Advertisement

அத்தியாயம் – 12
இரண்டு வாரங்கள் மின்னல் வேகத்தில் கடந்தன.
நிவேதாவுக்கு வாய்மொழித் தேர்வு¸ எழுத்துத் தேர்வு என ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கிவிடும்.
“அப்பா… அம்மா ஏன் இப்பெல்லாம் என்னைப் பார்க்க வரமாட்டேன்கிறாங்க?” என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தாள் மகள்.
கடைசியாக வழிமறித்துப் பேசிய அன்றுதான் அவளைப் பார்த்தது… அதன்பின்னர் வருணை அழைக்க வருவதும்கூட வேறு யாரோதான்.
‘அவளுக்குக் கல்யாணம்…! அது என்றைக்கென்று கூடத் தெரியாதே!’ என்று நினைத்தவன்
அதைத் தெரிந்துகொள்ள வேண்டி வருணை அழைத்துச் செல்ல வந்த பெண்ணிடம் சென்று பேச்சு கொடுத்தான்.
“வருணோட அத்தை வரவில்லையா?” என்று அவன் கேட்டதுமே¸ அவனை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு “நீங்க ஏன் அவளைப் பற்றி கேட்கறீங்க?” என்று பதில்கேள்வி கேட்டாள் விஜயா.
“என் மகளுக்கும் அவங்களுக்கும் பிரண்ட்ஷிப்… சில நாட்களாக அவர்கள் வரவில்லை என்றதும் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று ஒரே தொந்திரவு… அதனால்தான்…” என்று கூறினான்.
“அப்படியா…!” என்று வியந்தவள் “வித்யாவுக்கு வருகிற திங்கள்கிழமை கல்யாணம். அதனால் அவளை வெளியே எங்கும் அனுப்புவது இல்லை” என்று விபரம் தெரிவித்துவிட்டு¸ தன் கைப்பையிலிருந்து ஒரு திருமண அழைப்பிதழை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“நீங்க உங்க மகளையும் கூட்டிட்டு திருமணத்துக்கு வாங்க…”  என்ற விஜயாவிடம்
“கட்டாயம் வருவேன்… நான் இல்லாமல் வித்யாவுக்கு திருமணமா..?” என்று இனம்கான முடியாத குரலில் பேசினான் கோகுல். சரியாகக் காதில் விழாததால் “என்ன?” என்று கேட்டவளிடம்¸ “நாங்க கட்டாயம் வருவோம்” என்றான்.
“சரி… நாங்க கிளம்புறோம்” என்றவள்¸ மகனை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
அழைப்பிதழை எடுத்துப் பார்த்தான். முதல் பக்கத்தில் ‘பிரபாகரன் வெட்ஸ் வித்யா லெட்சுமி’ என்று எழுதப்பட்டு அருகில் இருவரது வண்ண புகைப்படமும் இருந்தது.
‘என் வித்யா பக்கத்தில் என்னைத்தவிர வேறுயாரும் இருக்கக்கூடாது’ என்று அதைப் பார்த்தவுடனே இரண்டாகக் கிழித்துவிட்டான்.
வலது கரத்திலிருந்த மாப்பிள்ளையின் படத்தை வீசச் சென்றவனுக்கு¸ அவனை எங்கோ பார்த்தது போலத் தோன்ற அதை கையிலே வைத்துக் கொண்டான்.
காரில் அமர்ந்திருந்த நிவேதா¸ கோகுல் டிரைவருக்கான இடத்தில் அமர்ந்து எதையோ பத்திரப்படுத்துவதைப் பார்த்துவிட்டு “என்னாச்சுப்பா…? அம்மா ஏன் வரலை?” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லைடா குட்டி… அம்மா சீக்கிரமே நம்ம வீட்டுக்கு வந்துவிடுவாள். அந்த வேலையாத்தான் வரவில்லையாம்…” என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் செய்தான்.
“ஹை!! ஜாலி… அம்மா வரப்போறாங்க…!” என்று குதூகலித்த மகளைப் பார்த்தவாறே காரை ஓட்டியவன்¸ மகளிடம் சற்றுநேரம் பேசினான்.
அன்று மாலை போன் செய்த முகிலன் “நிச்சயத்தை வர்ற திங்கள்கிழமையே வைத்துக்கலாமான்னு அப்பா¸ அம்மா கேட்கிறாங்க… நீ மித்ரா வீட்ல கேட்டு சொல்றியா?” என்றான்.
“இல்லை… அன்றைக்கு வேண்டாம். எனக்கு திங்களன்று ரொம்ப முக்கியமான வேலையிருக்கிறது. அதனால் புதன்கிழமை வைத்துக் கொள்ளலாம்..” என்றதும் “அப்படி என்ன முக்கியமான வேலை கோகுல்..?” என்று கேட்டான் தோழன்.
மறுமுனை அமைதியாக இருக்கவும் “என்னிடம் சொல்லக்கூடாததா..?” என்று கேட்டான் உரிமையுடன்.
“ம்கூம்.. அது அப்படியில்லை… ஆனால் சஸ்பென்ஸ் மச்சான்¸ நான் உனக்கு அப்புறமா சொல்றேன். இப்போ உன் விஷயத்துக்கு வருவோம்… புதன்கிழமையும் நல்லநாள்தானே..?” என்று பேசியவாறே காலண்டரை ஆராய்ந்தவன் “ஆமாம்… புதன் நல்லநாள்தான் அன்றைக்கே வைத்துவிடலாம் என்று வீட்டில் சொல்லிவிடு… நானும் சித்தப்பா வீட்டில் பேசிவிடுகிறேன்” என்று சொல்லி வைத்தான்.
உடனே சித்தப்பாவிற்கு அழைத்து நிச்சயம் பற்றி கூறினான்.
மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தவர் அவன் பேசி முடித்ததும் “ஆனா… கோகுல்¸ மித்ராவுக்கு நகை எதுவும் பெரிதாக செய்யவில்லையே..!” என்றார் கலக்கத்துடன்.
“அதைப்பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க சித்தப்பா… நிச்சயம் சம்பந்தப்பட்ட வேலை அனைத்துமே என் பொறுப்பு” என்று அவரை அமைதிபடுத்தினான்.
அதன்பின்னர் தன் தாயாரிடம் விபரம் தெரிவித்து அவருடன் கடைக்குச் சென்று மித்ராவுக்குத் தேவையான மற்றும் மாப்பிள்ளைக்கு போடுவதற்கான நகைகள் என வாங்க வேண்டியதையெல்லாம் தாயாரிடம் தெரிவித்துவிட்டு¸ வெளியே செல்லத் திரும்பியவன் அவனைப் பார்த்துவிட்டான்.
பிரபாகரன்!!
‘என் வித்யாவை இவனுக்குத் திருமணம் செய்ய… எனக்கென்ன இவனைப் பார்த்து பொறாமையா..? இல்லை  இவனைப் போட்டோல பார்த்த அன்றே இவனை எங்கோ பார்த்திருப்பதாகத் தோன்றியதே!’ யோசனையுடனே அவனை கவனிக்கத் தொடங்கினான்.
அவனுடன் யாரோ ஒரு பெண்மணியும் வந்திருந்தார். இருவருமாக சேர்ந்து தாலிச் செயினை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்மணி தேர்ந்தெடுத்த நகையை கடை ஊழியரிடம் கொடுத்துவிட்டு அருகில் நின்றிருந்த பிரபாகரனிடம்¸ “மற்ற நகையெல்லாம் வாங்க வேண்டாமா?” என்று கேட்க “கவரிங் நகைகள் எதற்கு இருக்கிறது…? அதை வாங்கி சமாளித்துவிடலாம்..” என்று பதிலளித்தான் அவன்.
வெளியே போகாமல் மீண்டும் தாயாரிடம் சென்று “அம்மா நான் பக்கத்தில் ஒரு முக்கியமான வேலை விஷயமாகப் போக வேண்டியிருக்கிறது. நீங்க செலக்ட் பண்ணுங்க… நான் நம்ம டிரைவரை வேற கார் எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்று சொல்லி¸ உடனே டிரைவருக்கும் தெரிவித்துவிட்டு நகைக்கடையை விட்டு வெளியேறினான்.
அங்கிருந்து கிளம்பி நேராக திருநெல்வேலி மாவட்டத் தலைமை நூலகத்தை அடைந்தவன்¸ லைப்ரேரியனிடம் தெரிவித்துவிட்டு தனக்குத் தேவையானதைத் தேட ஆரம்பித்தான்.
ஒன்றரை மணி நேரத் தேடலின் பலனாக அவனுக்கு வேண்டிய செய்தித்தாள் கிடைத்துவிட¸ நிம்மதியோடு வீடு திரும்பினான்
நாட்கள் விரைந்து சென்றது.
நாளை திருமணம் என்ற நிலையிலிருக்கும் போது வித்யாவுக்கு வயிற்றைப் பிசைவது போல இருந்தது. இனம் புரியாத பயம் வந்து அவளை அலைக்கழித்தது. ‘ஏன் இந்த கலக்கம்?’ என்றெண்ணியவாறே தனக்குக் கொடுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாள்.
ஆம்… அப்போது மட்டுமல்ல தொடர்ந்து மூன்று நாட்களாக காஞ்சனா அவளுக்கு எந்த வேலையையும் அளிக்காமல் திருமணமாகப் போகிறவள் என்பதற்காக அவளை ஓய்வாகவே உட்காரச் செய்திருந்தார்.
வெகுநேரம் வேலையின்றி அமர்ந்திருக்கவும்¸ மனம் ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கியது.  இப்போது ‘ஏன் இப்படி? ஏன் இந்த உணர்வு? எல்லோருக்கும் இப்படி இருக்குமா… இல்லை எனக்குத்தான் ஏதேனும் பயமா..?’ என்றெண்ணியபடியே இருந்தாள்.
திருமணத்திற்கு முதல்நாளே சில உறவினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.
மணப்பெண்ணின் அறை இதுதான் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம் பளிச்சிட்ட மஞ்சள்நிறப் பட்டுப்புடவை மற்றும் சில புதுநகைகளுடன் அவள் அமர்ந்திருக்க… தீபமிட்ட விளக்கு¸ முகூர்த்தப் பாயில் சிதறிய அரிசி என அவளது அறையும் திகழ்ந்தது.
வருண் மற்றும் சில உறவினர்களுடன் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்த காஞ்சனா அவளை தனியே அழைத்துச் சென்று காரணத்தை வினவினார்.
அவள் தன் கலக்கத்தைக் கூறியதும் வாய்விட்டு சிரித்தவர்¸ “திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான நிகர்ழவு. சில பெண்களுக்கு இந்த மாதிரி பயம் ஏற்படுவது இயற்கைதான். இன்று மட்டும்தான் இப்படி இருக்கும்… நாளை கழுத்தில் தாலி ஏறியதும் எல்லா பயமும் ஓடிவிடும். அதனால் பயப்படாமல் சிரித்த முகமாகவே இரு… இல்லையென்றால் நான் என்னவோ உன்னை கொடுமைபடுத்துவதாக பேசுவார்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.
பெரியம்மா சிரித்தது ஆச்சர்யம் என்றால்¸ அவளது பயம் நீக்குவதற்காக அவர் பேசியது விநோதமாகத் தோன்றியது.
இதற்கு முன்பாக… முதல்முறை பார்த்த அன்று மட்டுமே இந்த மாதிரி இதம் தருவதுபோல பேசியிருக்கிறார் என்பதால் அவரது பேச்சு அவளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் பெரியம்மா அப்படி ஒன்றும் தன்னை வேண்டாத சுமையாக எண்ணி சீக்கிரம் அப்புறப்படுத்த முயலவில்லை என்ற எண்ணம் அவ்வாறு நினைக்க வைத்தது.
திருமணநாள் விடிந்தது.
விடியற்காலையிலே அவளைத் தயார் செய்து மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். திருமண மண்டபம் உறவினர்களால் நிரம்பி வழியவில்லை என்றாலும் ஓரளவிற்கு கூட்டமாக இருந்தது. முகூர்த்த நேரம் நெருங்க நெருங்க அவளது பயம் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை.
‘பெரியம்மா நேற்றோடு பயம் போய்விடும் என்றார்களே?’ என்றெண்ணியவள்¸ ‘தாலி கட்டிய பிறகுதான் பயம்போகும்..!’ என்று சொன்னதும் நினைவிற்கு வந்துவிட அப்படியாகத்தான் இருக்கும் என்று கலக்கம் நீங்காமலே அமர்ந்திருந்தாள்.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்து¸ மணமகனின் உறவினர்கள் அவளுக்கு சேலை கட்டிவிட்டு சரஸ்வதி அம்மாள் கொடுத்த நகைகளை அணிவிக்கும்போது “வித்யா கொடுத்து வைச்சவதான்… இல்லைன்னா இந்த காலத்தில் யார் இப்படி நகைபோட்டு கல்யாணம் செய்றா..” என்று வித்யாவின் அதிர்ஷ்டத்தை வியந்தாள் ஒரு உறவினள்.
முகூர்த்த நேரமானதும் “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ…” என்றார் ஐயர்.
ஏற்கனவே மனையில் அமர்ந்திருந்த பிரபாகரனின் அருகில் வித்யா அமர்த்தப்பட¸ தோளை உரசினான். சற்றுநேரத்தில் தாலி கட்டப் போகிறவன் உரசியது அருவருப்பாகத் தோன்ற விலகி அமர்ந்தாள். ‘எவ்வளவு நேரம்தான் இப்படி இருக்க முடியும்? எப்படியும் இன்றைக்கு ராத்திரி என்கிட்டதானே வரணும்… அப்போ பார்த்துக்குறேன்’ என்றெண்ணி சிரித்தான்.
வித்யா மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தாள். காலையில் பெரியம்மாவின் உறவினர்களாக வந்திருந்தவர்களைத் தவிர்த்து சொற்பமாகவே ஆட்கள் வந்திருப்பதாகத் தோன்றியது.
ஏன்? வசதியான பெரிய குடும்பம் என்றால் சொந்தங்களும் அதிகமாக இருக்க வேண்டாமா? அவர்களுடன் வந்தவர்களை எண்ணிப் பார்த்தால் முப்பதைத் தாண்டாது.
உறவினர் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனம் கோகுலை நினைக்க¸ பார்வை அவனுக்காகத் தேடியது. அவன் வரவில்லை.
‘என்னவோ அவன் மனைவி..! கல்யாணத்தை நீ நிறுத்தவில்லையென்றால் நான் நிறுத்துவேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்… ஆளையே காணவில்லை’
அவள் மனம் எதையெல்லாமோ நினைத்துக் கொண்டிருந்தது.
தாலித்தட்டைக் கையிலேந்தி பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டிருந்த சரவணன் வர நேரமானதும் “சீக்கிரம் தாலியைக் கொண்டு வாங்கோ… நேரமாறது…” என்று அவனை துரிதப்படுத்தினார் ஐயர். சரவணன் மணமேடையை நெருங்கும்போது¸ மண்டப வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்து கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
கம்பீரமாக கோகுல் நடந்துவர¸ நிவேதா அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.
தாலியை எடுத்து மணமகனின் கையில் கொடுத்து “பொண்ணு கழுத்தில் கட்டுங்கோ…” என்று ஐயர் சொன்னபோது¸ மணமேடைக்கு நேராக வந்து நின்று “ஒரு நிமிஷம் மிஸ்டர் பிரபாகர்” என்றான் கோகுல்.
‘இந்த நேரத்தில் யாருடா?’ என்று நினைத்தாலும்… வந்தவனிடம் “என்ன?” என்று கேட்க¸ “நீங்க மணக்க இருக்கும் இந்தப் பெண் வித்யா ‘என் மனைவி’ ” என்று சொல்லிவிட்டான்.

Advertisement