Advertisement

அத்தியாயம் – 1
“அம்மா நான் அரிசி மண்டியை பார்த்துவிட்டு அப்படியே மில்லுக்குப் போயிடுவேன்” என்றபடி கிளம்பினான் கோகுல கிருஷ்ணன்.
“சரிப்பா போயிட்டு வா…” என்று விடையளித்தவர்¸ திடீரென நினைவு வந்தவராக மகனை அழைத்தார்.
“என்னம்மா?” என்று திரும்பியவனிடம் “நம்ம நிவேதாவை ஸ்கூல்ல விட்டுட்டுப் போயேன்” என்றார்.
“ஏன்மா? தினமும் அவள் ஸ்கூல் வேன்ல தானே போவாள். இன்றைக்கு என்னாச்சு?” என்று கேட்டான்.
“ஒன்றுமில்லைப்பா… காலையில் எழும்போதே ஸ்கூல் போக மாட்டேன்னு அடம்பிடிச்சா நான் தா…” என்று அவர் முடிப்பதற்குள்¸ “ஏன்? அவளுக்கு உடம்பு சரியில்லையா? நான் அவளை இன்னமும் பார்க்கவில்லையே!” என்று தாயாரிடம் மகளது நடத்தைக்கான காரணத்தை வினவினான்.
“உடம்புக்கு ஒன்றுமில்லைப்பா… ஸ்கூலுக்கு உன்கூட கார்ல போக ஆசையாம்… அவளோட படிக்கிற பிள்ளைங்க எல்லாரும் அவங்க அப்பா¸  அம்மாவோட வர்றாங்களாம். அதனால அவளுக்கும் உன்னை அவ பிரண்ட் பிள்ளைகளுக்கு காட்ட ஆசை… அவளோட அப்பா ரொம்ப உயரம் என்று சொன்னால் யாருமே நம்பவில்லையாம்…” என்று பேத்தியின் வருத்தத்தை அவளது தொணியுடனே கூறினார் தாயார்.
“நேற்று என்னிடம் வந்து புகார் செய்தாள்…”
“என்னவென்று?” வினவினான் மகன்.
“அதுதான் சொன்னேனே… நீ ரொம்ப உயரம் என்றதை யாரும் நம்பவில்லை என்று¸ நான் இன்றைக்கு நீ கூட்டிப்போவாய் என்று சொல்லி சமாதானப்படுத்தினேன்.
கூட்டிப்போகிறாயா?” என்று கேட்டார்.
“சரிம்மா…” என்றவன்¸ கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே “கிளம்பிவிட்டாளா¸ இல்லை இனிதானா?” என்று கேட்டான்.
“அவள் எப்பவோ ரெடி” என்றவர்¸ “நிவேதா…” என்று உரத்த குரலில் அழைத்தார்.
“பாட்டி!” என்றவாறே ஓடிவந்தவளைத் தூக்கியவர்¸ வேலைக்காரப் பெண்மணியிடம் பேத்தியுடைய ஸ்கூல் பேக்¸ லஞ்ச் பேக் முதலியவற்றை எடுத்துவரப் பணித்தார்.
அவள் வந்து தந்ததும்¸ தாயாரின் இடுப்பில் அமர்ந்து கொஞ்சிக் கொண்டிருந்தவளிடம் “போகலாமா  நிவேதா? அப்பாவுக்கு நேரமாகிவிட்டது…” என்று கேட்டு அவளது கவனத்தைத் திருப்பினான்.
“ஓகேப்பா…” என்று தந்தையிடம் தாவினாள் அவள்.
கோகுலுடன் நடந்து கொண்டிருக்கும்போது பின்புறம் திரும்பிய நிவேதா¸ தகப்பனது முதுகுப்புறத்துக்கு மேலாக எட்டிப் பார்த்து “பார்த்தீங்களா பாட்டி! எங்கப்பா எவ்வளவு உயரம்! அந்த கவிதாகிட்ட சொன்னா நம்பாமல் அவ அப்பாதான் உயரம்ன்னு சொன்னா. ஹை… ஜாலி! இன்னிக்கு எல்லார்கிட்டயும் எங்கப்பாவைக் காட்டுவேனே!” என்று குதூகலித்தாள்.
மகளது பேச்சைக் கேட்டுப் புன்னகைத்தவாறே அவளது கன்னத்தில் முத்தமிட¸ பதிலுக்கு அவளும் முத்தமிட்டாள்.
குழந்தையைக் காரில் ஏற்றித் தானும் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து “பாட்டிக்கு பை சொல்லும்மா…” என்றவன்¸ மகள் கையசைத்ததும் காரைக் கிளப்பினான்.
பள்ளிக்குச் செல்லும் வழியில் எப்போதோ பள்ளியில் நடந்த விஷயங்களையெல்லாம் வாய் ஓயாது பேசிக் கொண்டே வந்தாள் நிவேதா.
‘அடேயப்பா என் மகள் எவ்வளவு பேசுகிறாள்!’ என்று மகளது பேச்சைக் கேட்டு ஆச்சர்யப்பட்டான். ஆச்சர்யத்திற்குக் காரணம்¸ அவன் அவளுடைய பள்ளிக்கு அதிகமாக சென்றிராதது மற்றும் அவளுடன் அதிகமாக நேரம் செலவிடாததுதான்.
அவளைப் பள்ளியில் சேர்த்த இந்த இரண்டு வருடங்களில் அவன் அழைத்துச் சென்றது இரண்டே முறைதான். முதலாவதாக அவளைப் பள்ளியில் சேர்க்கச் சென்றான்¸ இரண்டாவதாக அவளது முதல்நாள் வகுப்பு அன்று அவ்வளவுதான். அதன்பின் இன்று தான் அவளை அழைத்துச் செல்கிறான்.
மற்றபடி எந்தத் தேவையென்றாலும் பள்ளிக்குச் செல்வது அவனது தாயார்தான். பள்ளியில் என்ன சொன்னார்கள் என்பதைக் கேட்டறிந்து… மகனிடம் சொன்னதும் அவன் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துவிடுவான்.
‘மகளை டியுசன் அனுப்பவில்லையா?’ என்று கேட்ட தாயாரிடம்¸ ‘ஆரம்பக்கல்விதானே நாமே கவனித்துக் கொள்ளலாம். அதோட இவ குணத்துக்கும் அது சரிப்படாது’ என்று மறுத்துவிட்டான்.
அவளது இன்றைய பேச்சு¸ தான் அவளுக்கு சரியான கவனிப்பை வழங்கவில்லையோ என்றெண்ணத் தூண்டியது.
‘இந்தக் குட்டியின் மனதில்தான் எவ்வளவு ஆசை இருக்கிறது!’
மகளின் தலையை மிருதுவாக வருடினான்.
திரும்பிப் பார்த்தவளிடம் “உனக்கு ஸ்கூலுக்கு வேன்ல போறது பிடிச்சிருக்கா? இல்லை அப்பாவோட காரில் போறது பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“உங்ககூட கார்ல வர்றதுதான் பிடிச்சிருக்குப்பா…” என்று பதிலிறுத்தாள் மகள்.
“சரி இனிமேல் தினமும் அப்பா உன்னை ஸ்கூல்ல விட்டுட்டுப் போறேன்… ஆனால்¸ ஈவ்னிங் எனக்கு வேலை முடிய நேரமாகும் அதனால நீ வேன்லதான் வரணும் சரியா?” என்று கேட்க¸ “ம்…” என்று நன்றாகத் தலையை ஆட்டினாள்.
பள்ளியை அடைந்ததும் வேகமாகக் காரை விட்டிறங்கி தகப்பன் இருந்த பக்கமாக வந்து நின்றவளிடம் “சரிடா குட்டி… இனி நீ போய்க்குவியா? அப்பா அல்ரெடி லேட்” என்று கேட்டவனிடம்¸ “அப்பா ப்ளீஸ்… என்கூட கிளாஸ் ரூம் வரையாவது வாங்க. நான் என் ப்ரண்ட்ஸ்க்கெல்லாம் உங்களைக் காட்டணும்¸ ப்ளீஸ்ப்பா…” என்று கையைப் பிடித்து இழுத்தாள்.
மகள் ப்ளீஸ் சொல்லி அழைக்கவும் “சரி” என்று இறங்கினான்.
அவளது இரண்டு பைகளையும் கைகளில் தூக்கிக் கொண்டு “உன் வகுப்பு எங்கேயிருக்கு?” என்று கேட்டதும்¸ “ஐயே..!” என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள் சிறுமி.
“ஏன்டா?” என்று கேட்க¸ “மகளோட கிளாஸ் எந்த பக்கம் இருக்குன்றதே உங்களுக்குத் தெரியலே” என்றாள் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
“அடடா…! என் செல்லத்துக்கு கோபமா¸ இந்த ஒருமுறையும் சொல்லிடு. அப்புறம் உன்கிட்ட கேட்காமல் நானே உன்னைக் கூட்டிப் போய்விடுவேன்…” என்று சொன்னதும் சமாதானமாகி முகம் மலர்ந்தவள்¸ புன்னகையுடன் “இந்தப் பக்கம் போங்கப்பா” என்று அவர்கள் நின்ற திசைக்கு எதிர்ப்புறமாக கையை நீட்டினாள்.
தகப்பனை பின்தொடர்ந்து சற்று தூரம் நடந்து அந்தப் பெரியக் கட்டிடத்தின் மூன்றாவது அறைக்கதவின் அருகே சென்றதும்¸ “இதுதான் என்னோட கிளாஸ்” என்று தகப்பனின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
இடதுப் பக்கமாக இருந்த வகுப்பு ஆசிரியைக்கு குட்டியாக இருந்த நிவேதா தகப்பனால் மறைக்கப்பட்டுவிட¸ வாசற்பக்கம் வந்து நின்ற உயரமான மனிதனைக் கண்ட ஆசிரியை எழுந்து வந்தாள்.
ஏதோ ரைம்ஸ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்திருப்பாள் போலும்¸ குழந்தைகள்
அனைவரும் ஒரே குரலாக எதையோ சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆசிரியையைக் கண்டதும் “குட்மார்னிங் மிஸ்” என்றாள் நிவேதா.
பதிலுக்கு ஆசிரியையும் குட்மார்னிங் சொன்னதும் “மிஸ் இது என்னோட அப்பா… கவிதா¸ சோனாக்கிட்ட காட்ட கூட்டிட்டு வந்தேன்” என்று தன் தந்தையை ஆசிரியைக்கு அறிமுகப்படுத்தி¸ அழைத்து வந்ததற்கான காரணத்தைக் கூறினாள்.
கோகுல் ஆசிரியையைப் பார்த்து அறிமுகப் புன்னகையொன்றை உதிர்த்துவிட்டு வகுப்பறையின் உள்ளே பார்த்தான்.
மூன்று குழந்தைகளுக்கு ஒரு டேபிள்¸ சேர் என்று தனித்தனியாக இருந்தது. நன்றாக துடைத்து வைக்கப்பட்டிருந்த போர்டின் வலது மேல்பக்கம் அன்றைய தேதியும் மறுபக்கத்தில் யு.கே.ஜி. மற்றும் மாணவர்களின் வருகை பற்றிய குறிப்பு இருந்தது.
மகளைப் பற்றி ஆசிரியையிடம் விசாரித்துவிட்டு¸ தகப்பனைப் பார்த்து வியந்து நின்ற தோழிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மகளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
தகப்பன் செல்லத் தொடங்கியதும் உள்ளே சென்று அமர்ந்தவளிடம் வகுப்பாசிரியையும் “நிவேதா¸ உங்க அப்பா இவ்வளவு உயரமா?” என்று ஆச்சர்யமாகக் கேட்கவும் அவளுக்கு ஒரே குதூகலம்தான். வீட்டிற்குப் போனதும் பாட்டியிடமும் அப்பாவிடமும் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

Advertisement