்கள்..!” என்றான் கோகுல்.
செல்லத் தொடங்கியிருந்தவர்கள் நின்று திரும்பிப் பார்க்கவும் “எங்களுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் எந்த காரணத்தாலோ சரியானதாக அமையவில்லை. அதனால்… இப்போது உங்கள் அனைவரின் ஆசியோடு வித்யாவை மீண்டும் தாலி கட்டி என் மனைவியாக்கி செல்ல விரும்புகிறேன்” என்று தன் விருப்பத்தை கோரிக்கை போல முன்வைக்க அனைவரும் அமர்ந்தனர்.
ஐயர் அமர்ந்து மந்திரம் ஓத ஆரம்பிக்க தன் பாக்கெட்டிலிருந்த புது தங்கத்தாலியை எடுத்து அவரிடம் கொடுத்தான். அதை ஒரு தட்டில் வைத்து அனைத்து மந்திரங்களையும் கூறி தாலியை எடுத்து அவனிடம் கொடுக்க வித்யாவின் கழுத்தில் அணிவித்தான்.
தாலி கட்டும் சமயத்தில் அவனது கை தன் கழுத்தில் பட்டு உடல் சிலிர்த்துவிடவே திரும்பி அவனைப் பார்த்தாள். பளீரென்ற புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
‘எதற்கு இந்த சிரிப்பு?
பொய் சொல்லியாவது மனைவியாக்கிக் கொண்டோமென்ற நினைப்பா..?’
மற்ற சடங்குகளும் முடிய¸ மனைவியின் கரம் பற்றியவாறு காஞ்சனாவை நோக்கி நடந்தான் கோகுல்.
அவனது நோக்கத்தை அறிந்து கொண்டவர் அந்த இடத்தை விட்டு நகர¸ வேகமாக அவரிடம் சென்று “சின்னவங்க தப்பே பண்ணியிருந்தாலும்… அதைத் திருத்திக்கிறபோது இறங்கி வந்து மன்னிச்சு ஏத்துக்குறதுதான் பெரியவங்களுக்கு அழகு…” என்று சொல்ல¸ அவர்களைக் காலில் பணியச் செய்து ஆசி வழங்கினார்.
சரவணனிடமும் இருவருமாக சேர்ந்து ஆசி பெற்ற பின்¸ சற்றுநேரம் அவனுடன் தனியாக பேசிவிட்டுக் கிளம்பினான் கோகுல்.
சில நிமிடப் பயணத்தின் பின் அவர்கள் சென்ற இடம் ரெஜிஸ்டர் ஆபீஸ்.
‘எதற்கு?’ என்பதுபோல அவனைப் பார்க்க¸ “கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் இதோ வந்துடுறேன்” என்று மகளையும் அவளுடன் அமர்த்திவிட்டு அவன் மட்டும் உள்ளே சென்றான்.
சற்றுநேரத்தில் வந்தவன் யாருக்கோ காத்திருப்பது போலத் தோன்றினாலும் அவனிடம் எதையும் கேட்க விரும்பாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
சரவணனுடன் இன்னும் சிலரும் வந்ததும்¸ இவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவனிடம் “எதற்காக இங்கே வந்திருக்கிறோம்?” என்று கேட்டுவிட்டாள்.
“திருமணத்தை பதிவு செய்யத்தான்…” என்றவன்¸ “ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும்” என்றபடியே தான் கையெழுத்திட்ட பேப்பரை அவளிடம் நீட்டினான்.
எரிச்சலுடன் வாங்கி கையெழுத்து போட்டுக் கொடுத்தவள் சென்று காருக்குள் அமர்ந்து கொண்டாள்.
“அப்பா எங்கேம்மா..?” என்று கேட்ட நிவேதாவிடம் இப்போது வந்துவிடுவான் என்று சொல்லிவிட்டு பின்பக்கம் சாய்ந்து கொண்டவளின் மனம் அன்று நிகழ்ந்தவற்றைச் சுற்றிச் சுழன்றது.
என்னவோ நீதான் என் மனைவி¸ நான்கு வருடத்திற்கு முன்பே திருமணமாகிவிட்டது என்று சொல்லிக் கொண்டிருந்தான்… இப்போது பார்த்தால் இன்றைக்குத்தான் கல்யாணம் போல தாலி கட்டுகிறான்¸ திருமணத்தை பதிவு செய்கிறான்.. இதையெல்லாம் பார்த்தாலே நான் அவன் மனைவியில்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடாதா? ஆனால் சரவணனைத் தவிர வேறு யாருமே அவளுக்குத் தெரிந்தவர்கள் இல்லையே!
கல்விச் சான்றிதழ்களையெல்லாம் அண்ணன் மூலம் வாங்கியிருப்பான் போல… திருமண புகைப்படம்கூட இன்று எடுத்தது போலத்தான் தோன்றியது. அப்புறம் அந்த பத்திரிக்கை… இதைகூட யோசிக்க முடியாதா..? போலியாக தயாரிக்க சொல்லியிருப்பான்.
சரவணனும்கூட என்னவோ அவனது நண்பன் போல அவனுடனே ஒட்டிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் வருவான் பேசலாமென்று நினைத்தால் கோகுலை விட்டு அகலவேயில்லை…
சரவணன் அண்ணன் இதை பெரியம்மாவிடம் சொன்னால் அவர்கள் தெரிந்து கொள்வார்களே! ஆனால் இத்தனை பேர் முன்பும் அவமானப்பட்ட பிறகு தெரிந்தாலும்தான் அவர்களால் என்ன செய்துவிட முடியும்..? அல்லது அவர்களுக்குத்தான் எனக்காக செய்யத் தோன்றுமா..? இதையெல்லாம் விட முக்கியமாக சரவணன் இதை பெரியம்மாவிடம் சொல்வானா என்பதே கேள்விக்குறிதான்…!
கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு காரின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டும் அப்படியே இருந்தாள்.
“என்ன வித்யா..? தலை வலிக்கிறதா..?” என்று கேட்டவாறே நெற்றியில் கைவைத்தவனது கைகளைத் தட்டிவிட்டு நிமிர்ந்தவள் “உங்களை என்று பார்த்தேனோ அன்று பிடித்த தலைவலி… இன்னும் விடமாட்டேன்கிறது..” என்று சுள்ளென்று பதிலளித்துவிட்டு பார்வையை வெளிப்புறம் திருப்பிக் கொண்டாள். அதன்பின் அவளிடம் பேச்சு கொடுக்க முயலாமல் காரை ஸ்டார்ட் செய்தான்.

Advertisement