Advertisement

அத்தியாயம் – 11
அருகிலிருந்த மரத்தடியை நோக்கி இழுத்துச் சென்றவனுடன் போராடாமல் சென்ற வித்யா¸ அவன் நின்றதும் “விடுங்க என் கையை… விடுங்க… நீங்க என்ன நினைச்சிட்டிருக்குறீங்க உங்க மனதில்..? என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றா..? எதுக்காக என் கையைப் பிடித்து இழுக்குறீங்க..? விடுங்க…” என்று கையை இழுக்க முயன்றவாறே கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க¸ “நீ சற்றுநேரம் அமைதியாக நிற்பாயென்றால் நான் கைகளை விடுவிக்கிறேன்” என்றான் கோகுல்.
“சரி விடுங்க.. நான் நிற்கிறேன்” என்றதும் அவளது கரத்தை விடுவித்தவன்¸ “நீ அன்று என்னிடம் சொன்னது உண்மையா?” என்று கேட்டான்.
“எதை உண்மையான்னு கேட்கறீங்க?”
“உனக்குத் திருமணம் என்றது…”
“ஆமாம்… இதிலெல்லாம் யாராவது பொய் சொல்வார்களா? உங்களைப் போல எனக்கு கதையெல்லாம் சொல்லத் தெரியாது” என்று அவன் அவளைத் தன் மனைவி என்று சொன்னதை நக்கலுடன் குறிப்பிட்டாள்.
“உண்மையா…? இல்லையா..?” என்று அழுத்தத்துடன் கேட்டான் கோகுல்.
“நீங்கள் எப்படிக் கேட்டாலும் நான் சொல்வது இதுதான். எனக்கு இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்கப்போகிறது. பத்திரிக்கை கொடுத்தால்தான் நம்புவீர்கள் என்றால் சொல்லுங்கள்… இன்னும் இரண்டு நாட்களில் பத்திரிக்கை வந்துவிடும் என் சார்பாக முதல் பத்திரிக்கையை உங்களுக்கே வைக்கிறேன். கல்யாணத்திற்கு வந்து எங்களை வாழ்த்திவிட்டுப் போங்கள்” என்று அப்போதும் ஏளனத்துடனே கூறினாள்.
அவளது குரலை பொருட்படுத்தாதவன் “இந்த கல்யாணத்தை உடனே நிறுத்திவிடு…” என்றான்.
“என்ன உளற்றீங்க…?” என்றாள் கோபமாக. “நான் ஏன் என்னோட கல்யாணத்தை நிறுத்த வேண்டும்?”
“நீ ‘என் மனைவி’ வித்யா… நீ எப்படி இன்னொருவனை மணக்க முடியும்?”
‘இதோ பழையபடி உளற ஆரம்பித்துவிட்டான்’ என்று நினைத்தவள் “நீங்கள் சொல்வது உண்மையல்ல என்று உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நீங்கள் சொல்வதற்காக என் திருமணத்தை நிறுத்த நான் என்ன முட்டாளா..?” என்று கேட்டவள்¸ அவன் எதுவும் பேசாமல் அவளையே வெறித்துப் பார்த்தவாறு நின்றிருக்க “எனக்கு நேரமாகிறது¸ நான் போகிறேன். என் வாழ்வில் மீண்டும் உங்களை பார்க்கக்கூடாது என்று கடவுளை வேண்டிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
“வித்யா… நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள். திருமணத்தை நீயாக நிறுத்தினால் உனக்குத்தான் நன்மை. நீ நிறுத்தவில்லை என்றால் நான் நிறுத்தவேண்டி வரும்” என்று எச்சரிப்பது போலக் கூறினான்.
இரண்டு எட்டு வைத்தவள் அவனது பேச்சைக் கேட்டதும் திரும்பி நின்று “எப்படி நிறுத்துவீர்கள்?” என்று கேட்டாள்.
“அது நீ திருமணத்தை நிறுத்தாமலிருந்து அது நடப்பதாக இருந்தால்… அன்றைக்குத் தெரியும்” என்றவன் சற்றும் தாமதிக்காமல் காரில் ஏறிச் சென்றுவிட்டான்.
‘சரியான பைத்தியம்’ என்று தலையில் தட்டிக் கொண்டு ஆட்டோவை நோக்கிச் சென்றாள் வித்யா.
“வர வர நீ வெளியே போனால் வீடு திரும்ப ரொம்பவும் தாமதம் ஆக்குகிறாய்…” என்று காஞ்சனா கடிந்துகொள்ள¸ “வருணை விட லேட்டாகியிருக்கும்” என்று வித்யாவுக்குப் பரிந்து பேசினான் சரவணன்.
“நீ சும்மாயிருடா…” என்று அவனை அதட்டியவர்¸ “இன்னும் மூன்று வாரத்தில் கல்யாணம்… அதற்குள் எந்த கெட்டப் பெயரும் வந்துவிடக்கூடாது என்று நான் பயப்படுவது உனக்கு என்ன தெரியும்?” என்று சொல்லி பாசத்தைப் பொழியாவிட்டாலும் தனக்குத் தன் தங்கை மகள் மேல் அக்கறையிருப்பதைக் காட்டினார் காஞ்சனா.
“வித்யா…” என்றழைத்து அவளுடன் நின்ற வருணைத் தன்னருகில் அமர்த்திக் கொண்ட காஞ்சனா¸ “இனிமேல் நீ வருணைக் கூப்பிடப் போகவேண்டாம். விஜயாவே அவனைக் கூப்பிட போகட்டும்” என்று சொல்ல¸ “சரி பெரியம்மா…” என்று சிரித்தவாறே சமையலறை சென்று டிபன் தயாரிக்க ஆரம்பித்தாள் வித்யா.
மருமகளை அழைத்து “நீ அவளுக்கு சேலை கட்டப் பழகிக் கொடு” என்று பணித்தார்.
மனைவி மகனை கூட்டிக் கொண்டு சென்றதும்¸ “அம்மா நாம வித்யாவுக்கு ஏதாவது
செய்ய வேண்டாமா?” என்று தாயாரிடம் கேட்டான் சரவணன்.
“அவர்கள்தான் ஒன்றும் செய்ய வேண்டாமென்றார்களே…” என்றார் தாயார்.
“ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்பதற்காக நாம் அவளை சும்மா அனுப்ப முடியுமா?” என்று கேட்க¸ “சரி… என்ன செய்யலாம் என்று நீயே சொல்லு..” என்றார் அவன் முகம் பார்த்து.
“ரெண்டு பட்டுப்புடவை… மாற்றிக் கட்டுவதற்கு ஐந்தாறு சேலை… அப்புறம் கழுத்துக்கு ஒரு ஆரம் செய்வோமா…?” என்று தயக்கத்துடனே கேட்டான். எங்கே தாயார் மறுத்துவிடுவாளோ என்று யோசித்து யோசித்தே சொன்னான் அவன்.
“புடவை வாங்கிக் கொடுக்கலாம்… ஆனால்¸ ஆரம் போடுவதெல்லாம் முடியாது” என்றார் காஞ்சனா.
“அம்மா சித்தியோட நகையெல்லாம் உங்ககிட்டதான் இருக்கிறது” என்று தாயாருக்கு நியாபகப்படுத்த¸ “அதற்கு?” என்று கேட்டார் அவர்.
“அதையாவது வித்யாவுக்கு கொடுக்கலாமல்லவா..?” என்று கேட்க “அவளுக்கு என்ன செய்யணும் செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியும்” என்று கறாராகப் பேசியவர்¸ மகனது பார்வையைக் கண்டு “எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்தாய் என்று தெரிந்தால் இந்த கல்யாணமே நடக்காமல் செய்துவிடுவேன்… போ.. போய் உன் வேலையை மட்டும் பாரு” என்று அதட்டலுடனே அவனை அனுப்பினார்.
தாய்க்கு அடங்கியே வளர்ந்துவிட்ட அவனால் அதற்குமேல் அவரிடம் பேச இயலவில்லை.
‘அந்த கோகுல் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறான்?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் வித்யா.
‘ஒருவேளை அவன் மனைவி உயிருடன் இல்லையோ… அப்படியே இருந்தாலும் வேறு பெண்களா கிடைக்கமாட்டார்கள். அவனுடைய அழகுக்கும் பணத்துக்கும் எத்தனையோ பேர் அவனை மணக்க முன்வருவார்களே. அவன் ஏன் என்னை இப்படித் தொல்லை செய்ய வேண்டும்?’
‘கல்யாணத்தை நிறுத்துவானாமே..!’ அவளுக்கு சிரிப்புதான் வந்தது.
‘திருமண மண்டபத்திற்கு வந்தும் ‘இவள் என் மனைவி’ என்று சொல்லப் போகிறான். யாரும் நம்பாமல் அவனைத் துரத்தி… பாவம் வந்து அசிங்கப்படப்போகிறான். படட்டும் பட்டால்தான் புத்தி வரும். ஒரு பெண்ணின் திருமணத்தை சும்மா நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறானல்லவா… இவனுக்கெல்லாம் பட்டால்தான் புரியும்’ அந்த நினைவுகளுடனே தூங்கிப் போனாள் அவள்.
திருமணத்தன்று நடக்க இருப்பது தெரியாததால் நிம்மதியாகத் தூங்கினாள்.
“அடடே!! அம்மா.. அப்பா… யார் வந்திருக்குறாங்கன்னு பாருங்க…!” என்று தந்தையையும் தாயாரையும் அழைத்துக் கூறியவாறு வெளியே ஓடினாள் மித்ரா.
“வாங்கண்ணா…! வாங்க பெரியம்மா..!” என்று வந்தவர்களை வரவேற்றவள் பெரியவளின் காலில் பணிய¸ “நல்லாயிரும்மா..” என்று வாழ்த்தி அவளது தோள்களைப் பற்றித் தூக்கிவிட்டார்.
அருகில் நின்றிருந்த இளையவளைக் கண்டதும் “நிவிக்குட்டி…!” என்று அவளைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக் கொண்டாள்.
‘இது யார்?’ என்பது போல நிவேதா தந்தையைப் பார்க்க “உனக்கு அத்தை..” என்றான் கோகுல்.
“வாங்க அண்ணி… எப்படி இருக்குறீங்க?” என்று புன்னகையுடனே வந்த வெங்கட்ராமன்¸ “வா கோகுல்…” என்று அவனது கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவாறே பேசலானார்.
“தொழில் எப்படி போகுது கோகுல்? இதுதான் பேத்தியா…?” என்று நிவேதாவையும் வாங்கிக் கொண்டார்.
கனகத்துடன் மித்ரா கோகுலுடன் வெங்கட்ராமன் என இருவராக பேசியவாறே சென்று ஹாலிலிருந்த சோபாவில் அமரவும்¸ “எப்படி இருக்குறீங்க அக்கா?” என்று கேட்டபடி கையில் குளிர்பானத்துடன் வந்து நின்றார் வசுமதி.
எல்லோருக்கும் கொடுத்துவிட்டு “எங்களை மன்னிச்சிருங்க அக்கா…” என்றபடி அவரருகில் சென்று அமர்ந்தார்.
கனகம் பதில் பேசாமலே அமர்ந்திருக்க “கோகுல் மட்டும் இல்லைன்னா… என் மாங்கல்யத்தக் காப்பாத்தினதே… அவன்தான். நாங்க செய்த துரோகத்துக்கு உங்க கால்ல விழுந்தாலும் தப்பில்…” என்றவாறே அவரது கால்களில் விழப் போக¸ “வேண்டாம் வசுமதி…” என்று அவரைத் தடுத்து மீண்டும் தன்னருகிலே அமர்த்திக் கொண்டவர்¸ “விடு வசுமதி… போனது போகட்டும். இப்போதான் எல்லாம் சரியாகிடிச்சே.. பழையதையெல்லாம் மறந்துவிடுவோம். இனி யாரும் அதைப்பற்றி பேசக்கூடாது” என்று அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கனகம்.
அதன்பின்னர் அவர்களது பேச்சு முன்பிருந்ததுபோல வெகு மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் சற்று இயல்பாக நடந்தது.
திடீரென “ஆமா… மருமகள் எங்கே? அழைத்து வரவில்லையா?” என்று வெங்கட்ராமன் கேட்க¸ “அம்மா பாட்டி வீட்ல இருக்காங்க” என்று பதிலளித்தாள் நிவேதா.
அம்மா வீட்டில் என்றதும் “ஏதும் விசேஷமா அக்கா..?” என்று கேட்டார் வசுமதி.
கனகம் மகனைப் பார்க்க “அதை நான் அப்புறமா சொல்றேன் சித்தி… இப்போ நான் இங்கே வந்தது உங்க ரெண்டுபேரிடமும் ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்காகத்தான்” என்று பேச்சை மாற்றினான் கோகுல்.
“என்ன விஷயம்ப்பா…?” என்றனர் கணவனும் மனைவியும் கோரசாக.
“மித்ராவின் திருமண விஷயம்..”
அவ்வளவு நேரமும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தவர்களின் முகம் டல்லடித்துவிட¸ “அவளுக்கு கல்யாண வயசாயாச்சு தானே…?” என்று கேட்டான்.
“ஆமாப்பா… ஆனால் இப்போ எப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியும்? கமலேஷ்தான் எல்லா சொத்தையும் அவன் பெயருக்கு மாத்தி வாங்கிக்கிட்டானே! இப்போதும்கூட அப்பாவுக்கு ஆபரேசன் நடந்தது அவனுக்குத் தெரியும்.. ஆனால் இன்றைக்கு வரைக்கும் வந்து பார்க்கவுமில்லை… போன் செய்து விசாரிக்கவுமில்லை. இப்படிப்பட்டவனை நம்பி நாங்க எப்படி செய்ய முடியும்?” என்று வருத்தத்துடனே பேசினார் வசுமதி.
சித்தியையும் சித்தப்பாவையும் ஒருமுறை பார்த்தவன்¸ திரும்பித் தன் தாயாரையும் ஒரு தடவை பார்த்துவிட்டு “ஏன் சித்தப்பா… என் தங்கைக்கு நான் செய்யமாட்டேனா? எனக்கு அந்த உரிமையில்லையா?” என்று கேட்டான்.
“நீ செய்யமாட்டாய் என்றில்லை கோகுல்¸ அவளுக்கு செய்றதுக்கான எல்லா உரிமையும் உனக்கு இருக்கு.. ஆனாலும் இப்போதுதான் உனக்கு எங்களால் ஒரு பெரிய செலவு வந்தது. அதற்குள் மீண்டும் செய் என்று எப்படி சொல்ல முடியும்?” என்று வெங்கட்ராமன் தன் தயக்கத்தை வெளிப்படையாகவே கூறிவிட¸
“என் தங்கைக்கு செய்வதில் எனக்கு எந்த கஷ்டமுமில்லை… நான் இதை சந்தோஷமாகவே செய்கிறேன்” என்றவன்¸ “மாப்பிள்ளை கூட பார்த்துவிட்டேன்… நீங்கள் சம்மதம் சொன்னால் போதும். பையன் ரொம்ப நல்லவன்¸ நாலு வருஷமா தொழில் ரீதியாக எனக்குத் தெரியும்…” என்று பையனைப் பற்றிய சில தகவல்களைக் கூறியவாறே வேலட்டிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து அவர்களிடம் கொடுத்தான்.
“உங்களுக்கும் மித்ராவுக்கும் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம்” என்று முடித்தான்.
போட்டோவை மித்ராவிடம் கொடுத்ததும் அவள் அதையே பார்த்துக் கொண்டிருக்க¸ “நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்… எங்களுக்கு சம்மதம்தான்” என்று தெரிவித்துவிட்டு “மாப்பிள்ளை மித்ராவைப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார் வெங்கட்ராமன்.
“அவன் ஏற்கனவே மித்ராவைப் பார்த்துவிட்டான்” என்றான் கோகுல்.
“எப்போது?”
“நீங்க ஹாஸ்பிடலில் இருந்தபோது¸ அவனது உறவினர் ஒருவரை பார்க்க வந்தவன் மித்ராவையும் அருகில் நின்ற என்னையும் பார்த்திருக்கிறான்… என்னிடம் வந்து விசாரித்தான். மித்ரா என் தங்கைதான் என்றதும் அவனுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்… அடுத்தநாளே கேட்டுவிட்டான் மித்ராவை அவனுக்கு மணமுடித்துத் தரமுடியுமான்னு?” என்று பெரியவர்களிடம் சொன்னவன்¸ “என்ன மித்ரா என் பிரண்டை பிடிச்சிருக்கா…?” என்று கேட்டான்.
வெட்கத்துடன் தலையசைத்தவளிடமிருந்து பார்வையை மீட்ட வெங்கட்ராமன் “பையனோட பெயர் என்ன?” என்று கேட்டார்.
“முகிலன்” என்று அவன் சொன்னதும்¸ “ரெண்டுபேரோட பெயரின் முதல் எழுத்தும் ஒரே வரிசையில் வருகிறது… அதனால் பெயர்ப் பொருத்தம் நன்றாகவே இருக்கும்” என்று சம்மதமாகவே பேசினார்.
“பெயர்ப் பொருத்தம் மட்டுமில்லை சித்தப்பா… ஜோடிப் பொருத்தமும் அழகாகவே இருக்கும்” என்றான் கோகுல் தான் சொன்ன சம்பந்தத்திற்கு முழுமனதுடன் ஒத்துக் கொண்டார்களே என்ற சந்தோஷத்துடன்.
கோகுல் தாயார் மற்றும் மகளுடன் கிளம்பும் முன்னர் மற்றவர்களையும் தங்கள் வீட்டிற்கு ஒருநாள் வருமாறு அழைப்பு விடுத்துவிட்டுச் சென்றனர்.
வீட்டையடைந்ததுமே நண்பனுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க¸ அடுத்தநாளே முகிலன் வீட்டினர் வந்து திருமண நிச்சயத்திற்க்கு நல்லநாள் பார்த்து முடிவுசெய்து விட்டுச் சென்றனர்.

Advertisement