Advertisement

அத்தியாயம் – 10
“என்ன! மனைவியா..!!” என்று அதிர்ந்து நின்றாள் வித்யா.
“ஆமாம் மனைவிதான்¸ ‘என்னுடைய மனைவி’ ” என்றான் அழுத்தமாக.
பிரம்மிப்புடன் அவனைப் பார்த்தாள். ‘என்ன பேசுகிறான் இவன்? மூளை ஏதும் குழம்பிவிட்டதா?’
“என்ன மிஸ்டர் என்னவெல்லாமோ பேசுறீங்க? உங்களுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையிருக்கு… அவளை கூப்பிடத்தான் இப்போது வந்திருக்கிறீர்கள் என்பது மறந்துவிட்டதா? என்னிடம் இந்த மாதிரி தேவையில்லாமல் பேசினால் உங்கள் மனைவியிடம் சொல்லிவிடுவேன்… ஜாக்கிரதை…” என்று எச்சரித்தாள் அவள்.
அவளது பேச்சிற்கு எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தவன்¸ அவள் முடித்ததும் “உன்னிடம் நீயே என்னைப்பற்றி புகார் சொல்வாயா?” என்றான் சிரித்தவாறே.
“நான் உங்கள் ‘மனைவி’யிடம் என்று சொன்னேன்” என்றாள் கோபமாக.
“அதையேதான் நானும் சொல்கிறேன். என் மனைவி ‘நீதான்’… அப்படியானால் நீ என்னைப்பற்றி உன்னிடம்தானே புகார் செய்ய முடியும்?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் கோகுல்.
“சை..!” என்றவள்¸ வகுப்பு முடிந்து மாணவர்கள் வருகிறார்களா என்று பார்ப்பதற்காகத் திரும்பினாள்.
‘சை’ என்றதும் தன்னிடம் அருவருப்பு காட்டித் திரும்புவதா என்றெண்ணி “என்ன சையா?” என்று அவளது கையைப் பிடித்து தன்புறம் திருப்பினான்.
“ப்ச்… கையை விடுங்க..” என சற்றுநேரம் முயன்று பார்த்தவள்¸ இயலவில்லை என்றானதும் “ஏன் இப்படி பண்றீங்க? பார்க்கிறவங்க என்னைத்தான் தப்பா நினைப்பாங்க… ப்ளீஸ் கையை விடுங்க…” என்று கெஞ்சினாள்.
அவளது கண்களில் நீர் நிறைந்ததைக் கண்டவன் தன் பிடியைத் தளரவிட்டான்.
கரத்தை விடுவித்துக் கொண்டு அவன் பிடித்திருந்த இடத்தைத் தேய்த்துவிட்டவாறே பேசினாள் வித்யா.
“நான் உங்களைப் பார்த்ததே ரெண்டு வாரத்துக்கு முன்னாலதான். இப்போது வரைக்கும் நீங்க யார்? உங்க ஊர் என்ன என்று எதுவுமே எனக்குத் தெரியாது. நீங்க என்னன்னா… உங்களை யாரென்ற தெரியாத ஒரு பெண்ணை உங்களுடைய மனைவின்னு சொல்றீங்க. இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லை…” என்று கோபமாகப் பேசிமுடித்தாள்.
“நான்கு வருடங்கள் பார்க்கவில்லை என்றதும் உனக்கு எல்லாம் மறந்துவிட்டதா வித்யா? என்னை…? நம் குழந்தையை..?” என்று கேட்டான் அவன்.
“என்ன! நான்கு வருடங்களா..?? சரி நீங்கள் சொல்வதுபோல நான் உங்கள் மனைவி என்றால்… நான் ஏன் இத்தனை வருடங்கள் உங்களைப் பிரிந்திருக்க வேண்டும்?” என்று கேட்டாள். நான் உங்கள் மனைவி இல்லை என்பதை நிரூபிக்கும் வேகம் இருந்தது அவளது குரலில்.
“அதை நீதான் சொல்ல வேண்டும்” என்றவன்¸ “சொல்லு… ஏன் எங்களைவிட்டுப் பிரிந்தாய்?” என்று கேள்வியும் கேட்டான்.
“நானா!!”
“ஆமாம்… நீயேதான். என்னை¸ எனது பெயரை¸ நம்ம குழந்தையை… அனைத்தையும் மறந்தவள் நீதானே! அதனால நீதான் சொல்லணும்… சொல்லு” என்றான்.
“இங்க பாருங்க.. நீங்க வேண்டுமென்றே என்னவெல்லாமோ பேசி என்னை குழப்புறீங்க” என்றாள்.
“ஆமாம்… வித்யா. நீ ‘வேண்டும்’ என்றுதான் பேசுகிறேன்” என்றான் உணர்ச்சிகரமான குரலில். இவ்வளவு நேரமும் பேசியபோது சிரிப்பைத் தவிர அவனது குரலில் கோபம்¸ உணர்ச்சிவசப்படுதல்¸ மட்டம் தட்டுதல் என எந்தவித உணர்ச்சியும் வெளிப்பட்டிருக்கவில்லை என்பதால் இந்த குரல் அவளை மேலும் குழப்பியது.
‘ஆனால்… இவன் ஏன் இப்படியே பேசிக் கொண்டிருக்கிறான்?’ மாணவர்கள் ஒவ்வொருவராக வெளியே வரத் தொடங்கியதைக் கண்டவளுக்கு நிம்மதி உண்டானது.
‘அப்பாடா… இனி இவன் பேசாமல் போய்விடுவான்’ என்று நினைத்தாள்.
அவளது நம்பிக்கையில் ஒன்றை நிறைவேற்றுபவனாக பேசாமலிருந்தவன்¸ அந்த இடத்திலிருந்து சற்றும் அசையாமல் அங்கேயே நின்று போய்விடுவான் என்ற அவளது நம்பிக்கையை உடைத்தான்.
அவன் நகராததைக் கண்டதும்… பயத்துடனே நிமிர்ந்து அவனைப்  பார்த்தாள். அவளையே பார்த்தவாறு நின்றிருந்தவன் அவளது பார்வை தன் முகத்திற்குத் திரும்பியதும் மென்மையாக சிரித்தான்.
வழியை மறைத்தவாறு அவன் நின்றிருந்ததால் “நான் போகிறேன்” என்று அவனை சுற்றிக் கொண்டு செல்வதற்காகக் கிளம்பினாள்.
“நில் வித்யா…” என்றான் மிருதுவாக.
சில காலமாகவே கடுஞ்சொற்களுக்குப் பணிந்து பழகிப் போயிருந்தவளுக்கு இந்த மிருதுவான குரல் புரியாத ஒரு இன்பத்தைக் கொடுக்க தன்னையறியாமலே நின்றுவிட்டாள்.
“என்னைப் பற்றி எதுவும் தெரியாது என்றாயே¸ கேட்டுட்டுப் போ… என் பெயர் கோகுல கிருஷ்ணன். அப்பா இல்லை… அம்மா வீட்டோடு இருப்பவர். எனக்கு ஒரே ஒரு மனைவியும் ஒரு மகளும் உண்டு. மகள் பெயர் நிவேதா… என் மனைவியின் பெயர்…” என்று நிறுத்தி¸ அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்தவாறே புன்னகையுடன் நிதானமாகக் கூறினான்.
“வி… த்… யா… கேட்டாயா வித்யா? என் மனைவியின் பெயர் வித்யா. அது நீதான்” என்று தெளிவாகக் கூறியவன்¸ நடக்கத் தொடங்கினான்.
அவளால் கோபத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை.
‘இப்படியெல்லாம் பேசுவதற்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். யார் இவன் என்னிடம் இப்படியெல்லாம் பேசுவதற்கு? அவனுடைய பெயர் கோகுல கிருஷ்ணனாக இருக்கலாம். அதற்காகத் தன்னை அந்த யசோதையின் மகனாகவே நினைத்துக் கொண்டு எல்லோரிடமும்… முக்கியமாக என்னிடம்! அவன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் பேசுவதா?’ என்று ஆத்திரம் அடங்காமல் நினைத்தவள்¸ அதையெல்லாம் அவனிடமே சென்று கேட்டாள்.
அவள் தன்னை அந்த கோகுலத்துக் கண்ணனுக்கு ஒப்பிட்டுக் கூறியதைக் கேட்டதும் சிரித்தவன்¸ “நீ என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்… எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. ஆனால்.. சீக்கிரமே நீயாக நம் வீட்டுக்கு வருவதற்கு முயற்சி செய். இல்லையென்றால்¸ நான் வந்து உன்னை தூக்கிச் சென்றுவிடுவேன்” என்றபோது “அப்பா…!” என்றழைத்தவாறு வந்து சேர்ந்தாள் நிவேதா.
“இன்னிக்கும் அம்மா வரலையா?” என்று சோகமாகக் கேட்டவாறே வந்தவளிடம்¸ “இல்லடா குட்டி… இதோ நிற்கிறா உன்னோட அம்மா” என்று சொல்லி சற்று ஒதுங்கி நின்றான்.
நெடியவனான தகப்பன் நகர்ந்ததும் பின்னால் நின்ற வித்யாவைக் கண்டவள்¸ அவளை நெருங்கி அவளது கால்களைக் கட்டியவாறு “அம்மா… உங்களுக்கு காய்ச்சல் விட்டுவிட்டதா?” என்று கேட்டாள்.
அவளது தந்தையின் பேச்சினால் உண்டான கோபத்திலிருந்தவள்¸ சிறுமியின் அக்கறையான விசாரிப்பை உதாசீனப்படுத்தி கைகளை விலக்கி “இங்கே பாரு நிவேதா… நான் உன் அம்மா இல்லை. நீ என்னை அம்மா என்று கூப்பிடாதே” என்று சொல்லிவிட்டாள்.
“இல்லை… நீங்கதான் என் அம்மா. நான் அப்படித்தான் கூப்பிடுவேன்” என்றவள் “அப்பா.. இவங்கதானே என் அம்மா?” என்று அவனையும் துணைக்கு அழைத்தாள்.
அவனும் ஆமோதிப்பதாக “ஆமாடா… வித்யாதான் உன் அம்மா” என்றதும்¸ “உங்க முட்டாள்தனமான பேச்சுக்கு அளவே இல்லையா மிஸ்டர்? நீங்க பேசினது மட்டுமில்லாமல் உங்க குழந்தைக்கிட்டையும் அதையே அழுத்தி சொல்றீங்க… நல்லா கேட்டுக்கோங்க… எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.. இதுக்கு மேலயும் இந்த மாதிரி உளறிட்டு இருக்காதீங்க…” என்று ஆத்திரம் தீரப் பேசியவள்¸ தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த வருணை இழுத்துக் கொண்டு ஆட்டோவை நோக்கிச் சென்றாள்.
டிரைவரும் வந்திருக்கவே ஆட்டோ உடனே நகர்ந்தது.
அதிர்ந்து நின்ற தகப்பனைக் கண்டதும்¸ எங்கே அன்றைப் போல தகப்பன் அப்படியே நின்றுவிடுவானோ என்றெண்ணி பயந்த நிவேதா அவனது கையைப் பிடித்திழுத்து “அம்மா என்ன சொல்லிட்டுப் போறாங்கப்பா…?” என்று கேட்டதும்¸ தன்னுணர்வு பெற்று மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
‘உனக்கு கல்யாணமா வித்யா..? அது எப்படி நடக்கிறதென்று நானும் பார்க்கிறேன்? நீ ‘எனக்கு’ மட்டும்தான்… ‘உன்னை’ வேறுயாருக்கும் விட்டுத்தரமாட்டேன்’ என்று அவனது உள்ளம் தானாகவே உறுதி எடுத்துக் கொண்டது.
வீடு வந்து சேர்ந்த வித்யாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. என்ன மாதிரியான விஷயங்களை பேசிவிட்டான்… ‘அவனுக்கு நான் மனைவியாம்..!’ சுத்த பேத்தல்.
‘விட்டுத்தள்ளு மனமே…! விட்டுத் தள்ளு…! ஒரு முட்டாளின் முட்டாள்தனமான பேச்சுக்களையெல்லாம் மனதில் வைத்து ஏன் கஷ்டப்பட வேண்டும். அவன் பேசியதோடு சேர்த்து அவனையும் மறந்துவிட்டு இயல்பாய் இரு…’ என்று தனக்குத்தானே பலவாறாக சொல்லிக்கொண்டாலும் இரவில் தூக்கம் வராமல் தவித்தாள்.
முன்பெல்லாம் தன் குடும்பத்தாரை நினைத்து உறங்காமல் தவித்தவள்¸ இன்று அந்த கோகுலின் பேச்சால் தூக்கமற்றுப் போனாள். வருண் இருந்தாலாவது அவனைப் பார்த்தவாறு தூங்கிப் போயிருக்கலாம்.. அவனும் அம்மாவுடன் தூங்கப் போகிறேன் என்று போய்விட்டான். என்ன ஆனாலும் அவள் தூங்கக்கூடாது என்பதுதான் விதி போலும் என்றெண்ணியவாறே ஒன்று¸ இரண்டு… என்று எண்ண ஆரம்பித்தாள்.
புரண்டு புரண்டு படுத்தவள் விடியற்காலையில்தான் தூங்கினாள்.
ஆனால் சில மணிநேர தூக்கத்திற்குக்கூட கொடுப்பினை இல்லை அவளுக்கு. அவள் எழுந்து காப்பி தயாரிக்க வந்திருக்கவில்லை என்றதும் காஞ்சனா அவளது அறைக்கே வந்து கத்த ஆரம்பித்துவிட்டார்.
அவரது சத்தத்தில் விழித்தவளிடம் “என்ன மகாராணிக்கு இப்பொழுதெல்லாம் படுக்கை விடமாட்டேன் என்கிறதோ? பணக்கார வீட்டு மருமகளாக இப்போதே பயிற்சி எடுக்கிறாயா? ம்… எழுந்திரு… போ.. முதலில் போய் குளித்து காலை ஆரத்திக்கு மலர்ப்பறித்துக் கொடுத்துவிட்டு¸ காப்பி போட்டு எல்லாருக்கும் எடுத்துட்டுப் போ… சீக்கிரம்” என்று விரட்டினார்.
‘இந்த வீட்டிலிருக்கும் எல்லோரும் எங்கே பயிற்சி எடுத்தார்களோ!’ என்றெண்ணிய மனதை… அடைக்கலம் கொடுத்திருப்பவர்களை அப்படி நினைக்கக்கூடாது என்று சொல்லி அடக்கினாள்.
குளிக்கும்போது அவன்… அந்த கோகுலின் பார்வை நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. உடல் சில்லிட்டுப் போனதுபோல் ஆனது. உடனே பாத்ரூமைவிட்டு வெளியேறி அவசர அவசரமாக உடைமாற்றிவிட்டு ஆரத்திக்குத் தேவையான மலர்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.
பாலைப்  பொங்க வைத்துவிட்டு அதற்கும் திட்டு வாங்கினாள். சாப்பாத்திக்கு மாவு எடுக்கும் போது அதைக் கீழே கொட்டினாள். எல்லாவற்றுக்கும் மேலாக காய்கறி வெட்டும்போது விரலில் வெட்டிக் கொண்டாள். பெரியம்மா பார்த்து திட்டியவாறே மருந்து வைத்துக் கட்டிவிட்டு¸ “எதை நினைத்துக் கொண்டு இன்றைக்கு இப்படியெல்லாம் செய்து வைக்கிறாய்?” என்று கேட்டபடி சென்றார்.
‘எதை நினைத்துக் கொண்டு…?’ என்று யோசித்தவளுக்கு அவனது பேச்சு நினைவு  வந்தது. ‘எல்லாம் அந்த கோகுலால் வந்தது…’ என்று அவனை நன்றாகத் திட்டினாள்.
கோகுலுக்கு அடிக்கடி போன் செய்யும் மித்ரா அன்று காலையிலே அவனுக்கு அழைத்து சீக்கிரமாக நிவேதாவை தங்கள் வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறினாள். பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை வரும்போது வருவதாகக் கூறி வைத்தான் அவன்.
வித்யாவின் நினைவிலே இருந்தவன் மித்ராவை மறந்திருக்க… விரைவில் ஒருநாள் நிவேதாவையும் அம்மாவையும் சித்தப்பா வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று எண்ணிக் கொண்டான்.
இப்போதும் வித்யாவின் நினைவு அவனை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்தது. தனக்குத் திருமணம் என்று அவள் சொன்னதே மீண்டும் மீண்டும் நினைவில் வந்து தொல்லை கொடுத்தது.
மூன்று மணிவரை எப்படியோ நேரத்தை ஓட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றான்.
வித்யா சரியாக பள்ளி முடியும் நேரத்தில் வந்ததால் அவளிடம் பேசமுடியாமல் போய்விட்டது.
ஆசையாக “அம்மா…!” என்றழைத்து அவள் பின்னால் சென்ற நிவேதாவைப் பார்த்து ஒரு கணம் நின்றபோதும்¸ அவளை உதாசீனப்படுத்தி திரும்பிப் பாராமல் சென்றது அவனது ஆத்திரத்தைக் கிளப்பியது.
மேலும் இருநாட்கள் இப்படியே நடக்கவும்…. நான்காவது நாள் அவர்கள் சென்ற ஆட்டோவின் வழியை மறித்தவாறு காரை நிறுத்திவிட்டு வந்தவன்¸ உள்ளே அமர்ந்திருந்தவளின் கையைப் பிடித்திழுத்து வெளியே நிறுத்தினான்.
“என் கை… கையை… விடுங்க..!” என்ற அவளது குரலை காதிலே வாங்காதவன்¸
டிரைவரிடம் “ஒரு ஐந்து நிமிடம் பொறுங்கள்… இவளிடம் கொஞ்சம் பேசணும்¸ பேசிட்டு அனுப்புறேன்” என்று சொல்லிவிட்டு அவளை இழுத்தவாறே நடக்க ஆரம்பித்தான்.
அவனது செய்கையைக் கண்டு பயந்து “அத்தை…!” என்றழுத வருணிடம் திரும்பி¸ “வருண்… அங்கிள் அத்தைகிட்ட பேசிட்டு உடனே அனுப்பிடுவேன். நீ நல்ல பையனா அழாமல் இருக்கணும்” என்று சொன்னான்.
அப்போதும் பேசியவனின் கைகளிலிருந்து விடுபட முயன்ற தன் அத்தையைப் பார்த்தவாறே விசும்பியவனிடம் “வருண்… அத்தை இப்போ வந்துடுவேன்டா… நீ அழாதே!” என்று வித்யாவும் சாதாரணமாகப் பேச அழுகையை நிறுத்தினான்.

Advertisement