Advertisement

அத்தியாயம் – 25
கோகுலின் முகத்தில் பிரதிபலித்த வருத்தத்தைக் கண்டவள் “சொல்ல கஷ்டமாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என்றாள் ஆறுதலாக கணவனின் தோளை வருடியபடி.
“இல்லை.. சொல்கிறேன். கொடைக்கானலை நன்றாக சுற்றிப் பார்த்தோம்¸ அவள் அமைதியாகவே தான் வந்தாள். கார்டனில் ஒவ்வொரு இடமாக போட்டோ எடுப்பதற்காக அவள் சென்றுவிட¸ ஒரு மரத்தில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தபோது ‘வித்யா இந்த பக்கம் வா… இந்த செடியைப் பாரு…’ என்று ஒரு பெண் குரல் கேட்டது. என் மனைவியை அழைப்பது யாரென்று பார்ப்பதற்காக கண்களைத் திறந்து பார்த்தபோது ‘நீ’ என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாய்… என்னைத் தாண்டிச் சென்று எனக்குப் பின்புறமாக இருந்த பெண்களோடு சேர்ந்துகொண்டாய். அந்தப் பக்கமாக அவள் நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தாள்… அப்போதுதான் என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது…” என்றவன் குரல் கரகரக்க சற்றுநேரம் பேசுவதை நிறுத்திவிட்டான்.
அந்த நேரத்தில் அவன் எப்படி உணர்ந்திருப்பான் என்பது புரிந்திருந்ததால் எதுவும் பேசாமல் அவன் தோளை வருடிவிட்டவாறே அமர்ந்திருந்தாள்.
சமாளித்துக் கொண்டவன்¸ எதையும் விட்டுவிடக்கூடாது என்றெண்ணி பேசினான். “யாரோ ஒருத்தருடைய பணத்தாசையால் என் வாழ்வு எப்படி மாறிவிட்டது? அவளுடைய அப்பாவின் பணத்தாசையால்… நான் விரும்பிய பெண்ணைப் பற்றிய விவரத்தைக்கூட அறியாமல்… அவளை மணந்து… மறுபடி நான் விரும்பியவளைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிகிறது¸ நான் விரும்பியது என் மனைவியை இல்லை என்று. அங்கிருந்து நீங்கள் கிளம்பும்போது பேருந்தில் உங்கள் கல்லூரியின் பெயரைப் பார்த்தேன். அதை வைத்தே முதல் முறையும் முயன்றிருக்கலாம்… அதைவிட்டு யாரோ ஒருத்தர் சொன்னதை நம்பி அவர் பின்னாலே சென்று… வருத்தத்துடனேதான் அங்கிருந்து கிளம்பினேன். அறியாமையாலும்¸ அவசர புத்தியாலும் வாழ்க்கையையே முடித்துக் கொண்டேனோ என்ற வருத்தம்”
“ஊர் திரும்பிய பிறகும் அவள் மாறவில்லை… அதே ஆட்டம்¸ ஊர் சுற்றல் என்றுதான் இருந்தாள். நிவேதாவை நானும் அம்மாவுமே பார்த்துக் கொண்டோம். நாங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டதால் தொல்லைவிட்டது என்று அவளும் நினைத்துக் கொண்டாள் போல… நிவேதாவை தொடுவதேயில்லை. உன்னை மறுபடி பார்த்ததிலிருந்து நான் அவளைத் தொடுவது கிடையாது. அதுவும் அவளுக்கு எரிச்சல்… சண்டை வரும், திடீரென்று ஒருநாள் ஃபாரின் டூர் போக வேண்டும் என்றாள்”
“அடிக்கடி தொழிலைப் போட்டுவிட்டு வெளியே போனால் தொழில் முடங்கிவிடும் என்று சொல்லி நான் மறுத்துவிட்டேன். அவள்தான் தான் நினைத்தது நடக்காவிட்டால் விட்டுவிடுகிற ரகமில்லையே! நிவேதாவை கிள்ளுவது¸ அம்மா பார்க்க அடிப்பது என்று அடிக்கடி செய்ய… அம்மாவே அவளை அழைத்துப் போய்வா என்று சொல்லிவிட்டார்கள். ஹவாய் போனோம்… நிறைய இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ‘ஸ்கை டைவிங்’ போக வேண்டுமென்றாள்..” என்று அவன் சற்று நிறுத்தியபோது ‘முதல் மனைவிக்கு என்ன ஆனதென்று இப்போது தெரியப்போகிறது’ என்றே அவளுக்குத் தோன்றியது.
“ஆபத்து என்று சொல்லி தடுத்துப் பார்த்தேன் கேட்கவில்லை… சரி போய் வா என்று அனுப்பினேன். போகும்போதே எப்படிச் செய்ய வேண்டுமென்று விளக்கமாக சொல்லித்தான் அனுப்பினார்கள்… குதித்த பிறகு மறந்துவிட்டாள் என்று நினைக்கிறேன்… பாரசூட் விரியவில்லை… அங்கே… காட்டுக்குள் விழுந்து இறந்துவிட்டாள்” என்று முடித்தான்.
முதல் மனைவியின் பிரிவு அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும்¸ இந்த செய்தி அதிர்ச்சியைத் தர “என்ன!! இறந்துவிட்டாளா?” என்றாள்.
“பின்னே..? அவளை உயிருடன் வைத்துக் கொண்டே உன்னை மணந்தேன் என்று நினைத்தாயா?” என்று அவன் சுள்ளென்று கேட்டுவிட¸ “இல்லை.. இல்லை… அப்படி நினைக்கவில்லை. ஆனால்… அவள் உங்களை விட்டுப் பிரிந்து போயிருப்பாள் என்றுதான் நினைத்திருந்தேன்.. அதனால் அப்படிக் கேட்டுவிட்டேன்” என்று சமாதானமாகப் பேசினாள்.
“சரி விடு…” என்றவன் “அங்கே பிரச்சினையாகியிருக்குமே?” என்று வித்யா கேட்கவும் “ஆமாம்…” என்று லேசாக சிரித்துவிட்டுக் கூறினான்.
“அவளை மட்டும் அனுப்பிவிட்டு நான் போகாமல் இருந்ததால் நான் வேண்டுமென்றே அவளை அனுப்பி சாகடித்ததாக நினைத்தார்கள். கூட நின்று பார்த்துக் கொண்டிருந்த சிலரும் நான் அவளைத் தடுத்ததை சொன்ன பிறகுதான்¸ ஒத்துக் கொண்டு உடலைத் தேடினார்கள். நான்கு நாட்கள் அங்கே தங்கியிருந்தேன்… கிடைக்கவில்லை என்றதும் கிடைத்தால்… இறுதிச் சடங்கை செய்யும்படி சொல்லி அதற்காக தொகையை மட்டும் கொடுத்துவிட்டு வந்தேன்”
“அத்தை கேட்கவில்லையா?”
“கேட்டார்கள்… உண்மையை சொன்னால் அம்மா அடுத்த திருமணத்திற்கு வற்புறுத்துவார்கள் என்றெண்ணி¸ சண்டைபோட்டுவிட்டு போய்விட்டாள்… மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது என்று சொல்லி சமாளித்துவிட்டேன். அம்மாவும் அதை நம்பியே நான்காண்டுகளை கடத்திவிட்டார்கள். இப்போதும் உன்னை அழைத்து வந்ததைக் கூட… அதனால்தான் அம்மா சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். இல்லையென்றால் ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்தாயா என்று கொதித்திருக்கக் கூடும்” என்று சொன்னவன் கட்டிலில் வாகாக சாய்ந்துகொள்ள “என்னைப் போல இன்னும் யாரையேனும் பார்த்துவிட்டு இவள்தான் நான் பார்த்த பெண் என்று அழைத்து வரமாட்டீர்களே?” என்று கேட்டாள் வித்யா.
“ஏன் அப்படி கேட்கிறாய்?” என்றவன்¸ அவள் பதில் சொல்லும் முன்பாகத் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி “நீதான் இங்கே இருக்கிறாயே!” என்று சொல்லிவிட்டு “ஏன் அப்படிக் கேட்டாய்?” என்றும் கேட்டான்.
“ஒரே மாதிரி முக அமைப்புடைய ஏழு பேர் இருப்பதாக சொல்வார்களே..!” என்றாள் புன்னகையுடன்.
“வேண்டாம் தாயே!! வேண்டாம்..! எனக்கு நீ மட்டுமே போதும்… என் உயிர் போகும்வரை நீ என்னை விட்டுப் பிரியக்கூடாது” என்றவன் அவள் தடுத்துப் பேசவந்ததை கண்டுகொள்ளாமல் “ஒருமுறை நான் அவசரப்பட்டு செய்த காரியத்தால் ஏற்பட்ட துன்பமே என் வாழ்நாள் முழுமைக்கும் போதும்” என்று சொல்லிவிட்டு “சரி… மேடம்… உங்களுக்கு எப்போதிலிருந்து ஐயா மேல லவ்ஸ்..?” என்று கேட்டான்.
அன்று மத்யானத்தில் தான் யோசித்த விஷயங்களையெல்லாம் கூறவும்¸ சட்டென அணைத்து முத்தமிட்டவன் “முதல்நாளில் இருந்தே உனக்கு அப்படித்தானா..?” என்று கேலியாகக் கேட்டான். மீண்டும் எழுந்து சென்று ஒரு பார்சலை எடுத்துவந்து அவளிடம் கொடுத்தான்.
“என்ன?” என்று கேட்டவளிடம் “பிரித்துப் பார்” என்றபடி அவன் அருகில் அமர்ந்துகொள்ள¸ பிரித்துப் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தது.
அன்று சித்தப்பா வீட்டில் வைத்து நிவேதாவும் வித்யாவும் சேர்ந்து பட்டர்பிளையை பிடித்தபோது படமாக்கப்பட்ட போட்டோ. வித்யா குனிந்து பட்டர்பிளையின் மேல் கை வைக்க… அவளது நீள கூந்தல் முன்னால் விழுந்திருந்தது. நிவேதாவும் அவளைப் போலவே குனிந்து… அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள். மிகவும் அழகான அந்த காட்சி பெரிதாக்கப்பட்டிருந்தது பார்ப்பதற்கே அருமையாக இருந்தது.
“ரொம்ப அழகா இருக்கு..!” என்று பாராட்டியவளிடம் “சுவற்றில் தொங்கவிடவும் சொல்லியிருக்கிறேன்” என்றவன் “நான் நிவேதாவுக்கு தான் நன்றி சொல்லணும்” என்றான் திடீரென்று.
“எதுக்கு? இந்த போட்டோவில் அவளும் என்னுடன் நின்றதற்கா..?”
“இல்லை… அவள்தானே உன்னை பார்த்து வந்து என்னிடம் சொன்னது. அவளால்தான் உன்னை மறுபடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக அவளுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது… பரிசும் கொடுக்க வேண்டும்” என்றான் குறும்புச் சிரிப்புடன்.
“என்ன பரிசு?” என்று கேட்டவளுக்கு பதிலளிக்காமல் “வித்யா உண்மையாகவே உனக்கு என்னை பிடிச்சிருக்கா..?” என்று மீண்டும் அவன் கேட்க
“என்னாச்சு உங்களுக்கு? ஏன் இதையே திரும்பத் திரும்ப கேட்குறீங்க?” என்று அவள் காரணத்தைக் கேட்டாள்
“ஏற்கனவே திருமணமான¸ ஐந்து வயது குழந்தைக்கு அப்பாவை ஏற்றுக் கொள்வது சிரமமாகத்தானே இருக்கும். அதற்காகத்தான் கேட்டேன்” என்றதும் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
“அம்மாவும் மகனும் ஒரே மாதிரிதான் யோசிப்பீர்களா?” என்று கேட்டவள்¸ அவன் “என்ன?” என்று கேட்க “கீழே உங்க அம்மாவும் இதையே தான் சொன்னார்கள்… நீங்களும்…” என்று மாமியார் பேசியதைச் சொல்லி… அவருக்கு சொன்ன அதே பதிலைக் கூறியவள் மேலும் பேசினாள்.
“உங்கள் அம்மாவிடம் சொல்லும்போது நீங்கள் இப்போது சொன்னதெல்லாம் எனக்குத் தெரியாது… அப்படியிருந்தும் எனக்கு எந்த வருத்தமுமில்லை¸ உங்களை ஏற்றுக் கொண்டேன்தான். இப்போது… இதைவேறு நீங்கள் சொல்லிவிட்ட பிறகு என் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதைக்கூட நான் சொல்லித்தான் தெரிந்து கொள்வீர்கள் போல?” என்றவள்
“ஆனாலும் நீங்கள் ஏன்… ஃபாரினிலிருந்து வந்தபிறகும் என் அட்ரஸைக் கண்டுபிடித்து வர முயற்சிக்கவில்லை?” என்று கேட்டாள்.
“வித்யா… நான் இப்போது சொன்ன இதே காரணங்கள் அப்போதும் இருக்கத்தான் செய்தன. அதனால் நான் அதற்கு முயலவில்லை… இங்கே உன்னைப் பார்த்தபிறகு கடவுள்தான் உன்னை அனுப்பியிருக்கிறார்… விட்டுவிடக்கூடாது என்றெண்ணிதான் என்ன செய்தேனும் உன்னை மணந்துகொள்ள வேண்டுமென்று… மணந்துகொண்டேன். அதிலும் உனக்கு என்மேல் கோபமிருக்கும்…” என்றான் மெதுவாக.
“பரவாயில்லை… அப்போது வருத்தமாக இருந்ததென்றாலும்¸ இப்போது ஒன்றுமில்லை” என்றதும்
“அப்படியானால் உனக்கு என்னோடு மனமொன்றி வாழ சம்மதம்?” என்று கேட்டான் மீண்டும்.
“யோவ்… உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?” என்று கோபபப்படுவதுபோல கேட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“கூல்… பேபி! கூல்..!” என்று சமாதானப்படுத்தியவன் “அப்போ… நாம நிவிக்குட்டிக்கு அவள் கேட்ட பரிசை கொடுத்துவிடுவோமா?” என்று கேட்டான்.
“என்ன பரிசு?” என்று திரும்பியவளுக்கு மகள் அடிக்கடி கேட்டு தொந்திரவு செய்யும் ‘அம்மா எனக்கு எப்போ தம்பி பிறக்கும்?’ என்று கேள்வி நினைவிற்கு வந்துவிட கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கணவனின் பார்வையில் முகம் சிவந்துவிட தலையைக் குனிந்தவாறு “இந்த கோகுல கிருஷ்ணனுக்கு அதையும் நான்தான் சொல்ல வேண்டுமா?” என்றபோது கணவனின் பிடியில் இருந்தாள் வித்யா.
……….முற்றும்……….

Advertisement